Dec 15, 2015

அடுத்த வேலை

பீட்டர் வான் என்கிற பெல்ஜியம்காரர் சென்னையைச் சுத்தம் செய்கிற வேலையில் ஈடுபட்டிருக்கிறார். நேற்று கணேஷ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பிறகுதான் அந்த மனிதரைக் கவனித்தேன். ஆச்சரியமூட்டுகிறார். ஆரம்பத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டவர் இப்பொழுது ‘சென்னையின் பழைய அழகை மீட்போம்’ என்று சேறுக்குள்ளும் சகதிக்குள்ளும் கால் வைத்திருக்கிறார். 


இத்தகைய மனிதர்கள்தான் நமக்கான உந்து சக்தி. எந்த விளம்பர வெளிச்சமுமில்லாமல் சேறாடிக் கொண்டிருக்கும் அந்த மனிதரை நாமும் கூட பின்பற்றலாம். ஒரேயொரு நாள் நான்கைந்து சட்டி குப்பையை எடுத்து ஒதுக்கினால் கூட போதும். நம்மால் முடிந்த சிறு பங்களிப்பாக இருக்கும்.

குப்பையைச் சுத்தம் செய்வதுதானே என்று எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தப் பக்கம் இருப்பதை ஒதுக்கி அந்தப் பக்கமாகக் கொட்டும் வேலை இல்லை இது. செய்வதாக இருப்பின் நேர்த்தியாகச் செய்ய வேண்டும். நிவாரணப் பொருட்கள் வழங்குவதைக் காட்டிலும் இது சற்று சிக்கலான வேலை என்று தோன்றுகிறது. தன்னார்வலர்கள் தேவை. அவர்களுக்கு கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் அவசியம். சுத்தம் செய்வதற்கு தேவையான உபகரணங்களும் அள்ளியவற்றைக் கொண்டு போய் கொட்டுவதற்கான இடமும், ட்ராக்டர்களும் அவசியம். திட்டமிட்டுச் செய்தால் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. 

சென்னையில் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்து வேலையைச் செய்யலாம். இந்த வேலையைச் செய்வதற்கு குடிசைப்பகுதியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என நினைக்கிறேன். எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி. அந்தப் பகுதி மக்களிடம் முந்தின நாளே தகவல் சொல்லிவிடலாம். அவர்களும் இணைந்தால் வேலை இன்னமும் சுலபமாக இருக்கும். இயலுமெனில் ஏதேனும் கல்லூரி அல்லது பள்ளியில் பேசி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பெரிய வேலையாகத்தான் இருக்கும்.

வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இதைச் செய்ய முடியுமா என்று யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. பத்துப் பேர் இருந்தாலும் சரி; இருபது பேர் இருந்தாலும் சரி- நம்மால் முடிந்த அளவுக்குச் செய்வோம். ‘நாமும் செய்தோம்’ என்கிற திருப்தி வரக் கூடிய அளவில் செய்யலாம். ஏதேனும் தன்னார்வ அமைப்பு இந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தால் அவர்களிடம் உதவி கேட்கலாம். இயலுமெனில் பீட்டர் வானுடன் கூட பேசி அவரோடு இணைந்து செயல்படலாம். யாராவது அவருடன் தொடர்பில் இருந்தால் அவருடன் இது குறித்துப் பேச இயலுமா?

சென்னையில் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை இன்று மாலைக்குள் முடிவு செய்துவிடலாம். அதை முடிவு செய்த பிறகு அடுத்தடுத்த விஷயங்களை ஆலோசிக்கலாம். களத்தில் இறங்கி வேலை செய்வது என்பது மனதுக்கு இதமளிக்கக் கூடியது. ஒரேயொரு நாள்தானே? சென்னைக்கு நாமும் கை கொடுக்கலாம். வர இயலக் கூடியவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். சென்னையில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுவதற்கும் தன்னார்வலர்கள் தேவை. நான்கைந்து பேர் இருந்தால் போதும். ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட விரும்புகிறவர்கள் மின்னஞ்சலில் தொலைபேசி எண்ணைப் பகிரவும். அதை நிசப்தத்தில் பதிவு செய்துவிடலாம். 

தன்னார்வலர்களின் எண்ணிக்கை அவர்களுடைய தொடர்பு எண் உள்ளிட்டவற்றை பட்டியலிடுவதும், இந்தச் செயல்பாட்டுக்காக அடுத்தடுத்த தேவைகளை சென்னையில் முன்னின்று நடத்துவதும் ஒருங்கிணைப்பாளர்களின் பணியாக இருக்கும். இன்னமும் நான்கு நாட்கள்தான் இடையில் இருக்கின்றன. அதனால் தனிப்பட்ட வேலை எதுவும் கெட்டுப் போகாமல் முழுமையாக ஈடுபட முடியும் என நினைக்கிறவர்கள் மட்டும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவதற்கு முன் வரவும். மற்றவர்கள் தன்னார்வலர்களாகச் செயல்படலாம்.

இதுவொரு யோசனைதான். எல்லாம் சரியாக அமையும்பட்சத்தில் அணியாக உள்ளே இறங்கலாம். இல்லையென்றால் வேறு வழிவகைகளை யோசிக்கலாம். பேனர் இல்லாமல், விளம்பரமில்லாமல் வெகு அமைதியாக இந்தக் காரியத்தை செய்யவிருக்கிறோம்.

ஒரே நாளில் சென்னையைச் சுத்தம் செய்துவிட முடியாதுதான். ஆனால் பீட்டர் வான் போல நாமும் யாரோ சிலருக்கு உந்து சக்தியாக இருக்க முடியும். நான்கு பேர் நம்மைப் பின்பற்றினால் கூட அதுவே பெரிய மாற்றம்தான் .என்ன சொல்கிறீர்கள்?

vaamanikandan@gmail.com