இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக வரைக்கும் அவசரச் செய்தி என்றெல்லாம் எதுவுமே இல்லை. தலை போகிற காரியம் என்றாலும் கூட யாராவது ஒரு ஆள் இங்கேயிருந்து அந்தப் பக்கமாகச் சென்று தகவலைச் சேர்ப்பித்தால்தான் உண்டு. உலகமும் படுபாந்தமாக ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. அவசரமில்லாத வாழ்க்கை அது. ஆனால் அதில் சுவாரசியம் இல்லை என்று அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைத்திருக்கக் கூடும். தொலைபேசியைக் கண்டுபிடிக்கிறேன் என்று அமர்ந்துவிட்டார். அவர் தொலைபேசியைக் கண்டுபிடித்த போது அது பூமியுருண்டையின் இன்னொரு பக்கமாக கொள்ளிக்கட்டையை வைத்து ஒரு இழுப்பு இழுக்கிற காரியம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இழுத்துவிட்டார். சூடு வாங்கிய பூமி சும்மா இருக்குமா? ஓட்டம் எடுக்க ஆரம்பித்தது. ட்ரங்க் கால், எஸ்.டி.டி என்று ஆக்ஸிலேட்டரை முறுக்கிப் பாய்ந்து இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. நின்றபாடில்லை.
உலகம் முழுவதுமாகச் சேர்த்து கிட்டத்தட்ட நூற்றியிருபது கோடி ஃபேஸ்புக் பயனாளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். குத்துமதிப்பாகக் கணக்குப் பார்த்தாலும் கூட உலகில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார். நல்ல விஷயம்தானே? பழைய நண்பர்களைச் சேர்த்து வைக்கிறது. உலகில் ஏதோ மூலையில் இருக்கும் பிரபல மனிதர்களிடம் கூட ‘ஹாய்..ஹவ் ஆர் யூ’ என்று செய்தி அனுப்ப முடிகிறது. போரடிக்கும் போது கொட்டாவி விட்டபடியே அடுத்தவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது. சொல்லிக் கொண்டே போகலாம்தான். ஆனால் எல்லாவற்றிலும் இருக்கக் கூடிய இருண்ட பக்கத்தைப் போலவே சமூக ஊடகங்களுக்கும் ஓர் இருண்ட பக்கம் இருக்கிறது. அது வெறும் இருள் மட்டுமில்லை புதிரும் கூட. யாராலும் அவ்வளவு சீக்கிரம் அவிழ்க்க முடியாத புதிர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பெண்ணொருத்தியைப் பற்றிய செய்தியை நாளிதழ்களில் வாசித்திருக்க கூடும். அவளுக்குத் திருமணமாகிவிட்டது. குழந்தை இல்லை. கணவன் அரசு ஊழியன். அவன் அலுவலகம் சென்றுவிடும் சமயங்களில் பொழுது போக்கிற்காக ஃபேஸ்புக்கை துழாவிக் கொண்டிருந்தவளுக்கு அவன் நூல் விட்டிருக்கிறான். அவன் என்றால் கணவன் இல்லை. இன்னொருவன். நண்பன் என்றோ சகோதரன் என்றோ பேச்சை ஆரம்பித்தவன் நாட்கள் செல்லச் செல்ல காதலாகி கசிந்துருகி பிரிக்கவே முடியாத பந்தத்திற்கு அடி போட்டுவிட்டான். நாள் முழுவதும் தீர்க்கவே முடியாமல் நீண்டு கொண்டிருக்கும் தனிமையை போக்க வந்த ஆபத்பாந்தவனாக இவளும் அவனைப் பார்த்திருக்கிறாள்.
ஆறு மாதங்கள் வரைக்கும் சாட்டிங் வழியாகவும் அலைபேசி உரையாடல் வழியாகவுமே தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தட்டச்சு செய்யும் எழுத்துக்களின் வழியாகவே அவளின் இதயத்தை நெருங்கியிருக்கிறான். இன்றைய நவீன யுகம் வழங்கும் சுதந்திரம் இது. முன்பெல்லாம் ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் பேசுவதென்றால் இருவருக்குமிடையில் வந்து அமர்ந்து கொள்ளும் தயக்கத்தை உடைக்கவே ஆறு மாதங்கள் ஆகும். இப்பொழுது அப்படியில்லை. மூன்றாவது செய்தியிலேயே ‘நான் ஒன்னும் தப்பா நெனைச்சுக்க மாட்டேன்...’ என்று சொல்லிவிட்டு எதை வேண்டுமானாலும் பேச ஆரம்பித்துவிட முடிகிறது. கட்டற்ற சுதந்திரம் என்பது எப்பொழுதும் இனித்துக் கொண்டேயிருப்பதில்லை. செல்போனும் ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் தரக் கூடிய சுதந்திரம் என்பது அத்தகைய கட்டற்ற சுதந்திரம்தான். எப்பொழுது கசக்கும் என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் ஒரு நாள் கசக்கும்.
கசந்தால் என்ன ஆகும்? இருக்கிற சொந்தபந்தமும் சேர்ந்து கசப்புத் தட்டிவிடும்.
மனிதர்களை நேரடியாகப் பார்க்காமல் ஆன்லைன் வழியாகவே பழகி நெருங்கி உருவாகும் நட்பை வெர்ச்சுவல் உறவு என்கிறார்கள். அவன் நல்லவனா கெட்டவனா பணக்காரனா உயரமா சிவப்பா குண்டா ஒல்லியா என்று எதுவும் தெரியாது. எதிர்முனையில் இருப்பவர்கள் சொல்வதை நம்பிக் கொள்ள வேண்டியதுதான். இப்படியே வளர்ந்த உறவின் காரணமாக அந்த உத்தரப்பிரதேசக்காரன் அவளை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறான். இவளுக்கும் சந்தோஷம்தான். ரகசியக் காதலன் அல்லவா? பூச்சூடியோ பொட்டு வைத்தோ- எப்படிச் சென்றாள் என்று தெரியவில்லை. போனவள் போனவள்தான். திரும்பி வரவேயில்லை. வெகு நாட்கள் கழித்து அழுகிய உடலைத்தான் கண்டெடுத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு வனப்பகுதியில். பிறகு அவளது கணினியையும் மொபைலையும் துழாவி அழிக்கப்பட்ட சாட்டிங் செய்திகளையெல்லாம் மீட்டெடுத்து கொலைகாரனைப் பிடித்திருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவன் அடுத்த தெருவிலேயேதான் இருந்திருக்கிறான். திருட்டுப்பயல்.
பகல் முழுவதும் அவனோடு நடத்திய உரையாடல்களையெல்லாம் கணவன் வீடு திரும்புவதற்கு முன்பாக அழித்திருக்கிறாள். மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு ஒரு மின்னஞ்சல் ஐடி. ரகசியக்காதலனுடன் தொடர்பில் இருப்பதற்கு ஒரு மின்னஞ்சல் ஐடி என்று இரட்டைக் குதிரைச் சவாரி. காதலனுக்கு ஒரு செல்ஃபோன் எண். மற்றவர்களுக்கு இன்னொரு எண். இப்படி தங்கள் இருவருக்குமிடையிலான தனித்த உலகம் ஒன்றை உருவாக்கியிருக்கிறாள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியம். ஒருவரோடு தொடர்பில் இருப்பதை வேறு யாருக்குமே தெரியாமல் ரகசியமாக பராமரிக்க முடிகிறது. அந்த தனித்த உலகில் அந்த இருவர் மட்டும்தான் ராஜாவும் ராணியும். அவர்கள் உலவும் அந்த அந்தரங்கமான செளந்தர்ய உலகில் எந்தக் கொம்பனாலும் உள்ளே நுழைந்துவிட முடியாது. இரும்புக்கோட்டை அது. இத்தகையை உறவுகள் ரகசியக்காதலன் காதலியோடு முடிந்துவிடுவதில்லை. இயலுமெனில் எவ்வளவு பேருடன் வேண்டுமானாலும் தொடர்பை நீட்டிக்கிறார்கள். ஒன்று சலித்தால் இன்னொன்று. அதுவும் சலித்துப் போனால் புதியதாக ஒன்று. உறவுகள் என்பது ஆத்மார்த்தமானது என்கிற இடத்தையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். பெரும்பாலான ஆன்லைன் உறவுகள் காமமும் பாலியலும் சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது.
இதுவரை முரட்டுத்தனமாக பாதுகாக்கப்பட்டு வந்த பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் இந்த கசமுசா சமாச்சாரங்களுக்கு முன்னால் சிதைந்து சின்னாபின்னமாகி பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. மிக வேகமான சிதைவு இது. எண்பதுகளில் இருந்ததைவிட தொண்ணூறுகளில் நிலைமை மோசமாகியிருந்தது. தொண்ணூறுகளுக்கும் இன்றைய தினத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று எல்லோருக்குமே தெரியும் அல்லவா? நாளைக்கு நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடிவதில்லை. தனிமனித ஒழுக்கம் என்பது காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. ஒழுக்கம் புண்ணாக்கு பருத்திக் கொட்டை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுதெல்லாம் தினம் தினம் நூற்றுக்கணக்கானவர்கள் அடுத்தவர்களின் ப்ளாக்மெயிலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் பழகிய உறவு கசந்து போக எதிராளி சதிராடுகிறான்/ள். சிக்கிக் கொண்டவர்களைத் மிரட்டுவதும், நமக்குள் இருந்த கசமுசா விவகாரத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என்று அதட்டுவதும், பாலியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அகப்பட்டவர்களைச் சுரண்டுவதும் கண்ணுக்குத் தெரியாமல் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பாதிக்கப்படுபவர்களால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடிவதில்லை. கணவனுக்கும் மனைவிக்கும் தெரியும் போது பிரச்சினை பூதாகரமாகிவிடும். திருமணமாகி குழந்தைகளும் இருந்தால் நிலைமை இன்னமும் மோசம். மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் குதப்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் இடத்தை சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டு தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். இது உண்மையில் சுதந்திரமே இல்லை. இப்பொழுதெல்லாம் நமக்கான நேரம் என்று எதையும் வைத்துக் கொள்வதில்லை. அந்த நேரத்தை சமூக ஊடகங்கள் வாங்கிக் கொண்டன. குழந்தைகளுடனும் குடும்பத்தோடும் செலவழிக்கும் நேரத்தைவிடவும் செல்போனோடு செலவழிக்கும் நேரம் அதிகம். யோசிப்பதையும் வாசிப்பதையும் பற்றி நினைப்பதே இல்லை. எந்நேரமும் தலையைக் குனிந்தபடி செல்ஃபோன் திரையில் சிக்கிக் கொண்ட சில்வண்டுகள் ஆகிக் கொண்டிருக்கிறோம். செல்போன் என்பது கையடக்க சிறைச்சாலை. அதை உணர்ந்து கொள்வதாகவே தெரிவதில்லை. பேருந்தில் போகும் போது விதவிதமான மனிதர்களின் முகத்தை எவ்வளவு பேர் பார்க்கிறோம்? ஜன்னலுக்கு வெளியில் தெரியும் வண்ணங்களை எவ்வளவு நேரம் ரசிக்கிறோம்? முன்பெல்லாம் பயணங்களின் போது எதையாவது யோசித்துக் கொண்டே பயணிப்போம். இப்பொழுது செல்போனை நோண்டிக் கொண்டு நமக்கு நாமே சிரிக்கிறோம். எல்லாமே தலைகீழாகியிருக்கிறது. தலை- கீழ் ஆகியிருக்கிறது.
இதன் விளைவுகள் அதிபயங்கரமானவை. சக மனிதர்களோடு சிரித்துப் பேசிப் பழகாமல் உபகரணங்களோடு நம்மை பிணைத்துக் கொள்கிறோம். மனிதனை சமூக விலங்கு என்பார்கள். social animal. அந்த சமூக விலங்கு சகவிலங்குடன் கூடிக் கொண்டாடி உருவாக்கியதுதான் குடும்பம் சமூகம் என்கிற கட்டமைப்பெல்லாம். ஆனால் கடந்த கால் நூற்றாண்டாக அந்தச் சமூக விலங்கானது மெல்ல மெல்ல தான் நேரில் சந்திக்கும் மனிதர்களுடனான தொடர்பினைத் துண்டித்துக் கொண்டு தனித்த விலங்காகிக் கொண்டிருக்கிறது. இது மனோவியல் ரீதியாகவும் நம்மை மிகத் தாறுமாறாக பாதிக்கக் கூடியது. எல்லாவற்றுக்கும் கையடக்கக் கருவிகளில் தீர்வுகள் கிடைப்பதில்லை. ஆனால் மனம் அங்குதான் செல்கிறது. அந்தக் கருவி மனதைக் கிளறிவிடுகிறது. அந்தக் கிளறல் உருவாக்கும் விளைவுகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் இந்த விளைவுகளின் வீரியம் பன்மடங்காகப் போகிறது. அதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை.
(குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான தொடர்)
(குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான தொடர்)
4 எதிர் சப்தங்கள்:
Andha ponnu enachunu kadaisi vara solave illye boss...By silvandu
அந்த கண்றாவியைத்தான் சொல்லிவிட்டாரே.
//எப்படிச் சென்றாள் என்று தெரியவில்லை. போனவள் போனவள்தான். திரும்பி வரவேயில்லை. வெகு நாட்கள் கழித்து அழுகிய உடலைத்தான் கண்டெடுத்திருக்கிறார்கள்.//
சில்வண்டு.
Nijam..Namma yarum eppa manusangakooda pesarathu illa..ethuvum thandanai than
Post a Comment