Dec 12, 2015

சென்னையில்..

சென்னையிலும் நிவாரணப் பொருட்களைக் கொடுத்து முடித்தாகிவிட்டது. அறுநூறு பொட்டலங்களுடன் வெள்ளிக்கிழமை சென்னையை அடையும் போது மணி மதியம் ஒன்றை நெருங்கியிருந்தது. வியாசர்பாடியில் உள்ள முல்லை நகரையும், எம்.ஜி.ஆர் நகரையும் முடிவு செய்து வைத்திருந்தோம். வெற்றி, பிரேமா ரேவதி, கவிதா முரளிதரன் போன்றவர்கள் இந்த இடத்தை பரிந்துரை செய்திருந்தார்கள். முல்லை நகர் உண்மையிலேயே சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது. கிட்டத்தட்ட முந்நூறு வீடுகள் நிறைந்த பெரும் குடியிருப்பு அது. அத்தனையும் தற்காலிகக் குடியிருப்புகள். 

நிறைய தன்னார்வலர்கள் சேர்ந்திருந்தார்கள். தமிழச்சி தங்கப்பாண்டியன் வந்திருந்தார். சேலத்திலிருந்து நேற்று கடலூர் வந்த அதே நண்பர்கள் சென்னைக்கும் வந்திருந்தார்கள். பெங்களூரிலிருந்து மூன்று நண்பர்கள் வந்திருந்தார்கள். சென்னையிலிருந்து வெங்கட், குமார் உள்ளிட்டவர்கள் வந்திருந்தார்கள். துணை ஆணையர் மாதவன், வருவாய் கோட்ட அலுவலர் சூர்யபிரகாஷ் வந்திருந்தனர். டி.ஆர்.ஓ வந்திருந்ததால் காவல்துறை ஆய்வாளரும், காவலர்களும் வந்திருந்தார்கள். அப்புறம் என்ன பிரச்சினை? எந்தப் பிரச்சினையுமில்லை. மூட்டைகளை எடுத்து வீடு வீடாகக் கொண்டுப் போய்க் கொடுத்தோம். சிரமமான காரியம்தான். மிகக் குறுகலான சந்துகள். சேறும் சகதியுமாக கால்கள புதைந்தன. அந்த தெருக்களில் நடப்பதே கூடச் சிரமம். மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாக நடந்தார்கள்.

தினமணியிலிருந்து மகேஷ்பாபுவும், குமுதத்திலிருந்து கார்டூனிஸ்ட் பாலா உள்ளிட்ட ஒரு குழுவும் வந்திருந்தார்கள். 

முல்லைநகரில் கிட்டத்தட்ட அத்தனை வீடுகளிலும் கொடுத்துவிட்டோம். அக்கம் பக்கத்து பகுதியிலிருந்து வந்தவர்கள் தங்களுக்கும் தேவை என்று நச்சரிக்கத் தொடங்கினார்கள். அவர்களது நச்சரிப்பின் காரணமாக அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டியிருந்தது. அடுத்ததாகச் செல்வதற்கு திட்டமிட்டிருந்த எம்.ஜி.ஆர் நகருக்குள் பெரிய வண்டி நுழையாது என்றார்கள். கண்ணுக்கு மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி மூட்டைகளை டாட்டா ஏஸூக்கு மாற்றினோம். 

எம்.ஜி.ஆர் நகர் சற்று பரவாயில்லை. முல்லை நகர் அளவுக்கு மோசமில்லை. சற்றே சுமாரான பகுதி. ஆனால் அத்தனை பேரும் கூலித் தொழிலாளர்கள்தான். வீடுகளில் வெள்ளம் புகுந்து வடிந்த பகுதிகள்.அந்தப் பகுதியின் தன்னார்வலர்களிடம் முந்நூறு டோக்கன்கள் மட்டும் கொடுக்கச் சொல்லியிருந்தோம். ஆனால் ஐந்நூறு கொடுத்திருந்தார்கள். முந்நூறு மூட்டைகளைக் கொடுத்து முடிக்கும் தறுவாயில் என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக இன்னொரு அமைப்பினர் சில பொருட்களுடன் உள்ளே வந்திருந்தார்கள். அடுத்தடுத்த டோக்கன்களுக்கு அவர்களைக் கொடுக்கச் சொல்லிவிட்டு நாங்கள் கிளம்பியிருந்தோம். வண்டியில் ஐம்பது மூட்டைகள் மிச்சமிருந்தன. அப்படியென்றால் எம்.ஜி.ஆர் நகரில் முநூறு கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாற்றும் போது எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அதுவொன்றும் பிரச்சினையில்லை. யோசித்துக் கொடுத்துவிடலாம்.

வழக்கறிஞர் சீனிவாசனின் நண்பர்கள் பிரியாணி வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்கள். வியாசர்பாடி முழுக்கவும் ஒருவிதமான கெட்ட வாசனை வீசுகிறது. அரசாங்கமும் மாநகராட்சியும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இன்னமும் சில நாட்களில் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த நோய்களுக்கு மர்மகாய்ச்சல் என்று பெயர் வைக்க வேண்டியிருக்கும். காருக்குள் அமர்ந்து கூட உண்ண முடியவில்லை. கடும் நாற்றம். 

சில நிமிடங்களில் கார்டூனிஸ்ட் பாலா அழைத்தார். ‘இன்னும் எத்தனை மிச்சமிருக்கு?’ என்றார். பதில் சொன்னேன். அயனாவரத்தில் ஒரு பகுதி இருப்பதாகச் சொன்னார். பெரும்பாலான தன்னார்வலகர்கள் கிளம்பியிருந்தார்கள். நான்கைந்து பேர் மட்டும் இருந்தோம். அவர்களும் சோர்வடைந்திருந்தார்கள். ‘போலாமா?’ என்று கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் விஷயம் கேள்விப்பட்டவர்கள் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் ‘போலாம்’ என்றார்கள். கிளம்பினோம். இடம் தெரியாமல் சுற்று சுற்றென்று சுற்றி ஒரு வழியாக இடத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்த போது மாலை வடிந்திருந்தது. அந்த இடமும் கொடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. குடிசைகளே இல்லை. எல்லாவற்றையும் மழை அடித்துச் சென்றிருந்தது. மிச்சமிருக்கும் பொருட்களை குட்டு சேர்த்து வைத்து அருகில் அமர்ந்திருந்தார்கள். அந்த இடத்தில் குடிசை இருந்ததற்கான அடையாளம் அது மட்டும்தான். நாங்கள் இறங்கியவுடனேயே அவர்களில் ஒருவர் சப்தம் போட்டு மற்றவர்களை அழைத்துவிட்டுவிட்டார். ஆளாளுக்கு கொத்தத் தொடங்கினார்கள். எல்லோரையும் சமாளித்து நாற்பது மூட்டைகளை அவர்களது குடிசை இருந்த இடத்திலேயே கொண்டு போய்ச் சேர்த்திருந்தோம். அதுவரை பொருட்கள் கிடைக்காதவர்கள் வந்து திட்டத் தொடங்கினார்கள். இனியும் சமாளிக்க முடியாது போலத் தெரிந்தது. முடிந்தவரைக்கும் இன்னும் சில மூட்டைகளைக் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்தோம்.

இந்த மூன்று பகுதிகளைத் தவிர இன்னொரு பத்துக் குடும்பத்துக்கு நிவாரணப் பொருட்களை தனியாகக் கொடுத்திருக்கிறோம். லதா என்பவரது குடும்பம் அது. முடிச்சூர் பகுதியைச் சார்ந்தவர். பெரிய ஆதரவு எதுவுமில்லை. மழை நீர் எல்லாவற்றையும் அடித்துச் சென்றுவிட்டது. என்.டி.டி.வி செய்தித் தொடர்பாளர் வழியாக பரிந்துரைத்திருந்தார்கள். அவர்களை வியாசர்பாடிக்கு வரச் சொல்லியிருந்தோம். லதா தனது உறவினர்கள் குழுவோடு வியாசர்பாடிக்கு வந்திருந்தார். பத்துக் குடும்பங்கள். ஆளுக்கு ஒரு மூட்டை கொடுத்திருந்தோம். இவற்றோடு கொண்டு சென்றிருந்த அத்தனை மூட்டைகளும் தீர்ந்திருந்தன. 

மனதுக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது. எண்ணியதை எண்ணியாங்கு முடித்திருக்கிறோம். திட்டமிட்டத்தில் துளி கூட பிசகவில்லை. மிகச் சரியான அணி அமைந்துவிட்டது. நிதி வழங்குவதிலிருந்து, பொருட்களை வாங்கி பொட்டலம் கட்டுவதில் ஆரம்பித்து மிகச் சரியாகக் கொடுத்து முடிக்கும் வரை அற்புதமான அணி அமைந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக ‘தினமும் எழுதுவது வேள்வி மாதிரி’ என்று தலைமையாசிரியர் இனியன் ஒரு முறை  அழைத்துப் பாராட்டினார். ‘வேள்வியின் விளைவு என்னன்னு முடிவு செய்ய வேண்டாம். அது பாட்டுக்கு நிகழும்..நீ எழுதிட்டே இரு’ என்றார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றுகிறேன். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். அது வழி நடத்திச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது. சென்னையில் பொருட்களைக் கொடுத்து முடித்த பிறகு இந்த எண்ணம்தான் திரும்பத் திரும்ப அலையடித்துக் கொண்டிருந்தது. விளையாட்டுத்தனமாக எழுத ஆரம்பித்தது. எதையெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லையோ அதையெல்லாம் நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. வேறு என்ன வேண்டும்? எந்தக் கணத்திலும் இந்த எழுத்து என்னிடமிருந்து கொண்டேயிருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். அது தன் போக்கில் அழைத்துச் செல்லட்டும்.

அச்சிறுபாக்கத்திலிருந்து சென்னை கிளம்பும் போதே முப்பது மூட்டைகளை அங்கேயே வைத்துவிட்டுத்தான் கிளம்பியிருந்தோம். முந்தின நாள் இருளர் குடியிருப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்று காட்டியிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுப்பதற்கு எடுத்து வைக்கப்பட்ட மூட்டைகள் அவை.  சென்னையில் அச்சிறுபாக்கம் நண்பர்களிடம் ‘ஊருக்குச் சென்ற பிறகு நீங்களே கொடுத்துடுறீங்களா?’ என்றேன். அவர்கள் சரி என்று சொல்லியிருந்தார்கள். அதையும் உடனிருந்து செய்திருக்க வேண்டும் என்று மனதுக்குள் துளி உறுத்தலாகத்தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. இதற்காக மீண்டும் அச்சிறுபாக்கம் செல்ல வேண்டியதில்லை. சுந்தர் தனது பைக்கில் அழைத்துச் சென்று போரூரில் சோழனின் அலுவலகத்தில் விட்டிருந்தார். இரவு சோழனின் அலுவலகத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் பெங்களூர் கிளம்புவதாகத் திட்டம். சென்னையில் என்ன நடந்தது என்பதை எழுதிவிடுவதற்காக கணினியை எடுத்த போது அதன் சார்ஜரை விட்டுவிட்டு வந்திருந்தேன். ஜெயராஜை அழைத்தேன். ‘ஆமா...இங்கதான் இருக்கு’ என்றார்.

கடமையிலிருந்து ஒரு போதும் தப்பிக்க முடியாது. 

‘சரி நாளைக்கு காலையில் வர்றேன்’ என்றேன். ‘வேண்டாம்....நானே யாரிடமாவது கொடுத்துவிடுகிறேன்..கோயம்பேட்டில் நின்னு வாங்கிக்குங்க’ என்றார். காலையில் அவரை அழைத்து ‘நானே வந்துடுறேன்’ என்றேன். ‘சரி வாங்க இருளர் குடியிருப்பிலும் கொடுத்துவிடலாம்’ என்றார். வந்தாகிவிட்டது. இருளர் குடியிருப்பில் பொருட்களை வழங்கிவிட்டு பெங்களூர் கிளம்புகிறேன். 

கடந்த இரண்டு நாட்களாகச் சந்தித்த குடிசை வாழ் மனிதர்கள் மனதைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். வறுமையின் குரூர தாண்டவத்துக்குள் கால் வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். மனம் முழுக்கவும் அவர்கள்தான் நிரம்பியிருக்கிறார்கள். இது பெரிய சாதனை இல்லைதான். ஆனால் நம்மால் இயன்ற சிறு உதவியை சரியான மனிதர்களுக்குச் செய்துவிட்டு வந்திருக்கிறோம். இதைக் காலம் முழுவதும் தொடர்வதற்கான மனோபலத்தையும் நேர்மையையும் உடல்பலத்தையும் கடவுள் அருளட்டும். இதே போன்ற மிகச் சிறந்த நண்பர்களும் ஆதரவளிப்பவர்களும் எப்போதும் உடனிருக்கட்டும். அத்தனை பேருக்கும் நன்றியைக் அவரவர் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன்.