Dec 10, 2015

வெற்றி

இன்று காலை மேல் மருவத்தூரில் இறங்கிய போது மணி ஆறு. குளித்து முடித்து நிவாரணப் பொருட்கள் இருந்த பள்ளிக்குச் சென்று மூட்டைகளை லாரியில் ஏற்றி எட்டு மணிக்கெல்லாம் தயாராகிவிட்டோம். எதிர்பார்க்கவேயில்லை. கிளம்புவதற்கு முன்பாகவிருந்தே ஏகப்பட்ட பெருந்தலைகள் தொடர்பில் இருந்தார்கள். செல்வன் ஐ.பி.எஸ், மணிகண்டன் ஐ.எஃப்.எஸ், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் மாதவன் என்று ஆள் மாற்றி ஆள் பேசிக் கொண்டிருந்தார்கள். கடலூர் மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி, க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் என சகலரையும் இயல்பாகத் தொடர்பு கொள்ள முடிந்தது. அத்தனை பேரும் மிகுந்த ஆதரவுடன் பேசினார்கள். அப்பொழுதே முழு நம்பிக்கையும் வந்துவிட்டது. 

அனந்த பத்மநாபனின் வோக்ஸ்வேகன், அச்சரபாக்கத்திலிருந்து ஒரு ஸ்விப்ட், ஒரு சாண்ட்ரோ, மரக்காணத்திலிருந்து ஒரு பார்ச்சூனர் என்று நான்கு வண்டிகள் கிளம்பிய போது துளி பயம் கூட இல்லை. மூட்டைகள் ஏற்றப்பட்ட வண்டியை நடுவில் விட்டு முன்னும் பின்னுமாக பயணித்தோம். வண்டியில் முரட்டுத்தனமாக நான்கைந்து தன்னார்வலர்கள் ஏறியிருந்தார்கள். சேலத்திலிருந்து வந்த மருத்துவர் சரவணன், சத்யா மற்றும் அரவிந்த் ஆகிய நண்பர்கள் பாண்டிச்சேரியில் இணைந்து கொண்டார்கள். கடலூரிலிருந்து அப்பாஜி சேர்ந்து கொண்டார். கார்களின் எண்ணிக்கை அதிகமாகியிருந்தது. புதுச்சேரியில் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஏறிக் கொண்டார்கள்.

கடந்த வாரம் எழுதிய போது அடுத்த வாரம் வியாழக்கிழமையன்று பொருட்களை விநியோகம் செய்யவிருக்கிறோம் என்று குறிப்பிட்ட பிறகு சற்று பயமாகத்தான் இருந்தது. பத்து லட்ச ரூபாய் பொருட்கள். சொன்னபடி செய்ய முடியுமா என்கிற சந்தேகமிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஒவ்வொரு காரியமும் துல்லியமாக நடைபெற்றது. நேற்றே ஜெயராஜ் உள்ளிட்ட நண்பர்கள் மஞ்சக்குழி கிராமத்தைச் சென்று பார்த்துவிட்டு பாதையை முடிவு செய்திருந்தார்கள். அதே பாதையில் இம்மி பிசகாமல் சென்றோம். எல்லோருக்கும் அறிவித்திருந்தோம்.

பி.முட்லூர் என்கிற இடம் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஐநூறு பொட்டலங்களுடன் வண்டி போய்க் கொண்டேயிருந்தது. முட்லூரில்தான் பிரச்சினை ஆரம்பமானது. அந்த ஊர் இன்ஸ்பெக்டர் அறுபது மூட்டைகளை இறக்கி வைக்கச் சொன்னார். திக்கென்றானது. 

‘சார் அறுபதாயிரம் ரூபாய் மதிப்பு..முடியாது’ என்றதற்கு ‘இதுக்குத்தான் பாண்டிச்சேரியிலிருந்து பந்தோபஸ்துக்கு ரெண்டு கான்ஸ்டபிளை அனுப்பினேனா? Its not fair’ என்றார். 

‘நான் வேணும்ன்னா எஸ்பிகிட்ட பேசறேன்’ என்றேன். மூட்டைகளை அவருக்காகக் கேட்கவில்லை. நேற்று யாரோ சாலை மறியல் செய்திருக்கிறார்கள். யாரிடமாவது வாங்கித் தருவதாகச் சொல்லி பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார். அவருடைய வாக்குறுதிக்கும் நம்முடைய மூட்டைகள் அவலாக்கப் பார்த்தார். யாராவது கை காட்டுபவர்களுக்கு பொருட்களைக் கொடுப்பதாக இருந்தால் இவ்வளவு சிரமப்பட்டிருக்கவே வேண்டியதில்லை. நாம் விசாரித்து முடிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் பொருட்கள். இல்லையென்றால் வண்டியைத் திருப்பிவிடலாம் என்ற யோசனைக்கு வந்திருந்தோம். அன்றைக்கே கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

மிரட்டுவதற்காகச் சொல்கிறேன் என்று நினைத்துவிட்டார். 

‘எஸ்பிகிட்ட ஃபோன் போட்டுக் கொடுங்க..நானே பேசறேன்’ என்றார். தெரிந்த அத்தனை உயரதிகாரிகளுக்கும் தகவலைச் சொன்னேன். யார் அவரிடம் பேசினார்கள் என்று தெரியவில்லை. ‘உங்க பொருளே வேண்டாம்...கிளம்புங்க’ என்றார். உள்ளூர் பஞ்சாயத்து தலைவி பதறியிருந்தார். பதற்றத்தில் ‘போலீஸ்காரங்களுக்கு அவங்க கேட்ட அறுபது மூட்டை கொடுத்துடுங்க’ என்றார். ரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. 

‘சார் அடுத்த தடவை லோக்கல்ல பிரச்சினைன்னா எங்களுக்கு ஹெல்ப் பண்ண மாட்டாங்க’ என்பது பஞ்சயாத்துத் தலைவியின் பயம்.

‘நீங்க இப்படியெல்லாம் பேசினா வண்டியைத் திருப்பறோம்’ என்றோம். அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. வண்டியைக் கிளப்பிய போது கான்ஸ்டபிள்கள் வண்டியில் இல்லை. இறங்கிவிட்டார்கள். நான்கைந்து பெண்கள் வழியை மறித்தார்கள். ஒரு இளைஞன் வண்டிக்கு குறுக்காக நின்றான். பிரச்சினை ஆகப் போகிறது என்று பதறுவதற்குள் ஓட்டுநர் சமயோசிதமாக வண்டியின் ஆக்ஸிலேட்டரை மிதித்து முரட்டுத்தனமாகச் சத்தம் எழுப்பினார். கூட்டம் தானாக விலகியது. வண்டி மஞ்சக்குழியை அடைந்தது.

அதன் பிறகு அத்தனையும் சுமூகமாக நடந்தது. இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். கொடுமையாக இருந்தது. வீடுகள் தரைமட்டமாகிக் கிடந்தன. பொருட்கள் நாசமாகியிருந்தன. இன்னமும் பெரும்பாலான வீடுகளில் சமையல் ஆரம்பித்திருக்கவேயில்லை. எங்களை தேவதூதர்கள் போல நினைத்துக் கொண்டு தங்களது பிரச்சினைகளை அடுக்கினார்கள். ‘ஒரு கட்சிக்காரன் கூட வரலை’ என்பது பிரதானமான குற்றச்சாட்டாக இருந்தது. எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டோம்.

அடுத்தடுத்த கட்டமாக எங்களால் முடிந்தளவுக்கு பிரச்சினைகளை சரி செய்து தருவதாகச் சொன்ன போது அவர்கள் முகம் ஒளிர்வதைக் காண முடிந்தது. ‘ஓட்டுக்கு காசு வாங்காதீங்க’ என்பதுதான் என்னிடம் இருந்த ஒரே செய்தி. திரும்பத் திரும்பச் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டேன். மூட்டையிலிருந்த பொருட்கள் அவர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தன. சந்தோஷப்பட்டார்கள். இதுவரையிலும் அவர்களுக்கு பெரிதாக எந்த நிவாரணமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் டோக்கன் முறைப்படி வரிசையில் நின்று வாங்கினார்கள். சில குடிசைகளுக்கு நாங்களே எடுத்துச் சென்று கொடுத்தோம். தாழ்த்தப்பட்டவர்கள், இசுலாமியர்கள் என்று எல்லோருக்கும் கொடுத்தோம்.

பக்கத்து பஞ்சாயத்துத் தலைவர் வந்து தனது பஞ்சாயத்துக்கும் கொடுக்க வேண்டும் என்றார். அவருடைய பஞ்சாயத்தில் இசுலாமியர்கள் அதிகம் போலிருக்கிறது. ‘நாங்க திட்டமிட்டிருக்கவில்லை. மூட்டைகள் போதாது’ என்றதற்கு ‘நீங்க வேற மாதிரி செய்யறீங்க’ என்றார். இசுலாமியர்களைத் தவிர்த்துவிட்டு இந்துக்களுக்கு மட்டும் வழங்குகிறோம் என்ற அர்த்தம் அது. அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. மஞ்சக்குழி பஞ்சாயத்து தலைவி ‘இன்னமும் நூற்று நாற்பது வீடுகளுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்றார். அந்த வீடுகள் அவ்வளவாக பாதிக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளூரில் தனக்கு பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக எல்லோருக்கும் கொடுக்கச் சொல்வதாகத் தோன்றியது. பெரும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஊரில் இத்தகைய மனக்குறைகள் சகஜம்தான். ஆனால் எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது சாத்தியமேயில்லை. நாங்கள் எதுவும் சொல்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டோம்.

கடலூருக்கு நானூறு மூட்டைகள் கொடுக்க முடிவு செய்திருந்தோம். முந்நூற்று எண்பது மூட்டைகள் கொடுத்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிடவும் திருப்தியாகச் செய்துவிட்ட மன நிம்மதி.

தூசி நிறைந்து கண்கள் உறுத்திக் கொண்டிருக்கின்றன. நேற்றைய இரவு நேரப் பயணமும் மஞ்சக்குழி கிராமத்தில் ஓடி ஆடியதும் உடல் அசதியைக் கொடுத்திருக்கின்றன. ஆனால் தூக்கம் வரவில்லை. மனம் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழிகிறது. நிசப்தம் அறக்கட்டளைக்கு இது ஒரு மைல்கல். இதைப் பெருமயாகச் சொல்லவில்லை. ஆனால் எப்படிச் சொல்லாமல் இருப்பது? பயணம் முழுவதும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருந்த அத்தனை நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. மிகச் சரியான கிராமத்தைத் தேர்ந்தெடுத்து உதவியிருக்கிறோம். முந்நூற்றைம்பது குடும்பங்களில் சந்தோஷத்தின் விளக்கைத் துளி தூண்டியிருக்கிறோம். நெகிழ்ச்சியில் மனம் ததும்புகிறது.

நாம் செல்லவிருக்கிற நெடுந்தூரத்தின் முதல் அடி இது. இந்தக் காரியத்துக்கு உறுதுணையாக இருந்த அத்தனை உயரதிகாரிகளுக்கும், நன்கொடையாளர்களுக்கும், ஜெயராஜ் உள்ளிட்ட அச்சரபாக்கம் நண்பர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி. நன்றி சொல்லி யாரையும் அந்நியப்படுத்தவில்லை. நாம் செய்திருக்கிறோம். அத்தனை பேரும் இணைந்து செய்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம். நாளை சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் காலையில் சந்திக்கலாம். 












17 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Amazing Work Mani. Way to go

மைக் முனுசாமி said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உதவி சரியாக போய் சேர்ந்திருக்கிறது. உங்களுக்கு மிக மிக நன்றி - பரசுராமன், ஈரோடு.

அன்பே சிவம் said...

ஏழைகளின் கண்ணீரை
துடைக்க நீண்ட
எல்லா கரங்களுக்கும்
நீர் நிறைந்த கண்களுடன் நன்றி...

kailash said...

Mani never seen such a planning and execution in relief , as far as i know you and your friends are doing things to needy genuinely . Some others might also be doing in that way but i could see it . We are blessed to have you as our friend and blog writer .

Anonymous said...

Great Work !

SENTHIL BLR said...

Fantabulous Manikandan..

காவேரிகணேஷ் said...

அருமையான பணி , மணி... வாழ்த்துக்கள்...அன்பு..

Ravindran said...

Superb Mani.

Ponchandar said...

Hats of to you Manikandan Ji ! !

சுதா சுப்பிரமணியம் said...

Happy to hear ☺

Unknown said...

ஏழைகளின் கண்ணீரை
துடைக்க நீண்ட
எல்லா கரங்களுக்கும்
நீர் நிறைந்த கண்களுடன் நன்றி.
P.Senthilkumar

Ravindran said...

Superb Mani.

Uma said...

எனக்குக் கண்கள் கொஞ்சம் கலங்குகிறதுதான். நன்றியுடன் வணங்குகிறேன்.

Unknown said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் சென்ற உங்களுக்கே பிரச்சனை வருகிரது என்றால் சுயமாக தன்னால் முடிந்த சில செயல்களை செய்ய நினைப்பவர்களின் நிலை என்ன? ஏன் இப்படி ஆயிற்று தமிழகம்.

Vinoth Subramanian said...

intha post ah innoru four times padichu santhosha pattukkuven mani sir!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கை கொடுங்கள்!
பாராட்டுகள்!!

Unknown said...

Love you Mani Anna:).Keep rocking.Romba santhisshama Irukku.Ungala mathiri plan panni correct ah theva paduravangalukku help pandering:) Sema:):):)