ஒரு கேளிக்கை விருந்து. லீலா பேலஸூக்கு வரச் சொல்லி பெருங்கையிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. எப்படியும் லட்சக்கணக்கில் பில் வரும். எதற்காகச் செலவு செய்கிறார் என்று புரியவில்லை. அது சரி. இவர்கள் செலவு செய்யவில்லையென்றால் லீலா பேலஸ்காரனுக்கு என்ன வேலை? இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதான். ஆனால் ஒன்று- இப்படியான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில் எனக்கு அலாதி இன்பம். அளவில்லாமல் குடித்துக் கொள்ளலாம். அளவில்லாமல் சாப்பிடலாம். இரண்டுமே ஒத்து வராதுதான். ஆனாலும் விடுவதில்லை. இதெல்லாம் முட்டையில் பழகியது. கட்டைக்கு போகும் வரைக்கும் ஒட்டிக் கொண்டேதான் இருக்கும்.
விஐடியில் படித்த போது குடியாத்தம் தாண்டி ஒரு ஆயா கடைக்குச் சென்று சாராயம் குடிப்பார்கள். காய்ச்சப்பட்ட சாராயம். நான்கைந்து பேர்தான் செல்வோம். மொத்தச் செலவையும் அஜய் பார்த்துக் கொள்வான். பக்கத்தில் அமர்ந்து சில்லி சிக்கன் விழுங்கிக் கொண்டேயிருக்கலாம். குடித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசும் தமிழ் மீடியப் பையன்களை ரசிப்பதற்காகவே எவ்வளவு முறை வேண்டுமானாலும் செல்லலாம். பிராந்தி விஸ்கி அடிக்கிறவர்கள் அவ்வளவு பேசிப் பார்த்ததில்லை. ஆனால் சாராயம் வெகு வேலை செய்யும். குடிக்காமல் வேடிக்கை பார்க்கும் போது ஒரேயொரு பிரச்சினையுண்டு - அவர்கள் என்ன பேசினாலும் வாயைத் திறந்து சிரிக்கவே கூடாது. சிரித்து மாட்டினால் அவ்வளவுதான். ‘என் சோகம் உனக்கு சிரிப்பா இருக்காடா?’ என்று பிடித்துக் கொண்டால் அடுத்த நாள் போதை இறங்கும் வரை நம்மை ஊறுகாயாக்கிவிடுவார்கள். ஆனாலும் இப்படி வேடிக்கை பார்ப்பதில் ஒரு த்ரில் இருக்கவே செய்கிறது.
லீலா பேலஸூக்குச் செல்வதற்காக அனுமதி கேட்டேன். உள்துறை இலாகாவிடம்தான். ‘இதையெல்லாம் நீங்க ஊக்குவிக்கக் கூடாது’ என்றாள். அது சரிதான். ஆனால் முக்கியமான காரணம் அதுவன்று. டென்வர் சென்றிருந்த போது குடித்துவிட்டேன். அது அவளுக்குத் தெரியும். அதுதான் பிரச்சினை. ஆகம விதிகளின்படிதான் குடித்தேன் என்று சொன்னாலும் நம்பவில்லை. இனிமேல் குடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கி வைத்திருக்கிறாள். அது அமெரிக்கா. அமெரிக்காவில் அப்படியிருந்தேன். இங்கே அப்படியிருக்க மாட்டேன் என்று சொன்னாலும் நம்பவில்லை. போதாக்குறைக்கு லீலா பேலஸிலிருந்து வரும் போது ஆட்டோ பிடித்து வந்துவிடுகிறேன் என்று சொன்னது சந்தேகத்தை இன்னமும் கிளறிவிட்டது. போதையில் வீடு வந்து சேர முடியாது என்பதால் ஆட்டோ பிடித்துக் கொள்வதாகச் சொல்வதாக நினைத்திருக்கிறாள்.
உண்மையில் லீலாபேலஸ் மாதிரியான இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதற்கு தயக்கமாக இருக்கிறது. அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் ஒரு சந்து இருக்கிறது. அந்தச் சந்தில்தான் இருசக்கர வாகனங்களை நிறுத்தச் சொல்வார்கள். வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே இருக்கிற மொத்த நேரமும் ‘எவனாச்சும் நம்ம அழகுராணியைத் தூக்கிட்டு போய்ட்டா என்ன பண்ணுறது?’ என்ற நினைப்பு அரித்துக் கொண்டேயிருக்கும். நாம் வைத்திருக்கிற பைக் எல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை. ஆனால் நமக்கு அதுதான் பெரும்பொருட்டு. அந்த வம்புக்குத்தான் பைக் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆட்டோ பிடித்தால் எழுபத்தைந்து ரூபாயோடு முடிந்துவிடும். உள்ளே நிம்மதியாக இருக்கலாம். இதையெல்லாம் யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வீட்டில் இருப்பவர்கள் நம்புவதில்லை. என் தலையெழுத்து. ‘இவனைப் பத்தி நமக்குத் தெரியாதா?’ என்கிற நினைப்பிலேயே மேலேயிருந்து கீழே வரைக்கும் பார்க்கிறார்கள்.
பெரும் பணக்காரர்கள் சுழலும் இத்தகைய இடங்களுக்கு கைக்காசைச் செலவழித்துச் செல்ல முடியாது. யாராவது கூட்டிச் சென்றால் ஓரமாக நின்று சைட் அடித்துக் கொள்ளலாம். மெல்லிய இசையும் கசிகிற மங்கலான வெளிச்சமும் நளினமான யுவதிகளும் வேறொரு உலகம் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பார்கள். ‘மனுஷங்க எப்படியெல்லாம் வாழுறாங்க பாரு’ என்று ஆச்சரியமாக இருக்கும். அந்த உலகத்திற்குள் எந்தக் காலத்திலும் நம்மால் நுழைந்துவிட முடியாது என்பது ஆழ்மனதுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் மூன்று மணி நேரம் ஓசிப் பார்ட்டியை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவுடன் அப்படியே நேர் எதிரான வேறொரு உலகம் கண்களுக்கு முன்பாக விரியும். இரைச்சலும் வாகன நெரிசல்களும் புகையும் தூசியும் பரபரப்பான மனிதர்களும் நிரம்பிய உலகம். ஆனால் இதுதான் நிரந்தரமான உலகம். உண்மையான உலகம். தினந்தோறு எதிர்கொள்ளக் கூடிய உலகம்.
எங்கள் லே-அவுட்டில் கூடை முடைகிறவர்கள் கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக குடிசை போட்டிருக்கிறார்கள். தணிசலான குடிசைகள். கிட்டத்தட்ட முட்டி போட்டுத்தான் உள்ளே நுழைய முடியும். பகல் வேளைகளில் சாலையின் ஓரமாக மூங்கில்களைச் சீவி காய வைத்திருப்பார்கள். அவர்களில் சிலர் விதவிதமான பொருட்களை முடைந்து கொண்டிருப்பார்கள். உடலில் தெம்புள்ளவர்கள் விற்பனைக்குச் செல்கிறார்கள். பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத குடிசைகள் அவை.
எப்பொழுதும் குடிசைவாசிகளின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் கடந்த வாரத்தில் ஒரு கொலை நடந்துவிட்டது. விற்பனையில் ஏதோ தகராறு. பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவன் பணத்தைத் தரவில்லை என்று கணவனும் மனைவியும் அவனோடு சண்டையைத் தொடங்கியிருக்கிறார்கள். பிரச்சினை பெரிதாகி எதிராளி ஒரு மரத்தை எடுத்து வீச அது அந்தப் பெண்மணியின் பின்னந்தலையில் அடித்திருக்கிறது. பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிட்டாள். எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் வந்த பிறகுதான் எங்களுக்கு விவகாரம் தெரியும்.
‘என்னாச்சு?’ என்று கேட்டதற்கு ‘பணத் தகராறு’ என்றார்கள்.
‘எவ்வளவு?’ என்று கேட்டிருக்க வேண்டியதில்லை. அப்பா கேட்டுவிட்டார்.
முந்நூறு ரூபாய்.
அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இறந்து போனவளுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. எடுத்து எரித்துவிட்டு தனது குடும்பத்தோடு அந்த மனிதன் வேறு ஏதோவொரு ஊருக்குச் சென்றுவிட்டான். ‘திரும்ப வருவாரா?’ என்று கேட்ட போது யாருக்கும் தெரியவில்லை. இப்பொழுது அந்தக் குடிசைவாசிகள் வழக்கம் போலவேதான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலையில் வரும்போது கூட மூங்கில்களைக் காய வைத்திருந்தார்கள். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. யாரோ சிலர் கூடைகளை முடைந்து கொண்டிருந்தார்கள்.
முந்நூறு ரூபாய்க்கு சாவு விழும் அதே ஊரில்தான் லீலா பேலஸில் விருந்து கொடுக்கிறவர்களும் வாழ்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கு இரண்டுமே வேண்டும். லீலாபேலஸூக்கும் செல்ல வேண்டும். இத்தகைய மனிதர்களைப் பார்த்து உச்சுக் கொட்டவும் வேண்டும். சேற்றில் ஒரு கால் மேட்டில் ஒரு கால். அதை அனுபவித்துக் கொண்டே ‘ச்சே இவங்க பாவம்’ என்று சொல்வதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. நான் ஓர் அயோக்கியன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.
7 எதிர் சப்தங்கள்:
// அந்த உலகத்திற்குள் எந்தக் காலத்திலும் நம்மால் நுழைந்துவிட முடியாது என்பது ஆழ்மனதுக்கு நன்றாகத் தெரியும்.// fact fact fact...
√
யாருயா நீ... இந்த எழுத்து, எழுதுற...,உன் எழுத்து அசரடிக்கிறதய்யா...
Life is hypocrisy boss...! Life was not created on earth for a purpose. Its a frigging accident. If we agree with that then we look at our life in a different way and things will get solved easily.
நான் ஓர் அயோக்கியன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். # இதை ஒத்துக்கொள்ள தைரியம் வேண்டும்.
நன்றாக உள்ளது. நீங்கள் சொல்லியபடி நீங்கள் ஒரு 'அ' யோக்கியன் ...
Enjoyed reading this article, keep up the good work - Ramki
Post a Comment