Dec 31, 2015

விகடன் நம்பிக்கை

விளம்பரத்துக்கும்(Advertisement) அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் (Branding) இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. எம்.பி.ஏ ஒழுங்காகப் படித்த மாணவர்களைக் கேட்டால் தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒருவர் தொடர்பு கொண்டார். சுமாரான நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சியில்(Intern)ஆக இருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாக தமது நிறுவனத்தின் பொருட்களை எப்படி பரவலாக்க முடியும் என்கிற வேலையைச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நிசப்தம் தளத்தில் அவ்வப்பொழுது அவரது நிறுவனத்தின் பொருள் குறித்து போகிற போக்கில் எழுத முடியுமா என்பதுதான் அந்தக் கோரிக்கை. விளம்பரமாகச் செய்யாமல் கட்டுரைகளுக்குள் அந்தப் பெயரை நுழைக்க வேண்டும். அதுவும் அடிக்கடி. 

‘நான் ஏன் தேவையில்லாமல் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும்? அதுவும் அடிக்கடி?’ என்பதை நாசூக்காகக் கேட்க வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் மாணவர். பாவம். இப்படி எழுதுவதற்கு ஒரு தொகையைத் தந்துவிடுவார்களாம். பேரம் பேசலாம் என்றார். அடுத்தவன் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு தங்களின் பொருட்களை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லும் தில்லாலங்கடித்தனத்தைச் செய்கிறார்கள். இதற்கு சந்தை ஆய்வு, களப்பணி என்று எதையாவது செய்திருப்பார்கள். இவர்களின் பொங்கச் சோறும் வேண்டியதில்லை. பூசாரித்தனமும் வேண்டியதில்லை. முடியாது என்று சொன்ன போது வற்புறுத்தவெல்லாம் இல்லை. நாம் இல்லையென்றால் அவர்களுக்கு ஆயிரம் பேர். வேறு யாரையாவது அணுகியிருப்பார்கள். 

எல்லாவற்றையும் விளம்பரமாக்குவதிலேயே குறியாக இருக்கிற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையா? விளம்பரம் என்பது மூன்று நிமிட கவனம். ‘எங்கள் பொருட்களை வாங்குங்கள்’ என்று பிரபுவையோ அமலாபாலையோ வைத்து விளம்பரப்படம் எடுப்பது அல்லது காஜல் அகர்வாலை வைத்து பேனர் அடிப்பது என்பதோடு விளம்பரம் முடிந்துவிடுகிறது. இந்தச் சமூகத்தைத் தங்களின் பொருட்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். இது பெரிய காரியமேயில்லை. ஆனால் ப்ராண்டிங் அடுத்த படி. கரீனா கபூரையும் விஜய்யையும் நம்பி கடைக்குள் வருகிறவர்களைத் திரும்பத் திரும்பத் வர வைப்பது. தங்களைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு உருவாக்குகிற நம்பிக்கை. அது அவ்வளவு சாதாரணமாக வந்துவிடுவதில்லை.

ப்ராண்டிங் செய்வதற்கான வியூகங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள்.  ‘காலங்காலமாக இந்தக் கடை இயங்குகிறது’ என்று பெருமையாகச் சொல்வது ஒரு வியூகம்தான். ‘எங்களை நீங்கள் முழுமையாக நம்பலாம்’ என்பது இன்னொரு யுக்தி. ‘திருப்தியில்லையென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை நீங்கள் கொண்டு வந்து கொடுத்துவிடலாம்’ என்பது மற்றொரு வியூகம். இப்படியான வியூகங்களின் வழியாக வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்குமான அடிப்படையான உறவை உருவாக்குவதையும், வாடிக்கையாளர் நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வைப்பதையும், அவரை நிறுவனத்தின் மீது விசுவாசமிக்கவராக மாற்றுவதையும் Branding strategies என்று சொல்லலாம். 

ஒரே வீதியில் நான்கு சூப்பர் மார்கெட் இருந்தாலும் அண்ணாச்சி கடை தம் கட்டுவது ப்ராண்டிங்க்தான். ‘அவர்கிட்ட தரமா இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது.

நிறுவனங்களுக்கு விளம்பரங்களும் தேவை; ப்ராண்டிங்கும் தேவை. ஆனால் தனிமனிதர்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ப்ராண்டிங் அவசியமானது. ஆனால் விளம்பரத்துக்கும் ப்ராண்டிங்குக்குமான வித்தியாசத்தை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அவசர உலகத்தில் நாம் விளம்பரப்படுத்துதலுடன் திருப்தி பட்டுக் கொள்கிறோம். நான்கு பேர் நம்மைத் திரும்பிப் பார்த்து ‘நீங்க சூப்பர் சார்’ என்று சொல்வதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புகிறோம். அப்படியில்லை. அது அவசியமும் இல்லை. அடுத்த கட்டம் இருக்கிறது. ப்ராண்டிங். ப்ராண்டிங் என்பதைக் கொச்சையான சொல்லாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘அவர் நம்பிக்கையான மனுஷன்’ ‘அவரை நம்பி காரியத்தில் இறங்கலாம்’ ‘அந்தம்மா சொன்னா சரியா இருக்கும்’ என்பதெல்லாம் கூட ஒரு தனிமனிதன் ப்ராண்டாக மாறியிருக்கிறான் என்பதுதான் அடையாளம்தான். ‘நான் இதையெல்லாம் செய்யறேன் பாரு’ என்று விளம்பரப் படுத்திக் கொள்வதால் மட்டும் நம்மைப் பற்றிய இத்தகைய வாக்கியங்களை உருவாக்கிவிட முடியாது. தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே இதெல்லாம் சாத்தியம்.

ஏன் நம்மைப் பற்றிய நல்லதொரு கருத்தாக்கம் அவசியமானது என்கிற கேள்வி எழலாம். ப்ராண்டிங் என்றால் இந்த ஒட்டு மொத்த நாட்டையும் கொண்டாடச் செய்வதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் நான்கு பேர் நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது கூட ப்ராண்டிங்தான். நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று வேறு எதை விட்டுச் செல்ல முடியும்?

விளம்பரம் செய்து கொள்வதன் வழியாக முக தாட்சண்யத்துக்காக நம்மைப் பார்த்து ‘நீங்க சூப்பர்’ என்று நான்கு பேர் சொல்லக் கூடும். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புவது மாயை. நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதுதான் ப்ராண்ட். அதை மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் செய்துவிட மாட்டார்கள்.  ‘இவன் நடிக்கிறான்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். செய்கைக்கும் நம்முடைய எண்ணங்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் வழியாகவே நம்முடைய நடிப்பை, அற்பத்தனத்தை, புகழ் மோகத்தையெல்லாம் தாண்டி வர முடியும். வருகிற வருடத்தில் இந்த இடைவெளியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட வேண்டும் என விரும்புகிறேன். 


விகடனில் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நேற்று கேள்விப்பட்ட போது சந்தோஷமாகத்தான் இருந்தது. நேற்றிலிருந்தே மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. வேணியிடம் சொன்னேன். அப்படியொன்றும் சந்தோஷத்தைக் காட்டவில்லை. 

‘போன வருஷம் இதே மாதிரி பத்து பேரைத் தேர்ந்தெடுத்தாங்களா?’- என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 

‘ஆமாம்’ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

‘நாலு பேரைச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்றாள். நியூரான்களைக் கசக்கினாலும் இரண்டு பேரைக் கூட ஞாபகப்படுத்த முடியவில்லை. 

‘உங்களை உற்சாகப்படுத்தறாங்க. அதுக்கு மேல ஒண்ணுமில்லை’

இந்த வரி அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்தது என்றாலும் அவள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது இன்னமும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை அதிகரிக்கிறது. இதுதான் தொடக்கம். சரியாகச் செயல்படாவிட்டால் வெறும் விளம்பரமாகச் சுருங்கிவிடும்.

விகடன் குழுவினருக்கு நன்றி. உடனிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். தொடர்ந்து செல்ல வேண்டிய வெகுதூரம் இருக்கிறது. அனைவருடைய அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் இன்னமும் வேகமாகச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

நன்றி.

Dec 30, 2015

வெள்ளைத் தமிழன்

பீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார். குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை, கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார். இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில் இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.


ஆரம்பத்தில் பீட்டர் மலையேற்றம் போன்ற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் மலையேறச் செல்லுமிடங்களுக்கு சிறு குழுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் குழுவை சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற பெயரில் ஓர் முறையான அமைப்பாக மாற்றியிருக்கிறார். அதன் வழியாக தனது குழுவினரோடு சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவருக்கு சென்னையின் கசகசப்பைக் கொஞ்சமாவது மாற்ற முடியும் என்று தோன்றியிருக்கிறது. சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெரினா கடற்கரையிலிருந்து கோட்டூர்புரம் குப்பம் வரைக்கும் சகல இடங்களிலும் களமிறங்குகிறார்கள்.

யார் தங்களோடு வருகிறார்கள், யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் பீட்டர் கண்டுகொள்வதேயில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத அர்பணிப்புடன் கூடிய சேவை அது. எந்த இடத்தைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு இணைந்து கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுக்கிறார்கள். வருகிறவர்களுடன் இணைந்து வேலையை ஆரம்பிக்கிறார் பீட்டர். தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகள், பூட்ஸ், குப்பைகளை அள்ளிப் போடுவதற்கான கோணிப்பைகள் என சகலத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஜேசிபி, ட்ராக்டர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கூட செய்து வைத்து விடுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் படு வேகமாக சுத்தமாகிறது. ஒருவேளை சுத்தம் செய்ய முடியாவிட்டால் மீண்டும் இன்னொரு நாள் அதே இடத்தில் கூடுகிறார்கள்.

விடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வேலை நாட்களிலும் கூட காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரைக்கும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். அசாத்தியமான உழைப்பு இது. இத்தகைய வேலைகளின் போது பீட்டர் காலில் பூட்ஸ் கூட அணிவதில்லை. செருப்பை மட்டும் அணிந்து கொண்டு எந்தவிதமான சங்கோஜமுமில்லாமல் சகதிகளுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கால் வைக்கிறார். சிறுநீர் கழித்து வைத்திருக்கும் இடத்தைத் தாண்டும் போதே மூக்கின் மீது கர்சீப்பை வைத்துக் கொண்டு நகரும் மனிதர்களுக்கிடையில் பீட்டர் மாதிரியான மனிதர்கள் ஆச்சரியமூட்டக் கூடியவர்கள்.

வெளிநாட்டு மனிதர்கள் என்றாலே கேரளா மசாஜிலும், ஜெய்ப்பூர் யானைச் சவாரியிலும் பொழுதைக் கழிப்பார்கள் என்கிற நினைப்பில் சம்மட்டியை எடுத்து ஒரு வீசு வீசுகிறார் பீட்டர். தான் வாழ்கிற சென்னையில் தன்னால் சிறு சலனத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். துரும்பைக் கூட எடுத்துப் போடாத பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் கூடை கூடையாக குப்பைகளை அள்ளி ஒதுக்குகிறார்கள் பீட்டரும் அவரது குழுவினரும். 

பீட்டர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார். பெல்ஜியத்தில் வசிக்கும் அம்மாவை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார். தான் தனியன் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சென்னையில் அவருக்கு ஏகப்பட்ட உறவுகள் இருக்கின்றன. எப்பொழுதுமே அவருடன் ஓர் இளைஞர் குழாம் சேர்ந்துவிடுகிறது. அத்தனை பேரும் முப்பது வயதைத் தாண்டாத இளரத்தங்கள். பீட்டர் எதைச் சொன்னாலும் செய்கிறார்கள். பாலித்தீன் பைகளைப் பொறுக்கச் சொன்னாலும் பொறுக்குகிறார்கள். சேற்றை வாரி எடுக்கச் சொன்னாலும் செய்கிறார்கள். நன்றாகப் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் எப்படி சென்னையின் சேரிகளுக்குள் அருவெறுப்பில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பீட்டர் முன்னுதாரணமாக இருக்கிறார். வெறும் உத்தரவுகளோடு நின்று விடுகிறவன் வெற்றுத் தலைவனாகத்தான் இருக்க முடியும். பீட்டர் அப்படியில்லை. அவரே இறங்கி வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எந்த வரையறையும் பீட்டருக்கு இல்லை. மழை சென்னையை திணறடித்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கி நூற்றுக்கும் அதிகமானவர்களை பீட்டர் மீட்டிருக்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். அத்தனை வேலைகளையும் ஆத்மார்த்தமாகச் செய்கிறார். அவரைப் பற்றி அதிகமான ஊடகச் செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்குத் தான் ஒரு முகமாக இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரோடு களத்தில் இறங்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறார். சாக்கடை அள்ளுகிறார். குப்பைகளைப் பொறுக்குகிறார். வழித்தும் கொட்டுகிறார். 

பீட்டர் மாதிரியான மனிதர்கள் நமக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் நம் நம்பிக்கையைக் காக்கிறவர்கள்.

(ஜனனம் இதழுக்காக எழுதிய கட்டுரை. என்ன காரணம் என்று தெரியவில்லை- கட்டுரையை எழுதியவரின் பெயர் மாரியப்பன் என்று அச்சில் வந்திருக்கிறது. வேறொருவரின் பெயரில் பிரசுரம் செய்வதாக இருந்தால் தயவு கூர்ந்து என்னிடம் கட்டுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்காமல் இருப்பது நல்லது. எனக்கு நேரமும் இல்லை; அப்படி எழுத வேண்டிய கட்டாயமும் இல்லை)

திண்ணை

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பெயரில் காபிக்கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் முந்நூறு கிலோமீட்டருக்குள் ஏழெட்டுக்கடைகளாவது இந்தப் பெயரிலேயே இருக்கின்றன. இருபது ரூபாய்க்கும் குறைவில்லாமல் காபி விற்கிறார்கள். முக்கால்வாசி கடைகளில் பாடாவதியான காபியைத் தலையில் கட்டி ரசீதை சட்டைப்பைக்குள் செருகி அனுப்பிவிடுகிறார்கள்,  எம்.ஜி.ரோட்டில் இருக்கும் இந்தக் கடை வெகு சுமாராக இருக்கும் என்றாலும் தமிழ்நாட்டு காபி என்பதால் எட்டிப் பார்த்துவிடுகிறேன். ஆனால் ஒரு காபி முப்பது ரூபாய். தினமும் குடித்தால் கட்டுபடியாகாது என்பதால் எப்பொழுதாவது செல்வதுண்டு. 

திரும்ப வரும் வழியில் அல்சூருக்குள் நுழைந்து பெட்டிக்கடையில் சில பத்திரிக்கைகளை வாங்கி வருவது வழக்கம். அல்சூர் தமிழர்களின் பேட்டை. வெற்றிலை பாக்கிலிருந்து வாழை இலை வரை அனைத்தும் கிடைக்கும். வழக்கமாகச் செல்லும் பெட்டிக்கடைக்காரர் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசித்துவிடுகிறார். அதோடு நிற்பதில்லை.

‘என்ன சார் இந்த தடவை ஜெயலலிதா வந்துடுவாங்களா?’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசுப்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன? தோற்றால் என்ன? இருப்பதில் ஒரு சுமாரான கழிசடையைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். நம் தலையெழுத்து - அதுக்கு இது பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்தால் மூன்றாம் வருடம் முடிவதற்குள் இது படா மோசமானதாகிவிடுகிறது. ஐந்தாம் வருடத்தில் இதுக்கு அதுவே பரவாயில்லை போலத் தெரிகிறது. மீண்டும் அதைத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படியே கடந்த முப்பது வருடங்களை ஓட்டிவிட்டோம். எல்லாம் மாயை. இடமாறு தோற்றப் பிழை. மூன்றாவதாக ஒன்று கண்ணில் தெரிந்தால் அது பாட்டுக்கு காறித் துப்பி உளறிக் கொட்டுகிறது.

நமக்கு கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் போலிருக்கிறது. ‘அவன் சரியில்லை இவன் சரியில்லைன்னு எழுதிட்டு இருந்தீன்னா ஏதாச்சும் மோசடி கேஸில் உள்ளே கொண்டு போய் உட்கார வெச்சுடுவாங்க’ என்று ஒரு நண்பர் சொன்னார். வைத்தாலும் வைப்பார்கள். அடுத்தவர்களின் காசை வாங்கி பரோடா வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அது ஒன்று போதும். வெளியில் வருவது இரண்டாம் பட்சம். தூக்கிச் செல்லும் போகும் போது தப்பிக்கவா முடியும்? ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள்? அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா?’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு நிமிரவே முடியாதா?’ என்கிறான். மடக்குகிறானாம். எப்படி ஓட்டினாலும் இந்தக் கேள்விக்கே வந்து நிற்கிறான். இந்த லட்சணத்தில் நமக்கெல்லாம் அரசியல் பேச்சே ஒத்து வராது என்று நினைத்துக் கொள்வேன். 2016க்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

அந்தப் பெட்டிக்கடைக்காரர் இருக்கிறார் அல்லவா? நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா?’ என்ற கேள்வி எழ யாருக்கும் தெரியாமல் காசைத் திருடிக் கொண்டு வந்துவிட்டார். அல்சூரில் ஒரு பேக்கரியில் வேலை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு பல தொழில்களைச் செய்தவருக்கு இப்பொழுது பெட்டிக்கடைதான் ஜீவாதாரம். பெரிய வசதி இல்லை. ஆள் நிற்கும் அளவுக்கான பெட்டி அது. சுற்றிலும் இதழ்களையும் செய்தித்தாள்களையும் மாட்டி வைத்திருப்பார். குடும்பம் இருக்கிறது. பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். ‘அப்போவெல்லாம் பெங்களூர் இப்படியில்லை’ என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசுகிறார்.

அவருடன் பழகிய தோஷம். திண்ணையில் அமர்ந்து பேசுகிற மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே ஆரம்பித்து எங்கே வந்திருக்கிறேன் பாருங்கள்.

பெங்களூர் மட்டுமில்லை- எந்த ஊர்தான் அப்படியே இருக்கிறது? பள்ளிக் கூடம் போகும் காலத்தில் கரட்டடிபாளையத்தில் சைக்கிள் ஏறினால் இரண்டு கிலோமீட்டருக்கு சாலையின் இருமருங்கிலும் வயலாகத்தான் இருக்கும். இருபது வருடங்களில் தலைகீழாகிவிட்டது. இப்பொழுது வெறும் வீடுகள்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊருமே அப்படித்தான். இருபது வருடங்கள் என்பது ஒரு ஊருக்கு பெரிய விஷயம். புரட்டிப் போட்டு விடுகிறார்கள். ஐந்து கோடி ரூபாய் கையில் இருந்தால் அதை வெள்ளையாக மாற்றுவதற்கு நிலத்தைத்தான் நாடுகிறார்கள். ஏக்கர் முப்பது லட்சத்துக்கு வாங்குகிறார்கள். பத்திரத்தில் ஐந்து லட்சம்தான் இருக்கும். ஆக ஒரு ஏக்கர் வாங்கினால் இருபத்தைந்து லட்ச ரூபாய் வெள்ளையாக மாறிவிடுகிறது. இப்படி கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறவன் குறுக்கும் நெடுக்குமாக கற்களை நடுகிறான். வண்ணக் கொடிகளை நட்டு வைக்கிறான். மாடல் வீடு கட்டுகிறான். கொழுத்த இலாபம். 

அத்தனை ஊர்களும் மாறிவிட்டன. ரியல் எஸ்டேட்காரர்கள் மேல் உலகம் சென்றால் கொதிக்கிற எண்ணெய் சட்டி தயாராக இருக்குமாம். பெரிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் பெரிய எண்ணெய் சட்டி. சிறிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் சிறிய எண்ணெய் சட்டி. ஆனால் சட்டி மட்டும் உறுதி.

பெட்டிக்கடைக்காரரின் மகளுக்கு இருபத்தியொரு வயதாகிறது. வேறு சாதியில் ஒரு பையனுடன் காதலில் இருக்கிறாள். ‘எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லை..பையன் வீட்டில்தான் விட மாட்டேங்குறாங்க’ என்றார். கூலிக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி ஆனால் நம் சாதியில்தான் இருக்க வேண்டும் என்று பையன் வீட்டில் சொல்லியிருக்கிறார்களாம். இருபது வருடங்களில் ஊர்கள்தான் வேகமாக மாறுகின்றன. மனிதர்கள் மாறுவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் தேவையாக இருக்கிறது. ‘நாங்களும் கிட்டத்தட்ட கூலிக்காரங்கதான்..ஆனா வேற சாதி’ என்று சிரிக்கிறார். ‘என்ன செய்யப் போறீங்க?’ என்றால் ‘நடக்கும் போது பார்த்துக்கலாம்’ என்று மிக சாதாரணமாகச் சொல்கிற மனிதர் அவர். பெரிய திட்டமிடல் இல்லாமல் அவையவை நிகழும் போது பார்த்துக் கொள்கிற டைப். அலட்டல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் பெட்டிக்கடைக்காரர் மாதிரியான மனிதர்களை பார்க்கும் போது ஒரு வாக்கியம் ஞாபகத்திற்கு வரும்.

'Some people are so poor; all they have is money'. பணம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் பரம ஏழைகள். பெட்டிக்கடைக்காரரிடம் பணம் மட்டும்தான் இல்லை. ஆனால் வசதியானவர்.

Dec 29, 2015

தினகரன் - வசந்தம்

ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம் என்கிற கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊரில் பிறந்த மணிகண்டனுக்கு இப்போது கடலூரில் ஏகப்பட்ட சொந்தங்கள். சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த மழை வெள்ளப் பேரிடரில் கடலூரை பல நூறு தன்னார்வலர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் நிசப்தம் என்கிற அறக்கட்டளையை நடத்து வா.மணிகண்டன். கடலூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களை அக்கா, மாமா என்று உரிமையாக உறவு கொண்டாடி நிவாரணப் பணிகளில் போர்க்கால வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்தோம்.


‘அம்மா, அப்பா, என்னோட மனைவி வேணி, குழந்தை மகி நந்தன், தம்பியோட குடும்பம்ன்னு கூட்டுக் குடும்பமா இருக்கிறோம். அப்பாவும் அம்மாவும் அரசு ஊழியர்கள்தான் என்றாலும் என்னைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வெச்சாங்க. ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்குப் படிப்பேன். கல்லூரி முடிஞ்சதும் நல்ல வேலை கிடைச்சது. நல்ல சம்பளமும் கூட. நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்ததால பெருசா என் மேல என் குடும்பத்துக்கு எந்தப் புகாரும் இல்லை. அதனாலேயோ என்னவோ என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. இலக்கியம், கவிதைன்னு அந்த ஏரியாவில் கொஞ்ச காலம் இஷ்டத்துக்கு சுத்திகிட்டிருந்தேன்.

மாட்டு வியாபாரிக்கு வைக்கோல் பற்றி தெரியும்தானே? எம்.டெக் படிச்ச காலத்திலேயே இணையம் மீது ரொம்ப ஈர்ப்பு. பேருதான் நெட்டுன்னு சொல்லுறோமே தவிர்த்து அது ஒரு தூண்டில். ஒரு முறை விழுந்துட்டா திரும்பத் திரும்ப விழுந்துட்டே இருப்போம். வலைத்தளம், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் தொடச்சியாக எழுத ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்புன்னு புத்தகங்களாகவும் வெளி வந்திருக்கு.

அப்போதான் ஒரு நாள் கவிஞர் கண்டராதித்தன் என்னிடம் சொன்னார். ‘பாலாஜின்னு ஒரு கிராமத்துப் பையன் ரோபாடிக்ஸ் துறையில் ஜித்தனா இருக்கான். அப்பா தச்சர். ஜப்பானில் நடைபெறுகிற ஒரு முக்கியமான கருட்த்தரங்கில் கலந்து கொள்ள அவன் தேர்தெடுக்கப்பட்டிருக்கான். ஆனால் அவன்கிட்ட பணமில்லை. அதனால் அவனால் கலந்துக்க முடியாது’ன்னு. காசு இல்லைங்கிறதுக்காக ஒரு கிராமத்துப் பையனுக்கு கிடைச்சிருக்கிற இந்த உயரிய வாய்ப்பு பறிபோயிடக்கூடாதுன்னு எனக்குத் தோணுச்சு. நானும் கிராமத்தான்தானே? ஒரு கிராமத்தானுக்கு இன்னொரு கிராமத்தானோட உணர்வுகள் புரியும்தானே? நிசபதம் வலைப்பூவில் அந்தப் பையனைப் பற்றி எழுதினேன். முடிந்தவர்கள் உதவுங்கள்னு சொல்லி அவனோட வங்கிக் கணக்கை கொடுத்தேன். முதல் நாள் இரவு இதை வலைப்பூவில் எழுதிட்டு மறுநாள் வந்து பார்த்தா அவன் வங்கிக் கணக்குக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் வந்து விழுந்திருந்தது. இதுக்கப்புறம் இதே மாதிரி ஒரு சலவைத் தொழிலாளியோட மகளின் பொறியியல் படிப்புக்கு உதவி கேட்டு எழுதினேன். அந்தப் பொண்ணுக்கும் வலைப்பூவை வாசித்தவர்கள் பணம் அனுப்பினாங்க,

இந்த இரண்டு நிகழ்வுகளும் என்னை ரொம்பவும் யோசிக்க வெச்சது. என்னையும் நாலு பேர் நம்புறாங்க என்பதே சிலிர்ப்பா இருந்தது. இது மாதிரி உதவி கேட்டு எழுதறப்போ பயனாளிகளுக்கு அவங்க தேவைக்கு மேலே பணம் கிடைக்குது. இதை முறைப்படுத்தி இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு செய்வோம். இல்லாதவர்களும் இயன்றவர்களாகி மேலும் பல இல்லாதோரை இல்லாமல் ஆக்குவாங்ன்னு தோணுச்சு. இப்ப்டித்தான் நிசப்தம் அறக்கட்டளையை ஆரம்பிச்சேன்.

இலக்கியம் மாதிரி ஆபத்தில்லாத வேலைகளைச் செஞ்சுகிட்டிருந்தவன் திடீர்ன்னு சேவை, உதவின்னு கிளம்பிட்டானேன்னு வீட்டில் இருக்கிறவங்களுக்கு பயம். மத்திய தரக் குடும்பத்துக்கே உரிய நியயமான அச்சம்தான் அது. பண விவகாரம் இல்லையா?? ஏதாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சுன்னா என்னோடது மட்டுமில்லாம குடும்பத்தோட பேரும் கெட்டுடுமே? அதுவுமில்லாம எனக்கு பணத்தை ஹேண்டில் செய்யத் தெரியாது. என்னோட சம்பளத்தில் என் செலவுக்கு மட்டும் காசை எடுத்துக்கிட்டு மொத்தத்தையும் தம்பிகிட்ட கொடுத்துடுவேன். ‘நாட்டை நான் பார்த்துக்கிறேன். வீட்டை நீ பார்த்துக்கோ’ என்பது எங்களுக்குள்ளே அக்ரிமெண்ட். (சிரிக்கிறார்).

அப்படிட்டப்பட்ட நான் ஓர் அறக்கட்டளையை நிறுவி எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாம நடத்த முடியுமான்னு எனக்கே கூட சந்தேகம் இருந்துச்சு. எனவே அறக்கட்டளையோட எல்லா நடவடிக்கைகளையும் வெளிப்படையா இணையத்துலே முன் வெச்சுட்டா போதும்ன்னு முடிவு பண்ணினேன். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் அறக்கட்டளையோட அக்கவுண்ட்டுக்கு வந்திருக்கு, யார் யாருக்கு எவ்வளவு செலவு செஞ்சோம்ம்ன்னு பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே பப்ளிஷ் செஞ்சுடுவேன்.

எங்களோட செயல்பாடு ரொம்ப எளிமையானது. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட எல்லா விவரங்களும் நிசப்தம் வலைப்பூவில் இருக்கு. ஒவ்வொரு மாதமும் சிறுதொகையில் தொடங்கில் லட்சக்கணக்கான ரூபாய் வரைக்கும் கொடுக்கும் கொடையாளர்கள் இருக்கிறார்கள். பணம் நிறையத் திரள்கிறது. அதைப் பயனாளிகளைக் கண்டறிந்து கொடுக்க வாசகர்கள் உதவுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்களைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பிடுறாங்க. பெரும்பாலும் நேரடியா அந்த இடத்துக்கே போய் உதவி தேவையான்னு விசாரிச்சு தேவையான உதவியைச் செஞ்சுடுவேன். இப்படி அங்கே போய் வருகிற போக்குவரத்துச் செலவும், உடலுழைப்பும்தான் என்னுடைய பங்கு. தகவல்கள் சரியாக இருந்தால் மருத்துவ உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும், கல்வி உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கும் நேரடியாக அனுப்பிடுறேன். தனிநபர் பேரில் காசோலை கொடுப்பதில்லை. அறக்கட்டளைக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது ‘மனிதாபிமானம்’.

அறக்கட்டளையை நிர்வகிப்பது எனக்கு பெரிய சிரமமில்லை. எங்கே போனாலும் உதவுகிறார்கள். நல்லது செய்யணும்ன்னு எல்லோருக்கும்தானே ஆசையிருக்கும்? நாம வெளிப்படையா செயல்பட்டா போதும். நம் மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சுன்னா நம்மை அவங்களே தாங்கிப் பிடிச்சுக்குவாங்க. நிசப்தத்தையும் என்னையும் அப்படித்தான் தாங்குறாங்க.

சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யணும்ன்னு நிசப்தம் தளத்தில் எழுதிய போது ஐந்தே நாளில் இருபத்தேழு லட்ச ரூபாய் பணம் வந்தது. (இப்பொழுது நாற்பத்தெட்டு லட்ச ரூபாய்). அரிசி, பருப்பு, சர்க்கரையில் தொடங்கி பற்பசை, சானிடரி நாப்கின் வரை முப்பது பொருட்கள் அடங்கிய தனித்தனி மூட்டையா கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டைகள் தயார் செய்து அனுப்பியிருக்கோம். இதுக்கு பத்து லட்ச ரூபாய்தான் செலவாகியிருக்கு. மீதிப்பணத்தை பாதிக்கப்பட்ட மக்களோட கல்வி மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு செய்யணும்ன்னு பயனாளிகளைக் கண்டறியும் வேலையில் இறங்கியிருக்கோம். நிதி கொடுத்தவர்களுக்கு எவ்வளவு செலவு எது எதுக்கு செலவு என்னென்ன காரணத்துக்கு யார் யாருக்கு செலவு செஞ்சிருக்கோம்ன்னு தகவல் போயிடும். இதனால நாம கொடுத்த காசு ஒழுங்கா போய்ச் சேர்ந்திருக்குன்னு அவங்களுக்கும் திருப்தி.

ஒரு குழந்தைக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை,இன்னொரு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைன்னு நிறையப் பேருக்கு உயிர் காக்கும் உதவிகளைச் செய்ய முடிஞ்சிருக்கு. நிறையப் பேரோட படிப்புச் செலவை ஏத்துகிட்டிருக்கோம். நூலகம் அமைக்க உதவி பண்ணியிருக்கோம். பள்ளிகளுக்கு உதவியிருக்கோம். இந்த மாதிரி காரியங்களுக்கு பெருசா வரையறையெல்லாம் வெச்சுக்காம நிச்சயமா தேவைப்படுகிற உதவியான்னு மட்டும்தான் பார்க்கிறோம்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதையெல்லாம் வெறுமனே இணையம் மூலம் செய்ய முடியுமான்னு என்னைக் கேட்டிருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா செய்ய முடிஞ்சிருக்கு. இணையம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல ஆயுதம். நல்ல நோக்கத்தோட இதில் தொடர்ச்சியா செயல்பட்டுக் கொண்டிருந்தா நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும்ங்கிறதுக்கு நிசப்தமே சாட்சி. ‘தொடர்ச்சி முக்கியம்’ என்கிற வார்த்தையை மட்டும் அண்டர்லைன் செஞ்சு பப்ளிஷ் செய்யுங்க பாஸ்.

நான் ஒரு சாதாரணன். மற்ற சாதாரணனர்களுக்கு நானே உதவ முன் வரலைன்னா வேறு யார் வருவாங்க? நமக்குன்னு ஓர் அடையாளம் கிடைக்கிற வரைக்கும்தான் அலை பாய்ஞ்சுகிட்டிருப்போம். அது கிடைச்சப்புறம் நாம் போக வேண்டிய திசை எதுங்கிற தெளிவு கிடைச்சுடும். எனக்கு கிடைச்சிருக்குன்னு நம்புறேன். எல்லோருக்கும் கிடைக்கணும்’

அழுத்தமாகச் சொல்கிறார் வா.மணிகண்டன்.

- யுவகிருஷ்ணா.
(தினகரன் வசந்தம் (20-12-2015) இதழில் வெளியான நேர்காணல்) 

Dec 28, 2015

தண்ணீர்

ஊரில் திருவாதிரை விரதம் கொண்டாடுவதாகவும் தம்பதி சமேதகராக வந்துவிடச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். இப்படியொரு விரதத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் பார்த்ததில்லை. பூஜை முடிந்த பிறகு மனைவி கணவனின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்றார்கள். ‘ச்சே ச்சே நானெல்லாம் சமதர்மராஜா’ என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் உள்ளுக்குள் ஆசை இல்லாமல் இல்லை. கெத்தாக நின்று ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்று பந்தா காட்டலாம் என்றுதான் மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. கிளம்பிச் சென்றோம். பெரிய விருந்து. நூறு பேருக்கும் குறைவில்லாமல் கூடியிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது.

முப்பது வருடங்களில் விழாக்களும் பண்டிகைகளும் வெகுவாக மாறிவிட்டன. எனக்கு நினைவு தெரிந்து மாமன் ஊரில் தோட்டத்துக் கருப்பராயனுக்கு கிடா வெட்டுவார்கள். நள்ளிரவில் கிடாயை வெட்டி தோலுரித்து  ஆட்டுத் தலையை தீயில் வாட்டி ஆட்டுக்காதைத் தின்னக் கொடுப்பார்கள். கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதற்காகவே தூங்காமல் விழித்திருப்பேன். செம்மண் புழுதி பறக்கும் அந்தத் தோட்டத்தில் கன்னிமார் சாமிகள் என்று ஏழு கற்களை நட்டு வைத்திருப்பார்கள். கருப்பராயன் சற்றே பெரிய கல். அதுதான் சாமியாக இருந்தது. காளியாத்தா, மாரியம்மன், கருப்பராயன் என்று எப்பொழுதாவது மட்டுமே கவனிக்கப்படும் ஏழைச் சாமிகளாக இருந்தன. ஆளாளுக்கு தோட்டங்காடுகளில் உழைத்துக் கிடந்தார்கள். கடவுள்களை கவனிக்கும் தருணங்களில் கிடாய் வெட்டினார்கள். பொங்கல் வைத்தார்கள். பறை அடித்தார்கள். ஆடினார்கள். கொண்டாடித் தீர்த்தார்கள். அந்தக் கொண்டாட்டங்களின் முகம் வெகுவாக மாறிவிட்டது.

விநாயகர் சதுர்த்தியும் வரலட்சுமி விரதமும் திருவாதிரை நோன்பும் கருப்பராயனுக்கான இடத்தை வெகுவாகப் பிடித்துக் கொண்டது மாதிரிதான் தெரிகிறது. கருப்பராயனுக்கு இன்னமும் பொங்கல் வைக்கிறார்கள்தான். ஆனால் பெரும் கூட்டம் எதுவும் வருவதில்லை. ஆனால் வரலட்சுமி விரதத்தில் இத்தனை பேரை அழைத்து சாம்பார், ரசம், பாயசம், வடை என்று விருந்து வைத்து வட்ட வட்டமாக கூடி அமர்ந்து மொக்கை போடுகிறார்கள். எனக்கு சலிப்பாக இருந்தது. விருந்துக்கு என டேபிள், நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வந்து அதன் மீது காகிதத்தை விரித்துவிட்டு வாழை இலை போட்டு ஒவ்வொரு இலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்து- இப்படி எல்லாவற்றிலும் நாசூக்கான தன்மை வந்துவிட்ட பிறகு கொண்டாட்ட மனநிலை என்பது இல்லாமல் போய்விட்டது. உணவு உண்ணும் போது கூட ஒருவிதமான நளினத்தைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. போலித்தனமாக பேச வேண்டியிருக்கிறது. மேம்போக்காக புன்னகைக்க வேண்டியிருக்கிறது. நாகரிகம் நம்மை படுத்தியெடுக்கிறது. 

கருப்பராயன்தான் நல்ல சாமி என்றும் வரலட்சுமி விரதத்தையும் திருவாதிரை நோன்பையும் கொண்டாட வேண்டியதில்லை என்றும் சொன்னால் தடியெடுத்து வந்து சாத்திவிடுவார்கள். 

இவர்கள் கும்பிடட்டும் என்று அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் வைத்துக் கொண்டேன். சூழலியலாளர் நக்கீரன் எழுதிய புத்தகம் அது. முப்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும். ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்’ என்பது புத்தகத்தின் பெயர். நூல் முழுக்கவும் Virtual water பற்றித்தான் பேசுகிறார். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் இருபது ரூபாய் என்றுதானே கணக்கு பார்க்கிறோம். ஆனால் அந்த ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைப்பதற்கு மறைமுகமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறோம் என்று ஒரு கணக்கு இருக்கும் அல்லவா? பாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீரிலிருந்து சுத்திகரிப்பு செய்வது வரை ஏகப்பட்ட லிட்டர் தண்ணீரை செலவழித்துத்தான் ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைக்கிறார்கள். இப்படி செலவழிக்கப்படுகிற தண்ணீருக்கு வெர்ச்சுவல் நீர் என்று பெயர். கண்களுக்குத் தெரியாத நீர்.

ஒரு கார் தயாரிக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. இரும்பை உருக்குவதிலிருந்து தொழிற்சாலையைக் கழுவுவது வரை தேவையான நீர் அது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. கோழி வளர்ப்பதற்குக் கூட நூறு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி எல்லாவற்றிலுமே நாம் செலவழிக்கிற நீரின் அளவு கோடிக்கணக்கான லிட்டர்கள் இருக்கின்றன. ஆனால் அதை நாம் நேரடியாக உணர்வதில்லை. 

இந்தியாவின் டெட்ராய்ட் என்று ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்டிரும் வாகனத் தொழிற்சாலைகள் தினந்தோறும் செலவழிக்கும் நீரை வைத்துக் கொண்டு பல நூறு ஏக்கர் பரப்பில் விவசாயம் நடத்தலாம். ஆனால் நமக்கு கார் மட்டும்தான் கண்களுக்குத் தெரியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தூக்கி வீசும் செல்போன் தயாரிப்புக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. அடுக்கிக் கொண்டே போகலாம்.

காலங்காலமாக தண்ணீர் என்பது மறுசுழற்சி ஆகிக் கொண்டேயிருந்தது. ஆனால் நம்முடைய காலத்தில்தான் மறுசுழற்சிக்கே வழியில்லாதபடிக்கு அழித்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் விவரமாகிவிட்டன. அவர்கள் தங்களது நீர் வளத்தை காப்பதற்காக வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்கில் இறங்கிவிட்டார்கள். ஒரு நாடு கோதுமை உற்பத்தியில் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோதுமை உற்பத்திக்கு அதிகப்படியான நீர் தேவை. கிட்டத்தட்ட ஒரு டன் கோதுமைக்கு ஆயிரத்து ஐநூறு கன மீட்டர் நீர் தேவைப்படுகிறது. இவ்வளவு தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சினால் அவர்களின் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் செல்லத் தொடங்கும். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று கோதுமை விளைச்சலை குறைத்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இப்படி அடுத்த நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் வழியாக தங்கள் நாட்டு நீர்வளத்தைக் காத்துக் கொள்வதன் பெயர் ‘வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்’. 

இந்தியா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி தேவை என்பதற்காக பொருட்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக வரக் கூடிய நிதி ஆதாரத்தை மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அட அப்படியில்லை...அவன் நூறு ரூபாயைக் கொடுக்கிறான்னு கணக்கு பார்க்காத..அதுக்கு எவ்வளவு தண்ணியை நாம வீணடிச்சிருக்கோம்ன்னு பாரு’ என்கிறார் நக்கீரன். பெப்ஸிக்காரன் ஆலை அமைப்பதும் இதனால்தான். பெல்ஜியம் கண்ணாடிக்காரன் தொழிற்சாலை கட்டுவதும் இதனால்தான்.

வெர்ச்சுவர் நீரின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.

திருப்பூரில் நொய்யல் நதி ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது சாக்கடை. சாக்கடை என்று கூடச் சொல்ல முடியாது. பனியன் தொழிற்சாலையும் சாயப்பட்டறையும் வைத்து அந்த நதியைச் சாவடித்துவிட்டார்கள். அந்தப் பகுதியில் விளையும் இளநீரில் கூட கசப்பேறிக் கிடப்பதை உணரலாம். ஒரு நதியைக் கொன்று பனியனையும் ஜட்டியையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவர்கள் டாலர்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு நோகாமல் நோம்பி கும்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். நாம் ‘டாலர் நகரம்’ என்று வெட்டிப் பெருமை பேசிக் கொண்டு நாறிக் கிடக்கிறோம். இதேதான் வாணியம்பாடி, ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் பாலாற்றைத் தொலைத்துவிட்டு ‘நாங்கள் தோல் பதனிடும் தொழிலில் கிங்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறோம். 

மேற்கத்திய நாடுகள் டாலர்களைக் கொடுத்துவிட்டு அவர்களது தேசத்தைக் காத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் டாலர்களுக்கு ஆசைப்பட்டு நம் தேசத்தின் நீரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் போது இன்னமும் பல நதிகள் செத்துப் போயிருக்கக் கூடும். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். மறுசுழற்சி செய்யவே முடியாத பல கோடி லிட்டர் தண்ணீரை வீணடித்திருப்போம். 

இப்படியான புத்தகங்களை வாசிக்கும் போது நடு மண்டையில் நான்கு முடிகள்  நட்டுக் கொள்கின்றன. நிஜமாகவே நான்கு முடிகள்தான். என் தம்பியின் அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். சங்கர்பாபு என்று பெயர். அவர் என்னைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லிவிட்டு ‘இவனுடைய அண்ணன் தான்’ என்று சொல்லியிருக்கிறார். எதிரில் இருந்த மனிதர் அமைதியாக இருந்திருக்கலாம். ‘வயதானவரா?’ என்று கேட்டிருக்கிறார். சங்கர்பாபு அவரிடம் ‘வயசெல்லாம் ஆகலை...இவரைப் பாருங்க..இவர் மண்டையில் ரெண்டு பக்கமும் முடி இல்லைன்னா எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்’ என்றாராம். என் தம்பிக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வீட்டில் வந்து ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சிரிக்கிறான். தம்பியின் தலை சீக்கிரம் நரைக்கட்டும் என்று தோட்டத்துக் கருப்பராயனை வேண்டியிருக்கிறேன்.

அது போகட்டும். 

நக்கீரன் எழுதியிருப்பதையெல்லாம் யாரிடமாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. அந்தக் கூட்டத்தில் யாராவது சிக்குவார்கள் என்று துழாவத் தொடங்கியிருந்தேன். ‘ஏங்க.... ஆசிர்வாதம் வாங்கணும்...வந்து நில்லுங்க’ என்றாள் உமையாள். கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘ம்ம்..சீக்கிரம் சீக்கிரம்’ என்றேன். நான் ஆசி வழங்கும் கெத்தை யாராவது பார்க்கிறார்களா என்று மிதப்பாக ஒரு பார்வையை ஓட்டிய போது டைனிங் டேபிளில் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியிருந்தது.

விருது

சென்னை இலக்கியத் திருவிழா விருது என்றவொரு விருதை நேற்று அறிவித்திருந்தார்கள். மூத்த எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இளம் எழுத்தாளருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்குகிறார்கள். இந்த வருடம் மூத்த எழுத்தாளருக்கான விருது பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாவண்ணன் அர்பணிப்பு உணர்வு கொண்ட எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என எழுத்தின் எல்லா வடிவத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இளம் எழுத்தாளருக்கான விருது மனுஷிக்கு (மனுஷி பாரதி) வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் போது அந்த எழுத்தாளர் இதுவரை என்ன எழுதியிருக்கிறார்? தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்ன? எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்பனவற்றை ஒன்றிரண்டு வரிகளிலாவது அறிவிக்கலாம். மனுஷி ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வந்த ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்ற தொகுப்பு. அதன் பிறகு சில இதழ்களில் அவருடைய கவிதைகளை வாசித்ததுண்டு. வேறு ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை தகுதியில்லாதவர் என்று சொல்லவில்லை. ஒருவேளை என்னுடைய அறியாமையாக இருக்கலாம். அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவாவது விருது பெறும் எழுத்தாளரின் பங்களிப்பைத் தெரிவிக்க வேண்டுமல்லவா?

இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதே அவர் மீதான ஒரு கவனத்தை உருவாக்கவும் மற்ற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு வழிகாட்டலாகவும்தானே?  இப்பொழுதெல்லாம் விருதை அறிவிக்கும் போது ‘இன்னாருக்கு விருது வழங்கப்படுகிறது’ என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள் அல்லது இவர்களையெல்லாம் பரிசீலித்தோம் என்று பட்டியலைப் போட்டு அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ரேங்க் கொடுத்து அதில் முதல் ரேங்க் பெற்ற இவருக்கு விருது வழங்கப்படுகிறது என அறிவித்து மற்றவர்கள் முகத்தில் சாணத்தை அள்ளிப் பூசுகிறார்கள். இரண்டுமே சரியான அணுகுமுறை இல்லை. 

இந்த விருது புகழ் பெற்ற விருது இல்லைதான். விலாவாரியாக விமர்சனம் செய்ய வேண்டியதில்லைதான். எனினும், தமிழ்ச் சூழலில் விருது வழங்குதலில் மிகப்பெரிய அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. தனிமனிதன் செய்கிற காரியத்திலேயே ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கும் போது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல் இருக்காதா? அதனால்தான் ஒவ்வொரு விருது வழங்கும் போதும்- அது எந்த விருதானாலும் சலசலப்பு எழுவது வாடிக்கையாகியிருக்கிறது. அத்தகைய சலசலப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை எழுதவில்லை. ஆனால் பெரும்பாலான விருதுகள் ஏன் விடைகள் இல்லாத வினாக்களுடனேயே வழங்கப்படுகின்றன என்பது குழப்பமாக இருக்கிறது.

வெளிப்படைத்தன்மையில்லாத எந்தவொரு விருதுத் தேர்வும் காலப்போக்கில் மதிப்பிழந்து குப்பையாகிவிடும். நூறு சதவீத கறார்த்தன்மையுடன் விருது வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு. மறுக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு இளம்படைப்பாளி மீது வெளிச்சத்தை பாய்ச்சும் போது குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையாவது இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை என நினைக்கிறேன்.

சென்னை இலக்கியத் திருவிழா பரிசு என்பதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் சொல்லவில்லை. இளம் படைப்பாளிகளுக்கான விருது என்று வழங்கப்படுகிற கிட்டத்தட்ட அத்தனை விருதுகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் சொல்கிறேன். 

அதே சமயம் இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்குவதை மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை எந்தவிதமான மனச்சாய்வுமில்லாமல் பாராட்டக் கூடிய மூத்த எழுத்தாளர்கள் அருகிவிட்ட சூழல் இது. தங்களுக்கான இடம் காலியாகிவிடுமோ என்று பதறி பாய்ந்து கொண்டிருக்கிற மூத்த எழுத்தாளர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக் கூடிய படைப்பாளிகள் எழுதுவதையெல்லாம் வாசித்து கை தூக்கிவிடுவதற்கான மனநிலை பெரும்பாலானவர்களிடமில்லை. இத்தகைய சூழலில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கவனித்து அவர்களுக்கு விருது கொடுத்து உற்சாகமூட்டக் கூடிய அமைப்புகளை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால் அதே சமயம் அந்த விருதானது மற்ற இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும். ‘ச்சே...எல்லாம் பாலிடிக்ஸ்’ என்று வெறுப்படையச் செய்வதாக இருக்கக் கூடாது. 

பொதுவாகவே எந்தவொரு விருதாக இருந்தாலும் அந்த விருதுக்கு ஆயுள் உண்டு. 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டால் முக்கால்வாசிப்பேர் விக்கிப்பீடியாவில் துழாவுவோம். நோபல் பரிசுக்கே அந்த நிலைமைதான். ஆனால் அந்த குறிப்பிட்ட படைப்பாளி மீதான கவனத்தை உருவாக்குகிறது அல்லவா? அது முக்கியம். ஆலிஸ் முன்றோவை ஏகப்பட்ட பேர் தேடிப் பார்த்திருப்பார்கள். அவரது படைப்பை வாசித்திருப்பார்கள். விருப்பமிருக்கிறவர்கள் தொடர்வார்கள். மற்றவர்கள் விட்டுவிட்டு தங்களது வேலையைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது கிட்டத்தட்ட அத்தனை விருதுகளுக்கும் பொருந்தும். நோபல் பரிசு பல லட்சம் பேர்களிடம் நம் பெயரைக் கொண்டு சேர்க்கும் என்றால் மற்ற விருதுகள் அதனதன் வீரியத்திற்கு ஏற்ப தேடுகிறவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றன. பிறகு மெல்ல அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிடும்.

சென்னை இலக்கியத் திருவிழா விருது மனுஷியின் மீது கவனத்தை உருவாக்கியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் விருது வழங்கும் குழுவில் நடுவர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் மரியாதை உண்டு என்றாலும் இவற்றைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

Dec 27, 2015

என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது?

வழமை போல இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் அறக்கட்டளை வரவு செலவு விவரங்களை பதிவு செய்யப்படும் என்பதால் டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகான நன்கொடை விவரங்களைப் பதிவு செய்யவில்லை. 


முந்தைய பரிமாற்ற விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.

முக்கியமான ஒரு விஷயம்- நன்கொடையாளர்களின் முகவரி மிக அவசியமானதாக இருக்கிறது. ரசீது கொடுக்காத எந்தத் தொகையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும் என்பதால் பெருந்தொகை ஒன்றை வருமான வரித்துறைக்குக் கொடுக்க வேண்டியதாகிவிடும். நன்கொடையாளர்கள் தங்களின் பரிமாற்ற எண் மற்றும் பெயர் முகவரி, PAN அட்டை எண்ணை அனுப்பி வைத்தால் ரசீது பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன். அந்த ரசீதின் அடிப்படையில் நன்கொடையாளர்களும் 80G பிரிவில் வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

வருமான வரித்துறையில் கணக்கு வழக்கைத் தகவல் செய்யும் போது வரவு செலவு என்ன இருக்கிறதோ அது அப்படியேதான் தாக்கல் செய்யப்படும். அறக்கட்டளையைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்படையான கொள்கை. எந்த இடத்திலும் எந்தவிதமான திரைமறைவும் இருக்காது. அது வருமான வரித்துறையிடமாக இருந்தாலும் சரி; நன்கொடையாளர்களிடமாக இருந்தாலும் சரி - இதுதான் இருக்கிறது என்பதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் காட்டப் போவதில்லை. பெருமைக்காகச் சொல்வதாக இல்லை- ஆனால் நிசப்தம் அறக்கட்டளை என்பது எந்தவொரு தருணத்திலும் வெளிப்படைத்தன்மையான வரவு செலவு என்பதில் முன்மாதிரியான அறக்கட்டளையாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட முடியாதபட்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம். 

இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அறக்கட்டளைக்கு 80G பிரிவில் வரிவிலக்கு கிடைத்த பிறகு பணம் படைத்தவர்கள் இருவர் அணுகி ‘ரசீது கொடுக்க முடியுமா? என்றும் ‘கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக மாற்ற உதவ முடியுமா?’ என்று கேட்டார்கள். விவரங்களைக் கூட கேட்காமல் இணைப்பைத் துண்டித்தேன். அடுத்த முறை இப்படியான நினைப்பில் என்னைத் தொடர்பு கொண்டால் அனைத்து விவரங்களையும் கேட்டு நிசப்தத்தில் விலாவாரியாக எழுதிவிடுவேன்.  எந்த தைரியத்தில் அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து கவனிப்பவர்கள் இப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. 

அவர்கள் கிடக்கிறார்கள். கவனித்துக் கொள்ளலாம்.

நன்கொடை வழங்கியவர்கள் தயவு கூர்ந்து விவரங்களை அனுப்பி உதவவும். ரசீது எழுதும் வேலையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

மழை நிவாரண நிதி வந்து கொண்டிருந்த போது முகம் தெரியாத புதிய மனிதர்கள் நிறையப் பேர் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். அதற்காகத் தொடர்ந்து எழுத வேண்டியிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘அதைச் செய்கிறோம்; இதைச் செய்கிறோம்’ என்று எல்லாச் சமயங்களிலும் பிரஸ்தாபித்துக் கொள்ள வேண்டியதில்லை. அமைதியாகச் செய்வோம் அதே சமயம் வெளிப்படையாகச் செய்வோம்.

நேற்று ஒரு மாணவருக்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அப்பாவும் மகனும் வந்திருந்தார்கள். அப்பா கோவிலில் பறை வாசிக்கிறவர். சொற்ப வருமானம். ஏற்கனவே அவரது குடும்பப் பின்னணியிலிருந்து அனைத்தையும் விசாரித்து வைத்திருந்தேன். பையன் படிப்பில் படுசுட்டி. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டான். பதினாறாயிரம் ரூபாய் கடன் வாங்கி கல்லூரிக்கான பணத்தைக் கட்டிவிட்டார்கள். விடுதிக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய். கல்லூரியில் அனுமதி வாங்கி இன்னமும் கட்டாமல் வைத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கான காசோலையை நேற்று அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்டிருக்கிறது. அநேகமாகத் திங்கட்கிழமையன்று பணத்தைக் கட்டிவிடுவார்கள். 

இப்படி அறக்கட்டளை வழியாக ஏதேனும் காரியங்களைச் செய்யும் போது அவ்வப்போது எழுதிவிடலாம். மழை நிவாரண வேலைகள் பின்னணியில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை குறித்தும் அவ்வப்போது குறிப்பிட்டுவிடுகிறேன். ஒவ்வொரு மாதமும் எப்பொழுதும் போல bank statement ஐ வெளியிட்டுவிடலாம். ஆனால் அறக்கட்டளை குறித்தான வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாக எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்வது போல. நாம் பேசுவதற்கும் விவாதிக்கவும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அறக்கட்டளைச் செயல்பாடுகள் அவற்றில் ஒன்று- முக்கியமான ஒன்று.

Dec 26, 2015

பூதம்

ஒரு நண்பர் இருக்கிறார். அபராஜித் என்று பெயர். பெங்களூர் பிடிஎம் லே-அவுட்டில் குடியிருந்த போது அறிமுகம். ஐடி நிறுவனமொன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை. பெரும் பிரச்சினை. எந்நேரமும் செல்போன் பாண்டியாகத்தான் வலம் வருவார். டீ குடிக்கப் போனாலும் சரி; டாய்லெட்டுக்கு போனாலும் சரி. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிரித்தபடியே இருப்பார். எதிர்ப்பக்கத்தில் கடலை வறுபடுகிறது என்று அர்த்தம். கடந்த வருடம் அலுவலகத்தில் நடைபெறும் வருடாந்திர மதிப்பீட்டில் மேலாளர் கூட குத்திக் காட்டிவிட்டாதாகச் சொன்னார். ‘எப்போ பார்த்தாலும் செல்போனுடனே இருந்தால் எப்படி வேலை செய்வீங்க?’ என்று கேட்டும்விட்டார். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டார். 

அலுவலகத்தில் யாராவது கேட்டால் எதையாவது சொல்லி வாயை அடைத்துவிடலாம். ஆனால் வீட்டில்? அபராஜிதைக் கட்டியவள் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு இழுப்பு இழுத்திருக்கிறார். கணவனுக்கு எச்சரிக்கைகள் விடுத்தவர் இந்த மனிதனின் அழிச்சாட்டியம் தாங்காமல் நீதிமன்றத்தின் படியேறிவிட்டார். எத்தனையோ விநோத வழக்குகளைச் சந்தித்திருக்கும் நீதிமன்றத்துக்கு இதெல்லாம் விசித்திர வழக்கே இல்லை. இந்தக் காலத்தில் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் இப்படித்தான் ஏகப்பட்ட பேர்கள் படியேறுகிறார்கள்.  பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என முடிவு செய்த நீதிமன்றம் ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் இரண்டு பேருக்கும் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் கத்தரித்து விட்டுவிடுவார்கள். 

இந்த நீதிமன்ற விவகாரம் புழுதி கிளப்பியவுடன் அபராஜித் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மண்டையை உருட்டிக் கொண்டிருந்தார். திருந்திவிடுவார் போலத்தான் தெரிந்தது. அவருடைய மனைவி என் மனைவிக்கு நல்ல பழக்கம். சந்தோஷமாக இருப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் வெகு விரைவிலேயே முருங்கை மரம் ஏறிவிட்டார். வழக்கம் போலவே மீண்டும் தலையைக் குனிந்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை. செல்போன் அவரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. விவாகரத்து கிடைத்தால் அவருக்கு பிரச்சினையில்லை. இவள் போனால் இன்னொருத்தி கிடைக்கக் கூடும். மனைவிக்கும் பிரச்சினை இருக்காது. குழந்தைகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஆறு வயது. இன்னொரு குழந்தைக்கு நான்கு வயது. ஒவ்வொரு நாளும் அவர்களைப் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதும், மாலையில் திரும்ப அழைத்து வருவதுமாக சரியாகத்தான் இருந்தார். அவரையுமறியாமல் செல்போன் அவரைக் குழிக்குள் தள்ளியிருக்கிறது. இனி அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு திசைகளில் இருக்க குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் பயணத்தை எதிர் கொள்ளப் போகிறது.

இளந்தலைமுறையினர் எல்லோருமே செல்போன்களால் சீரழிகிறார்கள் என்று சொல்லவில்லை. செல்போன்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். செல்போனை மட்டும் வைத்துக் கொண்டே பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர்கள் இருக்கிறார்கள். மிக நெருக்கடியான சமயங்களில் ஆபந்பாந்தவனாக செல்போன்கள் மாறியிருக்கின்றன. சென்னை வெள்ளம் உதாரணம். இப்படியொரு பெரும் லிஸ்ட் போடலாம். ஆனால் இப்படி நல்லபக்கம் என்றிருந்தால் கெட்ட பக்கம் என்றும் இருக்கும் அல்லவா? செல்போனிலும் அதுதான் பிரச்சினை. ஒரு பக்கம் நல்லதையெல்லாம் பட்டியலிட்டு இன்னொரு பக்கம் கெட்டதையெல்லாம் பட்டியலிட்டால் கெட்டவைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.

செல்போன்கள் குடும்ப உறவுகளில் உண்டாக்கும் சிக்கல்கள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், தனிமனித வாழ்வில், அலுவலகங்களில் என சகல திசைகளிலும் செல்போன் கபடி ஆடிக் கொண்டிருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளை இணையத்தில் தேடி எடுத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மனைவி அல்லது கணவனிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய அந்தரங்க விவகாரங்களைவிடவும் பிறரிடம்தான் அதிகமான அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். எங்கேயோ இருப்பவர்களிடம் தங்களது சலனங்களுக்கான வடிகால்களைத் தேடுகிறார்கள். முந்தைய தலைமுறையினருக்கு இதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். எவனாவது ஒன்றரைக் கண்ணில் பார்த்தால் கூட விவகாரத்தை பஞ்சாயத்தில் ஏற்றிவிடுவார்கள். இப்பொழுது அப்படியில்லை. விரும்புகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் கமுக்கமாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டு செய்தி அனுப்பிய சுவடேயில்லாமல் செல்போனிலிருந்து அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான வசதிகள்தான் மனிதன் மீது இந்த சமூகம் போட்டு வைத்திருந்த கடிவாளத்தை தளர்த்திவிட்டு தறிகெட்டு ஓடச் செய்கிறது.

அபராஜிதைப் போலவே இன்னொரு மனிதனைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஸ்ரீவத்சவா. அபராஜித்தைவிடவும் இவன் ஒரு படி மேலே என்று கூடச் சொல்லலாம். செய்தித்தாள்களின் வழியாகத்தான் தெரியும். ஸ்ரீவத்சவா வாட்டசாட்டமான ஆள். முப்பதை நெருங்கும் வயது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. வீட்டைச் சுற்றிலும் நல்ல பெயர். ‘அவனுண்டு அவன் வேலையுண்டு’ என இருப்பதாக நம்பிக்கையைச் சம்பாதித்திருந்தான். அப்பேற்பட்ட நல்லவனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. பைக்கில் சென்று கொண்டிருந்தவனை லாரி தூக்கி வீசி குப்புற விழுந்துவிட்டான். யாரோ ஒரு மனிதர் ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனது செல்போனை எடுத்து வீட்டு எண்ணை அழைத்திருக்கிறார். அதோடு விட்டிருக்கலாம். கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஸ்ரீவத்சவாவிற்கு வந்திருந்த ஆறேழு குறுஞ்செய்திகளுக்கு ‘இவர் மருத்துவமனையில் இருக்கிறார்...அவருடைய செல்போன் என் வசமிருக்கிறது...உங்களுக்குத் இவரைத் தெரியும் என்றால் மருத்துவமனைக்கு வரவும்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார்.  சோலி சுத்தம். திமுதிமுவென்று பெண்கள் வந்துவிட்டார்கள். அத்தனை பேரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். ‘நான் ஸ்ரீவத்சாவின் காதலி. அவருக்கு என்ன ஆனது?’என்று. ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தவர் நொந்து போயிருக்கிறார். ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் ஆளாளுக்கு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏழெட்டுப் பேரை ஒரே சமயத்தில் ஒருவன் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியடையத்தானே செய்வார்?

மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் அந்தப் பெண்களுக்கும் விவகாரம் தெரிந்திருக்கிறது. உள்ளூர் காவல்நிலையத்தில் சில காதலிகள் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான சில காதலிகள் ‘அவர் எனக்கு காதலர் இல்லைங்க...சும்மா ஃப்ரெண்ட் மாதிரி..பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்’ என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடி கிளம்பியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று பழைய டயலாக்கை அடிக்கலாம். ஆனால் எப்படி இவர்களால் இவ்வளவு நைச்சியமாக ஏமாற்ற முடிகிறது என்று பார்க்க வேண்டும். ஒரே விடைதான். டெக்னாலஜி. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது.

ஒருவரை நேரிலேயே பார்க்காமல் அவர்களோடு தொடர்பு கொண்டு வளர்க்கப்படும் உறவுக்கு வெர்ச்சுவல் உறவு என்று பெயர். இண்டர்நெட், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவே ஊட்டி வளர்க்கப்படும் இத்தகைய உறவானது கருவிகளை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக பிணைக்கின்றன. ‘அவகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்குமா?’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா?’ என்று மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்தில் உறங்குவதற்கு முன்பு சில வினாடிகள் வரைக்கும் மனிதன் செல்போனோடுதான் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறான். விடிந்தவுடனும் மனம் செல்போனைத்தான் தேடுகிறது. மனிதனின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்கள் தனிமனித, சமூக, குடும்ப உறவுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தாக்கங்களை அணுக்கமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் சக மனிதர்களிடம் உரையாடுவதைவிடவும் செல்போன் திரைகளுடன் உரையாடுவதைத்தான் மனம் விரும்புகிறது. பக்கத்தில் யார் இருந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்போனுடன் நம் கண்களைப் பொருத்திக் கொள்கிறோம். அப்படி என்னதான் செல்போனில் இருக்கிறது? 

ஸ்ரீவத்சவாவின் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்படுமாயின் அவன் கைது செய்யப்படலாம். அபராஜித் இன்னமும் சில மாதங்களில் விவகாரத்து பெற்றுவிடலாம். ஒரு மனிதனின் கைதாலும் இன்னொரு விவாகத்தின் ரத்தாலும் எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. இவையெல்லாம் சில சாம்பிள்கள். நம்மைச் சுற்றிலும் குப்பையென நிரம்பிக் கொண்டிருக்கும் நவீன காலத்தின் குழப்பங்களிலிருந்து ஒரு சில சாம்பிள்கள்தான் இவை. 

சக மனிதர்களுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகள் குறையும் போது ஒருவனுடைய குணநலன்கள் பெரிதும் மாறுபாடடைகின்றன என்பது நிதர்சனம். இதுவரைக்கும் தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு உதவக் கூடிய ஒரு அம்சமாக மட்டும்தான் இருந்தது. பைக்கும் காரும் விமானமும் தூரத்தைக் குறைத்துக் கொடுத்தன. நேரத்தை மிச்சப்படுத்தின. மின்சாரமும் தொலைக்காட்சியும் வானொலியும் மனித வாழ்வில் கூடுதல் செளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தன என்கிற அளவில் அவற்றுக்கான முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது. ஆனால் செல்போன் அப்படியில்லை. அவை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை(emotional bonding)உருவாக்குகின்றன. ஒரு மனிதனிடமிருந்து செல்போனை இரண்டு மணி நேரங்களுக்கு பறித்து வைத்தால் அவன் பதறத் தொடங்குகிற சூழலுக்கு வந்துவிட்டோம். மனைவியைக் காணவில்லை என்றாலும் கூட வராத பதற்றம் இது. தொழில்நுட்பக் கருவியொன்றுடன் உருவாகும் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு எதிர்மறையான சிக்கல்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். 

செல்போன்கள் என்பவை வெறும் கருவிகள்தான் என்பதையும் அவற்றை தேவைக்கு மீறி நெஞ்சுக்கு அருகில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் திரும்பத் திரும்ப நமக்குள்ளாகச் சொல்லிக் கொள்வதும் அதைச் செயல்படுத்துவதும் அடுத்த தலைமுறைக்கும் இதைச் சொல்லித் தருவதும் மிக அவசியமான தேவையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)

Dec 24, 2015

ரசீது

முதற்கட்ட நிவாரணப்பணிகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கடந்த வாரமே வந்து சேர்ந்துவிட்டன. அனைத்தையும் ஸ்கேன் செய்து ஒழுங்குபடுத்த இயலவில்லை.

தகவலுக்காக அனைத்து ரசீதுகளின் பிரதிகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும். 

செலவு விவரம்:

Ch.No
பெயர்
தொகை
பொருள்
69
Royal Agency
21054
சானிடரி நாப்கின்
70
Manickam
5900
கோணிப்பை
71
Sree Murugan Traders
13600
மிளகாய் பொடி – 50 கிகி
72
Rose Agencies
47750
மஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)
73
Uma Provision Stores
215962
து.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), தேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)
74
Sri Senthil Andawar Oil Mills
71100
கடலை எண்ணெய் (900 லிட்டர்)
75
V.Gunaseelan
40000
கோதுமை மாவு (1000 கிகி)
76
Yesde Agency
8200
உப்பு (1000 கிகி)
77
Padma Enterprises
46900
 பற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்
78
Sun Traders
34535
பூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)
79
Prema Enterprises
28115
அணில் சேமியா (25 case)
80
Padma Agencies
31193
சன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்
81
Gopalakrishnan Agencies
79523
ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்
82
Sri Jothi Ramalingam Modern Rice Mill
165000
அரிசி (200 பை- 5000 கிகி)
83
A.Raja
5000
ஜெயராஜுக்கு வழங்கப்பட்ட காசோலை
84
A.Raja
5000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை
85
A.Sekar
11000
சென்னை, கடலூர் லாரி வாடகை
86
M.Ramalingam
2500
உள்ளூர் லாரி வாடகை
87
A.Raja
3000
ஜெயராஜூக்கு வழங்கப்பட்ட காசோலை


மொத்தம் ரூ. 835332 ( ரூபாய் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று முப்பது இரண்டு)

முழுமையான விவரங்களை இணைப்பிலும் பார்க்கலாம்.