Nov 9, 2015

ஆல் இன் ஆல் அழகுராஜா

பெங்களூர் எப்படி இருக்கிறது? 

இப்படி யாராவது கேட்டால் ‘கேவலமாக இருக்கிறது’ என்று பதில் சொல்லித் தொலைந்துவிடுகிறேன். இந்த ஊர் காற்றில் மட்டும் அப்படி என்னதான் கலந்திருக்கிறதோ தெரியவில்லை. இரவு வீடு திரும்பும் போதெல்லாம் கண்கள் உறுத்த ஆரம்பித்துவிடுகின்றன. ஐ பவுண்டேஷன், தேவி கண் மருத்துவமனைக்கெல்லாம் சென்று வந்தாகிவிட்டது. வாசன் ஐ கேருக்கு மட்டும் செல்லவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக அப்பாவை அழைத்துச் சென்றிருந்தேன். ‘கண்ணுக்குள்ள ஆஞ்சியோ செய்யணும்’ என்றார்கள்.  இதயத்தில் அடைப்பிருந்தால் ஆஞ்சியோ செய்வார்கள். கண்களுக்குள்ளுமா என்று குழப்பமாக இருந்தது. கண்களுக்குள் ரத்தக் குழாயில் அடைப்பிருக்கிறதாம். ‘செஞ்சுட்டா பிரச்சினையில்லை..செய்யலைன்னா ரிஸ்க்தான்’ என்றார்கள். செலவு எச்சக்கச்சம். பதறிப் போய் வேறொரு கண் மருத்துவரிடம் சென்றதற்கு ‘அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை’ என்று கண்ணுக்கு சொட்டு மருந்து கொடுத்து இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்படி இரண்டு மூன்று கதைகளைக் கேட்டாகிவிட்டது. அதன்பிறகு ‘நாங்க இருக்கோம்’ என்று அவர்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. இத்தாச்சோடு தேசத்தின் நிதித்துறையையே கையில் வைத்திருந்து சம்பாதித்தாலும் போதாது போலிருக்கிறது.

எனக்கு கண்களில் எதுவும் பிரச்சினையில்லையாம். காற்றில் இருக்கும் தூசிதான் பிரச்சினை என்றார்கள். சாமானியப்பட்ட தூசியா பறக்கிறது? தலை மூக்கு வாய் என்று ஒரு இடம் பாக்கியில்லாமல் படிந்துவிடுகிறது. ஒரு மணி நேரம் பைக் ஓட்டிவிட்டு மூக்கை உறிஞ்சி எச்சில் துப்பினால் கன்னங்கரேலென்று இருக்கிறது. அத்தனையும் நுரையீரலில்தான் படிகிறது. ‘பேசாம ஒரு குட்டிக் கார் வாங்கிக்க’ என்றார்கள். எனக்கு அது ஒத்து வராது. இந்த போக்குவரத்து நெரிசலில் அலுவலகம் சென்று வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். பதினைந்து கிலோமீட்டர்தான். இரண்டு மணி நேரம் சிறைக்குள் கிடப்பது மாதிரியாகிவிடும். இப்படி ஆளாளுக்கு கார் வாங்கித்தான் பெங்களூரை கண்றாவியாக்கி வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு அறிவுரையாக ‘ஹெல்மெட் கண்ணாடியை நல்லா மூடிக்க’ என்றார்கள். வேணியின் துப்பாட்டாவை கழுத்து தலை வாய் என்றெல்லாம் சுற்றி அதன் மீது ஹெல்மெட் கண்ணாடியை மூடினாலும் கருமாந்திரம் பிடித்த தூசி எப்படியோ உள்ளே வந்து சாயந்திரமானால் கண்களுக்குள் கபடி ஆடுகிறது. நான்கு நாட்களுக்கு வெளியூர் சென்றுவிட்டு வந்தால் நன்றாக இருக்கிறது. பெங்களூர் வந்து இரண்டு நாட்கள் ஆனால் போதும். ஒரே அக்கப்போர்தான். 

இதற்காக இரவு பகல் எல்லாம் தீவிரமாக ஜிந்திச்சு ஒரு உபாயம் கண்டுபிடித்தேன். நீச்சலடிக்கும் போது அணிந்து கொள்ளும் கண்ணாடியை அணிந்து கொள்ளலாம் என்பதுதான் அந்த ஜிந்திப்பின் விளைவு. கடைக்காரன் அப்பொழுதே கேட்டான் ‘வண்டி ஓட்டும் போது அணிவதற்கு’ என்றேன். ‘சார் நல்லா இருக்காது’ என்றான். அதெல்லாம் வெளியே தெரியாமல் தலைக்கவசம் அணிந்து சமாளித்துக் கொள்கிறேன் என்றேன். அந்தக் கண்ணாடி அறுநூறு ரூபாய். கடைக்கும் வீட்டுக்கும் இடையில் ஆறு கிலோமீட்டர்தான் இருக்கும். வீடு செல்வதற்குள் திணறிப் போய்விட்டேன். அதுவும் அது தேசிய நெடுஞ்சாலை. வாகன விளக்குகள் சிதறி கண்ணும் தெரியவில்லை மண்ணும் தெரியவில்லை. தடவித் தடவி வீட்டை அடைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இரண்டு ஆட்டோக்காரன், ஒரு பைக்காரன், நடந்து சென்றவர் ஒருவர்- திட்டிச் சென்றவர்களின் பட்டியல் இது. 

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழக் கூடும். ‘அந்த எழவை கழட்டி வைத்து ஓட்டியிருக்கலாமே?’ என்று. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு நாள் கூட முழுமையாக அணியவில்லை என்றால் எப்படி. ஒரு முறை கீழே விழுந்து எழுந்தாலும் கூட பரவாயில்லை. அறுநூறு ரூபாய் முக்கியம் அல்லவா? வீட்டில் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காக கண்ணாடி அணிந்தபடியே உள்ளே சென்றேன். படிகள் தடுக்கி கதவு தடுக்கி தட்டுத் தடுமாறி உள்ளே போனால் ‘என்னங்க உங்க கண்ணே எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது’ என்றார்கள். ‘அப்படியா?’ என்று முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டாமல் கழற்றிப் பார்த்தால் உள்ளே அரை லிட்டர் தண்ணீர் தேறும் போலிருக்கிறது. வியர்த்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம் கட்டியிருந்தது.

விடாக்கண்டனாய் அடுத்த நாள் காலையிலும் அதை அணிந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறையும் இழுத்துவிட்டுக் கொண்டேன். அப்பொழுதும் உருப்படியான மாதிரி தெரியவில்லை. கண்ணாடி கொடக்கண்டனாக இருந்தது. ‘அய்யோ அறுநூறு ரூபாய் போச்சே’என்று புலம்பிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். இதில் ஒரு அபத்த நகைச்சுவை என்னவென்றால் இந்தக் கண்ணாடி மீது மூக்குக் கண்ணாடியை வேறு அணிந்திருந்தேன். பெட்ரோல் பங்க் பையன் ‘என்ன சார் ரெண்டு கண்ணாடி’ என்று கேட்டுச் சிரிக்கிறான். இந்த நாட்டிலேயே ஏன் உலகத்திலேயே நீச்சல் கண்ணாடி அணிந்து ஊருக்குள் திரியும் ஒரே ஆல்-இன்-ஆல் அழகுராஜா நானாகத்தான் இருப்பேன். ‘கண்ணுல ப்ராப்ளம் தம்பி’ என்றேன். அவன் அதோடு விடுகிறானா? ‘என்ன ப்ராப்ளம் சார்?’ என்றான். என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் ‘கண்ணை பாம்பு கொத்திடுச்சு’ என்றேன். வாயைப் பிளந்தபடி அரை அடி பின்னால் நின்று பெட்ரோல் அடித்து அனுப்பி வைத்தான். எனக்கு வாய் பூராவும் திமிர் என்று தோன்றியது. 

கடையில் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று பார்த்தால் ‘ஸ்விம்மிங் ஐட்டம் ரிட்டர்ன் கிடையாது’ என்கிறார்கள். ‘நான் நல்லா இருக்காதுன்னு சொன்னேனே’ என்றான். 

‘பார்க்கிறதுக்கு நல்லா இருக்காதுன்னு சொன்னீங்கன்னு நினைச்சேன்’ என்றேன். ‘நீங்க தப்பா புரிஞ்சுகிட்டதுக்கு நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. ஸாரி’ என்றார்கள். தென்பாண்டிச் சீமையின் தேரோடும் வீதியில் அடி வாங்கியவனைப் போல வெளியேறினேன்.

ஒரு காலத்தில் வெகு அழகாக இருந்த ஊர். இருபக்கமும் மரங்களும் நெரிசல் இல்லாத சாலைகளும்- சுஜாதா இந்த ஊரின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற போது ‘இதுதான் ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கம்...இங்கேயே இருந்துவிடுங்கள்’ என்று சொன்னார்களாம். கமல் மணிரத்னம் ஷங்கருடன் எல்லாம் வேலை செய்வதற்காகவோ என்னவோ சென்னைக்கு பெட்டி படுக்கையைக் கட்டி வந்துவிட்டார். இப்பொழுதெல்லாம் யாருமே இந்த ஊரில் இருக்க வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். இந்த ஊர் நாறிக் கிடக்கிறது. சென்ற வாரத்தில் ஒரு நாள் மழை அடித்துப் பெய்தது. ஒரு மணி நேரம்தான் பெய்திருக்கும். சாலையில் வண்டிச்சக்கரம் மூழ்குகிற அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. அத்தனையும் சாக்கடைத் தண்ணீர். ஷூ, சாக்ஸ் என்று வாய்ப்பிருக்கிற இடங்களிலெல்லாம் நீரை நிரப்பிக் கொண்டு தொப்பலாக வீடு வந்து சேர்ந்தேன். மழை பெய்தால் நீர் வடிய வாய்ப்பில்லை. தேங்குகிற குப்பைகளை ஆங்காங்கே கொட்டுகிறார்கள். குளங்களில் சாக்கடையை நிரப்புகிறார்கள். சொர்க்கம் நரகமாகி வெகு நாட்களாகிவிட்டது. இந்தச் சம்பளம்தான் பிரச்சினை. இங்கே கிடைக்கும் சம்பளத்தை வேறு ஊர்களில் எதிர்பார்க்க முடியாது. இந்தச் சம்பளக் கணக்கை ஒரு இரும்புக் கொக்கியில் சோளப்பொறியைப் போலக் கட்டி யாரோ பெங்களூரின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எலியைப் போல பின் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.

இப்பொழுது எதற்கு பெங்களூர் கதை? 

நாவல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல் நாவல் இது. வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான். ஆனால் ஏதோவொரு பயம் தடுத்துக் கொண்டேயிருந்தது. நாவல் என்பது பெரிய களம். சவாலான காரியம். விளையாட்டுத்தனமாக ஆரம்பித்துவிடக் கூடாது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் க்ளைமேக்ஸை எழுதிவிட்டால் நாவல் சுலபமாகிவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் க்ளைமேக்ஸ்தான் நாவலில் முதல் அத்தியாயம். முதல் அத்தியாயத்தை எழுதிவிட்ட பிறகு எழுதுவதில் எந்தச் சிரமமும் இல்லை. நிசப்தத்தில் தினமும் எழுதுவதன் பலன்களில் இதுவும் ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் எழுதுவது என்பது கூட வெகு சுலபமாகத்தான் இருந்தது. இன்னமும் பத்து நாட்களில் இது பற்றி விரிவாகப் பேசலாம்.

வழக்கம் போலவே யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாகத்தான் வரவிருக்கிறது. நாவலின் களம்? மேலே பேசியதுதான். பெங்களூர்.