Nov 17, 2015

ஸ்டாலினின் நமக்கு நாமே- தோல்விப் படம்

கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிடுவதற்காக முழங்கால் வரைக்கும் ஷூ அணிந்த ஸ்டாலின் சுற்றி வந்த நிழற்படங்கள் ஃபேஸ்புக்கில் காணக் கிடைத்தன. நல்ல விஷயம். இதையெல்லாம் ஜெயலலிதாவாலும் கருணாநிதியாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் களத்தில் இறங்கியிருக்கிறார் என்றும் ஸ்டாலின் வெகு வேகமாக தமிழக மக்களை நெருங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். நமக்கு நாமே திட்டத்தின் காரணமாக உண்டான நம்பிக்கை அது. அது வெறும் நம்பிக்கைதான். அப்படியெல்லாம் எதுவுமில்லை போலிருக்கிறது.

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் பற்றி சில திமுககாரர்களிடம் பேச நேர்ந்தது. சிலாகிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையான திமுகக்காரர்கள் நொந்து கிடக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய புரிதல். தனது பயணத்தின் போது எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை இம்மி பிசகாமல் பின்பற்றியிருக்கிறார். அவர் தங்கியிருந்த வீட்டுக்கு முன்பாக காத்திருந்த கட்சிக்காரர்களைத் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றிருக்கிறார். விசாரித்த வரையிலும் புலம்புகிறார்கள். பங்களாப்புதூர், நால்ரோடு, நஞ்சை புளியம்பட்டி என்று மக்கள் திரண்டிருந்த ஓரிடத்தில் கூட நிற்கவில்லை என்றார்கள். அந்தந்தப் பகுதிகளில் ஆட்களைத் திரட்டியிருந்த பகுதிச் செயலாளர்கள் தலையைக் குனிந்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் காலங்காலமாகவே அதிமுகவின் ஆதிக்கம்தான். வெகு காலமாக கே.ஏ.செங்கோட்டையன்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார். 1991-96 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ‘சாதனைச் செம்மலே வருக’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்கள். அவர் வாரம் தவறாமல் சனி ஞாயிறுகளில் தொகுதிக்குள்தான் இருப்பார். அதனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போஸ்டர் ஒட்டி அழிச்சாட்டியம் செய்தார்கள். எழவு வீட்டுக்குச் சென்றாலும் ஐந்நூறு கொடுப்பார். திருமண வீட்டுக்குச் சென்றாலும் ஐந்நூறு கொடுப்பார். நல்ல செல்வாக்கு இருந்தது. 

இந்த முறை வேளாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்ற போது ‘தமிழகத்தின் வேளாண்மையே’ என்று போஸ்டர் கண்ணில்பட்டது. இப்பொழுது வேளாண்மையும் இல்லை செம்மலும் இல்லை. மொத்தமாகக் காலி செய்துவிட்டார்கள். கடந்த முறை ஊருக்கு சென்று வந்த போது நான்காவது வரிசையில் சிறு எழுத்தில் அவர் பெயர் இருந்தது. இப்பொழுது அதுவுமில்லை. தனது இருபத்தைந்தாவது வயதிலிருந்து உள்ளூரில் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் இப்பொழுது சாமானியன் ஆக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை தேர்தலில் நிற்கக் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். அவரை ஏன் டம்மியாக்கினார்கள் என்று கேட்டால் ஏதோ பெரிய ‘வேலையைச்’ செய்து மாட்டிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். செய்தித்தாள்களில் வந்ததெல்லாம் உடான்ஸ் காரணங்கள். உண்மையான காரணம் அச்சில் வராத காரணம் என்கிறார்கள். என்னவோ இருக்கட்டும்.

செங்கோட்டையன் நிற்காதபட்சத்தில் திமுகவில் உறுதியான வேட்பாளரை நிறுத்தினால் அதிமுகவின் பாடு திண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படியொரு சூழல் எதுவுமில்லாத மாதிரிதான் தெரிகிறது. கோபிச்செட்டிபாளையம் முத்துமஹால் திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி மக்களைச் சந்தித்து பேசிய ஸ்டாலின் பயணியர் மாளிகையில் தங்கியிருக்கிறார். இரண்டு மணிக்கு கோபி நகருக்குள் வருவார் என்று அறிவித்திருக்கிறார்கள். சாலையில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி மூன்று மணியாகியிருக்கிறது மூன்று மணி நான்கு மணியாகியிருக்கிறது. கூட்டமில்லாத சாலையில் நடந்து வரும் திட்டத்தை தவிர்த்துவிட்டு காரில் வேகமாக கிளம்பிச் சென்றாராம். இதைக் கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. மக்களைச் சந்திப்பது என்பது மிக முக்கியமான திட்டம். சாலைகளில் கூட்டம் இல்லாவிட்டால் என்ன? எவ்வளவோ கடைகள் இருக்கின்றன. வழியில் வீடுகள் இருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் சரஸ்வதி புக் பைண்டிங் கடைக்குள்ளாகவோ, அரசு மருத்துவமனைக்குள்ளாகவோ அல்லது ஈபிஸ் பிஸ்கட் பேக்கரிக்குள்ளோ நுழைந்திருந்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. எந்த அறிவிப்புமில்லாமல் சாமானிய மனிதனைச் சந்தித்து அவனது குறைகளைக் கேட்டிருக்கலாம். கோபி மார்க்கெட்டுக்குள் நுழைந்து வெளியேறியிருக்கலாம். 

‘ஸ்டாலின் எங்கடைக்கு வந்துட்டு போனாரு’ என்று ஒவ்வொருத்தரும் பத்து பேரிடமாவது சொல்லியிருப்பார்கள். அந்தப் பத்துப் பேரும் இன்னொரு பத்து பேரிடமும் பேசியிருப்பார்கள். அப்படியெல்லாம் ஒவ்வொரு தொகுதியிலும் நடந்திருந்தால் தமிழகம் முழுக்கவும் இந்தப் பயணம் உருவாக்கிய தாக்கம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அப்படியேதும் தாக்கம் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. அதிமுகக்காரர்களிடம் பேசினால் ‘இதையெல்லாம் மக்கள் நம்பவில்லை’ என்கிறார்கள். இணையத்தில் புழங்கும் திமுகக்காரர்கள் தமிழகமே திமுகவின் பக்கம் நிற்பதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். இணையவாசிகள் புலி சூப்பர் ஹிட் என்பார்கள். நாம் இணையத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்காத சாதாரணத் திமுக தொண்டனிடம் விசாரித்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ளலாம். 

இதையெல்லாம் திமுகவின் மீதான வெறுப்பின் காரணமாகவோ அல்லது வேறொரு கட்சியின் மீதான பிரியத்தின் காரணமாகவோ எழுதியிருக்கிறேன் என்று நினைக்க வேண்டியதில்லை. உண்மையிலேயே ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தைத் தொடங்கிய போது மிகுந்த நம்பிக்கையிருந்தது. தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் போது அவருக்கு விசாலமான புரிதல் உண்டாகும் என்ற எதிர்பார்ப்பிருந்தது. மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட தலைவனாக ஸ்டாலின் உருமாறுவார் என்கிற நினைப்பிருந்தது. நேற்றைக்கு கட்சிக்குள் வந்தவனெல்லாம் சில கோடிகளைக் கொடுத்துவிட்டு தேர்தலில் டிக்கெட் வாங்கிவிடலாம் என்ற கனவில் மிதப்பதற்கு சாவு மணி அடிப்பார் என்ற நப்பாசை இருந்தது. 

அப்படியெல்லாம் எதுவும் நடக்காது போலிருக்கிறது. டீக்கடைக்காரனும், சைக்கிள் கடைக்காரனும் கூட தேர்தலில் நிற்க முடியும் என்ற அண்ணாத்துரையின் திமுகவை மீண்டும் புத்தாக்கம் செய்யக் கூடும் என்ற ஆசை புதைந்து கொண்டுதான் இருக்கிறது. கார்போரேட் நிறுவனமாகச் செயல்பட்டு வரும் திமுக இனியும் கார்போரேட் நிறுவனமாகத்தான் செயல்படும் என்று எல்லாவிதத்திலும் கட்டியம் கூறுகிறார்கள்.

மிகச் சிறந்த வாய்ப்பை ஸ்டாலின் தவற விட்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.


இன்றைக்கு இந்த ஊர் என்பதை மட்டும் திட்டமிட்டுக் கொண்டு எங்கே நிற்க வேண்டும் யாருடன் பேச வேண்டும் எதைப் பற்றி பேச வேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த ஊரில் அந்தந்த மனிதர்களைப் பொறுத்து முடிவு செய்திருக்க வேண்டும். மக்களை இயல்பாக பேசவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பயணம் அப்படியில்லை. ‘இந்தக் கரும்புக்காட்டில் இன்னாரைச் சந்திக்கிறார் இதைப் பற்றி பேசுகிறார்’ என்று அவருக்கு முன்னால் பயணம் செய்த சபரீசன் குழுவினர் முடிவு செய்ததை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார். ஒரு நல்ல இயக்குநரின் வேலை நடிகன் நடிக்கிறான் என்பதே தெரியாதபடிக்கு பார்த்துக் கொள்வது. ஒரு நல்ல நடிகனின் வேலை தனது நடிப்பை துருத்தாமல் பார்த்துக் கொள்வது . நமக்கு நாமே படத்தில் இயக்குநரும் தோற்றிருக்கிறார். நடிகரும் தோற்றிருக்கிறார். துரதிர்ஷ்டம்தான்.