Nov 30, 2015

குடித்தால் மட்டும்?

ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனியாக ஊருக்குச் செல்லும் போதெல்லாம் ஒரே பேருந்திலேயே பயணிக்காமல் பேருந்துகள் மாறி மாறிச் செல்வது வழக்கம். அதுவும் கண்ட கண்ட ஊர்களைச் சுற்றிச் செல்லும் பேருந்தாகத்தான்  தேடுவேன். சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோட்டுக்கு ஒன்றரை மணி நேரப் பயணம் என்றால் திருச்செங்கோடு வழியாகச் சென்றால் அரை மணி நேரம் வரைக்கும் கூடுதலாகப் பிடிக்கும் என்றாலும் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான். ஓசூர் வரைக்கும் ஒரு பேருந்து. அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு ஒன்று. அங்கிருந்து தர்மபுரி. தர்மபுரியிலிருந்து சேலம்.

சேலத்தில் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் போது தனியார் பேருந்து ஏதாவது ஒன்றில் ஏறிக் கொள்வதுதான் உசிதம். முக்கால்வாசி அரசுப் பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுகிறது. மேலே இருந்து ஒழுகினால் கூட தலையில் துண்டை போட்டுக் கொள்ளலாம். கீழே இருந்து கூட தண்ணீர்  பீய்ச்சி அடிக்கிறது. சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீர் மீது சக்கரம் ஏறினால் தெறிக்கும் தண்ணீரானது பேருந்தின் அடிப்பாகத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியாக மேலே வருகிறது. நொட்டை நொள்ளை சொன்னால் ‘எங்கள் ஆட்சி பொன்னான ஆட்சி’ என்பார்கள். எப்படியோ தொலையட்டும்.

அரசுப் பேருந்துதான் நின்றிருந்தது. வேறு வழியில்லை. ஏறிக் கொண்டேன். மூன்று பேர் அமரும் இருக்கையில் ஜன்னலோரமாக ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஐம்பதைத் தாண்டியிருக்கக் கூடும். அனுமதி கேட்டுவிட்டு இருக்கையின் மறு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். சேலம் பேருந்து நிலையத்தைத் தாண்டியவுடன் தனது செல்போனைக் கொடுத்து ‘வீரமணின்னு இருக்கும்..ஃபோன் செஞ்சு கொடுங்க’  என்றார். மறுமுனையில் யாரென்று தெரியவில்லை. இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அழுதார். முகத்தைப் பார்த்தேன். அவருக்கு சங்கடமாக இருந்திருக்கக் கூடும். ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார். இணைப்பைத் துண்டித்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தார். அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

‘ஈரோட்டுக்கு எப்பவுமே முப்பது ரூபாதான் டிக்கெட் போடுவாங்களா?’ என்றேன். பதில் தெரிந்த கேள்விதான். ஆனாலும் அவரது மெளனத்தை உடைப்பதற்கு ஏதேனும் அஸ்திரம் தேவைப்பட்டது. 

‘நான் ஊருக்கு புதுசுங்க’ என்றார். பேச்சை முடித்துக் கொள்ள விரும்புகிறார் போலிருந்தது. எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவராகவே ‘எங்க இருந்து வர்றீங்க?’ என்றார்.

‘பெங்களூர்ல இருந்து...நீங்க?’

‘சிதம்பரம்’

‘உங்க ஊர்ல மழையாங்க?’

‘இல்லை...மழையெல்லாம் இல்ல’

‘ஆனா கடலூர்ல மழைன்னு போட்டிருந்தாங்க’.

அவர் கடலூர் இல்லை. துல்லியமாகச் சொன்னால் சிதம்பரமும் இல்லை. பக்கத்தில் கொள்ளிடம். ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா என்றேன். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அழுதது மனதுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயதுப் பெண்மணி தனிமையில் அழுவது கொடுமை. பார்த்துக் விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதைப் போன்ற பாவம் வேறு எதுவுமில்லை.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னவர் ‘இப்போ ஈரோடு போறீங்களா?’ என்றவுடன் உடைந்து போய்விட்டார். அப்படி எந்தத் திட்டமும் அவரிடமில்லை. கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்.

அவருடைய மூத்த மகன் அவனாகவே திருமணம் செய்து கொண்டான். மனைவியோடு தனிக்குடித்தனம் போய்விட்டான். இந்தப் பெண்மணியிடம் சில ஆடுகளும் மாடுகளும் இருந்திருக்கின்றன. அதுதான் வாழ்வாதாரம். கடந்த வாரம் குடித்துவிட்டு வந்தவன் ஆடு மாடு அனைத்தையும் ஒரு ட்ராக்டரில் ஏற்றிக் கொண்டான். தடுத்த போது எட்டி உதைத்திருக்கிறான். கீழே விழுந்ததில் இன்னமும் இடுப்பில் வலி. ஒரு வாரமாக அழுதிருக்கிறார். கணவன் இல்லை. கேட்க நாதியில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் தனது மாமியார் வந்து போவதை பெரிதாக விரும்புவதில்லை. கிட்டத்தட்ட அநாதையாகிவிட்டார். கையிருப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

‘அப்போ வீரமணி யாரு?’ என்றேன். தங்கையின் மகன். சென்னிமலையில் இருக்கிறாராம். அவருடைய வீட்டுக்குத்தான் செல்கிறார் என்று நினைத்தேன். அதுவுமில்லை.

திருப்பூர் அல்லது ஈரோட்டில் பனியன் கம்பெனிகளில் வேலை கிடைக்கும்’ என்று சொல்லியிருந்தாராம். அதை நம்பி வந்துவிட்டார். ‘எங்கே தங்குவீங்க?’ என்றாலும் பதில் இல்லை. வீரமணிக்கும் அவர் ஈரோடு வருவதெல்லாம் தெரியாது.  வீரமணிக்கு ஃபோன் செய்தவுடன் அழுகை வந்திருக்கிறது. துண்டித்துவிட்டார். காலங்காலமாக வாழ்ந்து வந்த ஊரை விட்டுவிட்டு எங்கே போகிறோம் என்ற திட்டம் கூட இல்லாமல் ஒரு பெண்மணி கிளம்பி வருவதென்றால் எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க வேண்டும்?

‘அவன் ஆடு மாட்டை வித்தது கூட பிரச்சினையில்ல தம்பி...உடம்புல தெம்பு இருக்குது...கஷ்டப்படுவேன்...எட்டி மார் மேல உதைச்சுட்டான்...’ அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அவரது முகத்தைப் பார்த்தார்கள். ‘குடிச்சா அப்படி புத்தி கெட்டுப் போயிடுமா?’ என்று கேட்டுவிட்டு கேவினார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பேருந்து சங்ககிரியை அடைந்திருந்தது. வீரமணி எண்ணைக் கேட்டேன். ‘ஏன் எதற்கு’ என்றார். 

‘உங்களுக்கு ஈரோட்டில் வேலை வாங்கிக்கலாம்..ஆனா எதுக்கும் அவர்கிட்ட தகவல் சொல்லிவிடலாம்’ - இந்த பதிலில் அவருக்கு திருப்தி இல்லை. 

‘கையில் பணம் வெச்சிருக்கீங்களா?’ என்றேன். நானூறு ரூபாய் வைத்திருந்தார். கொஞ்சம் சில்லரையும். இந்தத் தொகையை வைத்துக் ஈரோட்டில் இரண்டு நாட்கள் கூட சமாளிக்க முடியாது. அவருக்கு அது புரியவேயில்லை. ‘இந்த ஊர் ரொம்ப மோசம்’ என்றேன். அவருக்கு பயமூட்ட வேண்டியிருந்தது. கொஞ்சம் இளகினார். வீரமணியின் எண்ணை வாங்கி விவரங்களைச் சொன்னேன். தான் ஈரோடு வந்துவிடுவதாகச் சொன்னார். நாங்கள் இறங்கிய போது அவர் வந்திருக்கவில்லை. அரை மணி நேரம் நின்று கொண்டிருந்தோம். அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்,

பணம் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிடுகிறது? பத்து செண்ட் நிலத்துக்காக காலங்காலமாக பேசிக் கொள்ளாத அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். ஒரு பவுன் சங்கிலிக்காக உறவைத் துண்டித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. ஒரு கட்டிடத்துக்காக தெருவில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட அப்பன் - மகன் கதை எங்கள் ஊரில் பிரசித்தம். இரண்டு பேருமே மருத்துவர்கள். பணத்தை நம்மிலிருந்து ஒரு அடி தள்ளி வைத்திருக்கும் வரைக்கும் பிரச்சினையே இல்லை. எப்பொழுது அதை நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதிருந்து நம்மை அடிமையாக்கிவிடும். அதன் பிறகு அதைத் தவிர நம்மால் வேறு எதையும் யோசிக்க முடிவதில்லை. பணம் இன்று வரும் நாளை போகும். எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட முடியும். ஆனால் மனித உறவுகள் அப்படியில்லை. ஒரு முறை சிதறவிட்டால் அவ்வளவுதான். அதை ஏன் இவ்வளவு முரட்டுதனமாக கையாள்கிறோம்?

அரை மணி நேரம் கழித்து வீரமணி வந்தார். அந்தப் பெண்மணியிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. விடைபெற்றுக் கொள்ள விரும்பினேன். அப்பொழுது அவர் மீண்டும் அழ ஆரம்பித்தார். அவரது மகனை நினைத்திருக்கக் கூடும். சொந்த ஊரை நினைத்திருக்கக் கூடும். கணவனை நினைத்திருக்கக் கூடும். எதுவென்று தெரியவில்லை. ஐநூறு ரூபாயைக் கொடுத்தேன். மறுத்தார். ‘வெச்சுக்குங்க’ என்றேன். வீரமணியும் வேண்டாம் என்றார். ‘ஒரு மகனா நினைச்சுக்குங்க’ என்றேன். அந்தப் பெண்மணி அப்பொழுதும் மறுத்தார். அதற்கு மேல் அவர்களிடம் வற்புறுத்தவில்லை. இருவரும் சென்னிமலை பேருந்தை நோக்கி கிளம்பினார்கள். மழை பெருக்கெடுத்தது. ஓடிச் சென்று கோபி பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்பொழுது முக்கால்வாசி நனைந்திருந்தேன்.