Nov 26, 2015

அடித்தளம்

பள்ளிகளின் தலைமையாசிரியர்களைப் பற்றி நேற்று எழுதியிருந்த ஒரு குறிப்புக்கு கடும் எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு தலைமையாசிரியர் அழைத்து ‘பெரும்பாலான தலைமையாசிரியர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள்’ என்றார். ‘இருக்கலாம் சார்....என்னோட அனுபவம் அப்படி...சில தலைமையாசிரியர்கள்தான் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள்’ என்றேன். ஆசிரியர்கள் விடுவார்களா? அதுவும் தலைமையாசிரியர். ‘அப்படி என்ன உங்க அனுபவம்?’ என்று எதிர்கேள்வி கேட்டார். அலைபேசி வழியாகவே கையை நீட்டி காதைத் திருகிவிடுவார் போலிருந்தது.  

அனுபவங்களை எழுதலாம்தான். ஆனால் வெளிப்படையாக பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமான செயல் என்று கருதுகிறேன். அவரிடம் விளக்கினேன். அவர் ஒத்துக் கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை. விசாரித்துவிட்டு மீண்டும் அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம். ஆட்டோவில் ஆள் அனுப்பாத வரைக்கும் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு எதுக்கு ஆட்டோ? அவரே பஸ் பிடித்து வந்தால் கூட போதும். சாலையோரமாக வைத்து தனி ஆளாகவே முங்கி எடுத்துவிட்டு போய்விடலாம். தலைகீழாக நின்றாலும் எடை முள் அறுபது கிலோவைத் தாண்டுவதில்லை. இத்தனைக்கும் பர்ஸ், செல்போன், செருப்பு என எல்லாவற்றுடனும் சேர்த்துத்தான் எடைக்கருவி மீது ஏறி நிற்கிறேன். அடுத்த முறை ஐந்து கிலோ எடைக்கல்லை தூக்கிக் கொண்டுதான் ஏறி நிற்க வேண்டும் போலிருக்கிறது.

அது கிடக்கட்டும்.

மனிதனுக்கு பள்ளிகள்தான் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோர்கள் கூட அடுத்தபடிதான். பள்ளிகளின் பங்களிப்புதான் மிக முக்கியமானது. மாணவனின் சிறகுகளை விரிக்கச் செய்வதும் பள்ளிதான். உலகின் சாளரங்களைத் திறந்துவிடுவதும் பள்ளிதான். ஒரு கல்லூரி ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். ‘மெட்ரிகுலேஷன் பையன் நல்லா படிப்பான் ஆனா அவன்கிட்ட நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்க முடியறதில்லை..ஆனா அரசாங்கப்பள்ளியில் படிச்சுட்டு வர்றவன் அப்படியில்ல’ என்றார். அவர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். உதாரணத்தோடு சொன்னார். ‘முப்பது சேர் எடுத்துப் போடுன்னு சொன்னா இருபத்தஞ்சு சேர்தான் இருக்குன்னு வைங்க....மெட்ரிகுலேஷன் பையன் நிச்சயமா நம்மகிட்ட வந்து நிப்பான்..ஆனா கவர்ண்மெண்ட் ஸ்கூல் பையன் இன்னும் அஞ்சு சேரை க்ளாஸ்ரூம்ல இருந்து எடுத்துப் போட்டுட்டு வந்து நம்மகிட்ட சொல்லிட்டுப் போவான்’ என்றார். இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட விமர்சனம் என்றாலும் அவர் சொன்னது பெரும்பாலான மாணவர்களுக்கு பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன்.

பெருநகரங்களின் தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஓரளவு வெளியுலக அறிவு இருக்கிறது. அவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். தொடர்புகள் கிடைக்கின்றன. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இயங்கும் தனியார் பள்ளிகளின் மாணவர்களின் நிலைமைதான் பரிதாபம். வெறும் மதிப்பெண்கள் மட்டும்தான் நோக்கம். நான்கு சுவர்களுக்குள் அடைத்து மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மற்றவற்றில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். காலையில் ஆறு மணிக்கு மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதைப் பார்க்க முடிகிறது. இரவு வெகு நேரம் பள்ளிக் கூடத்திலேயே இழுத்துப் பிடித்து அமர்த்தி வைக்கிறார்கள். சனி, ஞாயிறு கூட அவர்களுக்கானது இல்லை. பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சுதந்திரம் என்பது அவசியமானது. களவும் கற்று மற. ஆனால் எல்லாக் களவின் போதும் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ‘ஒரு லிமிட்டைத் தாண்டினா மாட்டிக்குவோம்’ என்கிற பயம். அந்த பயம் அவனை எல்லை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி சகலத்தையும் முயற்சித்துப் பார்க்கும் ஒரு மாணவன் சுயமாக நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான். குரூர உலகத்தின் கொள்ளிவாய்க்குள் வீசினால் கூட தம் பிடித்துத் தப்பித்துவிடுவான். 

இப்பொழுது அரசுப்பள்ளிகளும் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது கை வைக்க ஆரம்பித்துவிட்டன. பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் மதிப்பெண்களுடன் போட்டியிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ‘அந்தப் பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு...ஃபர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்க்கிறோம்...நல்லா கட்டுரை கூட எழுதுவாங்க...ஆனா போட்டிக்கெல்லாம் அனுப்பிட்டு இருந்தா மார்க் போயிடும்ன்னு நாங்க அனுப்பறதில்லை’ என்று ஒரு தலைமையாசிரியை சொன்னபோது வருத்தமாக இருந்தது. extra curricular activity என்று சொல்லப்படுகிற எந்தவொரு அம்சமும் தொடர்ச்சியின் காரணமாக மட்டுமே மாணவர்களிடம் ஒட்டியிருக்கும். படிப்பைக் காரணம் காட்டி எழுதுவதையும் பேசுவதையும் விளையாடுவதையும் தடை செய்தால் மீண்டும் துளிர்க்கவே துளிர்க்காது. டாக்டராக வேண்டும் பொறியாளராக வேண்டும் என்று மட்டும்தான் யோசிப்பார்களே தவிர தங்களுக்கு ஒரு திறமை இருந்தது என்பதையே மறந்துவிடுவார்கள்.

சிறகுகளைக் கத்தரித்துவிட்டு பறக்கச் சொல்லித் தந்து என்ன பயன்?

பல அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இது பெரிய அழுத்தமாக மாறியிருக்கிறது. நன்றாக மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களை தனியார் பள்ளிகள் ‘நீங்க ஃபீஸே கட்ட வேண்டாம்’ என்று சொல்லிக் கொத்திக் கொண்டு போய்விடுகின்றன. மிச்சமிருக்கும் சுமாராகப் படிக்கும் மாணவர்களை வைத்துக் கொண்டு தனியார் பள்ளிகளோடு போட்டியிட வேண்டிய கட்டாயம் அரசுப்பள்ளிகளுக்கு. மதிப்பெண்கள் முக்கியமானவைதான். ஆனால் அவை மட்டுமே எல்லாவற்றையும் கொண்டு வந்து தருவதில்லை. சுயமாக சிந்திக்கவும், உலகை எதிர்கொள்ளும் திறமைகளையும் வளர்க்கும் பள்ளிகள்தான் நமக்கான தேவை. ஆனால் அப்படியொரு சூழல் இப்போதைக்கு உருவாவதற்கான அறிகுறியே தென்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான்.

நான் சொல்ல வந்தது இதுவன்று.


இன்று வர்கீஸ் குரியனின் பிறந்த நாள். இந்தியாவின் பால்வளத்திற்கு காரணமான வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். வெண்மைப்புரட்சியின் தந்தை. குரியனின் தந்தை கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக பணியாற்றிய போது குரியன் எங்கள் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். இந்த வரியை எழுதும் போது எனது சட்டைக்காலர் சற்று தானாக உயர்ந்துவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்து கோபி வந்து பள்ளியைச் சுற்றிப் பார்த்த போது அழுதுவிட்டாராம். அப்பொழுது பள்ளியின் தாளாளராக இருந்த சச்சிதானந்தம் இதைப் பல முறை சொல்லியிருக்கிறார். பள்ளியின் பார்வையாளர்கள் ஏட்டில் குரியன் எழுதியிருந்ததைச் சொல்லியாக வேண்டும்.

‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் படித்த பள்ளியை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது என்றால் அது இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்ட வலிமையான அடித்தளத்தினால்தான்’

இந்த இரண்டு வரிகளையும் அவர் அடிமனதிலிருந்து எழுதியிருப்பதாக உணர்கிறேன். இந்த அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உரியது. அதிகாரிகளின் அழுத்தம் பெற்றோர்களின் அழுத்தம் தனியார் பள்ளிகளின் போட்டி என்று சகலமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் மாணவர்கள் எப்படி வளர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு என்ன மாதிரியான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் காலகாலத்துக்கும் பள்ளியையும் ஆசிரியர்களின் பெயர்களையும் நினைவில் நிறுத்தியிருப்பார்கள். 

3 எதிர் சப்தங்கள்:

kailash said...

Your point about Head Masters are correct only not all most of them are not ready to travel extra mile . I can narrate an incident which happened today. There is a government high school at the end of my street . Its flooded due to recent rains , water ditn entered classrooms , but entire school area is affected including toilets . Till today morning no teacher including Head Master came to school for a visit for the past 15 days . Students came from morning today and are in school around this water . I have called up Corporation yesterday to pump out the water and sanitize the school to avoid contracting with diseases . Why dont they care for these students to a little extent atleast to take care of teachers they should have done this already ? Corporation is ready to send resources to cleanup but no one has initiated . I felt really bad for those students .

சேக்காளி said...

//அவரே பஸ் பிடித்து வந்தால் கூட போதும்//
இதெல்லாம் நல்லாவா இருக்கு?.இருக்குற பணிச்சுமைகளுக்கு இடையே, மழை வெள்ளத்துக்கு நடுவே அவருக்கு வர போற சிரமத்தை குடுக்கக் கூடாது.
நீங்களே போணும்.
அப்பத்தான் இந்த ஒலகம் ஒங்கள "நல்லவன்" ன்னு சொல்லும்.

Jaypon , Canada said...

LOL 😁 for the above comment.