முடித்தாகிவிட்டது. முதல் நாவல். ஓரிரண்டு வருடங்களாகவே சில களங்களை எடுத்துக் கொண்டு அதை எழுத வேண்டும் இதை எழுத வேண்டும் என்று பினாத்திக் கொண்டிருந்தேன். ஊருக்குள் சிலரிடம் பந்தாவாகச் சொல்லியும் வைத்திருந்தேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் கிழவன் கோவணம் கட்டுவது போல திசையில்லாமல் இழுத்துக் கொண்டு போகும். இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று ஓரங்கட்டி வைத்துவிட்டு பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வருடம் அப்படியில்லை. ஜீப்பில் ஏறியே தீர வேண்டும் என்ற முஸ்தீபுகள் படு முசுவாக இருந்தன. முதலிலேயே க்ளைமேக்ஸை எழுதியாகிவிட்டது. க்ளைமேக்ஸையே முதல் அத்தியாயமாகவும் முடிவு செய்த பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. முடிவு இதுதான் என்று சொல்லிவிட்டு அடுத்த பத்தொன்பது அத்தியாயங்களை சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதுதான் சவால். ஓகே. இதோடு நிறுத்திக் கொள்கிறேன். சுவாரஸியமா இல்லையா என்பதையெல்லாம் நான் அளக்கக் கூடாது. வாசிக்கிறவர்கள்தான் சொல்ல வேண்டும்.
கடந்த முப்பது வருடங்களில் பெங்களூர் மாநகரம் ஓர் எளிய குடும்பத்தில் நடத்தும் பகடையாட்டம்தான் களம்.
தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை. மூன்றாம் நதி என்ற ஒரு யோசனை இருக்கிறது. அந்தர்வாகினி என்றொரு தலைப்பும் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கதை நாயகியின் பெயர் பவானி. அதனால் தலைப்பில் நதி இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அது மட்டுமில்லை. பவானியும் காவிரியும் கூடுகிற இடத்தில் மூன்றாவது ஒரு நதி கூடுவதாகச் சொல்வார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத நதி. பெங்களூரில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை இருக்கும் அல்லவா? அதைப் பேசுவதால் அப்படியொரு நினைப்பு. அது தவிர இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக நிசப்தத்தில் எழுதியவைதான் புத்தக வடிவில் வந்திருக்கின்றன. இந்த முறை நாவல். ரவுடிதான். ஜீப்தான். ஏறிவிட வேண்டியதுதான்.
ஒவ்வொரு வருடமும் பத்து புத்தகங்களுக்கான பணத்தை சரவண பாபு அனுப்பி வைத்துவிடுகிறார். ஒரு பிரதி நூறு ரூபாய். ஆக ஆயிரம் ரூபாய் அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பத்து புத்தகங்களை நான் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுவார். இந்த முறையும் அதில் மாறுதல் இல்லை. வேறு சில நண்பர்களும் சில புத்தகங்களுக்கான தொகையை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனை புத்தகங்களுக்கான ஸ்பான்ஸர்கள் கிடைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அத்தனை போட்டிகளை நடத்தலாம். யாருமே சிக்கவில்லையென்றால் எனக்கு நானே திட்டப்படி பினாமி பெயரில் நடத்த வேண்டியதுதான்.
மார்கெட்டிங் செய்யாமல் எதுவுமில்லை. அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் செய்வதில் தயக்கமுமில்லை. இங்கு அவனவன் கையூன்றி அவனவன் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். எழுதியதோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கைகழுவிட்டுப் போனால் நம்மை நம்பி புத்தகம் வெளியிடும் பதிப்பகத்தினர்தான் சிக்கிக் கொள்வார்கள். எதை எழுதினாலும் விற்பனை ஆகிவிடும் என்கிற அதுப்பு எல்லாம் என்னை மாதிரியான சுள்ளான்களுக்கு அவசியமேயில்லை. எழுதியதை வெளியில் சொல்ல வேண்டியிருக்கிறது. விற்பதற்கு அதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் அச்சுக்கூலியாவது பதிப்பாளருக்குக் கிடைத்துவிட வேண்டுமல்லவா? அதுவும் யாவரும் பதிப்பகம். கரிகாலனிடம் பேசினால் நான்கைந்து புத்தகங்களைக் கொண்டுவருவதற்கு அறுபது எழுபதாயிரம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். ‘எதுக்குங்க கடன் வாங்கிப் புஸ்தகம் கொண்டு வர்றீங்க?’ என்றால் சிரிப்பதைத் தவிர அவரிடம் பதில் இல்லை. மாதச் சம்பளக்காரர்கள். நஷ்டம் வந்தால் கையில் இருப்பதைப் போட்டுத்தான் கடனைக் கட்டுவார்கள்.
‘அப்படிப் பேசி புத்தகத்தை விற்பனை செய்ய வேண்டுமா? அதற்கு புத்தகமே வெளியிடாமல் இருந்துவிடலாமே?’ என்று தீவிரவாதிகள் யாராவது கேட்கக் கூடும். புத்தகம் என்பது என்னுடைய அடிப்படையான ஆசை. எனது புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட்டு பேசுகிறார்கள் என்பது உற்சாக டானிக். அது தேவையானதாக இருக்கிறது. போலித்தனமாக நடிக்க வேண்டியதில்லை. ஆசையில்லாத புத்தன் என்று வெளியில் சொல்லிக் கொண்டு ‘என் புத்தகம் நூறு பிரதிகள் கூட விற்கவில்லை’ என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க முடியாது. எழுதலாம். புத்தகமாக்கலாம். அது பற்றி பேசலாம். விற்கலாம். உற்சாகமாக இருக்கலாம். Writing is a fun!
அடுத்தவர்கள் அயற்சியடையாமல் கடுப்பாகாமல் பட்டாசு வெடித்துக் கொண்டேயிருப்பதற்கு ஏதோவொரு சாமி துணையிருக்கட்டும்.
வழக்கம்போலவே, ராயல்டி- அந்தப் பெயரில் கம்மர்க்ட் வாங்குகிற அளவுக்கேனும் ஏதேனும் பைசா வந்தால் அதை ஒய்யல் அமைப்புக்கு கொடுத்துவிடுகிறேன். இந்தப் புத்தகத்தை வைத்து Fund raising ஏதாவது செய்ய முடியுமா என்று மண்டை காய்ந்து கொண்டிருக்கிறது. அப்படிச் செய்ய முடிந்தால் அந்த மொத்தத் தொகையையும் இந்த முறை ஒய்யல் அமைப்புக் கொடுத்துவிடலாம். ஒய்யல் பற்றித் தெரியுமல்லவா? மிக நேர்மையான தன்னார்வ அமைப்பு. கிருஷ்ணகிரி தர்மபுரியின் கிராமப்புறங்களில் சப்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒய்யல் பற்றி இணைப்பில் விவரமிருக்கிறது. ஒய்யலின் அமைப்பாளர் பேசினார். அவர்களுக்கு நிதி திரட்டித் தருவது நல்ல காரியமாக இருக்கும். புத்தகத்தின் வழியாக ஏதாவது திரட்ட முயற்சிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு எந்த வழியில் உதவலாம் என்று சொல்லுங்கள். நிச்சயமாக ஏதாவது செய்யலாம்.
நாவல் நூறு பக்கத்திற்குள் முடிந்துவிட்டது. ஆரம்பிக்கும் போதே அவ்வளவுதான் எழுத வேண்டும் என்கிற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் எழுதி வேலியில் ஓடுகிற பாம்பை எடுத்துத் தோளில் போட்ட மாதிரி ஆகிவிடக் கூடாது. பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் வாசிக்க ஆரம்பித்தால் கிருஷ்ணகிரியைத் தாண்டுவதற்குள் முடித்துவிட வேண்டும். கோயம்பேட்டில் ஆரம்பித்தால் ஸ்ரீபெரும்புதூர் தாண்டுவதற்குள். அதுதான் ஐடியா. அப்படியே ஆகியிருக்கிறது.
‘அதைச் சாதித்தேன்..இதைச் சாதித்தேன்’ என்று படம் ஓட்டுவதற்கு இது சரியான தருணம் இல்லை. இப்பொழுதுதான் பிள்ளை பிறந்திருக்கிறது. பெயர் கூட வைக்கவில்லை. அதற்குள் நம்மை பெரிய கழட்டிமேனாக நினைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடைவது போன்ற அழிச்சாட்டியம் வேறு இருக்க முடியாது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டும் எனக்கு நானே சொல்லிக் கொண்டு.......தாய்மார்களே, பெரியோர்களே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரே, பவானி சங்கமேஸ்வரரே, இருக்கன்குடி மாரியாத்தாவே...
9 எதிர் சப்தங்கள்:
Your matured sincerity is contagious to all writers!wish u all the best!vishwa
நாவலைப் பற்றிய அறிமுகம்
அருமை.
வாழ்த்துக்கள் ச்ஆர்.
I think u have to become like writer sujatha
May god shower upon u all the best in this field.... Sivan
உங்கள் பெயரிடப்படாத புதினம் வெற்றிபெற நல்வாழ்த்துகள்!
ஹா..ஹா...
பிள்ளைக்கு நல்ல பேரா வைங்க
wish u all the best!
Your book will come good with god grace
Kind Regards
Boopathi
chennai book fare-kku release huh??in january??
நாவல் வெற்றிபெற நல்வாழ்த்துகள்!
My best wishes sir... Waiting!
Post a Comment