Nov 10, 2015

பொரி உருண்டை

உங்களுக்கு இன்று தீபாவளியா? இந்த ஊரில் வியாழக்கிழமைதான் என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டால் சாம்பாரில் சர்க்கரையைக் கலந்து தின்னும் எங்களுக்கு அப்படித்தான் என்று சொல்லிவிட்டார்கள். தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டேன். பிரச்சினை என்னவென்றால் வியாழக்கிழமை கூட அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார்கள். அமெரிக்கா சென்றிருந்தேன் அல்லவா? அங்கே ஒரு பொரி உருண்டை இருக்கிறான். இமாச்சல் பிரதேசத்துக்காரன். உண்மையிலேயே பொரி உருண்டைதான். நம்பிக்கை இல்லையென்றால் கூகிளில் டென்வர் பொரி உருண்டை என்று தேடிப் பார்க்கவும். அவனுடைய படத்தைத்தான் காட்டும். எனக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம். பங்காளியுமில்லை மச்சான் முறையும் இல்லைதான். ஆனாலும் எதைச் செய்தாலும் எடக்கு மடக்காக கவுண்ட்டர் கொடுக்கிறான். 

‘தம்பி எனக்கு இந்தியாவுல இன்னொரு பேர் இருக்கு தெரியுமா?’ என்று கூட கேட்டுவிட்டேன். இங்கே இருந்து அதைச் சொல்லியிருந்தால் ஒருவேளை நம்பியிருப்பான். அங்கே போய் தேக பலத்தைக் காட்டி இதைச் சொன்னால் நம்புவானா? அவன் முஷ்டியை மடக்கி ‘எனக்கு அமெரிக்காவிலேயே இன்னொரு பேர் இருக்கு தெரியுமா?’ என்கிறான். அவனுக்கு இருந்தாலும் இருக்கும். பெரும்பாலான வட இந்தியர்களுக்கு இரண்டு கொம்பு முளைத்திருக்கிறது. அதுவும் ஹிந்தி தெரியாத என்னைப் போன்ற இனாவானாக்களைப் பார்த்தால் மூன்றாவது கொம்பும் முளைத்துவிடுகிறது. மூன்றாவது கொம்பு எந்த இடத்தில் கொம்பு முளைக்கிறது என்று அவரவர் அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த நிறுவனத்தில் நான் சேர்ந்த புதிதில் ஏறி ஏறி மிதித்தான். முட்டுச் சந்து மூத்திரச் சந்து என்று ஒரு இடம் பாக்கி வைக்காமல் இழுத்துப் போய் கும்மினான். மூக்கு மொகரை எல்லாம் பெயர்ந்து போய்க் கிடந்தேன். பரிதாபப்பட்ட மேலாளர் அழைத்து ‘அவன் பத்து அடி அடிச்சா உனக்கு ஒரு அடி கூடவா அடிக்கத் தெரியாது’என்றார். நான் என்ன ரஜினியா? அந்தப் பொரி உருண்டை மட்டும் இந்தியா வரட்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். பாயாசத்தில் பேதி மருந்தைக் கலந்துவிடலாம்.

வீட்டில் யாருமில்லை. எல்லோரும் மாமனார் வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் பாய் கடையில் இரண்டு புரோட்டாவும் சிக்கன் சால்னாவும்- அப்படித்தான் சொல்லி ஊற்றினார்கள். துண்டு கொஞ்சம் பெரியதாகத்தான் இருந்தன. சட்டியில் கொதித்த பிறகு நாய் என்ன நரியென்னவென்று நினைத்து ‘நரகாசுரா நீ வாழ்க நின் கொற்றம் வாழ்க’ என்று உறிஞ்சிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். பழைய நிறுவனத்தில் இப்படி ஏதாவது நோம்பி நொடி என்றால் அழகழகான பெண்கள் விதவிதமான சேலைகளில் ஒய்யார நடை நடப்பார்கள். அதற்குள்ளாகவே இந்த நாள் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். இந்த நிறுவனமும் இருக்கிறதே- அதைக் கேட்டு வயிற்றெரிச்சலை ஏன் வாங்கிக் கொட்டிக் கொள்கிறீர்கள்.

நேற்றிலிருந்து பினாத்திக் கொண்டிருக்கிறேன். ‘புதன்கிழமை ராத்திரி பத்து மணியிலிருந்து அதிகாலை ஐந்தரை மணி வரைக்கும் ஆன்லைனில் இருக்க வேண்டும்’ என்று பொரி உருண்டை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. தீபாவளியை செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை என்று சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம். நரகாசுரனின் டெட்பாடியை இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பட்டாசு வெடித்துக் கொள்ளலாம். புதன்கிழமையும் இப்படி சாவடித்தால் என்ன அர்த்தம்? முடியாது என்று சொன்னேன். அடுத்த விநாடியே ஆள் அம்பு அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் அனுப்பி கோர்த்துவிட்டுவிட்டான். ‘இவனை நம்பி நான் ஒரு கொலை கூட பண்ண முடியாது’ என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறான். படுபாவி.

பொரி உருண்டை அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறது. நான்கு லட்சம் டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி ரூபாய். பெருந்தொகை. இப்படி வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டால் பெரும்பாலும் அதே நிறுவனத்திலேயே ஒட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். ‘நீ செய்கிற வேலையை எனக்கு சொல்லித் தர்றியா?’ என்று கேட்டால் பதறிவிடுகிறார்கள். அவனவன் அரிசியில் அவனவன் பெயர் எழுதியிருக்கும் என்று தத்துவமெல்லாம் பேச முடிவதில்லை. சொல்ல முயற்சித்தால் மூக்கு மேலேயே குத்துகிறார்கள். ‘மொத்த நிறுவனத்தையும் எனது இரு தோள்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றன’ என்று நிரூபிக்க கடும் பிரயத்தனம் செய்கிறார்கள். பொரி உருண்டை அப்படியொரு சிக்கலில் இருப்பதாகப்பட்டது. 

பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் ஒன்றிரண்டு நிறுவனங்கள்தான் இருக்கின்றன. நிறுவனத்தை மாற்றுவதென்றால் இன்னொரு நகரத்துக்கு குடி மாற வேண்டியிருக்கிறது.  கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் செல்வதாக இருந்தால் இன்னமும் சிரமம். அதனால் இருக்கும் நிறுவனத்திலேயே ஒட்டிக் கொள்வது நல்லது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இந்தியாவிலிருந்து வரும் ஒரு சொட்டை மண்டையன் தனது வேலையைப் பறித்துக் கொள்வானோ என்று பயப்படும் போது சிக்குகிறவனை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கும்ம முயற்சிக்கிறார்கள். 

பெங்களூரில் அப்படியில்லை. மான்யாத்தா டெக் பார்க்கில் வேலை இல்லையென்றால் எலெக்டரானிக் சிட்டி அங்கேயும் இல்லையென்றால் ஒயிட் ஃபீல்டு. ஒரே சட்டிக்குள்ளேயே குதிரையை விரட்டி விரட்டி ஓட்டலாம். இப்படி எல்லா நிறுவனங்களையும் ஒரே ஊரிலேயே குவிக்க விட்டதுதான் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் தவறு கூட. தொண்ணூறுகளில் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டிற்குள் திறந்து விட்ட போது ஒரே இடத்தில் கூட விடாமல் வெவ்வேறு ஊர்களுக்கு பரப்பியிருந்தால் சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும். கோபிக்காரன் கோயமுத்தூரிலும் தேனிக்காரன் மதுரையிலும் வேலையை வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டியிருக்கலாம். முந்நூறு ரூபாய்க்கு விற்ற சதுர அடி நிலம் ஆறாயிரம் ரூபாயைத் தொட்டிருக்காது. பெருநகரங்களில் வாழ வழியில்லாதவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். பொருளாதாரம் பரவலாக்கப்பட்டிருக்கும். கிழவன் பேச்சு கிண்ணாரக்காரனுக்கு கேட்குமா? ஸ்மார்ட் சிட்டி, சில்க் ஸ்மிதா சிட்டியெல்லாம் வந்த பிறகு பார்க்கலாம்.

ஊருக்கு வந்த பிறகு அலைபேசியில் அழைத்து ‘ஹே மணி...ஹவ் ஆர் யூ மேன்?’ என்றான். அவன் என்னை மேன் என்று அழைப்பதே நக்கல்தான். அவனுக்கு நான் பொடியன். சுண்டைக்காயன். ‘அப்படியேதான் இருக்கேன்’ என்றேன். கடுப்பாகிவிட்டான். கியரை மாற்றி ‘அந்த வேலை என்னாச்சு?’ ‘இந்த வேலை என்னாச்சு?’ என்று டார்ச்சரித்தான். எனக்கு உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. மணி பத்தரை ஆகியிருந்தது. அதற்கு மேலும் வேலை செய்ய வேண்டும் என்றான். சீமானின் பிரபல வார்த்தை ஒன்று நாக்கு வரை வந்துவிட்டது. அந்தளவுக்கு தைரியமிருந்தால் அவனை அங்கேயே மொத்தியிருப்பேனே. ‘சரிங்க ஆப்பிசர்’ என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். எனக்கே படு கேவலமாகத் தெரிந்தது.

இப்பொழுதெல்லாம் ‘அமெரிக்காவில் என்ன கத்துக்கிட்ட?’ என்று யாராவது என்னிடம் கேட்டால் ‘சில மனிதர்களை நம்மால் எந்தவிதத்திலும் சமாளிக்க முடியாது என்று கற்றிருக்கிறேன்’ என்பதுதான் பதிலாக வருகிறது. பொரி உருண்டை அந்த மாதிரியான மனிதன்.

6 எதிர் சப்தங்கள்:

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Unknown said...

Ya true.. Not able to manage people in onsite..:-)

Unknown said...

Mani, log these extra hours to your timesheet. It doesn't matter if you get paid or not, but later you can show them that worked these many extra hours.

Jaikumar said...

Neenga thana avan photova "டென்வர் பொரி உருண்டை" tag pannunathu?

Mugilan said...

Indians at Onsite are very dangerous :-)

Unknown said...

உணவுப் பழக்கங்கள் ஊருக்கு ஊர் மாறும் போது, வேறு மாநிலம் போகும்போது கேட்கவே வேண்டாம். சாம்பார், ரசம் போன்றவற்றில் (பெரும்பாலும்) வெல்லம் அல்லது சர்க்கரை சேர்ப்பது கர்நாடகாவில் வழக்கம். இதை கிண்டல் செய்வது முறையில்லை. தமிழ்நாட்டைத் தவிர கேரளாவிலோ, கர்நாடகாவிலோ தீபாவளி அவ்வளவு முக்கியமான பண்டிகை கிடையாது. கேரளாவுக்கு ஓணம்/கர்நாடகாவில் தசரா. எனவே கடந்த புதன்/வியாழன் அமாவாசை/லட்சுமி பூஜைதான் தீபாவளி.