Nov 30, 2015

குடித்தால் மட்டும்?

ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. தனியாக ஊருக்குச் செல்லும் போதெல்லாம் ஒரே பேருந்திலேயே பயணிக்காமல் பேருந்துகள் மாறி மாறிச் செல்வது வழக்கம். அதுவும் கண்ட கண்ட ஊர்களைச் சுற்றிச் செல்லும் பேருந்தாகத்தான்  தேடுவேன். சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோட்டுக்கு ஒன்றரை மணி நேரப் பயணம் என்றால் திருச்செங்கோடு வழியாகச் சென்றால் அரை மணி நேரம் வரைக்கும் கூடுதலாகப் பிடிக்கும் என்றாலும் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான். ஓசூர் வரைக்கும் ஒரு பேருந்து. அங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு ஒன்று. அங்கிருந்து தர்மபுரி. தர்மபுரியிலிருந்து சேலம்.

சேலத்தில் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. மழை பெய்யும் போது தனியார் பேருந்து ஏதாவது ஒன்றில் ஏறிக் கொள்வதுதான் உசிதம். முக்கால்வாசி அரசுப் பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுகிறது. மேலே இருந்து ஒழுகினால் கூட தலையில் துண்டை போட்டுக் கொள்ளலாம். கீழே இருந்து கூட தண்ணீர்  பீய்ச்சி அடிக்கிறது. சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீர் மீது சக்கரம் ஏறினால் தெறிக்கும் தண்ணீரானது பேருந்தின் அடிப்பாகத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியாக மேலே வருகிறது. நொட்டை நொள்ளை சொன்னால் ‘எங்கள் ஆட்சி பொன்னான ஆட்சி’ என்பார்கள். எப்படியோ தொலையட்டும்.

அரசுப் பேருந்துதான் நின்றிருந்தது. வேறு வழியில்லை. ஏறிக் கொண்டேன். மூன்று பேர் அமரும் இருக்கையில் ஜன்னலோரமாக ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஐம்பதைத் தாண்டியிருக்கக் கூடும். அனுமதி கேட்டுவிட்டு இருக்கையின் மறு ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். சேலம் பேருந்து நிலையத்தைத் தாண்டியவுடன் தனது செல்போனைக் கொடுத்து ‘வீரமணின்னு இருக்கும்..ஃபோன் செஞ்சு கொடுங்க’  என்றார். மறுமுனையில் யாரென்று தெரியவில்லை. இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அழுதார். முகத்தைப் பார்த்தேன். அவருக்கு சங்கடமாக இருந்திருக்கக் கூடும். ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டார். இணைப்பைத் துண்டித்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தார். அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

‘ஈரோட்டுக்கு எப்பவுமே முப்பது ரூபாதான் டிக்கெட் போடுவாங்களா?’ என்றேன். பதில் தெரிந்த கேள்விதான். ஆனாலும் அவரது மெளனத்தை உடைப்பதற்கு ஏதேனும் அஸ்திரம் தேவைப்பட்டது. 

‘நான் ஊருக்கு புதுசுங்க’ என்றார். பேச்சை முடித்துக் கொள்ள விரும்புகிறார் போலிருந்தது. எதுவும் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவராகவே ‘எங்க இருந்து வர்றீங்க?’ என்றார்.

‘பெங்களூர்ல இருந்து...நீங்க?’

‘சிதம்பரம்’

‘உங்க ஊர்ல மழையாங்க?’

‘இல்லை...மழையெல்லாம் இல்ல’

‘ஆனா கடலூர்ல மழைன்னு போட்டிருந்தாங்க’.

அவர் கடலூர் இல்லை. துல்லியமாகச் சொன்னால் சிதம்பரமும் இல்லை. பக்கத்தில் கொள்ளிடம். ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா என்றேன். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அழுதது மனதுக்குள் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஐம்பது வயதுப் பெண்மணி தனிமையில் அழுவது கொடுமை. பார்த்துக் விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதைப் போன்ற பாவம் வேறு எதுவுமில்லை.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னவர் ‘இப்போ ஈரோடு போறீங்களா?’ என்றவுடன் உடைந்து போய்விட்டார். அப்படி எந்தத் திட்டமும் அவரிடமில்லை. கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்.

அவருடைய மூத்த மகன் அவனாகவே திருமணம் செய்து கொண்டான். மனைவியோடு தனிக்குடித்தனம் போய்விட்டான். இந்தப் பெண்மணியிடம் சில ஆடுகளும் மாடுகளும் இருந்திருக்கின்றன. அதுதான் வாழ்வாதாரம். கடந்த வாரம் குடித்துவிட்டு வந்தவன் ஆடு மாடு அனைத்தையும் ஒரு ட்ராக்டரில் ஏற்றிக் கொண்டான். தடுத்த போது எட்டி உதைத்திருக்கிறான். கீழே விழுந்ததில் இன்னமும் இடுப்பில் வலி. ஒரு வாரமாக அழுதிருக்கிறார். கணவன் இல்லை. கேட்க நாதியில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் அவளுடைய கணவன் தனது மாமியார் வந்து போவதை பெரிதாக விரும்புவதில்லை. கிட்டத்தட்ட அநாதையாகிவிட்டார். கையிருப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

‘அப்போ வீரமணி யாரு?’ என்றேன். தங்கையின் மகன். சென்னிமலையில் இருக்கிறாராம். அவருடைய வீட்டுக்குத்தான் செல்கிறார் என்று நினைத்தேன். அதுவுமில்லை.

திருப்பூர் அல்லது ஈரோட்டில் பனியன் கம்பெனிகளில் வேலை கிடைக்கும்’ என்று சொல்லியிருந்தாராம். அதை நம்பி வந்துவிட்டார். ‘எங்கே தங்குவீங்க?’ என்றாலும் பதில் இல்லை. வீரமணிக்கும் அவர் ஈரோடு வருவதெல்லாம் தெரியாது.  வீரமணிக்கு ஃபோன் செய்தவுடன் அழுகை வந்திருக்கிறது. துண்டித்துவிட்டார். காலங்காலமாக வாழ்ந்து வந்த ஊரை விட்டுவிட்டு எங்கே போகிறோம் என்ற திட்டம் கூட இல்லாமல் ஒரு பெண்மணி கிளம்பி வருவதென்றால் எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க வேண்டும்?

‘அவன் ஆடு மாட்டை வித்தது கூட பிரச்சினையில்ல தம்பி...உடம்புல தெம்பு இருக்குது...கஷ்டப்படுவேன்...எட்டி மார் மேல உதைச்சுட்டான்...’ அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. பேருந்தில் நின்று கொண்டிருந்தவர்கள் அவரது முகத்தைப் பார்த்தார்கள். ‘குடிச்சா அப்படி புத்தி கெட்டுப் போயிடுமா?’ என்று கேட்டுவிட்டு கேவினார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. பேருந்து சங்ககிரியை அடைந்திருந்தது. வீரமணி எண்ணைக் கேட்டேன். ‘ஏன் எதற்கு’ என்றார். 

‘உங்களுக்கு ஈரோட்டில் வேலை வாங்கிக்கலாம்..ஆனா எதுக்கும் அவர்கிட்ட தகவல் சொல்லிவிடலாம்’ - இந்த பதிலில் அவருக்கு திருப்தி இல்லை. 

‘கையில் பணம் வெச்சிருக்கீங்களா?’ என்றேன். நானூறு ரூபாய் வைத்திருந்தார். கொஞ்சம் சில்லரையும். இந்தத் தொகையை வைத்துக் ஈரோட்டில் இரண்டு நாட்கள் கூட சமாளிக்க முடியாது. அவருக்கு அது புரியவேயில்லை. ‘இந்த ஊர் ரொம்ப மோசம்’ என்றேன். அவருக்கு பயமூட்ட வேண்டியிருந்தது. கொஞ்சம் இளகினார். வீரமணியின் எண்ணை வாங்கி விவரங்களைச் சொன்னேன். தான் ஈரோடு வந்துவிடுவதாகச் சொன்னார். நாங்கள் இறங்கிய போது அவர் வந்திருக்கவில்லை. அரை மணி நேரம் நின்று கொண்டிருந்தோம். அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்,

பணம் மனிதர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிடுகிறது? பத்து செண்ட் நிலத்துக்காக காலங்காலமாக பேசிக் கொள்ளாத அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். ஒரு பவுன் சங்கிலிக்காக உறவைத் துண்டித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. ஒரு கட்டிடத்துக்காக தெருவில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட அப்பன் - மகன் கதை எங்கள் ஊரில் பிரசித்தம். இரண்டு பேருமே மருத்துவர்கள். பணத்தை நம்மிலிருந்து ஒரு அடி தள்ளி வைத்திருக்கும் வரைக்கும் பிரச்சினையே இல்லை. எப்பொழுது அதை நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதிருந்து நம்மை அடிமையாக்கிவிடும். அதன் பிறகு அதைத் தவிர நம்மால் வேறு எதையும் யோசிக்க முடிவதில்லை. பணம் இன்று வரும் நாளை போகும். எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்துவிட முடியும். ஆனால் மனித உறவுகள் அப்படியில்லை. ஒரு முறை சிதறவிட்டால் அவ்வளவுதான். அதை ஏன் இவ்வளவு முரட்டுதனமாக கையாள்கிறோம்?

அரை மணி நேரம் கழித்து வீரமணி வந்தார். அந்தப் பெண்மணியிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. விடைபெற்றுக் கொள்ள விரும்பினேன். அப்பொழுது அவர் மீண்டும் அழ ஆரம்பித்தார். அவரது மகனை நினைத்திருக்கக் கூடும். சொந்த ஊரை நினைத்திருக்கக் கூடும். கணவனை நினைத்திருக்கக் கூடும். எதுவென்று தெரியவில்லை. ஐநூறு ரூபாயைக் கொடுத்தேன். மறுத்தார். ‘வெச்சுக்குங்க’ என்றேன். வீரமணியும் வேண்டாம் என்றார். ‘ஒரு மகனா நினைச்சுக்குங்க’ என்றேன். அந்தப் பெண்மணி அப்பொழுதும் மறுத்தார். அதற்கு மேல் அவர்களிடம் வற்புறுத்தவில்லை. இருவரும் சென்னிமலை பேருந்தை நோக்கி கிளம்பினார்கள். மழை பெருக்கெடுத்தது. ஓடிச் சென்று கோபி பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்பொழுது முக்கால்வாசி நனைந்திருந்தேன்.

Nov 27, 2015

நவம்பர்

நவம்பர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது.

கடந்த மாதத்தில் ரூ.1,18,360 (ஒரு லட்சத்து பதினெட்டாயிரத்து முந்நூற்று அறுபது ரூபாய்) நன்கொடையாக வந்திருக்கிறது. அறக்கட்டளையிலிருந்து ரூ.82500 (எண்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்) பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.1. நரேந்திரன் என்கிற தேசிய விளையாட்டு வீரர் ட்ரையத்லான் போட்டிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக சைக்கிள் வாங்குவதற்கு உதவியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. (இணைப்பு)

2. விஷ்ணுப்பிரியா என்கிற மாணவிக்கு கல்விக் கட்டணம் பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

3. மாணவி வீரமணியின் கல்லூரி சேர்க்கைக்காக பதினாறாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. 

விஷ்ணுப்பிரியா, வீரமணி பற்றிய விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் பராமரிப்புத் தொகையான இரண்டாயிரம் ரூபாய் வரிசை எண் பத்தில் இருக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வந்து சென்றதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை இரண்டு பள்ளிகள் எடுத்திருக்கிறார்கள்.

அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் தற்பொழுது ரூ.8.32,636 (எட்டு லட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து அறுநூற்று முப்பத்தாறு ரூபாய்) இருக்கிறது. நன்கொடையளித்தவர்களின் பட்டியல் வரிசையாக இருக்கிறது.

கடந்த மாதத்தின் வரவு செலவு விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.

வேறு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் அல்லது சந்தேகம் ஏதுமிருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். பதில்களை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

பணம் கொடுக்கும் யாருமே ஏன் ரசீது வேண்டும் என்று கேட்பதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையின் ரசீதை 80Gயின் கீழாக வரிவிலக்கு பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ரசீது தேவைப்படுபவர்கள் தெரியப்படுத்தவும். கூரியரில் அல்ல்து scan செய்து மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். எனக்கு இதில் சிரமம் எதுவும் இருக்கக் கூடும் என்றெல்லாம் தயங்க வேண்டியதில்லை. செய்கிற வேலையை முழுமையாகச் செய்யலாம்.

நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனப்பூர்வமான நன்றி.

இரு பெண்கள்

வீரமணியின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய பெண். பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண்களும் பனிரெண்டாம் வகுப்பில் 1096 மதிப்பெண்களும் வாங்கியிருந்தார். கள்ளிப்பட்டி பள்ளியின் தலைமையாசியர் சுந்தாராயாள் அழைத்து- ‘கண்ணு நல்லா படிக்கிற பொண்ணு.. பி.எஸ்.ஸி அக்ரி கிடைச்சிருக்கு...வீட்ல படிக்க வைக்க மாட்டேன்னு சொல்லுறாங்க...ஏதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா?’ என்ரார். 

சுந்தாராயாள் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கள்ளிப்பட்டி பள்ளிக்குத் தலைமையாசிரியராகச் சென்றிருந்த போது பள்ளி நாறிக் கிடந்திருக்கிறது. இடுப்புயரக் காம்பவுண்டில் எட்டிக் குதித்து வந்து மது அருந்துவதும் கண்டபடி எழுதி வைப்பதும் சகலத்திற்கும் பிரச்சினை செய்வதுமாக இருந்த ரவுடிப் பள்ளியை ஒற்றையாளாக நின்று கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கள்ளிப்பட்டியில் விசாரித்துப் பார்த்தால் பெருமையாகச் சொல்கிறார்கள். முதல் வேலையாக தடுப்புச் சுவரை உயரப்படுத்தி பூட்டுப் போட்டு ஒரு காவலரை நியமித்து காவல்துறையை உதவிக்கு அழைத்து என நிறையச் செய்திருக்கிறார். இப்பொழுது பள்ளி மிக ஒழுக்கமாக நடைபெறுகிறது. Staff council என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். தவறு என்று தெரிந்தால் மாணவரையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். காதலுக்காக தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணிலிருந்து பெண்கள் கழிவறையின் கதவுகளை உடைத்த மாணவர்கள் வரை சகட்டு மேனிக்கு மிரட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார். இன்னமும் இரண்டு வருடங்களில் ஓய்வு பெறப் போகிறார். அதற்குள் ஏகப்பட்ட மாறுதல்களைக் கொண்டு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

அவர் வீரமணியின் மதிப்பெண் பட்டியல்களை அனுப்பி வைத்திருந்தார். நண்பர் கதிர்வேல் நேரடியாக கள்ளிப்பட்டிக்குச் சென்று விசாரித்தார். மிகச் சிரமப்படும் குடும்பம். அப்பாவியான மாணவி. விவசாயக் கல்லூரியில் ஆன்லைன் வழியாக பணம் கட்டச் சொல்லியிருந்தார்கள். ஆன்லைன் வழியாகப் பணம் கட்ட முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. தலைமையாசிரியரை அழைத்து ‘பணத்தை பள்ளியின் நிதியிலிருந்து கட்டிவிடுங்கள். காசோலையை அனுப்பி வைத்துவிடுகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். கட்டிவிட்டார்கள். காசோலையை அனுப்பி வைத்த பிறகு சேர்க்கைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.


ஒரு சாதாரண விவசாயக் கூலியின் மகள் தனது விவசாயப் படிப்பை படிப்பதற்கான முதல் படியை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சிறு விளக்கு இது.

                                                                               (2)

விஷ்ணுப்பிரியா இன்னொரு மாணவி. சென்னையில் ஒரு கல்லூரியில் இரண்டாமாண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பா தையல் வேலை செய்கிறார். அம்மா வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் இருதய நோயாளி. எழுத்தாளர் சந்திராதான் இந்தப் பெண் குறித்துச் சொல்லியிருந்தார். விசாரித்த பிறகு அவர்களது சிரமம் புரிந்தது. மிக அமைதியாக பேசுகிறார் கல்லூரியில். ஃபீஸ் கட்டமுடியாமல் தேர்வு எழுதுவதற்கு நுழைவுச் சீட்டு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பனிரெண்டாயிரம் கட்ட வேண்டியிருந்தது. காசோலையை அனுப்பிய பிறகு ரசீதுகளை அனுப்பச் சொல்வதற்காக அலைபேசியில் அழைத்த போது அவருடைய அம்மாதான் எடுத்தார். நெகிழ்ந்தவராகப் பேசினார். ‘உடம்பு நல்லா இருக்காங்க?’ என்று கேட்டவுடன் அவருக்கு அழுகை வந்துவிட்டது. மேற்கொண்டு பேச விரும்பவில்லை. ‘உங்க பொண்ணு வந்தவுடன் பேசிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டேன்.

மாலை தேர்வு முடிந்து வந்தபிறகு அவரே அழைத்தார். ரசீதுகளுடன் சேர்த்து ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். உருக்கமான கடிதம் அது. என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை. தொலைபேசியில் அழைத்து ‘எதைப்பத்தியும் கவலைப்படாம நல்லா படிங்க..படிச்சுட்டு என்ன உதவி வேணும்ன்னாலும் சொலுங்க’ என்று சொல்லியிருக்கிறேன். பரிவான சொற்கள் ஆற்றல் மிகுந்தவை என்பது தெரியும். அது மிகப்பெரிய உந்துசக்தியைக் கொடுக்கக் கூடியவை. ‘கண்டிப்பா சார்’ என்றார்.

ஒருவகையில் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

பணம் மிகப்பெரிய மாயவித்தைக்காரன். எளிய மனிதர்களின் கைகளில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டுகிறது. கண்ணீரோடும் பதற்றத்தோடும் அவர்கள் துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம் என்பது கூட பல குடும்பங்களுக்கு மிகப்பெரிய தொகை. அது கிடைக்காமல் படிப்பை நிறுத்துபவர்களும் மருத்துவச் செலவுகளை ஒத்தி வைப்பவர்களும் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் நம்மால் உதவ முடியாது. ஆனால் கண்களுக்குத் தெரிகிற மனிதர்களுக்கு உதவலாம். ஒரு குடிசைக்குள் சிறு அகல்விளக்கை ஏற்றி வைப்பது மாதிரிதான். ஆனால் அந்த அகல்விளக்கு ஒரு குடும்பத்துக்கே ஒளி கொடுக்கக் கூடியது என்பதுதான் நமக்குக் கிடைக்கக் கூடிய சந்தோஷம்.

அனைவருக்கும் நன்றி.

Nov 26, 2015

ஒரே குத்து

பெங்களூர் என்றால் மென்பொருள் பணியாளர்கள், லூயி பிலிப் சட்டை, ஃபோரம் மால், எலெக்ட்ரானிக் சிட்டி, வொய்ட் ஃபீல்ட் கார்கள், இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் மட்டுமில்லை அல்லவா? வீங்கிய நகரத்துக்கு நம் கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் மறுபக்கம் என்று இருக்கிறது. நாம் கண்டுகொள்ளாத சாமானிய மனிதர்களும் இங்கு புரண்டு கொண்டிருக்கிறார்கள். பல அடுக்குகளாலான நகரத்தின் அடியில் கிடக்கும் ஒரு உலகத்தை உருவியெடுத்து புதிய நாவலில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். இதையெல்லாம் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. நுனியைத் தொட்டாலும் கூட போதும். நான்கு பேர் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் சிங்கம் 2, சிங்கம் 3 மாதிரி வரிசையாக அவிழ்த்து அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளில் மேய விட்டுவிடலாம். 

நாவலுக்காக மூன்று தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன. அந்தர்வாகினி, மூன்றாம் நதி, நீர்முனி.

அந்தர்வாகினியும், மூன்றாம் நதியும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம். காவிரியும் பவானியும் இணைகிற இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சங்கமிக்கிற அமுத நதியையும்,  கங்கையும் யமுனையும் சங்கமிக்கிற இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இணைவதாக நம்பப்படுகிற சரஸ்வதி நதியையும் அந்தர்வாகினி என்கிறார்கள். கீழாக ஓடி வருகிற ஆறு. கீழாறு. மூன்றாம் நதி என்பதையும் அதே பொருளில்தான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெருநகரத்தில் சாதாரணமாகக் கண்களுக்குப் புலப்படாத ஒரு வாழ்க்கை என்பது நாவலின் களம் என்பதால் இந்தத் தலைப்புகளில் ஒன்று சரியாக இருக்கும் என்று தோன்றியது. இத்தகைய சமயங்களில் சட்டென்று முடிவுக்கு வர முடிவதில்லை. பத்து அல்லது இருபது பேரிடமாவது கேட்டிருக்கிறேன். மூன்றாம் நதி என்பது சற்று பழக்கப்பட்ட பெயராகத் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள். அந்தர்வாகினி என்பது சமஸ்கிருதப் பெயராக இருக்கிறது என்று வேறு சிலர் சொன்னார்கள். நீர்முனி கவிதைத் தொகுப்புக்கு சரிப்பட்டு வரும் என்றார்கள்.

இந்தப் பக்கம் இருப்பவர்கள் அந்தர்வாகினி வித்தியாசமானதாக இருக்கிறது என்று அபிப்பிராயப்பட்டார்கள். அந்தப்பக்கம் இருப்பவர்கள் நீர்முனி கவித்துவமானதாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். மூன்றாம் நதி நல்ல பெயர் என்று மற்றும் சிலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். 

இது எக்கச்சக்கமாக குழப்பிவிட்டது. எனக்கு மூன்று தலைப்புகளுமே பிடித்திருக்கின்றன என்றாலும் ஒரு தலைப்பு மட்டும் சற்று தூக்கலாகப் பிடித்திருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்தான் ஆனால் எல்லோரும் அதற்கு எதிராக வாக்களித்து சோலியை முடித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. 

பதிப்பாளரிடம் கேட்டால் ‘செம கன்ப்யூஸப்பு’ என்கிறார். 

‘நல்லதுக்கும் கெட்டதுக்கும் நிசப்தம் படிக்கிறவங்ககிட்டயே கேட்டுடலாமா’ என்று அவரிடம் கேட்ட பிறகு இந்த சர்வே.

தளத்தின் வலது பக்கம் ஒரு சர்வே இருக்கிறது. வஞ்சகமில்லாமல் ஒரு குத்து குத்திவிடுங்கள். ஒன்றரை வினாடி கூட ஆகாது. நம்பிக்கையில்லையென்றால் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே குத்துங்கள். ஒன்றரை வினாடிக்கு மேலாக ஆனால் ‘ஏன் ஆனது?’ என்று கேளுங்கள். 

ஒரே வாக்கு! ஒஹோன்னு பெயர்!!

அடித்தளம்

பள்ளிகளின் தலைமையாசிரியர்களைப் பற்றி நேற்று எழுதியிருந்த ஒரு குறிப்புக்கு கடும் எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு தலைமையாசிரியர் அழைத்து ‘பெரும்பாலான தலைமையாசிரியர்கள் சரியாகத்தான் செயல்படுகிறார்கள்’ என்றார். ‘இருக்கலாம் சார்....என்னோட அனுபவம் அப்படி...சில தலைமையாசிரியர்கள்தான் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள்’ என்றேன். ஆசிரியர்கள் விடுவார்களா? அதுவும் தலைமையாசிரியர். ‘அப்படி என்ன உங்க அனுபவம்?’ என்று எதிர்கேள்வி கேட்டார். அலைபேசி வழியாகவே கையை நீட்டி காதைத் திருகிவிடுவார் போலிருந்தது.  

அனுபவங்களை எழுதலாம்தான். ஆனால் வெளிப்படையாக பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமான செயல் என்று கருதுகிறேன். அவரிடம் விளக்கினேன். அவர் ஒத்துக் கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை. விசாரித்துவிட்டு மீண்டும் அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆசிரியர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம். ஆட்டோவில் ஆள் அனுப்பாத வரைக்கும் சரிதான் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு எதுக்கு ஆட்டோ? அவரே பஸ் பிடித்து வந்தால் கூட போதும். சாலையோரமாக வைத்து தனி ஆளாகவே முங்கி எடுத்துவிட்டு போய்விடலாம். தலைகீழாக நின்றாலும் எடை முள் அறுபது கிலோவைத் தாண்டுவதில்லை. இத்தனைக்கும் பர்ஸ், செல்போன், செருப்பு என எல்லாவற்றுடனும் சேர்த்துத்தான் எடைக்கருவி மீது ஏறி நிற்கிறேன். அடுத்த முறை ஐந்து கிலோ எடைக்கல்லை தூக்கிக் கொண்டுதான் ஏறி நிற்க வேண்டும் போலிருக்கிறது.

அது கிடக்கட்டும்.

மனிதனுக்கு பள்ளிகள்தான் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கின்றன. ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோர்கள் கூட அடுத்தபடிதான். பள்ளிகளின் பங்களிப்புதான் மிக முக்கியமானது. மாணவனின் சிறகுகளை விரிக்கச் செய்வதும் பள்ளிதான். உலகின் சாளரங்களைத் திறந்துவிடுவதும் பள்ளிதான். ஒரு கல்லூரி ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். ‘மெட்ரிகுலேஷன் பையன் நல்லா படிப்பான் ஆனா அவன்கிட்ட நம்பி ஒரு காரியத்தை ஒப்படைக்க முடியறதில்லை..ஆனா அரசாங்கப்பள்ளியில் படிச்சுட்டு வர்றவன் அப்படியில்ல’ என்றார். அவர் கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். உதாரணத்தோடு சொன்னார். ‘முப்பது சேர் எடுத்துப் போடுன்னு சொன்னா இருபத்தஞ்சு சேர்தான் இருக்குன்னு வைங்க....மெட்ரிகுலேஷன் பையன் நிச்சயமா நம்மகிட்ட வந்து நிப்பான்..ஆனா கவர்ண்மெண்ட் ஸ்கூல் பையன் இன்னும் அஞ்சு சேரை க்ளாஸ்ரூம்ல இருந்து எடுத்துப் போட்டுட்டு வந்து நம்மகிட்ட சொல்லிட்டுப் போவான்’ என்றார். இது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட விமர்சனம் என்றாலும் அவர் சொன்னது பெரும்பாலான மாணவர்களுக்கு பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன்.

பெருநகரங்களின் தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு ஓரளவு வெளியுலக அறிவு இருக்கிறது. அவர்கள் ஊர் சுற்றுகிறார்கள். தொடர்புகள் கிடைக்கின்றன. ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இயங்கும் தனியார் பள்ளிகளின் மாணவர்களின் நிலைமைதான் பரிதாபம். வெறும் மதிப்பெண்கள் மட்டும்தான் நோக்கம். நான்கு சுவர்களுக்குள் அடைத்து மதிப்பெண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மற்றவற்றில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். காலையில் ஆறு மணிக்கு மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதைப் பார்க்க முடிகிறது. இரவு வெகு நேரம் பள்ளிக் கூடத்திலேயே இழுத்துப் பிடித்து அமர்த்தி வைக்கிறார்கள். சனி, ஞாயிறு கூட அவர்களுக்கானது இல்லை. பள்ளிப் பருவத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சுதந்திரம் என்பது அவசியமானது. களவும் கற்று மற. ஆனால் எல்லாக் களவின் போதும் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். ‘ஒரு லிமிட்டைத் தாண்டினா மாட்டிக்குவோம்’ என்கிற பயம். அந்த பயம் அவனை எல்லை தாண்ட விடாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி சகலத்தையும் முயற்சித்துப் பார்க்கும் ஒரு மாணவன் சுயமாக நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான். குரூர உலகத்தின் கொள்ளிவாய்க்குள் வீசினால் கூட தம் பிடித்துத் தப்பித்துவிடுவான். 

இப்பொழுது அரசுப்பள்ளிகளும் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது கை வைக்க ஆரம்பித்துவிட்டன. பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளின் மதிப்பெண்களுடன் போட்டியிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ‘அந்தப் பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு...ஃபர்ஸ்ட் வருவான்னு எதிர்பார்க்கிறோம்...நல்லா கட்டுரை கூட எழுதுவாங்க...ஆனா போட்டிக்கெல்லாம் அனுப்பிட்டு இருந்தா மார்க் போயிடும்ன்னு நாங்க அனுப்பறதில்லை’ என்று ஒரு தலைமையாசிரியை சொன்னபோது வருத்தமாக இருந்தது. extra curricular activity என்று சொல்லப்படுகிற எந்தவொரு அம்சமும் தொடர்ச்சியின் காரணமாக மட்டுமே மாணவர்களிடம் ஒட்டியிருக்கும். படிப்பைக் காரணம் காட்டி எழுதுவதையும் பேசுவதையும் விளையாடுவதையும் தடை செய்தால் மீண்டும் துளிர்க்கவே துளிர்க்காது. டாக்டராக வேண்டும் பொறியாளராக வேண்டும் என்று மட்டும்தான் யோசிப்பார்களே தவிர தங்களுக்கு ஒரு திறமை இருந்தது என்பதையே மறந்துவிடுவார்கள்.

சிறகுகளைக் கத்தரித்துவிட்டு பறக்கச் சொல்லித் தந்து என்ன பயன்?

பல அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இது பெரிய அழுத்தமாக மாறியிருக்கிறது. நன்றாக மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களை தனியார் பள்ளிகள் ‘நீங்க ஃபீஸே கட்ட வேண்டாம்’ என்று சொல்லிக் கொத்திக் கொண்டு போய்விடுகின்றன. மிச்சமிருக்கும் சுமாராகப் படிக்கும் மாணவர்களை வைத்துக் கொண்டு தனியார் பள்ளிகளோடு போட்டியிட வேண்டிய கட்டாயம் அரசுப்பள்ளிகளுக்கு. மதிப்பெண்கள் முக்கியமானவைதான். ஆனால் அவை மட்டுமே எல்லாவற்றையும் கொண்டு வந்து தருவதில்லை. சுயமாக சிந்திக்கவும், உலகை எதிர்கொள்ளும் திறமைகளையும் வளர்க்கும் பள்ளிகள்தான் நமக்கான தேவை. ஆனால் அப்படியொரு சூழல் இப்போதைக்கு உருவாவதற்கான அறிகுறியே தென்படவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான்.

நான் சொல்ல வந்தது இதுவன்று.


இன்று வர்கீஸ் குரியனின் பிறந்த நாள். இந்தியாவின் பால்வளத்திற்கு காரணமான வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர். வெண்மைப்புரட்சியின் தந்தை. குரியனின் தந்தை கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக பணியாற்றிய போது குரியன் எங்கள் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படித்திருக்கிறார். இந்த வரியை எழுதும் போது எனது சட்டைக்காலர் சற்று தானாக உயர்ந்துவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்து கோபி வந்து பள்ளியைச் சுற்றிப் பார்த்த போது அழுதுவிட்டாராம். அப்பொழுது பள்ளியின் தாளாளராக இருந்த சச்சிதானந்தம் இதைப் பல முறை சொல்லியிருக்கிறார். பள்ளியின் பார்வையாளர்கள் ஏட்டில் குரியன் எழுதியிருந்ததைச் சொல்லியாக வேண்டும்.

‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் படித்த பள்ளியை ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறியிருக்கிறது என்றால் அது இந்தப் பள்ளியில் அமைக்கப்பட்ட வலிமையான அடித்தளத்தினால்தான்’

இந்த இரண்டு வரிகளையும் அவர் அடிமனதிலிருந்து எழுதியிருப்பதாக உணர்கிறேன். இந்த அடித்தளத்தை உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உரியது. அதிகாரிகளின் அழுத்தம் பெற்றோர்களின் அழுத்தம் தனியார் பள்ளிகளின் போட்டி என்று சகலமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் மாணவர்கள் எப்படி வளர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு என்ன மாதிரியான அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் காலகாலத்துக்கும் பள்ளியையும் ஆசிரியர்களின் பெயர்களையும் நினைவில் நிறுத்தியிருப்பார்கள். 

Nov 25, 2015

ஸ்மால் ரவுடி

முடித்தாகிவிட்டது. முதல் நாவல். ஓரிரண்டு வருடங்களாகவே சில களங்களை எடுத்துக் கொண்டு அதை எழுத வேண்டும் இதை எழுத வேண்டும் என்று பினாத்திக் கொண்டிருந்தேன். ஊருக்குள் சிலரிடம் பந்தாவாகச் சொல்லியும் வைத்திருந்தேன். ஆனால் எழுத ஆரம்பித்தால் கிழவன் கோவணம் கட்டுவது போல திசையில்லாமல் இழுத்துக் கொண்டு போகும். இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று ஓரங்கட்டி வைத்துவிட்டு பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வருடம் அப்படியில்லை. ஜீப்பில் ஏறியே தீர வேண்டும் என்ற முஸ்தீபுகள் படு முசுவாக இருந்தன. முதலிலேயே க்ளைமேக்ஸை எழுதியாகிவிட்டது. க்ளைமேக்ஸையே முதல் அத்தியாயமாகவும் முடிவு செய்த பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. முடிவு இதுதான் என்று சொல்லிவிட்டு அடுத்த பத்தொன்பது அத்தியாயங்களை சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதுதான் சவால். ஓகே. இதோடு நிறுத்திக் கொள்கிறேன். சுவாரஸியமா இல்லையா என்பதையெல்லாம் நான் அளக்கக் கூடாது. வாசிக்கிறவர்கள்தான் சொல்ல வேண்டும்.

கடந்த முப்பது வருடங்களில் பெங்களூர் மாநகரம் ஓர் எளிய குடும்பத்தில் நடத்தும் பகடையாட்டம்தான் களம். 

தலைப்பு இன்னமும் முடிவாகவில்லை. மூன்றாம் நதி என்ற ஒரு யோசனை இருக்கிறது. அந்தர்வாகினி என்றொரு தலைப்பும் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கதை நாயகியின் பெயர் பவானி. அதனால் தலைப்பில் நதி இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அது மட்டுமில்லை. பவானியும் காவிரியும் கூடுகிற இடத்தில் மூன்றாவது ஒரு நதி கூடுவதாகச் சொல்வார்கள். நம் கண்ணுக்குத் தெரியாத நதி. பெங்களூரில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒரு வாழ்க்கை இருக்கும் அல்லவா? அதைப் பேசுவதால் அப்படியொரு நினைப்பு. அது தவிர இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்களாக நிசப்தத்தில் எழுதியவைதான் புத்தக வடிவில் வந்திருக்கின்றன. இந்த முறை நாவல். ரவுடிதான். ஜீப்தான். ஏறிவிட வேண்டியதுதான்.

ஒவ்வொரு வருடமும் பத்து புத்தகங்களுக்கான பணத்தை சரவண பாபு அனுப்பி வைத்துவிடுகிறார். ஒரு பிரதி நூறு ரூபாய். ஆக ஆயிரம் ரூபாய் அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பத்து புத்தகங்களை நான் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிடுவார். இந்த முறையும் அதில் மாறுதல் இல்லை. வேறு சில நண்பர்களும் சில புத்தகங்களுக்கான தொகையை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனை புத்தகங்களுக்கான ஸ்பான்ஸர்கள் கிடைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அத்தனை போட்டிகளை நடத்தலாம். யாருமே சிக்கவில்லையென்றால் எனக்கு நானே திட்டப்படி பினாமி பெயரில் நடத்த வேண்டியதுதான்.

மார்கெட்டிங் செய்யாமல் எதுவுமில்லை. அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் செய்வதில் தயக்கமுமில்லை. இங்கு அவனவன் கையூன்றி அவனவன் பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். எழுதியதோடு நம் வேலை முடிந்துவிட்டது என்று கைகழுவிட்டுப் போனால் நம்மை நம்பி புத்தகம் வெளியிடும் பதிப்பகத்தினர்தான் சிக்கிக் கொள்வார்கள். எதை எழுதினாலும் விற்பனை ஆகிவிடும் என்கிற அதுப்பு எல்லாம் என்னை மாதிரியான சுள்ளான்களுக்கு அவசியமேயில்லை. எழுதியதை வெளியில் சொல்ல வேண்டியிருக்கிறது. விற்பதற்கு அதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் அச்சுக்கூலியாவது பதிப்பாளருக்குக் கிடைத்துவிட வேண்டுமல்லவா? அதுவும் யாவரும் பதிப்பகம். கரிகாலனிடம் பேசினால் நான்கைந்து புத்தகங்களைக் கொண்டுவருவதற்கு அறுபது எழுபதாயிரம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். ‘எதுக்குங்க கடன் வாங்கிப் புஸ்தகம் கொண்டு வர்றீங்க?’ என்றால் சிரிப்பதைத் தவிர அவரிடம் பதில் இல்லை. மாதச் சம்பளக்காரர்கள். நஷ்டம் வந்தால் கையில் இருப்பதைப் போட்டுத்தான் கடனைக் கட்டுவார்கள்.

‘அப்படிப் பேசி புத்தகத்தை விற்பனை செய்ய வேண்டுமா? அதற்கு புத்தகமே வெளியிடாமல் இருந்துவிடலாமே?’ என்று தீவிரவாதிகள் யாராவது கேட்கக் கூடும். புத்தகம் என்பது என்னுடைய அடிப்படையான ஆசை. எனது புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிட்டு பேசுகிறார்கள் என்பது உற்சாக டானிக். அது தேவையானதாக இருக்கிறது. போலித்தனமாக நடிக்க வேண்டியதில்லை. ஆசையில்லாத புத்தன் என்று வெளியில் சொல்லிக் கொண்டு ‘என் புத்தகம் நூறு பிரதிகள் கூட விற்கவில்லை’ என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க முடியாது. எழுதலாம். புத்தகமாக்கலாம். அது பற்றி பேசலாம். விற்கலாம். உற்சாகமாக இருக்கலாம். Writing is a fun!

அடுத்தவர்கள் அயற்சியடையாமல் கடுப்பாகாமல் பட்டாசு வெடித்துக் கொண்டேயிருப்பதற்கு ஏதோவொரு சாமி துணையிருக்கட்டும்.

வழக்கம்போலவே, ராயல்டி- அந்தப் பெயரில் கம்மர்க்ட் வாங்குகிற அளவுக்கேனும் ஏதேனும் பைசா வந்தால் அதை ஒய்யல் அமைப்புக்கு கொடுத்துவிடுகிறேன். இந்தப் புத்தகத்தை வைத்து Fund raising ஏதாவது செய்ய முடியுமா என்று மண்டை காய்ந்து கொண்டிருக்கிறது. அப்படிச் செய்ய முடிந்தால் அந்த மொத்தத் தொகையையும் இந்த முறை ஒய்யல் அமைப்புக் கொடுத்துவிடலாம். ஒய்யல் பற்றித் தெரியுமல்லவா? மிக நேர்மையான தன்னார்வ அமைப்பு. கிருஷ்ணகிரி தர்மபுரியின் கிராமப்புறங்களில் சப்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒய்யல் பற்றி இணைப்பில் விவரமிருக்கிறது. ஒய்யலின் அமைப்பாளர் பேசினார். அவர்களுக்கு நிதி திரட்டித் தருவது நல்ல காரியமாக இருக்கும். புத்தகத்தின் வழியாக ஏதாவது திரட்ட முயற்சிப்பதாகச் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கு எந்த வழியில் உதவலாம் என்று சொல்லுங்கள். நிச்சயமாக ஏதாவது செய்யலாம்.

நாவல் நூறு பக்கத்திற்குள் முடிந்துவிட்டது. ஆரம்பிக்கும் போதே அவ்வளவுதான் எழுத வேண்டும் என்கிற யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் எழுதி வேலியில் ஓடுகிற பாம்பை எடுத்துத் தோளில் போட்ட மாதிரி ஆகிவிடக் கூடாது. பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் வாசிக்க ஆரம்பித்தால் கிருஷ்ணகிரியைத் தாண்டுவதற்குள் முடித்துவிட வேண்டும். கோயம்பேட்டில் ஆரம்பித்தால் ஸ்ரீபெரும்புதூர் தாண்டுவதற்குள். அதுதான் ஐடியா. அப்படியே ஆகியிருக்கிறது.

‘அதைச் சாதித்தேன்..இதைச் சாதித்தேன்’ என்று படம் ஓட்டுவதற்கு இது சரியான தருணம் இல்லை. இப்பொழுதுதான் பிள்ளை பிறந்திருக்கிறது. பெயர் கூட வைக்கவில்லை. அதற்குள் நம்மை பெரிய கழட்டிமேனாக நினைத்துக் கொண்டு புளகாங்கிதம் அடைவது போன்ற அழிச்சாட்டியம் வேறு இருக்க முடியாது. அதனால் அடக்கி வாசிக்க வேண்டும் எனக்கு நானே சொல்லிக் கொண்டு.......தாய்மார்களே, பெரியோர்களே, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரே, பவானி சங்கமேஸ்வரரே, இருக்கன்குடி மாரியாத்தாவே...

துளிகள்

இங்கிலாந்தில் சில குடும்பத்தினர் இணைந்து community அமைப்பாகச் செயல்படுகிறார்களாம். ஒவ்வொரு வருடமும் பணம் சேர்த்து ஏதேனும் அமைப்புக்கு உதவுகிறார்கள். இந்த வருடப் பணத்தை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் ஒரு பங்கு- தோராயமாக இருபத்தைந்தாயிரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு வரும் போலிருக்கிறது. நேற்று அழைத்து விவரங்களைக் கேட்டிருந்தார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு காரணமிருக்கிறது. விகடனின் அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்சத்தை சில பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்ற யோசனை இருந்தது. சில பள்ளிகளின் பட்டியலும் தயாராக இருக்கிறது. பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் நாமாகச் சென்று ‘உங்களுக்கு என்ன தேவை’ என்று மட்டும் கேட்கவே கூடாது. அதைப் போன்ற மடத்தனம் எதுவுமேயில்லை. பல தலைமையாசிரியர்களுக்கு நம் கண்களுக்குத் தெரியாத கொம்பு முளைத்திருக்கிறது. மதிக்கவே மாட்டார்கள். மதிக்காவிட்டாலும் தொலைகிறது. குத்தினாலும் குத்திவிடுவார்கள். தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்பில்லாமல் பள்ளிகளுக்கு எதையும் செய்ய முடியாது என்பதால் அந்தத் தலைமையாசிரியருக்குப் பதிலாக புதிதாக யாரேனும் வரட்டும் என்று காத்திருப்பதுதான் உசிதம். 

அதுவே சிறப்பாக இயங்கும் தலைமையாசிரியராக இருப்பின் தாராளமாகச் செய்யலாம். செய்கிற காரியம் மாணவர்களுக்கு பயனுடையதாக அமையும். அப்படியான தலைமையாசிரியர்களைக் கொண்ட பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் சவாலான காரியம். அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்ச ரூபாயை பள்ளிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன். தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளில் தேவைகள்- அத்தியாவசியத் தேவைகள் இருப்பின் - ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். சரியான பள்ளியாக இருப்பின் பரிந்துரை செய்துவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் பயனாளிகளைப் பற்றி விகடன் குழுமத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும். இறுதி முடிவை விகடனும் லாரன்ஸூம்தான் எடுப்பார்கள். 

கொங்கர்பாளையம் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இல்லை. திறந்தவெளியில் வைத்துத்தான் சமையல் செய்கிறார்கள். காற்றடித்தால் மொத்த மண்ணும் சத்துணவுச் சாம்பாருக்குள் வந்து விழுவதாகச் சொன்னார்கள். கூரையுடன் கூடிய தடுப்பு அமைத்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இருபதாயிரம் வரைக்கும் செலவு பிடிக்கும் போல் தெரிகிறது. அந்தப் பள்ளியை அறம் செய விரும்பு பட்டியலில் சேர்த்திருதேன். இப்பொழுது அதில் ஒரு மாற்றம். இங்கிலாந்துக்காரர்கள் கொடுக்கும் பணத்தை மொத்தமாக இந்தப் பள்ளிக்கு கொடுத்துவிடலாம். கூரை அமைத்தது போக மீதப் பணம் இருந்தால் அதையும் அந்தப் பள்ளியின் நூலகத்திற்கு என்று ஒதுக்கிவிடலாம். இந்தப் பள்ளிக்கான நல்ல காரியத்தை இங்கிலாந்துக்காரர்கள் செய்ததாக இருக்கட்டும். யார் செய்தால் என்ன? நல்லது நடந்தால் சரிதான்.

இதைச் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தைச் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. சார்லஸ் மீண்டும் அறுபதாயிரம் அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவ்வப்போது ஐம்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு லட்சம் என்று அனுப்பக் கூடிய மனிதர். பல லட்சங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தையும் சேர்த்து இப்பொழுது அறக்கட்டளையின் கணக்கில் கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் இருக்கிறது.  இன்னமும் இரண்டு பயனாளிகளுக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை பாக்கியிருக்கிறது. ஏற்கனவே விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்திலேயே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் தாமதமாகிவிட்டது. 

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஹெபாட்டிட்டிஸ் சி வைரஸ். வைரஸ் ஈரலை பாதித்திருக்கிறது. பெங்களூரில் மருத்துவர்கள் நாம் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காகச் சென்றிருந்தோம். அப்பா உள்ளே இருந்தார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன். ஸ்கேன் முடித்துவிட்டு அறிக்கை வரும் வரைக்கும் காத்திருந்தோம். அப்பாவின் முகம் வாடியிருந்தது. அறிக்கை வந்தவுடன் கண்ணாடியை சரி செய்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். அறிக்கையை படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா என்னிடம், ‘எல்லாத்துலேயும் பிரச்சினையா?’ என்றார். ‘எதுக்கு கேட்கறீங்க?’ என்றேன். ஸ்கேன் செய்த மருத்துவர் அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறார். ‘உங்களுக்கு எல்லா உறுப்பிலேயும் பிரச்சினை’ என்று. அப்படியே பிரச்சினை இருந்தாலும் எழுபது வயதை நெருங்கும் முதியவரிடம் இப்படியா முகத்தில் அறைவது போலச் சொல்வார்கள். சொல்ல வேண்டும் என விரும்பியிருந்தால் என்னை அழைத்துச் சொல்லியிருக்கலாம். அறிவுகெட்டவர்கள்.

அப்பாவுக்கு பயம் வந்துவிட்டது. தனக்கு வருகிற கூடிய விபரீதக் கனவுகளையெல்லாம் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கும் பயம். எந்திரத்தைப் போலத்தான் உடலும். எந்தப் பாகத்திலும் பிரச்சினையில்லாத வரைக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஏதேனும் சிறு பாகம் குதர்க்கம் செய்தால் கூட மொத்த இயக்கமும் திணறிவிடுகிறது. ஆனால் மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இயந்திரத்தைப் பார்ப்பதைப் போல மனிதர்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் எதற்கு? அதை வருங்காலத்தில் கம்யூட்டர் செய்துவிடக் கூடும். நோய்மை பீடித்திருப்பவர்களுக்கு மருந்துகளைவிடவும் வார்த்தைகள்தான் மிக அவசியம். மருத்துவத்தைவிடவும் மனோதரியத்தை ஊட்டுவதுதான் தேவையாக இருக்கிறது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூட போதும். பெங்களூரில் பெரும்பாலான மருத்துவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடிவதில்லை. ஊருக்கே சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில் பார்த்துவிடலாம் என்று கோயமுத்தூர் அழைத்துச் சென்றிருந்தேன். சிங்காநல்லூரில் வி.ஜி.எம் என்ற மருத்துவமனையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டும் பார்க்கிறார்கள். Gastorentrology. லட்சுமி பிரபா என்ற மருத்துவர் முதலில் பேசினார். பரிசோதனை முடிவுகளை எல்லாம் பார்த்துவிட்டு ‘ஒண்ணுமில்லைங்கப்பா...பார்த்துக்கலாம் விடுங்கப்பா’ என்றார். அப்பாவுக்கு பாதித் தெம்பு திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது. ஈரலில் பிரச்சினை இருக்கிறதுதான். ஆனால் அவரிடம் தைரியமூட்டி பேசி அனுப்பியிருக்கிறார்கள். வயதானவர்களுக்கு அந்தத் தைரியம் அவசியம்.

அப்பாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை, ஆய்வகங்கள், பயணம் என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் அவர்களுக்கு காசோலை அனுப்பவதில் தாமதம். சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பாததற்கும் தொலைபேசி அழைப்புகளின் போது சரியாகப் பேசாததற்கும் இதுதான் காரணம். தவறாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். 

அது இருக்கட்டும்.

கடந்த வாரத்தில் மீனவக் குடும்பத்தை சார்ந்த மாணவன் நரேந்திரனுக்கு நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் சைக்கிள் வாங்கித் தரப்பட்டிருக்கிறது. வறுமையான குடும்பம். என்றாலும் தேசிய அளவிலான ட்ரயத்லான் போட்டியில் ஓட்டத்திலும் நீச்சலிலும் கலக்கியிருக்கிறான். ஆனால் சைக்கிளிங்கில் கோட்டை விட்டுவிட்டான். சரியான பயிற்சி இல்லாததுதான் காரணம் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் அருள்மொழி பேசினார். அருள்மொழியும் நீச்சல் வீராங்கனைதான். நரேந்திரனுக்கு மிதிவண்டி வாங்குவதற்காக ஐம்பதாயிரம் நாம் கொடுக்க மீதத் தொகை பதினைந்தாயிரத்துச் சொச்சத்தை அவர்கள் நண்பர்கள் வழியாக தயார் செய்திருக்கிறார்கள். சைக்கிளின் விலை அறுபத்து ஆறாயிரம் ரூபாய். அவனிடம் இன்னமும் பேசவில்லை. பேசாவிட்டால் என்ன? அவன் ஜெயித்தால் சரி.

Nov 24, 2015

கல்லூரி கசமுசா

ஆனந்த் பொறியியல் கல்லூரி மாணவன். வசதியான குடும்பம்தான். அப்பாவும் அம்மாவும் வெளியூரில் இருக்கிறார்கள். இவனை விடுதியில் சேர்த்திருந்தார்கள். பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் கான்வெண்ட் படிப்பு. அதனால் பெண்களுடன் பழகுவதில் எந்த சங்கோஜமும் இல்லை. முதல் ஆண்டிலேயே நிறைய பெண்களுடன் பேசத் தொடங்கியிருந்தான். அது நிறையப் பேருக்கு பொறுக்கவில்லை. மீன் சிக்கட்டும் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனந்த் தனது லேப்டாப்பை விடுதி அறையிலேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்றிருந்தான். யதார்த்தமாக லேப்டாப்பின் கடவுச் சொல்லையும் அறை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான். அதுதான் வினையாகிப் போய்விட்டது. 

லேப்டாப்பை துழாவியர்களுக்கு ஆனந்தின் அந்தரங்கமான படங்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டு பெண்களுடன் தனித்தனியாகப் படம் எடுத்து அவற்றை அதில் வைத்திருக்கிறான். அந்தப் பெண்கள் ஆனந்தின் வகுப்புத் தோழிகள். அறைத்தோழன் அந்தப் படங்களை தனது செல்போன்னுக்கு மாற்றி அவற்றை வாட்ஸப் வழியாக சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். கதை கந்தலாகிவிட்டது. சுழன்றடித்த அந்தப் படங்கள் கடைசியாக கல்லூரியின் முதல்வரின் செல்போனில் வந்து நின்றிருக்கிறது. படங்களை அனுப்பியவன் பெயர் எதுவும் குறிப்பிடாமல் அனுப்பியிருக்கலாம். ஆனால் ‘இன்னார் கல்லூரியில் இந்த மாணவர்களின் லட்சணத்தைப் பாருங்கள்’ என்று விலாவாரியான தகவல்களுடன் அனுப்பியிருக்கிறான். பொறியியல் கல்லூரி- அதுவும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் பெயர் கெட்டுப் போனால் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று பதறுவது வாடிக்கைதானே? உடனடியாக ஆனந்தையும் மற்ற இரண்டு பெண்களையும் அழைத்து அவர்களோடு சேர்த்து அவர்களது பெற்றோர்களையும் வரவழைத்து மூன்று பேரையும் கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்வதாகவும் அதற்கு காரணம் இதுதான் என்று படங்களையும் காட்டியிருக்கிறார்கள்.

பெற்றவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். படங்களை எடுத்த இவர்களுடன் சேர்த்து அதை வாட்ஸப்பில் அனுப்பியவனுக்கும் சேர்த்து கல்லூரி நிர்வாகத்தினர் தண்டனையளித்திருக்க வேண்டும். ம்ஹூம். அது நடக்கவில்லை. அவனை விட்டுவிட்டார்கள். அவன் இப்பொழுது வேறு யாருடைய லேப்டாப்பை தோண்டியெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை.

இந்த உலகத்திடம் எதையாவது தொடர்ந்து பகிர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் என்ற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். இழவு வீட்டில் கூட செஃல்பி எடுத்து அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். விபத்தில் ஒருவன் அடிபட்டுக் கிடந்தால் அவனது படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு எத்தனை லைக் விழும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் ஒரே பையன் இரண்டு பெண்களுடன் சல்லாபிக்கும் படம் கிடைத்தால் கையும் மனமும் சும்மா இருக்குமா? டிசியைக் கிழித்து தோரணம் கட்டிவிட்டான். 

இது ஒரு மனோவியாதி. 

ஒரு பெண் டாஸ்மாக்கிற்குள் நுழைந்தால் அதை படம் எடுத்து வெளியிடுகிறார்கள். ஒரு மாணவன் குடித்திருந்தால் அதை படமாக்கி சமூக ஊடகங்களில் வைரல் ஆக்குகிறார்கள். யாராவது முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ கிடைத்தால் பரபரப்பாக்குகிறார்கள். ஒரு பெண்ணின் ஆடை விலகிய படங்கள் என்றால் அது இணையத்திலும் செல்போனிலும் பற்றி எரிகிறது. இங்கு யார்தான் தவறைச் செய்யவில்லை? ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தவறு இருக்கத்தான் செய்கிறது. ஒரே வித்தியாசம் நம்முடைய தவறுகள் வீடியோவாக மாற்றப்படவில்லை. அவர்களுடைய தவறுகள் வீடியோக்களாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். அப்படி யாராவது சிக்கிக் கொள்ளும் போது அவற்றை தெரிந்த எண்களுக்கு எல்லாம் சகட்டுமேனிக்கு அனுப்பி வைத்து புளகாங்கிதம் அடைவதைப் போன்ற சிறுமைத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இத்தகைய செயல்களைச் செய்யும் போது அந்த வீடியோவில் இருப்பவரின் குடும்பம் படப் போகும் வேதனையை ஒரு வினாடி யோசித்துப் பார்த்தாலும் கூட அடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்க நமக்கு மனம் வராது. ஒரு பெண் குடித்திருப்பதாக ஒரு வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்கள். அந்தப் பெண்ணின் குழந்தைகள் பார்த்தால் காலகாலத்துக்கும் மறக்கமாட்டார்கள். ஒரு மாணவன் தன்னுடைய காதலியுடன் காதல் மொழி பேசுவது பதிவு செய்யப்பட்டு அவை பரப்பட்டிருந்தன. இரண்டு பேரின் பெயர், ஊர் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் அந்த சம்பாஷணையில் இடம் பெற்றிருக்கின்றன. பெற்றவர்கள் அந்த ஆடியோவைக் கேட்க நேரும் போது எவ்வளவு துடித்துப் போவார்கள்?

சில வருடங்களுக்கு முன்பாக பிரிட்டிஷ் இளவரசி டயானா தனது காதலனுடன் இருக்கும் படத்தை எடுப்பதற்காக சிலர் துரத்திய போதுதான் விபத்து நடந்து சின்னாபின்னமாகிக் போனார். இந்தச் சம்பவம் இருபது வருடங்கள் ஆகப் போகிறது. அப்பொழுதெல்லாம் செலிபிரிட்டிகளுக்கு மட்டும்தான் இந்தப் பிரச்சினை இருந்தது. யாராவது கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இப்பொழுது அப்படியில்லை. சாதாரண மனிதனைச் சுற்றிலும் கூட எப்பொழுதும் நூற்றுக்கணக்கான  கண்கள் விழித்திருந்து கண்காணித்தபடியே இருக்கின்றன என்பதுதான் சூழலாக இருக்கிறது. எந்த இடத்தில் பிசகினாலும் கூட நாறடித்துவிடுவார்கள். தனிமை, அந்தரங்கம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. 

எட்டு மெகாபிக்சல் கேமிராவுடன் கூடிய செல்போன் நான்காயிரம் ரூபாய்க்குக் கூட கிடைக்கிறது. யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடிகிறது. யார் பேசுவதை வேண்டுமானாலும் ஒலிப்பதிவு செய்ய முடிகிறது. பேருந்துகளிலும் ரயில்களிலும் கோவில்களிலும் சர்வசாதாரணமாக அடுத்தவர்களின் அசைவுகளை பதிவு செய்கிறார்கள். அதை மனம் போன போக்கில் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள். சாதாரண மனிதனுக்கென்று இருந்த இயல்பான வாழ்க்கையை அடித்து புரட்டிப் போட்டிருக்கிறது இந்த செல்போனும் தொழில்நுட்பமும். 

ஆனந்தும் அந்த இரண்டு பெண்களும் செய்தததைச் சரி என்று வாதிடவில்லை. தவறுதான். ஆனால் தவறு அவர்கள் பக்கம் மட்டுமில்லை. செல்போனில் படம் எடுப்பதற்கு முன்பாக அந்தப் பெண்கள் ஒரு விநாடி யோசித்திருக்கலாம். அதை லேப்டாப்பில் சேகரித்து வைப்பதற்கு முன்பாக ஆனந்த் ஒரு முறை யோசித்திருக்கலாம். அதைப் பகிர்வதற்கு முன்பாக அறைத்தோழன் யோசித்திருக்கலாம். எல்லாவற்றிலும் அவசரம். ஆனந்துக்கு பிரச்சினையில்லை. பெரிய இடம். ‘இதெல்லாம் வயசுக் கோளாறு’ என்று அழைத்துச் சென்றுவிட்டார்கள். மற்றொரு பெண்ணுக்கும் கூட பிரச்சினையில்லை. அவள் என்.ஆர்.ஐ. அப்பா துபாயில் இருக்கிறார். இந்தக் கல்லூரி இல்லையென்றால் ஒரு பெரிய நோட்டாகக் கொடுத்து இன்னொரு கல்லூரியில் இடம் வாங்கிவிடுவார்கள். பிரச்சினையெல்லாம் இன்னொரு பெண்ணுக்குத்தான். அவளுடைய அப்பா அருகில் இருக்கும் ஊரில் ஒரு விவசாயி. நடுத்தரக் குடும்பம். மகளின் விவகாரம் ஊர் முழுக்கவும் பரவிவிட்டது. சிலர் துக்கம் விசாரிக்கிறார்கள். பலர் கமுக்கமாக சிரிக்கிறார்கள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. நெல்லுக்கு அடிப்பதற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு கதையை முடித்துக் கொண்டார். அப்பனின் பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்தபடி ‘எல்லாம் உன்னாலதான்’ என்று யாரோ அழுதிருக்கிறார்கள். நான்கு அடி கயிற்றில் தனது கதையையும் முடித்துக் கொண்டாள் அந்தப் பெண். அம்மா மட்டும் அநாதையாகி நிற்கிறார்.

‘நீதான் குற்றவாளி’ என்று யாரையுமே உறுதியாகச் சொல்ல முடியாத சம்பவங்களின் கோர்வை இது. ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. விவகாரம் வெளியில் வந்தவுடன் கல்லூரி நிர்வாகத்தினராவது யோசனை செய்து முடிவு எடுத்திருக்கலாம். பெற்றவர்களை அழைத்து முகத்தில் அறைந்தாற் போல சொல்லாமல் விட்டிருக்கலாம். ஒவ்வொன்றும் சரிபடுத்தவே முடியாத தவறுகளாகிப் போயின. irreversible mistakes. 

(எந்தக் கல்லூரி என்று சிலருக்குத் தெரிந்திருக்கக் கூடும். குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)

Nov 20, 2015

ஜெயலலிதா

ஊர்ப்பக்கத்தில் ஒரு கிராமப்புற தொடக்கப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ‘பள்ளிக்கு கட்டிடங்களே இல்லை...ஏதாவது உதவ முடியுமா?’ என்றார்கள். விசாரித்த வரையில் அந்தப் பள்ளிக்கு மட்டும் மத்திய அரசின் நிதி ஒரு கோடியே இருபது லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொகை இருந்தால் சொந்தமாக இடம் வாங்கி புதிய பள்ளிக்கூடத்தையே கட்டிவிடலாம். பள்ளிக்கும் இடம் பிரச்சினை இல்லை- ஏக்கர் கணக்கில் சொந்த இடம் இருக்கிறது. கட்டிடங்கள் மட்டும்தான் தேவை. சர்க்கரையை வைத்துக் கொண்டு இலுப்பைப் பூவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் ஒதுக்கப்பட்ட நிதி இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. பணமாகத் தர மாட்டார்கள். மாநில பொதுப்பணித்துறைதான் கட்டிட வேலைகளை முடித்துத் தர வேண்டும் என்பதால் மாநில அரசுதான் இதை முன்னெடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது. இதுவரை கிட்டத்தட்ட நான்காயிரத்து நானூறு கோடி தமிழக பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த ஆனந்தவிகடனின் கட்டுரையை வாசித்த போதுதான் திக்கென்றிருந்தது. புரட்சித்தலைவியை மந்திரி தந்திரி தொடரில் நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

கட்டுரை வந்த காரணத்தினால் இந்த வார ஆனந்தவிகடனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அள்ளியெடுத்துச் சென்று விட்டார்களாம். விகடனை எரித்துவிட்டால் எல்லாவற்றையும் நம்புகிறார்கள் போலிருக்கிறது. இன்னொருபக்கம் இணையத்தில் இயங்கும் அதிமுக விசுவாசிகள் விகடன் குழுமத்தை திமுக வாங்கிவிட்டதாகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பேச முடியுமே தவிர கட்டுரையின் எந்தத் தகவலையும் அவர்களால் மறுக்க முடியாது. வரிக்கு வரி நிதர்சனத்தைத்தான் எழுதியிருக்கிறார்கள். மேலே சொன்ன பள்ளி உதாரணம் என்பது சாம்பிள்தான். தமிழகத்தின் எல்லாவிதமான அவலங்களுக்கும் செயல்படாத அம்மாவின் ஆட்சி காரணமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கட்டுரையை சவுக்கு தளத்தில் வலையேற்றியிருக்கிறார்கள்.

திருப்பூரில் விசாரித்தால் மின்வெட்டினால் முடங்கிப் போன நெசவுத் தொழில் இன்னமும் எழவில்லை என்கிறார்கள். தொழில் முடக்கத்துக்கு பஞ்சு விலை ஏற்றத்திலிருந்து எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் மின்வெட்டு மிகப்பெரிய காரணம். முதலமைச்சர் அறிவித்தபடி தமிழகம் மின்மிகை மாநிலமாகிவிட்டதா? இன்னமும் கடனுக்குத்தான் தனியாரிடம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் ப்யூன் வேலையைக் கூட லட்சக்கணக்கில் விலை பேசி விற்கிறார்கள். அரசு அலுவலகத்தில் கார் டிரைவர் வேலைக்குச் செல்லவதாக இருந்தால் கூட ஐந்து லட்ச ரூபாயைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. இலவசம் என்று அள்ளி வழங்கிய கிரைண்டர்களும் மிக்ஸிகளும் எத்தனை பேர் வீடுகளில் இன்னமும் பழுதில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன? ஆரம்பத்தில் வாங்கியவர்கள் பாக்கியசாலிகள். பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. ஆடுகளும் மாடுகளும் எத்தனை பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன? எல்லாமே புதுப் பொண்ணு கதைதான். அறிவித்தார்கள். விழா நடத்தினார்கள். கொடுத்தார்கள். கைவிட்டார்கள்.

எந்தக் குறையைச் சொன்னாலும் கடந்த திமுக ஆட்சியின் நீட்சி என்கிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பல்லவியைப் பாடலாம் அல்லது மூன்றாண்டுகளுக்குக் கூட பாடலாம். நான்கரை ஆண்டு முடிந்த பிறகும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எதற்காக ஆட்சிக்கு வந்தீர்கள் என்று மக்கள் கேட்பார்களா இல்லையா? ஆட்சி முடியும் தருணத்தில் வெள்ளம் வந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கடந்த ஆட்சியின் குறைகள்தான் இது’ என்றால் கடந்த நான்கரை ஆண்டுகளாக குறைகளை நிவர்த்திக்காமல் நீங்கள் வசூல் மட்டும்தான் செய்தீர்களா என்று கேட்கத் தோன்றுமா இல்லையா?

எங்கள் ஊரில் ‘கோபி தொகுதிக்கு எழுநூற்று ஐம்பது கோடி வாரி வழங்கிய அம்மாவுக்கு கோட்டானு கோட்டி நன்றிகள்’ என்று குறைந்தது பத்து கோடி ரூபாய்க்காவது பேனர் வைத்திருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் புன்னகைத்து அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் கருணைத் தாய். அரசு மருத்துவமனை அப்படியேதான் இருக்கிறது. அரசுப்பள்ளிகளும் அப்படியேதான் இருக்கின்றன. சாலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கும் மொத்தத் தொகையும் வந்து சேர்ந்துவிட்டதா? இருநூறு கோடி ரூபாய் வந்திருந்தாலும் கூட ஊர் ஜொலி ஜொலித்திருக்கும். வெறும் அறிவிப்புகளும் காணொளித் திறப்புகள் மட்டும்தான் இத்தனை ஆண்டுகாலத்தில் நடந்திருக்கின்றன.

அவதூறு வழக்குகளும் கைதுகளும்தான் அரசாங்கத்தின் செயல்பாடு. மிரட்டி மிரட்டியே நாட்களை நகர்த்திவிட்டார்கள்.  மற்றவர்களையும் பயப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களும் பயந்துதான் கிடந்தார்கள். முதலமைச்சர் வேண்டாம்- எத்தனை அமைச்சர்கள் தைரியமாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்கள்? தங்களது துறையின் செயல்பாடுகளை வெளிப்படையாக பேசுவதற்கு எது தடையாக இருந்தது? எதைப் பேசுவதற்கும் பயந்து நடங்கினார்கள். அப்புறம் எதற்கு இத்தனை அமைச்சர்கள்?

முடங்கிக் கிடந்த அரசாங்கத்தையும் டாஸ்மாக்கில் தத்தளித்த தமிழகத்தையும் விகடன் ஒரு ஸ்நாப் ஷாட் அடித்திருக்கிறது.

 மனசாட்சியே இல்லாமல் பல நூறு கோடி ரூபாயை இலக்கு வைத்து ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.  தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாதம் கூட இல்லை. மந்தத் தன்மை துளி கூட மாறவில்லை. எல்லாவற்றையும் பணம் சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது. இவற்றையெல்லாம்தான் விகடன் கட்டுரை புள்ளிவிவரங்ளோடு விளாசியிருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையான இரண்டரை லட்சம் கோடி ரூபாயில் ஆரம்பித்து பந்தாடப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை கோகோ கோலாவுக்கு முகவராகச் செயல்பட்ட அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வரை அத்தனை விவரங்களையும் சேகரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்காக விகடனைப் பாராட்டியே தீர வேண்டும். தீவிரமான உழைப்பினால் மட்டுமே இது சாத்தியம். 

விகடனுக்கு வாழ்த்துக்கள். 

Nov 19, 2015

ஒரு கை

தினேஷ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஊட்டி தேயிலைத் தொழிலாளரின் மகன். அம்மாவும் அப்பாவும் எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள். முதுகெலும்பின் அதீத வளர்ச்சி காரணமாக கூன் விழத் தொடங்கியது. அவன் மெல்ல மெல்ல குறுகிக் கொண்டே போக வளர்ந்த எலும்பு உள்ளுறுப்புகளையெல்லாம் நசுக்கியிருக்கிறது. வலி அதிகரித்துக் கொண்டேயிருக்கவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். பெங்களூர் நாராயண ஹிருதயாலையாவில் அனுமதித்திருந்தார்கள். மருத்துவமனையிலேயே அறை எடுத்துத் தங்குவதெல்லாம் சாத்தியமில்லாத காரியம். ஏகப்பட்ட செலவாகிவிடும். வெளியில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்கள். சந்தித்து ஐம்பதாயிரம் ரூபாய் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்துவிட்டு வந்தோம். அறுவை சிகிச்சை முடிந்து ஊருக்குச் சென்றிருந்தார்கள்.


விதி வலியது. சில நாட்களில் வாந்தி எடுத்திருக்கிறான். பெங்களூர் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சமிக்ஞைகளைக் கேட்ட மருத்துவர்கள் உள்ளூரிலேயே மருத்துவரிடம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். ஓரிரண்டு நாட்களில் வாந்தி அதிகரித்திருக்கிறது. அதுவரை நடந்து கொண்டிருந்தவன் கால்கள் வீக்கம் அடைய நடக்க முடியாமல் சுருண்டுவிட்டான். தினேஷின் அம்மா அலைபேசியில் அழைத்து கதறினார். ‘நடந்து கொண்டிருந்த பையனால் இப்பொழுது நடக்கக் கூட முடியலைங்கண்ணா’ என்றார். அவர் என்னை விட வயதில் மூத்தவராகத்தான் இருக்கக் கூடும். அண்ணா என்றுதான் அழைப்பார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நாரயண ஹிருதயாலயாவில் விசாரித்த போது மீண்டும் அழைத்து வரச் சொன்னார்கள். செலவுக்கு அவர்களிடம் வழியில்லை. தயங்கினார்கள். இது போன்ற சூழல்களில் இவர்களைப் போன்ற மனிதர்களுக்கு உதவுவதுதான் அறக்கட்டளையின் நோக்கம். ஆனால் அந்தச் சமயம் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. 

அறக்கட்டளையின் காசோலையில் கையொப்பமிட்டு தம்பியிடம் கொடுத்துச் சென்றிருந்தேன். அவர்களை அழைத்து அமெரிக்கா செல்வதாகவும் தேவைப்படும் போது தம்பியைத் தொடர்பு கொள்ளச் சொல்லி அவனது எண்ணைக் கொடுத்துச் சென்றிருந்தேன். அங்கிருந்தபடியே மருத்துவமனையில் விசாரித்த போது தினேஷின் அம்மா அப்பாவிடம் இருக்கும் தொகையைவிடக் கூடுதலாக ஐம்பதாயிரம் தேவைப்படும் என்று சொல்லியிருந்தார்கள். தம்பியிடம் தகவல் சொல்லியிருந்தேன். தொகையை எழுதி அவர்களிடம் சேர்த்திருந்தான். இரண்டாவது ஐம்பதாயிரம் இது.

தினேஷூக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையும் முடிந்துவிட்டது. அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. மலைச்சொல் அமைப்பின் பால நந்தகுமார்தான் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அவரைக் கேட்டால் தினேஷ் எப்படி இருக்கிறான் விசாரித்துச் சொல்லிவிடுவார். ஆனால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தொடர்பு கொள்ளவில்லை. நலம் பெற்றிருந்தால் அவர்களுக்கு நம்மிடம் பேசுவதற்கு எந்தச் சங்கடமும் இருக்காது. ஒருவேளை நிலைமை மோசமாகியிருந்தால் கிளறிவிடுவது போல ஆகிவிடக் கூடும். ஆனால் தினேஷ் பற்றிய ஞாபகம் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருந்தது.

இன்று தினேஷின் அம்மா அழைத்திருந்தார். ‘தினேஷோட அம்மா பேசறங்கண்ணா’ என்றவரால் பேசவே முடியவில்லை. தழுதழுத்தார். ‘தினேஷ் எப்படி இருக்கிறான்’ என்றேன். நன்றாக இருக்கிறான் என்று அழுது கொண்டே சொன்னார். அது போதும். பிசியோதெரபி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது அதைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். பரிசோதனைக்காக மீண்டும் பெங்களூர் வர வேண்டியிருக்கிறது. நிறைய முன்னேற்றம் தெரிகிறதாம். அவனை முழுமையாக நடக்க வைத்துவிடுவது என்கிற வைராக்கியத்தில் இருப்பதாகச் சொன்னார். ஏழை அம்மாவின் வைராக்கியம் அது. இருக்கிற குன்றிமணித் தங்கத்தையும் விற்று சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் கையிருப்பு என்று எதுவுமே இல்லை.

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது...நடந்துடுவான்’ என்றேன். அதற்கு மேல் அழத் தொடங்கிவிட்டார்.

சந்தோஷத்தின் காரணமான அழுகைதான். அவருடைய சந்தோஷம் நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ‘ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா’ என்றார். நன்றிக்கு உரித்தானவர்கள் உலகம் முழுக்கவும் இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். ‘அத்தனை பேருக்கும் நன்றி சொன்னதாகச் சொல்லிவிடுங்கள்’ என்றார். நிச்சயம் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

‘உங்க ஒவ்வொருத்தருக்கும் தினேஷ் கடமைப்பட்டிருக்கிறான்’ என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘பெங்களூர் வரும் போது சொல்லுங்க’ என்று சொல்லித் துண்டித்துவிட்டேன்.

அப்பாவிச் சிறுவன் அவன். அவன் யாருக்கும் கடமைப்பட வேண்டியதில்லை. அவனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் விதியிடமிருந்து மீண்டு வந்தால் அது போதும். மருந்து மாத்திரை ஊசி அறுவை என்று மருந்துவத்தின் கசந்த நெடியில் பால்யத்தைத் தொலைத்துவிட்டு கட்டிலில் கிடக்கிறான். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று தங்களின் எல்லாவிதமான சந்தோஷங்களையும் புதைத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் அவனைப் பெற்றவர்கள். அவர்களுக்கு நாம் உதவியிருக்கிறோம்.

மிகச் சிறிய உதவி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை. உதவியில் சிறு உதவி பெரிய உதவி என்றெல்லாம் எதுவுமில்லை. உதவி என்பதே ஒரு எளிய குடும்பத்தின் பெரும்பாரத்தை இறக்கி வைக்க கை கொடுப்பது மாதிரிதான். இப்பொழுது தினேஷின் குடும்பத்துக்கு ஒரு கையைக் கொடுத்திருக்கிறோம். இறைவன் இன்னொரு கையைக் கொடுத்து தூக்கிவிட்டுவிடுவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எளிய மனிதர்களின் உள்ளத்தில் சிறு புன்னகையை வரவைத்திருக்கும் அத்தனை பேருக்கும் நெகிழ்ச்சியுடனான நன்றி.

Nov 17, 2015

ஸ்டாலினின் நமக்கு நாமே- தோல்விப் படம்

கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிடுவதற்காக முழங்கால் வரைக்கும் ஷூ அணிந்த ஸ்டாலின் சுற்றி வந்த நிழற்படங்கள் ஃபேஸ்புக்கில் காணக் கிடைத்தன. நல்ல விஷயம். இதையெல்லாம் ஜெயலலிதாவாலும் கருணாநிதியாலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் களத்தில் இறங்கியிருக்கிறார் என்றும் ஸ்டாலின் வெகு வேகமாக தமிழக மக்களை நெருங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். நமக்கு நாமே திட்டத்தின் காரணமாக உண்டான நம்பிக்கை அது. அது வெறும் நம்பிக்கைதான். அப்படியெல்லாம் எதுவுமில்லை போலிருக்கிறது.

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் பற்றி சில திமுககாரர்களிடம் பேச நேர்ந்தது. சிலாகிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையான திமுகக்காரர்கள் நொந்து கிடக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய புரிதல். தனது பயணத்தின் போது எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை இம்மி பிசகாமல் பின்பற்றியிருக்கிறார். அவர் தங்கியிருந்த வீட்டுக்கு முன்பாக காத்திருந்த கட்சிக்காரர்களைத் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றிருக்கிறார். விசாரித்த வரையிலும் புலம்புகிறார்கள். பங்களாப்புதூர், நால்ரோடு, நஞ்சை புளியம்பட்டி என்று மக்கள் திரண்டிருந்த ஓரிடத்தில் கூட நிற்கவில்லை என்றார்கள். அந்தந்தப் பகுதிகளில் ஆட்களைத் திரட்டியிருந்த பகுதிச் செயலாளர்கள் தலையைக் குனிந்திருக்கிறார்கள்.

எங்கள் ஊரில் காலங்காலமாகவே அதிமுகவின் ஆதிக்கம்தான். வெகு காலமாக கே.ஏ.செங்கோட்டையன்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார். 1991-96 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ‘சாதனைச் செம்மலே வருக’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பார்கள். அவர் வாரம் தவறாமல் சனி ஞாயிறுகளில் தொகுதிக்குள்தான் இருப்பார். அதனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போஸ்டர் ஒட்டி அழிச்சாட்டியம் செய்தார்கள். எழவு வீட்டுக்குச் சென்றாலும் ஐந்நூறு கொடுப்பார். திருமண வீட்டுக்குச் சென்றாலும் ஐந்நூறு கொடுப்பார். நல்ல செல்வாக்கு இருந்தது. 

இந்த முறை வேளாண்மைத்துறை அமைச்சராக பதவியேற்ற போது ‘தமிழகத்தின் வேளாண்மையே’ என்று போஸ்டர் கண்ணில்பட்டது. இப்பொழுது வேளாண்மையும் இல்லை செம்மலும் இல்லை. மொத்தமாகக் காலி செய்துவிட்டார்கள். கடந்த முறை ஊருக்கு சென்று வந்த போது நான்காவது வரிசையில் சிறு எழுத்தில் அவர் பெயர் இருந்தது. இப்பொழுது அதுவுமில்லை. தனது இருபத்தைந்தாவது வயதிலிருந்து உள்ளூரில் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் இப்பொழுது சாமானியன் ஆக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை தேர்தலில் நிற்கக் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள். அவரை ஏன் டம்மியாக்கினார்கள் என்று கேட்டால் ஏதோ பெரிய ‘வேலையைச்’ செய்து மாட்டிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். செய்தித்தாள்களில் வந்ததெல்லாம் உடான்ஸ் காரணங்கள். உண்மையான காரணம் அச்சில் வராத காரணம் என்கிறார்கள். என்னவோ இருக்கட்டும்.

செங்கோட்டையன் நிற்காதபட்சத்தில் திமுகவில் உறுதியான வேட்பாளரை நிறுத்தினால் அதிமுகவின் பாடு திண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படியொரு சூழல் எதுவுமில்லாத மாதிரிதான் தெரிகிறது. கோபிச்செட்டிபாளையம் முத்துமஹால் திருமண மண்டபத்தில் திட்டமிட்டபடி மக்களைச் சந்தித்து பேசிய ஸ்டாலின் பயணியர் மாளிகையில் தங்கியிருக்கிறார். இரண்டு மணிக்கு கோபி நகருக்குள் வருவார் என்று அறிவித்திருக்கிறார்கள். சாலையில் கூட்டம் சேர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி மூன்று மணியாகியிருக்கிறது மூன்று மணி நான்கு மணியாகியிருக்கிறது. கூட்டமில்லாத சாலையில் நடந்து வரும் திட்டத்தை தவிர்த்துவிட்டு காரில் வேகமாக கிளம்பிச் சென்றாராம். இதைக் கேள்விப்பட்ட போது ஆச்சரியமாக இருந்தது. மக்களைச் சந்திப்பது என்பது மிக முக்கியமான திட்டம். சாலைகளில் கூட்டம் இல்லாவிட்டால் என்ன? எவ்வளவோ கடைகள் இருக்கின்றன. வழியில் வீடுகள் இருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் சரஸ்வதி புக் பைண்டிங் கடைக்குள்ளாகவோ, அரசு மருத்துவமனைக்குள்ளாகவோ அல்லது ஈபிஸ் பிஸ்கட் பேக்கரிக்குள்ளோ நுழைந்திருந்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. எந்த அறிவிப்புமில்லாமல் சாமானிய மனிதனைச் சந்தித்து அவனது குறைகளைக் கேட்டிருக்கலாம். கோபி மார்க்கெட்டுக்குள் நுழைந்து வெளியேறியிருக்கலாம். 

‘ஸ்டாலின் எங்கடைக்கு வந்துட்டு போனாரு’ என்று ஒவ்வொருத்தரும் பத்து பேரிடமாவது சொல்லியிருப்பார்கள். அந்தப் பத்துப் பேரும் இன்னொரு பத்து பேரிடமும் பேசியிருப்பார்கள். அப்படியெல்லாம் ஒவ்வொரு தொகுதியிலும் நடந்திருந்தால் தமிழகம் முழுக்கவும் இந்தப் பயணம் உருவாக்கிய தாக்கம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அப்படியேதும் தாக்கம் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை. அதிமுகக்காரர்களிடம் பேசினால் ‘இதையெல்லாம் மக்கள் நம்பவில்லை’ என்கிறார்கள். இணையத்தில் புழங்கும் திமுகக்காரர்கள் தமிழகமே திமுகவின் பக்கம் நிற்பதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். இணையவாசிகள் புலி சூப்பர் ஹிட் என்பார்கள். நாம் இணையத்தின் பக்கமே தலை வைத்துப் படுக்காத சாதாரணத் திமுக தொண்டனிடம் விசாரித்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ளலாம். 

இதையெல்லாம் திமுகவின் மீதான வெறுப்பின் காரணமாகவோ அல்லது வேறொரு கட்சியின் மீதான பிரியத்தின் காரணமாகவோ எழுதியிருக்கிறேன் என்று நினைக்க வேண்டியதில்லை. உண்மையிலேயே ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தைத் தொடங்கிய போது மிகுந்த நம்பிக்கையிருந்தது. தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் போது அவருக்கு விசாலமான புரிதல் உண்டாகும் என்ற எதிர்பார்ப்பிருந்தது. மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட தலைவனாக ஸ்டாலின் உருமாறுவார் என்கிற நினைப்பிருந்தது. நேற்றைக்கு கட்சிக்குள் வந்தவனெல்லாம் சில கோடிகளைக் கொடுத்துவிட்டு தேர்தலில் டிக்கெட் வாங்கிவிடலாம் என்ற கனவில் மிதப்பதற்கு சாவு மணி அடிப்பார் என்ற நப்பாசை இருந்தது. 

அப்படியெல்லாம் எதுவும் நடக்காது போலிருக்கிறது. டீக்கடைக்காரனும், சைக்கிள் கடைக்காரனும் கூட தேர்தலில் நிற்க முடியும் என்ற அண்ணாத்துரையின் திமுகவை மீண்டும் புத்தாக்கம் செய்யக் கூடும் என்ற ஆசை புதைந்து கொண்டுதான் இருக்கிறது. கார்போரேட் நிறுவனமாகச் செயல்பட்டு வரும் திமுக இனியும் கார்போரேட் நிறுவனமாகத்தான் செயல்படும் என்று எல்லாவிதத்திலும் கட்டியம் கூறுகிறார்கள்.

மிகச் சிறந்த வாய்ப்பை ஸ்டாலின் தவற விட்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.


இன்றைக்கு இந்த ஊர் என்பதை மட்டும் திட்டமிட்டுக் கொண்டு எங்கே நிற்க வேண்டும் யாருடன் பேச வேண்டும் எதைப் பற்றி பேச வேண்டும் என்பதையெல்லாம் அந்தந்த ஊரில் அந்தந்த மனிதர்களைப் பொறுத்து முடிவு செய்திருக்க வேண்டும். மக்களை இயல்பாக பேசவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தப் பயணம் அப்படியில்லை. ‘இந்தக் கரும்புக்காட்டில் இன்னாரைச் சந்திக்கிறார் இதைப் பற்றி பேசுகிறார்’ என்று அவருக்கு முன்னால் பயணம் செய்த சபரீசன் குழுவினர் முடிவு செய்ததை அப்படியே செயல்படுத்தியிருக்கிறார். ஒரு நல்ல இயக்குநரின் வேலை நடிகன் நடிக்கிறான் என்பதே தெரியாதபடிக்கு பார்த்துக் கொள்வது. ஒரு நல்ல நடிகனின் வேலை தனது நடிப்பை துருத்தாமல் பார்த்துக் கொள்வது . நமக்கு நாமே படத்தில் இயக்குநரும் தோற்றிருக்கிறார். நடிகரும் தோற்றிருக்கிறார். துரதிர்ஷ்டம்தான்.

எலிக்கு விரித்த வலை

‘ஃபேஸ்புக் எவ்வளவு மாத்தியிருக்கு தெரியுமா? ஒரு நாட்டோட அரசியலையே புரட்டி போட்டு விடுகிறது. மிகப்பெரிய ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. வாட்ஸப்புக்கு மட்டும் என்ன குறைச்சல்? வேலை தருகிறேன் என்று அரபு தேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர் ஒருவர் தான் ஒட்டகம் மேய்ப்பதைப் படம் பிடித்து அனுப்பி அது வைரலாகி அரசாங்கமே தலையிட்டிருக்கிறது. இதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பு சாத்தியமேயில்லை...இப்போ ஜஸ்ட் லைக் தட்’ என்று ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார். அமெரிக்க வாழ் நண்பர். ஒரு மாத காலம் அலுவல் நிமித்தமாக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்துக்கு என்னை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த ஊரின் ரொட்டியும் ஜாமும் வாய்க்கு சலித்திருந்த நேரத்தில் வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்பொழுதுதான் இந்தப் பேச்சு ஓடியது. 

இல்லையென்று மறுக்க முடியுமா? தொழில்நுட்பமும் அதன் நீட்சியான இணையமும், ஸ்மார்ட் ஃபோனும், ஃபேஸ்புக்கும், வாட்ஸப்பும் ஏகப்பட்ட உதவிகளைச் செய்கின்றனதான். வயதான தனது அம்மாவைக் காணவில்லை என்று படத்துடன் செய்தி வெளியிட்ட ஏழாவது நாளில் எங்கிருந்தோ ஒருவர் தனது அம்மாவைப் பற்றிய தகவலைக் கொடுத்துவிட்டதாக புளகாங்கிதத்துடன் நன்றி அறிவிப்பைச் செய்த நண்பரைத் தெரியும். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் குழந்தைக்கு ரத்தம் தேவையென்று சமூக ஊடகத்தளத்தில் கோரிக்கை வைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் வரிசைகட்டி ஆட்கள் காத்திருந்தார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லாம் நன்மைதான். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு அளவு முறை இருக்கிறது அல்லவா? தேன் இனிக்கிறது என்பதற்காக அதையே தண்ணீராகக் குடிக்க முடியுமா?

அந்த அமெரிக்க நண்பரின் மனைவி மனநல மருத்துவர். இதே ஊரில் ஒரு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இரவு உணவு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அரட்டையில் அவரும் கலந்து கொண்டார். அவர் சொன்ன ஒரு கதை அதிர்ச்சி நிறைந்தது. இதே ஊரில் வெகுநாட்களாக இருந்து அமெரிக்கக் குடியுரிமை வாங்கிக் கொண்ட இந்தியர் ஒருவரின் கதை. சத்ய நாராயணன். திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. திருமணம் செய்து கொண்டு வந்த பெண்ணுக்கு அவ்வளவாக படிப்பு இல்லை. வீட்டிலேயே இருந்திருக்கிறாள். தனக்கு பொழுது போவதில்லை என்று புலம்புகிறாள் என்பதற்காக ஒரு கணினியை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதோடு இணையமும் சேர்ந்திருக்கிறது. அதன் பிறகு நிறைய தொடர்புகள் வளர்ந்திருக்கின்றன. கள்ளக்காதல் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நல்லவிதமான நட்புகள்தான். ஆனால் வேறு விதமான பிரச்சினை ஒன்றை உண்டாகியிருக்கிறது.

நாட்கள் நகர நகர தொடர்ந்து இணையத்திலேயே இருக்கத் தொடங்கியிருக்கிறாள். கிட்டத்தட்ட போதை மாதிரிதான். அதிகப்படியான இணையப் பயன்பாடு அவளைக் கட்டிப் போட்டிருக்கிறது. எந்நேரமும் சாட்டிங், வீடியோ பார்த்தல் என்று ஏதோவொரு வகையில் இணையத்திலேயே இருக்க வேண்டும் என்கிற மாதிரியான மனநிலை. வீட்டில் யார் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது அறையை விட்டு வெளியே வருவதில்லை. அவளுண்டு அவளது கணினியுண்டு என சூரியனைக் கூட பார்க்காமல் இப்படியே நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்கவும் இவள் எந்நேரமும் இணையத்திலேயே குடியிருக்கிறாள் என்று சத்யா திட்டியிருக்கிறார். அதற்கும் இணையத்திலேயே தீர்வைத் தேடியிருக்கிறாள். தனது கணவர் வசைபாடுவதாக இணைய வழி நண்பர்கள் யாரிடமெல்லாமோ அறிவுரை கோரவும் யாரோ ஒரு போனாம்போக்கி ‘விவாகரத்து வாங்கிவிடு’ என்று சொன்னதைக் கேட்டுக் கொண்டவள் வழக்கறிஞர்களைத் தேடத் தொடங்யிருக்கிறாள். அந்தத் தேடல் கூட இணையத்திலேயேதான் நடந்திருக்கிறது. இவள் ஒரு பக்கம் வழக்கறிஞரைத் தேடவும், சத்யா ஒரு பக்கம் புலம்பவும் சண்டை நாளுக்கு நாள் அதிகமாகி சத்யாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடைசியில் யாரோ ஒருவர் பரிந்துரை செய்ததன் பேரில் இந்த மருத்துவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இப்பொழுதுதான் சிகிச்சையின் ஆரம்பகட்டம். ஆரம்பித்திருக்கிறார்கள்.‘குழந்தை என்ன ஆச்சு?’ என்றேன். குழந்தையையும் அவள் அதிகமாகக் கண்டு கொள்ளாமல் விடவும் சத்யாவின் பெற்றோர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

தமிழக கிராமத்திலிருந்து விமானம் ஏறிய சாதாரண பெண் தான். குழந்தை, குடும்பம், கணவன் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு எப்படி இவளால் இணையத்தைக் கட்டிக் கொண்டு அழ முடிந்தது என்பது சிக்கலான கேள்வியெல்லாம் இல்லை. இப்பொழுதெல்லாம் ஏகப்பட்ட பேருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவிலிருந்துதான் உதாரணத்தைக் காட்ட வேண்டும் என்பதில்லை. எப்பொழுதும் செல்போனை நோண்டியபடி நமக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவருக்குக் கூட இருக்கலாம். நமக்கே கூட இருக்கலாம். யாருக்குத் தெரியும்? சற்று விவரமானவர்கள் புரிந்து கொண்டு மனநல ஆலோசகர்களை நாடி பிரச்சினையின் வீரியத்தை ஓரளவு குறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இணையத்தைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களுக்கு இணையம் உண்டாக்கும் எதிர்மறையான விளைவுகளை பற்றிய புரிதல் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. ‘இவள் சரியில்லை. அவன் சரியில்லை’ என்று குருட்டுவாக்கில்தான் சண்டைப் போடத் தொடங்குகிறார்கள்.

இணைய உலகம் என்பது மிகப்பெரிய பொறி. நமக்கு விருப்பமான வஸ்து ஒன்றை உள்ளே வைத்திருப்பதாகக் காட்டி நம்மைச் சுற்றி பெரிய வலையைக் கட்டி வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வலை அது. ஃபேஸ்புக், ட்விட்டர் இன்னபிற வலைத்தளங்கள் என்று ஒவ்வொரு அடியாக வைத்து உள்ளே சென்று நமக்கே தெரியாமல் உள்ளே சிக்கிக் கொள்கிறோம். சமூக வலைத்தள நிறுவனங்களில் பெரும்பாலானவை மனநல ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு பிரிவை பணிக்கு வைத்திருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இவர்களுடைய வேலையே மனோவியல் சார்ந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதுதான். தமது தளத்துக்குள் வரும் ஒவ்வொரு மனிதனும் எந்த மாதிரியான தளங்களைத் தேடுகிறான், எந்த மாதிரியான கருத்துக்களை விரும்புகிறான், அவன் பார்க்கும் வீடியோக்கள் எத்தகையவை என்பனவற்றையெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி நாம் எதில் லயித்துப் போவோமோ அதைத் தேடித் தேடியெடுத்து நமக்கு விருந்து வைப்பார்கள். அப்படித்தான் ப்ரோகிராம் எழுதுகிறார்கள். எழுதிய ப்ரோகிராமைத் தொடர்ந்து மாற்றுகிறார்கள்.

ஃபேஸ்புக், கூகிள் போன்ற தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது புதுப் புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. இப்படியான அறிமுகங்களின் வழியாக மணிக்கணக்கில் அந்தத் தளங்களை வெறித்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. தங்களுடைய இணையதளத்துக்குள் ஒரு முறை வந்தவனைத் திரும்பத் திரும்ப வரவழைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அப்படி அவனை இழுத்துக் கட்டிப்போடுவதற்கான சூட்சம வேலைகளைத்தான் இத்தகைய நிறுவனத்தின் மனோவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தனிமனிதன் எதை விரும்புகிறான் என்பது மட்டுமில்லாமல் தமிழகத்தில் அதிகமானவர்களை எது கவர்கிறது, இந்திய அளவில் எதையெல்லாம் மக்கள் விரும்புகிறார்கள் என்று பிராந்திய அளவிலும் மாநில அளவிலும் தேச அளவிலும் வகை வாரியாகப் பிரித்து விவரங்களைக் குவிக்கிறார்கள். ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொண்டு அவனையும் அந்தச் சமூகத்தையும் அதற்கேற்ப குறி வைக்கிறார்கள்.

ஒரு வகையில் இதுவொரு psychological war என்று விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். நமக்கு என்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்து அதன் வழியாக நம்மை சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக்குவதைவிடவும் வேறு என்ன எதிர்மறை விளைவு இருக்கக் கூடும்? அடிமையாக்கப்பட்ட மனிதன் தனது வேலை, குடும்பம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு இதிலேயே தவம் கிடக்கத் தொடங்குகிறான். மாணவர்கள் படிப்பை கோட்டைவிடுகிறார்கள். எதிர்காலத்தை கேள்விக்குறிக்குள்ளாக்குகிறார்கள். நிறுவனங்களின் உற்பத்தித் திறன் குறையத் தொடங்குகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இதை தனிமனிதன் மற்றும் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் மனோவியல் போர் என்கிறார்கள். இனி காலம் இப்படித்தான் இருக்கும். நம்மை அடிமையாக்குவதற்கென ஆயிரக்கணக்கான மனோவியல் வல்லுநர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துத்தான் நாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. ஜெயித்துவிட்டால் தப்பித்துவிடலாம். இல்லையென்றால் அடிமைச் சங்கிலிதான்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடரின் ஒரு கட்டுரை)

Nov 16, 2015

அயோக்கியத்தனமான தீவிரவாதம்

சில நாட்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்தான ஆவணப்படம் ஒன்று இணையத்தில் சிக்கியது. நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ஓடக் கூடிய அந்தப் படம் ஆப்கனில் தாலிபானுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான விரிசலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பதற்றத்துடன் காட்டிக் கொண்டிருந்தது. தாலிபான்கள்தான் இருப்பதிலேயே காட்டுமிராண்டிகள் என்று நினைத்துக் கொண்டிருந்த உலகம் ‘IS is ruthless compare to Taliban' என்று சொல்ல ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதற்கான காரணங்கள் படத்தில் பதிவு செயப்பட்டிருந்தன.

குழந்தைகளிடம் துப்பாக்கியைக் கொடுத்து எதிரிகளை சுடச் சொல்கிறார்கள். சுடுவதற்கு முன்பாக ‘இவன் நம் மதத்துக்கு துரோகம் செய்தான்’ என்று காதில் ஓதுகிறார்கள். துரோகிகளை அழிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தையின் மனதில் பதிக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யாரையெல்லாம் துரோகிகள் என்று அடையாளம் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் அந்தக் குழந்தை வெறியெடுத்துச் சுடுகிறது. பதினான்கு வயதுச் சிறுவனை தற்கொலைப்படையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். ஆறு வயதில் அவனை பெற்றோர்களிடமிருந்து பிரித்து வந்து திரும்பத் திரும்ப இதையே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ‘சாவது பற்றி எனக்கு எந்த பயமுமில்லை’ என்கிறான். ‘எப்பொழுது உத்தரவு வந்தாலும் என்னை சிதைத்துக் கொள்வேன்’ என்கிறான். அவனுக்கு பெற்றவர்கள் பற்றிய எந்த நினைப்புமில்லை. தான் இந்த வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்கிற யோசனையுமில்லை. உத்தரவுக்காகக் காத்திருக்கிறான்.

இந்த ஆவணப்படத்தை பார்த்த போது நடுக்கமாக இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகாலங்களாக நாகரிகத்தை நோக்கி மனித இனம் நகர்ந்து கொண்டிருப்பதாக வரலாறு மற்றும் மனிதவியல் புத்தகங்களில் படித்ததையெல்லாம் வெறும் நாற்பது நிமிடங்களில் அடித்து நொறுக்குவது போலத் தோன்றியது. மதம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பிற அத்தனை அறவுணர்ச்சிகளும் சாகடிக்கப்படுகின்றன. பின்னந்தலையில் சுடப்பட்டு சாகடிப்பவனின் குடும்பம் பற்றிய எந்த நினைப்பும் சுடுகிறவனுக்கு இருப்பதில்லை. தூக்கில் தொங்கவிடப்படுபவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கக் கூடும். வயதான பெற்றோர்கள் அவன் கொண்டு வரும் ரொட்டித் துண்டுக்காக காத்திருக்கக் கூடும். அவனது பச்சிளங்குழந்தை தனது எதிர்காலம் குறித்தான கனவுகளை தனது தந்தையின் கண்கள் வழியாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடும். எல்லாவற்றுக்கும் வெடிகுண்டுகளும், துப்பாக்கி ரவைகளும், தூக்குக் கயிறுகளும், பெட்ரோலும் தீக்குச்சியும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கிறார்கள்.

என்ன மாதிரியான காலம் இது?

ஐஎஸ் தீவிரவாதிகளின் உலகம் குரூரமானது. ரத்தத்தாலும் சதையாலும் எல்லாவற்றையும் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று மூடத்தனமாக நம்புகிறார்கள். எதைப் பற்றியும் யோசிக்காமல் கொலை செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த வரலாற்றுச் சின்னங்களை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். விலங்குகளிடம் கூட அடிப்படையான அறவுணர்ச்சி உண்டு. ஆனால் இவர்களிடம் இல்லை என்பது அயற்சியாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ரத்தமும் உயிரும்தான் தீர்வு என்பது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம்? அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் நிரம்பிய விமானத்தை ராக்கெட் எறிந்து தாக்கியதாக அறிவிக்கிறார்கள். பாரிஸில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்த பிறகு நாங்கள்தான் சாவடித்தோம் என்று தினவெடுத்து அறிவிக்கிறார்கள். 

இவர்கள் அறிவித்துக் கொள்வது போல கடவுளின் மதத்துக்கு துளியளவு கூட நன்மையைச் செய்வதில்லை. கடவுளின் பெயரால் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த ரத்தச் சரித்திரம் கடவுளின் மதத்துக்கான சகாயம் இல்லை. அநியாயம். உலகளவில் சாமானிய இசுலாமியர்களின் மீதான வெறுப்பை வளர்த்துவிடுகிறார்கள். பாரிஸ் நகர தாக்குதல் குறித்தான எந்தவொரு செய்தியிலும் ஒரு பின்னூட்டமாவது இசுலாமிய வெறுப்பைக் காட்டுகிறது. நல்லகவுண்டன்பாளையத்து சாதிக் பாட்ஷாவைப் பார்த்து சம்பந்தமேயில்லாமல் ‘இவனுக இப்படித்தான்’ என்று பேச வைக்கிறார்கள். இம்ரான்களையும் சல்மான்களையும் விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தி சோதனையிட வைக்கிறார்கள். எதிரில் வரும் ஹபிபுல்லாவிடமிருந்து இரண்டு அடிகள் நகரச் செய்கிறார்கள். குல்லாவும் தாடியும் வைத்த யாரைப் பார்த்தாலும் தீவிரவாதியாக இருக்கக்கூடுமோ என்று பயப்படச் செய்கிறார்கள். இதை மட்டும்தான் மதத் தீவிரவாதம் செய்து கொண்டிருக்கிறது. Polarization என்பது கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது. 

அமெரிக்காவும் ரஷ்யாவும் ப்ரான்ஸூம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இத்தகைய தாக்குதல்களில் அப்பாவிகள் சாகக் கூடும் என்பது வருத்தம்தான். ஆனால் இந்த முரடர்களை வேறு எந்தவிதத்தில் அடக்கி வழிக்குக் கொண்டு வர முடியும்? 

உலகம் முழுக்கவுமே தீவிரவாதத்திற்கு எதிரான மக்களின் உணர்வுகள் வெளிப்பட வேண்டும். மதம் இனம் மொழி நாடு என்ற வேறுபாடுகளைக் களைந்து இவர்களின் செயல்களைக் கண்டிக்க வேண்டும். சாமானியர்களின் ஆதரவில்லாமல் எந்தச் செயல்பாடும் வென்றதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 

இசுலாமியத்தின் பெயரால் எதைச் செய்தாலும் மயிலிறகில் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை. ‘அவர்கள் துப்பாக்கி எடுக்க என்ன காரணம்’ என்று ஆராய வேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கும் தருணம் இதுவன்று. என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ப்ரான்ஸ் நாட்டின் ராணுவ நிலையையும் காவல்துறையினரையும் அவர்கள் தாக்கவில்லை. சாமானியர்களைக் கொன்றிருக்கிறார்கள். எளிய மனிதர்களின் குடும்பங்களைச் சிதறடித்திருக்கிறார்கள். இது பச்சையான அயோக்கியத்தனம். இதை எந்த மதத்தின் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. நம்மைச் சுற்றிலும் அறிவிலிகள் இருப்பதும் பிரச்சினையில்லை; முரடர்கள் இருப்பதும் பிரச்சினையில்லை. முரட்டுத்தனமான அறிவிலிகள் இருப்பதுதான் பிரச்சினை. தீவிரவாதத்தினால் செத்துப் போன ஒவ்வொருவனின் குடும்பமும் அனுபவிக்கும் வேதனையையும் பிரிவுத் துன்பத்தையும் நாம் அல்லது நமது சந்ததியினர் அனுபவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுதான் நடுங்கச் செய்கிறது.

Nov 13, 2015

கனெக்‌ஷனும் கம்யூனிகேஷனும்

‘கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் வித்தியாசமிருக்குய்யா...சின்ன வித்தியாசமில்லை....பெரிய வித்தியாசம்’ என்று சாலமன் பாப்பையாவின் தொனியில் ஒருவர் உரக்கக் கத்திக் கொண்டிருந்தார். பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த கருத்தரங்கு அது. இந்த ஊரில் இப்படித்தான். அடிக்கடி கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். குடும்ப வாழ்வு ஏன் கசந்து போகிறது? கணவன் மனைவி ஏன் நாயும் குரங்குமாக மாறிவிடுகிறார்கள் என்று அவ்வப்போது நான்கைந்து பேர்கள் கூடி புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள். அப்படியான ஒரு கண்டுபிடிப்பின் போதுதான் கனெக்‌ஷன் - கம்யூனிகேஷன் விவகாரம் வந்து விழுந்தது. அவர் மனநல மருத்துவர். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தவர் ‘எனக்கு வர்றதுல முக்காவாசி டைவர்ஸ் கேஸூகதான் அப்பு’ என்று சலித்துக் கொண்டார். விவாகரத்து என்றால் நேரடியாக வழக்கறிஞர்களிடம்தானே செல்வார்கள் என்ற நினைப்பில் ‘அதுக்கு ஏன் உங்ககிட்ட வர்றாங்க?’ என்று பார்வையாளர் ஒருவர் கேட்டதற்கு முறைத்துப் பார்த்துவிட்டு ‘கடைசி கட்ட முயற்சியாக வருகிறார்கள்’ என்று பதிலளித்தார். 

தமக்கிடையே சிக்கல் இருக்கிறது என்று கணவனுக்கும் தெரிகிறது; மனைவிக்கும் தெரிகிறது. அந்தச் சிக்கலை அவிழ்த்துவிட முடியும் என்றும் இருவருமே நம்புகிறார்கள். ஆனால் வழிவகைகள்தான் தெரிவதில்லை. சமாதானம் ஆகிவிடலாம் என்று ஆசுவாசமாக அமர்ந்து பேசினாலும் கூட பிரச்சினை பெரிதாகி இன்னமும் சிக்கலைக் கூட்டிவிடுகிறது. அதனால்தான் கடைசி கட்ட முயற்சியாக மனநல மருத்துவர்களை நாடுகிறார்கள். இருவருக்கும் நல்ல நேரமாக இருந்தால் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஒன்பது கிரகங்களின் அதிபதிகளும் குப்புறப்படுத்துவிடுகிறார்கள் என்பதால் தேங்காய் உடைவது போல உடைந்து ஒருவர் இந்தத் திசையிலும் இன்னொருவர் எதிர்திசையிலும் கிளம்பிவிடுகிறார்கள்.

அது என்ன கனெக்‌ஷனுக்கும் கம்யூனிகேஷனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்?

வெறும் தகவல்களைக் கடத்துவது கம்யூனிகேஷன். கனெக்‌ஷன் அதைவிட ஒரு படி மேல். தகவல் மட்டுமில்லாமல்- அன்பு, கோபம், சந்தோஷம், துக்கம் என்கிற உணர்ச்சிகளோடு இன்னொருவருடன் மனநிலையோடு இணைவது. முதல் சமாச்சாரத்திற்கு- அதாவது கம்யூனிகேஷனுக்கு சமூக வலைத்தளங்கள் போதும். ஆனால் சம்சாரத்துடன் பேசுவதற்கும் கூட செல்போனை நம்புவதுதான் தூக்கியடித்துவிடுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவை நாம் சொல்ல விரும்புகிற தகவல்களைக் மற்றவர்களுக்குக் கடத்திவிடும். நம் உணர்ச்சிகளோடு அதிக சம்பந்தம் இல்லாத மனிதர்களுடன் உரையாடுவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ‘உடம்பைப் பார்த்துக்குங்க’ என்பதோடு முடிந்துவிடுகிற உறவுகள் அவை. ஆனால் கணவனும் மனைவியும் இன்னபிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அப்படியன்று. தவித்துப் போய்விடுவார்கள். அவர்களிடமும் செல்போன் வழியாகவேதான் பேச வேண்டுமா?

கம்யூனிகேஷனில் இல்லாத ஒன்று ஆனால் கனெக்‌ஷனில் இருக்கக் கூடியது என்னவென்று கேட்டால் ‘நம்பிக்கை’ என்று சொல்லலாம். Trust. அதைப் பற்றித்தான் அந்த மனநல மருத்துவர் பேசிக் கொண்டிருந்தார். உறவுகளுக்கிடையே நம்பிக்கை மிக முக்கியம். அந்த நம்பிக்கை கண்களோடு கண்கள் பார்த்துப் பேசும் போதுதான் வலுப்பெறும். வெறும் செல்பேசி தகவல் பரிமாற்றங்களால் எல்லாக்காரியங்களையும் முடித்துவிடலாம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை முதலில் அடித்து நொறுக்குங்கள் என்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

அவன் ஒரு ஐடி வாலா. எப்படியும் லட்சத்தைத் தொடக் கூடிய சம்பளம். தமது சொந்த ஊரிலேயே பெண்ணொருத்தியைப் பார்த்து திருமணம் செய்து கொஞ்ச நாட்கள் அமெரிக்காவிலிருந்துவிட்டு பணம் கட்டுக்கட்டாகச் சேர்ந்தவுடன் ஹைதராபாத்தில் நல்ல பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறிவிட்டார்கள். இவ்வளவு காலத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டுமல்லவா? ம்ஹூம். வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாம். கணவனும் விட்டுவிட்டான். அம்மா விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார். ‘வருஷக்கணக்காச்சே...புழு பூச்சி இருக்கா?...யாராச்சும் டாக்டரை பார்க்கலாம்ல’ என்று அழுத்தம் கொடுக்கவும் இவன் அம்மா சொல்வதற்கு தலையாட்டுவதா வீட்டுக்காரிக்குத் தலையாட்டுவதா என்று தெரியாமல் மண்டை காய்ந்திருக்கிறான். ‘ஆபிஸ்ல மேனேஜர் சாவடிக்கிறான்...இங்கே வந்தால் வீட்டில் சாவடிக்கிறார்கள்’ என்று நொந்து நூடுல்ஸ் ஆனவன் கடைசியில் ‘உனக்கு என்னதாண்டி பிரச்சினை’ என்று மனைவியிடம் கேட்டிருக்கிறான்.

அதுவரையில் புகைவிட்டுக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறி வீட்டின் வரவேற்பறை, படுக்கயறை என்று ஓரிடம் பாக்கியில்லாமல் கருக்கியிருக்கிறது. ‘என்னையவே கேள்வி கேட்குறியா?’ என்றவள் நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம் என்று தலையைச் சிலுப்பிவிட்டு கிளம்பிவிட்டாள். எங்கே போகிறாள் என்பதெல்லாம் தெரியவில்லை. அவளும் வேலைக்குப் போகிறவள்தான். நல்ல சம்பளம். யாரையும் நம்பியிருக்க வேண்டியதில்லை. பெட்டியைக் கட்டிவிட்டாள். ‘இது என்ன வம்பா இருக்கு?’ என்று அவளது அலுவலகத்து வாசலில் தினமும் தேவுடு காக்கத் தொடங்கியிருக்கிறான். அவள் கண்ணில்படுவதேயில்லை. அப்புறம்தான் தெரிந்திருக்கிறது. இன்னொருவனுடன் காரில் ஏறி கறுப்புக்கண்ணாடியை ஏற்றிவிட்டு இவன் கண்களிலிருந்து தப்பித்திருக்கிறாள். 

அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பி, வாட்ஸப்பில் கேள்விகளை அனுப்பி எழுத்துக்கள் தேய்ந்ததுதான் மிச்சம். ‘சரி தொலையட்டும். விவாகரத்து வாங்கிக்கலாம்’ என்று செய்தி அனுப்பி வைத்திருக்கிறான். அதற்கு மட்டும் பதில் வந்திருக்கிறது. ‘அடியேய்...இதுக்குத்தான் காத்திருந்தியா?’ என்று நினைத்தவன் எப்படியோ வளைத்து கெஞ்சிக் கூத்தாடி மனநல மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறான். சாலமன் பாப்பையா மாதிரி கத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதே மருத்துவரிடம்தான். அவள் வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டு ‘இவனுக்கு நான் பொண்டாட்டியா இந்த செல்போன் பொண்டாட்டியான்னே தெரியல...எப்போ பாரு அதையே ஒளிச்சு ஒளிச்சு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கிறான்’ என்றாளாம். அது வரை தவறு முழுவதும் அவளிடம்தான் என்று நம்பிக் கொண்டிருந்த மருத்துவருக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. இவன் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார். தவறு தன்பக்கத்திலும் இருக்கிறது என்பதை அவன் அது வரை உணர்ந்திருக்கவே இல்லை. இரண்டு பேரும் அமர்ந்து பேசியிருந்தால் பிரச்சினையை எப்பொழுதோ தீர்த்திருக்கலாம். ஆனால் வெள்ளம் கரை மீறிவிட்டது. பூதாகரமாகி நிற்கிறது.

நடுவில் வேறொருவன் வந்துவிட்டான் அல்லவா? அவன் இவளோடு வேலை செய்பவன். அலுவலகத்தில் மதிய உணவுக்குச் செல்லும் போதும் டீ குடிக்கப் போகும் போதும் அவனிடம் ‘வீட்டுக்காரன் மோசம்..சரியில்லை’ என்று புலம்பியிருக்கிறாள். ‘உனக்குத் தோள் கொடுக்க நானிருக்கிறேன் தோழி’ என்று ப்ராகட் போட்டுவிட்டான். இந்த இடத்தில்தான் ஒன்றை கவனிக்க வேண்டும். கணவன் மனைவியோடு பேசியதைவிடவும் நடுவில் புகுந்தவன் அவளோடு அதிக நேரம் பேசியிருக்கிறான். இந்த பேச்சு அவன் மீது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. கணவனின் இடத்தை அவன் பிடித்துவிட்டான். ஏதாவது வாய்ப்பு கிடைக்கட்டும் என்று காத்திருந்தவள் கணவன் ‘உனக்கு என்னதான் பிரச்சினை’ என்று கேட்கவும் பெரிய குண்டாந்தடியாக எடுத்து உறவை அடித்து நொறுக்கிவிட்டாள்.

‘அவங்களை சேர்த்து வெச்சீங்களா?’ என்று கூட்டத்திலிருந்த ஒருவர் மருத்துவர் கேட்டார். 

‘அது எப்படிங்க முடியும்?’ என்று திருப்பிக் கேட்டு வாயடைக்கச் செய்துவிட்டார். ‘அது தலைக்கு மேல போற வெள்ளம். ஜாண் போகுதா முழம் போகுதான்னெல்லாம் தெரியல. முடியாம விட்டுட்டேன்’ என்றவர் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறினார். 

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது செல்பேசியை அணைத்து வைத்துவிடச் சொன்னார். அலுவலகத்தில் அணைத்து வைத்தேன். மாலையில் வண்டியோட்டும் போது அணைத்து வைத்தேன் என்கிற சால்ஜாப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது. வீட்டில் இருக்கும் போது அணைத்து வைக்க வேண்டும். அதுவும் சைலண்ட் மோடில் போட்டு வைக்கிறேன் என்பதும் கதைக்கு உதவாது. அப்படி போட்டு வைத்தால் நினைப்பு முழுவதும் அந்தக் கருமாந்திரத்தின் மீதேதான் இருக்கும். மொத்தமாக அணைத்து வைத்துவிட வேண்டும். 

‘என்னை இப்படிச் சொல்லிட்டீங்க..நான் எவ்வளவு பிஸி தெரியுமா? இருபத்து நாலு மணி நேரமே பத்த மாட்டேங்குது....’ என்று யாராவது கண்டிப்பாகச் சொல்லக் கூடும். அது சரிதான். இந்தக் காலத்தில் யார்தான் பிஸி இல்லை? தெருநாய் கூட பிஸியாகத்தான் இருக்கிறது. மூச்சிரைக்க ஓடிக் கொண்டேயிருக்கிறது. நமக்கு ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம்தான். அவசரச் செய்தி ஏதாவது வரக் கூடும். தொழில் சம்பந்தமாக யாராவது அழைக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு அவசர காரியமாக இருந்தாலும் நிச்சயமாக ஒரு மணி நேரம் காத்திருக்க முடியும். காத்திருக்கட்டும். குடும்பம், குழந்தையைவிடவா மற்றவையெல்லாம் முக்கியம்? 

டிவி, தொலைபேசி, செய்தித்தாள் என்று எதுவுமில்லாமல் ஒரு மணி நேரம் வேறு எதைப் பற்றியும் சிந்தனையில்லாமல் குடும்பத்தைப் பற்றி மட்டும் நினைத்து அவர்களோடு மட்டும் பேச வேண்டும். ஒரு மாதம் கடைபிடித்தால் கூட வித்தியாசத்தை உணரலாம். இருபத்து நான்கு மணி நேரத்தில் நமக்கு ஏதாவதொன்று என்றால் பரிதவித்துப் போகிறவர்களுக்காக வெறும் ஒரு மணி நேரத்தைத்தான் ஒதுக்கச் சொல்கிறார்கள். அதைக் கூட செய்ய மாட்டோமோ என்ன?

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய கைகளுக்குள் ஆர்.டி.எக்ஸ் தொடரின் ஒரு கட்டுரை)

Nov 10, 2015

பொரி உருண்டை

உங்களுக்கு இன்று தீபாவளியா? இந்த ஊரில் வியாழக்கிழமைதான் என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்று கேட்டால் சாம்பாரில் சர்க்கரையைக் கலந்து தின்னும் எங்களுக்கு அப்படித்தான் என்று சொல்லிவிட்டார்கள். தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டேன். பிரச்சினை என்னவென்றால் வியாழக்கிழமை கூட அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார்கள். அமெரிக்கா சென்றிருந்தேன் அல்லவா? அங்கே ஒரு பொரி உருண்டை இருக்கிறான். இமாச்சல் பிரதேசத்துக்காரன். உண்மையிலேயே பொரி உருண்டைதான். நம்பிக்கை இல்லையென்றால் கூகிளில் டென்வர் பொரி உருண்டை என்று தேடிப் பார்க்கவும். அவனுடைய படத்தைத்தான் காட்டும். எனக்கும் அவனுக்கும் ஏழாம் பொருத்தம். பங்காளியுமில்லை மச்சான் முறையும் இல்லைதான். ஆனாலும் எதைச் செய்தாலும் எடக்கு மடக்காக கவுண்ட்டர் கொடுக்கிறான். 

‘தம்பி எனக்கு இந்தியாவுல இன்னொரு பேர் இருக்கு தெரியுமா?’ என்று கூட கேட்டுவிட்டேன். இங்கே இருந்து அதைச் சொல்லியிருந்தால் ஒருவேளை நம்பியிருப்பான். அங்கே போய் தேக பலத்தைக் காட்டி இதைச் சொன்னால் நம்புவானா? அவன் முஷ்டியை மடக்கி ‘எனக்கு அமெரிக்காவிலேயே இன்னொரு பேர் இருக்கு தெரியுமா?’ என்கிறான். அவனுக்கு இருந்தாலும் இருக்கும். பெரும்பாலான வட இந்தியர்களுக்கு இரண்டு கொம்பு முளைத்திருக்கிறது. அதுவும் ஹிந்தி தெரியாத என்னைப் போன்ற இனாவானாக்களைப் பார்த்தால் மூன்றாவது கொம்பும் முளைத்துவிடுகிறது. மூன்றாவது கொம்பு எந்த இடத்தில் கொம்பு முளைக்கிறது என்று அவரவர் அனுமானித்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த நிறுவனத்தில் நான் சேர்ந்த புதிதில் ஏறி ஏறி மிதித்தான். முட்டுச் சந்து மூத்திரச் சந்து என்று ஒரு இடம் பாக்கி வைக்காமல் இழுத்துப் போய் கும்மினான். மூக்கு மொகரை எல்லாம் பெயர்ந்து போய்க் கிடந்தேன். பரிதாபப்பட்ட மேலாளர் அழைத்து ‘அவன் பத்து அடி அடிச்சா உனக்கு ஒரு அடி கூடவா அடிக்கத் தெரியாது’என்றார். நான் என்ன ரஜினியா? அந்தப் பொரி உருண்டை மட்டும் இந்தியா வரட்டும் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். பாயாசத்தில் பேதி மருந்தைக் கலந்துவிடலாம்.

வீட்டில் யாருமில்லை. எல்லோரும் மாமனார் வீட்டில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் பாய் கடையில் இரண்டு புரோட்டாவும் சிக்கன் சால்னாவும்- அப்படித்தான் சொல்லி ஊற்றினார்கள். துண்டு கொஞ்சம் பெரியதாகத்தான் இருந்தன. சட்டியில் கொதித்த பிறகு நாய் என்ன நரியென்னவென்று நினைத்து ‘நரகாசுரா நீ வாழ்க நின் கொற்றம் வாழ்க’ என்று உறிஞ்சிவிட்டு வந்து அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். பழைய நிறுவனத்தில் இப்படி ஏதாவது நோம்பி நொடி என்றால் அழகழகான பெண்கள் விதவிதமான சேலைகளில் ஒய்யார நடை நடப்பார்கள். அதற்குள்ளாகவே இந்த நாள் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். இந்த நிறுவனமும் இருக்கிறதே- அதைக் கேட்டு வயிற்றெரிச்சலை ஏன் வாங்கிக் கொட்டிக் கொள்கிறீர்கள்.

நேற்றிலிருந்து பினாத்திக் கொண்டிருக்கிறேன். ‘புதன்கிழமை ராத்திரி பத்து மணியிலிருந்து அதிகாலை ஐந்தரை மணி வரைக்கும் ஆன்லைனில் இருக்க வேண்டும்’ என்று பொரி உருண்டை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. தீபாவளியை செவ்வாய்க்கிழமைக்கு பதிலாக வியாழக்கிழமை என்று சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம். நரகாசுரனின் டெட்பாடியை இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பட்டாசு வெடித்துக் கொள்ளலாம். புதன்கிழமையும் இப்படி சாவடித்தால் என்ன அர்த்தம்? முடியாது என்று சொன்னேன். அடுத்த விநாடியே ஆள் அம்பு அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் அனுப்பி கோர்த்துவிட்டுவிட்டான். ‘இவனை நம்பி நான் ஒரு கொலை கூட பண்ண முடியாது’ என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறான். படுபாவி.

பொரி உருண்டை அமெரிக்காவில் ஒரு வீடு வாங்கியிருக்கிறது. நான்கு லட்சம் டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி ரூபாய். பெருந்தொகை. இப்படி வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டால் பெரும்பாலும் அதே நிறுவனத்திலேயே ஒட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். ‘நீ செய்கிற வேலையை எனக்கு சொல்லித் தர்றியா?’ என்று கேட்டால் பதறிவிடுகிறார்கள். அவனவன் அரிசியில் அவனவன் பெயர் எழுதியிருக்கும் என்று தத்துவமெல்லாம் பேச முடிவதில்லை. சொல்ல முயற்சித்தால் மூக்கு மேலேயே குத்துகிறார்கள். ‘மொத்த நிறுவனத்தையும் எனது இரு தோள்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றன’ என்று நிரூபிக்க கடும் பிரயத்தனம் செய்கிறார்கள். பொரி உருண்டை அப்படியொரு சிக்கலில் இருப்பதாகப்பட்டது. 

பெரும்பாலான அமெரிக்க நகரங்களில் ஒன்றிரண்டு நிறுவனங்கள்தான் இருக்கின்றன. நிறுவனத்தை மாற்றுவதென்றால் இன்னொரு நகரத்துக்கு குடி மாற வேண்டியிருக்கிறது.  கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் செல்வதாக இருந்தால் இன்னமும் சிரமம். அதனால் இருக்கும் நிறுவனத்திலேயே ஒட்டிக் கொள்வது நல்லது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இந்தியாவிலிருந்து வரும் ஒரு சொட்டை மண்டையன் தனது வேலையைப் பறித்துக் கொள்வானோ என்று பயப்படும் போது சிக்குகிறவனை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கும்ம முயற்சிக்கிறார்கள். 

பெங்களூரில் அப்படியில்லை. மான்யாத்தா டெக் பார்க்கில் வேலை இல்லையென்றால் எலெக்டரானிக் சிட்டி அங்கேயும் இல்லையென்றால் ஒயிட் ஃபீல்டு. ஒரே சட்டிக்குள்ளேயே குதிரையை விரட்டி விரட்டி ஓட்டலாம். இப்படி எல்லா நிறுவனங்களையும் ஒரே ஊரிலேயே குவிக்க விட்டதுதான் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் தவறு கூட. தொண்ணூறுகளில் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டிற்குள் திறந்து விட்ட போது ஒரே இடத்தில் கூட விடாமல் வெவ்வேறு ஊர்களுக்கு பரப்பியிருந்தால் சூழல் வேறு மாதிரி இருந்திருக்கும். கோபிக்காரன் கோயமுத்தூரிலும் தேனிக்காரன் மதுரையிலும் வேலையை வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டியிருக்கலாம். முந்நூறு ரூபாய்க்கு விற்ற சதுர அடி நிலம் ஆறாயிரம் ரூபாயைத் தொட்டிருக்காது. பெருநகரங்களில் வாழ வழியில்லாதவர்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். பொருளாதாரம் பரவலாக்கப்பட்டிருக்கும். கிழவன் பேச்சு கிண்ணாரக்காரனுக்கு கேட்குமா? ஸ்மார்ட் சிட்டி, சில்க் ஸ்மிதா சிட்டியெல்லாம் வந்த பிறகு பார்க்கலாம்.

ஊருக்கு வந்த பிறகு அலைபேசியில் அழைத்து ‘ஹே மணி...ஹவ் ஆர் யூ மேன்?’ என்றான். அவன் என்னை மேன் என்று அழைப்பதே நக்கல்தான். அவனுக்கு நான் பொடியன். சுண்டைக்காயன். ‘அப்படியேதான் இருக்கேன்’ என்றேன். கடுப்பாகிவிட்டான். கியரை மாற்றி ‘அந்த வேலை என்னாச்சு?’ ‘இந்த வேலை என்னாச்சு?’ என்று டார்ச்சரித்தான். எனக்கு உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருந்தது. மணி பத்தரை ஆகியிருந்தது. அதற்கு மேலும் வேலை செய்ய வேண்டும் என்றான். சீமானின் பிரபல வார்த்தை ஒன்று நாக்கு வரை வந்துவிட்டது. அந்தளவுக்கு தைரியமிருந்தால் அவனை அங்கேயே மொத்தியிருப்பேனே. ‘சரிங்க ஆப்பிசர்’ என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். எனக்கே படு கேவலமாகத் தெரிந்தது.

இப்பொழுதெல்லாம் ‘அமெரிக்காவில் என்ன கத்துக்கிட்ட?’ என்று யாராவது என்னிடம் கேட்டால் ‘சில மனிதர்களை நம்மால் எந்தவிதத்திலும் சமாளிக்க முடியாது என்று கற்றிருக்கிறேன்’ என்பதுதான் பதிலாக வருகிறது. பொரி உருண்டை அந்த மாதிரியான மனிதன்.