கடந்த வாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் என்ன செய்தேன் என்று அப்புறம் சொல்கிறேன். வரப் போகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று என்ன செய்யப் போகிறேன் என்று முதலில் சொல்லிவிடுகிறேன். மினிஸோட்டா மாகாணத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஏன்? எதற்கு? எப்படி என்றெல்லாம் கேட்டு அவமானப்படுத்த வேண்டாம். ஏற்கனவே சொன்ன விஷயம்தான்- நமக்குள் மட்டும் ரகஸியமாக இருக்கட்டும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்துவிட்டபடியால் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. மணிக்கும் மினிக்கும் பெயர்ப் பொருத்தம் இருப்பதால் அந்த மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கிறோம்.
சீரியஸ் நோட்.
‘நான் செய்யற அஞ்சு பத்து வேவாரத்துக்கு எதுக்குங்க ஆனந்து விளம்பரம்?’ என்றுதான் கேட்டேன். அவர்தான் ‘நீங்க வாங்க மணி பாத்துக்கலாம்’ என்று விமான பயணச் சீட்டை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனந்த்தான் அந்த ஊர் தமிழ்ச் சங்கத்துடன் ஒருங்கிணைப்பு வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். சரி இருக்கட்டும். பந்தா செய்வதற்கு உதவும். ‘டிக்கெட் அனுப்பி வெச்சு பேசக் கூப்பிடறாங்க தெரியுமா?...அதுவும் எங்க? அமேமேமேரிக்காவுல’ என்று நான்கு பேரிடம் அலட்டிக் கொள்ளலாம். வெளியிலிருந்து பார்ப்பவர்களும் ‘இவன்கிட்ட சரக்கு இருக்கும் போலிருக்கு’ என்று நம்பிக் கொள்வார்கள். இப்படியெல்லாம் புருடாவிட்டபடியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். மாமனாரிடம் கூட நாசூக்காக சொல்லி வைத்திருக்கிறேன். ‘ஆமாமாங்க மாமா...வந்ததுல இருந்து ஒரே பிஸி....பாருங்க...அடுத்த வாரம் கூட வேற ஊர்ல போய் பேசறன்’ என்று கவுண்டமணி மாதிரி அலப்பறை கொடுத்திருக்கிறேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது நல்லி எலும்பாக வாங்கி வந்து குழம்பு வைத்துத் தருவார்கள் என்கிற நம்பிக்கைதான்.
உண்மையாகவே சீரியஸ் நோட்.
நான் பெரிய பேச்சாளன் இல்லை. வெளிப்படையாக பேசுவேன். அவ்வளவுதான். மனதில் இருப்பதை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் பேசவும் எழுதவும் முடிவதுதான் என்னுடைய பலம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதையேதான் இந்தக் கூட்டத்திலும் செய்யப் போகிறேன். யாரெல்லாம் வருகிறார்கள் என்று தெரியவில்லை. வருகிறவர்களிடம் நேர்மையாகப் பேசிவிட்டு வரலாம். இந்தவொரு நம்பிக்கையில்தான் அவர்களும் அழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அதைவிட சீரியஸ் நோட்
ஆகவே அமெரிக்க வாக்காளத் தமிழ் பெருங்குடி மக்கள் பெருந்திரளாக லாரிகளிலும் கார்களிலும் வேன் பிடித்தும் வந்து குவிந்து ப்ளைமவுத் நூலக வளாகத்தில் போடப்பட்டிருக்கும் பத்து நாற்காலிகளையும் நிரப்பி அண்ணனின் மானத்தை காத்தருள வேண்டுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
விவரங்களுக்கு: 412-580-8318
6 எதிர் சப்தங்கள்:
விமான டிக்கெட் அனுப்புனா உடனே புறப்பட்டு விடலாம் சார் ...
"இப்படியெல்லாம் புருடாவிட்டபடியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். மாமனாரிடம் கூட நாசூக்காக சொல்லி வைத்திருக்கிறேன். ‘ஆமாமாங்க மாமா...வந்ததுல இருந்து ஒரே பிஸி....பாருங்க...அடுத்த வாரம் கூட வேற ஊர்ல போய் பேசறன்’ என்று கவுண்டமணி மாதிரி அலப்பறை கொடுத்திருக்கிறேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது நல்லி எலும்பாக வாங்கி வந்து குழம்பு வைத்துத் தருவார்கள் என்கிற நம்பிக்கைதான்."
அருமை அண்ணா...
தங்களின் வெள்ளந்தி சுபாவம் வெளிப்படையான பேச்சு தங்களை மென்மேலும் ரசிக்க வைக்கிறது.
ரசிப்பு தொடரும்...
நல்லி எலும்ப சூப் வைச்சு தரச்சொல்லும் மாமனாரிடம்.....உடம்புல கொஞ்சம் சதை போடுதான்னு பார்ப்போம் ! ! !
Nandru. Vaazhthukkal.
Pls review : https://srmouldtech.wordpress.com/
'கன்றுக்கும் கலத்திலும் வீழாது' ஏன் இருக்க வேண்டும். உங்களிடம் பொங்கி வழிகிறது 'நல் ஆன் திரும்பால்'.கொடுத்து வைத்தவா்கள் மின்னசோட்டா வாழ் தமிழ் மக்கள். ஜமாயுங்கள். வாழ்த்துகள்.
👌"உள்ளது உள்ளபடி" என்கிற மாதிரியான பதிவு.
'ப்ளைமவுத் நூலக வளாகத்தில் போடப்பட்டிருக்கும் பத்து நாற்காலிகளையும்....'
ஒரு நாற்காலியை எனக்காக முன் பதிவு செய்யவும். 😄
மதியம் சந்திப்போம்
Post a Comment