பிலிமோத்ஸவ் என்றொரு சுஜாதாவின் கதை இருக்கிறது. ஒரு சாமானிய மனிதன் பெங்களூரில் நடைபெறும் திரைப்பட விழாவுக்குச் செல்கிறான். அவனுக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எதுவுமில்லை. ஒரு படத்திலாவது ‘பிட்’ வந்துவிடாதா என்கிற நப்பாசைதான். விழாக்களில் திரையிடப்படும் படங்கள் சென்சார் செய்யப்படாதவை என்று நம்புகிறான். கத்தரி விழாத காட்சியை எதிர்பார்த்து இந்தத் தியேட்டருக்கும் அந்தத் தியேட்டருக்கும் மாறி மாறிச் செல்கிறான். எதுவுமே கண்ணில்படுவதில்லை. ஆனால் வேறு தியேட்டர்களில் படம் பார்க்கும் இவனுடைய நண்பன் ‘இன்னைக்கு அதைப் பார்த்தேன்; இதைப் பார்த்தேன்’ என்று புளகாங்கிதம் அடைகிறான். நாராயணன் சலித்துப் போகிறான். முப்பதைத் தாண்டியும் திருமணமாகாத குடும்பச் சுமைகளால் அழுத்தப்பட்டவன். இப்படியாவது தனக்கொரு வடிகால் கிடைக்கும் என்று ஆசைப்படுகிறான். அதுவும் வாய்ப்பதில்லை. சுஜாதாவின் முக்கியமான கதை என்று இதைப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். சுஜாதாவின் கதை சொல்லும் உத்திதான் நமக்குத் தெரியுமே. ‘முதல் வரியிலேயே கதையை ஆரம்பித்துவிட வேண்டும்’ என்று சொல்லி கொக்கி போட்டுவிடுவார். கடைசி வரைக்கும் நம்மை கொக்கியில் மாட்டி இழுத்துக் கொண்டே போய்விடுவார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் இரண்டு முகங்களாவது உண்டு. வெளியுலகத்துக்கு நாம் காட்ட விரும்புகிற அல்லது காட்டிக் கொண்டிருக்கும் முகம் ஒன்று. யாருக்குமே தெரியாத அந்தரங்கமான முகம் இன்னொன்று. உண்மையில் இந்த இரண்டாவது முகம்தான் சுவாரஸியமானது. மனக்குகையின் இண்டு இடுக்குகளில் சிக்குண்டிருக்கும் ஆழ்மன ஆசைகளும், உள்ளூர பதிந்து கிடக்கும் விபரீத கற்பனைகளும் அவற்றை முயன்று பார்க்கும் எத்தனிப்புகளும் அலாதியானவை. ‘ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் சமூகத்துக்கு நல்லது செய்தார்’ என்னும் ஸ்டீரியோடைப்பான எழுத்துக்களிலிருந்து இந்த இடத்தில்தான் செவ்வியல் படைப்புகள் என்று நாம் சிலாகிக்கக் கூடிய பெரும்பாலானவை வித்தியாசப்படுகின்றன. எல்லோருக்கும் தெரிந்த முகத்தை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். சொல்லிவிடலாம். யாருக்குமே தெரியாத அந்தரங்க முகத்தை எழுத்தாக்குவதிலும் படைப்பாக்குவதிலும்தான் படைப்பாளிக்கு உண்மையான சவால் இருக்கிறது.
சமீபத்தில் பெங்களூர் மிரரில் ஒரு செய்தி வந்திருந்தது. தினத்தந்தியின் ஆங்கில பதிப்பு மாதிரி. பொழுது போகாத போது தைரியமாக வாசிக்கலாம். தனது கணவன் மீது மனைவிக்கு சந்தேகம். அவன் நல்லவன்தான். கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். நன்றாக பேசுகிறான். கவனித்துக் கொள்கிறான். இருந்தாலும் சந்தேகம். உளவு பார்க்க விரும்பியிருக்கிறாள். ஆண்ட்ராய்ட் செல்போன்களில்தான் நமக்கே தெரியாத ஆயிரம் ஆப்கள் இருக்கின்றனவே? அவை உண்மையில் ஆப்புக்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது கணவனின் செல்போனில் நிறுவியிருக்கிறாள். அது ஒரு தில்லாலங்கடி ஆப். அவன் பேசுவது அத்தனையையும் அவனுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்திருக்கிறது. சாயந்திரம் கணவனின் செல்போனை எடுத்துக் கேட்டிருக்கிறாள். பெரும்பாலானவை ஜொள்ஸ் பேச்சுக்கள். தோழிகள், உடன் பணி புரியும் பெண்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியான ஒரு பேச்சில் தனக்கு கீழாக பணி புரியும் பெண்ணை மிரட்டியிருக்கிறான். அது எசகுபிசகான மிரட்டல். அதையும் கேட்ட மனைவி மிரட்டப்பட்டவளைத் தொடர்பு கொண்டு ‘இவனையெல்லாம் சும்மா விடக் கூடாது..நீ மட்டும் ம்ம்ன்னு சொல்லு’ என்று அவளையும் சேர்த்துக் கொண்டு இரண்டு பேராகச் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார்கள். பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
‘அவன் என்னவோ செஞ்சுட்டு போகட்டும். என்கிட்ட ஏன் மறைச்சான்?’ என்றுதான் அந்தப் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருக்கிறாள். ‘ஆமா அவகிட்ட ஜொள்ளுவிட்டுட்டு இருக்கேன்’ என்று சொல்வது எந்தக் கணவனுக்குத்தான் சாத்தியமான காரியம்? காவு வாங்கியிருப்பாள். வீட்டிற்குள்ளேயே இரண்டு மூன்று முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லையா? கணவன் மனைவிக்கிடையில் மட்டுமில்லை- பொதுவாகவே வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் முகத்துக்கும் நம் அந்தரங்கமான முகத்துக்குமாக இடைவெளியைக் குறைப்பது ஒன்றும் சாதாரணக் காரியமில்லை. மிகப்பெரிய சவால். அப்படிக் குறைக்காவிட்டால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இடைவெளியுடனான இரண்டு வெவ்வேறு முகங்களை வெகுநாட்களுக்கு பராமரிப்பது சிரமம். நம்முடைய பிம்பத்தை நாமே அழித்துக் கொள்வோம். நீலச்சாயம் வெளுத்து ராஜா வேஷம் கலைந்து போகும். எவ்வளவுதான் நாம் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பக்கமாகச் சென்று ‘இவனைப் பத்தி தெரியாதா?’ என்று பேசக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கும்.
இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் என்று நாம் நம்பக் கூடிய கிட்டத்தட்ட அத்தனை பேரையும் ஏதாவதொரு வகையில் கிழித்துத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். அதுவும் சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் எவ்வளவுதான் ரகசியமாக இருந்தாலும் வெளியில் எடுத்து வந்து நாறடித்துவிடுகிறார்கள். அதற்காக நடிக்காமலும் இருக்க முடியுமா? நடிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திற்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் பொருந்தியிருப்பதாக ஒரு தோரணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சட்டகத்தை மீற ஏதோவொரு பயம் தடுத்துவிடுகிறது. ‘நம்மைப் பற்றி இவன் என்ன நினைப்பான்?’ ‘அவள் என்ன நினைப்பான்?’ என்கிற பயத்துடனேயே முகமூடியை அணிந்து ‘இங்க பாரு...நல்லவனுக்குரிய அம்சத்துடன் நான் இருக்கிறேன்’ என்று புன்னகையைத் தவழவிடுகிறோம். போலித்தனம். ‘இது நடிப்பு’ என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்கள் நம்முடைய போலித்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது நமக்கு மட்டும்தான் தெரியாது. மேலும் பகட்டு, மேலும் மெருகு என்று நாம் பல்லிலிளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. ஒருவிதமான சுய திருப்தி அது. அடுத்தவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று நம்மை நாமே திருப்தி படுத்திக் கொள்வது.
யோசித்துப் பார்த்தால் இந்த போலித்தனம்தான் நம்மைச் சுற்றிலுமிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணமாக இருக்கிறது.
‘நான் இப்படித்தான்’ என்று சொல்லிக் கொள்வதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். எல்லா இடத்திலும் எல்லா விஷயங்களிலும் நம்முடைய அரிதாரங்களைக் கலைத்துவிட்டு நிர்வாணமாக நிற்க முடியாதுதான். ஆனால் முடிந்தவரையில் முயற்சித்துப் பார்க்கலாம். நம்முடைய பகட்டினாலும் நடிப்பினாலும் நமக்கு கிடைக்கும் மரியாதையைவிட நம்முடைய இயல்புத்தன்மையைக் காட்டி பெறக் கூடிய மரியாதை நமக்கு பன்மடங்கு சந்தோஷமளிக்கக் கூடியது. ஆனால் அந்தச் சந்தோஷத்தை அடைவது மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பது போலத்தான். நடித்துக் கொண்டிருப்பது என்பது comfort zone. அதைவிட்டு நம்மால் அவ்வளவு சீக்கிரம் வர முடியாது. அப்படியே வந்தாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. முதலில் எதிர்கொள்ளும் அவமானங்களும் வசவுகளும் நம்மைத் திரும்பவும் நடிப்புலகிற்குள்ளேயே தள்ளிவிடக் கூடும்.
காலங்காலமாக நம் முன்னவர்களும் நம்மைச் சுற்றியவர்களும் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியை நாம் மட்டும் கழற்றுவது அப்படி சுலபமான காரியமா என்ன?
4 எதிர் சப்தங்கள்:
Super Manikandan
சரியாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே
பெரும்பாலானவர்கள் முகமூடி அணிவது அவர்களே அறியாமல் இருப்பதாகப் படுகிறது.
நாய் வேசம் போடும் நாய் இங்கில்லை
வேசம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழியில்லை.
படம் : கிருமி
Post a Comment