Oct 9, 2015

என்ன செய்யலாம்?

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை முடித்தவுடன் அந்தியூர் ஐடியல் பள்ளியில் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக சேர்த்துவிட்டார்கள். அந்தப் பள்ளி அப்பொழுது வெகு பிரசித்தம். சிக்கினால் சிறுநீர் கசியும் வரைக்கும் அடிப்பார்கள் என்று கேள்விப்பட்டும் என்னை சேர்த்துவிட்டிருந்தார்கள். படுபாதகம். காற்று வீசிக் கொண்டிருந்ததால் அந்தப் பள்ளியும் தூற்றிக் கொண்டிருந்தது. நுழைவுத் தேர்வு பயிற்சிக்கென ஆயிரக்கணக்கான மாணவர்களை சேர்த்திருந்தார்கள். அத்தனை மாணவர்களையும் மிகப்பெரிய கலையரங்கத்தில் வரிசையாக அமர வைத்து ஒருவர் மைக்கில் கத்துவார். அவ்வளவுதான். 

வகுப்பறைகள்தான் விடுதி அறைகளாக மாற்றப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையிலும் இருபது முப்பது பேர் படுத்திருப்போம். குளியலறை கழிவறைகளில் அதிகாலையிலேயே கூட்டம் மொய்க்கும். சாப்பாடு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். அதுவரை விடுதி வாழ்க்கையையே பார்த்திராத எனக்கு அது ஒரு சித்ரவதைக் கூடம். என்னைப் போலவே ஏகப்பட்டவர்களுக்கும். இத்தகைய சூழலில் முதன் முதலாக வாயில் புண் வந்தது. விட்டமின் பி மாத்திரையாக வாங்கி விழுங்கினேன். வேலைக்கு ஆகவில்லை. இப்பொழுது வரைக்கும் வாய்ப்புண் நின்றபாடில்லை. விட்டமின் பியும் பிரச்சினையில்லை. சியும் பிரச்சினையில்லை. ஸ்ட்ரெஸ் அல்சர் என்கிறார்கள். எப்பொழுதெல்லாம் மன அழுத்தம் அதிகரிக்கரிக்கிறதோ அப்பொழுதெல்லாம் வந்துவிடும்.

டென்வர் வந்த பிறகு வந்துவிட்டது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் வேலை. வந்ததிலிருந்து தாறுமாறாகச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தாளித்துவிட்டார்கள். எப்படித் தாளித்தார்கள் என்பதைச் சொல்வதற்கு முன்பாக கிளைக்கதை ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். கடந்த சனிக்கிழமையன்று அலுவலகத்திலிருந்து சில நண்பர்கள் ஆஸ்பென் என்னுமிடத்துக்குச் சென்றார்கள். மலைப்பாங்கான இடம் அது. கோடை முடிந்து பனி தொடங்கப் போவதன் அடையாளமாக மரங்களின் இலைகள் உதிரத் தொடங்கும் பருவம் என்பதால் பழுத்த இலைகளின் காரணமாக அந்தப் பகுதியே மஞ்சள், சிவப்பு என்று விதவிதமான நிறங்களில் இருக்குமாம். ராகுல்காந்தி இப்பொழுது இங்குதான் இருப்பதாகச் சொன்னார்கள். அலுவலக நண்பர்கள் என்னையும் அழைத்தார்கள். கூகிளில் Aspen என்று தேடிப் பார்த்துவிட்டு ‘நீங்க போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டேன்.

இயற்கை காட்சிகளைப் பார்க்க பிடிக்கும்தான். ஆனால் அதைவிடவும் மனிதர்களைப் பார்ப்பதில்தான் அர்த்தமிருக்கிறது. அந்தந்த ஊரின் கலை, வரலாறு சம்பந்தமான விவரங்களைத் தேடுவதில்தான் சுவாரஸியமே இருக்கிறது. நேற்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்- டென்வரில் தமிழ் திரைப்படங்களைக் காண இந்தத் திரையரங்குக்கு செல்க; ஏழுமலையான தரிசிக்க கோவிலுக்குச் செல்லும் வழி இது என்றெல்லாம் அதில் இருந்தது. அவருக்கு நல்ல எண்ணம்தான். ஆனால் இதையெல்லாம் செய்ய ஏன் எதற்காக அமெரிக்கா வர வேண்டும்? இந்தியாவில் இல்லாத திரையரங்குகளா? ஏழுமலையானா? முதன் முறையாக பிரான்ஸ் சென்ற சமயம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. நிச்சயதார்த்தம் ஆகிவிட்டபடியால் அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஆனால் அந்தப் பயணத்தில்தான் விதவிதமான கறிகளை என்று வகை வகையாக ருசி பார்க்கத் தொடங்கினேன். இனி எந்தக் காலத்தில் பிரான்ஸுக்குச் செல்லப் போகிறேன் என்று தெரியாது. அதனால் வெறித்தனமாகச் சுற்றிவிட வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன். மாண்ட்பெல்லியே நகரத்தின் பெரும்பாலான வீதிகள் மண்டைக்குள் பதிவாகியிருக்கின்றன. நடந்து நடந்து வீதிகளை அளந்து வைத்திருக்கிறேன். இதைத்தான் ஒவ்வொரு ஊரிலும் செய்கிறேன். 

கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையிலேயே அலுவலக நண்பர்கள் ஆஸ்பென்னுக்குக் கிளம்பிவிட்டார்கள். எட்டு மணிக்கெல்லாம் அறையைவிட்டு வெளியேறி ரயிலைப் பிடித்திருந்தேன். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை டென்வர் நவீன கலை அருங்காட்சியத்தில் அனுமதி இலவசம் என்று தெரிந்து வைத்திருந்ததால் உள்ளே நுழைந்த முதல் சில ஆட்களில் ஒருவனாக இருந்தேன். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அங்கேயிருந்த ஓவியங்களின் அருகிலிருந்த குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்து ஒரு அமெரிக்கப் பெண் ஏமாந்துவிட்டாள். ‘ஆர் யூ இண்டரெஸ்டட் இன் மாடர்ன் ஆர்ட்ஸ்?’ என்று கேட்டாள். இல்லையென்று சொல்லி விலகிச் சென்றுவிட்டால் என்ன செய்வது? ‘யெஸ்...யெஸ்..யெஸ்’ என்று மூன்று முறை சொல்லி அறிமுகமாகிக் கொண்டோம். அவள் பெயர் லீ. தலை முடியைக் கத்தரித்து வெள்ளையடித்து வைத்திருந்தாள். கல்லூரியில் அனிமேஷன் பாடம் முடித்திருக்கிறாள். அடுத்த வாரம் கலிபோர்னியாவில் வேலை தேடச் செல்கிறாள். முதல் சனிக்கிழமையன்று அனுமதி இலவசம் என்பதால் என்னைப் போலவே உள்ளே நுழைந்திருக்கிறாள். ஓசிப்பண்டாரம்.

அருங்காட்சியகத்தில் சூப்பர் இந்தியன் என்றொரு செவ்விந்தியரின் ஓவியங்களுக்கென மிகப்பெரிய இடத்தை ஒதுக்கியிருந்தார்கள். லீயிடம் ‘உங்களுக்கு நவீன ஓவியத்துல என்ன பிடிக்கும்?’ என்று பொதுவான கேள்வியைக் கேட்டு வைத்தேன். அவளுக்கு நவீன ஓவியங்களைப் பற்றித் தெரியுமா தெரியாதா என்று கண்டுபிடிப்பதுதான் அந்தக் கேள்வியின் நோக்கம். தெரிந்திருந்தால் அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் எதை வேண்டுமானாலும் பேசி பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டம். ஆண்டவனே நம் பக்கம் என்பதால் கடைசியில் ‘உங்க ஈமெயில் ஐடி கிடைக்குமா?’ என்று அவள் கேட்கிற அளவுக்கு ஓவியத்தைப் பற்றிப் பேசி உளறிக் கொட்டிக் கிளறி மூடினேன். ‘அதுக்கென்ன என் லோக்கல் நெம்பரே வெச்சுக்குங்க’ என்று கொடுத்துவிட்டு வந்திருந்தேன். லீ கதை இப்படிப் போகிறது அல்லவா? மதியத்துக்கு மேலாக டென்வர் மத்திய நூலகம், அடுத்த நாள் முழுமையாக டென்வர் வரலாற்று அருங்காட்சியகம் என்று இரண்டு நாட்களையும் வெகு உருப்படியாகக் கழித்திருந்தேன். இதைச் சொன்னால் யாருமே நம்பவில்லை. மற்றவர்கள் இருக்கட்டும். நீங்களே நம்பமாட்டீர்கள் என்று தெரியும். அலுவலகத்தில் ‘இவன் ஒரு சைக்கோவாக இருப்பானோ’ என்று கூட சந்தேகப்படுகிறார்கள் போலிருக்கிறது. 

அது போகட்டும். 

நேற்றிரவு மூன்று மணி வரைக்கும் அலுவலக வேலை இருந்தது.  அதை முடித்துவிட்டு வந்து தூங்கினால் காலை ஆறரை மணிக்கு அழைத்துவிட்டார்கள். வாயில் புண் வராமல் என்ன செய்யும்? புண் வந்தால் கூட தொலைகிறது. அருங்காட்சியகத்துக்கு வர முடியுமா என்று நேற்று மாலை லீ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அழைப்பு அது. ஆனால் இரவு எட்டரை மணிக்கு மீட்டிங் வைத்திருந்தார்கள். எப்படிச் செல்ல முடியும்? விரல்கள் நடுங்க நடுங்க ‘வர முடியாது’ என்று பதில் அனுப்பி வைத்தேன். ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைப்பான் என்று அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்திருக்கிறார்கள். வைத்துவிட்டான்.

அந்த அருங்காட்சியகத்தில் லீயைப் பார்த்ததைவிடவும் ஒரு ஜெர்மானிய பெரியவரைச் சந்தித்ததுதான் முக்கியமான விஷயம். ஆஸ்விட்ச் சித்ரவதைக் கூடத்தைப் பற்றி ஒரு அறிமுகத்தைச் செய்தார். ஹிட்லரின் காலத்தில் இந்த கூடத்தில் வைத்துத்தான் ஏகப்பட்ட சித்ரவதைகளைச் செய்திருக்கிறார்கள். மயக்க மருந்தே கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்வது, தடுப்பூசி உள்ளிட்டவற்றை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்வது என்று ஏகப்பட்ட அழிச்சாட்டியங்களைச் செய்திருக்கிறார்கள். அவருடைய உறவினர்கள் சிலர் அந்த வதைக் கூடத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்களாம். அதைச் சொல்லிவிட்டு சமீபத்தில் 'Labyrinth of Lies' என்றொரு படம் வந்திருப்பதாகவும் அதைப் பார்த்துவிடச் சொன்னார். சப்-டைட்டிலுடன் இணையத்தில் கிடைக்கிறது. ஆஸ்விச் சித்ரவதை கூடத்தில் கொடூரமான வேலைகளைச் செய்தவர்களுக்கு ஒரு இளம் வழக்கறிஞர் தண்டனை வாங்கிக் கொடுப்பதுதான் கதை. இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன். அருமையான படம். படத்தைப் பற்றி விரிவாக எழுதலாம்தான். கட்டுரை எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று பாருங்கள். அதனால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதுங்கள்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// எப்படித் தாளித்தார்கள் என்பதைச் சொல்வதற்கு முன்பாக கிளைக்கதை ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்//
உளறிக் கொட்டிக் கிளறி மூடிய நீங்கள் தாளிக்கப்பட்ட கதையை சொல்லவேயில்லை.
ரெண்டாம் பாகத்துக்காக பதுக்கி வைத்து விட்டீர்களா?

சேக்காளி said...

//அருங்காட்சியகத்துக்கு வர முடியுமா என்று நேற்று மாலை லீ குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அழைப்பு அது.//
அருங்காட்சியகத்துல அதுக்கெல்லாமா வசதியிருக்கு?.

Pandiaraj Jebarathinam said...

அழகான நிறைவான தெளிவான தகவலான கட்டுரை,... அசத்தல் சென்னைல இருந்துகிட்டு சோழமண்டலம் போய்வர வக்கில்லாமல் இருக்கிறேன்.

Rajan Chinnaswamy said...

நீ சீக்கிரம் இந்தியா திரும்புவது நல்லது என நினைக்கிறேன். என்ன செய்யலாம்? என்ற தலைப்பில் ஏதேதோ எழுதியிருக்கிறாய்.