பெங்களூரில் ரிச்மண்ட் சாலையில் ஒரு திருப்பம் இருக்கிறது. நேராக வந்து பிறை வடிவில் திரும்பும். திருப்பம் முடிகிற இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு பெரிய மரமும் உண்டு. சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெகு தூரம் தள்ளி தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இடுப்பின் ஒரு பக்கத்தை மட்டும் ஸீட்டில் அமர்த்தி பந்தாவாக நின்று கொள்வார். அவர் அங்கே நின்று கொண்டிருக்க இரண்டு மூன்று காவலர்கள் மரத்துக்கு பின்பாக பதுங்கிய படி காத்திருப்பார்கள். சிவப்பு விளக்கு விழுந்த பிறகு வருபவர்கள், தலைக்கவசம் அணியாதவர்கள், மூன்று பேராக வருபவர்களின் வண்டிகளுக்கு முன்பாக ஒரே தாவாகத் தாவி ஓரம் கட்டுவதுதான் அவர்களுடைய வேலை. முதல் வேலையாக சாவியை உருகிக் கொள்வார்கள். முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் ஜெட்சன் என்றொரு நண்பர் இருந்தார். எப்பொழுதும் பேண்ட்டுக்குள் வண்டியின் இன்னொரு சாவி வைத்திருப்பார். இந்த மாதிரி சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் ‘வண்டியை ஓரமா நிறுத்திட்டு வர்றேன்’ என்று சொல்லி சற்று தூரம் நகர்த்தி வந்து கிளம்பிவிடுவார். ஜகஜாலக் கில்லாடி அவர்.
எப்பொழுதுமே விதிமுறை மீறலின் போதுதான் வளைப்பார்கள் என்றில்லை அல்லவா? வருமானம் குறைவாக இருக்கும் சமயங்களில் எந்தக் காரணமுமே இல்லையென்றாலும் ஓரங்கட்டுவார்கள். அப்படி ஒரு நாள் சிக்கிக் கொண்ட போது ஓட்டுநர் உரிமம், காப்பீடு என ஒவ்வொன்றாகக் கேட்கக் கேட்க எடுத்து நீட்டிக் கொண்டிருந்தேன். தீடிரென்று ஞானோதயம் வந்தவராக ‘emission certificate எடு’என்றார். அப்படியொரு கருமம் இருப்பது எனக்கு அப்பொழுதுதான் தெரியும். இருசக்கர வாகனத்தில் பதினொன்று போட்டுக் காட்டச் சொல்லும் கதைதான். கடைசியில் பேரம் நடத்தினோம். ‘கோர்ட்டுக்கு போனா எந்நூறு கட்டணும்’ என்றார். ‘இங்கேயே கட்டினா?’ என்றேன். ‘முந்நூறு’ என்றார். கடைசியில் நூறு அல்லது நூற்றைம்பதுக்கு பேரம் முடிந்ததாக ஞாபகம். இது மட்டும்தான் உதாரணமில்லை. இதுவும் ஒரு உதாரணம். அவ்வளவுதான். ஏகப்பட்ட முறை சிக்கியிருக்கிறேன்.
அந்த ரிச்மண்ட் சாலை வளைவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் ஏதேனும் மன அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வெளியில் வந்துவிடுவேன். எங்கள் அலுவலகத்திலிருந்து எட்டிப்பார்த்தால் அந்தச் சாலைத் திருப்பம் தெரியும். போலீஸாரின் சாகசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும். மனம் தெளிவாகிவிடும். வசூல் வேட்டைதான். ஆனால் காவலர்கள்தான் கில்லாடிகள் என்றில்லை. முதல் பத்தியில் சொன்ன ஜெட்சனைவிட தில்லாலங்கடிகள் இருக்கிறார்கள். திடீரென்று ‘U’ திருப்பம் அடித்து தப்பிப்பவர்கள், நிறுத்துவது போல வண்டியை மெதுவாக்கி வழுக்கென்று நழுபுவர்கள், நடுவிரலை உயர்த்திக் காட்டியபடி முறுக்குபவர்கள் என்று அட்டகாசமாக இருக்கும். உடனடியாக தங்களது வயர்லெஸ்ஸை எடுத்து ‘அந்த யமஹா வண்டிக்காரன் நிற்காமல் போகிறான்......அமுக்கு’ என்று அடுத்த சிக்னலில் நிற்கும் காவலரிடம் சொல்வார்கள். மிரட்டுகிறார்களாம். அவன் அதற்கு முன்பாக இருக்கும் சந்துக்குள் முட்டித் தப்பித்திருப்பான்.
இந்த போக்குவரத்து காவல்துறையினரின் கதையைத் தொடர்வதற்கு முன்பாக இம்ரானைப் பற்றிச் சொல்லிவிட வேண்டும். இம்ரான் மதுரைக்காரர். இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டென்வரில்தான் வேலையில் இருக்கிறார். ஒரு வகையில் இசுலாமிய ஒழுக்கவாதி. நல்ல சம்பளம்தான். ஆனால் பழைய கார் ஒன்றை வைத்திருக்கிறார். ‘இங்க பெரும்பாலும் கடனில்தான் கார் வாங்குகிறார்கள். வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாதுன்னு இசுலாம் சொல்லியிருக்கு’ என்பதால் கடன் வாங்காமல் காசு சேர்த்து பழைய வண்டி வாங்கியிருக்கிறார். அந்தக் கார் அவ்வப்பொழுது மூச்சை இழுத்து இழுத்து ஓடும். கடந்த வாரம் இறுதியாக ஒரு முறை மூச்சை இழுத்து பிறகு மொத்தமாக நிறுத்திவிட்டது. நண்பரின் வண்டியில் அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். இப்படி மது அருந்துவதில்லை, வட்டி கட்டுவதில்லை எக்ஸெட்ரா எக்ஸெட்ரா- அந்த மாதிரியான ஒழுக்கவாதி. அப்பா மளிகைக்கடை நடத்திக் கொண்டிருந்தாராம். இப்பொழுது ஓய்வில் இருகிறார். சிறுவயதிலிருந்தே மளிகைக் கடையில் பொட்டலம் கட்டிய அனுபவம் இருப்பதால் இம்ரானுக்கும் ஒரு மளிகைக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் கனவு. ‘அடுத்தவனை ஏய்க்காம மனசுக்கு நிம்மதியா வாழலாம் பாருங்க’ என்றார். இம்ரானின் சம்பாத்தியத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கிவிட்டார்கள். இனி அந்த இடத்தில் மளிகைக்கடை கட்டப் போகிறார். பணம் சேரச் சேர கட்டட வேலையை ஆரம்பித்துவிடலாம் என்றிருப்பதாகச் சொன்னார். இம்ரான் சற்று பொறுப்பான பையனும் கூட என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லைதான். தங்கைக்கு திருமணம், குடும்பத்துக்கு வருமானம் என்று நிறையச் சுமைகள்.
இங்கு வீட்டில் அவரே சமைத்துக் கொள்கிறார். அப்படி சமைக்காத நாட்களில் சாப்பிடுவதற்காக கடைக்குச் செல்வார். என்னிடம் கார் இல்லை என்பதால் அவரோடு தொற்றிக் கொள்வேன். இன்று ரொட்டியை எடுத்து வந்திருந்தார். ‘ரொட்டி போதுமாங்க?’ என்றேன். ‘ஆமாங்க வெளிய போனா பனிரெண்டு பதிமூணு டாலர் கழண்டு போய்டுது...வீட்டில நிறைய செலவு இருக்கு....அனுப்பணும்’ என்றார். அலுவலகத்துக்கு அருகில் உணவு விடுதி எதுவுமில்லை. இம்ரான் வரமாட்டார் என்பதால் இன்றைக்கு வேறு யாரையாவது பிடித்தாக வேண்டிய சூழல். ஒவ்வொருவரவாக விசாரித்துக் கொண்டிருந்தேன். யாரும் சிக்கவில்லை. இம்ரான் வந்து ‘வாங்க... போய் உங்களுக்கு பார்சல் வாங்கிட்டு வந்துடலாம்’ என்றார். நல்லதாகப் போய்விட்டது. கிளம்பினோம்.
தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு வந்தார். இவரிடம் எதைப் பேசுவது என்று தெரியாமல் ‘இந்த ஊர்ல டேட்டிங் எல்லாம் எப்படிங்க?’ என்றேன். என் புத்தி வேறு எதை யோசிக்கும்? அவரும் இளவயது அல்லவா? ‘கோயமுத்தூர் பையன் ஒருத்தன் இருக்கான்..லிவிங் டு கெதர்ல ஒரு அமெரிக்க பொண்ணோடதாங்க இருக்கான்’ என்றார். ‘ம்ம்ம்ம்ம்...அப்படியாங்ககககக’ என்று இழுத்தேன். இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு என்ன நினைப்பில் மிதித்தாரோ தெரியவில்லை ஆக்ஸிலேட்டரை ஏறி மிதித்துவிட்டார். அந்தச் சாலையில் இருபத்தைந்து மைல் வேகத்தில்தான் செல்ல வேண்டும். வேகம் நாற்பதைத் தொட்டிருந்தது. மரத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கான்செப்ட் எல்லா ஊரிலும் இருக்கிறது. எங்கிருந்தோ ஒரு மண்டைக்காயன் வந்துவிட்டான். பின்னால்தான் வந்தான். வந்தவன் சைரனை ஒலிக்கவிட்டான். ‘ஒரே அழுத்தா அழுத்துங்க..தப்பிச்சுடலாம்’ என்றேன். இம்ரான் கடுப்பாகிவிட்டார். லேசாக வியர்த்திருந்தது. வண்டியை ஓரங்கட்டினார். அவசர அவசரமாக ஸீட் பெல்ட்டைக் கழட்டினேன். அதுவரை மரியாதை கொடுத்துப் பேசியவர் ‘யோவ்....கொஞ்சம் அமைதியா உக்காருய்யா..நான் பேசிக்கிறேன்’ என்றார்.
இனிமேல் பேசினால் கெட்ட வார்த்தையில் திட்டினாலும் திட்டுவார் என்று அடங்கிக் கொண்டேன். என்னுடைய நோக்கம் வேறு. ‘சார் நான் வெளியூர்க்காரன்....கம்முன்னு இருந்த மனுஷனை சாப்பிடப் போலாம்ன்னு நான்தான் கூப்பிட்டேன். ஒன்றரை மணிக்கு மீட்டிங் இருக்குதுன்னு அவசரப்படுத்தினதும் நான்தான்...இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க’ என்று பேசலாம் என்றுதான் ஸீட் பெல்ட்டைக் கழட்டினேன். ஆனால் இப்படிச் சிக்கிக் கொள்ளும் போது அசையாமல் அமர வேண்டும் என்று சொன்னால்தானே தெரியும்? அசைந்தால் துப்பாக்கியை எடுத்து தலை மீது வைத்துவிடுவார்கள் என்றார். தனது வண்டியிலிருந்து இறங்கி வந்த மண்டைக்காயன் நம் ஊர்க்காரர்களைப் போலவே வரிசைக்கிரமமாக ஓட்டுநர் உரிமம், காப்பீடு என்று கேட்டான். எல்லாவற்றையும் இம்ரான் எடுத்து நீட்டினார். அடுத்தது எமிஸன் சர்டிபிகேட்டாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்திருந்தேன். அவனுக்கு வாய் தவறிவிட்டது போலிருக்கிறது. வண்டியின் பதிவு பத்திரத்தைக் கேட்டான். இம்ரான் தேடிப்பார்த்தார். வண்டிக்குள் இல்லை. ‘இப்படித்தான் நம்மூரில் எமிஸன் சர்டிபிகேட் கேட்டார்கள். கடைசியில் பேரம் பேசி காரியத்தை முடித்துவிட்டேன்..இங்கேயும் பேசட்டுமா?’ என்று வார்த்தைகள் வாய் வரைக்கும் வந்துவிட்டது. இம்ரானுக்கு இருக்கும் பதற்றத்தில் ஒரு குத்துவிட்டாலும் விட்டுவிடுவார் போலிருந்தது. எதுவும் பேசாமல் பொறுத்துக் கொண்டேன்.
‘தேடி எடுத்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று மண்டைக்காயன் தனது வண்டிக்குத் திரும்பிவிட்டான்.
‘இந்த நெம்பரைக் குறிச்சுக்குங்க...ஏதாச்சும் பிரச்சினைன்னா என் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லிடுங்க’ என்றார் இம்ரான். பிரச்சினை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மெதுவாக படபடக்கத் தொடங்கினேன்.
‘பிரச்சினையா? என்னாகும்?’
முன்பொருமுறை வண்டி பதிவுப் பத்திரம் இல்லாமல் ஓட்டிய போது அவரது நண்பர் ஒருவரை இரண்டு நாட்கள் சிறையில் அமர வைத்திருந்தார்களாம். இதைக் கேட்டவுடன் எனக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. இம்ரானை மட்டும் பிடித்துவிட்டுச் சென்றால் அவரது நண்பருக்குத் தகவல் கொடுத்துவிடலாம். ஒருவேளை நம்மையும் பிடித்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று மனம் கணக்கு போடத் தொடங்கியிருந்தது. வேணி வேறு காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை ஃபோன் செய்யச் சொல்லியிருக்கிறாள். அக்கறை இரண்டாம்பட்சம். எந்த நேரத்தில் என்ன சேட்டையைச் செய்து கொண்டிருக்கிறானோ என்று கண்காணிப்பதற்கான அழைப்புகள் அவை. இரண்டு நாட்கள் பேசவில்லை என்றால் அவளது கற்பனைக் குதிரை தாறுமாறாக ஓடத் தொடங்கிவிடும். இம்ரானிடமிருந்த பதற்றம் எனக்கு வந்திருந்தது. தோட்டத்து கருப்பராயனை வேண்டிக் கொண்டிருந்தேன். அநேகமாக இம்ரான் அல்லாவை வேண்டிக் கொண்டிருந்திருப்பார்.
மண்டைக்காயன் திரும்ப வந்து ‘இருபத்தஞ்சுலதான் போய் இருக்கணும்...நாற்பதுல போயிருக்க...நான்கு பாய்ண்ட் விதிமுறை மீறல்....நூற்று அறுபத்தொன்பது டாலர் அபராதம்’ என்றான். இந்தப் புள்ளி அதிகரிக்க அதிகரிக்க அபராதத் தொகை அதிகரிக்கும். ஒரு டாலர் அறுபத்தேழு ரூபாய் என்றாலும் கூட பதினோராயிரம் ரூபாய் அபராதம். ரசீதைக் கொடுத்துவிட்டு ‘டேக் கேர்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். இதை ஆன்லைனில் கட்டலாம் அல்லது நேரடியாக நீதிமன்றத்திலும் கட்டலாம். ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைத்து பத்து டாலரை மிச்சம் பிடித்துக் கொண்டிருந்தவருக்கு பெரிய இடியை தலை மீது இறக்கிவிட்டேன். இவ்வளவு பெருந்தொகையை பேரம் எதுவும் பேசாமல் போட்டுத் தாளித்தால் அடுத்த முறை எப்படித் தவறு செய்ய மனம் வரும்? அதனால்தான் இந்த ஊரில் போக்குவரத்து அவ்வளவு ஒழுங்குடன் இருக்கிறது.
‘ஸாரி இம்ரான்...என்னாலதான்...நான் கொடுத்துவிடட்டுமா?’ என்றேன்.
‘அதெல்லாம் பிரச்சினையில்லை...இதெல்லாம் ஒரு பாடம்தானே’ என்றார். பாடம் சரிதான். ஆனால் காஸ்ட்லி பாடம். அதன் பிறகு இம்ரானின் வண்டியின் வேகம் இருபதைத் தாண்டவில்லை. இன்னமும் எப்படியெல்லாம் மிச்சம்பிடித்து இந்த இழப்பை ஈடுகட்டலாம் என்று அவரது மனம் கணக்கு போட்டிருக்கக் கூடும். மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதனுக்கு இவ்வளவு பெரிய இழப்பை உருவாக்கிய பாவத்தை எப்படிச் சரி செய்ய முடியும் என்று என் மனம் கணக்குப் போடத் தொடங்கியிருந்தது.
12 எதிர் சப்தங்கள்:
Ha ha ha ha ha ha. Paavam avar. Veetuku vaanga. Unga wife indha padhiva padikalana ungala potu kuduthrulaam veetla.....
Your writing style reminds me of Sujatha :)
வருத்தம் தான்.
//ஸாரி இம்ரான்...என்னாலதான்...நான் கொடுத்துவிடட்டுமா?’ என்றேன்//
இத கேட்ட நீங்க அவருக்கு கோவம் கொறஞ்ச பெறவு எதுக்கு 40 ஐ தொட்டாருன்னு கேட்டு சொல்லிருங்க.
நல்ல நகை முரண். போக்ஸ்வேகன் கதை இந்தியாவில் நடந்திருந்தால் என்னவாயிருக்கும்?
உங்கள் நண்பருக்கு நான்கு பாயிண்ட் கியடித்திருக்கிறது அவரை ஆன்லைனில் அபராதம் செலுத்தாமல் கோர்ட்டுக்கு போனால் முதல் தடவையாக இருந்தால் அவரை மன்னித்து அதை இரண்டு பாயிண்டுகளாக குறைத்துவிடுவார்கள் அல்லது சில சமயங்களில் அபராதம் சற்று அதிகமாக விதித்து பாயிண்ட் இல்லாமல் பண்ணிவிடுவார்கள்... அவருக்கு இப்போது வெட்டியாக இருக்கும் பல வக்கில்களிடம் இருந்து போஸ்டலில் மெயில்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும் அதையெல்லாம் அப்படியே குப்பையில் போட சொல்லிவிடுங்கள் அவர்களால் ஒன்றும் பிரயோசனம் இருக்காது நாம் நேரிலே ஜட்ஜிடம் பேசலாம் அதுதான் நல்லது
18 வருஷங்கள் இங்கே குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் அனுபவஸ்தன் சொல்லுறேன் கேட்டுக்க சொல்லுங்க...அப்புறம் நானும் மதுரைக்காரந்தான்
Oh my god.
Trinity church opposite la irukura junction thaane, naanum oru vaati moi vaithu ullen
By the way Imran is My Machan����
அனுபவஸ்தன் சொல்றேன் கேளுங்க. :)
ட்ராஃபிக் போலீஸ்காரர் நிறுத்தினா ”லைசன்ஸ் அண்ட் ரெஜிச்ட்ரேஷன் ப்ளீஸ்” என்பார் முதலில். இரண்டும் இருந்தால் அடுத்து, இன்ஷ்யூரன்ஸ் கேட்பார். எது இல்லையோ அதற்குத்தக அபராதம். பதிவுப்பத்திரம் இல்லாததற்காக காவல் என்பது எனக்கு செய்தி. மானிலத்துக்கு மானிலம் இது வேறுபடும் போல. காரணம் பதிவுப்பத்திரம் இல்லாமல் நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் அபராதம் கட்டியிருக்கிறேன்.
”அவர்கள் உண்மைகள்” சொன்னவாறு, இது முதல் அனுபவம் என்றால், நேரடியாக நீதிமன்றத்துக்கே சென்று அபராதம் செலுத்துவது. இதன்மூலம் அபராதம் குறையும். அதற்கு, காவலர் தந்த ரசீதில் “Pleading not guilty" என்று தேர்வு செய்து அனுப்பினால் ஒரு நாள் நேரே வரச்சொல்வார்கள்.
இன்னொன்றும் இருக்கிறது. Defensive Driving course. இது எல்லா விதிமீறலுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை (State dependent-தான் என்று நினைக்கிறேன்) அரசு அங்கீகரித்த ஓட்டுநர் பயிற்சி நிலையங்களில் அல்லது இணையத்தில் இந்த பயிற்சியை முடித்து சான்றிதழ் வாங்கி அளித்தால் இந்த விதிமீறல் ஓட்டுனர் வரலாறில் பதியாது. என்பதால் இன்ஷ்யூரன்ஸ் ப்ரீமியம் அதிகரிக்காமல் தப்பிக்கலாம். இல்லையென்றால் அடுத்து இன்ஷ்யூரன்ஸ் எடுக்கும்போது காப்பீடு நிறுவனங்கள் மிக எளிதாக “இம்ரான், நீங்கள் ’நிசப்தம்’ மணிகண்டனோடு போகும்போது, வேகமாக போய் டிக்கெட் வாங்கி இருக்கிறீர்களே” என்பார்கள். (ஒவ்வொரு டிக்கட்டும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும்)
இன்னொன்று மிக முக்கியம் - உங்களுக்கு. காவலர் காரை நிறுத்தினால் அவரது அனுமதியின்றி இறங்கவோ பெல்டை கழற்றவோ செய்யாதீர்கள். அதற்கு தனி அபராதம் உண்டு. எனவே அமைதியாக இருக்கவும். கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்கள், அல்லது அவர் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது மெல்ல உங்கள் ஐயங்களை கேளுங்கள்.
அடுத்து : ஓட்டுனரின் கைகள் இரண்டும் காவலர் பார்வையில் படுமாறு ஸ்டியரிங்கில்தான் இருக்கவேண்டும்.
ஹா ஹா! இம்ரான் சாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :-) டாஸ்மாக்ல குறைந்தபட்ச மரியாதை எதிர்பார்க்குற மாதிரிதான்,நாம நம்மூரு போலிஸார்ட்டயும் மரியாதை எதிர்பாக்க வேண்டியிருக்கு.
சமீபமா ஹெல்மெட் போடாம வந்த ஒருத்தரை ட்ராபிக் போலிஸ் அடிச்சு, அடி வாங்கினவர் காது கேட்காமலே போச்சாம். நம்மூர்ல போக்குவரத்து விதிகளை முறையா மக்கள் பின்பற்றவும், போலிஸ் மக்களுக்கு மரியாதை குடுக்கவும் பல காலங்கள் பிடிக்கும். நம்மூர்ல நானோ கார் 2லட்சம் வருது. கத்தார்ல ரெட் சிக்னல் தாண்டி போனா 1லட்ச ரூபா அபராதம். நம்மூர்ல இவ்ளோ கடுமையான அபராதங்கள் வசூலிப்பது சாத்தியமில்லை. நம்ம ஆட்கள் மெல்லத்தான் வருவாங்க. (தேவர் மகன் சிவாஜி வாய்ஸ்ல படிச்சுக்கவும்) :-)
Post a Comment