ஊருக்கு வந்தாகிவிட்டது. இரண்டு நாட்களாக மந்திரித்து விட்டு கோழியாகவே திரிந்தேன். ஒரு மாதம் அமெரிக்க இரவுக்கும் பகலுக்கும் பழக்கப்பட்டிருந்த உடல் இங்கு வந்த பிறகு மதியத்தில் தூக்கமும் இரவில் விழிப்புமாக தாளித்துவிட்டது. ஆனாலும் ஆசுவாசமாக இருக்கிறது. நமக்கு பழக்கப்பட்ட மண்ணுக்குத் திரும்பி வந்துவிட்ட ஆசுவாசம். ‘இது நம்ம ஏரியா’ என்கிற செகளரியம் அது. திங்கட்கிழமை முழுமையாகத் தூங்கிவிட்டேன். நேற்று அலுவலகத்துக்கு வந்தாலும் வேலை எதுவும் செய்யவில்லை. வேலை இருக்கிறதுதான். ஆனால் மெதுவாகச் செய்து கொள்ளலாம்.
டென்வர் விமான நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் ஒரு நண்பர் அழைத்து ‘பிரயாணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்’ என்றார். அவர் நல்ல நினைப்பில்தான் கூறியிருக்கிறார். அவருடைய வாழ்த்தின் காரணமாகவோ என்னவோ பக்கத்தில் ஒரு தெலுங்கு தம்பதியினர் அமர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் பத்து இந்தியர்களை அழைத்து நிறுத்தினால் ஏழு பேர் தெலுங்கர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா கனவு தேசம். பொக்கனாத்தி கல்லூரி என்றாலும் சரி- உயர்கல்விக்காக அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். கைக்காசைச் செலவு செய்துதான் படிக்கிறார்கள். முப்பத்தைந்திலிருந்து ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பிடிக்கிறது. தம் கட்டி செலவு செய்துவிட்டால் இரண்டு வருடங்களில் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்து பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதனால் திரும்பிய பக்கமெல்லாம் ஏழுகொண்டலவாடாதான். இந்தத் தெலுங்கு தம்பதியினருக்கு நான்கு மகன்கள். நான்கு பேரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஆறு மாதங்களுக்கு முன்பாக வந்தார்களாம். ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒன்றரை மாதங்கள். இனி குளிர்காலம் தொடங்குவதால் இந்தியா திரும்புகிறார்கள். மீண்டும் ஆறு மாதம் கழித்து வருவார்களாம்.
காடாறு மாதம். நாடாறு மாதம் மாதிரி. ‘அமெரிக்காவிலேயே இருந்துக்கலாம் அல்லவா?’ என்று கேட்டதற்கு சிரித்தார்கள்.
‘நமக்கு ஒத்துவராது பாபு....ஊர்ல நிறைய சங்கதி இருக்கு’ என்றார் அந்த பெரியவர்.
அவருடன் அதற்கு மேல் பேசாமல் நிறுத்தியிருக்க வேண்டும். எனக்கு வாயில் வாஸ்து சரியில்லை என்பதால் பேச்சுக் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். விடிய விடிய பேசிக் கொண்டேயிருந்தார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அதை அந்த மனிதர் புரிந்து கொள்ளவேயில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தோளைத் தொட்டு ஏதாவது கேள்வி கேட்டார். அத்தனையும் பாடாவதியான கேள்விகள். ஒவ்வொரு முறையும் ஓடுகிற படத்தை நிறுத்திவிட்டு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவரது மனைவி இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. தூங்கத் தொடங்கியிருந்தார்.
சலித்துப் போய் ‘உங்களுக்கு தூக்கம் வரலையா சார்?’ என்றேன். ‘லேது பாபு’ என்றார். அதுக்கு ஏன் என்னைக் கொல்லுறீங்க என்று நினைத்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று எழுந்து நின்று பேண்ட்டை இடுப்புக்கு மேலாக இழுத்துவிடுவதும், சில நிமிடங்கள் நின்று கொண்டிருப்பதும், மீண்டும் அமர்ந்து கேள்வி கேட்பதுமாக தூள் கிளப்பினார். சினிமாக்களில் மட்டும்தான் பயணங்களின் போது நாயகர்களுக்கு அதிரூப சுந்தரிகள் அறிமுகமாகிறார்கள். ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்களுக்கு அப்படியெல்லாம் நடப்பதேயில்லை. அது ரயிலாக இருந்தாலும் சரி பேருந்தாக இருந்தாலும் சரி விமானமாக இருந்தாலும் சரி. விதி வலியது. இதுதான் ரியாலிட்டி என்று தெரிந்தாலும் பயணச் சீட்டு பதிவு செய்த தருணத்திலிருந்தே நம்முடைய கற்பனை சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். பயண நேரம் நெருங்க நெருங்க கேட்கவே வேண்டியதில்லை. இருபத்தேழாவது இருக்கை நம்முடையது என்றால் இருபத்தேழாவது இருக்கையைக் கண்டுபிடிப்பதை விடவும் இருபத்தாறிலும் இருபத்தெட்டிலும் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் மனம் குறுகுறுக்கும். கடைசியில் இப்படி யாராவது வந்து கற்பனை சிறகுகளை முறித்து கீழே போட்டு அதன் மீது அமர்ந்து கொள்கிறார்கள்.
கடைசி வரைக்கும் படமும் பார்க்கவில்லை. தூங்கவுமில்லை. அவருக்கு முழுமையாக காதைக் கொடுக்கத் தொடங்கியிருந்தேன்.
அமெரிக்கா நல்ல நாடுதான். காற்று நீரிலிருந்து அத்தனையும் சுத்தமாக இருக்கிறது. கீழ்மட்டத்தில் பெரிய அளவில் லஞ்சம் இல்லை. கல்விக்கென்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. அருமையான சுகாதார வசதிகள். சாலைகள் அற்புதமாக இருக்கின்றன. நல்ல சம்பளம். சேமிப்பை அதிகரிக்க முடிகிறது. சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் ஒரு மேலாளர் கேட்டார்- ‘இந்த நாட்டிலேயே இருந்துக்க சொன்னா இருந்துக்குவீங்களா?’ என்று. யோசிக்கவே இல்லை. ‘என்னால் இருக்க முடியாது’ என்றேன். இந்தியாவில் இருக்கும் சுவாரசியம் இங்கு இல்லை என்று தோன்றியது. நிறைய மனிதர்கள் இருக்க வேண்டும். அவர்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்- மனம் இதற்கு பழகியிருக்கிறது. வெறும் வாகனங்கள் மட்டுமே இரையும் அமெரிக்காவில் வாழ்நாள் முழுக்கவெல்லாம் இருக்கும் மனநிலை எனக்கு இல்லை.
அதைத்தான் பெரியவரும் சொல்லிக் கொண்டிருந்தார். ஹைதராபாத் குக்கட்பல்லியில் அவருடைய வீடு இருக்கிறது. மகன்களின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் வருடம் ஒரு முறை வந்துவிட்டுச் செல்கிறார்கள். ‘அப்பப்போ குக்கட்பல்லி நினைப்பு வந்துடுது’ என்றார். மண்ணுடனான நமது பந்தம் உணர்வு பூர்வமானது. ஏதாவதொரு வகையில் அதனுடன் ஒட்டிக் கொள்கிறோம். என்னதான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் பிடித்திருந்தாலும் நம்முடைய உணர்வுகள் நம் சொந்த ஊருடன் பிணைந்திருக்கின்றன. அதை உடைப்பதும் துண்டித்துக் கொண்டு வாழ்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை.
நேற்று அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள அல்சூர் புத்தகக் கடையில் குமுதம் விகடன் கல்கி என்று வாங்கி வருவதும், கும்பகோணம் டிகிரி காபி கடையில் தோசை தின்பதுமாக நாளை ஓட்டிக் கொண்டிருந்தேன். மதியத்துக்கு மேலாக தள்ளுவண்டி கொய்யாக்கடைக்காரரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் போது அவரிடம் ஒரு முறை ஃபோனில் பேசியிருந்தேன் - அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ‘அமெரிக்காவில் இருந்தெல்லாம் கூப்பிட்டீங்க...கண்ணுல தண்ணி வந்துடுச்சு சார்’ என்றார். எளிய மனிதர் அவர். ‘ஒரு மாசமா ஊர்ல என்ன விசேஷம்?’ என்ற ஒரு கேள்விக்கு பதிலாகச் சொல்ல அவரிடம் நூறு கதைகள் இருக்கின்றன. இந்த தேசமே கதைகளால் நிரம்பியிருக்கிறது எனத் தோன்றியது. எல்லாவற்றிலுமிருந்தும் ஒரு கதையை உருகி விட முடிகிறது. இப்படி கதைகளாலும் பேச்சுக்களாலும் ஆன இந்த தேசத்தை விட்டுவிட்டு வாழ்வது எனக்கு லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை.
ராமராஜன்தான் நினைவுக்கு வருகிறார்- சொர்க்கமே என்றாலும்...
ராமராஜன்தான் நினைவுக்கு வருகிறார்- சொர்க்கமே என்றாலும்...
6 எதிர் சப்தங்கள்:
நிதர்சனமான வரிகள் ...."மண்ணுடனான நமது பந்தம் உணர்வு பூர்வமானது. ஏதாவதொரு வகையில் அதனுடன் ஒட்டிக் கொள்கிறோம். என்னதான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் பிடித்திருந்தாலும் நம்முடைய உணர்வுகள் நம் சொந்த ஊருடன் பிணைந்திருக்கின்றன. அதை உடைப்பதும் துண்டித்துக் கொண்டு வாழ்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை"
நான் துபையில் கடந்த 10 வருடங்களாக பணி புரிகிறேன் . இங்கு குடும்பத்தோடு வசித்தாலும் சொந்த ஊரின் நினவு தினமும் வந்து போகும் . இங்கு சொகுசு காரில் பயணம் செய்தாலும் , நம்மூரில் சைக்கிள்லோ , பைக்கிலோ செல்வதற்கு ஈடாகாது ... புலி வாலை புடித்தாகி விட்டது . விட முடியவில்லை
" சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா " , என்ன செய்வது பலரது சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஆனால் எல்லோருமே ஒரு நாள் சொந்த ஊரில் செட்டில் ஆக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.
அருமையாக சொன்னீங்க! மண்ணுடனான நமது பந்தம் உணர்வுப் பூர்வமாக அமைந்துவிடுகிறது. உள்ளூரிலேயே கூட வெளியூர் சென்றால் உள்ளூர் நினைப்பாகவே பலருக்கு இருக்கும். இந்த பாசம்தான் நமது பலம்! பலவீனமும் கூட! நன்றி!
விடுமுறையில் தாய் நாடு திரும்பும்போது, திரும்பியதும் வரும் ஒரு மன நிறைவு பாருங்க... அடடா... அந்த சுகத்திற்கிணையேதுமில்லை ஐயா...
ஆங்கில பழமொழி ஒன்று ஞாபகம் வருது..... East or West, Home is the best.
//அமெரிக்கா நல்ல நாடுதான். காற்று நீரிலிருந்து அத்தனையும் சுத்தமாக இருக்கிறது. கீழ்மட்டத்தில் பெரிய அளவில் லஞ்சம் இல்லை. கல்விக்கென்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. அருமையான சுகாதார வசதிகள். சாலைகள் அற்புதமாக இருக்கின்றன. நல்ல சம்பளம். சேமிப்பை அதிகரிக்க முடிகிறது. சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் ஒரு மேலாளர் கேட்டார்- ‘இந்த நாட்டிலேயே இருந்துக்க சொன்னா இருந்துக்குவீங்களா?’ //
அந்த மேலாளர் போன் நம்பர் அல்லது இமெயில் கிடைக்குமா? நமக்கு இந்தியாலே ஒன்னும் அமைய மாட்டேங்குது .... அஞ்சு வருஷம் அங்கிருந்தது... இன்னும் ஒரு அஞ்சு வருஷம் இருக்க ப்ளான் இருக்கு. மற்றபடி எப்போ வெளிநாட்டில் இருந்தாலும்.... எனக்கு ராமராஜன் பாட்டு தான் மனசிலே ஓடுது... ரூவாய் ரூவாய் தான், டாலர் டாலர் தான். திருப்பூர்லே பனியன் கம்பெனி வச்சி கடைசி காலத்திலே செட்டில் ஆகணும்... பெங்களூர் சொத்தை கட்டி மேய்க்கிறது கட்டுபடி ஆகாது.... எதோ சொல்லனும்னு தோணிச்சு...
Post a Comment