Oct 14, 2015

மாட்டுக்கறி

முதன் முறையாக ப்ரான்ஸ் சென்றிருந்த போது வார இறுதி நாளொன்றில் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். காலை சிற்றுண்டி பிரச்சினையில்லை. ஹோட்டலில் ரொட்டியும் வெண்ணையும் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துண்டுகளை விழுங்கியிருந்தேன். ஆனால் பதினோரு மணிக்கெல்லாம் வயிற்றுக்குள் கபகபவென்றாகியிருந்தது. சுற்றச் சென்றிருந்த ஊர் ஒன்றும் பிரமாதமான ஊர் இல்லை. கிராமம். ரோமானிய வரலாற்றுடன் தொடர்புடைய ஊர் என்று சொல்லியிருந்தார்கள். ப்ரான்ஸில் நல்ல ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே சமாளிப்பது கஷ்டம். என்னுடையது நொள்ளை ஆங்கிலம். ஒவ்வொருவரிடமும் மூன்று முறையாவது சொல்லிப் புரிய வைக்க வேண்டியிருந்தது. பசி கண்ணாமுழியைத் திருகக் கடைசியாக ஒரு பர்கர் கடையைக் கண்டுபிடித்த போதுதான் ஆசுவாசமாக இருந்தது. என்னுடைய போறாத காலம் அவர்களிடம் ‘Hot dog’ மட்டும்தான் இருந்தது. 2008 ஆம் நடந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதுவரை அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. வெளிநாட்டில் நாயும் நரியும் தின்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக அதை நாய்க்கறி என்று நினைத்துக் கொண்டேன். ‘என்ன சொன்னீங்க?’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர?’ என்று கேட்ட போது பீஃப் மற்றும் போர்க் இருந்தது. கோழியும் இல்லை. ஆடும் இல்லை. பன்றிக்கு மாடு பரவாயில்லை என்று வாங்கித் தின்றுவிட்டு சுற்றத் தொடங்கியிருந்தேன்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு. சீனாவில் யூளின் என்னும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான நாய்களைக் கொன்று தின்கிறார்கள். பாம்பு, தவளை என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அருவெருப்பாகவே இருக்காதா?

எனக்கு எப்பொழுதுமே மாட்டுக்கறி மீது அருவெருப்பு எதுவும் இருந்ததில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் ப்ராய்லரைவிடவும் சாக்கடையில் கொத்தும் நாட்டுக் கோழிதான் சுவை என்று நாக்கு சான்றிதழ் எழுதுகிறது. ஆற்று மீனைவிட ஏரி மீன் நன்றாக இருக்கிறது என்று சாலையோர மீன் கடையில் வாங்கினால் அவன் சாக்கடையில் பிடித்த மீனைத் தலையில் கட்டுகிறான். இந்தக் கண்றாவிகளையெல்லாம் ஒப்பிடும் போது மாடு பிரச்சினையே இல்லை. ஆனால் அவை மீது ஒரு soft corner உண்டு. இளம்பருவத்திலிருந்தே நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பசுவைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதாலும், பசுவின் முகத்தை மிக அருகாமையில் பார்க்கும் போது அதில் கவிந்திருக்கும் மென்சோகமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மாட்டைக் கொல்லக் கூடாது என்று சொல்லும் அருகதை எதுவும் எனக்கில்லை. உயிர் என்று வந்துவிட்டால் எல்லாமும் உயிர்தான். கோழியைக் கொன்றாலும் பாவம்தான். மீனைத் தின்றாலும் பாவம்தான். வாரத்தில் ஏழு நாட்களுக்குக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் கோழி, ஆடு, மீன் என்று தின்றுவிட்டு ‘நீ மாட்டைக் கொல்லாதே; பன்றியைத் தின்னாதே’ என்று எப்படிச் சொல்ல முடியும்? இவையெல்லாம் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம் என்கிற அளவில்தான் என்னுடைய புரிதல் இருக்கிறது.

எங்கள் ஊரில் சந்தைக்கடைக்கு அருகில் இருக்கும் மாட்டுக்கறிக்கடையில் நான்கு கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலில் காதுக்குப் பக்கமாக ஓங்கி அடித்துக் கொல்வதை ஒளிந்து நின்று பார்ப்போம். ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மாட்டைத் தான் கொல்வார்கள் என்பதால் விடிந்தும் விடியாமலும் ஓடினால்தான் பார்க்க முடியும். சூரியன் வெளியில் வந்தபிறகு தோலை உரித்து கறியைத் தொங்கவிட்டிருப்பார்கள். ஆட்கள் வரத் தொடங்குவார்கள். அதே போலத்தான் மார்கெட் அருகில் பீப் பிரியாணிக் கடையும். பொழுது சாயும் நேரங்களில் கூட்டம் அலை மோதும். பாவம்தான். ஆனால் உண்பவர்களுக்கு விருப்பமிருக்கிறது. உண்கிறார்கள். அதை சாப்பிடக் கூடாது என்று எப்படித் தடுக்க முடியும்? கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம்? ஏற்றுமதிதான்.

கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட இருபத்து நான்கு லட்சம் டன் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதியாளர்கள் நாம்தான். Pink revolution என்ற பெயரில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் என்ற வேகத்தில் இந்த ஏற்றுமதி வளர்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பில் கணக்குப் போட்டால் முப்பதாயிரம் கோடியைத் தாண்டுகிறது. இதையெல்லாம் தடுக்கமாட்டார்கள். பசு புனிதம். சரிதான். அவை கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் ஏற்றுமதியைத்தானே முதலில் நிறுத்த வேண்டும்? ம்ஹூம். தொழிலதிபர்கள் குறுக்கே நிற்பார்கள். அந்நியச் செலாவணி பாதிக்கப்படும். நாட்டின் வருமானம் குறையும். ஏகப்பட்ட காரணங்களை அடுக்குவார்கள்.

இறைச்சி ஏற்றுமதியுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட இன்னொரு தொழிலான தோல் தொழிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் தொழிலைச் செய்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் பெரும் தொழிலதிபர்கள்- உள்ளூர் மற்றும் மாநில அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தொழிலதிபர்கள். விடுவார்களா?

மாட்டு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்வதைப் பற்றி பேசாமல் ஏன் குப்பனும் சுப்பனும் தின்னும் உள்ளூர் மாட்டுக்கறியைத் தடை செய்யச் சொல்கிறார்கள் என்று யோசித்தால் நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. ஆனால் அடிப்படை இந்துத்துவவாதிகளை குளுகுளுக்க வைக்க மாட்டுக்கறி தின்னத் தடை என்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். குருட்டுவாக்கில் இசுலாமியர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொலைவெறிக் கும்பல் ரத்தைத்தை நாவால் நக்கி ருசி பார்க்கிறது. இத்தகைய அடிப்படைவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ‘மாட்டுக்கறியைத் தின்போம்; புரட்சியை மலரச் செய்வோம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாமும் நம்முடைய மைக்ரோ புரிதல்கள். இதையெல்லாம் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல், பொருளாதார, தொழில் சார்ந்த பின்னணி வேறு எதுவாகவோ இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மாடுகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன என்பதை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு சலனப்படம் கிடைத்தது. சில வினாடிகளுக்கு எச்சிலை விழுங்க முடியவில்லை. இயந்திரகதியில் கொன்று அடுக்கிறார்கள். தானியங்கித் தகடுகளில் நிறுத்தப்பட்டு மாடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் தலை வாகாக இயந்திரத்தினால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தை வைத்து ஒருவர் மாடுகளின் நெற்றில் துளையிடுகிறார். துள்ளல் கூட இல்லாமல் விழுகின்றன. கொடுமை. பார்க்கவே முடியவில்லை.


இப்படி நாடு முழுவதும் விரவியிருக்கும் ஆயிரத்துக்கும் மேலான இறைச்சித் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாடுகளை வரிசையில் நிறுத்திக் கொன்று கறியை வெட்டி பொட்டலம் கட்டி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அள்ளி வீசுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எத்தனிப்பதில்லை? இந்துத்துவத்தின் ஆணிவேர் பாய்ந்து நிற்கும் உத்தரப்பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும்தான் இத்தகைய ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடியை நட்டு வைத்திருக்கிறார்கள். 

இந்த புனித தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சியின் அளவோடு ஒப்பிடும் போது உள்நாட்டில் மிகச் சொற்பமான சதவிகிதத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை நோக்கி ‘நீ தின்னக் கூடாது’ என்று சொல்வதால் மட்டும் பசுவின் புனிதத் தன்மையைக் காப்பாற்றிவிட முடியாது என்று இந்த அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள்? வாக்கு எந்திரத்துக்கும் மோடி பகவானுக்கும்தான் வெளிச்சம்.