‘தமிழ் படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமே இல்ல தம்பி. அதில் தொடர்ச்சியா ஏதாச்சும் செய்கிறோமா என்பதுதான் பெரிய விஷயம்- குறைந்தபட்சம் வாசிச்சுட்டாச்சும் இருக்கணும்’ என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். ஓய்வு பெற்றுவிட்ட தமிழாசிரியர். அவர் சொல்ல வந்த கருத்து நேரடியானதுதான். இன்றைக்கு முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வியில்தான் பள்ளிப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு இன்னமும் தமிழோடு தொடர்பு இருக்கிறது? பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழில் படித்துவிட்டு கல்லூரியில் நுழைந்த பிறகு தமிழை விட்டு விலகிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு வேலை, குடும்பம், வெளியூர் என்று பறந்துவிடுபவர்களில் கணிசமானவர்கள் பிழைப்பு மொழியான ஆங்கிலத்துக்கு மாறிவிடுகிறார்கள். தமிழின் வரிவடிவத்தோடு ஒட்டும் இருப்பதில்லை உறவும் இருப்பதில்லை. அவர்களைக் குறை சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
இன்று மினியாபோலிஸ் நகரத்தில் தமிழ் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை அது. இந்த ஊரில் இருக்கும் தமிழர்கள் இருபது முப்பது பேர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட எண்பது குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். பள்ளிக் கூடம் என்றால் வாரம் முழுக்கவும் நடக்கும் பள்ளிக் கூடம் இல்லை. ஒரு அமெரிக்க பள்ளிக் கூடத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அறைகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று தொண்ணூறு நிமிடங்களுக்கு பாடம் நடக்கிறது. வயதுவாரியாக குழந்தைகளைப் பிரித்து, அதற்கேற்ற வகுப்புகளில் அமர வைத்து அடிப்படைத் தமிழில் ஆரம்பித்து அடுத்தடுத்த தளங்களில் பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.
தனிப்பட்ட ஆசிரியர்கள் என்று யாருமில்லை. தன்னார்வலர்கள்தான் பாடம் சொல்லித் தருகிறார்கள். வருடம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு வகுப்புக்கும் முதன்மை ஆசிரியர் இரண்டாம் ஆசிரியர் என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் முதன்மை ஆசிரியர் வர முடியவில்லை என்றால் இரண்டாம் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மற்றபடி மாணவர்களுக்கு வருகைப் பதிவு உண்டு. வீட்டுப்பாடங்கள் உண்டு. தேர்வுகள் உண்டு. இந்தத் தேர்வுகளில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்த வருடப் படிப்பைத் தொடர முடியும். இடையிடையே ப்ராஜக்ட் வேலையும் உண்டு. இவை தவிர குழந்தைகளுக்கான தமிழ் திறனை வளர்க்கும் போட்டிகளை நடத்துகிறார்கள்.
வாரத்துக்கு வெறும் தொண்ணூறு நிமிடங்களில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தெளிவான பாடத் திட்டம் வகுத்து புத்தகங்களை வகுப்பு வாரியாக அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். மினியாபோலிஸில் மட்டுமில்லை அமெரிக்கா முழுவதிலுமே பல நகரங்களில் இப்படித் தமிழ் சொல்லித் தருகிறார்களாம். இது நல்ல விஷயம். தமிழ் குழந்தைகள் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். அந்த தொண்ணூறு நிமிடங்களுக்கு வெளியில் காத்திருக்கும் பெற்றோர்கள் அளவளாவிக் கொள்கிறார்கள். பெங்களூர் மாதிரியான ஊர்களில் வசிக்கும் தமிழர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு இது.
சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பருடன் ‘பையனுக்கு தமிழ் சொல்லித் தருவது’ பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. பெங்களூரில் தமிழ் சொல்லித் தருவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. நாமாகச் சொல்லித் தந்தால்தான் உண்டு. சலிப்படைந்தவராக ‘தமிழைப் படிச்சு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்? ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன்? நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன்? எந்தப் பயனுமில்லைதான். ஆனால் இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான பந்தங்கள். நம் இரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். ‘என் பையனுக்கு தமிழ் தெரியாது’ என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். அது நம் தாய் மொழி. ஆயிரமாயிரம் காலமாக பாட்டனும் முப்பாட்டனும் பேசிய மொழியை அம்மாவிடமிருந்து நாம் வாங்கியிருக்கிறோம். அதை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்காமல் கத்தரித்துவிட்டு ‘ஆங்கிலமு ஹிந்தியும் போதும்’ என்று சலித்துக் கொள்வது நம்முடைய கையலாகத்தனம். இல்லையா?
மினியாபோலிஸ் தமிழ் பள்ளிக் கூடத்தைப் பார்த்த போது இதுதான் தோன்றியது. இந்தப் பள்ளியில் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் எள்ளளவுமில்லை. ஆனாலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உற்சாகமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளி ஒழுங்காக நடப்பதைச் சாத்தியப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் இருப்பத்தைந்து தன்னார்வலர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது மட்டுமில்லை- தமிழகத்துக்கு வெளியில் வசிப்பவர்கள்- தமிழ் பள்ளிக் கூடத்திற்கு வாய்ப்பில்லாதவர்கள் வாரத்துக்கு தொண்ணூறு நிமிடங்களைச் செயல்படுத்தினால் குழந்தைக்கு தமிழைச் சொல்லித் தந்துவிட முடியும் என்பதற்கான உந்துதலும் கூட.
ஒரே வருடத்தில் நம் குழந்தை மொத்தத் தமிழையும் கரைத்துக் குடித்து புலவர் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சினை. மெதுவாகக் கற்றுக் கொடுக்கலாம். அவசரமேயில்லை. நான்கு வயதிலிருந்து ஆரம்பித்தால் போதும். முதல் ஆறு மாதம் உயிரெழுத்து பனிரெண்டு மட்டும் படிக்கட்டும். படிப்பதோடு சேர்த்து எழுதவும் தெரிய வேண்டும். அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரைக்கும் மெய்யெழுத்து. அதற்கடுத்த ஒரு வருடம் உயிர்மெய் எழுத்து. அதன் பிறகு ஒரு வருடத்திற்கு இரண்டு எழுத்துச் சொற்கள். அதன் பிறகு ஓராண்டுக்கு மூன்றெழுத்துச் சொற்கள் அதன் பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்கிவிட்டால் போதும். மொழியைப் பொறுத்த வரைக்கும் அடிப்படையைச் சொல்லித் தருவதில்தான் சிரமம் அதிகம். முதல் கியர் பிரச்சினையில்லாமல் விழுந்துவிட்டால் அடுத்தடுத்து வேகமெடுத்துக் கொண்டேயிருக்கலாம். அதன் பிறகுதான் முதல் பத்தியில் தமிழாசிரியர் சொன்ன பிரச்சினை வருகிறது. - ‘படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமேயில்லை’. அதன் பிறகான தொடர்ச்சியை எப்படி உருவாக்குவது?
வாசிப்பு.
மொழியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டுவிட வேண்டும். அதற்கேற்ற புத்தகங்கள் வழியாகவே இதைச் சாத்தியப்படுத்த முடியும். குழந்தைகள் என்றால் படங்கள் நிறைந்த புத்தகங்கள், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு சிறார்களுக்கான சிறுகதைகள், அதைவிட வளர்ந்த குழந்தைகள் எனில் அவர்களுக்கு சுவாரசியமூட்டும் சஞ்சிகைகள் என்று வாசிக்க வைக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டுவிடுகிறோம். ‘கல்லூரியில் படிக்கும் வரைக்கும் கவிதை எழுதினேன்’ என்று சொல்லும் யாரிடமாவது ‘அப்புறம் என்னாச்சு?’ என்று கேட்டால் பதில் இருக்காது. எழுதுவதையும் வாசிப்பதையும் அதன் பிறகு நிறுத்தியிருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டம் என்றாலும் எல்லாக் காலகட்டத்திலும் நமக்கு விருப்பமான ஏதாவதொரு வாசிப்பை தாய்மொழியில் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விகடன் குமுதமாவது நம்முடைய வாசிப்புப் பட்டியலில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். வாசிப்பைக் கைவிடும் போதுதான் நம்மிடம் உறவாடிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மொழியும் ஓடிவிடுகிறது.
15 எதிர் சப்தங்கள்:
பள்ளிப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை, சூழ்நிலையை பெற்றோா்கள்தான் உருவாக்க வேண்டும். ஆனால் இன்றைய இளைய தலைமுறை பெற்றோருக்கு தீவிர வாசிப்பு பழக்கம் இருப்பாதாக தொியவில்லை. புத்தகத்தை பாா்த்தாலே தெறித்து விலகி ஓடும் அளவிற்கு நம் பள்ளிகள் புத்தகம் பற்றிய பயங்கர அனுபவத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன.
நன்றி மணிகண்டன். டிவின்சிட்டீஸ் பாடசாலை பற்றிய பதிவிற்கு நன்றி. உங்களை என் நண்பர் வீட்டிலும் , தமிழ்ப் பாடசாலையிலும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மதியம் Plymouth நூலகத்தில் சந்திப்போம்.
Nethi pottula adicha maari soneenga mani. Tamil LA type panni reply panna aasa. But mobile LA replying. Arumayaana padhivu
மிக நன்று என திருத்தம் செய்யலாமே! குறை அல்ல.
அங்கேயுள்ள தமிழர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியவேண்டும் என்ற உந்துதலில் இவ்வாறு வார இறுதியில் எல்லா மாநிலங்களிலும் தமிழ் கற்று கொள்ள செய்கின்றனர்.இல்லையென்றால் தாய் மொழி தெரியாமல் போய் விடும்.
அன்புள்ள மணி,
நீங்கள் சொல்வது உண்மையே. எங்கள் கனெக்டிகட் மாநிலத்திலும் இதே முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரு தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கலிஃபோர்னியா தமிழ் அகாடமி வகுத்துள்ள பாடத்திட்டத்தையே பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அதைத்தான் செய்கிறோம்.
இந்த பாடத்திட்டத்தை வகுத்தவர்கள் திரு.பொன்னவைக்கோ தலைமையிலான ஆசிரியர்கள் குழு.
Dear Mani, your fifth para was straight at the point. All such parents especially in India should be ashamed.
At the same time I hear another side of this story. For college admission in US you get scholarship if you show proficiency in a foreign language and that's why many parents put their kids in these schools!
திரு மணி
அருமையான பதிவு. நன்றி. அவர்களின் இணையத்தளம் அல்லது அவர்களின் பாடத்திட்டம் குறித்த இணைப்பு இருந்தால், மற்ற மாநிலங்களில் / நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பயன்படுத்த எதுவாக இருக்கும் (சில சமயம் தமிழ் நாடிலே கூட தேவைப்படும்).
ராஜ கணேஷ்
நீங்கள் சொன்ன தகவலின் படி நான் சின்னநதி புத்தகத்தை 2 வருடம் சந்தா செலுத்தினேன். இரண்டு மாதங்கள் மட்டுமே புத்தகம் வீட்டிற்கு வந்தது. பின்னர் வரவில்லை. மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. போன் செய்தால் யாரும் எடுத்து பதில் சொல்வதில்லை.
நீங்கள் என்ன ஆயிற்று என்று விசாரித்துச் சொல்லவும்.
ராஜ கணேஷ்,
http://www.amtaac.org/
நன்றி,
கார்த்திக்
Dear Mr Mani,
As usual, a very positive article, highlighting the need to preserve our roots.
I would be obliged if you can share some information regarding the other cities in the US where such facilities are available. Specifically, I would like to know about Atlanta Georgia and Orlando Florida , as my grandchildren can be enrolled.
Regards and best wishes
Shankar
California Tamil Academy (CTA) is teaching Tamil in various states and also in different countries ( UK & Dubai). Please find the link for the different locations.
http://www.catamilacademy.org/branches.html
if you need more information please contact
Thanks
Ko
Dear Shankar,
Please see the link below for Atlanta Tami School
http://www.gatamilsangam.org/tamileducation.php
Thanks
Ko
Dear Shankar,
California Tamil Academy have schools in Atlanta. Please check Greater Atlanta Tamil Sangam Website
http://www.gatamilsangam.org/tamileducation.php
Thanks
Ko
அருமையான பதிவு. நன்றி.
Post a Comment