நிசப்தம் அறக்கட்டளைக்கு வருமான வரித்துறையின் 80G மற்றும் 12 Aவுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. வருமான வரித்துறையினர் கடிதத்தை அனுப்பிவிட்டார்கள்.
80G என்பது நன்கொடையாளர்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரிவு. அறக்கட்டளைக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினால் ஆண்டு இறுதியில் வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐந்தாயிரம் ரூபாய்க்கு நன்கொடையாளர் வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். 80G பற்றி பேசும் போது நிறைய அறக்கட்டளைகள் 80G ஐத் தவறாக பயன்படுத்துவதாக ஒரு நண்பர் சொன்னார் சொன்னார். கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இதுவொரு உபாயம். அறக்கட்டளையிடம் பத்து லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு ஐம்பது லட்ச ரூபாய்க்கு ரசீது வாங்கினால் வருமான வரித்துறையினரிடம் காட்டி இருபத்தைந்து லட்சத்துக்கு வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். இப்படி நிறைய தில்லாலங்கடி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
முக்கால்வாசி கல்வித் தந்தைகள் நடத்தும் கல்வி அறக்கட்டளைகள் என்பது தங்களது முதலாளியின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற உதவும் ஒரு கிளை நிறுவனமாக இருப்பதாகவும் சொன்னார். கல்வித்தந்தைகள் மட்டுமில்லை மருத்துவத் துறை வள்ளல்கள், கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் நடத்தும் நல அறக்கட்டளைகள் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அது எப்படியோ போகட்டும். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இது போன்ற காரணங்களால்தான் அவ்வளவு சீக்கிரமாக யாருக்கும் 80G வழங்குவதில்லை என்றார்கள். ஆனால் நிசப்தம் அறக்கட்டளைக்கு விலக்கு வாங்குவதில் சிரமமேயில்லை- அல்லது உள்ளுக்குள் என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. வருமான வரித்துறையிடம் இந்த வரிவிலக்குக்கான அங்கீகாரத்தை வாங்க சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டதோடு என் வேலை முடிந்துவிட்டது.
பட்டயக் கணக்கர் திரு.மோகன் பெங்களூரில் பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளும் பெருந்தலை. தமிழர். அவருக்கு இத்தகைய சிறிய அறக்கட்டளை வேலையெல்லாம் அவசியமேயில்லை. கூடுதலான பணிச்சுமைதான். ஆனால் முகம் சுளிக்காமல் தன்னுடன் பணியாற்றும் திரு.வேணுகோபால் என்ற இன்னொரு பட்டையக் கணக்கரை இணைத்துவிட்டுவிட்டார். வேணுகோபால் அவ்வப்பொழுது அழைத்து ஏதாவதொரு ஆவணத்தைக் கேட்பார். அவர் கேட்பதை ஸ்கேன் செய்து அனுப்புவதுடன் என் வேலை முடிந்துவிடும். வருமான வரித்துறையின் அலுவலகத்துக்குச் செல்வது, அங்கிருக்கும் அதிகாரிகளுடன் பேசுவது, தேவையான ஆவணங்களை முறைப்படுத்துவது, கணக்கு வழக்கை வருமான வரித்துறையினருக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவது என அத்தனை வேலையையும் அவர் பார்த்துக் கொண்டார்.
இன்னொரு முக்கியமான மனிதர் திரு.பாலு. வருமான வரித்துறையில் பணியாற்றுகிறார். 'sir, fire and forget. மறந்துடுங்க. நான் பார்த்துக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு துறைக்குள் கோப்பு நகர்வதற்கான முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். அவ்வப்பொழுது அழைத்து எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுவார். எந்த இடத்திலும் தடைபட்டாலும் அவர் ஒரு தள்ளு தள்ளியிருக்கிறார். அவர் விவரங்களைச் சொல்லும் போது ‘நீங்க பார்த்துக்குங்க சார்’ என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வேன்.
வேலை குடும்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி அறக்கட்டளையை நடத்த முடிகிறது என்று கேட்டால் ‘இப்படித்தான்’ என்று சொல்லத் தோன்றுகிறது. இதையெல்லாம் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இவர்களுக்கில்லை. ஆனால் முழுமையாக பொறுப்பெடுத்துக் கொண்டு தங்களது வேலைகளுக்கு இடையில் இதையெல்லாம் செய்து கொடுக்கிறார்கள். வழக்கமாக இந்த 80G அனுமதியைப் பெறுவதற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செல்வாகக்கூடும் என்றார்கள். ஆனால் பட்டையக் கணக்கர் உட்பட யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ‘இந்த பையனுக்கு உதவலாம்’ என்று ஒவ்வொருவரும் நினைத்திருக்கிறார்கள். வேலை முடிந்துவிட்டது.
ஏதாவதொருவகையில் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்கிற ஆசை இங்கு எல்லோருக்குமே இருக்கும். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் தயக்கம் இருந்து கொண்டேயிருக்கும். நம்மால் இதைச் செய்ய முடியுமா? ஆரம்பித்துவிட்டு இடையில் நிறுத்தினால் நன்றாக இருக்குமா என்று எதையாவது மனதுக்குள் போட்டுக் குதப்பி விட்டுவிடுவோம். ஆனால் அப்படியில்லை. துணிந்து தொடங்கிவிட வேண்டும். நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை மட்டும் தெளிவாகக் காட்டிவிட்டால் போதும். கண்ணுக்குத் தெரியாத மனிதர்கள் நம்மைத் தாங்கிப் பிடித்துக் கொள்வார்கள். கீழே விழ வாய்ப்பே இல்லை. இதுவொரு வகையில் inspiration ஆக இருக்கும் என்பதற்காகச் சொல்கிறேன். மேற்சொன்ன எவரையுமே நேரில் சந்தித்ததில்லை. ஆனால் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அதே போலத்தான் 12A என்பதும். வருமான வரித்துறையில் அறக்கட்டளையாக முறைப்படி பதிவு செய்து கொள்வது. அதையும் செய்துவிட்டார்கள்.
இந்தியா வந்தவுடன் இந்தப் பதிவு எண்ணுடன் கூடிய ரசீதை அச்சடிக்க வேண்டும். அதை நன்கொடையாளர்கள் வருமான வரித்தாக்கலின் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாதக் கடைசிக்குள் அந்த வேலையைச் செய்துவிடலாம் என்றிருக்கிறேன்.
நிசப்தம் அறக்கட்டளையின் வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கா வந்துவிட்டதால் எந்தத் தடையுமில்லை. முன்பு ஊட்டியைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு மருத்துவ உதவி செய்திருந்தோம். தினேஷ். அவனுக்கு தண்டுவடம் வளர்ந்து கொண்டேயிருந்தது. வளர்ந்த தண்டுவடமானது சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை நசுக்கத் தொடங்கியிருந்தது. தண்டு வட அறுவை சிகிச்சைக்காக அவனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஊருக்குச் சென்றவனால் நடக்க முடியவில்லை. மருத்துவர்களை அழைத்துக் கேட்டிருக்கிறார்கள். உள்ளூர் மருத்துவர்களிடம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அங்கே எப்படி மருத்துவம் பார்த்தார்களோ தெரியவில்லை- நிலைமை விபரீதமாகிவிட்டது. கால்கள் வீங்கத் தொடங்கியிருக்கின்றன. உடனடியாக மீண்டுமொரு அறுவை சிகிச்சையைச் செய்தாக வேண்டும். ஊட்டியிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக அழைத்து விவரத்தைச் சொன்னார்கள். தம்பியிடம் காசோலையில் கையொப்பமிட்டுக் கொடுத்து வந்திருந்தேன். ஐம்பதாயிரம் ரூபாய் நிரப்பித் தரச் சொல்லியிருந்தேன். அவர்களிடம் காசோலை சேர்ந்துவிட்டது. அநேகமாக இன்று அல்லது நாளை அறுவை சிகிச்சை நடைபெறும் என நினைக்கிறேன். தினேஷ்னின் அம்மாவும் அப்பாவும் தேயிலைத் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இது மிகப்பெரிய தொகை.
அவசரமான மருத்துவ உதவி தேவையெனில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அவ்வளவு அவசரமில்லை என்றால் அக்டோபர் 23 வரை பொறுத்துக் கொள்ளவும். ஊருக்கு வந்துவிடுகிறேன்.
பட்டயக்கணக்கர்கள் மோகன், வேணுகோபால் மற்றும் பாலு ஆகியோருக்கு நன்றி என்று சாதாரணமாக முடித்துக் கொள்ள முடியாது. பெரிய வேலை இது. இந்தத் துறையில் அனுபவமிருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்- இந்த அங்கீகாரத்தை பெறுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து. மூவரையும் எந்தக் காலத்துக்கும் நினைவில் நிறுத்திக் கொள்கிறேன்.
எப்பொழுதும் போலவே- உடனிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. இன்னமும் வேகமெடுக்கலாம்.
9 எதிர் சப்தங்கள்:
Those 3 guys are really great persons.
மணி சார்! உங்களுக்கு பாலம் கட்ட நான் மற்றும் மோகன் என்ற இரு அணில்கள் உதவியுள்ளோம்! அவையடக்கம் எல்லாம் இல்லை! உங்கள் உள்ளத்தனையது உயர்வு!
உன் வயது என் அனுபவம். ஆனால் உன் முன் சிறியவனாக என்னை உணா்கிறேன்.
வாழ்த்துக்கள்!
Super sir. You will always get good people in your life.
வாழ்த்துகள் மணி :-)
//இந்த பையனுக்கு உதவலாம்//
இந்த பதிவை திறந்து விட்டு வாசிக்கும் முன் வேறு ஒரு காணொளி யை பார்த்தேன். சினிமா துறை சம்பந்தப்பட்டது தான்.
அதில் https://www.youtube.com/watch?v=4z15UluasxU
00:40 வது நொடியிலிருந்து 3:00 நிமிடம் வரை அவர் சொல்லும் விசயங்கள் போன்றது தான் மணிக்கு கிடைத்திருக்கிறதென நினைக்கிறேன்.
Great and thanks to all.
நிச்சயமாக மாபெரும் பணிதான்.
ஒரு புறம் எழுத்து, இன்னொருபுறம் அலுவலகப்பணி, இன்னொருபுறம் சமூக சேவை, வேறோர்புறம் படிப்பு என பல நெருக்கடிக்கடிகளுக்கிடையில் உங்கள் அறக்கட்டளைப்பணி நிச்சயமாக பாராட்டுக்குறியது.
வாழ்த்துகிறேன்.
-அன்புடன் எஸ்.செளந்தரரராஜன், கோவை-5
Post a Comment