Oct 30, 2015

சாதி

எங்கே பார்த்தாலும் சாதிதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் சாதிய வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீர்ர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒரு சாதி முத்திரையைக் குத்தியாகிவிட்டது. ஒருவரைத் தப்பிக்கவிடுவதில்லை. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் தங்களின் சாதியைப்  பெயருடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நாயர்களும் ரெட்டிகளும் கோஷ்களும் கெளடாக்களும் பட்டீல்களும் இன்னபிற சாதியினரும் பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்ளாத ஒரு பக்குவம் இருந்தது. அறுபதுகளுக்குப் பிறகு முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர் என்கிற விகுதிகள் பெயர்களிலிருந்து உதிர்ந்து போயின. அதைப் பக்குவம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளுக்குள் சாதிப்பாசம் இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிற தயக்கம் உருவாகியிருந்தது. ஆனால் அதை வெகு வேகமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த பதினைந்து இருபதாண்டுகளில் தங்களுடைய சாதிய அடையாளத்தை பெருமிதத்துடன் காட்டிக் கொள்ளும் பெருங்கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ‘அப்படிக் காட்டிக் கொள்வதில் என்ன தவறு?’ என்று கேட்கலாம்தான். இப்போதைக்கு எந்தத் தவறும் இல்லாதது போல்தான் தெரியும். இப்படியே இன்னும் சில வருடங்கள் கடந்தால் தெரியும். அவனவன் சாதிப் பெருமையைக் காட்டிக் கொள்ள அடுத்தவன் கழுத்தில் கத்தியை வைக்கத் தொடங்குவான். இப்பொழுதே அப்படியொரு சூழல்தானே இருக்கிறது?

இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று வசதிகளும் வாய்ப்புகளும் பெருகப் பெருக அவற்றை வேறு எந்தக் காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறோமோ இல்லையோ- சுயசாதி பெருமைக்கு மிகுந்த திறனுடன் பயன்படுத்திக் கொள்பவர்களாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. சாதியக் குழுவில் இயங்குபவர்களில் கணிசமானவர்கள் மாணவர்களாகவும் இளைஞர்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை. ஆண்கள் பெண்கள் என்றெல்லாம் பாகுபாடில்லை. ஒரு சாதியைப் பற்றி ஏதேனும் எதிர்மறையாகப் பேசினால் புரிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் ‘உன்னை வெட்டுவேண்டா’ என்பார்கள். பெண்களாக இருந்தால் ‘நீங்கள் அப்படி பேசியிருக்கக் கூடாது’ என்பார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல் சாதியப் பற்று புரையோடிக் கொண்டிருக்கிறது. குழுமங்களிலும் விவாதங்களிலும் பெருக்கெடுக்கும் இத்தகைய சாதிய உணர்வில் ரத்தத்தை சூடேற்றிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை சாதியிலும் வெறியெடுத்துத் திரிபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். எவ்வளவு மட்டமாக வேண்டுமானாலும் கீழே இறங்குகிறார்கள். தங்களை ஆண்டவர்கள் என்று சொல்லி பெருமையும் அடுத்தவர்களை அடிமைகள் என்று சொல்லி இளக்காரமும் பேசுகிறார்கள். மறுப்பவர்களை நோக்கி எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஆயுதங்களைத் தூக்குகிறார்கள். துரத்தி வெட்டுகிறார்கள். எவ்வளவு மோசமான சூழல் இது?

ஒரு சாதியினர் தவறு செய்யும் போது அவர்களை நோக்கி எந்த விரலையும் நீட்ட முடிவதில்லை. விரலோடு சேர்த்து கைகளையும் வெட்டுவதாகச் சொல்லி வரிசை கட்டுகிறார்கள். சாதியைப் பொறுத்தவரையில் வெளிப்படையான விமர்சனம், விவாதம் என்பதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. அடுத்த சாதி குறித்தான விமர்சனம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அவரவர் சாதியில் கூட குறைகளைப் பேச முடிவதில்லை. ‘எங்களை மட்டும் ஏன் குற்றம் சொல்லுற? அவனுக மட்டும் யோக்கியமா?’ என்று இன்னொரு சாதியைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’ என்று புஜபலம் காட்டுகிறார்கள். இப்படி அடுத்தவனைக் கைகாட்டியபடியே ஆளாளுக்கு ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். சற்று பயமாகத்தான் இருக்கிறது. எந்தவித பக்குவமும் இல்லாமல் ஒரு கூட்டமே சாதிய வெறியுடன் திரிகிறது. ‘என் சாதிக்காக எவன் தலையை வேண்டுமானாலும் சீவுவேன்’ என்கிற வெறித்தனம் பயமூட்டாமல் என்ன செய்யும்? சாதியத் தலைவர்கள் இதை ரசிக்கிறார்கள். தங்களது ஆட்கள் ஏந்தி நிற்கும் ஆயுதங்களில் சொட்டுகிற மற்ற சாதிக்காரனின் ரத்தத்தை நாக்கில் தொட்டுச் சுவைத்தபடியே புன்னகைக்கிறார்கள். இந்த வெறியும் வேகமுதான் அவர்களுக்கு மூலதனம். ‘என் சாதிக்காரன் இத்தனை பேர் என் பின்னால் நிற்கிறான்’ என்று சொல்லிக் கொள்வதுதான் அவர்களுக்கான அறுவடை. ‘என் இனமே திரண்டு வா’ என்கிறார்கள். தோளில் துண்டைச் சுற்றிக் கொண்டு விடலைகளின் கூட்டம் திரள்கிறது.

ஏன் இப்படியொரு சூழல் உருவாகியிருக்கிறது? யாரைக் குற்றம் சொல்வது? தேர்தலுக்குத் தேர்தல் பெயர் தெரியாதவனையெல்லாம் அழைத்து பெட்டியைக் கொடுத்து தோளில் சால்வையைச் சாத்தி நிழற்படம் எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை சாதிகளிலும் தனது சாதிய அடையாளத்தை வைத்து அறுவடை செய்ய விரும்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தலைவர்களாகத் தலையெடுக்கிறார்கள். ஒவ்வொரு சாதியிலும் நான்கைந்து தலைவர்கள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப்படுகிற. இரண்டு பேரை இந்தக் கட்சி கொம்பு சீவினால் அந்தக் கட்சி மற்ற இருவருக்கு பரிவட்டம் கட்டுகிறது. இந்தச் சாதிய உணர்வை மட்டுப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் எந்த அரசாங்கமும் எடுக்கப் போவதில்லை போலிருக்கிறது. சாதிய அடையாளத்துடன் எந்தத் தவறு செய்தாலும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரிகள் தயங்குகிறார்கள். காவல்துறையை சாட்சியாக நிறுத்தி குருதி வேடிக்கை காட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். ‘நம் இனத்தின் உரிமையைக் காப்பாற்ற நான் மட்டும்தான்’ என்கிறார்கள். அத்தனையும் புரட்டுவாதம். அவனவன் வயிறு அவனவன் பிழைப்பு.

‘தலித் விடுதலையை முன்னெடுப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான் ‘பிசிஆர் சட்டத்தில் நம் இனத்தை சிக்கவைக்கும் கீழ்சாதிக்காரனை அழிப்பேன்’ என்று பேசுகிறவனும் அயோக்கியனாக இருக்கிறான். இரண்டு பேரையும் தட்டிக் கொடுக்கும் அரசியல்வாதியும் அயோக்கியனாக இருக்கிறான். எப்படி விளங்கும்?

எல்லாமும் வாக்கு அரசியலில் வந்து நிற்கிறது. எந்தச் சாதியின் மீது கை வைத்தாலும் அந்தச் சாதியின் வாக்குகளை வளைத்துக் கொள்ள மற்றொரு கட்சி நாக்கினைத் தொங்கப் போட்டுக் கொண்டு நிற்கிறது. எப்படித் துணிவார்கள்? நேற்று முளைத்த அரசியல் காளான்கள் எல்லாம் சுள்ளான்களாகத் துள்ளுவதற்கு இது அடிப்படையான காரணம். காலங்காலமாக மட்டுப்பட்டிருந்த சாதிய உணர்வை பீய்ச்சியடிக்கச் செய்வது அதிதீவிரமான ஆபத்துக்களை விளைவிக்கப் போகிறது. சாதிய உணர்வுக்கும் வெறிக்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு பரவிக் கொண்டிருப்பது வெறி. அதற்குத்தான் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் ‘சாதிங்கிறது அந்தரங்க உறுப்பு மாதிரி. எல்லோருகிட்டவும்தான் இருக்குது...என்கிட்ட இருக்கிறதுதான் பெஸ்ட் என்று அம்மணமாகத் திரிவதைப் போன்ற கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று. அவர் சொன்னது சரிதான். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேவலத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்றைய மற்றொரு பதிவு: தோட்டாக்கள் பாயும் வெளி

தோட்டாக்கள் பாயும் வெளி

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.

குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?

இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.


கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார். 

உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு 
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்

எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்

இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.

இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?

இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது. 

‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.

இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.

கழுவினேன் 
கையிலிருந்த பிசுபிசுப்பை.

இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம். 

இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை. 

கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை. 

இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-

துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது 
மழை

வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்

விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

ந.பெரியசாமி: 9487646819/na.periyasamy@gmail.com

Oct 29, 2015

மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி

தமிழில் நவீன நாடகங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் குழுக்களில் முக்கியமானது ச.முருகபூபதியின் மணல்மகுடி. தொடர்ந்து புதுப் புது நவீன நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ‘மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி என்னும் நாடகத்தை சில ஊர்களில் நிகழ்த்திக் காட்டிவிட்டு அடுத்ததாக பெங்களூர் வருகிறார்கள். சனிக்கிழமை (31 அக்டோபர் 2015) இந்திரா நகரில் மாலை 6.30 மணிக்கு.

நாடகம் நடக்கவிருக்கும் இடத்தின் பெயர்தான் குதர்க்கமாக இருக்கிறது. Shit Valley. மந்தைவெளி என்பதை பந்தாவாக ஆங்கிலத்தில் மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது. என்னவோ இருந்துவிட்டுப் போகட்டும். பெயரா முக்கியம்?

முருகபூபதியின் நாடகங்களில் அரங்க அமைப்பு, இசை, உரையாடல், பாடல் வரிகள் என அத்தனையும் வித்தியாசமானதாக இருக்கும். வித்தியாசமாக மட்டும் இருந்தால் பிரச்சினையில்லை. அவ்வளவு சீக்கிரமாகப் புரியாது. மண்டை காய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அவரது நாடகங்களை தொடர்ச்சியாக பார்த்துவிடும் வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. நாடகத்தை முடித்துவிட்டு வந்து வெளியில் இருக்கும் யாரிடமாவது சந்தேகம் கேட்டால் பெரும்பாலானவர்கள் ‘நக்கலடிக்கிறானோ?’ என்றுதான் பார்ப்பார்கள். அவர்களுக்கும் அவ்வளவுதான் புரிந்திருக்கிறது என்று அர்த்தம். 

நாடகத்தின் உட்பொருளை அப்படியே துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. நவீன ஓவியங்களையும் கவிதையையும் பார்வையாளனும் வாசகனும் எப்படி தனது நிலைக்கு ஏற்ப புரிந்து கொள்கிறானோ அப்படித்தான் நவீன நாடகமும். கவிதை புரியவில்லை என்றால் திரும்ப வாசிக்கலாம். ஓவியம் புரியவில்லை என்றால் இன்னுமொருமுறை உற்று நோக்கலாம். முருகபூபதியின் நாடகம் புரியவில்லையென்றால் அவர்கள் அடுத்து எந்த ஊரில் மேடையேறுகிறார்களோ அந்த ஊருக்கு பயணிக்க வேண்டும். அதுதான் கஷ்டம்.

நாடகம் புரிகிறதோ இல்லையோ- அதை ஒரு முறை பார்ப்பது நல்ல அனுபவம். அதுவும் முருகபூபதியின் நாடகங்களை.

முருகபூபதி மற்றும் அவரது குழுவினரின் அர்பணிப்பும் ஊர் ஊராக பயணித்து நாடகங்களை மேடையேற்றுவதும் எல்லாவிதத்திலும் பாராட்டுக்குரியது. பெங்களூரில் நாடகம் நடத்துவதால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் எந்தவிதமான பலனும் இல்லை. பெரும்பாலான சமயங்களில் ஏதாவதொரு வகையில் நட்டம்தான். இருந்தாலும் சலிப்பதேயில்லை. தனது ஒவ்வொரு நாடகத்தையும் இந்த ஊரில் நடத்துகிறார். 

வழக்கம்போலவே இந்த முறையும்- அனுமதியும் இலவசம்.

இடம்: 
Shit Valley
6t Main Play Ground
Defence Colony
Indranagar
Bangaluru 

விவரங்களுக்கு:
+91-9880159484
+91-9980088611
+91-9940672857

இன்றைய மற்றொரு பதிவு அந்தரங்க முகம்

அந்தரங்க முகம்

பிலிமோத்ஸவ் என்றொரு சுஜாதாவின் கதை இருக்கிறது. ஒரு சாமானிய மனிதன் பெங்களூரில் நடைபெறும் திரைப்பட விழாவுக்குச் செல்கிறான். அவனுக்கு சினிமாவைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எதுவுமில்லை. ஒரு படத்திலாவது ‘பிட்’ வந்துவிடாதா என்கிற நப்பாசைதான். விழாக்களில் திரையிடப்படும் படங்கள் சென்சார் செய்யப்படாதவை என்று நம்புகிறான். கத்தரி விழாத காட்சியை எதிர்பார்த்து இந்தத் தியேட்டருக்கும் அந்தத் தியேட்டருக்கும் மாறி மாறிச் செல்கிறான். எதுவுமே கண்ணில்படுவதில்லை. ஆனால் வேறு தியேட்டர்களில் படம் பார்க்கும் இவனுடைய நண்பன் ‘இன்னைக்கு அதைப் பார்த்தேன்; இதைப் பார்த்தேன்’ என்று புளகாங்கிதம் அடைகிறான். நாராயணன் சலித்துப் போகிறான். முப்பதைத் தாண்டியும் திருமணமாகாத குடும்பச் சுமைகளால் அழுத்தப்பட்டவன். இப்படியாவது தனக்கொரு வடிகால் கிடைக்கும் என்று ஆசைப்படுகிறான். அதுவும் வாய்ப்பதில்லை. சுஜாதாவின் முக்கியமான கதை என்று இதைப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். சுஜாதாவின் கதை சொல்லும் உத்திதான் நமக்குத் தெரியுமே. ‘முதல் வரியிலேயே கதையை ஆரம்பித்துவிட வேண்டும்’ என்று சொல்லி கொக்கி போட்டுவிடுவார். கடைசி வரைக்கும் நம்மை கொக்கியில் மாட்டி இழுத்துக் கொண்டே போய்விடுவார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் இரண்டு முகங்களாவது உண்டு. வெளியுலகத்துக்கு நாம் காட்ட விரும்புகிற அல்லது காட்டிக் கொண்டிருக்கும் முகம் ஒன்று. யாருக்குமே தெரியாத அந்தரங்கமான முகம் இன்னொன்று. உண்மையில் இந்த இரண்டாவது முகம்தான் சுவாரஸியமானது. மனக்குகையின் இண்டு இடுக்குகளில் சிக்குண்டிருக்கும் ஆழ்மன ஆசைகளும், உள்ளூர பதிந்து கிடக்கும் விபரீத கற்பனைகளும் அவற்றை முயன்று பார்க்கும் எத்தனிப்புகளும் அலாதியானவை. ‘ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் சமூகத்துக்கு நல்லது செய்தார்’ என்னும் ஸ்டீரியோடைப்பான எழுத்துக்களிலிருந்து இந்த இடத்தில்தான் செவ்வியல் படைப்புகள் என்று நாம் சிலாகிக்கக் கூடிய பெரும்பாலானவை வித்தியாசப்படுகின்றன. எல்லோருக்கும் தெரிந்த முகத்தை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். சொல்லிவிடலாம். யாருக்குமே தெரியாத அந்தரங்க முகத்தை எழுத்தாக்குவதிலும் படைப்பாக்குவதிலும்தான் படைப்பாளிக்கு உண்மையான சவால் இருக்கிறது. 

சமீபத்தில் பெங்களூர் மிரரில் ஒரு செய்தி வந்திருந்தது. தினத்தந்தியின் ஆங்கில பதிப்பு மாதிரி. பொழுது போகாத போது தைரியமாக வாசிக்கலாம். தனது கணவன் மீது மனைவிக்கு சந்தேகம். அவன் நல்லவன்தான். கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். நன்றாக பேசுகிறான். கவனித்துக் கொள்கிறான். இருந்தாலும் சந்தேகம். உளவு பார்க்க விரும்பியிருக்கிறாள். ஆண்ட்ராய்ட் செல்போன்களில்தான் நமக்கே தெரியாத ஆயிரம் ஆப்கள் இருக்கின்றனவே? அவை உண்மையில் ஆப்புக்கள். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது கணவனின் செல்போனில் நிறுவியிருக்கிறாள். அது ஒரு தில்லாலங்கடி ஆப். அவன் பேசுவது அத்தனையையும் அவனுக்கே தெரியாமல் பதிவு செய்து வைத்திருக்கிறது. சாயந்திரம் கணவனின் செல்போனை எடுத்துக் கேட்டிருக்கிறாள். பெரும்பாலானவை ஜொள்ஸ் பேச்சுக்கள். தோழிகள், உடன் பணி புரியும் பெண்கள் என்று யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்படியான ஒரு பேச்சில் தனக்கு கீழாக பணி புரியும் பெண்ணை மிரட்டியிருக்கிறான். அது எசகுபிசகான மிரட்டல். அதையும் கேட்ட மனைவி மிரட்டப்பட்டவளைத் தொடர்பு கொண்டு ‘இவனையெல்லாம் சும்மா விடக் கூடாது..நீ மட்டும் ம்ம்ன்னு சொல்லு’ என்று அவளையும் சேர்த்துக் கொண்டு இரண்டு பேராகச் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டார்கள். பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

‘அவன் என்னவோ செஞ்சுட்டு போகட்டும். என்கிட்ட ஏன் மறைச்சான்?’ என்றுதான் அந்தப் பெண் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருக்கிறாள். ‘ஆமா அவகிட்ட ஜொள்ளுவிட்டுட்டு இருக்கேன்’ என்று சொல்வது எந்தக் கணவனுக்குத்தான் சாத்தியமான காரியம்? காவு வாங்கியிருப்பாள். வீட்டிற்குள்ளேயே இரண்டு மூன்று முகங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லையா? கணவன் மனைவிக்கிடையில் மட்டுமில்லை- பொதுவாகவே வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் முகத்துக்கும் நம் அந்தரங்கமான முகத்துக்குமாக இடைவெளியைக் குறைப்பது ஒன்றும் சாதாரணக் காரியமில்லை. மிகப்பெரிய சவால். அப்படிக் குறைக்காவிட்டால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடலாம்தான். ஆனால் இடைவெளியுடனான இரண்டு வெவ்வேறு முகங்களை வெகுநாட்களுக்கு பராமரிப்பது சிரமம். நம்முடைய பிம்பத்தை நாமே அழித்துக் கொள்வோம். நீலச்சாயம் வெளுத்து ராஜா வேஷம் கலைந்து போகும். எவ்வளவுதான் நாம் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் பக்கமாகச் சென்று ‘இவனைப் பத்தி தெரியாதா?’ என்று பேசக் கூடிய ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கும். 

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் என்று நாம் நம்பக் கூடிய கிட்டத்தட்ட அத்தனை பேரையும் ஏதாவதொரு வகையில் கிழித்துத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். அதுவும் சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட காலத்தில் எவ்வளவுதான் ரகசியமாக இருந்தாலும் வெளியில் எடுத்து வந்து நாறடித்துவிடுகிறார்கள். அதற்காக நடிக்காமலும் இருக்க முடியுமா? நடிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகம் நம்மைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்திற்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் பொருந்தியிருப்பதாக ஒரு தோரணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சட்டகத்தை மீற ஏதோவொரு பயம் தடுத்துவிடுகிறது. ‘நம்மைப் பற்றி இவன் என்ன நினைப்பான்?’ ‘அவள் என்ன நினைப்பான்?’ என்கிற பயத்துடனேயே முகமூடியை அணிந்து ‘இங்க பாரு...நல்லவனுக்குரிய அம்சத்துடன் நான் இருக்கிறேன்’ என்று புன்னகையைத் தவழவிடுகிறோம். போலித்தனம். ‘இது நடிப்பு’ என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அடுத்தவர்கள் நம்முடைய போலித்தனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது நமக்கு மட்டும்தான் தெரியாது. மேலும் பகட்டு, மேலும் மெருகு என்று நாம் பல்லிலிளித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. ஒருவிதமான சுய திருப்தி அது. அடுத்தவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று நம்மை நாமே திருப்தி படுத்திக் கொள்வது.

யோசித்துப் பார்த்தால் இந்த போலித்தனம்தான் நம்மைச் சுற்றிலுமிருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணமாக இருக்கிறது. 

‘நான் இப்படித்தான்’ என்று சொல்லிக் கொள்வதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். எல்லா இடத்திலும் எல்லா விஷயங்களிலும் நம்முடைய அரிதாரங்களைக் கலைத்துவிட்டு நிர்வாணமாக நிற்க முடியாதுதான். ஆனால் முடிந்தவரையில் முயற்சித்துப் பார்க்கலாம். நம்முடைய பகட்டினாலும் நடிப்பினாலும் நமக்கு கிடைக்கும் மரியாதையைவிட நம்முடைய இயல்புத்தன்மையைக் காட்டி பெறக் கூடிய மரியாதை நமக்கு பன்மடங்கு சந்தோஷமளிக்கக் கூடியது. ஆனால் அந்தச் சந்தோஷத்தை அடைவது மிகப்பெரிய ரிஸ்க் எடுப்பது போலத்தான். நடித்துக் கொண்டிருப்பது என்பது comfort zone. அதைவிட்டு நம்மால் அவ்வளவு சீக்கிரம் வர முடியாது. அப்படியே வந்தாலும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. முதலில் எதிர்கொள்ளும் அவமானங்களும் வசவுகளும் நம்மைத் திரும்பவும் நடிப்புலகிற்குள்ளேயே தள்ளிவிடக் கூடும். 

காலங்காலமாக நம் முன்னவர்களும் நம்மைச் சுற்றியவர்களும் அணிந்து கொண்டிருக்கும் முகமூடியை நாம் மட்டும் கழற்றுவது அப்படி சுலபமான காரியமா என்ன?

வெங்கட் சாமிநாதன் - கூட்டம்

எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விட்டல் ராவ், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், ப.கிருஷ்ணசாமி, மகாலிங்கம், பாவண்ணன் மற்றும் திருஞான சம்பந்தம் முதலானவர்கள் பேசுகிறார்கள். இவர்கள் அனைவருமே வெ.சாவுடன் பழகியவர்கள் என்பதால் நிகழ்வு உணர்வுப் பூர்வமானதாக இருக்கக் கூடும்.

நிகழ்ச்சியில் இயக்குநர் அருள்மொழியின் வெ.சா குறித்தான ஆவணப்படம் ஒன்றையும் திரையிடுகிறார்கள். 

வரும் ஞாயிறு காலையில் 01.11.2015 பத்து மணியளவில் தொடங்கும் இந்த நிகழ்வில் வாய்ப்புள்ள பெங்களூர்வாசிகள் கலந்து கொள்ளலாம்.

இடம்:
Sai Mitra Meadows,
Community Hall,
August Park Road,
1st-A Cross, Kagadasapura,
C.V.Raman Nagar,
Bangalore- 560093

விவரங்களுக்கு: திருஞான சம்பந்தம்- 09448584648 / பாவண்ணன் - 9449567476

Oct 28, 2015

சொர்க்கமே...

ஊருக்கு வந்தாகிவிட்டது. இரண்டு நாட்களாக மந்திரித்து விட்டு கோழியாகவே திரிந்தேன். ஒரு மாதம் அமெரிக்க இரவுக்கும் பகலுக்கும் பழக்கப்பட்டிருந்த உடல் இங்கு வந்த பிறகு மதியத்தில் தூக்கமும் இரவில் விழிப்புமாக தாளித்துவிட்டது. ஆனாலும் ஆசுவாசமாக இருக்கிறது. நமக்கு பழக்கப்பட்ட மண்ணுக்குத் திரும்பி வந்துவிட்ட ஆசுவாசம். ‘இது நம்ம ஏரியா’ என்கிற செகளரியம் அது. திங்கட்கிழமை முழுமையாகத் தூங்கிவிட்டேன். நேற்று அலுவலகத்துக்கு வந்தாலும் வேலை எதுவும் செய்யவில்லை. வேலை இருக்கிறதுதான். ஆனால் மெதுவாகச் செய்து கொள்ளலாம். 

டென்வர் விமான நிலையத்தில் காத்திருந்த சமயத்தில் ஒரு நண்பர் அழைத்து ‘பிரயாணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்’ என்றார். அவர் நல்ல நினைப்பில்தான் கூறியிருக்கிறார். அவருடைய வாழ்த்தின் காரணமாகவோ என்னவோ பக்கத்தில் ஒரு தெலுங்கு தம்பதியினர் அமர்ந்து கொண்டனர். அமெரிக்காவில் பத்து இந்தியர்களை அழைத்து நிறுத்தினால் ஏழு பேர் தெலுங்கர்களாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு அமெரிக்கா கனவு தேசம். பொக்கனாத்தி கல்லூரி என்றாலும் சரி- உயர்கல்விக்காக அந்தக் கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். கைக்காசைச் செலவு செய்துதான் படிக்கிறார்கள். முப்பத்தைந்திலிருந்து ஐம்பது லட்சம் வரைக்கும் செலவு பிடிக்கிறது. தம் கட்டி செலவு செய்துவிட்டால் இரண்டு வருடங்களில் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்து பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். அதனால் திரும்பிய பக்கமெல்லாம் ஏழுகொண்டலவாடாதான். இந்தத் தெலுங்கு தம்பதியினருக்கு நான்கு மகன்கள். நான்கு பேரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஆறு மாதங்களுக்கு முன்பாக வந்தார்களாம். ஒவ்வொரு மகன் வீட்டிலும் ஒன்றரை மாதங்கள். இனி குளிர்காலம் தொடங்குவதால் இந்தியா திரும்புகிறார்கள். மீண்டும் ஆறு மாதம் கழித்து வருவார்களாம்.

காடாறு மாதம். நாடாறு மாதம் மாதிரி. ‘அமெரிக்காவிலேயே இருந்துக்கலாம் அல்லவா?’ என்று கேட்டதற்கு சிரித்தார்கள். 

‘நமக்கு ஒத்துவராது பாபு....ஊர்ல நிறைய சங்கதி இருக்கு’ என்றார் அந்த பெரியவர். 

அவருடன் அதற்கு மேல் பேசாமல் நிறுத்தியிருக்க வேண்டும். எனக்கு வாயில் வாஸ்து சரியில்லை என்பதால் பேச்சுக் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். விடிய விடிய பேசிக் கொண்டேயிருந்தார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கியிருந்தேன். அதை அந்த மனிதர் புரிந்து கொள்ளவேயில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தோளைத் தொட்டு ஏதாவது கேள்வி கேட்டார். அத்தனையும் பாடாவதியான கேள்விகள். ஒவ்வொரு முறையும் ஓடுகிற படத்தை நிறுத்திவிட்டு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவரது மனைவி இதையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை. தூங்கத் தொடங்கியிருந்தார். 

சலித்துப் போய் ‘உங்களுக்கு தூக்கம் வரலையா சார்?’ என்றேன். ‘லேது பாபு’ என்றார். அதுக்கு ஏன் என்னைக் கொல்லுறீங்க என்று நினைத்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென்று எழுந்து நின்று பேண்ட்டை இடுப்புக்கு மேலாக இழுத்துவிடுவதும், சில நிமிடங்கள் நின்று கொண்டிருப்பதும், மீண்டும் அமர்ந்து கேள்வி கேட்பதுமாக தூள் கிளப்பினார். சினிமாக்களில் மட்டும்தான் பயணங்களின் போது நாயகர்களுக்கு அதிரூப சுந்தரிகள் அறிமுகமாகிறார்கள். ஆனால் நிதர்சனத்தில் பெரும்பாலானவர்களுக்கு அப்படியெல்லாம் நடப்பதேயில்லை. அது ரயிலாக இருந்தாலும் சரி பேருந்தாக இருந்தாலும் சரி விமானமாக இருந்தாலும் சரி. விதி வலியது. இதுதான் ரியாலிட்டி என்று தெரிந்தாலும் பயணச் சீட்டு பதிவு செய்த தருணத்திலிருந்தே நம்முடைய கற்பனை சிறகடிக்கத் தொடங்கியிருக்கும். பயண நேரம் நெருங்க நெருங்க கேட்கவே வேண்டியதில்லை. இருபத்தேழாவது இருக்கை நம்முடையது என்றால் இருபத்தேழாவது இருக்கையைக் கண்டுபிடிப்பதை விடவும் இருபத்தாறிலும் இருபத்தெட்டிலும் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் மனம் குறுகுறுக்கும். கடைசியில் இப்படி யாராவது வந்து கற்பனை சிறகுகளை முறித்து கீழே போட்டு அதன் மீது அமர்ந்து கொள்கிறார்கள்.

கடைசி வரைக்கும் படமும் பார்க்கவில்லை. தூங்கவுமில்லை. அவருக்கு முழுமையாக காதைக் கொடுக்கத் தொடங்கியிருந்தேன். 

அமெரிக்கா நல்ல நாடுதான். காற்று நீரிலிருந்து அத்தனையும் சுத்தமாக இருக்கிறது. கீழ்மட்டத்தில் பெரிய அளவில் லஞ்சம் இல்லை. கல்விக்கென்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. அருமையான சுகாதார வசதிகள். சாலைகள் அற்புதமாக இருக்கின்றன. நல்ல சம்பளம். சேமிப்பை அதிகரிக்க முடிகிறது. சொல்லிக் கொண்டே போகலாம். என்னிடம் ஒரு மேலாளர் கேட்டார்- ‘இந்த நாட்டிலேயே இருந்துக்க சொன்னா இருந்துக்குவீங்களா?’ என்று. யோசிக்கவே இல்லை. ‘என்னால் இருக்க முடியாது’ என்றேன். இந்தியாவில் இருக்கும் சுவாரசியம் இங்கு இல்லை என்று தோன்றியது. நிறைய மனிதர்கள் இருக்க வேண்டும். அவர்களின் இரைச்சல் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்- மனம் இதற்கு பழகியிருக்கிறது. வெறும் வாகனங்கள் மட்டுமே இரையும் அமெரிக்காவில் வாழ்நாள் முழுக்கவெல்லாம் இருக்கும் மனநிலை எனக்கு இல்லை.

அதைத்தான் பெரியவரும் சொல்லிக் கொண்டிருந்தார். ஹைதராபாத் குக்கட்பல்லியில் அவருடைய வீடு இருக்கிறது. மகன்களின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் வருடம் ஒரு முறை வந்துவிட்டுச் செல்கிறார்கள். ‘அப்பப்போ குக்கட்பல்லி நினைப்பு வந்துடுது’ என்றார். மண்ணுடனான நமது பந்தம் உணர்வு பூர்வமானது. ஏதாவதொரு வகையில் அதனுடன் ஒட்டிக் கொள்கிறோம். என்னதான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் பிடித்திருந்தாலும் நம்முடைய உணர்வுகள் நம் சொந்த ஊருடன் பிணைந்திருக்கின்றன. அதை உடைப்பதும் துண்டித்துக் கொண்டு வாழ்வதும் அவ்வளவு எளிதான காரியமில்லை. 

நேற்று அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள அல்சூர் புத்தகக் கடையில் குமுதம் விகடன் கல்கி என்று வாங்கி வருவதும், கும்பகோணம் டிகிரி காபி கடையில் தோசை தின்பதுமாக நாளை ஓட்டிக் கொண்டிருந்தேன். மதியத்துக்கு மேலாக தள்ளுவண்டி கொய்யாக்கடைக்காரரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் போது அவரிடம் ஒரு முறை ஃபோனில் பேசியிருந்தேன் - அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ‘அமெரிக்காவில் இருந்தெல்லாம் கூப்பிட்டீங்க...கண்ணுல தண்ணி வந்துடுச்சு சார்’ என்றார். எளிய மனிதர் அவர். ‘ஒரு மாசமா ஊர்ல என்ன விசேஷம்?’ என்ற ஒரு கேள்விக்கு பதிலாகச் சொல்ல அவரிடம் நூறு கதைகள் இருக்கின்றன. இந்த தேசமே கதைகளால் நிரம்பியிருக்கிறது எனத் தோன்றியது. எல்லாவற்றிலுமிருந்தும் ஒரு கதையை உருகி விட முடிகிறது. இப்படி கதைகளாலும் பேச்சுக்களாலும் ஆன இந்த தேசத்தை விட்டுவிட்டு வாழ்வது எனக்கு லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை.

ராமராஜன்தான் நினைவுக்கு வருகிறார்- சொர்க்கமே என்றாலும்...

Oct 23, 2015

குழந்தையிடம் என்ன பேசுவது?

ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்துக்காகத்தான் அழைத்துச் சென்றிருந்தார். பத்து டிஷ்யூ காகிதங்களை உதட்டுக் கீழாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். 

முதல் இரண்டு குடுவை உள்ளே இறங்கு வரைக்கும் ‘ மிஸ்டர்.மணிகண்டன்...’ என்று அதிபயங்கர நாகரிகத்துடன் பேசிக் கொண்டிருந்தவர் மூன்றாவது குடுவையிலிருந்து குப்புற விழுந்துவிட்டார். ‘பொண்ஜ்ஜுங்க சூப்பழா இருக்காங்களா’ என்று ஆரம்பித்தவர் தம்மை மறந்து தனது கடந்த கால பிரதாபங்களை அடுக்கத் தொடங்கினார். அவர் சொன்னதையெல்லாம் கேட்கக் கேட்க தலை சுற்றியது. ஸ்டாலின் எழுபதுகளில் எப்படித் திரிந்தார் என்று சமீபத்தில்தான் விக்கிலீக்ஸ் செய்தியொன்றைப் படித்தேன். அதில் எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. அதிகாரம் படைத்த அரசியல்வாதியின் மகன்களுடன் பழகுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடைத்ததில்லை என்பதால் எல்லாவற்றையும் கிசுகிசுவாகக் கேட்பதோடு சரி. ஆனால் இந்த வங்காளி கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். பனிரெண்டு வயதில் சிகரெட். அடுத்த வருடம் சாராயம். பதினாறாவது வயதில் முதல் பெண். 

நிமிர்ந்து அமர்ந்தேன். 

‘முதலில் சிகரெட், பிறகு குடி, அதன் பிறகு பெண்கள்- இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. போதை வஸ்து. அதை அடைந்துவிட்டால் உலகத்தின் உச்சத்தை அடைந்த மாதிரி’ என்றார். சிகரெட் பிடித்துப் பழகிய பிறகு இதற்கு அடுத்து என்ன இருக்கிறது என்று தோன்றும். குடித்துப் பழகிய பிறகு அதற்கு மேல் என்ன இருக்கிறது என்று தோன்றும். இப்படியே ஒவ்வொரு குழியாக மாறி மாறி இறங்குவது ஒரு தேடல்தானே.

அனுபவம் பேசிக் கொண்டிருந்தது. 

அப்பா எம்.பி ஆக இருந்த போது நரசிம்மராவ் ஆட்சி. காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. மைனாரிட்டி அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் எப்படி தம் கட்டுவது என்பதை நரசிம்மராவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதைப் பாராட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு கீழ் மட்டத்துக்கு வேண்டுமானாலும் இறங்கி பிரதமராக நீடித்துக் கொண்டிருந்தார். எம்.பிக்களை வளைப்பதற்கென்றே தனி அணி செயல்பட்டதாம். அதனால் அவருக்கு ஜால்ரா தட்டும் எம்.பிக்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்திருக்கிறது. அதை வங்காளி பயன்படுத்திக் கொண்டார். அப்பனுக்கு அதிகாரம் கையிலிருக்க மகனுக்கு தேவையானதெல்லாம் கிடைத்திருக்கிறது. கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். நாறிப் போய்விட்டார். அவருடைய நண்பர்கள் குழாமிலிருந்த இரண்டு பேர் ஒரே நாளில் இறந்திருக்கிறார்கள். ஹெராயின் அளவுக்கு மீறி ஏறி மண்டையைக் காலி ஆக்கியிருக்கிறது. அதுவரை எம்.பியின் மனைவியாக பட்டுச் சேலையுடுத்திக் கொண்டிருந்த இவரது அம்மாவுக்கு முதல் ஜெர்க். மகன் திசை மாறிக் கொண்டிருக்கிறான் என்பது புரியத் தொடங்கிய போது நிலைமை கை மீறிச் சென்றிருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு வாரங்களில் போதையுடன் கார் ஓட்டிச் சென்று மோதியதில் கண்ணாடி உடைந்து நெஞ்சில் குத்தியிருக்கிறது. தலை முழுவதும் காயம். குரூரமான அடி அது. இன்னமும் நெஞ்சிலும் வயிற்றிலும் பெரிய தழும்புகள் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பிறகு மருத்துவமனையில் ஆறு மாதங்கள் இடையிடையே மன மாறுதலுக்கான மருத்துவம் அப்படியே மஹாராஷ்டிராவில் படிப்பு என்று குடும்பத்தைவிட்டு வெகு தூரம் விலகியிருக்கிறார். அப்பாவுக்கும் அரசியல் அதன்பிறகு பெரிய அளவில் எடுபடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கியிருக்கிறார். அவருக்கு அது மன உளைச்சல். எப்படியும் மந்திரியாகிவிட வேண்டும் என்ற நினைப்பு பலிக்கவேயில்லை. வயது கூடிக் கொண்டேயிருந்திருக்கிறது. ஓய்ந்துவிட்டார். இவருக்கும் அம்மா அப்பா மீதெல்லாம் பெரிய ஒட்டுதல் இல்லை. எம்.எஸ் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்து தொண்ணூறுகளின் இறுதியில் அமெரிக்கா வந்துவிட்டார். இப்பொழுது வீடு வாங்கிவிட்டார். பச்சை அட்டை கொடுத்துவிட்டார்கள். ‘இந்த ஊரில் போதை வஸ்து ஈஸியாக் கிடைக்குது...ஆனா நான் தொடறதில்லை...என் பயமெல்லாம் என் பையன் தொட்டுடக் கூடாதுன்னுதான்....எப்படியும் என் ஜீன் இருக்கும்ல?’ என்றார்.

இருக்கும். இல்லாமல் இருக்குமா? அதுவும் இந்தக் காலத்துக் குழந்தை. அமெரிக்க வளர்ப்பு. அமெரிக்க வளர்ப்பு என்ன அமெரிக்க வளர்ப்பு? எல்லா ஊரிலும்தான் எல்லாமும் கிடைக்கின்றன. நாசமாகப் போக வேண்டுமானால் எங்கிருந்து வேண்டுமானாலும் அழிந்து போகலாம். நாம் வளர்ப்பதில்தான் இருக்கிறது. அத்தனை பிள்ளைகளுமே பெற்றவர்களின் வளர்ப்பினால்தான் ஒழுக்கமானவர்களாகவும் சீரழிந்தும் போகிறார்கள் என்று சொல்லிவிட முடியாதுதான். ஆனால் பெரும்பான்மையானவர்களின் வாழ்க்கையானது பெற்றவர்களினால்தான் திசை மாற்றப்படுகிறது. அது நல்ல வகையிலாக இருந்தாலும் சரி; கெட்ட வகையிலாக இருந்தாலும் சரி.  

‘எம்பையன் மேல எனக்கு ஏகப்பட்ட பாசம்’ என்று யாராவது சொன்னால் சிரிப்பு வந்துவிடும். யாருக்குத்தான் தம் குழந்தைகள் மீது பாசமில்லை? அது உயிர்களின் அடிப்படையான உணர்ச்சி. எவ்வளவுதான் மோசனமானவனாக இருந்தாலும் தனது குழந்தை என்று வந்துவிட்டால் நெஞ்சின் ஓரத்திலாவது துளி ஈரம் இருக்கும். அது பெரிய விஷயமே இல்லை. நம் குழந்தையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் பெரிய விஷயம். நான்கு வயதில் ஏன் பள்ளிக்குச் செல்வதில் சுணக்கம் காட்டுகிறான்? ஐந்து வயதில் ஏன் கோபப்படுகிறான்? எட்டு வயதில் ஏன் விலகுகிறான்? பதினான்கு வயதில் ஏன் வெறுக்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது.

சுவரில் கிறுக்கினால் அப்பாவுக்கு கோபம் வரும். குப்பை போட்டு வைத்தால் அம்மா திட்டுவார். மதிப்பெண் குறைந்தால் அப்பா திட்டுவார் அம்மா அடிப்பார் என்கிற பயம்தான் குழந்தைகளுக்கு முக்கியமான பிரச்சினை என்றால் எமோஷனல் இன்னொரு பிரச்சினை. ‘அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப ஃபீல் செய்வாங்க..சொல்லாம மறைச்சுடலாம்’ என்கிற மனநிலை. இந்த இரண்டுமே ஆபத்தானதுதான். குழந்தை வளர வளர இந்த பயமும் எமோஷனலும் சேர்ந்தே வளர்கிறது. இதுதான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான நீண்ட தூரத்தை உருவாக்குகிறது. இந்த தூரத்தை சுருக்குவதில்தான் நம் பிள்ளை வளர்ப்பு முறையின் சூட்சமமே இருக்கிறது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விவாதிக்கத் தெரிய வேண்டும். நான்கு வயதுப் பையன் நமக்குத் தெரியாமல் தனது அந்தரங்க உறுப்போடு விளையாடிக் கொண்டிருப்பான். முக்கால்வாசிப் பேர் ‘அது ஹைஜீனிக் இல்லை’ என்று தடுப்பார்கள். கால்வாசிப் பேர் கையை எடுக்கச் சொல்லி மிரட்டுவார்கள். இரண்டையும் தாண்டி அதை சகஜமாக எடுத்துக் கொண்டு அதைப் பற்றி பேசச் சொல்கிறார்கள். பனிரெண்டு வயதுப் பையன் நண்பர்களோடு சேர்ந்து சிகரெட் பிடித்தால் அதை தனது பெற்றவர்களிடம் சொல்லும் தைரியம் அவனுக்கு வேண்டும். அதைப் புரிந்து கொண்டு அதைப் பற்றி பேசுகிற பக்குவம் பெற்றவர்களுக்கு வேண்டும். 

இப்படி அத்தனை விவகாரத்திலும் ஒரு மனமொத்த சிநேகிதத்தை- கோபம், மிரட்டல், அன்பு உள்ளிட்ட உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நம்முடைய குழந்தைகளிடம் நட்புணர்வை உருவாக்கிவிட்டால் போதும். அவர்களால் எதைப் பற்றியும் நம்மிடம் விவாதிக்க முடியும். பிரச்சினைகளைப் பற்றியும் நல்லது கெட்டது பற்றியும் பேச முடியும். இதைச் செய்வது பெரிய காரியமில்லை. நம்முடைய ஈகோவை விட வேண்டும். ‘எங்கப்பா முன்னாடி நான் உட்கார்ந்து பேச மாட்டேன் தெரியுமா?’ என்கிற அதே கெத்தை நம் பிள்ளைகளிடமும் எதிர்பார்க்கக் கூடாது. இந்தக் காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. அப்படி வெகு பவ்யமாக இருக்கிறார்கள் என்றால் எதையோ மறைக்கிறார்கள் என்றோ அல்லது ஏதோ போலித்தனம் நம்மிடமிருக்கிறது என்றோ முடிவு செய்து கொள்ளலாம். இதைத் தவறாகச் சொல்லவில்லை. நாம் வாழ்கிற காலகட்டத்தின் சூழலும் அந்தச் சூழல் உருவாக்கித் தரும் வாய்ப்புகளும் அப்படித்தானிருக்கின்றன.

ஈகோ இல்லாத, பயமற்ற, அதீத எமோஷனல் இல்லாத சுமூகமானதொரு பெற்றோர்- பிள்ளை உறவுநிலைதான் அடுத்த தலைமுறைக்குத் தேவையானது. புற உலகம் கொடுக்கக் கூடிய அழுத்தங்களினால் குழந்தைகளின் அக உலகில் உண்டாகும் அதிர்வுகளைத் தாங்கிப் பிடிக்க அத்தகையைதொரு உறவுதான் அவசியமானதும் கூட. 

Oct 21, 2015

சின்ன நதி - அறிவிப்பு

சின்ன நதி இதழ் வருவதில்லை என்று சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நிசப்தத்தில் செய்யப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் அந்த இதழுக்காக சந்தா செலுத்தியிருந்தவர்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. சின்ன நதி இதழ் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருந்ததால் பரிந்துரை செய்திருந்தேன். இதழை தொடர்ந்து நடத்துவதில் சில சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன போலிருக்கிறது. தமிழகத்தில் சிறு பத்திரிக்கைகளை நடத்துவதில் இருக்கும் சவால்கள் குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது என்கிற அடிப்படையில் அவர்களின் சூழலை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் அத்தனை சந்தாதாரர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் தொடர்ந்து கேட்கத் தொடங்கியிருந்தார்கள். இதழின் தற்போதைய நிலை குறித்து சின்னநதியின் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததற்கு அவர்கள் பின்வரும் பதிலை அனுப்பியிருக்கிறார்கள்.

                                                                     ***

அன்புடையீர் வணக்கம். நண்பர் வா.மணிகண்டன் உங்கள் புகார் தகவலை எனக்கு அனுப்பியிருந்தார். கடந்த 5 மாதங்களாக சின்ன நதி வரவில்லை. முதற்காரணம் RNI (Registrar of Newspaper for India) பெறுவதில் சிறு தாமதம். மற்றும் அலுவலக நடைமுறையில் சில மாற்றங்கள் நிகழ்வதால் தொடர்ந்து வரவில்லை. மேலும் ஒரு கட்டத்தில் தாங்கள் செலுத்திய சந்தா தொகை 1 ரூபாய்கூட குறைவின்றி திருப்பித்தரப்படும் என்று நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேற்சொன்ன தகவல்கள் குறித்து ஏற்கெனவே தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பதில் அளித்துள்ளோம். எங்கள் அலுவலக எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுபோன்று சில சந்தாதாரர்கள் அவ்வப்போது பேசும்போது பதில் அளிப்பது எங்கள் கடமையாகவே நாங்கள் கருதுகிறோம். நிச்சயம் விரைவில் சின்ன நதி மற்றும் பயணி உங்களை வந்தடையும். அது நடவாதபொழுது நிச்சயமாக உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம்.

                                                                          ***

புகார் மின்னஞ்சலை சின்னநதியின் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இதழை பரிந்துரை செய்தவன் என்ற முறையில் சரியான பதிலைப் பெற்றுத் தரும் பொறுப்பு எனக்கிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

தமிழில் அவ்வளவு தரத்துடன் குழந்தைகளுக்கான சஞ்சிகை வருவது அசாதாரணமான நிகழ்வு. தொடர்ந்து இயங்க முடியாமல் இருக்கிறார்கள் என்பது நிச்சயமாக வருத்தமளிக்கும் செய்திதான். சின்ன நதி மீண்டும் வெளி வர வேண்டுமென மனப்பூர்வமாக விரும்புகிறேன். சந்தா செலுத்தியவர்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகமிருப்பின் சின்னநதி குழுமத்தினரிடம் விசாரித்துக் கொள்ளலாம். தேவைப்படுமாயின் என்னையும் தொடர்பு கொள்ளவும். நன்றி.

இன்றைய மற்றொரு பதிவு: சுடர் 

சுடர்

எழுதத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை யாரிடமாவது காட்டிவிட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் யாரிடம் காட்டுவது? மைலாப்பூரில் சுஜாதா வீட்டிற்குச் சென்றிருந்த போது மனிதர் கையிலேயே தொடவில்லை. ‘விகடன் குமுதத்துக்கு அனுப்பி வைப்பா...நான் பார்த்துக்கிறேன்’ என்றார். தொங்கிய முகத்துடன் வீடு திரும்பியிருந்தேன். சிற்றிதழ்கள் எதுவும் எனக்கு அறிமுகமாகியிருக்காத காலம் அது. சுஜாதாவைத் தவிர கவிதைகளைப் பற்றி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் யாரையும் தெரியாது. அந்தச்ச் சமயத்தில்தான் மனுஷ்ய புத்திரன் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரை உச்சரித்தார். தமிழில் முக்கியமான விமர்சகர் என்றார். அன்றிரவே அதுவரை எழுதி வைத்திருந்த கவிதைகளையெல்லாம் தொகுத்து மின்னஞ்சலில் வெ.சாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். சுமார் முப்பது கவிதைகள் இருக்கும். அடுத்த நாள் ஒரு பதில் அனுப்பியிருந்தார்.


‘உங்கள் கவிதைகள் பற்றி என் அபிப்ராயத்தைக் கேட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. நான் பதில் தந்ததும் உங்கள் எதிர்வினை என்ன ஆகுமோ தெரியாது. பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் பாலாபிஷேகத்தைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காவிட்டால் ஜன்ம விரோதிகளாகிவிடுகிறார்கள். போகட்டும்’ என்று ஆரம்பித்து இரண்டு பத்திகள் எழுதியிருந்தார். அந்த வரிகளை இப்பொழுது நினைத்தாலும் தொண்டை வறண்டுவிடுகிறது.  கவிதைகள் என்று நினைத்து நான் அனுப்பி வைத்திருந்தவனற்றை கிழித்து எறிந்திருந்தார். கவிதையில் எவையெல்லாம் துருத்தல் எவையெல்லாம் புரட்டல் எவையெல்லாம் அவசியமற்ற திணிப்புகள் என்று நீண்டிருந்தது அந்தக் கடிதம். அப்படியொரு முரட்டுத்தனமான தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. முதன் முறையாக அரியர் வைக்கும் போது மனதுக்குள் ஒரு சேர உருவாகக் கூடிய வெற்றிடமும் பாரமும் உண்டாகியிருந்தது. 

இனி இந்த மனிதருடன் எந்தக் காலத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சங்கல்பம் எடுத்திருந்தேன். 

தொடர்ச்சியாக புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த பிறகு வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளுடன் பரிச்சயம் உண்டானது. கிட்டத்தட்ட கலை இலக்கியத்தின் அத்தனை வடிவங்களிலும் அவருடைய விமர்சனக் குரல் பதிவாகியிருந்தது. கலையும் இலக்கியமும் வெற்றுக் கோஷமாக இருக்கக் கூடாது என்பதை வெ.சா தனது எழுத்துக்களின் வழியாக தொடர்ந்து வலியுறுத்துவதாக புரிந்து கொண்டேன். அறுபதுகளுக்குப் பிறகு மார்க்ஸிய மற்றும் திராவிட சித்தாந்தம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் வெ.சாவின் விமர்சனம் முக்கியமானதாக இருந்திருக்கக் கூடும். கடும் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கக் கூடும். ஆனால் எந்தவிதமான தயவு தாட்சண்யமுமில்லாமல் தனது விமர்சனக் கத்தியை வீசிக் கொண்டேயிருந்திருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களின் வழியாக புரிந்து கொள்ள முடிகிறது. படைப்பைவிடவும் வெ.சா படைப்பாளி சார்ந்துதான் விமர்சனத்தை முன் வைக்கிறார் என்ற ரீதியிலான தாக்குதல்கள் இருந்தாலும் தமிழின் விமர்சனப் போக்கில் வெ.சா தனக்கென்று தனியான பாணியை உருவாக்கியிருந்தார். தமிழில் முக்கியமான கலை இலக்கிய விமர்சகர்களின் பெயர்களை பட்டியலிட்டால் முதல் சில பெயர்களுள் வெங்கட் சாமிநாதன் என்ற பெயரும் இருக்கும். 

அவரது பாலையும் வாழையும் என்ற கட்டுரைகளின் தொகுப்பும் பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து என்ற கவிதைத் தொகுப்புக்கு வெ.சா எழுதியிருந்த முன்னுரையும் அவரைப் பற்றிய முழுமையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. ‘இந்த மனுஷனுக்கு நம் கவிதைகளை அனுப்பி வைத்தால் பூஜை நடத்தாமல் இருப்பாரா?’ என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு கவிதைகளை மற்றவர்களுக்கு மின்னஞ்சல்களில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கு மின்னஞ்சல் எதையும் அனுப்பாமல் கவனமாகத்தான் இருந்தேன். ஆனால் 2007 ஆம் ஆண்டு என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியான போது மிகுந்த உற்சாகமடைந்திருந்தேன். சுஜாதா வெளியிட்டிருந்தார் என்பதால் எப்படியும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் புத்தகக் கண்காட்சியில் யாரும் சீந்தவேயில்லை. புத்தகத்தை நிறையப் பேருக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்கிற ஆசையில் மின்னஞ்சல் குழுமங்களுக்கும், எனது மின்னஞ்சலில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல்களுக்கும் ‘புத்தகத்தை சுஜாதா வெளியிட நடிகை ரோகிணி பெற்றுக் கொண்டார்’ என்று பெருமை பொங்க நிழற்படத்தையும் சேர்த்து அனுப்பி வைத்திருந்தேன். அந்த மின்னஞ்சலில் வெ.சாவின் மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்திருக்கிறது என்பதைக் கவனிக்காமல் ஏமாந்திருந்தேன். சிக்கிக் கொண்டேன். 

பின்வருமாறு பதில் அனுப்பியிருந்தார்-

என்னவோ தெரிந்த பெயராக, எப்போதோ கேட்ட பெயராக நிழலாடுகிறது. எனக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்களா? ஒரு வேளை சில மாதங்கள் முன்னால் எனக்கு சில கவிதைகளை அனுப்பி அபிப்ராயம் கேட்டது நீங்களாக இருக்குமோ?  இருப்பினும், மனுஷ்யபுத்திரனும், சுஜாதாவும் ரோகிணியும் தோளுரசும் ஒருவர் என்னை ஏன் நாடுகிறார் என்ற ஐயமும் தலை காட்டுகிறது. 

நான் என்னென்னவோ நானாக நினைத்துக்கொண்டு அலை கழித்துக்கொள்கிறேன் என்று தோன்றுகிறது. உங்கள் கவிதைப் புத்தகம் சுஜாதா, ரோஹினி கரஸ்பரிசம் பெற்றது தங்கள் பாக்கியம். - வெ.சா.

இந்த மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் அனுப்பாமல் அமைதியாக இருந்துவிட்டேன். அவர் உயரம் வேறு; இலக்கியம் குறித்தான அவர் புரிதல் என்னவென்று தெளிவாக உணர்ந்திருந்தேன்.

வெங்கட் சாமிநாதன் மாதிரியான விமர்சகர்கள் காலத்தின் தேவை. அவர்கள் உருவாக்கும் கருத்தியல்வாதங்களும் எதிர்வினைகளும் விவாதங்களும் மொழிக்கும் கலைக்கும் தொடர்ந்து வளமூட்டுபவை. இந்த உரையாடல்கள்தான் கலை இலக்கியவெளியை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்துகின்றன. வெங்கட் சாமிநாதன் தனது எழுத்துப் பயணத்தை விமர்சனத்திலிருந்துதான் தொடங்கினார். அவர் ஜம்முவில் வசித்த போது சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிக்கைக்கு தனது மாற்றுக்கருத்துக்களை கடிதமாக எழுதியனுப்ப அவை பிரசுரிக்கப்பட்டு அதன் பிறகு செல்லப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அதன் பிறகு தனது கடைசி காலம் வரைக்கும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டேயிருந்தார். அவருடைய சமீபத்திய எழுத்துக்களை சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம். 

பெங்களூரூவுக்கு நான் மாற்றலாகி வந்த சில வருடங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனும் பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசிக்கிறார் என்று தெரிந்து கொண்டு சந்திக்கச் சென்றிருந்தேன். ஹெப்பாலில் அவருடைய மகனின் வீடு இருந்தது. அலைபேசியில் அழைத்து முகவரியைக் கேட்ட போது ‘வீட்டில் யாருமில்ல...காபி கூட கஷ்டம்...பரவால்ல வாங்கோ’ என்றார். அப்பொழுது பிடிஎம் லேஅவுட்டில் தங்கியிருந்தேன். அவரைச் சந்திக்கச் சென்ற போது தமிழின் மூத்த எழுத்தாளரைச் சந்திக்கச் செல்கிற ஆசை மட்டும்தான் இருந்தது. வேறு எந்த எண்ணமுமில்லை. கவிதை எழுதுவேன் என்றோ புத்தகம் வெளியாகியிருக்கிறது என்றோ எதையும் சொல்லவில்லை. சொல்லும் தைரியமும் இல்லை. அவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை. ‘இவ்வளவு தூரம் வந்தீங்களா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் இருந்த கடுமையில் துளியைக் கூட நேரில் பார்க்க முடியவில்லை. அவரது மருமகள் வெப்பக்குடுவையில் ஊற்றி வைத்துச் சென்றிருந்த காபியில் முக்கால்வாசியை ஊற்றிக் கொடுத்துவிட்டு ‘இந்தக் கிழவனைப் பார்க்க வந்ததற்கு நன்றி’ என்றார். சிரிப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. 

க.நா.சுப்பிரமணியம் குறித்துத்தான் நிறையப் பேசினார். அவர் மீது வெ.சாவுக்கு அபரிமிதமான மரியாதை இருந்தது. ‘சி.சு.செல்லப்பாவும், க.நா.சுவும் இல்லைன்னா நான் எழுதியிருப்பேனான்னு தெரியாது’ என்றவர் என்னுடைய முக்கால்வாசி காபியைக் குடித்து முடிக்கும் வரைக்கும் தனது கால்வாசி காபியை வைத்துக் கொண்டு குடிப்பதாக ‘பாவ்லா’ செய்து கொண்டிருந்தார். 

வெ.சாவுடனான தனிப்பட்ட பேச்சும் கூட நகைச்சுவையாகவும் நக்கலாகவும்தான் இருந்தது. ‘என்னை வெளிநாட்டு உளவாளின்னு கூட சொன்னாங்க...தெரியுமோ?’ என்றார். ‘யாருக்கு உளவாளியா இருந்தீங்க?’ என்றேன். சிரித்துக் கொண்டே ‘அமெரிக்காவுக்கு இருந்தேனாம்’ என்றார். வெங்கட் சாமிநாதன் வெகு காலம் டெல்லியில் வசித்ததும் அவரது தீவிரமான விமர்சனங்களும் அப்படியொரு பெயரை உருவாக்கியிருக்கக் கூடும். ‘என்கிட்டயே வந்து அமெரிக்காவுக்கு விசா வேணும்ன்னு கேட்ட பயலுக இருக்காங்க’ என்றார். 

இப்படித்தான் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இது நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு வெ.சாவை நான் பார்க்கச் சென்றதில்லை. ஆனால் பெங்களூரில் வசிக்கும் ஜடாயு போன்றவர்கள் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். அண்ணாகண்ணன் போன்றவர்களும் அவருடன் அவ்வப்போது அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். 

நேற்று மாலை வெங்கட் சாமிநாதனின் நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனையின் ஐசியூவில் இருப்பதாகவும் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அலுவலகத்தில் ஓரிரு முறை அவரை நினைத்துக் கொண்டேன். இன்று(அக்டோபர் 21, 2015) காலை மூன்றரை மணியளவில் மாரடைப்பின் காரணமாக வெ.சாவின் உயிர் பிரிந்துவிட்டதாக மற்றொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பெங்களூரின் ஹெப்பால் மைதானத்தில் பனிரெண்டு மணியளவில் உடலடக்கம் நடைபெறுகிறது. பெங்களூரில் இருந்திருந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருக்க முடியும். ஒரு மூத்த எழுத்தாளருக்குச் செய்யும் சிறு மரியாதையாக இருந்திருக்கும். இப்பொழுது சாத்தியமில்லை. குளிரும் தனிமையும் நிறைந்த இந்த இரவில் அவரைப் பற்றிய நினைவுகளை எழுதி சிறு நினைவஞ்சலியாக வெ.சாவுக்கு வணக்கங்களுடன் சமர்ப்பிக்கிறேன்.

Oct 20, 2015

செப்டெம்பர்- அக்டோபர்

செப்டம்பர்- அக்டோபர் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு விவரம் இது. கடந்த மாதம் பதிவு செய்யாமல் விடுபட்டுவிட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் வன்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வந்திருக்கிறது, எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்களைப் பார்த்துவிட்டு அவற்றை பதிவு செய்வது வழக்கம். கடந்த மாதம் ஒபாமா தேசத்திற்கு வந்ததில் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து யாருமே கேட்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இருந்தாலும் தவறு தவறுதான். ஒரு மாத விடுபடலுக்கான மன்னிப்பு கோரலுடன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கான விவரங்கள் ஒன்றாகச் சேர்த்து பதிவு செய்யப்படுகிறது.

வரிசை எண் 5- (காசோலை எண்: 49) :
மதன் நாமக்கல் மாவட்டம் மலையம்பட்டியைச் சார்ந்த தலித் மாணவர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கோயமுத்தூர் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.ஈ படிப்புக்கான சேர்ந்திருக்கிறார். பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். படிப்பிற்கான உதவி கிடைத்தால் மட்டுமே படிப்பைத் தொடர முடிகிற சூழல். நல்ல கல்லூரி, நல்ல பாடம். ஆனால் வறுமையான குடும்பச் சூழல். மதன்குமாருக்கு உதவுவது அவசியமாகத் தெரிந்தது. அவரது கல்லூரிப் படிப்பின் சேர்க்கைக்கான தொகையான ரூபாய் பத்தாயிரம் கல்லூரியின் பெயருக்கு காசோலையாக அனுப்பி வைக்கப்பட்டது.

வரிசை எண் 14 (காசோலை எண்: 47) :
கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஏழு கிராமப்புற அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த கடைக்காரர்களிடம் கூப்பன்களைக் கொடுத்துவிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மாணவர்களை வைத்துத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு அது. கண்காட்சியின் இறுதி நாளன்று ஒவ்வொரு கடைக்காரர்களிடமிருந்த கூப்பன்கள் பெறப்பட்டு அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை எழுதப்பட்டு காசோலை வழங்கப்பட்டன. மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. அதில் ஒரு காசோலைதான் எண்- 47.

வரிசை எண்: 20 மற்றும் 43:
குழந்தை வைபவ் கிருஷ்ணாவின் மாதாந்திர பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்ட காசோலை. மாதம் தலா இரண்டாயிரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

வரிசை எண் 35:
உதகமண்டலத்தைச் சார்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனான தினேஷின் தண்டுவட அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட காசோலை இது. தினேஷுக்கு தண்டுவடத்தின் அதீதமாக வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சி காரணமாக உள்ளுறுப்புகள் நசுங்கத் தொடங்கின. பெங்களூர் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். முதல் அறுவை சிகிச்சைக்கு ஐம்பதாயிரம் வழங்கியிருந்தோம். சிகிச்சை முடிந்து ஊருக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் திடீரென்று உடல்நிலை மோசமடைந்து அவனால் நடக்கவே முடியாமல் போய்விட்டது. உடனடியாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலின் படி கடந்த மாதம் அதே நாராயண ஹிருதயாலையாவில் அனுமதித்திருந்தார்கள். இப்பொழுது இரண்டாம் அறுவை சிகிச்சைக்கு உதவும் பொருட்டு இன்னொரு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 23:
வருமான வரித்துறையினர் கேட்டதற்கிணங்க அறக்கட்டளையின் தொடக்கத்திலிருந்து இன்றைய தேதி வரைக்கும் வங்கி ஸ்டேட்மெண்ட் வழங்கக் கோரியிருந்தேன். மென்பிரதியாக மின்னஞ்சலில்தான் அனுப்பி வைத்திருந்தார்கள். ஆனால் ஆயிரத்து இருநூறு ரூபாய் கணக்கு எழுதியிருக்கிறார்கள். ஊருக்கு வந்த பிறகு முதல் வேலையாக இதை விசாரிக்க வேண்டும். அநியாயமாக இருக்கிறது. 

அறக்கட்டளையின் கணக்கில் ஏழு லட்சத்து தொண்ணூற்றேழாயிரத்து எழுநூற்று எழுபத்தாறு ரூபாய் (ரூ. 797776.15) இருக்கிறது. அடுத்த வாரம் இந்தியா திரும்பியவுடன் நிறையப் பேருக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை இருக்கிறது. அக்டோபர் இறுதிக்குள் கொடுக்க வேண்டிய காசோலைகளைக் கொடுத்துவிட்டு இதுவரைக்குமான வருமான வரித் தாக்கலை முடித்தாக வேண்டும். 

சமீபமாகச் சந்திக்கும் நண்பர்களில் நிறையப் பேர் ‘அறக்கட்டளை பெரிய வேலை’ என்று பேசுகிறார்கள். ஏற்கனவே எழுதியதுதான். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ‘நாம் செய்து கொண்டிருக்கிற காரியம் பெரிய காரியம்’ என்ற நினைப்பு மட்டும் வரவே கூடாது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, எந்த வேலையாக இருந்தாலும் சரி.  அப்படியொரு நினைப்பு வந்துவிட்டால் நமக்கு எதிரியெல்லாம் தேவையில்லை. அந்த நினைப்பே நம்மைக் காலி செய்துவிடும். நாம் செய்து கொண்டிருப்பது பெரிய காரியமா சாதாரணக் காரியமா என்பதை நமக்கு பின்னால் வரும் தலைமுறை முடிவு செய்யட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பதை மட்டும் பார்த்தபடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடிக் கொண்டேயிருப்போம். எவ்வளவு தூரம் ஓடினாலும் தூரம் மட்டும் குறையப் போவதேயில்லை. அறக்கட்டளையும் அப்படித்தான். எதையும் மறைக்காமல் இருந்தால் போதுமானதாக இருக்கிறது. வெளிப்படையாக இருந்துவிட்டால் எந்தச் சுமையும் இல்லை. நான்கு பேருக்கு நம்மால் நன்மை விளைகிறது என்று தெரிந்தால் நம்மைத் தாங்கிப் பிடிக்க நாற்பது பேராவது வரிசையில் நிற்பார்கள். ‘இதெல்லாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நல்லா இருக்கும்...ஆனால் உண்மை வேற மாதிரி’ என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இதுதான் நிதர்சனம். அதனால் பெரிய காரியம் சிறிய காரியம் என்ற நினைப்பெல்லாம் மண்டைக்குள் வரவே கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். இவன் இப்படியே இருக்கட்டும் என்று நீங்களும் ஆசிர்வதித்துவிடுங்கள். 

நன்றி.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், நிதிவிவரங்கள் குறித்து ஏதேனும் வினாக்கள், சந்தேகங்கள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். 

Oct 19, 2015

ஜாம்பி

சனிக்கிழமையன்று தன்னந்தனியாக நடந்து கொண்டிருந்த போது கையில் பெரும் கத்தியும் முகத்தை மறைத்தபடி தலையில் ஒரு முக்கோண வடிவிலான பெட்டியையும் மாட்டிக் கொண்டு ஒருவன் நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் நடையை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கால்களை இழுத்து இழுத்து கத்தியை நிலத்தில் உரசியபடியே நடந்து வந்தான். பார்த்தவுடனேயே பதறினாலும் அவன் விளையாட்டுக்காகச் செய்கிறான் போலிருக்கிறது என்று சற்று ஆசுவாசமாக இருந்தேன். ஆனால் அவனது நடை எந்தவிதத்திலும் மாறவில்லை. அதே இழுப்பில் அதே ரிதத்தில் கத்தியை உரசிக் கொண்டே வந்தான். அந்தச் சாலையில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். பயம் ஆரம்பித்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அவன் சட்டையணிந்திருக்கவில்லை. இடுப்பில் வேஷ்டி மாதிரி துணியைச் சுற்றியிருந்தான். எப்படியும் துப்பாக்கி இருக்காது என்ற நம்பிக்கையிருந்தது. ஆனாலும் இந்த ஊரில் யாரை நம்புவது? துப்பாக்கி என்பது சாதாரணக் காரியம். எடுத்து டமால் டூமில் என்று வேடிக்கை காட்டினால் ஏர்-ஆம்புலன்ஸில்தான் தூக்கிப் போட்டு அனுப்பி வைப்பார்கள். சட்டைப்பையில் பாஸ்போர்ட் பிரதி கூட இல்லை. அடையாளம் கண்டுபிடிக்கவே வாரக் கணக்கில் ஆனாலும் ஆகிவிடும். அதனால் ஓடுவதும் தெரியாமல் நடப்பதும் தெரியாமல் இடுப்பை ஆட்டி ஆட்டி இடத்தை அந்த இடத்திலிருந்து தப்பியிருந்தேன்.

சைக்கோ போலிருக்கிறது. 

ஜாம்பிஸ் பற்றி நம் ஊரில் அதிகமாக பேசிக் கொள்வதில்லை. வெளிநாடுகளில் புத்தகங்கள் எழுதுகிறார்கள். படங்கள் எடுக்கிறார்கள். ஜாம்பிக்களைப் பற்றிய நல்ல படங்களாகத் தேடினால் குறைந்தது நூறாவது தேறும் போலிருக்கிறது. Rammbock என்ற ஜெர்மனியப் படம் ஒன்று. 2010 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு மணி நேரப் படம்தான். முறிந்து போன தனது காதலைப் புதுப்பித்துவிடலாம் என்று நாயகன் தனது காதலியைத் தேடி பெர்லின் நகரத்துக்குள் வருகிறான். வந்த இடத்தில் அவள் இருப்பதில்லை. ‘யோவ் என் ஆளு இந்த வீட்டில்தான் இருந்தாள்..பார்த்தியா?’ என்று கேட்கும் போது அந்த வீட்டில் இருப்பவன் ஜாம்பியாக மாறியிருப்பான். ஜாம்பிக்கள் நடைபிணங்களாகத் திரிபவர்கள். அடுத்தவர்களைப் பிடித்து கடித்து வைத்துவிடுவார்கள். கடி வாங்கியவனும் ஜாம்பியாக மாறி மற்றவர்களின் கழுத்தைத் தேடத் தொடங்குவார்கள். அந்த அபார்ட்மெண்ட்டில்- அபார்ட்மெண்ட்டில் மட்டுமில்லை- பெர்லின் நகர் முழுக்கவும் ஏகப்பட்ட ஜாம்பிக்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஜாம்பியாக இன்னமும் மாறாதவர்கள் ஜாம்பிக்களிடமிருந்து தப்பிக்க வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதுதான் கதை. வெகு சுவாரஸியமான படம். இணையத்திலேயே கிடைக்கிறது.

இந்தப் படத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால் முதல் பத்தியில் சொன்ன முக்கோண மண்டையன் சைக்கோ இல்லை. ஜாம்பி. ஆனால் உண்மையான ஜாம்பி இல்லை. அப்படி அலங்காரம் செய்திருந்தான். அவன் மட்டுமில்லை டென்வர் நகரில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர்கள் ஜாம்பிக்களாக மாறியிருந்தார்கள். பெருங்கூட்டம். அதுவொரு ஜாம்பி திருவிழா. Zombie crawl என்று பெயர். வருடாவருடம் நடத்துகிறார்கள். இது பத்தாவது வருடம். அப்படியொரு நிகழ்வு நடக்கப் போகிற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால்தான் முக்கோண மண்டையனைப் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அவனும் என்னை மிரட்டுவதற்காக அப்படி நடையை மாற்றாமல் நடந்திருக்கிறான். கேடிப்பயல்.

சனிக்கிழமையன்று என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இந்திய முகஜாடையில் சுற்றுவர்கள் பத்து பேரைப் பார்த்தால் அதில் ஏழு பேர் ஏழுகொண்டலவாடாவின் கொல்ட்டிகளாகத்தான் இருக்கிறார்கள். ‘ஏவண்டி பாகுண்ணாரா?’ என்கிறார்கள். என்னுடன் வந்திருக்கும் கொல்ட்டி அந்த கோஷ்டியில் ஐக்கியமாகிவிட்டார். அதனால் முடிந்தவரைக்கும் தனியாகத்தான் சுற்றுகிறேன். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். நாம் செய்கிற சேட்டையெல்லாம் நாம் வெளியில் சொன்னால் தவிர யாருக்கும் தெரியாது அல்லவா?

காலையில் ஒன்பது மணிக்கு குளித்து தயாராகிவிட்டேன். இதுதான் இந்த ஊரில் கடைசியான வார இறுதி நாட்கள். அடுத்தவாரம் பெங்களூர் வாரி அணைத்துக் கொள்ளும். கொலராடாவுக்கு திரும்ப வருவேனா என்று தெரியாது. அதனால் முடிந்தவரைக்கும் சுற்றிவிட வேண்டும் என முடிவு செய்திருந்தேன். உள்ளூர் தொடரூர்தியில் எட்டு டாலருக்கு டிக்கெட் எடுத்தால் ரவுண்ட் ட்ரிப் அடித்துக் கொள்ளலாம். அந்தப் பயணச்சீட்டை வைத்துக் கொண்டு தொடரூர்தியின் கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்று திரும்ப வரலாம். பயணச்சீட்டு எடுத்துக் கொள்வது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும்தான். இதுவரைக்கும் ஒரு முறை கூட கடைசி நிறுத்தம் வரைக்கும் சென்றதேயில்லை. ஏதாவது அழகான கட்டிடம் அல்லது பெண்ணை எந்த நிறுத்தத்தில் பார்க்கிறேனோ அந்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன். அப்படித்தான் ஒரு நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் நடந்தால் நகரத்தின் முக்கியமான பதினாறாவது தெரு வரும். எட்டுக் கிலோமீட்டர் என்பது சற்று தொலைவுதன. ஆனால் மெதுவாக நடக்கலாம். எந்த அவசரமும் இல்லை. நம்மை யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. கால் வலிக்கிற இடத்தில் அமர்ந்து கொள்வது ஏதேனும் மரத்தின் கீழாக இருக்கும் பெஞ்ச்சில் படுத்துக் கொள்வது என்று ஊரை பராக்கு பார்த்தபடியே பதினாறாவது தெருவை அடைந்த போது கால்களில் வலி கிண்ணெண்று இருந்தது. மூட்டுக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் கதறியிருக்கும். மூன்று மணி நேரங்கள் நடந்திருந்தேன். அந்த மூன்றாவது மணி நேரத்தில்தான் முக்கோண மண்டையனின் தரிசனம். அவனிடமிருந்து தப்பித்து பதினாறாவது தெருவுக்குள் நுழைந்தால் அந்தத் தெரு முழுவதும் ஜாம்பிக்களால் நிரம்பியிருந்தது.


உற்சாகமான திருவிழா அது. வரிசையாக ஆட்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். அந்தத் தெரு இரண்டு கிலோமீட்டர் நீளமுடையது. இந்த முனையிலிருந்து அந்த முனை வரைக்கும் அவ்வளவு கூட்டம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று ஒருவர் பாக்கியில்லை. விதவிதமான ஆடைகள். விதவிதமான அலங்காரங்கள். இதுவரையிலும் எந்த ஊருக்கும் நான் நிழற்படக் கருவியை எடுத்துச் சென்றதேயில்லை. முடிந்தவரைக்கும் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றும். கேமிராவை எடுத்துக் கொண்டு திரிந்தால் இதைப் படம் எடுக்கலாமா அதைப் படம் எடுக்கலாமா என்றுதான் மனம் திரியும். அதிலேயே நினைப்பு இருந்தால் ஊரையும் அந்த ஊரின் மனிதர்களையும் எப்படி கவனிப்பது? ஆனால் நேற்றுதான் நம்மிடமும் ஒரு நிழற்படக் கருவி வேண்டுமென விரும்பினேன். அலங்காரம் ஒரு பக்கம் இருக்கட்டும். அத்தனை பெண்கள். அத்தனை அழகிகள். அத்தனையும் மிஸ். ஆளாளுக்குத் துணியைக் கிழித்துக் கொண்டு திரிந்தார்கள். அந்த கிழிசலின் வழியாக அவர்கள் செயற்கையாக உருவாக்கியிருந்த ரத்தக்காயத்தைப் பார்க்க வேண்டும். வெறும் இரண்டு கண்களை வைத்துக் கொண்டு எத்தனையைத்தான் மண்டைக்குள் ஏற்றுவது? 

இப்படியான ஒரு கொண்டாட்ட மனநிலை நம்மிடம் இல்லையென்றுதான் தோன்றுகிறது. தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று கொண்டாடுகிறோம்தான். ஆனால் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஊரே திரண்டு கொண்டாடும் ஒரு நிகழ்வு இல்லை. 'இது அவனுக்கானது..அது அவனுக்கானது’ என்று பிரித்து வைத்திருக்கிறோம். ஜாம்பித் திருவிழாவில் எல்லோரும் சகஜமாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒன்றிரண்டு காவலர்கள் மட்டும் நின்றிருந்தார்கள்- அவர்களும் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் நிகழ்வில் காவலர்கள் இல்லாமல் தள்ளுமுள்ளு இல்லாமல் ஒரு நிகழ்வை நம்மூரில் நினைத்துப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நடுத்தெருவில் இசையை அலற விட்டிருந்தார்கள். விருப்பமிருக்கிறவர்கள் ஆடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணை இணையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். மூச்சு சூடேறிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் தெருவில் மேடையமைத்து wrestling நடத்திக் கொண்டிருந்தார்கள். பங்கேற்ற ஆண்கள் அத்தனை பேரும் இத்தினியூண்டு துணியை அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் நடிப்பதைப் போலவே மேடையில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சண்டையிடுவதைவிடவும் கூட்டம் கூட்டமாக நின்று அவர்களைப் பற்றி நக்கல் அடித்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சைக் கேட்பது சுவாரஸியமாக இருந்தது. வாய்ப்புக் கிடைத்த இடத்தில் எல்லாம் காதை நீட்டிக் கொண்டிருந்தேன். கஞ்சா புகை தெரு முழுவதும் நிரம்பிக் கொண்டிருந்தது.

ஜாம்பி வேடமணிந்த ஏதாவது பெண் என்னை மிரட்டுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டே நடந்தேன். அப்படி மிரட்டியவுடன் ‘இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? எதுக்கு இப்படி வேஷம் போடுறீங்க’ என்று பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் முதலில் மிரட்டிய முக்கோண மண்டையனைத் தவிர வேறு யாருமே மிரட்டுவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஒரு குழந்தையிடம் நானே ‘ப்ப்பே’ என்றேன். அதுவும் திருப்பிச் சொன்னது. அவ்வளவுதான். மீண்டும் அதே எட்டுக் கிலோமீட்டர்கள் நடந்து வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டேன். காற்று வெகு குளிர்ச்சியாக இருந்தது.

Oct 16, 2015

எப்படி இருந்தது?

குளிர் இருக்கும் என்று பயமூட்டியிருந்தார்கள். அந்த விமானத்திலேயே ஜெர்கின் அணிந்து சென்ற ஒரே கூமுட்டை நானாகத்தான் இருந்தேன். இறங்கிய போது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தது. மினியாபோலிஸ் விமானநிலையத்தில் ஆனந்த் காத்திருந்தார். ‘வீடு பக்கம்தான்...ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். அதையும் நம்பிக் கொண்டிருந்தேன். அவரது வீட்டுக்கும் விமானநிலையத்துக்குமிடையில் கிட்டத்தட்ட நூற்றியிருபது கிலோமீட்டர்கள்.  ‘இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’ என்று சொல்லிச் சொல்லியே நிறைய வேலைகளைச் செய்கிறார். மதியம் கோ.முருகேசனின் வீட்டில் விருந்து, இரவில் ஆனந்த் வீட்டில் கோழி பிரியாணி அடுத்த நாள் யசோதாவின் வீட்டில் விருந்து என்று ஆளாளுக்குத் தாங்கினார்கள். தகுதிக்கு மீறித் தாங்குகிறார்கள் என்று கூச்சமாகத்தான் இருந்தது.

மினியாபோலிஸ், டென்வர் என்று நகரத்துக்கு நகரம் தாவுவதில் சுவாரஸியமேயில்லை. அத்தனை சாலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதைப் போலத்தான் - இந்தியாவிலாவது குறுக்கே யாராவது வருவார்கள். நமக்கு திக் திக்கென்றாகும். இங்கே அதுவுமில்லை. வேகத்தைக் கூட குறைப்பதில்லை.

முதல் நாள் மதிய உணவை முடித்துவிட்டு மினியாபோலிஸ் தமிழ்ப்பள்ளியில் வெகுநேரம் கழிந்தது. அங்கிருந்து கிளம்பும்போது ‘ஒரு வரலாற்று ஆய்வு மையம் இருக்கு...போலாமா?’ என்று ஆனந்த் கேட்டார். இரண்டு முறை தலையை ஆட்டினேன். ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதுவொரு குட்டி நகரம். நாங்கள் சென்றிருந்த போது பூட்டிவிட்டார்கள். ஆனால் பக்கத்தில் ஒரு மயானம் இருப்பதாகவும் அங்கு ஏதோ நிகழ்ச்சி நடப்பதாகவும் சொன்னார்கள். மயானமா என்று யோசனையாகத்தான் இருந்தது. ஆனால் பூங்கா மாதிரி வைத்திருக்கிறார்கள். அங்கேயே பிஸ்கட், ரொட்டி என்றெல்லாம் கொடுத்தார்கள். தட்டையும் நீட்டினார்கள். சுடுகாட்டில் எதையாவது தின்றால் பேய் பிடித்துக் கொள்ளும் என்று பின்வாங்கிவிட்டேன். அதுவும் அமெரிக்கப் பேய். ஆண் பேயாக இருந்தால் அதைவிடப் பிரச்சினை. ஆனந்தும் பம்மிவிட்டார்.

அதுவொரு சுவாரஸியமான நிகழ்ச்சி. 

அந்த ஊரில் பிரபலமாக இருந்து மண்ணுக்குள் சென்ற மனிதர்களை நினைவுபடுத்துகிறார்கள். அந்த பிரபலத்தைப் போலவே ஆடையணிந்து அவரது கதையைச் சொல்கிறார்கள். அதைப் பார்க்க அவ்வளவு கூட்டம். அப்படியென்னய்யா பிரபலம் என்றால் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பெண்மணி, நகரத்தின் முக்கிய தொழிலதிபராக இருந்தவர் என்றெல்லாம் சொன்னார்கள். ‘எவ்வளவு பணம் கொடுக்கணும்?’ என்றேன். எட்டு டாலர். ஐநூறு ரூபாயைத் தாண்டுகிறது. ‘சொன்னாக் கேளுங்க...ஏதாச்சும் கிளுகிளுப்பான கதைன்னா கூட காசு கொடுக்கலாம்...இதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று இழுத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. நம் ஊரில்தான் கக்கனைக் கூட மறந்துவிடுகிறோம். இந்த ஊரில் புண்ணாக்கு விற்றவர் பருத்திக் கொட்டை விற்றவரையெல்லாம் தொழிலதிபராக்கி நினைவுபடுத்துகிறார்கள்.

நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லாததற்கு காரணம் இருக்கிறது. டேனியல் ஃபிஷர் மணிக்கூண்டு டென்வர் நகரில் பிரபலம். அதன் கீழ் தளத்தில் ஒரு நைட் க்ளப் இருக்கிறது. டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் மேடையில் ஒருவர் நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். அத்தனையும் பச்சை மஞ்சள் ஜோக்குகள். அவர் ஒரு வரியை முடிப்பதற்குள்ளாகவே ஜில்ல்ல்ல்ல் என்று சிரிக்கிறார்கள். என்னுடைய ஆங்கில அறிவைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. ‘டேய் எனக்கு ஒரு எழவும் புரியலடா...அமைதியா இருங்கடா’ என்று கறுவிக் கொண்டே அமர்ந்திருந்தேன். நாம் கறுவுவதையெல்லாம் எவன் மதிக்கிறான்? ‘கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவிடியாகிட்ட போன கதை’ என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒரு ஸீனாவது வந்துவிடாதா?’ என்று சாந்தி தியேட்டரில் டிக்கெட் வாங்கி வாயைப் பிளந்து கொண்டு அமர்ந்திருப்பதைப் போல ஆகிவிட்டது. ‘ஒரு ஜோக்காவது புரியற மாதிரி சொல்லுடா’ என்று எவ்வளவுதான் கெஞ்சினாலும் அந்த பபூன் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை. எல்லோரும் சிரித்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் காசு போனதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.

அந்தக் கதை இருக்கட்டும்.

அடுத்தநாள் பிளைமவுத் நூலகத்தில்தான் உரையாடல். வேட்டி பைக்குள்தான் இருந்தது. ஆனால் அதைக் கட்டிக் கொண்டு அமெரிக்க வீதிகளில் நடந்தால் சிரிப்பார்களோ என்று யோசனையாகவே இருந்தது. நல்லவேளையாக நிகழ்ச்சிக்கு முருகேசனும் வேட்டியணிந்து வந்திருந்தார். ‘அதெல்லாம் பிரச்சினையில்லை...கட்டிக்குங்க’ என்றார். நூலகத்திலேயே வேட்டிக்கு மாறிவிட்டேன். இரண்டு முறை நூலகத்தை வலம் வந்தேன். அமெரிக்க விடலை குழாமொன்று பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்த பெண்தான் நிறையப் பேசிக் கொண்டிருந்தாள். ‘என்ன சொல்லிச் நக்கலடித்திருப்பாள்’ என்று கண்டபடி கற்பனை செய்து கொண்டிருந்தேன். அதுவும் சுவாரஸியமாகத்தான் இருந்தது.

நூலகத்தில் ஒரு அறையை ஒதுக்கித் தந்திருந்தார்கள். வட்டமாக அமர்ந்துதான் பேசத் தொடங்கினோம். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நிசப்தம் வாசிக்கிறவர்கள். அதனால் பெரிய சிரமம் இருக்கவில்லை. ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்த மாதிரியிருந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வெகுதூரத்திலிருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. முருகேசனும் ஆனந்தும் கூட அதைத்தான் சொன்னார்கள். இடைவிடாமல் எழுதிக் கொண்டேயிருப்பதால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று யாராவது அடிக்கடி கேட்கிறார்கள். அவர்களுக்குச் சொல்ல எனக்கு உடனடியாக பதில் கிடைக்காது. சிரித்துக் கொண்டு பேச்சை மாற்றிவிடுவதுதான் இதுவரை வழக்கம். இனியும் அப்படித்தான்.


‘நமக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று நம்பி எல்லாவற்றையும் தள்ளி வைத்துக் கொண்டேயிருந்தால் காலம் முடியும்போது எதையுமே செய்யாமல் செத்திருப்போம்’என்பார்கள். சுணக்கமே இருக்கக் கூடாது. கொஞ்சம் ஏமாந்தாலும் இந்த உலகம் நம்மை ஏறி மிதித்தபடி போய்க் கொண்டேயிருக்கும். எவ்வளவு போட்டி? எவ்வளவு வேகமான ஓட்டம்? ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், ஓவியர்கள் என்று குவிந்து கிடக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் கணக்கிலடங்காத ஆட்கள். அத்தனை பேரும் முத்திரை பதிக்கிறார்களா என்ன? வெறித்தனமான உழைப்பையும் மொத்த அர்பணிப்பையும் கொடுப்பவன் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறான். மூச்சுத் திணற வைக்கும் இந்தப் பெருங்கூட்டத்தில் தம் கட்டி மேலே எழுந்து தனது தலையை உலகுக்குக் காட்டி முத்திரை பதித்த அத்தனை பேரின் வரலாற்றிலும் கடும் உழைப்பு இருக்கும். ஏகப்பட்ட அவமானங்கள் இருக்கும். துடைத்தெறிந்துவிட்டு எழுந்து நின்று தோள்களை முறுக்குபவனைத்தான் காலம் கொண்டாடுகிறது. 

வான்கா- உலகின் மிக முக்கியமான ஓவியர்களின் பட்டியலை எடுத்தால் தவிர்க்க முடியாத பெயர். மிகச் சிரமமான வாழ்க்கை. வறுத்தெடுக்கும் வறுமை. தனக்கான துறை எதுவென்று கூட முழுமையான புரிதல் இல்லாத குழப்பம், உடல்நிலைச் சிக்கல்கள், மனநிலை பாதிப்பு என அத்தனையையும் தாண்டி வெறியெடுத்து வரையத் தொடங்கிய போது அவர் தனது வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளில் இருந்தார். சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் வரைக்கும் நமக்கான அடையாளம் என்று எதுவும் இருக்காது. சரியாகத் தேர்ந்தெடுத்த பிறகு வெற்றி தோல்வி என அத்தனையும் நம் கையில்தான். சுழன்றடிக்க வேண்டும். வான்கா அப்படியான மனிதர். வரைந்து தள்ளினார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான படங்களை வரைந்திருந்தாலும் அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த உலகம் கண்டுகொள்ளவேயில்லை. சொற்பமான படங்களை மட்டுமே விற்று விலை பார்த்தார். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் கவலைப்பட்டு முடங்கியிருந்தால் அடையாளமில்லாமல் காணாமல் போயிருப்பார். நமக்கான அங்கீகாரமும் அடையாளமும் நமக்கான இடமும் நாம் உயிரோடு இருக்கும் போது வந்தால் சந்தோஷம். இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. உழைப்பை மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதற்கு வான்கா உதாரணம். எந்த மாலையும் தானாக கழுத்தில் விழுவதில்லை என்பது மட்டுமே நிதர்சனம்.

வான்காவின் ஓவியங்களில் ‘ஆலிவ் ட்ரீ’ பிரசித்தி பெற்ற தொடர் ஓவியம். இதே தலைப்பில் பதினெட்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியத்தில் ஒன்றை மினியாபோலிஸில் தோட்டமாக வடிவமைத்திருக்கிறார்கள். டென்வர் விமான நிலையத்திலேயே ஒருவர் சொல்லியனுப்பினார். ‘இடது பக்கம் ஸீட் கிடைத்தால் நீ அதிர்ஷ்டக்காரன்’ என்று. அப்படித்தான் போலிருக்கிறது. இருக்கை எண் 37 பி. இடது பக்கம். டென்வரில் ஏறி அமர்ந்ததிலிருந்தே தூங்கிவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். இரண்டு மணி நேரப் பயணம் முடித்து விமானத்திலிருந்து கீழே இறங்கும் போது வான்காவின் ஓவியம் தெரிந்தது. ஆயிரக்கணக்கான தாவரங்களை சரியாக நட்டு கத்தரித்து வான்காவின் ஓவியத்தைக் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சந்தோஷம் அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெருகிக் கொண்டேதான் இருந்தது.

டென்வருக்குத் திரும்பும் போது மினியாபோலிஸ் விமானநிலையத்திலிருந்து நடந்ததையெல்லாம் வேணியிடம் விவரித்தேன். ‘ரொம்ப பீத்திக்காதீங்க...இப்போத்தான் முளைக்கவே ஆரம்பிச்சிருக்கீங்க’ என்ற பதில் வந்தது. அதே காரணம்தான். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

Oct 14, 2015

மாட்டுக்கறி

முதன் முறையாக ப்ரான்ஸ் சென்றிருந்த போது வார இறுதி நாளொன்றில் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். காலை சிற்றுண்டி பிரச்சினையில்லை. ஹோட்டலில் ரொட்டியும் வெண்ணையும் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துண்டுகளை விழுங்கியிருந்தேன். ஆனால் பதினோரு மணிக்கெல்லாம் வயிற்றுக்குள் கபகபவென்றாகியிருந்தது. சுற்றச் சென்றிருந்த ஊர் ஒன்றும் பிரமாதமான ஊர் இல்லை. கிராமம். ரோமானிய வரலாற்றுடன் தொடர்புடைய ஊர் என்று சொல்லியிருந்தார்கள். ப்ரான்ஸில் நல்ல ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே சமாளிப்பது கஷ்டம். என்னுடையது நொள்ளை ஆங்கிலம். ஒவ்வொருவரிடமும் மூன்று முறையாவது சொல்லிப் புரிய வைக்க வேண்டியிருந்தது. பசி கண்ணாமுழியைத் திருகக் கடைசியாக ஒரு பர்கர் கடையைக் கண்டுபிடித்த போதுதான் ஆசுவாசமாக இருந்தது. என்னுடைய போறாத காலம் அவர்களிடம் ‘Hot dog’ மட்டும்தான் இருந்தது. 2008 ஆம் நடந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதுவரை அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. வெளிநாட்டில் நாயும் நரியும் தின்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக அதை நாய்க்கறி என்று நினைத்துக் கொண்டேன். ‘என்ன சொன்னீங்க?’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர?’ என்று கேட்ட போது பீஃப் மற்றும் போர்க் இருந்தது. கோழியும் இல்லை. ஆடும் இல்லை. பன்றிக்கு மாடு பரவாயில்லை என்று வாங்கித் தின்றுவிட்டு சுற்றத் தொடங்கியிருந்தேன்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு. சீனாவில் யூளின் என்னும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான நாய்களைக் கொன்று தின்கிறார்கள். பாம்பு, தவளை என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அருவெருப்பாகவே இருக்காதா?

எனக்கு எப்பொழுதுமே மாட்டுக்கறி மீது அருவெருப்பு எதுவும் இருந்ததில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் ப்ராய்லரைவிடவும் சாக்கடையில் கொத்தும் நாட்டுக் கோழிதான் சுவை என்று நாக்கு சான்றிதழ் எழுதுகிறது. ஆற்று மீனைவிட ஏரி மீன் நன்றாக இருக்கிறது என்று சாலையோர மீன் கடையில் வாங்கினால் அவன் சாக்கடையில் பிடித்த மீனைத் தலையில் கட்டுகிறான். இந்தக் கண்றாவிகளையெல்லாம் ஒப்பிடும் போது மாடு பிரச்சினையே இல்லை. ஆனால் அவை மீது ஒரு soft corner உண்டு. இளம்பருவத்திலிருந்தே நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பசுவைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதாலும், பசுவின் முகத்தை மிக அருகாமையில் பார்க்கும் போது அதில் கவிந்திருக்கும் மென்சோகமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மாட்டைக் கொல்லக் கூடாது என்று சொல்லும் அருகதை எதுவும் எனக்கில்லை. உயிர் என்று வந்துவிட்டால் எல்லாமும் உயிர்தான். கோழியைக் கொன்றாலும் பாவம்தான். மீனைத் தின்றாலும் பாவம்தான். வாரத்தில் ஏழு நாட்களுக்குக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் கோழி, ஆடு, மீன் என்று தின்றுவிட்டு ‘நீ மாட்டைக் கொல்லாதே; பன்றியைத் தின்னாதே’ என்று எப்படிச் சொல்ல முடியும்? இவையெல்லாம் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம் என்கிற அளவில்தான் என்னுடைய புரிதல் இருக்கிறது.

எங்கள் ஊரில் சந்தைக்கடைக்கு அருகில் இருக்கும் மாட்டுக்கறிக்கடையில் நான்கு கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலில் காதுக்குப் பக்கமாக ஓங்கி அடித்துக் கொல்வதை ஒளிந்து நின்று பார்ப்போம். ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மாட்டைத் தான் கொல்வார்கள் என்பதால் விடிந்தும் விடியாமலும் ஓடினால்தான் பார்க்க முடியும். சூரியன் வெளியில் வந்தபிறகு தோலை உரித்து கறியைத் தொங்கவிட்டிருப்பார்கள். ஆட்கள் வரத் தொடங்குவார்கள். அதே போலத்தான் மார்கெட் அருகில் பீப் பிரியாணிக் கடையும். பொழுது சாயும் நேரங்களில் கூட்டம் அலை மோதும். பாவம்தான். ஆனால் உண்பவர்களுக்கு விருப்பமிருக்கிறது. உண்கிறார்கள். அதை சாப்பிடக் கூடாது என்று எப்படித் தடுக்க முடியும்? கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம்? ஏற்றுமதிதான்.

கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட இருபத்து நான்கு லட்சம் டன் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதியாளர்கள் நாம்தான். Pink revolution என்ற பெயரில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் என்ற வேகத்தில் இந்த ஏற்றுமதி வளர்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பில் கணக்குப் போட்டால் முப்பதாயிரம் கோடியைத் தாண்டுகிறது. இதையெல்லாம் தடுக்கமாட்டார்கள். பசு புனிதம். சரிதான். அவை கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் ஏற்றுமதியைத்தானே முதலில் நிறுத்த வேண்டும்? ம்ஹூம். தொழிலதிபர்கள் குறுக்கே நிற்பார்கள். அந்நியச் செலாவணி பாதிக்கப்படும். நாட்டின் வருமானம் குறையும். ஏகப்பட்ட காரணங்களை அடுக்குவார்கள்.

இறைச்சி ஏற்றுமதியுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட இன்னொரு தொழிலான தோல் தொழிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் தொழிலைச் செய்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் பெரும் தொழிலதிபர்கள்- உள்ளூர் மற்றும் மாநில அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தொழிலதிபர்கள். விடுவார்களா?

மாட்டு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்வதைப் பற்றி பேசாமல் ஏன் குப்பனும் சுப்பனும் தின்னும் உள்ளூர் மாட்டுக்கறியைத் தடை செய்யச் சொல்கிறார்கள் என்று யோசித்தால் நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. ஆனால் அடிப்படை இந்துத்துவவாதிகளை குளுகுளுக்க வைக்க மாட்டுக்கறி தின்னத் தடை என்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். குருட்டுவாக்கில் இசுலாமியர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொலைவெறிக் கும்பல் ரத்தைத்தை நாவால் நக்கி ருசி பார்க்கிறது. இத்தகைய அடிப்படைவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ‘மாட்டுக்கறியைத் தின்போம்; புரட்சியை மலரச் செய்வோம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாமும் நம்முடைய மைக்ரோ புரிதல்கள். இதையெல்லாம் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல், பொருளாதார, தொழில் சார்ந்த பின்னணி வேறு எதுவாகவோ இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

மாடுகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன என்பதை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு சலனப்படம் கிடைத்தது. சில வினாடிகளுக்கு எச்சிலை விழுங்க முடியவில்லை. இயந்திரகதியில் கொன்று அடுக்கிறார்கள். தானியங்கித் தகடுகளில் நிறுத்தப்பட்டு மாடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் தலை வாகாக இயந்திரத்தினால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தை வைத்து ஒருவர் மாடுகளின் நெற்றில் துளையிடுகிறார். துள்ளல் கூட இல்லாமல் விழுகின்றன. கொடுமை. பார்க்கவே முடியவில்லை.


இப்படி நாடு முழுவதும் விரவியிருக்கும் ஆயிரத்துக்கும் மேலான இறைச்சித் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாடுகளை வரிசையில் நிறுத்திக் கொன்று கறியை வெட்டி பொட்டலம் கட்டி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அள்ளி வீசுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எத்தனிப்பதில்லை? இந்துத்துவத்தின் ஆணிவேர் பாய்ந்து நிற்கும் உத்தரப்பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும்தான் இத்தகைய ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடியை நட்டு வைத்திருக்கிறார்கள். 

இந்த புனித தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சியின் அளவோடு ஒப்பிடும் போது உள்நாட்டில் மிகச் சொற்பமான சதவிகிதத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை நோக்கி ‘நீ தின்னக் கூடாது’ என்று சொல்வதால் மட்டும் பசுவின் புனிதத் தன்மையைக் காப்பாற்றிவிட முடியாது என்று இந்த அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள்? வாக்கு எந்திரத்துக்கும் மோடி பகவானுக்கும்தான் வெளிச்சம்.

Oct 12, 2015

வாபி சாபி

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். ராமசாமி வாத்தியார். வாய்ப்பாடு சரியாகச் சொல்லவில்லையென்றால் அடித்து நொறுக்கிவிடுவார் அதைத் தவிர அவரிடம் வேறு எந்த லோலாயத்தை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ‘எல்லாத்துலேயும் ஒழுக்கமா இருக்கணும்ன்னா நீங்க பொறந்திருக்கவே வேண்டியதில்லை’ என்பது அவர் சித்தாந்தம். ‘நம்ம அம்மா அப்பன் எதுலயோ ஒழுக்கமில்லாமல் ஏமாந்ததுலதான் நாம பாதிப்பேரு பொறந்திருக்கோம்’ என்று அவர் சொன்ன போது ‘கிளுகிளு’வென சிரித்தது ஞாபகமிருக்கிறது. இதே வசனத்தை வெகு நாட்களுக்கு கெளரி சங்கர் சொல்லிக் கொண்டே திரிந்தான். ராமசாமி வாத்தியார் தனது வகுப்பில் மாணவர்களைப் பேச விட்டுவிடுவார். விளையாடிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளமாட்டார். அவரை நக்கலடித்தாலும் பிரச்சினையில்லை. எழுத்து கோணல் மாணலாக இருந்தாலும் மிரட்ட மாட்டார். ஏன் இப்படி விட்டுவைக்கிறார் என்று புரிந்தததேயில்லை. ஆனால் அதுவும் ஒரு சித்தாந்தம். ஒழுக்கமின்மையும் ஒரு அழகு என்பது அவர் கொள்கை. இதற்கு டெக்னிக்கல் பெயர் இருக்கிறது என்று இதுவரைக்கும் தெரியாது. wabi-sabi.

நாம் எவையெல்லாம் நிரந்தரமானதில்லை என்றும், கச்சிதமாக இல்லையென்றும், முழுமை பெறாமல் இருக்கிறது என்றும் நினைக்கிறோமோ அவற்றில் எல்லாம் ஒருவித அழகு இருக்கிறது என்பதுதான் வாபி-சாபி. ஜப்பானியக் கலை. விமானப் பயணத்தில் அமெரிக்க ஆர்க்டிடெக்ட் ஒருவர் இதைப் பற்றி பேசினார். நாங்கள் வீடு கட்டும் போது ஒழுங்கற்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன்- அதற்காகத் தாறுமாறாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஒரு பக்கம் ஜன்னல் இருந்தால் அதற்கு நேர் கோட்டில்தான் இன்னொரு ஜன்னல் இருக்க வேண்டும் என்றில்லாமல் அதைவிட மேலாகவோ அல்லது கீழாகவோ இருக்கும்படியான அமைப்பு. அப்படியான நவீன வீடுகள் சிலவற்றை படம் எடுத்தும் வைத்திருந்தேன். அதற்கு எங்கள் ஆர்க்கிடெக்ட் ஒத்துக் கொள்ளவில்லை. கர்நாடகாவின் விதான் சவுதாவை உதாரணமாகக் காட்டினார். கர்நாடக சட்டப்பேரவைக்கு விதான் சவுதா என்று பெயர். அந்தக் கட்டிடத்தின் நட்ட நடுப்புள்ளியில் மேலிருந்து கீழாக ஒரு கோட்டை வரைந்தால் கோட்டுக்கு இடது பக்கம் எப்படி இருக்கிறதோ அதற்கு அச்சு அசலாக வலது பக்கம் இருக்கும்.

‘நீங்க மாடர்ன்னு நினைக்கிறது இன்னைக்கு நல்லா இருக்கும். ஆனா பத்து வருஷத்துக்கு அப்புறம் அசிங்கமா தெரியலாம் ஆனால் பாரம்பரியம் அப்படியில்லை. சிமெட்ரிக்கா வீடு கட்டினா எத்தனை வருஷமானாலும் அந்த அமைப்பு ஈர்ப்பாவே இருக்கும்....விதான் சவுதா உதாரணம்’ என்று சொல்லி மனதை மாற்றிவிட்டார். பெங்களூரில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகிறோம் என்று தெரியாது. ஒருவேளை வீட்டை விற்பதாக இருந்தால் நம்மால் விலை வராமல் போய்விடக் கூடாது என்று பயந்துவிட்டேன். ஆர்க்கிடெக்ட் சொன்னதற்கு தலையாட்டியிருக்க வேண்டியதில்லை என்று இந்த அமெரிக்கக்காரர் சொன்ன பிறகுதான் தோன்றுகிறது. இந்த அமெரிக்கரின் வேலையே அதுதான் - வாபி சாபி ஆர்க்கிடெக்ட். 

‘என்ன செய்வீங்க?’ என்றதற்கு ‘கலைத்துப் போடுவேன்’ என்றார். 

வீடுகளிலும் அலுவலகங்களிலும் வழக்கத்திற்கு மாறாக கலைத்துப் போட்டும் உடைந்த பொருட்களை வைத்தும் அழகியலை உருவாக்குகிறார். சில படங்களையும் காட்டினார். வெகு சுவாரஸியமாக இருந்தன. ‘எவையெல்லாம் அழகு’ என்பது கூட நம்முடைய மனதைப் பொறுத்த விஷயம்தானே? காலங்காலமாக சில வரைமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வரைமுறைகளுக்கு அடங்குவனவற்றை அழகு என்கிறோம். மற்றவையெல்லாம் அசிங்கம் என்று முடிவு செய்துவிடுகிறோம். இதுதான் Mindset. இதைத் தாண்டி யோசிப்பதற்கு- ‘அட இது கூட அழகாகத்தானே இருக்கிறது’ என்று மாற்றுப் பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கு இத்தகையை மனிதர்களுடனான உரையாடல் அவசியமானவையாக இருக்கின்றன. இந்த மன மாறுதல் உடனடியாக வந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் மெதுவாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.


வாபி சாபியின் வரலாறு ஜப்பானில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஜப்பானில் டீ குடிப்பது என்பது கெளரவமான செயல். அதற்கென நிறைய ஒழுங்குமுறைகள் இருந்திருக்கின்றன. அந்த ஒழுங்குமுறையிலிருந்து விலகி வேறு கோப்பைகளை அறிமுகப்படுத்திய ஷிக்கோ என்கிற டீ மாஸ்டரிலிருந்து வாபி சாபி தொடங்குகிறது. அதற்குப் பிறகு டீ மாஸ்டர்களும் ஜென் தத்துவவாதிகளும் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். வாபி சாபியைக் கலை என்பதையும் தாண்டி வேறு விதமாக பார்க்க முடியும். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை இதிலிருந்து பெற முடியும் என்கிறார்கள்.

கருப்பு அசிங்கம். பற்கள் வரிசையாக இல்லாமல் இருந்தால் அசிங்கம். மூக்கு விடைத்துக் கொண்டிருந்தால் அசிங்கம்- இப்படி சக மனிதனை வெறுப்பதற்கும் கூட இப்படி நம் மனதில் ஏற்றப்பட்டிருக்கும் ஒழுங்குக்கும், அழகுக்குமான வரையறைகள் துணைபுரிகின்றன. அந்த அழகின் வரைமுறைக்குள் வராதவற்றையெல்லாம் நம்மையுமறியாமல் வெறுக்கத் தொடங்கிவிடுகிறோம் அல்லது நிராகரிக்கத் தொடங்கிவிடுகிறோம். மனோவியல் சார்ந்து இதுவொரு முக்கியமான பிரச்சினை. வெறும் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி இந்த உலகில் ஏதேனுமொன்றை நம்மால் வெறுக்க முடிகிறது? ஏன் தோற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கிறோம்? அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிக்கையொன்றில் மணமகள் தேவை என்று ஒரு தமிழர் விளம்பரம் கொடுத்திருந்தார். நூறு கிலோவுக்கும் அதிகமான எடை இருக்கிறாராம். நாற்பத்தெட்டு வயதாகிறது. ஆனால் முப்பத்தைந்து வயதில் அழகான பெண் வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை ஆனால் தனக்கு ‘இத்தகைய விதிகளுக்கு உட்பட்டுத்தான் வேண்டும்’ என்று கேட்பதில் எவ்வளவு பெரிய முரண் இருக்கிறது?

வாபி- சாபி குறித்து புரிந்து கொள்ள ஒரு ஆங்கில புத்தகமிருக்கிறது. Wabi- Sabi for Artists, Designers, Poets & Philosophers. எழுபது பக்கங்கள்தான். ஆர்க்கிடெக்ட்தான் கொடுத்தார். ஒரு மணி நேரத்தில் படித்து விடக் கூடிய எளிமையான ஆங்கிலத்தில் இருந்தது.  ‘சுவாரஸியமாக இருந்தது’ என்று நன்றி சொல்லித் திருப்பிக் கொடுத்தேன்.

‘நான் அழகு இல்லை’ என்று நினைப்பதால்தான் உலகம் முழுக்கவும் பில்லியன் டாலரில் அழகு சாதனத் தொழில் நடந்து கொண்டிருக்கிறது. நம் குழந்தை ஒழுங்கில்லை என்று நினைப்பதால்தான் நமக்கும் மன அழுத்தம்; குழந்தைக்கும் மன அழுத்தம். இங்கு எதையுமே பர்பெக்ட் என்று சொல்ல முடியாது. சவரம் செய்து கொள்ளும் ப்ளேடின் கதுமையில் பர்பெக்‌ஷன் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அதில் இருக்கும் சிறு சிறு வளைவுகளையும் துளைகளையும் மைக்ரோஸ்கோப்பில் வைத்துப் பார்த்தால் தெரியும். எல்லாமே அப்படித்தான். ஒழுங்கு, நேர்த்தி என்பதெல்லாமே கூட நம்முடைய கற்பனைதான். எல்லாவற்றிலும் ஒழுங்கையும் நேர்த்தியையும் எதிர்பார்ப்பது ஒருவகையில் மனோவியாதி. இருக்கிறதை இருக்கிற மாதிரி ரசிச்சு பழகுங்க. முடிஞ்சா கலைச்சுப் போட்டு ரசிச்சு பாருங்க. அதில் ஒரு திருப்தியும் அமைதியும் கிடைக்கும்’ என்றார். உடனடியாக அவருக்கு பதில் சொல்ல முடியவில்லை. சாத்தியமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொன்னதற்கு சிரித்தார். ‘உங்களுக்கு அதுதான் வேலை. ரசிப்பீங்க. என் வேலையில் இதையெல்லாம் முயற்சித்துப் பார்த்தால் வீட்டுக்கு அனுப்பிடுவாங்களே’ என்றேன். அதற்கு மேலும் சிரித்தார். விமானம் டென்வரை அடைந்திருந்தது. கை கொடுத்துவிட்டு எழுந்து கொண்டேன்.

Oct 11, 2015

மெல்ல?

‘தமிழ் படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமே இல்ல தம்பி. அதில் தொடர்ச்சியா ஏதாச்சும் செய்கிறோமா என்பதுதான் பெரிய விஷயம்- குறைந்தபட்சம் வாசிச்சுட்டாச்சும் இருக்கணும்’ என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். ஓய்வு பெற்றுவிட்ட தமிழாசிரியர். அவர் சொல்ல வந்த கருத்து நேரடியானதுதான். இன்றைக்கு முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வியில்தான் பள்ளிப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு இன்னமும் தமிழோடு தொடர்பு இருக்கிறது? பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழில் படித்துவிட்டு கல்லூரியில் நுழைந்த பிறகு தமிழை விட்டு விலகிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு வேலை, குடும்பம், வெளியூர் என்று பறந்துவிடுபவர்களில் கணிசமானவர்கள் பிழைப்பு மொழியான ஆங்கிலத்துக்கு மாறிவிடுகிறார்கள். தமிழின் வரிவடிவத்தோடு ஒட்டும் இருப்பதில்லை உறவும் இருப்பதில்லை. அவர்களைக் குறை சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

இன்று மினியாபோலிஸ் நகரத்தில் தமிழ் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை அது. இந்த ஊரில் இருக்கும் தமிழர்கள் இருபது முப்பது பேர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட எண்பது குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். பள்ளிக் கூடம் என்றால் வாரம் முழுக்கவும் நடக்கும் பள்ளிக் கூடம் இல்லை. ஒரு அமெரிக்க பள்ளிக் கூடத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அறைகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று தொண்ணூறு நிமிடங்களுக்கு பாடம் நடக்கிறது. வயதுவாரியாக குழந்தைகளைப் பிரித்து, அதற்கேற்ற வகுப்புகளில் அமர வைத்து அடிப்படைத் தமிழில் ஆரம்பித்து அடுத்தடுத்த தளங்களில் பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

தனிப்பட்ட ஆசிரியர்கள் என்று யாருமில்லை. தன்னார்வலர்கள்தான் பாடம் சொல்லித் தருகிறார்கள். வருடம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு வகுப்புக்கும் முதன்மை ஆசிரியர் இரண்டாம் ஆசிரியர் என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் முதன்மை ஆசிரியர் வர முடியவில்லை என்றால் இரண்டாம் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மற்றபடி மாணவர்களுக்கு வருகைப் பதிவு உண்டு. வீட்டுப்பாடங்கள் உண்டு. தேர்வுகள் உண்டு. இந்தத் தேர்வுகளில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்த வருடப் படிப்பைத் தொடர முடியும். இடையிடையே ப்ராஜக்ட் வேலையும் உண்டு. இவை தவிர குழந்தைகளுக்கான தமிழ் திறனை வளர்க்கும் போட்டிகளை நடத்துகிறார்கள்.


வாரத்துக்கு வெறும் தொண்ணூறு நிமிடங்களில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தெளிவான பாடத் திட்டம் வகுத்து புத்தகங்களை வகுப்பு வாரியாக அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். மினியாபோலிஸில் மட்டுமில்லை அமெரிக்கா முழுவதிலுமே பல நகரங்களில் இப்படித் தமிழ் சொல்லித் தருகிறார்களாம். இது நல்ல விஷயம். தமிழ் குழந்தைகள் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். அந்த தொண்ணூறு நிமிடங்களுக்கு வெளியில் காத்திருக்கும் பெற்றோர்கள் அளவளாவிக் கொள்கிறார்கள். பெங்களூர் மாதிரியான ஊர்களில் வசிக்கும் தமிழர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு இது.

சில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பருடன் ‘பையனுக்கு தமிழ் சொல்லித் தருவது’ பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. பெங்களூரில் தமிழ் சொல்லித் தருவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. நாமாகச் சொல்லித் தந்தால்தான் உண்டு. சலிப்படைந்தவராக ‘தமிழைப் படிச்சு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்? ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன்? நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன்? எந்தப் பயனுமில்லைதான். ஆனால் இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான பந்தங்கள். நம் இரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். ‘என் பையனுக்கு தமிழ் தெரியாது’ என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். அது நம் தாய் மொழி. ஆயிரமாயிரம் காலமாக பாட்டனும் முப்பாட்டனும் பேசிய மொழியை அம்மாவிடமிருந்து நாம் வாங்கியிருக்கிறோம். அதை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்காமல் கத்தரித்துவிட்டு ‘ஆங்கிலமு ஹிந்தியும் போதும்’  என்று  சலித்துக் கொள்வது நம்முடைய கையலாகத்தனம். இல்லையா?

மினியாபோலிஸ் தமிழ் பள்ளிக் கூடத்தைப் பார்த்த போது இதுதான் தோன்றியது. இந்தப் பள்ளியில் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் எள்ளளவுமில்லை. ஆனாலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உற்சாகமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளி ஒழுங்காக நடப்பதைச் சாத்தியப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் இருப்பத்தைந்து தன்னார்வலர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது மட்டுமில்லை- தமிழகத்துக்கு வெளியில் வசிப்பவர்கள்- தமிழ் பள்ளிக் கூடத்திற்கு வாய்ப்பில்லாதவர்கள் வாரத்துக்கு தொண்ணூறு நிமிடங்களைச் செயல்படுத்தினால் குழந்தைக்கு தமிழைச் சொல்லித் தந்துவிட முடியும் என்பதற்கான உந்துதலும் கூட.

ஒரே வருடத்தில் நம் குழந்தை மொத்தத் தமிழையும் கரைத்துக் குடித்து புலவர் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சினை. மெதுவாகக் கற்றுக் கொடுக்கலாம். அவசரமேயில்லை. நான்கு வயதிலிருந்து ஆரம்பித்தால் போதும். முதல் ஆறு மாதம் உயிரெழுத்து பனிரெண்டு மட்டும் படிக்கட்டும். படிப்பதோடு சேர்த்து எழுதவும் தெரிய வேண்டும். அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரைக்கும் மெய்யெழுத்து. அதற்கடுத்த ஒரு வருடம் உயிர்மெய் எழுத்து. அதன் பிறகு ஒரு வருடத்திற்கு இரண்டு எழுத்துச் சொற்கள். அதன் பிறகு ஓராண்டுக்கு மூன்றெழுத்துச் சொற்கள் அதன் பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்கிவிட்டால் போதும். மொழியைப் பொறுத்த வரைக்கும் அடிப்படையைச் சொல்லித் தருவதில்தான் சிரமம் அதிகம். முதல் கியர் பிரச்சினையில்லாமல் விழுந்துவிட்டால் அடுத்தடுத்து வேகமெடுத்துக் கொண்டேயிருக்கலாம். அதன் பிறகுதான் முதல் பத்தியில் தமிழாசிரியர் சொன்ன பிரச்சினை வருகிறது. - ‘படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமேயில்லை’. அதன் பிறகான தொடர்ச்சியை எப்படி உருவாக்குவது?

வாசிப்பு. 

மொழியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டுவிட வேண்டும். அதற்கேற்ற புத்தகங்கள் வழியாகவே இதைச் சாத்தியப்படுத்த முடியும். குழந்தைகள் என்றால் படங்கள் நிறைந்த புத்தகங்கள், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு சிறார்களுக்கான சிறுகதைகள், அதைவிட வளர்ந்த குழந்தைகள் எனில் அவர்களுக்கு சுவாரசியமூட்டும் சஞ்சிகைகள் என்று வாசிக்க வைக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டுவிடுகிறோம். ‘கல்லூரியில் படிக்கும் வரைக்கும் கவிதை எழுதினேன்’ என்று சொல்லும் யாரிடமாவது ‘அப்புறம் என்னாச்சு?’ என்று கேட்டால் பதில் இருக்காது. எழுதுவதையும் வாசிப்பதையும் அதன் பிறகு நிறுத்தியிருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டம் என்றாலும் எல்லாக் காலகட்டத்திலும் நமக்கு விருப்பமான ஏதாவதொரு வாசிப்பை தாய்மொழியில் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விகடன் குமுதமாவது நம்முடைய வாசிப்புப் பட்டியலில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். வாசிப்பைக் கைவிடும் போதுதான் நம்மிடம் உறவாடிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மொழியும் ஓடிவிடுகிறது.