அனுராதா என்கிற பெண் குடித்துவிட்டு முழு போதையில் கீழே விழ அவரது தலைக்கு நேராக இருந்த டிவி ஸ்டேண்ட் அடித்ததில் இறந்து போனார். இது பெங்களூரில் நடந்தது. அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர் முருகன் என்னுடன் பழைய நிறுவனத்தில் பணியாற்றினார். அப்பொழுது அவர் இந்தக் கதையைச் சொன்ன போது வேறு விவரங்கள் தெரியவில்லை. பெங்களூரில் பெண்கள் குடிப்பது சாதாரணமான விஷயம். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்மணியின் வீடு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருந்தது. மடிவாலா போலீஸ் ஸ்டேஷனில் மர்மச் சாவு என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அதைப் பற்றி எழுதி விட வேண்டும். அந்தப் பெண் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள். கணவனின் கைங்கர்யம்தான். காவல்துறையில் சிக்கியிருக்கிறான்.
கடந்த வாரத்தில் பெங்களூர் விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸப்பில் மெசேஜ் வந்ததாகவும் அதனால் சர்வதேச விமானங்கள் தாமதிக்கப்பட்டன என்றும் செய்தி வந்திருந்தது. வாட்ஸப்பில் செய்தி அனுப்பினால் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வப்போது பள்ளி மாணவர்கள் பள்ளி கூடத்தில் குண்டு வைத்திருப்பதாக செய்தி அனுப்பி அன்றைய தினத்தை விடுமுறை தினமாக மாற்றிவிடுவார்கள். அப்படியான வேலையாகக் கூட இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த வெடிகுண்டு விவகாரத்தில் விசாரணை நடத்தப் போகத்தான் அனுராதாவின் கணவன் கையில் விலங்கு விழுந்திருக்கிறது.
அனுராதாவும் அவளது கணவன் கோகுலும் தங்களுடைய திருமணத்திற்கு பிறகு டெல்லியில் இருந்திருக்கிறார்கள். அங்கு அனுராதாவுக்கு ஒரு கள்ளக்காதல். அவள் ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரிய அங்கு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனுடன் கசமுசாவாகியிருக்கிறது.
இந்தக் கள்ளக்காதல் கதைக்கு முன்பாக ஒரு ப்ளாஷ்பேக்.
அனுராதாவின் கணவன் கோகுலுக்கு பள்ளிப்பருவத்திலேயே வேறொரு பெண்ணுடன் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதல் அரும்பாகி மொட்டாகி பூவாகி காயாகி அதன் பிறகு பழுத்ததா என்று தெரியவில்லை. பெற்றவர்கள் பிரித்துவிட்டார்கள். ஜோடிப் பறவைகள் வெவ்வேறு திசைகளில் பறக்கத் தொடங்கின. தனியாக பறக்காமல் பெற்றவர்கள் பார்த்து வைத்த புது ஜோடிகளைக் கூட்டி கொண்டு பறக்கத் தொடங்கின. அப்படித்தான் கோகுலுக்கு அனுராதாவுன் திருமணம் நடந்திருக்கிறது. டெல்லி சென்றுவிட்டார்கள். கோகுலின் காதலி கணவனுடன் பெங்களூருக்கு வந்துவிட்டாள். திருமணம் ஆனால் குழந்தை பிறப்பது வழக்கம்தானே? இரண்டு ஜோடிகளுக்கும் குழந்தைகள் இருக்கின்றன.
இந்தச் சூழலில்தான் அனுராதாவுக்கு கள்ளக்காதல் முளைத்திருக்கிறது. அந்த விவகாரம் கோகுலுக்குத் தெரியவும் இருவருக்குமிடையில் சண்டையும் வளர்ந்திருக்கிறது. கோகுல் தனது பழைய காதலைத் தூசி தட்டியிருக்கிறான். ஃபேஸ்புக் வழியாக அவளைக் கண்டுபிடித்தவன் ஹாய் சொல்லி மீண்டும் தண்ணீர் ஊற்றி வளர்த்துவிட்டு பெங்களூருக்கு வேலை மாறுதல் வாங்கி வந்துவிட்டான். இவன் காதலியை நெருங்கிவிட்டான். ஆனால் அனுராதா காதலனை பிரிய வேண்டியதாகிவிட்டதல்லவா? தனது கள்ளக்காதலனின் நினைப்பு வந்து டெல்லிக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறாள். இது ஒரு தனி ட்ராக்.
பெங்களூர் வந்த கோகுல் தனது காதலியின் அபார்ட்மெண்ட்டிலேயே வாடகைக்கு வீடு பிடித்திருக்கிறான். அவளுடைய கணவனுடனும் நட்பு பாராட்டியிருக்கிறான். கணவனுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. இவனை நம்பி தனது வீட்டுக்குள்ளும் அனுமதித்திருக்கிறான். கோகுலுக்கு எல்லாமும் செளகரியமாகப் போய்விட்டது. தனது பழைய காதலியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இரண்டு பேரைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது என்று முடிவு செய்தவன் முதலில் அனுராதாவுக்கு செக் வைத்திருக்கிறான். அவளுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருந்தால் அவளைக் கொன்றாலும் கூட பிரச்சினை எதுவும் வராது என முடிவு செய்தவன் முதலில் ஒரு ஃபேக் ஐடியில் அவளோடு உரையாடத் தொடங்கியிருக்கிறான். அவள் தனது கள்ளக்காதல் கதையை ஒரு கட்டத்தில் இவனிடம் உளறி வைக்க ஒரு ஜோதிடரை அறிமுகப்படுத்தி வைப்பதாகச் சொல்லி ஜோதிடரின் பெயரில் இன்னொரு ஐடியைத் தொடங்கி அனுராதாவுடன் உரையாடத் தொடங்கியிருக்கிறான்.
அவள் தனது கள்ளக்காதல் பிரச்சினைகளை எல்லாம் சொல்லவும் கோகுலுக்கு வசதியாகப் போய்விட்டது. ஒரு பூஜை செய்தால் சரியாகப் போய்விடும் என்றும் காதலனுடன் சேர்ந்து நிர்வாணப் படம் ஒன்றை அனுப்பி வைத்தால் அதை வைத்து பூஜை செய்வதாகவும் சொல்லி ஜோதிடர் ஐடியில் இருந்து கேட்கவும் இவளும் நம்பி டெல்லிக்குப் பறந்து சென்று ஒரு விடுதியைப் பிடித்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து படம் ஒன்றை எடுத்து அனுப்பி வைத்திருக்கிறாள். strong evidence சிக்கிவிட்டது. அடுத்ததாக ஒரு நாள் அனுவைத் தொடர்பு கொண்டவன் அவளுக்காக பூஜை நடத்தப் போவதாகவும் காளிக்கு பூஜை நடத்தும் சமயத்தில் அவள் முழு போதையில் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான். அனுராதா சரக்கை ஏற்றிக் கொண்டு வீட்டில் முழு போதையுடன் இருக்கும் போதுதான் அவளது தலையில் ஓங்கி அடித்து கதையை முடித்திருக்கிறான். இதற்கு முன்பாகவே அனுராதாவின் நடத்தை சரியில்லை என்று அவளின் தந்தையிடம் ஆதாரங்களைக் கொடுத்து அவரை தனது வலையில் வீழ்த்தி வைத்திருக்கிறான். அதனால்தான் காவல்துறையில் இதை மர்மச் சாவு என்று எழுதி விசாரணையை முடித்துக் கொண்டார்கள்.
ஒரு டிக்கெட் காலி.
தனது பழைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நடுவில் அவளுடைய கணவன் இருக்கிறான். அவனுக்குத்தான் அடுத்த செக்.
மனைவி இறந்துவிட்ட ஆழ்ந்த துக்கத்தில் இருந்த கோகுலை காதலியும் அவளுடைய கணவனும்தான் தேற்றியிருக்கிறார்கள். அவன் தன் குழந்தைகளை காதலியுடன் விட்டுவிட்டு வெளியில் சென்றுவிடுவதும் அவள் அந்தக் குழந்தைகளைத் தன் குழந்தை போல பார்த்துக் கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. காதலியின் கணவன் இவனை நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க இவனது கிரிமினல் மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. காதலியின் கணவனுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைத் திருடி அவன் பெயரில் சிம் கார்ட் ஒன்றை வாங்கியிருக்கிறான். அதன் வழியாக காதலியின் கணவனை தீவிரவாதியாகச் சித்தரித்து சிறைக்குள் தள்ளிவிட்டால் காரியம் எளிதாகிவிடும் என முடிவு செய்தவன் அந்த சிம் கார்டைப் பயன்படுத்தி விமானநிலையத்திற்கு மிரட்டல் அனுப்பியிருக்கிறான். இதில்தான் எங்கேயோ பிசகிவிட்டான். முதலில் கோகுலின் காதலியையும் அவளது கணவனையும்தான் விசாரணை வளையத்திற்குள் எடுத்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவனை நெருங்கியிருக்கிறார்கள். இப்பொழுது அமுக்கிவிட்டார்கள். ரகசிய இடத்தில் வைத்து விசாரணைச் செய்கிறார்களாம்.
மிக எளிமையாக இருக்க வேண்டிய வாழ்க்கையை எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றியிருக்கிறான் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ‘எனக்காகத்தான் அவன் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்பதால் அவன் மீது அன்பு பெருகுகிறது. அதற்கு கைமாறாக அவனது குழந்தைகளையும் நானே வளர்ப்பேன்’ என்று காதலி பேசியிருக்கிறாள்.
உறவுகள் எப்பொழுதுமே மிக எளிமையானவைதான். ஆனால் நாம்தான் அதீத சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறோம். உறவுமுறையைப் பொறுத்தவரையில் அடுத்தவரின் ஆழ்மன விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உதாசீனப்படுத்திவிட்டு நமது சுயநலம் சார்ந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் போது உறவுகளுக்கிடையில் கீறல் விழுகிறது. காய்ந்த போன அன்பும், வறண்ட காமமும், அவநம்பிக்கையும் உறவுகளில் கசப்பை ஏற்றுகின்றன. சலிப்படைந்த இந்த உறவானது இன்னொரு உறவை நோக்கி மனதை சலனமுறச் செய்கிறது. அந்தரங்கமான புதிய உறவுகளும், தூசி தட்டப்படும் பழைய ரகசிய உறவுகளும் விழுந்த கீறலை பெரிதாக்கி விரிசலாக்குகின்றன. இன்றைய நவீன உலகில் இதுதான் மனித உறவுகளுக்கிடையிலான மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
4 எதிர் சப்தங்கள்:
வேண்டாதவுங்கல தீர்த்துக் கட்ட போடும் திட்டங்கள் பார்த்தா உலகம் எங்கே போகுது தெரியல.
எல்லாம் காமம் படுத்தும் பாடு சொல்லிட்டு போக நினைத்தாலும் பதிவின் கடசி lines
உறவுகள் எப்பொழுதுமே மிக எளிமையானவைதான். ஆனால் நாம்தான் அதீத சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறோம். உறவுமுறையைப் பொறுத்தவரையில் அடுத்தவரின் ஆழ்மன விருப்பங்களையும்
எதிர்பார்ப்புகளையும் உதாசீனப்படுத்திவிட்டு நமது சுயநலம் சார்ந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் போது உறவுகளுக்கிடையில் கீறல் விழுகிறது. காய்ந்த போன
அன்பும், வறண்ட காமமும், அவநம்பிக்கையும் உறவுகளில் கசப்பை ஏற்றுகின்றன. சலிப்படைந்த இந்த உறவானது இன்னொரு உறவை நோக்கி மனதை சலனமுறச் செய்கிறது. அந்தரங்கமான
புதிய உறவுகளும், தூசி தட்டப்படும் பழைய ரகசிய உறவுகளும் விழுந்த கீறலை பெரிதாக்கி விரிசலாக்குகின்றன. இன்றைய நவீன உலகில் இதுதான் மனித உறவுகளுக்கிடையிலான மிகப்பெரிய
சவாலாக இருக்கிறது.///
arumai sir.
இவ்வளவு தெளிவாக யோசித்தவன் முதல் காதலியையே கல்யாணம் முடித்திருக்கலாம்.எவ்வளவோ பிரச்னைகள் தவிர்க்கப் பட்டிருக்கும்.இனி அவன் குழந்தைகளின் கதி?.அவன் காதலியின்(அவள் உத்தமியாகவே இருந்திருந்தாலும்)கணவன் அவன் மனைவியை பார்க்கும் கண்ணோட்டம்?.நினைத்தாலே தலை சுற்றுகிறது.
இது என்ன இந்த்ராணி முகர்ஜி கதையை விட சீரியஸ் ஆல இருக்கு .
கோகுல் சின்ன தப்பு செஞ்சிட்டாப்புல.
அவனை சிக்க வைக்க ட்ரை பண்ணினது தப்பு.
அதுவும் "தீவிரவாதி மாதிரி சிக்க வைக்கலாம்" ட்ரை பண்ணினது .. bad decision ..
போலீஸ் கேள்வி கேக்குற 1 மணி நேரத்துக்குள்ள அவன் யாரு என்னனு கண்டு பிடிச்சுடுவாங்க ..
ஒரே ரெண்டு வருஷம் வெயிட் பண்ணி, போட்டு தள்ளி இருக்கணும் ..
மிகச்சரியான தெளிவான விளக்கம் நன்றி ......
Post a Comment