ஆர்டிஸ்ட் ராஜா குறித்து கவிஞர் யவனிகா ஸ்ரீராம், பத்திரிக்கையாளர் துரைபாரதி ஆகியோர் பல முறை பேசினார்கள். ராஜா சினிமா எக்ஸ்பிரஸ்ஸில் ஆர்மபித்து ஏகப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சீரழிந்து போய்விட்டது. தாம்பரம் சானிடோரியத்தில் படுக்கையில் இருக்கிறார். இப்படியான உதவி கோரும் தகவல்கள் வரும் போது முடிந்தவரை நேரில் பார்த்த்விடுவதுண்டு. கால தாமதமாகிறதுதான். ஆனால் சிரமம் பார்க்காமல் நேரில் பார்த்துவிடுவது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. அப்படியும் சில சமயங்களில் நேரில் செல்ல முடிவதில்லை. ராஜா குறித்தான தகவல்கள் கிடைத்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் அவரைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவேயில்லை. இத்தகைய சமயங்களில் நம்பகமான ஒருவரை அழைத்து சரி பார்க்கச் சொல்ல வேண்டியிருக்கிறது. திரு.சுந்தர் சென்னை வருமான வரித்துறையில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். உதவி கோருபவர்களின் விவரங்களை அவரிடம் சொன்னால் அவர் சிரமம் பார்க்காமல் சென்று விசாரித்துச் சொல்லிவிடுகிறார்.
ஆர்டிஸ்ட் ராஜாவை நேரில் சந்தித்து தகவல் அனுப்பியிருந்தார்.
அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.
அன்புள்ள மணி,
சித்தா மருத்துவமனைக்குச் சென்று ஆர்டிஸ்ட் ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது தற்போதையை நிலைமையை விளக்கும் படங்களை எடுத்திருக்கிறேன். சில மருத்துவ ஆவணங்களையும் இந்த மின்னஞ்சலுடன் இணைத்திருக்கிறேன்.
என்னுடைய அறிக்கை: வத்லகுண்டுக்கு அருகில் இருக்கும் அய்யம்பாளையத்தைச் சார்ந்த ராஜா பாஸிடிவ் எனர்ஜி மனிதராகத் தெரிகிறார். அவரது மனைவி மனநல சிகிச்சையிலிருந்து குணம் பெற்று வருகிறார். ராஜாவின் மகள் இப்பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. ராஜாவின் மகன் பகுதி நேர பணியாளாராக சம்பாதித்து அந்த வருமானத்தில் தனது படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் குடும்பம் மிகக் கஷ்டமான சூழலில் இருக்கிறது/
தற்போதைய நிலைமை: Ankylosing Spondilytis, Cervical Vertebrae, Socket & Ball joint diffusion, scissor style cross legs, fusion of facetal joints of lower dorsal and lumbar vertebrae, MRI Dorsolumbar Spine.
அலோபதி மருத்துவத்தின் வழியாக அவரது கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுமாயின் சித்த மருத்துவத்தின் வழியாக கழுத்து பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு (மருந்து உட்பட) கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும் போலிருக்கிறது. அரசாங்கத்தின் நிதியுதவி ஒன்றரை லட்சம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் இரண்டரை லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கனவே கடந்த தொண்ணூறு நாட்களுக்கான சிகிச்சைப் பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. இப்பொழுதும் கூட மருந்துகள், மூலிகைகளுக்கென மாதம் பல்லாயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது.
ஆர்டிஸ்ட் ராஜா பரிதாபமான சூழலில் இருக்கிறார்.
ராஜாவை நேரில் சென்று சந்தித்து வரும் வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி. வேறு விவரங்கள் தேவைப்படுமாயின் அலைபேசியில் அழைக்கவும்.
அன்புடன்,
சுந்தர்.
ராஜா அனுப்பியிருந்த கடிதமும் அவரது பழைய படமும் கீழேயிருக்கிறது.
ராஜாவின் திறமை பற்றி நிறையப் பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காலம் முடக்கி கட்டிலில் தள்ளியிருக்கிறது. நிழற்படங்களைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.
உடல்நிலைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. அது பிசகினால் மனிதனைக் கந்தல் துணியாக்கிவிடுகிறது. யாருக்கு எப்பொழுது எந்த நோய் வருகிறது என்பதையெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. ஒரேயொரு கீறல்தான் விழுந்தது. உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று எதுவுமில்லை ஆனால் ஒரே மாதத்தில் கால் வீங்கி எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறவர்களை பார்க்க முடிகிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தார் என்றும் இப்பொழுது படுக்கையில் சாய்ந்துவிட்டதாகச் சொல்பவர்களையும் எதிர்கொள்ள நேர்கிறது. இவையெல்லாம் ஏதோவொருவிதத்தில் நம்மை எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது வெறும் பழமொழி மட்டுமன்று.
ராஜாவிடம் இன்று பேசினேன். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரைச் சந்தித்துவிட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தேதி குறித்து முடிவு செய்வார்கள் போலிருக்கிறது.
அறுவை சிகிச்சை முடிவான பிறகு நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்துவிடலாம்.
2 எதிர் சப்தங்கள்:
√
Manikandan please help him and May God Bless and cure him soon.
Post a Comment