Sep 30, 2015

மோடி அரசாங்கம் எப்படி?

வியூ ஹவுஸ் என்னும் விடுதி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு எதிரில் இருக்கிறது. அது குடிப்பதற்கான இடம். அங்கு குடிக்கவில்லையென்றாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி- சங்கடம்தான். ஆனால் அமெரிக்காவில் தனியாக அமர்ந்திருந்தால் யாராவது புன்னகைக்கிறார்கள். அப்படியொருவர் புன்னகைத்தார். அமெரிக்க நிறுவனமொன்றில் நிதி நிர்வாகப் பிரிவில் இருக்கும் அமெரிக்கர். தெளிவாக இருக்கும் அமெரிக்கர் பேசினாலே எனக்கு புரிவதில்லை. இவர் குடித்துவிட்டு பேசுகிறார். ரஜினி மாதிரி ஐ கேன் டாக் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இங்கிலீஷ் என்று சமாளித்துக் கொண்டிருந்தேன். ஏதோ சில விஷயங்களைப் பேசிவிட்டு ‘மோடியின் அரசாங்கம் பரவாயில்லையா?’ என்றார். எனக்கு எப்படித் தெரியும்? 


ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்களாகின்றன. கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார். வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டேயிருக்கிறார். அவரைத் தவிர வேறு எந்த அமைச்சரைப் பற்றியும் வெளியில் தெரிவதில்லை. ஊடகங்களை விலைக்கு வாங்கி பில்ட் அப் கொடுக்கிறார். கேமிராவுக்கு போஸ் கொடுக்கிறார் என்று ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இன்னபிற ஊடகங்களிலும் அவரை கலாய்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

அதானி போன்ற கார்போரேட்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார், வெறும் வாய்ச்சவடாலில் காலத்தை ஓட்டுகிறார், அவருக்கு இருந்த மரியாதையும் செல்வாக்கும் மங்கிவிட்டது போன்ற அனுமானங்கள் எனக்கும் உண்டு. இந்தியர்கள் எதைத் தின்ன வேண்டும்? எந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்? என்பதில் எல்லாம் கவனம் செலுத்துவது, ஹிந்தி, சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும், இந்துத்துவம் சார்ந்த செயல்பாடுகள் என்பனவற்றின் மீதெல்லாம் ஒவ்வாமையும் இருக்கிறது. இன்று கூட உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒரு இசுலாமிய முதியவரை ஒரு கூட்டம் அடித்துக் கொன்றிருக்கிறது. ‘இது எந்த அரசாங்கம் இருந்தாலும் நடந்திருக்கும்’ என்று சொல்லலாம்தான். ஆனால் இந்துத்துவ சார்புடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது சிறுபான்மையினருக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.

ஸ்வச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டம் அப்படியே சுணங்கிப் போயிருக்கிறது. கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதாகச் சொன்ன வாக்குறுதி பற்றிய எந்த மேலதிகத் தகவலும் இல்லை, கங்கை சுத்திகரிப்பு, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக அதிக வெளிச்சம் பாய்ச்சப்பட்ட திட்டங்கள் குறித்தான எந்தச் செய்தியும் இல்லை என்ற பட்டியலை அடுக்க முடியும். ஒருவிதத்தில் இத்தகைய குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மந்தமான அரசாங்கம் என்றோ செயல்படாத பிரதமர் என்றோ சொல்லிவிட முடியாது என்றுதான் விவரங்கள் காட்டுகின்றன. ஃபேஸ்புக் தலைமையகத்தில் மோடி சொன்னது போல இந்தியா ஒரு ஸ்கூட்டர் மாதிரி என்றால் நினைத்த நேரத்தில் திருப்பிவிடலாம். ஆனால் தொடரூர்தியை அவ்வளவு சீக்கிரமாக திருப்பிவிட முடியாது. மெதுவாகத்தான் திருப்ப முடியும். ஆனால் அதைத் திருப்புவதற்கான எந்தச் செயலும் மேற்கொள்ளாத அரசாங்கம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது என நம்புகிறேன்.

இன்று Financial Express ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா இப்பொழுது முதலிடத்திற்கு வந்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் சுணங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் இந்த ஈர்ப்பு சக்தி அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மோடி இந்தியாவில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கைதான் பதிலாக இருக்க முடியும். இதுவரையிலும் முதலீட்டாளர்களின் கனவு தேசமாக திகழ்ந்த சீனா சமீபமாக திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை மோடியின் அரசாங்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம் உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) ஒட்டுமொத்த வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவைக் கீழே தள்ளி விட்டிருக்கிறது.

இந்த அவதானிப்புகளை எல்லாம் வைத்துக் கொண்டு பதினைந்து மாதங்களில் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து மிகத் துல்லியமான முடிவையெல்லாம் சொல்லிவிட முடியாது. ஒரு நிறுவனத்தில் சாதாரணமான வேலைக்குச் சேர்ந்தால் கூட அந்தப் பணியாளரை மதிப்பீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு தேவைப்படும். இவ்வளவு பெரிய தேசத்தின் அரசாங்கம் ‘சரியா’ ‘தவறா’ என்று பதினைந்து மாதங்களில் எப்படிச் சொல்லிவிட முடியும்? தொண்ணூறுகளில் நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும் கொண்டு வந்த மாற்றங்களின் விளைவுகளை உணர்வதற்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை உணர்வதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தேவைப்படக் கூடும். 

இவையெல்லாம் நமக்கு வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நாமாக எடுக்கிற முடிவுகள்தானே? எந்தச் செய்தி நம்மை அடைய வேண்டும் எந்தச் செய்தி நம்மை அடையக் கூடாது என்பதைக் கூட யாரோ சிலர்தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தின் மீது மோடி அரசாங்கத்தின் பிடி இறுக்குவதாகவும் அங்கு இதற்கு எதிரான போராட்டம் நடப்பதாகவும் சில செய்திகளை வாசிக்க நேர்ந்தது. இது உண்மையா தவறா என்று கூடத் தெரியவில்லை. இந்திய ஊடகத்திலும் இது கவனப்படுத்தப்படவேயில்லை. கிட்டத்தட்ட எல்லாச் செய்திகளுமே இப்படித்தான் - வடிகட்டப்பட்டவை.

நமக்கு வரும் செய்திகளின் அடிப்படையில் கருத்தைச் சொல்ல வேண்டுமானால் மோடியின் அரசாங்கம் சாமானியர்களைப் பார்ப்பதைவிடவும் மேல்மட்ட ஆட்களைத்தான் கவனிக்கிறது என்பதான சூழல்தான் இருக்கிறது. விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்கள், பழங்குடியினர், ஆதிவாசிகள் உள்ளிட்டவர்களை மேம்படுத்தும் திட்டங்களில் செலுத்தப்படும் கவனத்தைவிடவும் வெளிநாட்டு ஆட்களை ஈர்ப்பதிலும் தொழிற்துறையினருக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும்தான் அதிகபட்ச கவனம் செலுத்தப்படுகிறது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இத்தையை கவர்ச்சிகரமான திட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதைவிடவும், மேல்தர மற்றும் மத்தியதர குடும்பங்களுக்குத்தான் உதவும். உற்பத்தித் துறையிலும், டிஜிட்டல் துறையிலும் செலுத்தும் அதே அளவு அல்லது அதைவிடவும் அதிகமான கவனத்தை இந்த அரசாங்கம் விவசாயத்துறையில் செலுத்த வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து கோடி ஏக்கர் விவசாய நிலத்தில் வெறும் நாற்பத்தைந்து சதவீத நிலம்தான் நீர்பாசன வசதி கொண்டிருக்கிறது. இறுகிக் கொண்டிருக்கும் கார்போரேட் பிடியிலிருந்து விவசாயத்தை இந்த அரசாங்கம் விடுவிக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் விவசாயம் அரசாங்கத்தின் கவனத்தை பெறக் கூடிய துறையாக இருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. சுதந்திர தின உரையிலும், நேற்று கூட அமெரிக்காவில் மோடி நிகழ்த்திய உரையிலும் அவர் குறிப்பிட்ட மூன்று துறைகளில் முதன்மையானதாக விவசாயம் இருந்தது. 

இந்தியாவில் ஐம்பது சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் இருக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அவர்களது பங்கு வெறும் பதினெட்டு சதவீதம்தான். அப்படியென்றால் இந்திய விவசாயம் அவ்வளவு உற்பத்தித் திறன் இல்லாததா? அப்படி அர்த்தமில்லை. சரியாக ஒழுங்குபடுத்தப்படாததாக இருக்கிறது. 

இந்தியாவில் இருக்கக் கூடிய ஆறு லட்சத்து நாற்பதாயிரம் கிராமங்களிலும் டிஜிட்டல் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இன்றைய இந்தியாவின் கிராமங்கள் அதைவிடவும் அத்தியாவசியமான தேவைகளுக்காக காத்திருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கான கல்வி, அடிப்படை மருத்துவ வசதிகள், எல்லோருக்குமான விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம், விரிவாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம் என கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகள் நிறைய இருக்கின்றன. இப்படி எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பிறகு யாராவது ‘மோடியின் அரசாங்கம் எப்படி?’ என்று பொதுவாகக் கேட்டால் ‘அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் சரியான பாதையில் செல்வதாகத்தான் தெரிகிறது' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அமெரிக்கரிடம் அப்படித்தான் சொன்னேன்.