டென்வர் வந்து இறங்கியவுடனேயே ஒரு ஆளிடம் விசாரித்தேன். இந்தியர்தான். ‘இங்க சுத்திப் பார்க்கிற மாதிரி என்ன இடமெல்லாம் இருக்கு?’ என்பதுதான் கேள்வி.
புரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ‘சுத்திப் பார்க்கிற மாதிரின்னா?’ என்றார். இதற்கு மேல் இந்த ஆளிடம் பேசி பயனில்லை என்று பேச்சை மாற்றிவிட்டேன். பொதுவாக இந்த மாதிரியான விவகாரங்களில் யாரையும் நம்பக் கூடாது. ஆகப்பெரிய சொம்புகளாக இருப்பார்கள்- சொம்பு என்றால் இரட்டை அர்த்தமெல்லாம் இல்லை- எந்த விவரமும் இல்லாத பருப்பு சாம்பார் என்று அர்த்தம். ஆனால் அப்பாடக்கர் மாதிரி பேசுவார்கள்.
அப்படித்தான் இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக ஒரு அப்பாடக்கர் ‘ட்வின் பீக்ஸ்ன்னு ஒரு இடம் இருக்கு பார்த்துட்டு வந்துடுங்க’ என்றார். ஏதோ விவகாரமான இடம் போலிருக்கிறது என்று நினைத்து கூகிளில் தேடிப் பார்த்தேன். இந்த வரியை வாசிக்கும் போது தேடிப் பார்க்க வேண்டும் என கை பரபரத்தால் நீங்களும் என் இனமே. Twinpeaks Denver என்று தேடிப்பாருங்கள். படங்கள் வந்து விழுந்தன. ‘அப்படியொன்னும் பெரிய மேட்டர் இல்லையே’ என்று நினைத்துக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்தபடி ‘அங்க என்ன விசேஷம்?’ என்றேன். இந்த மாதிரி சமாச்சாரங்களைப் பேசும் போது நிறையப் பேர் என்னை நல்லவன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆளும் உருவமும் முகமும் அப்படி அமைந்திருக்கிறது. குரலையும் அப்பாவித்தனமாக மாற்றிக் கொள்வது வாடிக்கை.
குதர்க்கமாக சிரித்துவிட்டு ‘போய் பாரு..அப்புறம் தெரியும்’ என்றார்.
ப்ரான்ஸின் Cap'd Agde, ஆஸ்டினின் Hippie Hollow Park போன்ற இடங்களில் எல்லாம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லியபடியே சுதந்திரமாகத் திரிந்தவன் என்று சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்பதால் முகத்தை வெட்கப்படுவது போல வைத்துக் கொண்டு எழுந்து வந்துவிட்டேன். ‘அப்பாவி’ என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னாராம். அவர் சொன்னதைக் கேள்விப்பட்டபிறகு ம்க்கும் என்று சிரித்துக் கொண்டேன்.
இங்கே வந்ததிலிருந்து முதல் இரண்டு மூன்று நாட்கள் எங்கேயும் போகவில்லை. இந்தியாவுக்கும் டென்வருக்கும் கிட்டத்தட்ட பதினொன்றரை மணி நேரங்கள் வித்தியாசம். அங்கே பகல் பத்தேகால் என்றால் இங்கே இரவு பத்தே முக்கால். அலுவலகத்தில் இருக்கும் போது தூக்கத்தில் தள்ளாடுவதும் அறைக்கு வந்த பிறகு தூக்கம் பிடிபடாமல் பினாத்துவதுமாக அலைகழித்துவிட்டது. நேற்றிலிருந்து பரவாயில்லை. உடல் பழகிவிட்டது. இனியும் வெளியே சுற்றவில்லை என்றால் இங்கே வந்ததற்கு அர்த்தமேயில்லாமல் ஆகிவிடும். உடன் வந்திருக்கும் நண்பரிடம் ‘எங்கேயாச்சும் வெல்தாமா அண்டி?’ என்றேன். ‘நேனு சாய்பாபா குடிக்கு வெல்துனானு’ என்றார். அது சரி. டென்வர் வந்து முருகன் கோவில், சாய்பாபா குடி, இந்தியன் கஃபே என்று தேடித் திரிவதற்கு பதிலாக பெங்களூரிலேயே இருந்திருக்கலாம். இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள். எப்படியோ போகட்டும்.
விசாரிக்கும் போதே- இந்தியர்களிடம் விசாரிப்பதற்கு வெட்கமாக இருந்ததால்- அமெரிக்கர்களிடம் ‘இந்தியாவில் கிடைக்காத விஷயங்கள் இந்த ஊர்ல எங்கே கிடைக்கும்?’ என்றுதான் கேட்டேன். மரிஜூவானா கொலராடோ மாகாணத்தில் தடையில்லாமல் கிடைக்கிறது. முந்தாநாள் கூட ஒரு ஆப்பிரிக்கப் பையனும் அமெரிக்கப் பெண்ணும் நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு முன்பாக மின்கம்பத்திற்கு கீழாக அமர்ந்து குப் குப்பென்று ரயில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். புகைத்து முடித்துவிட்டு ஏதாவது செய்வார்களாக இருக்கும் என்று ஜன்னல் வழியாக தேவுடு காத்துக் கொண்டிருந்தேன். அநியாயம். அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்கள்.
நகரத்தில் மரிஜூவான விற்கும் ஒரு கடையொன்றில் ‘சிகரெட் பிடிப்பீர்களா?’ என்றார்கள். இல்லை என்றேன். ‘புகைக்கத் தெரியாதவர்களுக்கு சாக்லேட் மாதிரி கூட இருக்கு’ என்றார்கள். ‘அப்படியா?’ என்றவுடன் ‘எப்படி டோஸ் வேணும்? பறக்கிற மாதிரி வேணுமா? சும்மா கிறுகிறுன்னு மட்டும் இருக்கிற மாதிரி வேணுமா? இல்ல வெறும் டேஸ்ட் மட்டும் பார்க்கறீங்களா?’ என்றார்கள். தனியாகச் சென்றிருந்தேன். எப்படியும் வேண்டாம் என்று தோன்றியது. புனிதன் என்றெல்லாம் இல்லை. கோக்குமாக்காக ஏதாவது ஆகி டென்வரின் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தான் இவன் என்று வருங்கால சந்ததியினர் தவறாக பேசிவிடக் கூடாதல்லவா? அந்த எச்சரிக்கையுணர்வுதான்.
உண்மையில் மரிஜூவானா பற்றி விசாரிப்பதற்காக down town க்கு செல்லவில்லை. உடன் வேலை செய்யும் ஆட்கள் ‘ஒன்பது மணிக்கு மேல ட்ரெயின்ல வந்தா திருட்டு, வழிப்பறியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு’ என்றார்கள். சொன்னவர்கள் நம்மவர்கள். இப்படி யாராவது பயமுறுத்துகிறார்கள் என்று பம்மிக் கொண்டு அறையிலேயே இருக்க முடியுமா? அவர்கள் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு அமெரிக்கர்களிடம் விசாரித்தேன். எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காவலரிடமும் ஒரு முறை கேட்டதற்கு ‘பயத்தை இங்கேயே விட்டுட்டு வண்டி ஏறு’ என்றார். அவ்வளவுதான். ஆனது ஆகட்டும் என்று ரயிலேறிவிட்டேன்.
எங்கே இறங்க வேண்டும் என்பது கூட சரியாகத் தெரியவில்லை. வெகுவாகத் திட்டமிடும் பயணங்களில் சுவாரஸியமே இருப்பதில்லை. கால் போன போக்கில் சுற்றிவிட்டு வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஊரின் ஆன்மா பிடிபடும். தொடர்வண்டியில் வயது முதிர்ந்த ஒரு பெண்மணி இருந்தார். நான் எதிர்பார்ப்பதையெல்லாம் விளக்கினேன். சிரித்தவர் ஒரு இடத்தைச் சொல்லி அந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளச் சொன்னார். தொடர்வண்டி நிலையத்தைவிட்டு வெளியே வந்து வலது பக்கம் சென்றாலும் சரி; இடது பக்கம் சென்றாலும் சரி என்றார். உள்ளே நுழைவதற்கு காசு கேட்பார்களா என்ற கேள்வி ஓடிக் கொண்டேயிருந்தது. ‘பத்து டாலர் இருக்கும்’ என்றார் அந்தப் பெண்மணி. அறுநூற்று எழுபது ரூபாய்- மனம் இந்தியக் கணக்கை போட்டு வைத்துக் கொண்டது.
‘டேன்ஸ் ஆடுவாங்க இல்ல?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேன்.
‘ஓ மை யங் பாய்....போய் பாரு’ என்றார். மணி ஆறு ஆகியிருந்தது. மூன்று மணி நேரம் என்னுடைய கணக்கு. பிறகு வெளியே வந்து ரயில் பிடித்தால் பத்து மணிக்குள் அறைக்கு வந்துவிடலாம்.
பிரச்சினை என்னவென்றால் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இந்த ஏர்டெல்காரன் இண்டர்நேஷனல் ரோமிங் வசதியை எனக்குத் தெரியாமலே கொடுத்து வைத்திருக்கிறான். ஒரு நிமிடம் பேசினால் தொண்ணூறு ரூபாய் கழண்டுவிடுகிறது. அதனால் வீட்டிலிருந்து மிஸ்டு கால் மட்டும் கொடுக்கிறார்கள். அவர்கள் அழைத்தவுடன் உடனடியாக ஸ்கப்பிலிருந்து அவர்களைத் திரும்ப அழைக்க வேண்டும். இல்லையென்றால் சந்தேகம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்திலிருந்து வந்தவுடன் படுத்துத் தூங்கிவிட்டேன். நடுராத்திரி மூன்று மணிக்கு அழைத்து உடனடியாக ஸ்கைப்பில் பேசச் சொன்னார்கள். அப்படி ஏதாவது அழைத்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. சாய்பாபா கோவிலில் இருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பிவிடலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அறைக்குத் திரும்பு வரைக்கும் அழைப்பே வரவில்லை.
7 எதிர் சப்தங்கள்:
டான்ஸ் ஆடினாயா? இல்லையா? இந்த ஐ. டி. பசங்கள் எல்லாம் ஸ்டேட்ஸ்க்கு புரொகிராம் எழுத போறாங்கன்னு இவ்வளவு நாளா நினைச்சிக்கிட்டு இருந்தேன்.
டேன்ஸ் ஆடுனாங்களா?
//ஆனது ஆகட்டும் என்று ரயிலேறிவிட்டேன்//
வீரத்தமிழன்னய்யா நீர்.
Bro, Dance parthingala , 10$ worthaa.. :) Athai pathi sollave illaye...
Manobala oru padathula "idhulaam paaklina yen katta vegaadhumanu" solluvaaru. Adhu dhaan gyaabagam varudhu mani sir
Enjoy enjoy. //
ஆனால் அறைக்குத் திரும்பு வரைக்கும் அழைப்பே வரவில்லை.// You came back right?
காலாண்டு விடுமுறை. பூமணியின் அஞ்ஞாடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன். கனமான புத்தகம் கையில் வைத்து படிக்க கஷ்டமாக இருந்தது. கொஞ்சம் கீழே வைத்துவிட்டு உன் பழைய பதிவுகளை கிளறினேன். அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பற்றி நீ எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. என் 33 வருட ஆசிரியப் பணியில் நான் கண்ட உண்மை, பள்ளிகள் என்பது குழந்தைகள் கல்வி கற்பதற்கான ஏற்ற இடம் அல்ல. இப்போதைய பள்ளிகள் ஆசிாியா்களை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இதைப் பற்றி பிறகு பேசுவோம். உன் மசால் தோசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment