‘எதுக்குய்யா பனிரெண்டு மணிக்கே வண்டியை வரச்சொன்ன?’ என்று பாவமாகத்தான் கேட்டேன். காலை ஏழு மணிக்குத்தான் விமானம் கிளம்பவிருக்கிறது. ஆறு மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் அமர்ந்து என்ன செய்வது? பெங்களூரு விமான நிலையத்துக்கு பேருதான் பெத்த பேரு. இதுவரை ஆறேழு முறை சென்றிருக்கிறேன். ஒரு நடிகையைக் கூட அங்கு பார்த்ததில்லை. சென்னையில் மண்டை மீது கண்ணாடி விழுந்தாலும் பரவாயில்லை. நயன்தாராவோ த்ரிஷோவோ குறுக்கே வருவார்கள். இந்த லட்சணத்தில் பெங்களூர் விமானநிலையத்தில் காபிக்கு கூட நூற்றியெழுபது ரூபாய் விலை வைத்து விற்கிறார்கள். ‘கும்பகோணம் டிகிரி காபி மாதிரி இருக்கோணும்...பார்த்துக்க’ என்றேன். ‘கிட்டத்தட்ட பக்கத்துல வரும்’ என்று சொல்லிவிட்டுக் கொடுத்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரங்களுக்கு அவருக்கு சாபம் விட்டுக் கொண்டேயிருந்தேன்.
‘லேதண்டி. நாம சீக்கிரம் கிளம்பிட்டா வீட்ல இருக்கிறவங்க தூங்குவாங்க இல்ல’ என்றார் அமெரிக்கா வரைக்கும் உடன் வரப் போகும் அந்தத் தெலுங்குக்காரர். இப்படியெல்லாம் செண்டிமெண்டலாக அமுக்கினால் விழுந்துவிடுவேன். சரியென்று தலையை ஆட்டி பதினோரு மணிக்கு குளியலறைக்குள் புகுந்து முதுகு நனையாமல் தண்ணீரை ஊற்றி குளித்ததாக நமஸ்தம் செய்துவிட்டு சாமி படத்துக்கு முன்பாக நின்று முழு பக்தியுடன் வேண்டிக் கொண்டு- என்ன வேண்டினேன் என்று உங்களுக்கே தெரியுமே - அந்த டிரைவரிடம் ‘அண்ணே ஏழு மணிக்குத்தான் ப்ளைட்...நீங்க மெதுவாவே போங்க’ என்றேன். அது OLA வண்டி. ஒரு வாடகைக்கும் இன்னொரு வாடகைக்கும் இடையில் மூன்று நிமிடங்கள் கூட இடைவெளி இருக்காதாம். பேச்சுவாக்கில் அந்த டிரைவர்தான் அதைச் சொன்னார். ‘மாசம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக ஓலாக்காரன் பிஸினஸ் புடிச்சுத் தர்றான்’ என்று. வருகிற வாடகையில் முப்பதோ முப்பத்தைந்து சதவீதமோ ஓலாக்காரனுக்குக் கொடுத்துவிட வேண்டும். சொந்த வண்டியாக இருந்தால் டீசல் செலவு, பரமாமரிப்பு அத்தனையும் போக எப்படியும் ஒரு ஐடிக்காரன் சம்பளத்தை மிச்சப்படுத்தலாம். அந்த டிரைவர் தும்கூர்காரர். பெங்களூருவில் சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறார்.
உடனிருந்த தெலுங்குவாலா ‘ஏ பேங்க் அண்டி?’ என்றார். டிரைவர் சிரித்துக் கொண்டு ஆக்ஸிலேட்டரை மிதி மிதியென்று மிதித்தார். ஐடிக்காரன் புத்தி எப்படி இருக்கும்? வீடு வாங்குவதிலிருந்து ஜட்டி வாங்குவது வரைக்கும் அத்தனையும் இ.எம்.ஐ கட்டித்தான் வாங்க வேண்டும். அதே நினைப்பில் ‘எந்த வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டார். ஓட்டுநர் மிதித்த மிதியில் ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம். பெங்களூர் மாதிரியான நகரங்களில் ஓலாக்காரர்கள் வந்த பிறகு அவனுடன் இணைந்து கொள்ளும் வண்டிக்காரர்களுக்கு நிற்க நேரமில்லாமல் வாடகை வந்து கொண்டேயிருக்கிறது. மற்ற வாடகை வண்டிக்காரர்கள் பெரும்பாலும் கவாத்து அடிக்கிறார்களாம். அதையும் அந்த ஓட்டுநரேதான் சொன்னார். Monopoly.
‘ஆமா சார்...எந்த இடத்துல இருந்து வேணும்ன்னா போன் பண்ணுங்க...பத்தே நிமிஷத்துல உங்க இடத்துக்கு வண்டி வந்துடும்...ரேட்டும் சொன்னா சொன்ன மாதிரி..ஒரு பைசா ஏமாத்தறது இல்ல’ ஓட்டுநர் வக்காலத்து வாங்கினார். வேலிக்கு ஓணான் சாட்சி.
விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆட்களையே காணவில்லை.
‘சார் ஏழு மணிக்கு ப்ளைட்’
‘ஏழு மணிக்குத்தானே? வெய்ட் பண்ணுங்க...இப்போ மணி என்னாச்சுன்னு பாருங்க’
ஒன்றரை கூட ஆகியிருக்கவில்லை. தெலுங்குக்காரனைவிட்டு ஒரு நாற்காலி தள்ளி அமர்ந்து கொண்டேன். இப்பொழுதெல்லாம் திடீர் திடீரென்று எதையாவது செய்து வைத்துவிடுகிறேன். கடுப்பில் காதைக் கடித்து வைத்துவிட்டால் உள்ளே தூக்கி உட்கார வைத்துவிடுவார்கள்.
கண்களை மூடித் தூங்கவும் முடியவில்லை.
‘எவனாச்சும் நம்ம பாஸ்போர்ட்டை அடிச்சுட்டு போய்ட்டா என்ன ஆகும்?’
‘பாஸ்போர்ட்டை விட்டுட்டு பர்ஸை அடிச்சுட்டு போய்ட்டா......’
‘அமெரிக்காவில் பிச்சை எடுக்க விடுவாங்களா?’ இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ‘மம்மீ...டாலர் ப்ளீஸ்’ என்று பிச்சைக்காரன் வேடத்தில் முக்கால் நொடிகளுக்கு உதடுகளை அசைத்தும் பார்த்துக் கொண்டேன். சுதாரித்து ‘அழிச்சான் புழிச்சான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் கடவுளை வேண்டத் தொடங்கியிருந்தேன். அதே வேண்டுதல்தான்.
மூன்றரை மணிக்கு கவுண்ட்டர்களைத் திறந்தார்கள். வழக்கம்போல தெலுங்குக்காரர் வரிசையில் முதல் ஆள். நான் இரண்டாவது ஆள். அந்தப் பெண்மணியிடம் நான்கைந்து நிமிடங்களாவது பேசிக் கொண்டிருந்தார். அதுவரைக்கும் தூக்கமில்லாமல் களைத்துப் போயிருந்த கண்களுக்கு அந்தப் பெண்மணிதான் ஒரே வெளிச்சம்.
‘அப்படி என்னய்யா பேசிட்டே இருந்த?’ என்றேன்.
‘இதுவரைக்கும் நான் ப்ளைட்ல போனதே லேதண்டி...ஜன்னலோரமா சீட்டுக் கொடுங்க’ என்றாராம். அந்தப் பெண்மணியும் சிரித்துக் கொண்டே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.
நான் கொஞ்சம் திமிராக ‘கேன் யூ கிவ் மீ விண்டோ ஸீட்’ என்றேன். ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு ‘நோ சார்..நாட் அவைளபிள்..ஸாரி’ என்றார்.
தொலைந்து போ என்று மனதுக்குள் கருவிக் கொண்டு மீண்டும் சாமியை வேண்டத் தொடங்கியிருந்தேன். பாதுகாப்பு சோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு விமானம் ஏறும் இடத்தில் தெலுங்குக்காரர் கேட்டார். ‘இந்த மொத்தக் கூட்டத்துலேயும் எனக்கு பக்கத்துல யார் வருவாங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்’ என்றார். ஒரு அமெரிக்கப் பாட்டி இருந்தார். எப்படியும் எழுபதைத் தாண்டியிருக்கும். ‘அவர்தான்’ என்றேன். சிரித்துக் கொண்டு இருப்பதிலேயே அழகான ஒரு பெண்மணியைக் காட்டி ‘உங்கப் பக்கத்துல இவதான் உட்காருவா’ என்றார். இந்த மனிதனுக்கு எவ்வளவு நல்ல மனது என்று நினைத்துக் கொண்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். அப்படியே எதிர்ப்பதமாக நடந்துவிட்டது. அந்தப் பாட்டி எனக்குப் பக்கத்தில். பெங்களூரில் ஆரம்பித்த பாட்டி ஒரு ரம்பத்தை எடுத்து கழுத்தில் வைத்தார்- என் கழுத்தில்தான் - அறுக்கத் தொடங்கியவர் நிறுத்தவேயில்லை. ஒரே வெட்டாக வெட்டினால் கூட பரவாயில்லை. இப்படி காலுக்குக் கீழாக தலையை வைத்து வெறுக் வெறுக் என்று மொன்னை ரம்பத்தில் இழுத்தால் எவனால் தாங்க முடியும்? அவரிடம் ஜான் இர்விங் எழுதிய 'The Fourth Hand' நாவல் இருந்தது. அதைப் வாசிக்காமல் நான் என்ன படித்தேன், என்ன வேலைக்குச் செல்கிறேன், எத்தனை பொண்டாட்டி என்று தாளித்துத் தள்ளிவிட்டார். வயதானால் எந்த ஊர்க்காரர்களாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது. ‘இந்தியாவுக்கு வரும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரோட கையை சிங்கம் ஒண்ணு கடிச்சுடுது...அவருக்கு அமெரிக்காவிலேயே முதன் முறையா கை மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அந்தப் பத்திரிக்கையாளருக்கும் அந்த கையை தானம் செய்கிறவரோட மனைவிக்கும் இடையிலான காதல்...இதெல்லாம்தான் நாவல்...தெரியுமா?’ என்றார்.
தெரியாது.
‘படிங்க....நல்ல நாவல்’ என்றார்.
எதுவும் சொல்லாமல் ஹெட் ஃபோனை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டேன். எனக்கு ஹிந்தி தெரியாது. புரியவும் புரியாது. ஆனாலும் வேறு வழியில்லை. தொடர்ச்சியாக மூன்று படங்களைப் பார்த்தேன். பிகே, தனு வெட்ஸ் மனு மற்று என்.ஹெச் 10. மூன்று படங்களையும் லண்டன் வருவதற்குள் பார்த்து முடித்த பிறகும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. பாட்டி மீண்டும் ஆரம்பித்திருந்தார். அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அவருடைய கணவர் வந்து அருகில் அமர்ந்தார். இன்னொரு ரம்பம் என்று நினைத்துக் கொண்டேன்.
‘நீங்க ரொம்ப சிரமப்படுறதை பார்த்தேன்..ஸாரி...she is a compulsive talker...ட்ரீட்மெண்ட்ல இருக்கா...தப்பா எடுத்துக்காதீங்க’ என்றார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அவரைப் பார்த்துக் கொள்ளவே ஒருவர் வேண்டும். அவர் தன் மனைவியைப் பார்த்துக் கொள்கிறார்.
‘நீங்களே சமாளிச்சுக்குவீங்களா?’ என்றேன். அவர் எதுவும் சொல்லவில்லை. கடுப்பாகிவிட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு அமைதியாகிவிட்டேன்.
‘சின்ன வயசுல யாரையும் யாரும் பார்த்துக்க வேண்டியதில்லை. அவங்கவங்க அவங்கவங்களைப் பார்த்துக்குவோம்...அப்போ நம்ம சந்தோஷம் மட்டும்தான் முக்கியம். அது பாதிச்சுதுன்னா சண்டை புடிச்சுக்குவோம்...வயசான பிறகு அப்படியில்லை....யாரை யார் பார்த்துக்கிற நிலைமை வரும்ன்னு தெரியாது.....அந்த சமயத்துல சலிச்சுக்காம பார்த்துக்கிறோம் பாருங்க...அதுதான் லவ்...என்னால பார்த்துக்க முடியற வரைக்கும் அவளைப் பார்த்துக்கப் போறேன்..ஆனா இன்னும் எவ்வளவு நாள்ன்னு தெரியல...ஏற்கனவே ஒரு தடவை ஸ்ட்ரோக் வந்துடுச்சு.....அடுத்து ஒண்ணு மாஸிவ்வா வந்தா போய்டுவேன்’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். அந்த சிரிப்பைத் தாண்டி கண்ணீர் கசிந்திருந்தது. இப்பொழுது அந்தப் பாட்டி ஜான் இர்விங் பற்றி பக்கத்து சீட்டுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டேன்.
9 எதிர் சப்தங்கள்:
அருமை அண்ணா...
தங்கள் பதிவில் நகைச்சுவையுடன் கண்ணீரும் வந்தது .
சீட்டுக்கட்டு கட்டுரை எழுதி முடிச்ச கையோடு ஒபாமா கட்சில சேர்றதுக்கு அமெரிக்கா போறீங்களே.இதெல்லாம் நல்லா இல்ல!!!!!!!!!.
Touching..
Happy Journey...
-Sam
உயர் திரு மணிகண்டன் அவர்களே,உங்கள் பதிவை தினமும் படிப்பேன்,மடி கணினியை திறந்த உடன் நான் முதலில் தேடுவது நிசப்தம் தளத்தை தான்.உங்களை பாரட்ட எமக்கு தகுதி இல்லை.ஆனால் நன்றி பகிர்கிறேன்.உங்கள் எழுத்து எனக்கு என்னை சுற்றி உள்ள உயிர்களை கவனிக்க தூண்டுகிறது.நான் நன்றி பகிர கடன்பட்ட எழுத்தாளர்களில் தாங்களும் ஒருவர்.
பல கதவுகளை நான் பார்க்க வழி செய்த தங்களை போன்ற எழுத்து,செயல்பாட்டு பிரியர்களுக்கு என் போன்ற சாதாரண புத்தக வாசகனின் நன்றிகள்.
ஒரு விண்ணப்பம் நீங்கள் படித்த சிறந்த தமிழ் புத்தகங்களை உங்கள் தளத்தில் விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.உங்கள் எழுத்தின் வழியாக படிக்கும் போது யாருக்கும் ஒரு ஆர்வம் தோன்றும்.அதுவும் எங்களை போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்.
மற்றும் ஒரு விண்ணப்பம் தாங்கள் தினமலரில் எழுதிய திரைப்படங்களின் சுட்டியை உங்கள் தளத்தில் தனியாக பகிரலாமே.தினமலர் தளதில் தேடுவது சிரமமாக உள்ளது.அங்கு சென்றால் அரசியல் நாடகங்கள் மனஉலசலை தருவதால் அங்கு செல்ல மனம் மறுக்கிறது.அதனால் தனி பதிவு தரவும்.நன்றி.
சுஜாதா என்ன எழுதினாலும் படிக்கத்தூண்டுகிற வசீகரம் அதில் இஇருக்கும். அதே போல் உன் எழுத்திலும் அந்த ஈா்ப்பை காண்கிறேன். நம்ம ஊா்க்காரன் என்ற பாசத்தினால் சொல்லவில்லை உண்மையைச் சொல்கிறேன். உன்னிடம் ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள விழைகிறேன். சினிமா உலகில் நடிகா்கள் நட்பு பாராட்டிக்கொள்ள, ரசிகா்கள் அடித்துக்கொள்வாா்கள். ஆனால் இலக்கிய உலகில் ஏன் தலைகீழாக இருக்கிறது. நீங்கள் என்ன எழுதினாலும் ரசித்துப் படித்து பாராட்டும் நாங்கள் அமைதியாக இருக்க நீங்கள் ஏன் ஒருவரை ஒருவா் குதறிக் கொள்கிறீா்கள். ஏன் இந்த கொலை வெறி. யாருக்கும் எந்தக் கருத்தும் சொல்ல உாிமை உண்டு எனில் மென்மையாக விமர்சிக்க கூடாதா. ஏன் அருவருக்கத்தக்க முறையில் ஒருவரை தாக்குகிறாா்கள்.வாழ்வின் யதாா்த்தங்களை அருமையாக எழுதும் இந்த கதைசொல்லிகளுக்கு சகிப்புத்தன்மை இல்லையே ஏன். - - ராஜன் துாத்துக்குடி.
Dear Mani, wish you happy journey. Try the BA's self service online check-in on your return flight. It opens up 24 hours before the flight time.
But, no way to know / select your neighbor though :)
You have come to usa;to which state? Presently I am also here;california/santa Cruz.
Ok
Hi,
Wonder full article..!
Have nice and safe journey.
.மணிகண்டனின் எழுத்தில் இருக்கும் தப்பித்தல் தான் அதிலிருக்கும் சிறப்பு என சமீபத்தில் நீங்கள் கலந்துகொண்ட விழாவில் ஒருவர் பேசியதாக நினைவு. அந்த தப்பித்தல் கொஞ்சம் அதிகமாக இந்த பதிவில் இருப்பது போலவும், ஏன் பேசுகின்ற ஒரு மனிதரிடம் இத்தனை விலகல் அதிகமாகவே இருப்பதாகவும் தெரிகிறது. இது உங்கள் எதார்த்தமாகக்கூட இருக்கலாம்.
முதலில் எதற்கு புள்ளி வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நிச்சயம் தெரியும் என்றே நினைக்கிறேன்.
Post a Comment