Sep 19, 2015

சீட்டுக்கட்டு

‘அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி’ என்று ஊர் முழுக்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து வை.கோபால்சாமி என்ற பெயர் அறிமுகமானது. அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து நிறையப் பேர் மதிமுகவை ஆதரித்துப் பேசினார்கள். செந்தாமரை அச்சகத்தில் செய்தித்தாள் படிக்கப் போகும் போதெல்லாம் வைகோ பற்றியும் மதிமுக பற்றியும்தான் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு பதின்மூன்றாண்டு வனவாசம்...இனி உனக்கு ஆயுள் முழுக்க வனவாசம்’ என்று திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதிக்கு எதிராக அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவு கடுமையாக அமுலாக்கப்பட்ட அந்தச் சமயத்தில் மனதளவில் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர்கள் வைகோவின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். திமுக-அதிமுகவுக்கான மாற்று இனி மதிமுகதான் என்றார்கள். அவர்களது கணிப்பும் தவறாகவில்லை. 


மதிமுக தொடங்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. ராஜீவ்காந்தியின் மறைவுக்குப் பிறகு அதிமுக மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருந்த காலம் அது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதிமுகவுக்காக எங்கள் ஊரிலிருந்து வண்டிகள் பறந்தன. அப்பொழுது கே.ஏ.செங்கோட்டையன் முதன்முறையாக அமைச்சர் ஆகியிருந்தார். போக்குவரத்து மற்றும் வனத்துறை என்ற பலம் வாய்ந்த துறைகள் அவரிடம் கைவசம் இருந்தன. எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை சு.முத்துச்சாமியும் எங்கள் மாவட்டத்திலிருந்து இன்னொரு அமைச்சர். ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமியா? செங்கோட்டையனா? என்கிற பனிப்போர் ஆரம்பமாகியிருந்தது. அந்த இடைத்தேர்தலில் இரண்டு பேரும் அதிமுகவுக்காக கடுமையாக வேலை செய்தார்கள். என்ற போதிலும்  மதிமுக வென்றுவிடும் என்று கூடச் சொன்னார்கள். அந்தத் தேர்தலில் மதிமுகவினால் வெல்ல முடியவில்லை என்றாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அடுத்த முதல்வர் வைகோதான் என்றார்கள்.

வைகோவின் செயல்பாடுகள் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும்படி இருந்தன. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக்கும் ஆயிரக்கணக்கான கி.மீட்டர் நடைபயணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பிரசுரமாகின. வழியெங்கும் கூட்டம் ஆர்பரிக்கிறது என்று எழுதினார்கள். அவரது ஆரம்பகட்ட மாநாடுகளில் திரண்ட கூட்டம் அரசியல் அரங்கில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. சினிமா பின்புலமில்லாமல் மக்கள் கூட்டத்தைத் திரட்டும் வல்லமை கொண்ட தலைவர் வைகோ என்ற நிலை உருவாகியிருந்தது. அப்பொழுதிருந்தே எனக்கு வைகோ மீது ஒருவித க்ரேஸ் உண்டு. கோபி கலைக்கல்லூரியில் ‘அக்கினிக்குஞ்சுகள்’ என்ற தலைப்பில் அவர் பேசுவதைக் கேட்க ஓடியதும், இப்பொழுது கட்சியின் ஈரோடு மாவட்டத் துணைச் செயலாளராக இருக்கும் மா.கந்தசாமியின் சகோதரி திருமணத்தை நடத்தி வைக்க கூட்டத்தில் முண்டியடித்துச் சென்று அவருக்குக் கை கொடுத்து புளகாங்கிதம் அடைந்ததும் ஞாபகமிருக்கிறது. அவரது நீண்ட கருப்புத் துண்டும், அடர்ந்த மீசையும், தடையில்லாத பேச்சும், பேசும் போது துண்டை சரி செய்யும் இலாவகமும்- அந்தப் பருவத்தில் அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியிருந்தது. அவருக்காக ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து எரிந்த விவரங்களைத் தெரிந்து கொண்டபோது வைகோ ஒரு மிகப்பெரிய தலைவர் என்று நம்பத் தொடங்கியிருந்தேன்.

பக்கத்து ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வைகோ கொடியேற்றி உரையாற்றுவதாக ஏற்பாடு. வைகோ வரும் வரைக்கும் கூட்டத்தின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக டிவி-டெக் வைத்து படம் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். செல்போன் எதுவும் இல்லாத காலகட்டம் அது. திடீரென்று கார் வந்துவிட்டது. வைகோ வரும் போது படம் ஓடிக் கொண்டிருந்தது. டிவி ஓடுவதைப் பார்த்து கடும் கோபமடைந்தவர் ‘அப்போ கூட்டம் எனக்கு சேரலை..இந்த டிவிக்கும் ஆட்டத்துக்கும்தான் சேர்ந்திருக்கு..இல்லையா?’ என்றவர் ‘அப்படிப்பட்ட கூட்டத்தில் நான் பேச வேண்டியதில்லை’ என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பிவிட்டார். ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு கட்சி நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூட நினைத்துப் பார்க்காத தலைவராகத் தெரிந்தார். அன்றிலிருந்து எந்தக் காலத்திலும் அந்த ஊரில் மதிமுகவின் கட்சிக் கொடியைப் பார்க்க முடிந்ததில்லை. 

வைகோ யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத தலைவர். தமிழக அரசியலில் நல்லவராக தன்னைக் கட்டமைப்பதைவிடவும் யதார்த்தத்தைத் தெரிந்து கொண்ட தலைவராக இருப்பதுதான் அவசியம். மதிமுக என்பது மாற்று சக்தி, வைகோ என்பவர் மாபெரும் தலைவர் என்கிற பிம்பங்களும் நினைப்புகளும் சிறுகச் சிறுகச் சரிந்து கொண்டேயிருந்தன. தவறான கூட்டணி முடிவுகளாலும், தனது உணர்ச்சிவயப்பட்ட போக்கினாலும் ஒவ்வொரு முறையையும் தோல்வியை மட்டுமே ருசித்துக் கொண்டிருந்தார். தலைவராக இருப்பவர் தோல்விகளைச் சமாளித்துக் கொள்வது எளிதான காரியம். ஆனால் தொண்டர்களால் சமாளிக்க முடியாது.

கடைக்கு வாடகை கொடுத்து சைக்கிள் கடை நடத்தி வந்த கண்ணப்பன் காலம் முழுமைக்கும் தனது வருமானத்தை கட்சிக்குக் கொடுத்து கவுன்சிலர் தேர்தலில் செலவழித்து தோல்வியடைந்து கடையை விற்றுவிட்டு சாலையோரம் பஞ்சர் கடை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுதும் அவரது முதுகுக்குப் பின்னால் மூன்றடியில் ஒரு மதிமுகக் கொடி பறந்து கொண்டிருந்தது. ‘என் தொண்டன் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கட்சியில் இல்லை’ என்று மேடையில் பேசுவதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு காலத்துக்கு குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு கட்சிக்காகச் செலவு செய்து கொண்டிருப்பான்? அப்படியே அவன் செலவு செய்தாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்கமாட்டார்களா? 

கடந்த நான்கைந்து நாட்களாக வைகோவின் ஆட்கள் அவரை விட்டு விலகிக் கொண்டிருக்கும் செய்திகளை வெறும் செய்திகளாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வைகோ ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போதும் ஏதோவொருவிதத்தில் அங்கலாய்ப்பாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் தோன்றவில்லை. வைகோ தலைமையில் தனித்த கூட்டணி என்ற பெயரில் ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் வாக்குகளை வாங்கினாலும் கூட அவை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைச் சிதறடித்து மறைமுகமாக அதிமுகவுக்கு உதவும் செயல்தான் என்பதைச் சாதாரண மனிதனால் கூட புரிந்து கொள்ள முடியும். வைகோ, திருமா இணைந்த அந்தக் கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்ற தெரிந்த போதிலும் இப்படி ஒரு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதில் இருக்கும் மறைமுக அஜெண்டாவை உணராத கட்சி திமுக இல்லை. மதிமுகவை உடைப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரையில் சரியான செயல்தான். அதிமுகவுக்கு எதிரான பிரமாண்டமான கூட்டணியொன்றை அமைக்கும் கனவில் இருக்கும் திமுகவின் தலையில் அடிப்பதற்கு வைகோ சம்மட்டியைச் சுமந்து கொண்டு நிற்கிறார். அவரது கட்சியை ஆட்டம் காண வைக்காவிட்டால் அது வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பேராபத்தாக அமையும் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும்.

வைகோ அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது என முடிவெடுத்திருந்தால் அதைத் தேர்தல் வரையில் கமுக்கமாக வைத்திருந்து தேர்தலுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகச் செயல்படுத்தியிருந்தால் திமுகவினால் எதுவும் செய்திருக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் வைகோவின் கூட்டணித் திட்டத்தை சமாளிக்க முடியாமல் திமுக திணறியிருக்கக் கூடும். ஆனால் வைகோ அவசரப்பட்டுவிட்டார். தேர்தலுக்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது. இப்பொழுதே திமுகவுக்கு எதிரான தனது நிலையை பகிரங்கமாக அறிவித்துவிட்டார். திமுக விழித்துக் கொண்டது. வரப் போகும் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா கதைதான். தமது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எந்தவொரு செயலையும் அடித்து நொறுக்கவே செய்வார்கள். அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. அரசியலில் சரி தவறு என்பதெல்லாம் எதுவுமில்லை. வலுத்தவன் வெல்வான். ஏற்கனவே சொன்னது போல வைகோவை எனக்குப் பிடிக்கும். ஆனால் அவரது சீட்டுக்கட்டு கலைந்து கொண்டிருக்கும் இந்த முறை அவர் மீது பரிதாபம் எதுவும் வரவில்லை. சாணக்கியர்கள் மட்டுமே வெல்லக் கூடிய அரசியலில் வெறும் உணர்ச்சிவயப்படுவதற்கும் தன்னை நல்லவன் என்று திரும்பத் திரும்பக் காட்டிக் கொள்வதற்கும் இடமேயில்லை. வாளை எடுத்தவன் எதிரியின் கழுத்தை சீவத்தான் செய்வான். இனி வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது என உறுதியாக நம்புகிறேன்.