Sep 30, 2015

மோடி அரசாங்கம் எப்படி?

வியூ ஹவுஸ் என்னும் விடுதி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு எதிரில் இருக்கிறது. அது குடிப்பதற்கான இடம். அங்கு குடிக்கவில்லையென்றாலும் சரி, தனியாக இருந்தாலும் சரி- சங்கடம்தான். ஆனால் அமெரிக்காவில் தனியாக அமர்ந்திருந்தால் யாராவது புன்னகைக்கிறார்கள். அப்படியொருவர் புன்னகைத்தார். அமெரிக்க நிறுவனமொன்றில் நிதி நிர்வாகப் பிரிவில் இருக்கும் அமெரிக்கர். தெளிவாக இருக்கும் அமெரிக்கர் பேசினாலே எனக்கு புரிவதில்லை. இவர் குடித்துவிட்டு பேசுகிறார். ரஜினி மாதிரி ஐ கேன் டாக் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இங்கிலீஷ் என்று சமாளித்துக் கொண்டிருந்தேன். ஏதோ சில விஷயங்களைப் பேசிவிட்டு ‘மோடியின் அரசாங்கம் பரவாயில்லையா?’ என்றார். எனக்கு எப்படித் தெரியும்? 


ஆட்சிக்கு வந்து பதினைந்து மாதங்களாகின்றன. கிட்டத்தட்ட சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார். வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டேயிருக்கிறார். அவரைத் தவிர வேறு எந்த அமைச்சரைப் பற்றியும் வெளியில் தெரிவதில்லை. ஊடகங்களை விலைக்கு வாங்கி பில்ட் அப் கொடுக்கிறார். கேமிராவுக்கு போஸ் கொடுக்கிறார் என்று ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இன்னபிற ஊடகங்களிலும் அவரை கலாய்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

அதானி போன்ற கார்போரேட்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார், வெறும் வாய்ச்சவடாலில் காலத்தை ஓட்டுகிறார், அவருக்கு இருந்த மரியாதையும் செல்வாக்கும் மங்கிவிட்டது போன்ற அனுமானங்கள் எனக்கும் உண்டு. இந்தியர்கள் எதைத் தின்ன வேண்டும்? எந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்? என்பதில் எல்லாம் கவனம் செலுத்துவது, ஹிந்தி, சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும், இந்துத்துவம் சார்ந்த செயல்பாடுகள் என்பனவற்றின் மீதெல்லாம் ஒவ்வாமையும் இருக்கிறது. இன்று கூட உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக ஒரு இசுலாமிய முதியவரை ஒரு கூட்டம் அடித்துக் கொன்றிருக்கிறது. ‘இது எந்த அரசாங்கம் இருந்தாலும் நடந்திருக்கும்’ என்று சொல்லலாம்தான். ஆனால் இந்துத்துவ சார்புடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது சிறுபான்மையினருக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும்.

ஸ்வச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டம் அப்படியே சுணங்கிப் போயிருக்கிறது. கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதாகச் சொன்ன வாக்குறுதி பற்றிய எந்த மேலதிகத் தகவலும் இல்லை, கங்கை சுத்திகரிப்பு, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக அதிக வெளிச்சம் பாய்ச்சப்பட்ட திட்டங்கள் குறித்தான எந்தச் செய்தியும் இல்லை என்ற பட்டியலை அடுக்க முடியும். ஒருவிதத்தில் இத்தகைய குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் மந்தமான அரசாங்கம் என்றோ செயல்படாத பிரதமர் என்றோ சொல்லிவிட முடியாது என்றுதான் விவரங்கள் காட்டுகின்றன. ஃபேஸ்புக் தலைமையகத்தில் மோடி சொன்னது போல இந்தியா ஒரு ஸ்கூட்டர் மாதிரி என்றால் நினைத்த நேரத்தில் திருப்பிவிடலாம். ஆனால் தொடரூர்தியை அவ்வளவு சீக்கிரமாக திருப்பிவிட முடியாது. மெதுவாகத்தான் திருப்ப முடியும். ஆனால் அதைத் திருப்புவதற்கான எந்தச் செயலும் மேற்கொள்ளாத அரசாங்கம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது என நம்புகிறேன்.

இன்று Financial Express ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா இப்பொழுது முதலிடத்திற்கு வந்திருக்கிறது. பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் சுணங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் இந்த ஈர்ப்பு சக்தி அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மோடி இந்தியாவில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிக்கைதான் பதிலாக இருக்க முடியும். இதுவரையிலும் முதலீட்டாளர்களின் கனவு தேசமாக திகழ்ந்த சீனா சமீபமாக திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை மோடியின் அரசாங்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம் உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) ஒட்டுமொத்த வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவைக் கீழே தள்ளி விட்டிருக்கிறது.

இந்த அவதானிப்புகளை எல்லாம் வைத்துக் கொண்டு பதினைந்து மாதங்களில் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து மிகத் துல்லியமான முடிவையெல்லாம் சொல்லிவிட முடியாது. ஒரு நிறுவனத்தில் சாதாரணமான வேலைக்குச் சேர்ந்தால் கூட அந்தப் பணியாளரை மதிப்பீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ஓராண்டு தேவைப்படும். இவ்வளவு பெரிய தேசத்தின் அரசாங்கம் ‘சரியா’ ‘தவறா’ என்று பதினைந்து மாதங்களில் எப்படிச் சொல்லிவிட முடியும்? தொண்ணூறுகளில் நரசிம்மராவும் மன்மோகன்சிங்கும் கொண்டு வந்த மாற்றங்களின் விளைவுகளை உணர்வதற்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் விளைவுகளை உணர்வதற்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாவது தேவைப்படக் கூடும். 

இவையெல்லாம் நமக்கு வருகின்ற செய்திகளின் அடிப்படையில் நாமாக எடுக்கிற முடிவுகள்தானே? எந்தச் செய்தி நம்மை அடைய வேண்டும் எந்தச் செய்தி நம்மை அடையக் கூடாது என்பதைக் கூட யாரோ சிலர்தான் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தின் மீது மோடி அரசாங்கத்தின் பிடி இறுக்குவதாகவும் அங்கு இதற்கு எதிரான போராட்டம் நடப்பதாகவும் சில செய்திகளை வாசிக்க நேர்ந்தது. இது உண்மையா தவறா என்று கூடத் தெரியவில்லை. இந்திய ஊடகத்திலும் இது கவனப்படுத்தப்படவேயில்லை. கிட்டத்தட்ட எல்லாச் செய்திகளுமே இப்படித்தான் - வடிகட்டப்பட்டவை.

நமக்கு வரும் செய்திகளின் அடிப்படையில் கருத்தைச் சொல்ல வேண்டுமானால் மோடியின் அரசாங்கம் சாமானியர்களைப் பார்ப்பதைவிடவும் மேல்மட்ட ஆட்களைத்தான் கவனிக்கிறது என்பதான சூழல்தான் இருக்கிறது. விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்கள், பழங்குடியினர், ஆதிவாசிகள் உள்ளிட்டவர்களை மேம்படுத்தும் திட்டங்களில் செலுத்தப்படும் கவனத்தைவிடவும் வெளிநாட்டு ஆட்களை ஈர்ப்பதிலும் தொழிற்துறையினருக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும்தான் அதிகபட்ச கவனம் செலுத்தப்படுகிறது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இத்தையை கவர்ச்சிகரமான திட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதைவிடவும், மேல்தர மற்றும் மத்தியதர குடும்பங்களுக்குத்தான் உதவும். உற்பத்தித் துறையிலும், டிஜிட்டல் துறையிலும் செலுத்தும் அதே அளவு அல்லது அதைவிடவும் அதிகமான கவனத்தை இந்த அரசாங்கம் விவசாயத்துறையில் செலுத்த வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து கோடி ஏக்கர் விவசாய நிலத்தில் வெறும் நாற்பத்தைந்து சதவீத நிலம்தான் நீர்பாசன வசதி கொண்டிருக்கிறது. இறுகிக் கொண்டிருக்கும் கார்போரேட் பிடியிலிருந்து விவசாயத்தை இந்த அரசாங்கம் விடுவிக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் விவசாயம் அரசாங்கத்தின் கவனத்தை பெறக் கூடிய துறையாக இருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. சுதந்திர தின உரையிலும், நேற்று கூட அமெரிக்காவில் மோடி நிகழ்த்திய உரையிலும் அவர் குறிப்பிட்ட மூன்று துறைகளில் முதன்மையானதாக விவசாயம் இருந்தது. 

இந்தியாவில் ஐம்பது சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் இருக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அவர்களது பங்கு வெறும் பதினெட்டு சதவீதம்தான். அப்படியென்றால் இந்திய விவசாயம் அவ்வளவு உற்பத்தித் திறன் இல்லாததா? அப்படி அர்த்தமில்லை. சரியாக ஒழுங்குபடுத்தப்படாததாக இருக்கிறது. 

இந்தியாவில் இருக்கக் கூடிய ஆறு லட்சத்து நாற்பதாயிரம் கிராமங்களிலும் டிஜிட்டல் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இன்றைய இந்தியாவின் கிராமங்கள் அதைவிடவும் அத்தியாவசியமான தேவைகளுக்காக காத்திருக்கின்றன. பெண் குழந்தைகளுக்கான கல்வி, அடிப்படை மருத்துவ வசதிகள், எல்லோருக்குமான விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டுத் திட்டம், விரிவாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம் என கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகள் நிறைய இருக்கின்றன. இப்படி எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்த பிறகு யாராவது ‘மோடியின் அரசாங்கம் எப்படி?’ என்று பொதுவாகக் கேட்டால் ‘அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் சரியான பாதையில் செல்வதாகத்தான் தெரிகிறது' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அமெரிக்கரிடம் அப்படித்தான் சொன்னேன்.

Sep 28, 2015

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டேன். சமூக சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் இன்னபிற போராளிகளும் கழுவி ஊற்றி கொழுவில் ஏற்றும் ஒரு படத்தை பார்த்துவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது இயற்கைதானே? அமெரிக்காவுக்கு கிளம்பும் போதே இரண்டு இணையதளங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். einthusan மற்றும் tamilgun. முதல் தளத்தை மேலாளர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதே வேறு மேலாளராக இருந்தால் ஸ்டேட்டஸ் அனுப்பச் சொல்லி சாகடித்திருப்பார்கள். நல்ல மனுஷன் அவர். இரண்டாவது தளத்தை செந்தில் அறிமுகப்படுத்தினார். இவர் கரூர்காரர். டென்வரில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருக்கிறார்.

இந்தியாவில் இந்தத் தளங்களை அனுமதிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் தளத்தில் அத்தனை படங்களும் கிடைப்பதில்லை. ஆனால் படத்தின் தரம் பிரமாதமாக இருக்கிறது. இரண்டாவது படத்தில் புதுப்படங்கள் கூட இருக்கின்றன. ஆனால் தியேட்டரில் எடுத்த படங்களையெல்லாம் ஏற்றி வைத்திருக்கிறார்கள். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தியேட்டர் பிரிண்ட். இத்தகைய படங்களைத் தியேட்டரில் அல்லது தியேட்டர் பிரிண்ட்டில் பார்க்கும் போதுதான் ஒரு தலைமுறையின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வசனத்தையெல்லாம் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஏறி மிதிக்கிறார்களோ அந்த வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

இந்தப் படத்தின் வருமானம் அட்டகாசம் என்றவொரு செய்தியைப் படித்தேன். இருக்காதா பின்னே? அடித்து நொறுக்குகிறேன் என்ற பெயரில் இவ்வளவு விளம்பரத்தைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். ‘அப்படியென்னதான் இருக்கிறது’ என்பதைப் பார்த்துவிடும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் ‘என்னமோ கில்மா இருக்கும் போலிருக்கு’ என்ற நினைப்பில் திரையரங்குக்கு செல்லும் கூட்டம் இன்னொரு பக்கம். நான் இரண்டாவது வகையறாவில் அடக்கம். இனி வரிசையாக இத்தகைய படங்கள் வரத் தொடங்கும். உண்மையில் இத்தகைய படங்களை இவ்வளவு தூரம் கிழித்தெறிய வேண்டியதில்லை. ‘இப்படியெல்லாம் படம் எடுக்கவே கூடாது’ ‘இதையெல்லாம் எழுதவே கூடாது’ ‘அதையெல்லாம் பேசவே கூடாது’ என்று வரைமுறைகளை எழுப்பி எல்லாவற்றையும் பூசி மொழுகித்தான் நமக்குள் புழு நெண்டிக் கிடக்கிறது. கழிவுகள் நிரம்பிய மனங்கள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றன.

வெறும் ரத்தினங்கள் மட்டுமில்லாது எல்லாக் குப்பைகளும் நிறைந்து கொண்டேயிருக்கட்டும். அந்தக் குப்பைகளின் வழியாகவும் ரத்தினங்களின் வழியாகவும் எல்லாவிதமான உரையாடல்களும் சாத்தியப்படட்டும். அதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.

இங்கு எத்தனை பேர் வெளிப்படையாக இருக்கிறோம்? எவ்வளவு விஷயங்களைத் தயக்கமில்லாமல் வெளியில் சொல்ல முடிகிறது? வெளியுலகத்துக்காக வேஷம் கட்டுகிறோம், எல்லாவற்றிலும் பொய்யைத்தான் வெளியில் வைக்கிறோம். உள்ளுக்குள் ஒரு மாதிரியாகவும் வெளியில் இன்னொரு மாதிரியாகவும் நடிக்கிறோம். ‘அதற்காக பெண்களை இவ்வளவு வெளிப்படையாக அவமானப்படுத்த அனுமதிக்க முடியுமா?’ என்று கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் இப்படியான படங்கள் வரும்போதுதான் அவற்றுக்குக் கிடைக்கும் ஆதரவு வழியாக நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் எண்ணங்கள் எப்படியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முற்றாக இந்தப் படங்களை தடுக்க வேண்டும் என்றில்லாது ஏன் இத்தகைய படங்கள் கொண்டாடப்படுகின்றன என்பதாக விவாதங்கள் அமைய வேண்டும். அதிலிருந்து உருவாகிவரும் புரிதல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும். 

பெண்களை மதிக்கிறோம் என்ற பெயரில் வெளியில் வேஷம் போட்டுக் கொண்டு உள்ளுக்குள் ‘அவளைப் பத்தி தெரியாதா? சிரிச்சோம்ன்னா வந்துடுவா’ என்று பேசுகிற மனநிலைதான் புரையோடிக் கிடக்கிறது. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநரிலிருந்து லூயி பிலிப் சட்டையணிந்து பன்னாட்டு நிறுவனத்தின் கேண்டீனில் தேனீர் உறிஞ்சுபவர் வரை அத்தனை பேருக்கும் இது பொருந்தும். அத்தகைய உண்மையைத்தான் இத்தகைய படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

பிரச்சினையின் அடிநாதத்தை புரிந்து கொள்ளாமல் விளைவுகளைச் சாடி பயனில்லை. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா பிரச்சினையில்லை. அது வெறும் விளைவுதான். 

யாராக இருந்தாலும் சரி- ஆண் பெண் உறவுகளுக்கிடையில் இங்கே காமம்தான் பிரதானம். இருபது வருடங்களுக்கு முன்பாக நிலைமை எப்படியிருந்தது என்று தெரியாது. அந்தக் காலத்தில் வாய்ப்புகள் குறைவு. எதிர்பாலினரை அணுகுவதும் கடினம். மீறி அணுகிப் பேசினாலும் யாருடைய கண்களிலாவது பட்டு விவகாரம் பற்றியெரியத் தொடங்கும். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை. வாட்ஸப்பும் இன்பாக்ஸூகளும் எல்லாவற்றையும் எளிதாக்கியிருக்கிறது. அந்தரங்கங்கள் ரகசியமாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்.

நாம் பாவனை செய்து கொண்டிருப்பது போல நம்முடைய சமூகம் புனிதம் நிறைந்ததோ அல்லது வெளிப்படையானதோ இல்லை- காமம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, மூடி மறைக்கக் கூடிய, வக்கிரங்கள் நிறைந்த சமூகம்தான் இது. தொழில்நுட்பமும் அறிவியலும் பரவலாக்கப்படாத காலத்தில் இத்தகைய மூடி மறைத்தல் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை. கண்ட குப்பைகளும் நமக்குள்ளாக சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்தச் சூழலில் எல்லாவற்றையும் பேசிவிடுவதும், வெளிப்படையாக புரிந்து கொள்வதும்தான் நல்லது. ‘இந்தப் படம் பெண்களை இழிவுபடுத்துகிறது’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதும், ஆதிக் ரவிச்சந்திரன் மாதிரியானவர்கள் படமே எடுக்கக் கூடாது என்று பேசுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்? உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதை, வெளிப்படையாக தான் பேசாததை திரையில் பேசுகிறார்கள். அதனால் கைதட்டுகிறார்கள். இதுதான் கச்சடா. இது வெளியில் வரட்டும். அதுதான் நமக்கும் நல்லது அடுத்த சந்ததிக்கும் நல்லது.

Sep 26, 2015

எங்கய்யா போன?

டென்வர் வந்து இறங்கியவுடனேயே ஒரு ஆளிடம் விசாரித்தேன். இந்தியர்தான். ‘இங்க சுத்திப் பார்க்கிற மாதிரி என்ன இடமெல்லாம் இருக்கு?’ என்பதுதான் கேள்வி.

புரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ‘சுத்திப் பார்க்கிற மாதிரின்னா?’ என்றார். இதற்கு மேல் இந்த ஆளிடம் பேசி பயனில்லை என்று பேச்சை மாற்றிவிட்டேன். பொதுவாக இந்த மாதிரியான விவகாரங்களில் யாரையும் நம்பக் கூடாது. ஆகப்பெரிய சொம்புகளாக இருப்பார்கள்- சொம்பு என்றால் இரட்டை அர்த்தமெல்லாம் இல்லை- எந்த விவரமும் இல்லாத பருப்பு சாம்பார் என்று அர்த்தம். ஆனால் அப்பாடக்கர் மாதிரி பேசுவார்கள். 

அப்படித்தான் இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக ஒரு அப்பாடக்கர் ‘ட்வின் பீக்ஸ்ன்னு ஒரு இடம் இருக்கு பார்த்துட்டு வந்துடுங்க’ என்றார். ஏதோ விவகாரமான இடம் போலிருக்கிறது என்று நினைத்து கூகிளில் தேடிப் பார்த்தேன். இந்த வரியை வாசிக்கும் போது தேடிப் பார்க்க வேண்டும் என கை பரபரத்தால் நீங்களும் என் இனமே. Twinpeaks Denver என்று தேடிப்பாருங்கள். படங்கள் வந்து விழுந்தன. ‘அப்படியொன்னும் பெரிய மேட்டர் இல்லையே’ என்று நினைத்துக் கொண்டு முகத்தை அப்பாவியாக வைத்தபடி ‘அங்க என்ன விசேஷம்?’ என்றேன். இந்த மாதிரி சமாச்சாரங்களைப் பேசும் போது நிறையப் பேர் என்னை நல்லவன் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆளும் உருவமும் முகமும் அப்படி அமைந்திருக்கிறது. குரலையும் அப்பாவித்தனமாக மாற்றிக் கொள்வது வாடிக்கை.

குதர்க்கமாக சிரித்துவிட்டு ‘போய் பாரு..அப்புறம் தெரியும்’ என்றார்.

ப்ரான்ஸின் Cap'd Agde, ஆஸ்டினின் Hippie Hollow Park போன்ற இடங்களில் எல்லாம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லியபடியே சுதந்திரமாகத் திரிந்தவன் என்று சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்பதால் முகத்தை வெட்கப்படுவது போல வைத்துக் கொண்டு எழுந்து வந்துவிட்டேன். ‘அப்பாவி’ என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னாராம். அவர் சொன்னதைக் கேள்விப்பட்டபிறகு ம்க்கும் என்று சிரித்துக் கொண்டேன்.

இங்கே வந்ததிலிருந்து முதல் இரண்டு மூன்று நாட்கள் எங்கேயும் போகவில்லை. இந்தியாவுக்கும் டென்வருக்கும் கிட்டத்தட்ட பதினொன்றரை மணி நேரங்கள் வித்தியாசம். அங்கே பகல் பத்தேகால் என்றால் இங்கே இரவு பத்தே முக்கால். அலுவலகத்தில் இருக்கும் போது தூக்கத்தில் தள்ளாடுவதும் அறைக்கு வந்த பிறகு தூக்கம் பிடிபடாமல் பினாத்துவதுமாக அலைகழித்துவிட்டது. நேற்றிலிருந்து பரவாயில்லை. உடல் பழகிவிட்டது. இனியும் வெளியே சுற்றவில்லை என்றால் இங்கே வந்ததற்கு அர்த்தமேயில்லாமல் ஆகிவிடும். உடன் வந்திருக்கும் நண்பரிடம் ‘எங்கேயாச்சும் வெல்தாமா அண்டி?’ என்றேன். ‘நேனு சாய்பாபா குடிக்கு வெல்துனானு’ என்றார். அது சரி. டென்வர் வந்து முருகன் கோவில், சாய்பாபா குடி, இந்தியன் கஃபே என்று தேடித் திரிவதற்கு பதிலாக பெங்களூரிலேயே இருந்திருக்கலாம். இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள். எப்படியோ போகட்டும்.

விசாரிக்கும் போதே- இந்தியர்களிடம் விசாரிப்பதற்கு வெட்கமாக இருந்ததால்- அமெரிக்கர்களிடம் ‘இந்தியாவில் கிடைக்காத விஷயங்கள் இந்த ஊர்ல எங்கே கிடைக்கும்?’ என்றுதான் கேட்டேன்.  மரிஜூவானா கொலராடோ மாகாணத்தில் தடையில்லாமல் கிடைக்கிறது. முந்தாநாள் கூட ஒரு ஆப்பிரிக்கப் பையனும் அமெரிக்கப் பெண்ணும் நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு முன்பாக மின்கம்பத்திற்கு கீழாக அமர்ந்து குப் குப்பென்று ரயில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். புகைத்து முடித்துவிட்டு ஏதாவது செய்வார்களாக இருக்கும் என்று ஜன்னல் வழியாக தேவுடு காத்துக் கொண்டிருந்தேன். அநியாயம். அமைதியாக எழுந்து சென்றுவிட்டார்கள்.

நகரத்தில் மரிஜூவான விற்கும் ஒரு கடையொன்றில் ‘சிகரெட் பிடிப்பீர்களா?’ என்றார்கள். இல்லை என்றேன். ‘புகைக்கத் தெரியாதவர்களுக்கு சாக்லேட் மாதிரி கூட இருக்கு’ என்றார்கள். ‘அப்படியா?’ என்றவுடன் ‘எப்படி டோஸ் வேணும்? பறக்கிற மாதிரி வேணுமா? சும்மா கிறுகிறுன்னு மட்டும் இருக்கிற மாதிரி வேணுமா? இல்ல வெறும் டேஸ்ட் மட்டும் பார்க்கறீங்களா?’ என்றார்கள். தனியாகச் சென்றிருந்தேன். எப்படியும் வேண்டாம் என்று தோன்றியது. புனிதன் என்றெல்லாம் இல்லை. கோக்குமாக்காக ஏதாவது ஆகி டென்வரின் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தான் இவன் என்று வருங்கால சந்ததியினர் தவறாக பேசிவிடக் கூடாதல்லவா? அந்த எச்சரிக்கையுணர்வுதான். 

உண்மையில் மரிஜூவானா பற்றி விசாரிப்பதற்காக  down town க்கு செல்லவில்லை. உடன் வேலை செய்யும் ஆட்கள் ‘ஒன்பது மணிக்கு மேல ட்ரெயின்ல வந்தா திருட்டு, வழிப்பறியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு’ என்றார்கள். சொன்னவர்கள் நம்மவர்கள். இப்படி யாராவது பயமுறுத்துகிறார்கள் என்று பம்மிக் கொண்டு அறையிலேயே இருக்க முடியுமா? அவர்கள் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டு அமெரிக்கர்களிடம் விசாரித்தேன். எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றார்கள். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காவலரிடமும் ஒரு முறை கேட்டதற்கு ‘பயத்தை இங்கேயே விட்டுட்டு வண்டி ஏறு’ என்றார். அவ்வளவுதான். ஆனது ஆகட்டும் என்று ரயிலேறிவிட்டேன்.

எங்கே இறங்க வேண்டும் என்பது கூட சரியாகத் தெரியவில்லை. வெகுவாகத் திட்டமிடும் பயணங்களில் சுவாரஸியமே இருப்பதில்லை. கால் போன போக்கில் சுற்றிவிட்டு வர வேண்டும். அப்பொழுதுதான் அந்த ஊரின் ஆன்மா பிடிபடும். தொடர்வண்டியில் வயது முதிர்ந்த ஒரு பெண்மணி இருந்தார். நான் எதிர்பார்ப்பதையெல்லாம் விளக்கினேன். சிரித்தவர் ஒரு இடத்தைச் சொல்லி அந்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளச் சொன்னார். தொடர்வண்டி நிலையத்தைவிட்டு வெளியே வந்து வலது பக்கம் சென்றாலும் சரி; இடது பக்கம் சென்றாலும் சரி என்றார். உள்ளே நுழைவதற்கு காசு கேட்பார்களா என்ற கேள்வி ஓடிக் கொண்டேயிருந்தது. ‘பத்து டாலர் இருக்கும்’ என்றார் அந்தப் பெண்மணி. அறுநூற்று எழுபது ரூபாய்- மனம் இந்தியக் கணக்கை போட்டு வைத்துக் கொண்டது. 

‘டேன்ஸ் ஆடுவாங்க இல்ல?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேன்.

‘ஓ மை யங் பாய்....போய் பாரு’ என்றார். மணி ஆறு ஆகியிருந்தது. மூன்று மணி நேரம் என்னுடைய கணக்கு. பிறகு வெளியே வந்து ரயில் பிடித்தால் பத்து மணிக்குள் அறைக்கு வந்துவிடலாம்.

பிரச்சினை என்னவென்றால் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இந்த ஏர்டெல்காரன் இண்டர்நேஷனல் ரோமிங் வசதியை எனக்குத் தெரியாமலே கொடுத்து வைத்திருக்கிறான். ஒரு நிமிடம் பேசினால் தொண்ணூறு ரூபாய் கழண்டுவிடுகிறது. அதனால் வீட்டிலிருந்து மிஸ்டு கால் மட்டும் கொடுக்கிறார்கள். அவர்கள் அழைத்தவுடன் உடனடியாக ஸ்கப்பிலிருந்து அவர்களைத் திரும்ப அழைக்க வேண்டும். இல்லையென்றால் சந்தேகம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்திலிருந்து வந்தவுடன் படுத்துத் தூங்கிவிட்டேன். நடுராத்திரி மூன்று மணிக்கு அழைத்து உடனடியாக ஸ்கைப்பில் பேசச் சொன்னார்கள். அப்படி ஏதாவது அழைத்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது. சாய்பாபா கோவிலில் இருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பிவிடலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அறைக்குத் திரும்பு வரைக்கும் அழைப்பே வரவில்லை.

Sep 22, 2015

சாமிகிட்ட என்ன வேண்டுதல்?

‘எதுக்குய்யா பனிரெண்டு மணிக்கே வண்டியை வரச்சொன்ன?’ என்று பாவமாகத்தான் கேட்டேன். காலை ஏழு மணிக்குத்தான் விமானம் கிளம்பவிருக்கிறது. ஆறு மணி நேரங்களுக்கு முன்பாக விமான நிலையத்தில் அமர்ந்து என்ன செய்வது? பெங்களூரு விமான நிலையத்துக்கு பேருதான் பெத்த பேரு. இதுவரை ஆறேழு முறை சென்றிருக்கிறேன். ஒரு நடிகையைக் கூட அங்கு பார்த்ததில்லை. சென்னையில் மண்டை மீது கண்ணாடி விழுந்தாலும் பரவாயில்லை. நயன்தாராவோ த்ரிஷோவோ குறுக்கே வருவார்கள். இந்த லட்சணத்தில் பெங்களூர் விமானநிலையத்தில் காபிக்கு கூட நூற்றியெழுபது ரூபாய் விலை வைத்து விற்கிறார்கள். ‘கும்பகோணம் டிகிரி காபி மாதிரி இருக்கோணும்...பார்த்துக்க’ என்றேன். ‘கிட்டத்தட்ட பக்கத்துல வரும்’ என்று சொல்லிவிட்டுக் கொடுத்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரங்களுக்கு அவருக்கு சாபம் விட்டுக் கொண்டேயிருந்தேன்.

‘லேதண்டி. நாம சீக்கிரம் கிளம்பிட்டா வீட்ல இருக்கிறவங்க தூங்குவாங்க இல்ல’ என்றார் அமெரிக்கா வரைக்கும் உடன் வரப் போகும் அந்தத் தெலுங்குக்காரர். இப்படியெல்லாம் செண்டிமெண்டலாக அமுக்கினால் விழுந்துவிடுவேன். சரியென்று தலையை ஆட்டி பதினோரு மணிக்கு குளியலறைக்குள் புகுந்து முதுகு நனையாமல் தண்ணீரை ஊற்றி குளித்ததாக நமஸ்தம் செய்துவிட்டு சாமி படத்துக்கு முன்பாக நின்று முழு பக்தியுடன் வேண்டிக் கொண்டு- என்ன வேண்டினேன் என்று உங்களுக்கே தெரியுமே - அந்த டிரைவரிடம் ‘அண்ணே ஏழு மணிக்குத்தான் ப்ளைட்...நீங்க மெதுவாவே போங்க’ என்றேன். அது OLA வண்டி. ஒரு வாடகைக்கும் இன்னொரு வாடகைக்கும் இடையில் மூன்று நிமிடங்கள் கூட இடைவெளி இருக்காதாம். பேச்சுவாக்கில் அந்த டிரைவர்தான் அதைச் சொன்னார். ‘மாசம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேலாக ஓலாக்காரன் பிஸினஸ் புடிச்சுத் தர்றான்’ என்று. வருகிற வாடகையில் முப்பதோ முப்பத்தைந்து சதவீதமோ ஓலாக்காரனுக்குக் கொடுத்துவிட வேண்டும். சொந்த வண்டியாக இருந்தால் டீசல் செலவு, பரமாமரிப்பு அத்தனையும் போக எப்படியும் ஒரு ஐடிக்காரன் சம்பளத்தை மிச்சப்படுத்தலாம். அந்த டிரைவர் தும்கூர்காரர். பெங்களூருவில் சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறார். 

உடனிருந்த தெலுங்குவாலா ‘ஏ பேங்க் அண்டி?’ என்றார். டிரைவர் சிரித்துக் கொண்டு ஆக்ஸிலேட்டரை மிதி மிதியென்று மிதித்தார். ஐடிக்காரன் புத்தி எப்படி இருக்கும்? வீடு வாங்குவதிலிருந்து ஜட்டி வாங்குவது வரைக்கும் அத்தனையும் இ.எம்.ஐ கட்டித்தான் வாங்க வேண்டும். அதே நினைப்பில் ‘எந்த வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டார். ஓட்டுநர் மிதித்த மிதியில் ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டோம். பெங்களூர் மாதிரியான நகரங்களில் ஓலாக்காரர்கள் வந்த பிறகு அவனுடன் இணைந்து கொள்ளும் வண்டிக்காரர்களுக்கு நிற்க நேரமில்லாமல் வாடகை வந்து கொண்டேயிருக்கிறது. மற்ற வாடகை வண்டிக்காரர்கள் பெரும்பாலும் கவாத்து அடிக்கிறார்களாம். அதையும் அந்த ஓட்டுநரேதான் சொன்னார். Monopoly. 

‘ஆமா சார்...எந்த இடத்துல இருந்து வேணும்ன்னா போன் பண்ணுங்க...பத்தே நிமிஷத்துல உங்க இடத்துக்கு வண்டி வந்துடும்...ரேட்டும் சொன்னா சொன்ன மாதிரி..ஒரு பைசா ஏமாத்தறது இல்ல’ ஓட்டுநர் வக்காலத்து வாங்கினார். வேலிக்கு ஓணான் சாட்சி.

விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆட்களையே காணவில்லை. 

‘சார் ஏழு மணிக்கு ப்ளைட்’

‘ஏழு மணிக்குத்தானே? வெய்ட் பண்ணுங்க...இப்போ மணி என்னாச்சுன்னு பாருங்க’

ஒன்றரை கூட ஆகியிருக்கவில்லை. தெலுங்குக்காரனைவிட்டு ஒரு நாற்காலி தள்ளி அமர்ந்து கொண்டேன். இப்பொழுதெல்லாம் திடீர் திடீரென்று எதையாவது செய்து வைத்துவிடுகிறேன். கடுப்பில் காதைக் கடித்து வைத்துவிட்டால் உள்ளே தூக்கி உட்கார வைத்துவிடுவார்கள். 

கண்களை மூடித் தூங்கவும் முடியவில்லை. 

‘எவனாச்சும் நம்ம பாஸ்போர்ட்டை அடிச்சுட்டு போய்ட்டா என்ன ஆகும்?’ 

‘பாஸ்போர்ட்டை விட்டுட்டு பர்ஸை அடிச்சுட்டு போய்ட்டா......’ 

‘அமெரிக்காவில் பிச்சை எடுக்க விடுவாங்களா?’ இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ‘மம்மீ...டாலர் ப்ளீஸ்’ என்று பிச்சைக்காரன் வேடத்தில் முக்கால் நொடிகளுக்கு உதடுகளை அசைத்தும் பார்த்துக் கொண்டேன். சுதாரித்து ‘அழிச்சான் புழிச்சான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு மீண்டும் கடவுளை வேண்டத் தொடங்கியிருந்தேன். அதே வேண்டுதல்தான். 

மூன்றரை மணிக்கு கவுண்ட்டர்களைத் திறந்தார்கள். வழக்கம்போல தெலுங்குக்காரர் வரிசையில் முதல் ஆள். நான் இரண்டாவது ஆள். அந்தப் பெண்மணியிடம் நான்கைந்து நிமிடங்களாவது பேசிக் கொண்டிருந்தார். அதுவரைக்கும் தூக்கமில்லாமல் களைத்துப் போயிருந்த கண்களுக்கு அந்தப் பெண்மணிதான் ஒரே வெளிச்சம். 

‘அப்படி என்னய்யா பேசிட்டே இருந்த?’ என்றேன்.

‘இதுவரைக்கும் நான் ப்ளைட்ல போனதே லேதண்டி...ஜன்னலோரமா சீட்டுக் கொடுங்க’ என்றாராம். அந்தப் பெண்மணியும் சிரித்துக் கொண்டே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

நான் கொஞ்சம் திமிராக ‘கேன் யூ கிவ் மீ விண்டோ ஸீட்’ என்றேன். ஒரு முறை பார்த்து சிரித்துவிட்டு ‘நோ சார்..நாட் அவைளபிள்..ஸாரி’ என்றார்.

தொலைந்து போ என்று மனதுக்குள் கருவிக் கொண்டு மீண்டும் சாமியை வேண்டத் தொடங்கியிருந்தேன். பாதுகாப்பு சோதனைகளை எல்லாம் முடித்துவிட்டு விமானம் ஏறும் இடத்தில் தெலுங்குக்காரர் கேட்டார். ‘இந்த மொத்தக் கூட்டத்துலேயும் எனக்கு பக்கத்துல யார் வருவாங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்’ என்றார். ஒரு அமெரிக்கப் பாட்டி இருந்தார். எப்படியும் எழுபதைத் தாண்டியிருக்கும். ‘அவர்தான்’ என்றேன். சிரித்துக் கொண்டு இருப்பதிலேயே அழகான ஒரு பெண்மணியைக் காட்டி ‘உங்கப் பக்கத்துல இவதான் உட்காருவா’ என்றார். இந்த மனிதனுக்கு எவ்வளவு நல்ல மனது என்று நினைத்துக் கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். அப்படியே எதிர்ப்பதமாக நடந்துவிட்டது. அந்தப் பாட்டி எனக்குப் பக்கத்தில். பெங்களூரில் ஆரம்பித்த பாட்டி ஒரு ரம்பத்தை எடுத்து கழுத்தில் வைத்தார்- என் கழுத்தில்தான் - அறுக்கத் தொடங்கியவர் நிறுத்தவேயில்லை. ஒரே வெட்டாக வெட்டினால் கூட பரவாயில்லை. இப்படி காலுக்குக் கீழாக தலையை வைத்து வெறுக் வெறுக் என்று மொன்னை ரம்பத்தில் இழுத்தால் எவனால் தாங்க முடியும்? அவரிடம் ஜான் இர்விங் எழுதிய 'The Fourth Hand' நாவல் இருந்தது. அதைப் வாசிக்காமல் நான் என்ன படித்தேன், என்ன வேலைக்குச் செல்கிறேன், எத்தனை பொண்டாட்டி என்று தாளித்துத் தள்ளிவிட்டார். வயதானால் எந்த ஊர்க்காரர்களாக இருந்தாலும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது. ‘இந்தியாவுக்கு வரும் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளரோட கையை சிங்கம் ஒண்ணு கடிச்சுடுது...அவருக்கு அமெரிக்காவிலேயே முதன் முறையா கை மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அந்தப் பத்திரிக்கையாளருக்கும் அந்த கையை தானம் செய்கிறவரோட மனைவிக்கும் இடையிலான காதல்...இதெல்லாம்தான் நாவல்...தெரியுமா?’ என்றார்.

தெரியாது. 

‘படிங்க....நல்ல நாவல்’ என்றார்.

எதுவும் சொல்லாமல் ஹெட் ஃபோனை எடுத்துக் காதில் மாட்டிக் கொண்டேன். எனக்கு ஹிந்தி தெரியாது. புரியவும் புரியாது. ஆனாலும் வேறு வழியில்லை. தொடர்ச்சியாக மூன்று படங்களைப் பார்த்தேன். பிகே, தனு வெட்ஸ் மனு மற்று என்.ஹெச் 10. மூன்று படங்களையும் லண்டன் வருவதற்குள் பார்த்து முடித்த பிறகும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. பாட்டி மீண்டும் ஆரம்பித்திருந்தார். அவரை இடம் மாறி அமரச் சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த அவருடைய கணவர் வந்து அருகில் அமர்ந்தார். இன்னொரு ரம்பம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘நீங்க ரொம்ப சிரமப்படுறதை பார்த்தேன்..ஸாரி...she is a compulsive talker...ட்ரீட்மெண்ட்ல இருக்கா...தப்பா எடுத்துக்காதீங்க’ என்றார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அவரைப் பார்த்துக் கொள்ளவே ஒருவர் வேண்டும். அவர் தன் மனைவியைப் பார்த்துக் கொள்கிறார். 

‘நீங்களே சமாளிச்சுக்குவீங்களா?’ என்றேன். அவர் எதுவும் சொல்லவில்லை. கடுப்பாகிவிட்டார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு அமைதியாகிவிட்டேன்.

‘சின்ன வயசுல யாரையும் யாரும் பார்த்துக்க வேண்டியதில்லை. அவங்கவங்க அவங்கவங்களைப் பார்த்துக்குவோம்...அப்போ நம்ம சந்தோஷம் மட்டும்தான் முக்கியம். அது பாதிச்சுதுன்னா சண்டை புடிச்சுக்குவோம்...வயசான பிறகு அப்படியில்லை....யாரை யார் பார்த்துக்கிற நிலைமை வரும்ன்னு தெரியாது.....அந்த சமயத்துல சலிச்சுக்காம பார்த்துக்கிறோம் பாருங்க...அதுதான் லவ்...என்னால பார்த்துக்க முடியற வரைக்கும் அவளைப் பார்த்துக்கப் போறேன்..ஆனா இன்னும் எவ்வளவு நாள்ன்னு தெரியல...ஏற்கனவே ஒரு தடவை ஸ்ட்ரோக் வந்துடுச்சு.....அடுத்து ஒண்ணு மாஸிவ்வா வந்தா போய்டுவேன்’ என்று சொல்லிவிட்டு சிரித்தார். அந்த சிரிப்பைத் தாண்டி கண்ணீர் கசிந்திருந்தது. இப்பொழுது அந்தப் பாட்டி ஜான் இர்விங் பற்றி பக்கத்து சீட்டுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் மீண்டும் கடவுளை வேண்டிக் கொண்டேன்.

Sep 19, 2015

சீட்டுக்கட்டு

‘அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி’ என்று ஊர் முழுக்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து வை.கோபால்சாமி என்ற பெயர் அறிமுகமானது. அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து நிறையப் பேர் மதிமுகவை ஆதரித்துப் பேசினார்கள். செந்தாமரை அச்சகத்தில் செய்தித்தாள் படிக்கப் போகும் போதெல்லாம் வைகோ பற்றியும் மதிமுக பற்றியும்தான் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு பதின்மூன்றாண்டு வனவாசம்...இனி உனக்கு ஆயுள் முழுக்க வனவாசம்’ என்று திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதிக்கு எதிராக அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவு கடுமையாக அமுலாக்கப்பட்ட அந்தச் சமயத்தில் மனதளவில் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர்கள் வைகோவின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். திமுக-அதிமுகவுக்கான மாற்று இனி மதிமுகதான் என்றார்கள். அவர்களது கணிப்பும் தவறாகவில்லை. 


மதிமுக தொடங்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. ராஜீவ்காந்தியின் மறைவுக்குப் பிறகு அதிமுக மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருந்த காலம் அது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதிமுகவுக்காக எங்கள் ஊரிலிருந்து வண்டிகள் பறந்தன. அப்பொழுது கே.ஏ.செங்கோட்டையன் முதன்முறையாக அமைச்சர் ஆகியிருந்தார். போக்குவரத்து மற்றும் வனத்துறை என்ற பலம் வாய்ந்த துறைகள் அவரிடம் கைவசம் இருந்தன. எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை சு.முத்துச்சாமியும் எங்கள் மாவட்டத்திலிருந்து இன்னொரு அமைச்சர். ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமியா? செங்கோட்டையனா? என்கிற பனிப்போர் ஆரம்பமாகியிருந்தது. அந்த இடைத்தேர்தலில் இரண்டு பேரும் அதிமுகவுக்காக கடுமையாக வேலை செய்தார்கள். என்ற போதிலும்  மதிமுக வென்றுவிடும் என்று கூடச் சொன்னார்கள். அந்தத் தேர்தலில் மதிமுகவினால் வெல்ல முடியவில்லை என்றாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அடுத்த முதல்வர் வைகோதான் என்றார்கள்.

வைகோவின் செயல்பாடுகள் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும்படி இருந்தன. கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக்கும் ஆயிரக்கணக்கான கி.மீட்டர் நடைபயணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பிரசுரமாகின. வழியெங்கும் கூட்டம் ஆர்பரிக்கிறது என்று எழுதினார்கள். அவரது ஆரம்பகட்ட மாநாடுகளில் திரண்ட கூட்டம் அரசியல் அரங்கில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. சினிமா பின்புலமில்லாமல் மக்கள் கூட்டத்தைத் திரட்டும் வல்லமை கொண்ட தலைவர் வைகோ என்ற நிலை உருவாகியிருந்தது. அப்பொழுதிருந்தே எனக்கு வைகோ மீது ஒருவித க்ரேஸ் உண்டு. கோபி கலைக்கல்லூரியில் ‘அக்கினிக்குஞ்சுகள்’ என்ற தலைப்பில் அவர் பேசுவதைக் கேட்க ஓடியதும், இப்பொழுது கட்சியின் ஈரோடு மாவட்டத் துணைச் செயலாளராக இருக்கும் மா.கந்தசாமியின் சகோதரி திருமணத்தை நடத்தி வைக்க கூட்டத்தில் முண்டியடித்துச் சென்று அவருக்குக் கை கொடுத்து புளகாங்கிதம் அடைந்ததும் ஞாபகமிருக்கிறது. அவரது நீண்ட கருப்புத் துண்டும், அடர்ந்த மீசையும், தடையில்லாத பேச்சும், பேசும் போது துண்டை சரி செய்யும் இலாவகமும்- அந்தப் பருவத்தில் அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியிருந்தது. அவருக்காக ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து எரிந்த விவரங்களைத் தெரிந்து கொண்டபோது வைகோ ஒரு மிகப்பெரிய தலைவர் என்று நம்பத் தொடங்கியிருந்தேன்.

பக்கத்து ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. வைகோ கொடியேற்றி உரையாற்றுவதாக ஏற்பாடு. வைகோ வரும் வரைக்கும் கூட்டத்தின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக டிவி-டெக் வைத்து படம் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். செல்போன் எதுவும் இல்லாத காலகட்டம் அது. திடீரென்று கார் வந்துவிட்டது. வைகோ வரும் போது படம் ஓடிக் கொண்டிருந்தது. டிவி ஓடுவதைப் பார்த்து கடும் கோபமடைந்தவர் ‘அப்போ கூட்டம் எனக்கு சேரலை..இந்த டிவிக்கும் ஆட்டத்துக்கும்தான் சேர்ந்திருக்கு..இல்லையா?’ என்றவர் ‘அப்படிப்பட்ட கூட்டத்தில் நான் பேச வேண்டியதில்லை’ என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பிவிட்டார். ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதற்கு கட்சி நிர்வாகிகள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூட நினைத்துப் பார்க்காத தலைவராகத் தெரிந்தார். அன்றிலிருந்து எந்தக் காலத்திலும் அந்த ஊரில் மதிமுகவின் கட்சிக் கொடியைப் பார்க்க முடிந்ததில்லை. 

வைகோ யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத தலைவர். தமிழக அரசியலில் நல்லவராக தன்னைக் கட்டமைப்பதைவிடவும் யதார்த்தத்தைத் தெரிந்து கொண்ட தலைவராக இருப்பதுதான் அவசியம். மதிமுக என்பது மாற்று சக்தி, வைகோ என்பவர் மாபெரும் தலைவர் என்கிற பிம்பங்களும் நினைப்புகளும் சிறுகச் சிறுகச் சரிந்து கொண்டேயிருந்தன. தவறான கூட்டணி முடிவுகளாலும், தனது உணர்ச்சிவயப்பட்ட போக்கினாலும் ஒவ்வொரு முறையையும் தோல்வியை மட்டுமே ருசித்துக் கொண்டிருந்தார். தலைவராக இருப்பவர் தோல்விகளைச் சமாளித்துக் கொள்வது எளிதான காரியம். ஆனால் தொண்டர்களால் சமாளிக்க முடியாது.

கடைக்கு வாடகை கொடுத்து சைக்கிள் கடை நடத்தி வந்த கண்ணப்பன் காலம் முழுமைக்கும் தனது வருமானத்தை கட்சிக்குக் கொடுத்து கவுன்சிலர் தேர்தலில் செலவழித்து தோல்வியடைந்து கடையை விற்றுவிட்டு சாலையோரம் பஞ்சர் கடை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுதும் அவரது முதுகுக்குப் பின்னால் மூன்றடியில் ஒரு மதிமுகக் கொடி பறந்து கொண்டிருந்தது. ‘என் தொண்டன் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கட்சியில் இல்லை’ என்று மேடையில் பேசுவதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எவ்வளவு காலத்துக்கு குடும்பத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு கட்சிக்காகச் செலவு செய்து கொண்டிருப்பான்? அப்படியே அவன் செலவு செய்தாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்கமாட்டார்களா? 

கடந்த நான்கைந்து நாட்களாக வைகோவின் ஆட்கள் அவரை விட்டு விலகிக் கொண்டிருக்கும் செய்திகளை வெறும் செய்திகளாக மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வைகோ ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போதும் ஏதோவொருவிதத்தில் அங்கலாய்ப்பாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் தோன்றவில்லை. வைகோ தலைமையில் தனித்த கூட்டணி என்ற பெயரில் ஒரு தொகுதிக்கு ஐந்தாயிரம் வாக்குகளை வாங்கினாலும் கூட அவை ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைச் சிதறடித்து மறைமுகமாக அதிமுகவுக்கு உதவும் செயல்தான் என்பதைச் சாதாரண மனிதனால் கூட புரிந்து கொள்ள முடியும். வைகோ, திருமா இணைந்த அந்தக் கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்ற தெரிந்த போதிலும் இப்படி ஒரு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதில் இருக்கும் மறைமுக அஜெண்டாவை உணராத கட்சி திமுக இல்லை. மதிமுகவை உடைப்பது என்பது திமுகவைப் பொறுத்தவரையில் சரியான செயல்தான். அதிமுகவுக்கு எதிரான பிரமாண்டமான கூட்டணியொன்றை அமைக்கும் கனவில் இருக்கும் திமுகவின் தலையில் அடிப்பதற்கு வைகோ சம்மட்டியைச் சுமந்து கொண்டு நிற்கிறார். அவரது கட்சியை ஆட்டம் காண வைக்காவிட்டால் அது வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பேராபத்தாக அமையும் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும்.

வைகோ அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவது என முடிவெடுத்திருந்தால் அதைத் தேர்தல் வரையில் கமுக்கமாக வைத்திருந்து தேர்தலுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகச் செயல்படுத்தியிருந்தால் திமுகவினால் எதுவும் செய்திருக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் வைகோவின் கூட்டணித் திட்டத்தை சமாளிக்க முடியாமல் திமுக திணறியிருக்கக் கூடும். ஆனால் வைகோ அவசரப்பட்டுவிட்டார். தேர்தலுக்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது. இப்பொழுதே திமுகவுக்கு எதிரான தனது நிலையை பகிரங்கமாக அறிவித்துவிட்டார். திமுக விழித்துக் கொண்டது. வரப் போகும் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. கிட்டத்தட்ட வாழ்வா சாவா கதைதான். தமது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் எந்தவொரு செயலையும் அடித்து நொறுக்கவே செய்வார்கள். அதைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. அரசியலில் சரி தவறு என்பதெல்லாம் எதுவுமில்லை. வலுத்தவன் வெல்வான். ஏற்கனவே சொன்னது போல வைகோவை எனக்குப் பிடிக்கும். ஆனால் அவரது சீட்டுக்கட்டு கலைந்து கொண்டிருக்கும் இந்த முறை அவர் மீது பரிதாபம் எதுவும் வரவில்லை. சாணக்கியர்கள் மட்டுமே வெல்லக் கூடிய அரசியலில் வெறும் உணர்ச்சிவயப்படுவதற்கும் தன்னை நல்லவன் என்று திரும்பத் திரும்பக் காட்டிக் கொள்வதற்கும் இடமேயில்லை. வாளை எடுத்தவன் எதிரியின் கழுத்தை சீவத்தான் செய்வான். இனி வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது என உறுதியாக நம்புகிறேன்.

Sep 18, 2015

இசையும் மெய்ப்பொருளும்

கவிதை என்பது மிகத் தீவிரமானது என்றும் அது அழுவாச்சி நிறைந்ததாகவும் இருந்தால்தான் மரியாதை என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்களைக் கூர்மையாக்கி உதடுகளை இறுக்கியபடி நிழற்படத்துக்கு போஸ் கொடுப்பதுதான் கவிஞனின் லட்சணம் என்ற நினைப்பில் பெருங்கூட்டம் அலையும் போது ஒற்றை ஆள் மொத்தக் கூட்டத்திலும் புகுந்து குறுக்கும் நெடுக்குமாக ஓடி சலனத்தை உருவாக்கிவிட்டுவிடுவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக முகுந்த் நாகராஜன் அந்த வேலையைச் செய்தார். அதன் பிறகு இசை. இதைச் சொல்வதனால் முகுந்த் நாகராஜனையும் இசையையும் ஒப்பிடுவதாக என்று அர்த்தமில்லை. ஆனால் தீவிரமான தளமான கவிதைக்குள் மொழியை வைத்துக் கொண்டு எவ்வளவு வலுவான பிரச்சினைகளையும் மிக எளிமையாக வாசகனுக்குள் கொண்டு சேர்த்துவிடலாம் என்பதற்கான உதாரணங்களாக இவர்களைச் சுட்டிக் காட்ட முடியும்.


இலக்கிய உலகில் இசை என்ற பெயரில் பரவலான கவனம் பெற்றிருக்கும் சத்தியமூர்த்தியின் சொந்த ஊர் கோயமுத்தூர். அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி’யை வாசித்ததில்லை. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான ‘உறுமீன்களற்ற நதி’ கவனம் பெற்றது. கவிதை என்பது எப்பொழுது உர்ர்ரென இருக்க வேண்டியதில்லை என்பதை இசையின் கவிதைகள் தன் போக்கில் சொல்லின. யாரோ நம்முடைய தோளைத் தட்டிப் பேசுவது போலவும், மலைச்சாலையில் சன்னலோரம் புத்தகம் வாசித்துக் கொண்டே பயணிப்பது போன்ற உணர்வையும் கூட கவிதை வாசிப்பு உருவாக்க முடியும் என்பதை இசையின் கவிதைகள் உணரச் செய்தன.

தூக்கத்திலிருந்த ராசா
தேவி! உன் கார்குழலின் வனப்பினேலே....
என ஏதோ முனகத் துவங்க
யோவ் மூடிட்டு படுய்யா 
என அதட்டினாள் தேவி 

‘ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்’ என்ற கவிதையின் முதல் குறிப்பு இது. 

 டாக்டர் பீஸுக்கு கடன் வாங்கிக்கொண்டு
ஆஸ்துமா பிணித்த மனைவியோடு
மேட்டு நிலத்தில் எழுந்து நின்று
சைக்கிள் மிதிக்கையில்
அரண்மனை வைத்தியர் எதிரே வருகிறார். 

அதே கவிதையில் நான்காம் குறிப்பு இது. கூத்துக் கலைஞனின் வலியையும் அவனது வாழ்க்கையும் எவ்வளவு எள்ளலான தொனியில் மிக எளிமையாகச் சொல்கிறார்? இதுதான் இசையின் பலம். பல்சர் பைக்கையும், குத்துப்பாட்டின் அனுபூதி நிலையையும், ஒரு சராசரியின் துக்கங்களையும் காதலையும் கொண்டாட்டத்தையும் கவிதையில் கொண்டுவரும் இசை contemporary poet. சமகாலத்தின் ஆழமான பிரச்சினைகளையும் தனிமனித உணர்ச்சிகளையும் துள்ளலுடன் வெளிப்படுத்தும் கவிஞன். எல்லாவற்றையும் புலம்பலாகவும் கண்ணீராகவுமே சொல்ல வேண்டியதில்லை என்பதை தனது கவிதைகளின் வழியாக நிரூபித்தார். கவிதையில் துள்ளலுக்கும் நகையாடலுக்கும் மிகப்பெரிய இடமிருக்கிறது என்பதை புன்னகையோடு காட்டியவர்.

இசையின் மூன்றாவது தொகுப்பான ‘சிவாஜிகணேசனின் முத்தங்கள்’ பெரும் கவனத்தைப் பெற்றது. இந்தத் தொகுப்பின் கவிதைகள் அதகளமானவை. 

பிழையாக எழுதப்பட்ட
ஒரு வரியை
அழித்துக் கொண்டிருக்கிறான் இச்சிறுவன்
அதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்தவன்
தம்பி, இதுபோல்
14.3.2001 ஐ அழிக்க முடியுமா
என்று கேட்டான்.
இது இங்க் ரப்பர்னா
எல்லாத்தையும் அழிக்கும்
என்றான் சிறுவன்.

தனது வாழ்வில் ஒரு நாளை அழித்துவிட எத்தனிப்பவனும் எல்லாவற்றையும் இங்க் ரப்பரால் அழித்துவிட முடியும் என நம்பும் சிறுவனும் சந்தித்துக் கொள்ளும் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய அபத்தத்தை சாதாரணமாகச் சொல்கிறது. இதையெல்லாம் எப்படி வெறும் வார்த்தை விளையாட்டு என்று சொல்ல முடியும்? இசையின் கவிதைகளின் பாடுபொருள்கள் வலி மிகுந்தவை. ஆனால் அதை வெளிப்படுத்தும் தொனியானது அட்டகாசமானது. ஒரு சாமானிய வாசகனை தனக்குள் இழுத்துப் போட்டுக் கொள்ளும் வசீகரக் கலைடாஸ்கோப்பை தனது கவிதைப் பயணத்தில் இசை திறமையாகக் கையாள்கிறார்.

மேற்சொன்ன கவிதைகள் உதாரணத்துக்காகச் சுட்டிக்காட்டப்பட்ட இசையின் சில கவிதைகள். இசையின் கவிதைகள் இயல்பானவை. நம்மோடு உரையாடும் தொனியைக் கொண்டவை. 

சக நண்பனொருவன் ஆழமான விஷயத்தை நமக்குப் பரிச்சயமான முறையில் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு அதைப் பற்றி யோசிக்கத் தொடங்குவோம் அல்லவா? அத்தகைய முறையை இசை தனது கவிதைகளில் கையாள்கிறார். இசை தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் தனித்துவமான மொழியும் அதற்குள் அவர் நடத்தும் விளையாட்டுகளும் கவிதையின் வாசகனுக்கு புதிய அனுபவத்தை உருவாக்குகின்றன.

இசையின் கவிதைகள் குறித்து எனக்கு சிற்சில விமர்சனங்களும் இருக்கின்றனதான். எளிமையாக்குதல் என்ற பெயரில் கவிதையையும் அதன் மொழியையும் மிகவும் நீர்மைப்படுத்துகிறாரோ என்கிற ஐயம் இருக்கத்தான் செய்கிறது. இது விமர்சனமில்லை. ஐயம்தான். அதே போல ஒரே வகையிலான கவிதைகளைத் பல சமயங்களில் எழுதுகிறார் என்றும் கூடத் தோன்றியதுண்டு. ஆனால் காலம் என்னும் பெருவெள்ளத்தில் ‘கவிதை’ மட்டுமே நிற்கும். கவிதையல்லாத மற்றவையெல்லாம் கரைந்துவிடும். இசையின் கவிதைகளில் எவையெல்லாம் மிக அதிகமாக நீர்மைப்படுத்தப்பட்டிருக்கின்றனவோ, எவையெல்லாம் ஒரே வகையினதாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அழித்துவிடும் வேலையை காலமும் கவிதையும் பார்த்துக் கொள்ளும். அதைப் பற்றி நாம் பெரிதாக புலம்ப வேண்டியதில்லை என நினைக்கிறேன். 

கவிதையில் தேக்கம் வந்துவிட்டதான பாவனை எழும்போதெல்லாம் இசை போன்ற கவிஞர்கள்தான் கவிதையின் மடையை மாற்றிவிடுகிறார்கள். அந்த அடிப்படையில் இசையின் இருப்பும் செயல்பாடும் தமிழ்க் கவிதைக்கு மிக அவசியமானது என அழுத்தமாக நம்புகிறேன்.  கவிதையின் போக்கில் சலனத்தை உண்டாக்குவதும் அது குறித்து உரையாடுவதுமான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் இசை போன்றவர்கள் காலத்தின் தேவை. எப்பொழுதுமே ‘இதுதான் கவிதை’ என்று காலங்காலமாக கட்டமைக்கப்பட்ட ஒரு வடிவத்திலிருந்துதான் பெரும்பாலான கவிஞர்கள் நீட்சியடைவார்கள். அதிலிருந்து தமக்கேயுரிய தனித்துவமிக்க சில மாறுதல்களைச் செய்யும் கவிஞர்கள் தமக்கான இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்களின் இடம் காலியாகிவிடும். இந்தப் போக்கிலிருந்துதான் இசை மாறுபடுகிறார். காலங்காலமாக உருவாக்கப்பட்டு வைத்திருக்கும் கவிதையின் கட்டமைப்பை அடித்து நொறுக்கி உடைத்து சிதிலப்படுத்துகிறார் என்று தயங்காமல் சொல்ல முடியும். இப்படி உடைக்கப்பட்ட கவிதைதான் மீண்டும் புதுப்பொலிவுடன் மேலே வரும். அப்படித்தான் காலந்தோறும் தனக்கான மொழியையும் கட்டமைப்பையும் கவிதையானது புதுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவிதத்தில் இசையை இன்றைய கவிதைக்கான தேவை என்று சொல்ல முடிகிறது. 

கவிஞர் இசைக்கு மெய்ப்பொருள் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தைந்தாயிரம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது இது. தமிழில் கவிதை சார்ந்து இயங்குபவர்களுக்கனெ ஒரு விருது உருவாக்கப்பட்டிருப்பது முக்கியமான காரியம். இந்த விருது அறிவிப்பில் அரசியல் இருப்பதாக மற்றவர்கள் சொல்வதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. விருதுகள் அறிவிக்கப்படும் போது யாராவது எங்கேயாவது இருந்து சத்தம் போடுவது வாடிக்கைதான். ‘ஏன் மற்றவர்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இசையும், மெய்ப்பொருள் விருதுக் குழுவினரும் இதை கண்டுகொள்ள வேண்டியதில்லை.

‘மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்பதை விடவும் விருதைப் பெற்றுக் கொள்பவர் தகுதியானவர்தானா என்பதைத்தான் கவனிக்க வேண்டும். இசையைத் தொடர்ந்து கவனித்து வருகிற வகையில் இந்த விருதுக்கு அவர் முழுமையாகத் தகுதியானவர்தான் என்று நம்புகிறேன். 

இசைக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.


Sep 17, 2015

அறம் செய விரும்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாயை விகடனிடம் கொடுத்திருக்கிறார். விகடன் குழுமத்தார் தமிழகம் முழுவதிலுமிருந்து நூறு பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்சமாகக் கொடுக்கிறார்கள். நம்முடைய கைக்கு காசு வராது. நாம் பரிந்துரைக்கும் மனிதருக்கு அந்தப் பணம் சேர்ந்துவிடும். எப்பொழுது அந்த ஒருவரைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதையெல்லாம் இன்னமும் சொல்லவில்லை. இப்போதைக்கு நூறு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இருப்பார்கள் போலிருக்கிறது. அந்த நூறு பேரில் நிசப்தம் அறக்கட்டளை நடத்துவதன் காரணமாக எனது பெயரையும் சேர்த்திருக்கிறார்கள்.


கோவாவில் இருக்கும் போது நிழற்படத்தை அனுப்பி வைக்கச் சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த நண்பர் கார்த்திகேயன் படம் எடுத்துக் கொடுத்தார். சுயகுறிப்பு ஒன்றும் கேட்டிருந்தார்கள். ஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையத்தைச் சார்ந்தவன் என்பதை முதல் வரியாகச் சேர்த்திருந்தேன். அதைச் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். ஊரைவிட்டு வெளியில் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போது ஏகப்பட்ட புதிய முகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஊரின் முகங்களும் அடையாளமும் உருமாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது இந்த ஊர் என்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்கிறது போன்ற பிரமை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. 

கோபியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியிக்கு அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழில் கூட ‘வா.மணிகண்டன், பெங்களூர்’ என்று அடித்திருந்தார்கள். ஒரு வினாடி குப்பென்றாகிவிட்டது. பெங்களூர் என்பது பிழைக்க வந்த ஊர். எவ்வளவுதான் இந்த ஊரை விரும்பினாலும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு என்று எதுவுமில்லை. ஆனால் கோபியும் கரட்டடிபாளையமும் அப்படியில்லை. இதைப் பற்றி இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.


அறம் செய விரும்பு பற்றி முழுமையாகத் தெரியாது. இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு லட்ச ரூபாயை ஏதேனும் குழந்தைக்கு பரிந்துரை செய்துவிடலாம் என்ற யோசனை இருக்கிறது. இல்லையென்றால் அரசு/கிராமப்புற பள்ளியின் கட்டமைப்புக்கு பரிந்துரை செய்துவிடலாம். 

இந்த வார விகடனில் இடம்பெற்றிருக்கும் இந்த நிழற்படத்தையும் குறிப்பையும் நிசப்தம் அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்குரிய ஒரு அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். 

எப்பொழுதும் உடன் வரும் நிசப்தம் வாசகர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் மிக்க நன்றி.

Sep 16, 2015

குமுதம் ரிப்போர்ட்டர்

சில நாட்களுக்கு முன்பாக கார்டூனிஸ்ட் பாலா அழைத்து ‘குமுதம் ரிப்போர்ட்டரின் ஆசிரியர் உங்களுடன் பேச விரும்புகிறார்’ என்றார். என்ன விஷயம் என்று கேட்ட போது ஒரு கட்டுரை கேட்பதாகச் சொன்னார். அடுத்த சில மணி நேரங்களில் ரிப்போர்ட்டரின் இணை ஆசிரியர் குபேந்திரன் அழைத்தார். ‘இதெல்லாம் பத்தி ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்றார். இதெல்லாம் என்பது அவர் பத்து நிமிடங்களுக்கு விளக்கிய சமாச்சாரங்கள். செல்போன், இணையம், ஃபேஸ்புக் பற்றியெல்லாம். எழுத முடியும் என்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் வாரம் இரண்டு கட்டுரைகளை அனுப்ப வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று தெரியும். கொஞ்சம் தாமதமானாலும் ‘தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வாரம் கட்டுரையை பிரசுரிக்க முடியவில்லை’ என்று அச்சிட வைக்க வேண்டியதாகிவிடும்.

‘தொடர் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஏழெட்டு கட்டுரைகளை அனுப்பிவிடட்டுமா?’ என்று சலுகையை வாங்கிக் கொண்டேன். வாரம் இரண்டாக அவர்கள் பிரசுரித்துக் கொண்டிருக்கும் போது இன்னும் நான்கைந்து கட்டுரைகளை அனுப்பி வைத்தால் பதினைந்து வாரத் தொடர் முடிந்துவிடும். சரியென்று சொல்லிவிட்டார்கள். ஏழு கட்டுரைகளை அனுப்புவதற்கு சற்று தாமதித்துவிட்டேன். இல்லையென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தொடர் ஆரம்பித்திருக்க கூடும்.

ஆசிரியர் ‘நாளைக்கு விளம்பரம் வந்துவிடும்..கட்டுரையை அனுப்பிடுங்க’ என்று இரண்டு மூன்று முறையாவது மின்னஞ்சல் அனுப்பியிருப்பார். அவருக்கு பெரிய மனது.நேற்று ரிப்போர்ட்டரின் கடைசிப் பக்கத்தில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். ‘ரிப்போர்ட்டர்ல தொடர் வருதா?’ என்ற விசாரணைகள் வரத் தொடங்கிய போது பெங்களூரின் கடையில் வாங்கினேன். அப்பொழுதுதான் கட்டுக்களை பிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்நகரத்தின் சூட்டைத் தாங்கிக் கொண்டிருந்த இதழின் கடைசிப் பக்கத்தை தெருவோரமாக நின்று சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சற்று அதிகப்படியான முக்கியத்துவம்தான். அவர்கள் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் யோசனையாக இருக்கிறது. 

தொடரின் முதல் கட்டுரை நாளை வெளியாகிவிடும். வாய்ப்பிருப்பவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லவும். நல்லதோ கெட்டதோ நான்கு பேர் நான்கு விதமாகச் சொன்னால்தான் நாம் உயிர்ப்போடு இருக்கிறோம் என்று அர்த்தம். கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடந்தால் என்ன அர்த்தம்? வரக் கூடிய விமர்சனங்கள், யோசனைகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த கட்டுரைகளைத் திருத்திக் கொள்கிறேன். Tuning process. 

தொடரை முழுமையாக முடித்துவிட்டு அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

Sep 15, 2015

ஓட்டம்

நிசப்தம் அறக்கட்டளை வழியாக இதுவரை பதினைந்து லட்ச ரூபாய் நன்கொடை வசூல் செய்திருப்பதாகத்தான் நினைத்தும் எழுதிக் கொண்டுமிருந்தேன். ஆனால் சரியாகப் பார்த்தால் பத்தொன்பது லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.  (ரூ.19,13,474.15)

அறக்கட்டளை பதிவு செய்து வங்கியில் கணக்குத் தொடங்கிய பிறகு முதல் தொகையாக ரூபாய் ஆயிரத்து ஒன்றை ஆனந்த் அனுப்பி வைத்தார். இது நடந்து சரியாக பத்து மாதங்கள் ஆகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று முதல் தொகை வந்திருந்தது. நேற்று கார்த்திகேயன் தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்காக முப்பதாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருந்தார். ‘இந்தக் காரியத்துக்குத்தான் உதவ வேண்டும் என்று எதையாவது மனதில் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு ‘யாருக்குக் கொடுத்தாலும் சரி’ என்று கார்த்தி பதில் அனுப்பியிருந்தார். இப்படித்தான் கிட்டத்தட்ட அத்தனை பேரும் சொல்கிறார்கள். ஆனந்துக்கும் கார்த்திகேயனுக்கும் இடையில் எத்தனை பேர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று பட்டியலில் பார்த்துக் கொள்ளலாம். 

வருமான வரிவிலக்கான 80G கோரி விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது அல்லவா? அது கிட்டத்தட்ட இறுதி வடிவத்திற்கு வந்துவிட்டது. இன்றைய தேதி வரைக்கும் நடைபெற்ற வரவு செலவுக் கணக்கை வருமான வரித்துறையினர் கேட்டிருந்தார்கள். ஆன்லைனில் கடைசி ஆறு மாதம் வரைக்கும்தான் எடுக்க முடியும் போலிருக்கிறது. விவரங்களை வங்கியில் கோரியிருந்தேன். அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்களால் பிடிஎஃப் வடிவில் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அவர்கள் அனுப்பி வைத்திருந்த கணக்கு விவரத்தை அச்செடுத்து பிறகு ஸ்கேன் செய்திருக்கிறேன்.

பத்து மாதங்களில் பத்தொன்பது லட்ச ரூபாய் வெறும் வலைப்பதிவில் எழுதி வந்தது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? அதுவும் தமிழ் வலைப்பதிவில். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். நம்பிக்கைதானே இங்கு அத்தனையையும் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது!

அறக்கட்டளையைப் பொறுத்தவரைக்கும் வரக்கூடிய கோரிக்கைகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல முடிவதில்லை என்றாலும் முக்கியமான காரியங்கள் என்று கருதக் கூடியவை என்றால் எப்படியாவது பதில் சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் ஒன்றிரண்டு பேருக்கு சரியாக பதில் சொல்லாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். வேண்டுமென்றே அப்படித் தவறவிடுவதில்லை- நிறையக் கோரிக்கைகளில் ஒன்றிரண்டு ஏமாந்துவிடுகிறது. இன்னொரு விஷயம்- முதல் முறை தகவல் அனுப்புவார்கள். பதில் அனுப்பவில்லை என்றால் திரும்பவும் கேட்பதில்லை. ‘இவன்கிட்ட எத்தனை தடவை கேட்கிறது?’ என்று சங்கடமாக நினைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை- இது என்னுடைய பணம் இல்லை. அடுத்தவர்கள் கொடுக்கும் பணம். இதில் உங்களுக்கு எப்படி உரிமை இல்லையோ அதே போலத்தான் எனக்கும் உரிமையில்லை. நீங்கள் சரியான மனிதர்களுக்கு பரிந்துரை செய்வதாக இருந்தால் தயவு செய்து ஏதேனும் பதில் வரும் வரைக்கும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கலாம். அதில் தவறு எதுவுமில்லை. அதுதான் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகளை வேகமெடுக்கச் செய்ய உதவும்.

அறக்கட்டளையின் பண விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைக்கும் போது உடனடியாக பொதுப்பார்வைக்கு வைத்துவிடுவது என்பது மடியைக் காலி செய்து கொள்வது மாதிரி. வழியில் பயமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கலாம். அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பொறுத்த வரைக்கும் பணம் என்பது இரண்டாம்பட்சம். மனிதர்களும் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் முக்கியம். அதைச் சிதறவிட்டுவிடாமல் இன்னமும் வேகமெடுக்க வேண்டும். Miles to go!வேறு விவரங்கள் தேவைப்பட்டால் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Sep 14, 2015

கோவா

இரண்டு நாட்கள் நடைபெற்ற பப்ளிஷிங் நெக்ஸ்ட் நிகழ்வு கோவாவில் நிறைவடைந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து ஏகப்பட்ட பதிப்பாளர்கள் வந்திருந்தார்கள். ராஜ்கமல் பிரகாஷன், யாத்ரா, ஹார்பர் கோலின்ஸ் போன்ற பிரசித்தி பெற்ற பிரசுரங்களின் ஆட்கள் குவிந்திருந்தார்கள். தமிழிலிருந்து காந்தி கண்ணதாசன், காலச்சுவடு கண்ணன், கிழக்கு பதிப்பகத்தின் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டார்கள். பதிப்பாளர்கள் மட்டுமில்லாமல் நிறைய எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். இந்தப் பெருந்தலைகளின் குழாமில் பொடியன் என்றால் நான்தான். தன்னடக்கமாக இதைச் சொல்லவில்லை. முதல் ஒன்றரை நாட்களுக்கு யாருமே மதிக்கவில்லை. இரண்டு முக்கியமான காரணங்கள்- அவர்கள் மதிக்கக் கூடிய அளவுக்கு கவனம் பெறும் செயல் எதையும் நான் செய்திருக்கவில்லை என்பது முதல் முக்கியமான காரணம். சொட்டை விழுந்திருக்கிறதே தவிர உருவத்தில் - ஐம்பத்தைந்து கிலோ- சிறுவனைப் போலத்தான் தெரிகிறேன் என்பதை இரண்டாவது காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

கண்ணன், காந்தி கண்ணதாசன், சத்யா போன்றவர்களிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தேன். இவர்களும் இல்லையென்றால் நொந்து போயிருக்கக் கூடும். முதல் நாள் இரவே ஒரு வடக்கத்திக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவரை எனக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ‘உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று உடான்ஸ்ஸூடன் தொடங்கினேன். இரண்டு வாக்கியங்கள் பேசியவர் அந்தப் பக்கம் ஒரு பெண்மணி வந்தவுடன் அப்படியே கத்தரித்துவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கும் அந்த மனிதனை முறைத்துக் கொண்டே திரிந்தேன். இதையெல்லாம் மனைவியிடம் சொல்ல முடியுமா? 

அறைக்கு வந்தவுடன் ‘என்ன சொல்லுறாங்க உங்க ஆளுங்க?’ என்று கேட்டாள். ‘அதை ஏன் கேட்கிற...அவ்வளவு மரியாதை’ என்று சொல்லி வைத்திருந்தேன். அவளும் நம்பிக் கொண்டாள். 

சின்னோமோன்டீல் என்னும் பதிப்பகத்தின் லியோனார்ட் பெர்ணாண்டஸ்தான் நிகழ்வின் ஏற்பாட்டாளர். இளைஞர். பங்கேற்பாளர்கள் அத்தனை பேருக்கும் விமான பயணச்சீட்டு, நட்சத்திர விடுதியில் தங்குவதற்கான அறை என்று ஏகப்பட்ட செலவு பிடிக்கும் காரியம் இது. ஸ்பான்ஸர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கையிலிருந்தும் பெருந்தொகையைச் செலவழிக்கிறார் என்று சொன்னார்கள். கோவா என்பது வெறும் கூத்துக்கு மட்டுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி புரிய வைக்கிறார்கள். கோவாவின் மாநில மைய நூலகத்தில்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரமாண்டமான நூலகம் அது. 

முதல் நாள் காலை நிகழ்வு தொடங்கியது. அப்பொழுதும் அதே நிலைமைதான். எந்த அறிமுகமும் கிடைத்திருக்கவில்லை. அருகில் ஒரு நேபாள பெண்மணி அமர்ந்திருந்தாள். நானாகவே பேச்சுக் கொடுத்தேன். பதிலுக்கு ‘நீங்க என்ன செய்யறீங்க?’ என்றாள். கொஞ்சம் பந்தாவாகச் சொன்னேன். நம்பிக் கொண்டவள் தன்னிடமிருந்த விசிட்டிங் கார்ட் ஒன்றைக் கொடுத்தாள். ‘சக்ஸஸ்’ என்று நினைத்துக் கொண்டேன்.

காலை நிகழ்வுகள் அருமையாக இருந்தன. குறிப்பெடுப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் கிடைத்தன. மதிய நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் மனைவி மற்றும் குழந்தைகளை- மகியும் தம்பியின் மகன் யுவநந்தனும் வந்திருந்தார்கள்- எங்கேயாவது அழைத்துச் செல்லவில்லையென்றால் தலையில் இருக்கும் நான்கு முடிகளுக்கும் பிரச்சினை ஆகிவிடக் கூடும் என்பதால் ஒரு பைக்கை வாடைக்கு எடுத்துக் கொண்டோம். ஒரு நாள் வாடகை வெறும் இருநூற்றைம்பது ரூபாய்தான். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சுற்றிக் கொள்ளலாம். பெட்ரோல் நம் செலவு. பிகினி இல்லாத பீச் ஒன்றுக்கு சென்று திரும்பினோம். முதல் நாள் பொழுது அப்படி முடிந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வின் கடைசி நிகழ்ச்சிதான் நான் கலந்து கொள்ள வேண்டிய உரையாடல். 

கோவாவில் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால் பேருந்தில் நகர்வலம் அழைத்துச் செல்கிறார்கள். காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்தால் மாலை ஐந்தரை வரைக்கும். நல்லதாகப் போய்விட்டது. வேணிக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் எடுத்து பேருந்தில் ஏற்றிவிட்டாகிவிட்டது. இல்லையென்றால் அவர்களும் நிகழ்வுக்கு வந்துவிட்டால் சிரமமாகிவிடும். ஊரே சிரித்தாலும் கூட பரவாயில்லை. வீட்டில் இருப்பவர்கள் சிரித்துவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறேன்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளில்தான் காந்தி கண்ணதாசன், கண்ணன் எல்லாம் கூட்டத்தைக் கவர்ந்தார்கள். மொழிபெயர்ப்பில் இருக்கக் கூடிய சிக்கல்கள், படைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதில் சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்புத்துறையின் எதிர்காலம், சமூக ஊடகங்கள் என ஏகப்பட்ட தலைப்புகளில் நிறைய ஆளுமைகள் பேசினார்கள். கண்ணன் மொழிபெயர்ப்பு குறித்து அற்புதமான உரையை வழங்கிவிட்டு அமர்ந்தார். பதிப்பு, எழுத்து என இருக்கக் கூடியவர்களுக்கு மிக முக்கியமான உரையாடல்கள் அவை. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வு தமிழ் பதிப்பாளர்களிடையே இன்னமும் கவனம் பெற்றிருக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். அது இருக்கட்டும்.

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதுதான் ‘எதைப் பற்றி பேச வேண்டும்’ என்கிற செய்திகளை மண்டைக்குள் ஓட்டிக் கொண்டிருந்தேன். மாலை நெருங்க நெருங்க படபடப்பு அதிகமாகியிருந்தது. இவ்வளவு செலவு செய்து நம்மை அழைத்திருக்கும் போது அதற்கு ஓரளவுக்காகவது பதிலீடு செய்யும்படியாக நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் என்கிற படபடப்பு அது. இப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் போது அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையையும் அடக்கியிருந்தது.

பப்ளிஷிங் நெக்ஸ்ட் மாதிரியான நிகழ்வுகளில்தான் நெட்வொர்க்கிங் உருவாகிறது. திரிபுராவைச் சார்ந்தவர் தமிழ்நாட்டுக்காரர் ஒருவரைச் சந்தித்து தொடர்பை வளர்க்கிறார். மலையாளியும் பெங்காலியும் பேசிக் கொள்கிறார்கள். மராத்தியும் காஷ்மீரியும் விசிட்டிங் கார்டுகளை பரிமாறிக் கொள்கிறார்கள். என்னிடம் விசிட்டிங் கார்ட் இல்லை என்பது வேறு விஷயம். அதுவரை என்னிடம் யாரும் சும்மாவாச்சும் கூட கேட்டிருக்கவுமில்லை நானும் யாரிடமும் விசிட்டிங் கார்டை வாங்கியிருக்கவில்லை. 

மாலை ஐந்து மணிக்கு மேடையேற்றினார்கள். முதல் சில வினாடிகளிலேயே தாகம் எடுத்து நீரை அருந்தத் தொடங்கியிருந்தேன். நாக்கு தமிழகக் காவிரியைவிட வேகமாக வறண்டு கொண்டிருந்தது. ரசனா ஆத்ரேயா என்னும் எழுத்தாளர், க்ராஸ்வேர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜெயா என்னும் பதிப்பாளர்- இவர் ஐஐடியில் பி.டெக் பிறகு ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்தவர் ஆகியோர் என்னோடு அமர்ந்திருந்தார்கள். லியோனார்ட்தான் ஒருங்கிணைப்பாளர். ஒவ்வொருவராகக் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார். படு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாமும் அதே மாதிரி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டாம் எனத் தோன்றியது. எல்லோரையும் சிரிக்க வைத்துவிட வேண்டும் என அந்த வினாடியில் முடிவு செய்து கொண்டேன். நம்மை அறிவாளி என்று காட்டிக் கொள்வதைவிடவும் மனதில் பட்டதை உண்மையாகப் பேசிவிட வேண்டும் என்கிற நினைப்பு பொறி தட்டியிருந்தது. நான்கு பேரில் என்னைத்தான் கடைசியாகக் கேள்வி கேட்டார்.

‘கண்ட புஸ்தகத்தைப் படிச்சுட்டு படிப்பைக் கோட்டை விடுறான்னு அம்மா திட்டினாங்க....இப்போ குடும்பத்தைக் கண்டுக்கிறதில்லைன்னு பொண்டாட்டி திட்டுறா’ என்று ஆரம்பித்தேன். சிரிக்கத் தொடங்கினார்கள். சில நிமிடங்கள்தான். கூட்டம் நம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. என்னுடைய ஆங்கிலத்தில் சில இலக்கணப் பிழைகள் இருக்கும்தான். ஆனால் நான் பேசுவதை எதிரில் இருப்பவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால் சமாளித்துவிடுவேன்.

‘ஓர் எழுத்தாளர் ஒரே சமயத்தில் ஒரு புத்தகத்தை பதிப்பாளர் மூலமாக வெளியிட்டு இன்னொரு புத்தகத்தை சொந்த வெளியீடாகவும் போடலாமா?’ என்று ஒருங்கிணைப்பாளர் கேட்டார். 

‘ஏன் முடியாது? ஒரு புத்தகம் நல்லா விக்கும்ன்னு தெரிஞ்சா சுயமா வெளியிட்டு விடலாம்...ஒருவேளை விற்காதுன்னு தெரிஞ்சா பதிப்பாளர் தலையில் கட்டிவிடலாம்’ என்றேன். கைதட்டினார்கள்.

‘ஏன் எழுத்தை முழுநேரத் தொழிலாக எடுத்துக் கொள்ள முடியாது?’ என்று கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி வினவினார்.

‘எடுத்துக்கலாம்தான். ஆனா பாருங்க...பெங்களூரில் வீடு கட்டியிருக்கோம். இருபத்தேழு லட்ச ரூபாய் வங்கிக் கடன் இருக்கு. எழுதறேன் பேர்வழின்னு சோத்துக்கு லாட்டரி அடிச்சா வீட்டுக்காரி பையனைக் கூட்டிட்டு அப்பன் வீட்டுக்கு போய்ட்டா என்ன செய்யறது சொல்லுங்க’ என்றேன். உண்மையைத்தான் சொன்னேன். எதையுமே மறைக்கவில்லை. மனதுக்குள் என்ன தோன்றியதோ அதை வெளிப்படையாகப் பேசினேன்.

‘ஒருவேளை சினிமாவில் எதையாவது செய்து சம்பாதித்தால் இது பற்றி யோசிக்கலாம்’ என்று சொன்னதற்கு கூட்டத்திலிருந்த ஒருவர் ‘காமெடி ட்ரை செய்யப் போறீங்களா?’ என்றார். குரலையும் தொனியையும் மாற்றாமல் தலையைத் தடவிக் காட்டியயபடியே ‘வில்லனாக முயற்சிக்கிறேன்’ என்றேன்.

கூட்டம் முடிந்தவுடன் நிறையப் பேர் கை குலுக்கினார்கள். கிட்டத்தட்ட நாற்பது விசிட்டிங் கார்டுகள் பாக்கெட்டுக்குள் சேர்ந்திருந்தது. மிகுந்த நிறைவாக இருந்தது. என்னிடம் கார்ட் கேட்டவர்களிடம் ‘தீர்ந்துவிட்டது’ என்று கூசாமல் பொய் சொன்னேன்.

சில நிமிடங்களில் மனைவி அழைத்தாள். ‘எப்படி பேசுனீங்க?’ என்றாள். ‘எல்லோரும் பாராட்டினாங்க’ என்றேன். முந்தின நாள் உண்மையைச் சொல்லியிருந்தாள் அவளுக்கு இது சந்தோஷமாக இருந்திருக்கக் கூடும். ‘அப்படியா? நாங்க ஊர் சுத்திட்டு வந்துட்டோம்...ஜாலியா இருந்துச்சு’ என்றாள். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. 

ஹோட்டலின் வராந்தாவில் வேணியுடன் பேசிக் கொண்டிருந்த போது ‘இன்னைக்கு சாயந்திரம் அவர் முதல் ஸ்டார்ன்னா நீங்கதான் இரண்டாவது ஸ்டார்’ என்று ப்ரிண்ட் இந்தியாவின் ஆசிரியர் ராமு ராமநாதன் அவளிடம் சொன்ன போதுதான் என்னவோ நடந்திருக்கிறது என்று உணரத் தொடங்கினாள். எனக்கும் சந்தோஷமாக இருந்தது.

‘என்னைப் பத்தியும் பேசுனீங்களா?’ என்றாள்.

சிரித்து வைத்தேன். அவர் சென்ற பிறகு ‘எப்பவுமே என்னைக் காலை வாரித்தான் நீங்க கைதட்டு வாங்குவீங்க...என்ன பேசுனீங்கன்னு சொல்லுங்க’ என்றாள். இதுவரைக்கும் பதில் சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 

அவளுக்கு சந்தோஷமளிக்கக் கூடிய இன்னொரு விஷயம் இருந்தது. ‘பேசியதைக் கேட்டுட்டு ஜெய்ப்பூரில் இதே மாதிரியான நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. அழைத்திருக்கிறார்கள்தான். ஆனால் இப்பொழுதே சொல்லிவிட்டால் பெட்டியை தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள். நிகழ்வு நெருங்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று மனதுக்குள்ளேயே அமுக்கிக் கொண்டேன்.

Sep 10, 2015

சினிமா

ரஷ்யாவில் போலீஸ்காரர்கள் படு மோசமானவர்களா என்று தெரியவில்லை. சிக்குகிற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் வன்புணர்வதாக ஒரு படத்தில் காட்டியிருந்தார்கள். படத்தில் இருப்பதையெல்லாம் அப்படியே நம்ப முடியாதுதான். ஆனால் நம்மை நம்ப வைக்கும்படியான, ஒரு வகையில் அறிவுஜீவித்தனமான படம் அது. Twilight Portrait. செருப்பு அறுந்து விட வீட்டுக்கு நடந்து செல்கிறாள் நாயகி. ஒரு காரை நிறுத்தி வழி கேட்கிறாள். காரில் இருப்பவர்கள் பையை பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நொந்து போய் நடந்து கொண்டிருப்பவளை மூன்று போலீஸ்காரர்கள் கடத்திச் சென்று சீரழித்துவிடுகிறார்கள். அதன் பிறகு ஆளே மாறிவிடுகிறாள். இவள் இப்படி மாறிப் போனதன் காரணம் தெரியாத கணவன் ‘உனக்கு ரெஸ்ட் வேணும் போல இருக்கு...அம்மா வீட்டுக்கு போய்ட்டு வா’ என்கிறான். அம்மா வீட்டுக்குச் செல்லாமல் தன்னை வன்புணர்ந்த போலீஸ்காரனுடன் சில நாட்கள் தங்குகிறாள். அவன் அவளோடு உறவு கொள்ளும் போதெல்லாம் ‘ஐ லவ் யூ’ என்கிறாள். எப்படியும் அவன் கதையை முடித்துவிடுவாள் என்று நினைத்துக் கொண்டேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 

இலக்கியத்தில் Reader's space பற்றிச் சொல்வார்கள். கதையோ, கட்டுரையோ, கவிதையோ- வாசித்து முடித்த பிறகு தான் வாசித்தது குறித்து வாசகன் யோசிப்பதற்கான இடம் அது. அதே போலத்தான் நல்ல சினிமாவில் பார்வையாளனுக்கான இடம் என்று இருக்கும். ‘ஏன் இப்படி நடந்தது?’ ‘இவன்/இவள் செய்தது சரியா?’ ‘அந்தப் பாத்திரம் ஏன் அப்படி நடந்து கொண்டது?’ போன்ற கேள்விகளை எழுப்பும். இந்த ரஷ்யப்படம் அப்படியானதுதான். இணையத்திலேயே கிடைக்கிறது. 

தினமணி ஆன்லைனில் எழுதி வந்த செல்லுலாய்ட் தொடர் முடிந்துவிட்டது. 

இருபத்து மூன்று வாரங்கள் வெளி வந்த தொடர். வாரம் ஒரு படம். கிட்டத்தட்ட அத்தனை வாரங்களும் வியாழக்கிழமையன்று காலையில்தான் கட்டுரையை அனுப்பினேன். அவர்கள் பத்து மணிக்குள் பிரசுரித்தாக வேண்டும். வேண்டுமென்றே தாமதம் செய்யவில்லை. அறக்கட்டளை வேலைகளின் காரணமாக பெரும்பாலான சனி, ஞாயிறுகளில் ஏதாவதொரு வேலை வந்துவிடுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் கைவசம் இருந்தால் முதல் நாள் படம் பார்த்து அடுத்த நாள் கட்டுரை எழுதிவிட முடியும் என்கிற நம்பிக்கையில்தான் அவர்கள் கேட்டவுடன் ஒத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது லேசுப்பட்ட காரியமாகத் தெரியவில்லை. அத்தனை படங்களும் சமீபத்திய படங்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்ததுதான் பிரச்சினையாகப் போய்விட்டது. திங்கட்கிழமையன்று முதல் படத்தைப் பார்ப்பேன். சில சமயங்களில் முதல் படமே நன்றாக அமைந்துவிடும். பிரச்சினையில்லை. கட்டுரை எழுதுவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் இருக்கும். ஆனால் பல சமயங்களில் படம் மொக்கையாகிவிடும். அடுத்த படத்தை பார்த்தாக வேண்டும். ஆனால் ஒரே நாளில் இரண்டு படங்களைப் பார்க்க முடியாது. தூங்கி எழுந்து அடுத்த நாள் வேலைக்குச் செல்ல வேண்டும்; நிசப்தத்திற்கு கட்டுரை எழுத வேண்டும். அதனால் செவ்வாய்க்கிழமை இரண்டாவது படம் பார்க்க வேண்டியிருக்கும். பல சமயங்களில் புதன்கிழமையன்றும் படம் பார்க்க வேண்டியதாகப் போய்விடும். புதன்கிழமையன்று படம் பார்த்து அதே இரவில் கூட கட்டுரையும் எழுதி அனுப்பியிருக்கிறேன்.  

கட்டுரைகளுக்கு அந்தத் தளத்தில் எப்படி வரவேற்பு இருந்தது என்று தெரியவில்லை. அவர்கள் பாஸிட்டிவாகத்தான் சொன்னார்கள். அப்படித்தான் சொல்வார்கள். நம்பிக் கொள்ள வேண்டியதுதான். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வர இரண்டு பிரசுரங்களில் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். யாராவது அந்தத் தொடரை வாசித்திருந்தால் பத்து நிமிடங்கள் ஒதுக்கி அவை குறித்த உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொண்டால் தன்யனாவேன். 

வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்ப்பது நல்ல அனுபவம். ரஷ்யாவையும் அர்ஜெண்டினாவையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு எவ்வளவு பேருக்குக் கிடைக்கும் என்று தெரியாது. ஆனால் அந்தந்த மொழிப்படங்கள் தங்களது நிலத்தையும் அந்நிலத்தின் மனிதர்களையும் காட்டிவிடுகின்றன. உலக வரலாறுகளின் மைக்ரோ கூறுகளையும், வெவ்வேறு நாடுகளின் தனிமனித சிக்கல்களையும் இன்னபிற சமாச்சாரங்களையும் குறுக்குவெட்டாகவோ அல்லது நீள்வெட்டாகவோ புரிந்து கொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன. ஒளிப்பதிவு, இசை, கேமிரா கோணங்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். எனக்கு அவை அவசியமானவையாகவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு திரைப்படத்தின் வழியாகவும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அன்பு நிறைந்தவர்களையும், வன்முறையாளர்களையும், காமுகர்களையும், இச்சை மிகுந்தவர்களையும், அப்பாவிகளையும், அசுர குணம் நிறைந்தவர்களையும் திரைப்படங்கள் காட்டுகின்றன. அதற்காகவே மனம் வெவ்வேறு படங்களைத் தேடுகிறது.

The bridge on the river kwai, The city of god போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் தந்த அனுபவத்துக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத அனுபவங்களைத்தான் The desert மாதிரியான உலகம் சிலாகிக்க மறந்த படங்களும் தந்தன.  அதனால் அயல்படங்களை வகைதொகையில்லாமல் பார்த்துவிட வேண்டும். ஆரம்பத்தில் IMDB தளத்தில் எவ்வளவு தரப்புள்ளிகள் வழங்கியிருக்கிறார்கள் என்று பார்த்து படங்களைத் தேர்ந்தெடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். சில நல்ல படங்களை யாருமே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள். யாராவது நண்பர்கள் பரிந்துரைத்து பார்க்கும் போது அற்புதமான படமாக இருக்கும். அதன் பிறகு தரப்புள்ளிகளை மனம் நம்புவதிலை. அதனால் அந்தந்த சமயத்தில் என்ன மாதிரியான மனநிலை இருக்கிறதோ அந்த வகையிலான படங்களைப் பார்த்துவிடுவது வாடிக்கையாகியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் கட்டுரை என்பது கடினமான காரியம். தொடர் எழுதுவதற்கு ஒரு சுய ஒழுங்கு வேண்டும். அதுவும் ஒற்றைக் கட்டுரையிலேயே கூட ஆரம்பிக்கும் போது ஒரு விஷயத்தைச் சொல்லி போது இன்னொரு விஷயத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்னைப் போன்ற தான்தோன்றியான மனநிலை வாய்த்தவர்கள் வானம் ஏறி வைகுண்டத்தை பிடிப்பது மாதிரிதான்.

Sep 9, 2015

கள்ளக்காதல்

அனுராதா என்கிற பெண் குடித்துவிட்டு முழு போதையில் கீழே விழ அவரது தலைக்கு நேராக இருந்த டிவி ஸ்டேண்ட் அடித்ததில் இறந்து போனார். இது பெங்களூரில் நடந்தது. அவளுடைய பக்கத்து வீட்டுக்காரர் முருகன் என்னுடன் பழைய நிறுவனத்தில் பணியாற்றினார். அப்பொழுது அவர் இந்தக் கதையைச் சொன்ன போது வேறு விவரங்கள் தெரியவில்லை. பெங்களூரில் பெண்கள் குடிப்பது சாதாரணமான விஷயம். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெண்மணியின் வீடு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருந்தது. மடிவாலா போலீஸ் ஸ்டேஷனில் மர்மச் சாவு என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அதைப் பற்றி எழுதி விட வேண்டும். அந்தப் பெண் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள். கணவனின் கைங்கர்யம்தான். காவல்துறையில் சிக்கியிருக்கிறான்.

கடந்த வாரத்தில் பெங்களூர் விமானநிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸப்பில் மெசேஜ் வந்ததாகவும் அதனால் சர்வதேச விமானங்கள் தாமதிக்கப்பட்டன என்றும் செய்தி வந்திருந்தது. வாட்ஸப்பில் செய்தி அனுப்பினால் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வப்போது பள்ளி மாணவர்கள் பள்ளி கூடத்தில் குண்டு வைத்திருப்பதாக செய்தி அனுப்பி அன்றைய தினத்தை விடுமுறை தினமாக மாற்றிவிடுவார்கள். அப்படியான வேலையாகக் கூட இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த வெடிகுண்டு விவகாரத்தில் விசாரணை நடத்தப் போகத்தான் அனுராதாவின் கணவன் கையில் விலங்கு விழுந்திருக்கிறது.

அனுராதாவும் அவளது கணவன் கோகுலும் தங்களுடைய திருமணத்திற்கு பிறகு டெல்லியில் இருந்திருக்கிறார்கள். அங்கு அனுராதாவுக்கு ஒரு கள்ளக்காதல். அவள் ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரிய அங்கு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவனுடன் கசமுசாவாகியிருக்கிறது. 

இந்தக் கள்ளக்காதல் கதைக்கு முன்பாக ஒரு ப்ளாஷ்பேக்.

அனுராதாவின் கணவன் கோகுலுக்கு பள்ளிப்பருவத்திலேயே வேறொரு பெண்ணுடன் காதல் இருந்திருக்கிறது. அந்தக் காதல் அரும்பாகி மொட்டாகி பூவாகி காயாகி அதன் பிறகு பழுத்ததா என்று தெரியவில்லை. பெற்றவர்கள் பிரித்துவிட்டார்கள். ஜோடிப் பறவைகள் வெவ்வேறு திசைகளில் பறக்கத் தொடங்கின. தனியாக பறக்காமல் பெற்றவர்கள் பார்த்து வைத்த புது ஜோடிகளைக் கூட்டி கொண்டு பறக்கத் தொடங்கின. அப்படித்தான் கோகுலுக்கு அனுராதாவுன் திருமணம் நடந்திருக்கிறது. டெல்லி சென்றுவிட்டார்கள். கோகுலின் காதலி கணவனுடன் பெங்களூருக்கு வந்துவிட்டாள். திருமணம் ஆனால் குழந்தை பிறப்பது வழக்கம்தானே? இரண்டு ஜோடிகளுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. 

இந்தச் சூழலில்தான் அனுராதாவுக்கு கள்ளக்காதல் முளைத்திருக்கிறது. அந்த விவகாரம் கோகுலுக்குத் தெரியவும் இருவருக்குமிடையில் சண்டையும் வளர்ந்திருக்கிறது. கோகுல் தனது பழைய காதலைத் தூசி தட்டியிருக்கிறான். ஃபேஸ்புக் வழியாக அவளைக் கண்டுபிடித்தவன் ஹாய் சொல்லி மீண்டும் தண்ணீர் ஊற்றி வளர்த்துவிட்டு பெங்களூருக்கு வேலை மாறுதல் வாங்கி வந்துவிட்டான். இவன் காதலியை நெருங்கிவிட்டான். ஆனால் அனுராதா காதலனை பிரிய வேண்டியதாகிவிட்டதல்லவா? தனது கள்ளக்காதலனின் நினைப்பு வந்து டெல்லிக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறாள். இது ஒரு தனி ட்ராக்.

பெங்களூர் வந்த கோகுல் தனது காதலியின் அபார்ட்மெண்ட்டிலேயே வாடகைக்கு வீடு பிடித்திருக்கிறான். அவளுடைய கணவனுடனும் நட்பு பாராட்டியிருக்கிறான். கணவனுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. இவனை நம்பி தனது வீட்டுக்குள்ளும் அனுமதித்திருக்கிறான். கோகுலுக்கு எல்லாமும் செளகரியமாகப் போய்விட்டது. தனது பழைய காதலியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இரண்டு பேரைத் தீர்த்துக் கட்ட வேண்டியிருக்கிறது என்று முடிவு செய்தவன் முதலில் அனுராதாவுக்கு செக் வைத்திருக்கிறான். அவளுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் இருந்தால் அவளைக் கொன்றாலும் கூட பிரச்சினை எதுவும் வராது என முடிவு செய்தவன் முதலில் ஒரு ஃபேக் ஐடியில் அவளோடு உரையாடத் தொடங்கியிருக்கிறான். அவள் தனது கள்ளக்காதல் கதையை ஒரு கட்டத்தில் இவனிடம் உளறி வைக்க ஒரு ஜோதிடரை அறிமுகப்படுத்தி வைப்பதாகச் சொல்லி ஜோதிடரின் பெயரில் இன்னொரு ஐடியைத் தொடங்கி அனுராதாவுடன் உரையாடத் தொடங்கியிருக்கிறான்.

அவள் தனது கள்ளக்காதல் பிரச்சினைகளை எல்லாம் சொல்லவும் கோகுலுக்கு வசதியாகப் போய்விட்டது. ஒரு பூஜை செய்தால் சரியாகப் போய்விடும் என்றும் காதலனுடன் சேர்ந்து நிர்வாணப் படம் ஒன்றை அனுப்பி வைத்தால் அதை வைத்து பூஜை செய்வதாகவும் சொல்லி ஜோதிடர் ஐடியில் இருந்து கேட்கவும் இவளும் நம்பி டெல்லிக்குப் பறந்து சென்று ஒரு விடுதியைப் பிடித்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து படம் ஒன்றை எடுத்து அனுப்பி வைத்திருக்கிறாள். strong evidence சிக்கிவிட்டது. அடுத்ததாக ஒரு நாள் அனுவைத் தொடர்பு கொண்டவன் அவளுக்காக பூஜை நடத்தப் போவதாகவும் காளிக்கு பூஜை நடத்தும் சமயத்தில் அவள் முழு போதையில் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான். அனுராதா சரக்கை ஏற்றிக் கொண்டு வீட்டில் முழு போதையுடன் இருக்கும் போதுதான் அவளது தலையில் ஓங்கி அடித்து கதையை முடித்திருக்கிறான். இதற்கு முன்பாகவே அனுராதாவின் நடத்தை சரியில்லை என்று அவளின் தந்தையிடம் ஆதாரங்களைக் கொடுத்து அவரை தனது வலையில் வீழ்த்தி வைத்திருக்கிறான். அதனால்தான் காவல்துறையில் இதை மர்மச் சாவு என்று எழுதி விசாரணையை முடித்துக் கொண்டார்கள்.

ஒரு டிக்கெட் காலி. 

தனது பழைய காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நடுவில் அவளுடைய கணவன் இருக்கிறான். அவனுக்குத்தான் அடுத்த செக்.

மனைவி இறந்துவிட்ட ஆழ்ந்த துக்கத்தில் இருந்த கோகுலை காதலியும் அவளுடைய கணவனும்தான் தேற்றியிருக்கிறார்கள். அவன் தன் குழந்தைகளை காதலியுடன் விட்டுவிட்டு வெளியில் சென்றுவிடுவதும் அவள் அந்தக் குழந்தைகளைத் தன் குழந்தை போல பார்த்துக் கொள்வதும் வாடிக்கையாகியிருக்கிறது. காதலியின் கணவன் இவனை நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க இவனது கிரிமினல் மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. காதலியின் கணவனுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைத் திருடி அவன் பெயரில் சிம் கார்ட் ஒன்றை வாங்கியிருக்கிறான். அதன் வழியாக காதலியின் கணவனை தீவிரவாதியாகச் சித்தரித்து சிறைக்குள் தள்ளிவிட்டால் காரியம் எளிதாகிவிடும் என முடிவு செய்தவன் அந்த சிம் கார்டைப் பயன்படுத்தி விமானநிலையத்திற்கு மிரட்டல் அனுப்பியிருக்கிறான். இதில்தான் எங்கேயோ பிசகிவிட்டான். முதலில் கோகுலின் காதலியையும் அவளது கணவனையும்தான் விசாரணை வளையத்திற்குள் எடுத்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவனை நெருங்கியிருக்கிறார்கள். இப்பொழுது அமுக்கிவிட்டார்கள். ரகசிய இடத்தில் வைத்து விசாரணைச் செய்கிறார்களாம்.

மிக எளிமையாக இருக்க வேண்டிய வாழ்க்கையை எவ்வளவு சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றியிருக்கிறான் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ‘எனக்காகத்தான் அவன் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்பதால் அவன் மீது அன்பு பெருகுகிறது. அதற்கு கைமாறாக அவனது குழந்தைகளையும் நானே வளர்ப்பேன்’ என்று காதலி பேசியிருக்கிறாள். 

உறவுகள் எப்பொழுதுமே மிக எளிமையானவைதான். ஆனால் நாம்தான் அதீத சிக்கல்கள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறோம். உறவுமுறையைப் பொறுத்தவரையில் அடுத்தவரின் ஆழ்மன விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் உதாசீனப்படுத்திவிட்டு நமது சுயநலம் சார்ந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் போது உறவுகளுக்கிடையில் கீறல் விழுகிறது. காய்ந்த போன அன்பும், வறண்ட காமமும், அவநம்பிக்கையும் உறவுகளில் கசப்பை ஏற்றுகின்றன. சலிப்படைந்த இந்த உறவானது இன்னொரு உறவை நோக்கி மனதை சலனமுறச் செய்கிறது. அந்தரங்கமான புதிய உறவுகளும், தூசி தட்டப்படும் பழைய ரகசிய உறவுகளும் விழுந்த கீறலை பெரிதாக்கி விரிசலாக்குகின்றன. இன்றைய நவீன உலகில் இதுதான் மனித உறவுகளுக்கிடையிலான மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

Sep 8, 2015

உடல்

ஆர்டிஸ்ட் ராஜா குறித்து கவிஞர் யவனிகா ஸ்ரீராம், பத்திரிக்கையாளர் துரைபாரதி ஆகியோர் பல முறை பேசினார்கள். ராஜா சினிமா எக்ஸ்பிரஸ்ஸில் ஆர்மபித்து ஏகப்பட்ட பத்திரிக்கைகளில் பணியாற்றியிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை சீரழிந்து போய்விட்டது. தாம்பரம் சானிடோரியத்தில் படுக்கையில் இருக்கிறார். இப்படியான உதவி கோரும் தகவல்கள் வரும் போது முடிந்தவரை நேரில் பார்த்த்விடுவதுண்டு. கால தாமதமாகிறதுதான். ஆனால் சிரமம் பார்க்காமல் நேரில் பார்த்துவிடுவது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. அப்படியும்  சில சமயங்களில் நேரில் செல்ல முடிவதில்லை. ராஜா குறித்தான தகவல்கள் கிடைத்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் அவரைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவேயில்லை. இத்தகைய சமயங்களில் நம்பகமான ஒருவரை அழைத்து சரி பார்க்கச் சொல்ல வேண்டியிருக்கிறது. திரு.சுந்தர் சென்னை வருமான வரித்துறையில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். உதவி கோருபவர்களின் விவரங்களை அவரிடம் சொன்னால் அவர் சிரமம் பார்க்காமல் சென்று விசாரித்துச் சொல்லிவிடுகிறார். 

ஆர்டிஸ்ட் ராஜாவை நேரில் சந்தித்து தகவல் அனுப்பியிருந்தார்.

அவர் அனுப்பியிருந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.

அன்புள்ள மணி,

சித்தா மருத்துவமனைக்குச் சென்று ஆர்டிஸ்ட் ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது தற்போதையை நிலைமையை விளக்கும் படங்களை எடுத்திருக்கிறேன். சில மருத்துவ ஆவணங்களையும் இந்த மின்னஞ்சலுடன் இணைத்திருக்கிறேன். 

என்னுடைய அறிக்கை: வத்லகுண்டுக்கு அருகில் இருக்கும் அய்யம்பாளையத்தைச் சார்ந்த ராஜா பாஸிடிவ் எனர்ஜி மனிதராகத் தெரிகிறார். அவரது மனைவி மனநல சிகிச்சையிலிருந்து குணம் பெற்று வருகிறார். ராஜாவின் மகள் இப்பொழுது தனியார் நிறுவனம் ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை. ராஜாவின் மகன் பகுதி நேர பணியாளாராக சம்பாதித்து அந்த வருமானத்தில் தனது படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் குடும்பம் மிகக் கஷ்டமான சூழலில் இருக்கிறது/ 

தற்போதைய நிலைமை:  Ankylosing Spondilytis,  Cervical Vertebrae,  Socket & Ball joint diffusion,  scissor  style cross legs, fusion of facetal joints of lower dorsal and lumbar vertebrae, MRI Dorsolumbar Spine.

அலோபதி மருத்துவத்தின் வழியாக அவரது கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுமாயின் சித்த மருத்துவத்தின் வழியாக கழுத்து பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு (மருந்து உட்பட) கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும் போலிருக்கிறது. அரசாங்கத்தின் நிதியுதவி ஒன்றரை லட்சம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னமும் இரண்டரை லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கனவே கடந்த தொண்ணூறு நாட்களுக்கான சிகிச்சைப் பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. இப்பொழுதும் கூட மருந்துகள், மூலிகைகளுக்கென மாதம் பல்லாயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது.

ஆர்டிஸ்ட் ராஜா பரிதாபமான சூழலில் இருக்கிறார். 

ராஜாவை நேரில் சென்று சந்தித்து வரும் வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி. வேறு விவரங்கள் தேவைப்படுமாயின் அலைபேசியில் அழைக்கவும்.

அன்புடன்,
சுந்தர்.

ராஜா அனுப்பியிருந்த கடிதமும் அவரது பழைய படமும் கீழேயிருக்கிறது. 
ராஜாவின் திறமை பற்றி நிறையப் பேர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காலம் முடக்கி கட்டிலில் தள்ளியிருக்கிறது. நிழற்படங்களைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. 

உடல்நிலைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. அது பிசகினால் மனிதனைக் கந்தல் துணியாக்கிவிடுகிறது. யாருக்கு எப்பொழுது எந்த நோய் வருகிறது என்பதையெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. ஒரேயொரு கீறல்தான் விழுந்தது. உடலில் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று எதுவுமில்லை ஆனால் ஒரே மாதத்தில் கால் வீங்கி எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறவர்களை பார்க்க முடிகிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தார் என்றும் இப்பொழுது படுக்கையில் சாய்ந்துவிட்டதாகச் சொல்பவர்களையும் எதிர்கொள்ள நேர்கிறது. இவையெல்லாம் ஏதோவொருவிதத்தில் நம்மை எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பது வெறும் பழமொழி மட்டுமன்று.

ராஜாவிடம் இன்று பேசினேன். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரைச் சந்தித்துவிட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தேதி குறித்து முடிவு செய்வார்கள் போலிருக்கிறது. 

அறுவை சிகிச்சை முடிவான பிறகு நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்துவிடலாம். 

Sep 7, 2015

புத்தகமும் அச்சாக்கமும்

தங்களுடைய எழுத்துக்களை புத்தகமாகக் கொண்டு வர விரும்புவதாக ஆசையை வெளிப்படுத்தும் சிலரை அவ்வப்போது சந்திக்க நேர்கிறது. நம்மூரில்தான் அறிவுரை இலவசமாகக் கிடைக்குமே! நானும் ஒன்றைச் சொல்ல விரும்புவேன். அந்தப் பக்கமாகச் சென்று ‘இவன் பெரிய இவனாமா’ என்று பழித்துவிட்டுச் செல்வார்களோ என்று பயந்து ‘நல்ல விஷயம்...செய்யுங்க’ என்று ஒரு வரியோடு முடித்துக் கொள்வதுண்டு. புத்தகமாக்குவது என்பது நல்ல காரியம்தான். என்னதான் இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தாலும் நம் மீதான ஒரு குவிந்த கவனத்தை புத்தகம்தான் உருவாக்குகிறது.

புத்தகமாகக் கொண்டு வருவதற்கு முன்பாக நம்முடைய எழுத்துக்களையும் வாசிப்பதற்கு சில நூறு பேர்களாவது இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இல்லையென்றால் நோட்டீஸ் அடிப்பது போல அடித்து வைத்து சொந்தக்காரர்களுக்கு இனாமாகத்தான் கொடுக்க வேண்டும். நம்முடைய எழுத்தை மற்றவர்களை வாசிக்கச் செய்வதற்கு பத்திரிக்கைகளில் எழுதலாம். இணையத்தில் கூட எழுதலாம்தான். ஆனால் இணையத்தில் நாமே ராஜா நாமே மந்திரி என்பதால் ஆக்கப்பூர்வமான விமர்சனம் எதுவும் உடனடியாகக் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பத்திரிக்கைகள் (அல்லது இணையப்பத்திரிக்கைகள்) அப்படியில்லை. நாம் எழுதி அனுப்பிய படைப்புகள் நிராகரிக்கப்படுமாயின் ‘ஏதோ குறைகிறது’ என்று எழுத்தை சீர்படுத்த முயற்சி செய்வோம். அடுத்தடுத்த முயற்சிகளில் நம்மையுமறியாமல் நம்முடைய எழுத்தில் மெருகேறிக் கொண்டிருக்கும். பத்திரிக்கைகள்தான் அத்தாரிட்டி என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு அனுபவமிருக்கிறது. நிறைய எழுத்துக்களிலிருந்து தோதானவற்றைத் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நம்முடைய படைப்புகள் இருக்குமாயின் முதல் படியைத் தாண்டிவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது விஷயம்- தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பது. இந்த மாதம் ஒரு கவிதை வெளிவந்து அடுத்த ஆறு மாதம் கழித்து வேறொரு இதழில் இன்னொரு கவிதை என ஆடிகொன்றும் அமாவாசைக்கு ஒன்றுமாக இருந்தால் அவ்வளவு உசிதமில்லை. மறந்துவிடுவார்கள். கண்மணி குணசேகரன் ஒரு கூட்டத்தில் பேசும் போது சொன்னார். கவிதை, கதை என எதுவாக இருந்தாலும் கை நிறையச் சேருமளவுக்கு எழுதி வைத்துக் கொள்வாராம். அதன் பிறகு பத்திரிக்கைகளுக்கு வரிசையாக அனுப்பத் தொடங்குவாராம். புதிதாக எழுத வருபவர்களுக்கு இது அற்புதமான ஐடியா. ஒரு கதையோ, கவிதையோ எழுதி முடித்தவுடன் அனுப்பி பிரசுரம் செய்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் மூன்று நான்கு மாதங்களுக்கு எதைப் பற்றியும் யோசிக்காமல் எழுதிக் குவித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு மாதங்களுக்கு வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டேயிருக்கலாம். எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் நம்முடைய பெயர் இருக்கிறது என்பது இளம் எழுத்தாளனுக்கு மிகச் சிறந்த கவனத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும். ‘யாரு புதுசா?’ என்று கேட்க வைத்துவிடலாம்.

இந்த இரண்டு விஷயங்களும் சாத்தியமாகிவிட்டால் பதிப்பகங்களை அணுகலாம். நம்முடைய பெயர் ஓரளவு வெளியே தெரியத் துவங்கியிருந்தால் பதிப்பகங்களை அணுகுவது எளிதான காரியம். ஆனால் அதைவிடவும் சிறந்த வழி self publishing. இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகை இருந்தாலும் கூட புத்தகத்தை அச்சிட்டுவிடலாம். ஆனால் முதல் புத்தகத்தையே  சுயமாக வெளியிடுவதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. விற்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். நாம் சென்னையில் வசித்தால் சென்னையில் ஒன்றிரண்டு கடைகளில் வைக்கலாம். மதுரையிலும் ஈரோட்டிலும் புத்தகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். என்னதான் ஆன்லைன் விற்பனை என்பதையெல்லாம் சாத்தியப்படுத்தினாலும் புத்தகக் கடைகளிலும் புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கச் செய்வதைப் போன்று இருக்காது. மாற்று உபாயமாக ஒரு புத்தக விற்பனையாளரைப் பிடித்து அவரிடம் விற்பனை உரிமையைக் கொடுத்துவிடலாம்தான். ஆனால் விற்பனை தொகையில் நாற்பது சதவீதம் அவரைத்தான் சேரும். நூறு ரூபாயில் ஒரு புத்தகத்தை அச்சிட்டு அது ஆயிரம் பிரதிகள் விற்றால் நாற்பதாயிரம் ரூபாய் விற்பனையாளருக்கு. அதிகமான தொகைதான். ஆனால் வேறு வழியில்லை.

மற்றபடி புத்தகத்தை அச்சிடுவது பெரிய காரியமில்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அட்டை வடிவமைப்பிலிருந்து, பிழை திருத்தம் வரைக்கும் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுத்து அதை சரியான வடிவமைப்பாளருக்குக் கொடுத்து ஒரு பக்கம் அட்டை வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டால் இன்னொரு பக்கம் புத்தக வடிவமைப்பாளரிடம் சொல்லி தேவையான font உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அந்த வேலையையும் முடிக்க வேண்டும். பதினைந்து நாட்களில் இதையெல்லாம் முடித்து அச்சகத்தில் கொடுத்துவிடலாம். எந்த மாதிரியான தாளில் அச்சிட வேண்டும் என்பதைப் பற்றி மேலோட்டமான புரிதல் இருந்தால் போதும் அல்லது ஒரு புத்தகத்தை சாம்பிளாக எடுத்துக் கொண்டு மேற்சொன்ன ஒவ்வொருவரிடமும் ‘எனக்கு இதே மாதிரி டிசைன் செஞ்சு கொடுங்க’ என்று கேட்டு வேலையைச் சுலபமாக்கிக் கொள்ளலாம். ஜீவகரிகாலன் மாதிரியான ஆட்கள் உதவிக்கு இருந்தால் பாதி வேலை குறைந்துவிடும். 

புத்தகத்தை அச்சிடுவது என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மாதிரி. சிரமம்தான் என்றாலும் போகிற போக்கில் நடந்துவிடும். ஆனால் அதைப் பரவலாக்குவதும் அடுத்தவர்கள் முகம் சுழிக்காதவாறு மார்கெட்டிங் செய்வதும் குழந்தையை வளர்ப்பது மாதிரி. அதில்தான் புத்தகத்தின் வெற்றி இருக்கிறது. பிற மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை விற்கிறார்கள். தமிழில் அதெல்லாம் சாத்தியமில்லை என்றும் அறிமுக அல்லது இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் முந்நூறு பிரதிகள் விற்பதே பெரிய காரியம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது ஆயிரம் பிரதிகளை விற்றுவிட முடிகிறது. ஆனால் ஆயிரங்களைத் தாண்டுவதுதான் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் விற்பனை நெட்வொர்க் இல்லாததுதான். அதுதான் சிறிய பதிப்பகங்களுக்கும் சுயமாக புத்தகத்தை வெளியிடும் எழுத்தாளர்களுக்கும் இருக்கக் கூடிய மிகப் பெரிய சவால்.

சிறிய பதிப்பகங்கள் அல்லது சுயமாக புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இருக்கக் கூடிய இத்தகைய சாதக பாதகங்களை விவாதிப்பதற்காக Publishing next நிகழ்வுக்கு அழைத்திருக்கிறார்கள்.


தேசிய அளவில் பதிப்பகங்கள் சந்திக்கக் கூடிய சவால்கள், அவற்றுக்கு முன்பாக இருக்கக் கூடிய வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை பற்றி விரிவாக புரிந்து கொள்வதற்கு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் கருத்தரங்கு இது. இந்த ஆண்டு கோவாவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பெருந்தலைகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். 

என்னை எந்த நம்பிக்கையில் அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. காலச்சுவடு கண்ணன்தான் என் பெயரைப் பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு என் மீது ஏதோவொரு நம்பிக்கையிருக்கிறது. அவரும் நிகழ்வில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொள்கிறார். காந்தி கண்ணதாசனும் கலந்து கொள்கிறார். தமிழிலிருந்து வேறு யாரும் கலந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. சனிக்கிழமை மாலையில் நடைபெறும் கலந்துரையாடலில் க்ராஸ்வேர்ட் புத்தகக் கடைகளின் முன்னாள் chief operating officer உட்பட பேசுகிறார்கள். அதில்தான் என்னையும் பேசச் சொல்லியிருக்கிறார்கள். வேட்டி சட்டை அணிந்து சென்றால் வேறு மாதிரி பார்ப்பார்களோ என்று யோசனையாக இருந்தது. எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். நல்ல கதர் சட்டையும் வேட்டியுமாக எடுத்து வைத்திருக்கிறேன். 

நிகழ்வில் கலந்துவிட்டு வந்து கருத்தரங்கு வழியாகக் கிடைத்த அனுபவங்களையும், புரிதல்களையும் நான் என்ன பேசினேன் என்பதையும் விலாவாரியாகச் சொல்கிறேன்.