அறக்கட்டளை வழியாகச் செய்யும் செயல்கள் குறித்து பெருமையாக நினைக்கிறீர்களா அல்லது எப்பொழுதாவது நினைத்ததுண்டா?
இல்லாமல் என்ன? வெளியில் காட்டிக் கொண்டதில்லை.
‘இங்கு பிறப்பெடுக்கும் எல்லோருக்குமே சில கடமைகள் இருக்கின்றன. அதை சரியாகச் செய்து திருப்தியடைந்தால் செய்தால் போதும்’ என்று அவ்வப்போது தோன்றும். திருப்தியோடு நின்றுவிட்டால் மகான். ஆனால் எல்லோரும் மகான்கள் இல்லை அல்லவா? சாமானியர்கள் திருப்தியோடு நில்லாமல் நீட்சியடைவார்கள். அந்த நீட்சிதான் பெருமை. நான் சாமானியன்.
இந்த வயதுக்குரிய சிறுமைத்தனம், சுயபெருமை, பொறாமை என எல்லாமும் கலந்த ஒருவனாகத்தான் இருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் சிறுகச் சிறுக விட்டொழிக்க வேண்டும் என்கிற conscious ஆன புரிதல் இருக்கிறது என்பதை மட்டும்தான் பாஸிட்டிவாகச் சொல்லிக் கொள்ள முடியும். இப்பொழுது செய்து கொண்டிருக்கும் வேலைகள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கும் கடமை என்றுதான் நம்புகிறேன். ஆனால் ‘இது பெருமைப்படத்தக்க ஒன்றுமில்லாத வெறும் கடமை’ என்ற இடத்தை முழுமையாக அடைவதற்கான பக்குவம் இன்னமும் கைகூடவில்லை.
எண்ணம், செயல், சொல் என்று முடிந்தவரை மாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாது.
கடவுள் மீதான நம்பிக்கை இருக்கிறதா?
இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டிச் செல்வதற்கு ஒரு பற்றுக் கோல் தேவையானதாக இருக்கிறது. அந்தப் பற்றுக் கோல் கடவுள் நம்பிக்கையாக இருக்கிறது.
சந்தோஷமான செய்தி வந்தாலும் அல்லது துக்கமான செய்தி வந்தாலும் இஷ்ட தெய்வத்தின் சிலையில் இருக்கும் கண்களை மனதுக்குள் கொண்டு வந்து ஒரு நன்றியோ அல்லது இந்தத் துக்கத்தைத் தாண்டும் வலுவையோ தரும்படி வேண்டிக் கொள்வேன். அதுவொரு ஆசுவாசம்.
ஏன் மனிதர்கள் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வளவு சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்? தங்களைப் போலவே ஏன் மற்றவர்களை நினைப்பதில்லை?
உலகம் அதிவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தேவைகளுக்கேற்ற சம்பாத்தியம் போதுமானது என்கிற மனநிலையை நாம் தாண்டி வந்து பல காலம் ஆகிவிட்டது. தேவைக்கு மிஞ்சிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வோர் கலாச்சாரத்தில் இருக்கிறோம். இந்தச் சூழலில் நம்முடைய சம்பாத்தியம், நம்முடைய சேமிப்பு என்பனவற்றில்தான் கவனமிருக்கிறது. இதில் அடுத்தவர்களைப் பற்றி எங்கே யோசிப்பது என்று வழமையான பதிலைச் சொல்லலாம்தான்.
ஆனால் ஒன்று-
எல்லாக்காலத்திலும் எல்லாவிதமான மனிதர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இப்பொழுது ஊடகங்களின் பெருக்கத்தின் காரணமாக தம்மை பிரஸ்தாபிக்கும் மனிதர்களைத்தான் அதிகமும் எதிர்கொள்கிறோம். சுயநலமிகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதனால் நம்மைச் சுற்றிலும் அத்தனை பேரும் மோசமானவர்கள் என நம்புகிறோம். அப்படியில்லை. நல்லவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ‘அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக் கூடாது’ என்று கருதும் மனிதர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை அல்லது சுயபிரஸ்தாபிகளின் குரல் அவர்களின் இருப்பை இருட்டடிப்பு செய்துவிடுகிறது. அவ்வளவுதான்.
***
இந்த மூன்று கேள்விகளையும் ஸ்கிட்ஸாய்ட் ஸ்ரீனிவாசன் அனுப்பியிருந்தார். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகவும் ஒளிவு மறைவில்லாமலும் பேச வேண்டும் என்பதுதான் இந்தக் கேள்வியும் பதிலும் பகுதியின் நோக்கம். இந்த அடிப்படையான நேர்மையை கடைபிடிக்க முடிகிற வரைக்கும் தப்பித்துவிட்டதாக அர்த்தம்.
இன்றைய மற்றொரு பதிவு பிச்சை
இன்றைய மற்றொரு பதிவு பிச்சை
4 எதிர் சப்தங்கள்:
like the answer for ques no1. its genuine .. :-)
//ஆனால் எல்லாவற்றையும் சிறுகச் சிறுக விட்டொழிக்க வேண்டும் என்கிற conscious ஆன புரிதல் இருக்கிறது என்பதை மட்டும்தான் பாஸிட்டிவாகச் சொல்லிக் கொள்ள முடியும்.//
கரு பிடித்த கனவு துரு பிடிக்காமல் இருக்கட்டும்.
really good effort.. pls keep it up..
one more aspect is the humane approach to what is observed which is underlying in all your activities
regards-vishwanathan
Post a Comment