Aug 26, 2015

கண்களைத் திற

கரட்டடிபாளையத்தில் ஒரு சாய்பாபா கோவில் கட்டியிருக்கிறார்கள். ஷீரடி சாய்பாபா கோவில். எங்கள் ஊரில் அவரையெல்லாம்- பாபாவைத்தான் - சில வருடங்களுக்கு முன்பு வரை யாருக்குமே தெரியாது. ஒரு காலத்தில் பங்காருவும் இப்படித்தான் இருந்தார். இருபது வருடங்களுக்கு முன்பாக எனக்குத் தெரிந்து சக்திகுமார் என்ற ஒரே ஒரு பையன் தான் பங்காரு அடிகளாரின் பக்தன். ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று அவ்வப்பொழுது சிவப்புத் துண்டை அணிந்து வந்து பங்காருவின் படத்தைக் கொடுப்பான். என்னைப் போன்ற சில பொறுக்கிப்பையன்கள் அதைக் கிழித்து கீழே போட்டு மேலே அமர்ந்தது ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது அதைச் செய்தால் உயிரோடு கொளுத்திவிடுவார்கள் என்று நினைக்கிறேன். சென்ற வாரம் ஒரு ஊர்வலம் நடந்தது. ஆதிபராசக்திக்காரர்கள்தான். பெருங்கூட்டம். சாரை சாரையாகச் சென்று கொண்டிருந்தார்கள். எங்கள் ஊரில் இவ்வளவு சிவப்பாடைக்காரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை.

எனக்கு எப்பொழுதுமே ஒரு விபரீத ஆசை உண்டு. திமுகவின் கூட்டத்திற்குள் நுழைந்து கருணாநிதி ஒழிக என்றோ அதிமுகவின் கூட்டத்தில் நுழைந்து ஜெயலலிதா ஒழிக என்றோ கத்திப் பார்க்க வேண்டும். ஆனால் அடி வாங்குகிற அளவுக்கு தெம்பு இல்லை என்பதால் நமக்கு ஆகாதவன் ஒருவனை கூடவே அழைத்துச் சென்று எல்லோரும் திரும்பிப் பார்க்கும் போது அருகில் நிற்பவன் மீது முதல் அடியை நாம் போட்டுவிட வேண்டும். பிறகு நாம் தப்பித்துவிடலாம். இதைச் சொல்லிவிட்டு ‘இந்த பங்காரு கூட்டத்தில் கத்திப் பார்க்கட்டுமா?’ என்று அம்மாவிடம் கேட்டேன். அவருக்கு ஏற்கனவே என் மீது அவநம்பிக்கை. ‘ஆள்தான் வளர்ந்திருக்கான்...ஒரு பக்குவம் இல்லை...பைத்தியகாரன்’ என்பார். பதறத் தொடங்கிவிட்டார். இப்படியெல்லாம் ஆசைப்படுவேனே தவிர தைரியம் இல்லை. 

சில வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் புட்டப்பர்த்தி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு கொட்டியது. பள்ளியின் மதிய உணவு இடைவேளையில் பக்திப் பழங்களாக மாறி நாங்கள் ஒரு பெருங்கூட்டம் சென்றிருந்தோம். அவர்கள் கொடுத்த திருநீறை பக்திபூர்வமாக நெற்றியில் பூசிவிட்டு திரும்பியிருந்தோம். ஒரே வாரம்தான். பகுத்தறிவுக்கழகமோ அல்லது திகவோ தெரியவில்லை- நாய் படத்திலிருந்து திருநீறு கொட்டும்படி செய்து வீதி வீதியாகச் சென்றார்கள். அதன் பிறகு புட்டப்பர்த்தியாரை யாரும் பெரிய அளவில் ப்ரோமோட் செய்யவில்லை. எங்கள் ஊரைப் பொறுத்தவரை பங்காருவோடு போட்டியிட இயலாமல் அவர் ஒதுங்கிக் கொண்டார். யாருமே இல்லாத க்ரவுண்டில் ஒருவரே கோல் அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? ஷீரடி பாபாவைக் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள்.

‘ஷீரடி பாபாவுக்கு கூட்டம் சேர்ந்துடக் கூடாதுன்னுதான் பங்காரு கோஷ்டி ஊர்வலம் நடத்துச்சு’ என்று ஊர்க்காரர் ஒருவர் சொன்னார். 

இருந்தாலும் போட்டியென்று வந்தாகிவிட்டது. விட முடியுமா? உள்ளூர்க்காரர் ஒருவர் இடத்தை வாங்கி அவரே பாபா கோவிலையும் கட்டிவிட்டார். பிரமாண்டமாக இருக்கிறது என்று சிலாகிக்கிறார்கள். கும்பாபிஷேகம் மண்டல பூஜையெல்லாம் நடந்தது. ஆனால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை போலிருக்கிறது. பெருஞ்செலவு செய்து தியேட்டரைக் கட்டிவிட்டு கூட்டமே வரவில்லையென்றால் எப்படி? நல்ல படமாக ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் பாபாவின் கண்களைத் திறக்கச் செய்துவிட்டார்கள். பிள்ளையார் பால் குடித்த மாதிரிதான். நாலாப்பக்கமும் இருந்து ஆட்கள் குவியத் தொடங்கியிருக்கிறார்கள். வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்தார்களாம். எங்கள் பக்கத்துவீட்டு அக்காவெல்லாம் போய் பார்த்துவிட்டு வந்து ‘ஆமாங்கண்ணு..நானே பார்த்தேனே...கண்ணு அந்தக் கோட்டுக்கும் இந்தக் கோட்டுக்கும் போய்ட்டே இருக்குது’ என்றார். 

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது பாபா கண்களை ஓட்டுவதைப் பார்க்க ஆசையாகச் சென்றிருந்தேன். கண்களுக்குப் பின்னால் வைத்திருந்த மோட்டாரில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது. ‘தினமுமா கண்ணைத் திறப்பாரு?’ என்று கேட்டுத் துரத்தியடித்துவிட்டார்கள். இப்பொழுது கோவில்காரர் கல்லா கட்டுகிறாரா என்று தெரியவில்லை. அடுத்த முறை சென்றால் விசாரிக்க வேண்டும். எனக்கு ஷீரடி பாபா மீது பெரிய நம்பிக்கையில்லையென்றாலும் விமர்சனம் இல்லை. அவரைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது என்பதும் ஒரு காரணம். ஆனால் அவர் கண்ணைத் திறக்கிறார் வாயை அசைக்கிறார் என்றெல்லாம் கப்ஷா அடித்து அடுத்தவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதுதான் அலர்ஜியாக இருக்கிறது. 

எங்கள் ஊரில் ஒருவருக்கு தீராத கழுத்துவலி. பார்க்காத வைத்தியமில்லை. தாளவாடி மலைப்பகுதியில் ஒரு பாபாவின் பக்தர் இருக்கிறாராம். குப்புற படுக்க வைத்து கழுத்து மீது எலுமிச்சையை வைத்து ஒரே போடு போட்டாராம். எலுமிச்சை துண்டாகப் போய் விழுந்திருக்கிறது. ‘அதுக்கப்புறம் துளி வலி இல்ல..தெரியுமா?’ என்றார். நல்லவேளையாகத் தப்பித்துவிட்டார். ஏமாந்து அரிவாள் சற்று ஆழமாக இறங்கியிருந்தால் கடைசி வலியை மட்டும்தான் உணர்ந்திருப்பார். ஆங்காங்கே இப்படி ஆட்கள் இருக்கிறார்கள். 

பெங்களூரில் கூட ஒரு பாபா பக்தர் இருக்கிறார். தொண்ணூறு வயதுக்காரர் என்று அவரது படத்தைக் காட்டினார்கள். அப்படித் தெரியவில்லை. எழுபது வயது என்றுதான் கணக்குப் போடுவோம். பதின்மூன்று வருடங்கள் இமயமலையில் வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்து வந்தாராம். ஞானயோகி, தவயோகி என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்புவதாகத் தலையை ஆட்டிக் கொண்டேன். நித்யானந்தா சில வருடங்களுக்கு முன்பாக ஒரு மேடையில் இந்த தேசத்தை வெறும் காலால் வடக்கும் தெற்குமாக மேற்கும் கிழக்குமாக பல முறை அளந்ததாக அளந்தார். இப்படித்தான். மாட்டிக் கொள்ளாத வரைக்கும் எல்லாமுமே நம்பும்படிதான் இருக்கின்றன.

எல்லோரையுமே சாதாரணமாக விமர்சித்துவிட முடியாது. ஈரோட்டுக்காரர் ஒருவர் ஆன்மிக பயணமாக நடக்கிறார். சொத்து அத்தனையையும் விற்றுவிட்டார். ஏதோ ஆசிரமத்துக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தன்னந்தனியாக. கன்னியாகுமரியில் ஆரம்பித்து கேரளா மஹாராஷ்டிரா வழியாக குஜராத் இமயமலை என்று அலைந்து வடகிழக்கு மேற்கு வங்கம் ஒடிசா வழியாகத் தமிழ்நாட்டுக்கு வரப் போகிறார். அத்தனையும் கால்நடைதான். பிச்சையெடுத்துதான் உண்கிறார். கிடைக்கிற உணவை உண்கிறார். ஒரேயொருவரிடம் மட்டும் அவ்வப்போது தொடர்பில் இருக்கிறார். அவரைப் பற்றி முழுமையாகவும் தனியாகவும் எழுத வேண்டும். வெறும் தேடல் மட்டும்தான் அவருடைய நோக்கம். தனது பயணத்தை ஆன்மிகப் பயணம் என்று கருதுகிறார். 

இப்படி யாராவது சொற்பமாக இருக்கும் இதே சூழலில்தான் பாபாவை கண்களைத் திறக்கச் செய்தும் நித்யானந்தாவை ஜன்னலைத் திறக்கச் செய்தும் திருட்டுப்பயல்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

11 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//திருட்டுப்பயல்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்//
கள்ள நோட்டு ன்னாதான் வாங்கி கொள்ள யோசிப்பார்கள்.அதே நேரம் திருட்டுப்பய பணம் என்றாலும் சந்தையில் செல்லுபடி ஆகும்.

TechTamil Karthik said...

எது எந்த பாபானு குழம்பி விட்டேன்... படம் போட்டு கதை சொல்லுங்கள் :)

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

சில அதீதங்கள் நமக்கு சொல்வது ஒரே விசயம்தான் கண்ணைத்திறந்து புத்தியில் பார்ப்பவர்களுக்கு எல்லாமே சாமி !

kamalakkannan said...

பாபாவை எதிர்க்க சரியான ஆள் ராமதாஸ்தான்

Anonymous said...

அவ்வப்போது இது மாதிரி புனிதர்களைப் பற்றி (ஷிர்டிபாபா, சத்யசாயி பாபா) முழுமையாக ஆராயாமல் யாராவது எதையாவது சொல்வதை வைத்து எழுதி உங்கள் அறிவின் போதாமையை, அரைவேக்காட்டுத்தனத்தை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.அது ஏனோ?

Thulasidharan V Thillaiakathu said...

திருட்டுப் பயல்கள் நிறையவே இருக்கின்றார்கள்! முட்டாள் ஜனங்களும் நிறையவே! முட்டாள்கள் இருக்கும் வரை திருடன்களுக்குக் கொண்டாட்டம்தான்....

Sitalakshmi N said...

To be very honest, I didnt like this post of yours. Might be the first post of yours I didnt like.
Might be because I believe in Shridi Baba. I am not sure of the other "pakthi" organizations. But, I couldnt take the part of criticizing Baba. Avar perai solli, aasaamikal kaasu paarkkalaam. aana... avarkitta oru arul irukku... avaroda followers ellaarume muttaal-nnu solrathai ennaala oththukka mudiyala.

Sita

Vinoth Subramanian said...

I ask Baba to open their eyes!!!!

Uma said...

அயற்சியாக உள்ளது.பங்காரு&பாபா வோட நிறுத்திட்டீங்க.. இங்கே ஜீசஸ் பெயரை பயன்படுத்தியும் பெரிய வியாபாரம் நடக்கிறதே..(eventhough I'm a Christian, unable to tolerate all these)

gopinath said...

Mani sir.. what happened? Its been 10 days since your last post.. is everything al
right?

dhana said...

Anna..
Daily um Gmail inbox evlo thadava check pandreno, avlo thadava namma blog page um open pandren.
But U r not posting anything, since last 2 weeks.
romba yemathatheenganna..
Awaiting for ur posts.
Dhanapal M