Aug 7, 2015

பிச்சை

சில நாட்களுக்கு முன்பாக பெங்களூர் சோனிவேர்ல்ட் நிறுத்தத்தில் ஒரு பெண்மணி குழந்தையை தோளில் படுக்க வைத்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தாள். குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. பெங்களூரில் இது வாடிக்கையான காட்சிதான். இதுவொரு வருமானம் கொழிக்கும் தொழில். அத்தனை பேரும் தங்களுடைய குழந்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியாது. இருநூறிலிருந்து முந்நூறு ரூபாய் கொடுத்தால் குழந்தைகள் வாடகைக்கு கிடைக்கிறார்கள். குடிசைப்பகுதிகளில் இந்தக் குழந்தைகள் வாடகைக்கு கிடைப்பதாகச் சொல்லியிருந்தார்கள். நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் குடிசைவாழ் மக்கள் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று நம்புகிற பொதுப்புத்தியின் வெளிப்பாடுதான் அந்த நம்பிக்கை. குடிசைகளிலிருந்து குழந்தைகளை இந்தப் பிச்சைக்காரர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றாலும் அது one of the source. அவ்வளவுதான்.

ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாயை வாடகையாகக் கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் குழந்தையின் வழியாக எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம். கடத்தப்படும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள் என பல வகைகளிலும் தருவிக்கப்படும் குழந்தைகள் பிச்சையெடுத்தலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெங்களூரில் இத்தகைய பிச்சையெடுக்கும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக செயல்பட்டு வரும் ஒரு ஆர்வலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். அந்த ஆர்வலர் மைசூரைச் சார்ந்தவர். இப்பொழுது முழு நேரமாக இந்த வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார். கருத்தரங்கு முடிந்து தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசிய போது சில அநாதை விடுதிகளும் கூட குழந்தைகளை வாடகைக்கு விடுவதாக அவர் சொன்ன போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் அது உண்மைதான். தன்னார்வ நிறுவனங்கள் என்ற பெயரில் இங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் சகட்டுமேனிக்கு இருக்கிறார்கள். 

நடக்க முடியாத குழந்தைகளுக்கு தூக்க மருந்தைக் கொடுத்து தோளில் போட்டு தூங்க வைத்துவிடுகிறார்கள். வெயிலில் காய்ந்தபடியே ‘குழந்தைக்கு பால் வாங்கணும்’ என்று வண்டிக்காரர்களிடம் பணம் கேட்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரைக்கும் அந்தக் குழந்தை மயக்கத்திலேயே கிடக்கிறது. தூக்கமருந்துக்கு அளவு முறையெல்லாம் எதுவும் கிடையாது. கைக்கு வந்த அளவு கொடுக்க வேண்டியதுதான். ஓரளவு நடக்க முடிகிற குழந்தைகள் அவர்களாகவே வண்டிக்காரர்களிடம் பிச்சை கேட்கிறார்கள். 

1098 என்கிற எண் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். குழந்தைகள் பாதுகாப்புக்கான எண். குழந்தைகள் சித்ரவதைப்படுவதை நேரில் பார்க்கும் போது- குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க பணிக்கப்பட்ட குழந்தைகள் என யாராக இருந்தாலும் சரி- இந்த எண்ணுக்கு அழைத்துச் சொல்லலாம். பிரசித்தி பெற்ற எண் தான். ஆனால் பல சமயங்களில் தவறான தகவல்களுடன்தான் அழைப்புகள் வருகின்றன என்பதாலோ என்னவோ பதில் சொல்வதில்லை. 

அன்றைய தினம் சோனி வேர்ல்ட் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது அழைத்தேன். 

‘ஒரு பொண்ணு பிச்சை எடுத்துட்டு இருக்கா..அவ கையில் இருக்கும் குழந்தைக்கும் அவளுக்கும் சம்பந்தமேயில்லை’ என்றேன். 

இடம் உள்ளிட்ட விவரங்களை எதிர்முனையிலிருந்த பெண்மணி வாங்கிக் கொண்டு ‘நீங்க அங்கேயே நிற்க முடியுமா? போலீஸை அனுப்பி வைக்கிறோம்’ என்றார். 

ஏற்கனவே மணி பத்தரை ஆகியிருந்தது. ‘ஆபிஸூக்கு லேட் ஆச்சே’ என்றேன். அவருடைய உற்சாகம் வடிந்து போனது.  

‘அப்போ எங்களால எதுவும் செய்ய முடியாது’ என்றார்.

‘இன்னும் எவ்வளவு நேரத்தில் போலீஸ் வரும்?’ - கேட்டேன்.

‘கரெக்டா சொல்ல முடியாது சார்..ஆனா முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் அனுப்பி வைக்கப் பார்க்கிறேன்’ என்றார். சரி என்று சொல்லிவிட்டு பைக்கை ஓரமாக நிறுத்தியிருந்தேன். 

சிக்னலில் பிச்சையெடுப்பவர்களின் உடல்மொழி அலாதியானது. இப்பொழுதெல்லாம் நடக்கவே முடியாதது போல நடிப்பவர்களை நிறையக் காண முடிகிறது. அழுக்கேறிய வெள்ளைத் துணி, கையில் ஊன்றுகோலுடன் மூக்குக் கண்ணாடியும் அணிந்திருக்கிறார்கள். இதுதான் அவகளின் யூனிபார்ம் போலிருக்கிறது. சிவப்பு விழுந்து வண்டிகள் நின்றவுடன் நடுங்கத் தொடங்குவார்கள். கைகள் உதறும். பிச்சைக்காக நடுங்கும் கையை நீட்டுவார்கள். சிவப்பு பச்சையாக மாறியவுடன் உதறல் மெல்ல மெல்ல நின்று போகும். அடுத்த சிவப்பு விழும் வரைக்கும் இயல்பாக இருப்பார்கள். அதே போல நிறை மாத வயிற்றுடன் சிவப்பு விழுந்தவுடன் அழத் தொடங்கும் பெண்மணிகள் பச்சைக்கு மாறி வாகனங்கள் விரையத் தொடங்கும் போது அழுகையை நிறுத்திவிட்டு இயல்புக்கு வந்திருப்பார்கள். சிக்னலுக்கு ஏற்ப உதறுவதும் அழுவதுமாக நடித்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பார்த்து எந்தச் சமயத்திலும் பரிதாபம் வருவதில்லை. சோம்பேறித்தனத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் உடலில் எந்தக் குறைபாடும் இல்லாத போதும் பிச்சை எடுப்பது என்பது. இந்த சோம்பேறித்தனத்தில் அடுத்தவர்களின் பரிதாபத்தை ஈர்க்கும் டெக்னிக்தான் நடுங்கும் உடலும், பிதுங்கிய வயிறும், தோளில் தூங்கும் குழந்தையும்.

காவலர்கள் வந்து சேர்வதாகவே தெரியவில்லை. மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. இனியும் காத்திருக்க முடியாது. கிளம்பிச் சென்றுவிட்டேன். அந்தப் பெண்மணி ‘காவலர் சோனி வேர்ல்ட் சிக்னலுக்கு வந்தவுடன் உங்களை அழைப்பார்’ என்று சொல்லியிருந்தார். ஆனால் மாலை வரைக்கும் எந்த அழைப்பும் வரவில்லை. ஒருவேளை அவர்கள் மறந்திருக்கக் கூடும். அடுத்தடுத்த நாட்களுக்கு அந்த இடத்தைத் தாண்டும் போதெல்லாம் அந்தப் பெண்மணி குழந்தையுடன் அந்த இடத்திலேயே இருக்கிறாளா என்று கண்கள் துழாவும். ஆனால் இடத்தை மாற்றியிருந்தார்கள். 

மீண்டும் 1098க்கு அழைக்கவே தோன்றவில்லை. அவர்களின் மீதான நம்பிக்கை குறைந்திருந்தது. ஆனால் இப்படியான புகார்களைத் தொடர்ந்து சேகரித்திருக்கிறார்கள். அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் போலிருக்கிறது. கர்நாடக அரசு ஒரு அட்டகாசமான காரியத்தைச் செய்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 190 குழந்தைகளை மீட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் ஸ்மைல் என்று பெயர். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். எந்தெந்த இடங்களில் பிச்சையெடுக்கிறார்கள், குழந்தைகளை ஈடுபடுத்துகிறார்களா உள்ளிட்டவற்றைக் கண்காணித்து கணக்கெடுத்த அதே சமயத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபடப் போகும் காவலர்கள், தன்னார்வ ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயிற்சியையும் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துறை, குழந்தைகள் மேம்பாடு, காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு நேற்று காலை பத்து மணிக்கு பெங்களூர் முழுவதும் வலையை வீசியிருக்கிறார்கள். அந்த வலையில்தான் 190 குழந்தைகள் பிச்சை என்னும் குரூர அரக்கனின் கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குழந்தைகள் இப்போதைக்கு ஒரு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள். விசாரித்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கதை இருக்கும். விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூரில் மட்டும் ஒரே நாளில் இத்தனை குழந்தைகள் என்றால் இந்தியா முழுவதுமிருக்கும் நகரங்களில் எத்தனை குழந்தைகள் இப்படி வாழ்க்கையை இழந்து தவித்துக் கொண்டிருப்பார்கள்? 

பெற்றவர்களை இழந்து, சொந்த ஊரை மறந்து எங்கேயிருக்கிறோம் என்பதே தெரியாமல் கண்டவர்களிடம் கையேந்தி தர்மம் கேட்டு, வாங்கிய காசை முதலாளியிடம் கொடுத்து அவனுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் பயந்து கொசுக்கடியிலும் சாக்கடை நெடியிலும் நகரத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவை நம் வீட்டுக் குழந்தைகளைப் போன்றவர்கள்தான். பாசத்தோடும் அன்போடும் வளர்க்கப்பட்டவர்கள். 

நம் குழந்தைகள் தொலையவில்லை. அதனால் தப்பித்துவிட்டார்கள். இந்தக் குழந்தைகள் தொலைந்து போனார்கள். அதனால் நைந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலைமை எந்தக் குழந்தைக்கு வேண்டுமானாலும் நேரலாம் என்பது எவ்வளவு பெரிய அபாயம்? நினைத்துப் பார்க்கவே திகிலாக இருக்கிறது.