நிசப்தம் அறக்கட்டளையின் ஆகஸ்ட் மாத வரவு செலவுக் கணக்கு இது. இந்த மாதம் மட்டும் ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய் வரவாக வந்திருக்கிறது. (ரூ.1,90,100). ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய் உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. (ரூ. 1,09,720). இன்றைய தேதியில் வங்கிக் கணக்கில் ஏழு லட்சத்து இருபத்து இரண்டாயிரம் ரூபாய்(ரூ. 7,22,337.15) இருக்கிறது.
காசோலை எண் 44 இல் ஆரம்பித்து 58 வரை அனைத்தும் புத்தகக் கடைகளுக்கு கொடுக்கப்பட்ட தொகை.
கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஏழு கிராமப்புற அரசு மற்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கடைகளில் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மாணவர்களை வைத்துத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. கண்காட்சியின் இறுதி நாளன்று ஒவ்வொரு கடைக்காரர்களிடமிருந்த கூப்பன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகை எழுதப்பட்டு காசோலை வழங்கப்பட்டன. மொத்தம் முப்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. இன்னமும் சில கடைக்காரர்கள் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது.
தியாஸ்ரீ என்னும் குழந்தையின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய் வரிசை எண் 21 இல் இருக்கிறது.
வரிசை எண் 27 இல் இருக்கும் இரண்டாயிரம் ரூபாயானது கிருஷ்ணா என்னும் குழந்தையின் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் தொகை.
வரிசை எண் 18 இல் இருக்கும் தொகையான இருபத்து இரண்டாயிரம் ரூபாய்(ரூ.22570) தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகனின் பொறியியல் சேர்க்கைக்காக வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மாணவனின் ஒரு வருட ஃபீஸ் இது. சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
அம்மாவும் அப்பாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் புன்செய் புளியம்பட்டியைச் சார்ந்த மாணவன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. மாணவனை அழைத்துக் கொண்டு சமூக சேவகர் கமலக்கண்ணன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அம்மாவும் மகனும்தான் இருக்கிறார்கள். அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார். கூலி வேலை செய்து இதுவரைக்கும் அம்மா மகனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். இவனுக்கும் உடலில் கொஞ்சம் ஊனம் இருக்கிறது.
‘ஐடிஐ படிச்சு வேலைக்கு போயிடுறேன்’ என்று அந்த மாணவன் சொன்னான். ஏற்கனவே கண்ணப்பர் ஐடிஐயில் விசாரித்து வைத்திருந்தார்கள். ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஆகிறது. அவர்களுக்கு இது பெரிய தொகைதான். அந்தத் தொகை ஐடிஐயின் முதல்வர் பெயரில் காசோலையாக வழங்கப்பட்டது. (வரிசை எண் :30)
வரவு:
தினமணியின் செல்லுலாய்ட் சிறகுகள் தொடருக்காக எனக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.1800 ஐ அறக்கட்டளையின் பெயரில் காசோலையாக வாங்கிக் கொண்டேன். (வரிசை எண் 4) அதே போல காலச்சுவடு இதழில் எழுதிய கட்டுரைக்காக அவர்கள் வழங்கிய ஆயிரம் ரூபாயும் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்கிலேயே வாங்கியிருக்கிறேன். (வரிசை எண் 32)
குழந்தை ராகவர்ஷினியின் மறைவுக்குப் பிறகு அவளது பெற்றோர்கள் திருப்பிக் கொடுத்த தொலை ரூ.70000 (வரிசை எண் 5).
இவை தவிர மற்ற வரவுக் கணக்குகள் நன்கொடையாளர்களின் பெயரிலேயே இருக்கின்றன.
வேறு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
எப்பொழுதும் போல- அறக்கட்டளையின் பணிகளைத் தொய்வில்லாமல் தொடர உதவிக் கொண்டிருக்கும் அத்தனை நல்லவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. உங்களால் மட்டுமே ஒவ்வொரு செயலும் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
1 எதிர் சப்தங்கள்:
dear manikandan
thank u for your timely help to thechild dhiyashri
Post a Comment