Aug 10, 2015

வருங்கால அமெரிக்க ஜனாதிபதிஒரு மொட்டைப்பாறை மீது கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்தபடியே யோசித்துக் கொண்டிருந்த போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற முடிவுக்கு வர முடிந்தது. தினமும் விடிந்தால் சோற்றுப் போசியைத் தூக்கிக் கொண்டு அலுவலகத்துக்கு வருவதும் பொழுது சாய்ந்தால் வீட்டுக்குச் சென்று காலை நீட்டுவதுமாக சலிப்பாக இருக்கிறது. வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றிவிடலாம். சினிமா அல்லது அரசியல். சினிமாவில் நடிக்க தலை நிறைய முடி வேண்டும் சூர்யாவைவிட உயரம் கூடுதலாக வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கிறார்கள். வில்லன் காமெடியன் என்பதெல்லாம் வேண்டாம். மணந்தால் மகாதேவி மாதிரி நடித்தால் அனுஷ்காவுக்கு நாயகன் இல்லையே சினிமாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அனுஷ்காவுக்கு நாயகன் என்றால் ‘உன் உசரத்துக்கு காலுக்கு கீழாக ஏணியைத் தான் கட்ட வேண்டும்’ என்கிறார்கள். வேறு வழியில்லை. அடுத்த களம் அரசியல்தான்.

கேப்டனிலிருந்து தனியரசு வரைக்கும் மாநில மாநாடுகளை அறிவித்துவிட்டார்கள். வைகோவிலிருந்து ஸ்டாலின் வரைக்கும் ஆளாளுக்கு ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். அன்புமணியிலிருந்து சரத்குமார் வரைக்கும் அறிக்கைகளால் செய்தித்தாள்களை நிரப்புகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் ஒன்று கூட மிச்சமில்லை. தீக்குளித்து கவனத்தை ஈர்க்கலாம்தான். ‘எவன் சாவான்?’ என்று காத்திருக்கும் கழுகுகள் பாடைக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்து ஆளாளுக்கு ஸ்கோர் செய்து நம்மை மண்ணுக்குள் போட்டு அமுக்கிவிடுவார்கள். ‘அம்மாவுக்காக தீக்குளித்த மணிகண்டனுக்கு நிவாரண நிதி’ என்று ஆறேழு லட்சத்தைக் கொடுத்துவிட்டு விடிய விடிய ஜெயா டிவியில் மானத்தை வாங்குவார்கள். இவர்களோடு மல்லுக்கட்ட முடியாது. 

பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி ஆகிவிடலாம். உங்களுக்கு சிரிப்பு வருமே. ஆனானப்பட்ட ஆபிரகாம் லிங்கனையே பார்த்து சிரித்த உலகம். நம்மைப் பார்த்துச் சிரிக்காதா? சிரிக்கட்டும். ஆனால் இது பெரிய காரியமாகவெல்லாம் தெரியவில்லை. எதுவா? அதுதான். அமெரிக்க ஜனாதிபதி ஆவது. பத்து வருடங்களுக்கு முன்பாக மோடி பிரதமர் ஆவார் என்று எத்தனை பேர் எதிர்பார்த்தார்கள்? அவர் ஆகவில்லையா? அப்படித்தான்.

சில அதிரடித் திட்டங்கள் இருக்கின்றன.

‘ஒபாமா அரசே சாராயத்தை நிறுத்து’ என்றவொரு போராட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம். அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கலாம்.‘துருப்பிடித்த அரசு...நீதி கேட்கும் பேரணி’ என்று கலிபோர்னியாவில் மாநாட்டுப் பந்தலைப் போட்டு லாரியில் ஆட்களைக் கொண்டு வந்து இறக்கலாம். ஒவ்வொரு மாகாணத்திலும் நடைபயணம் ஆரம்பிக்கலாம். செல்போன் டவர் மீது ஏறுதல், வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஹிலாரி, ஒபாமாவின் கொடும்பாவிகளை எரித்தல், நியாயம் கேட்டு கும்பல் கும்பலாக மொட்டையடித்தல், தீச்சட்டி ஏந்துதல், மண்சோறு சாப்பிடுதல், நியூயார்க்கிலிருந்து வாஷிங்கடன் வரை மனிதச் சங்கிலி என நிறைய சாத்வீகத் திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் வரிசையாக இறக்கலாம். அமெரிக்காவே அல்லோகலப்பட வேண்டும். இப்பொழுதே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எதிராளிகள் விழித்துக் கொள்ளக் கூடும் என்பதால் ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது.

இந்த லட்சியத்தை அடைய அணி திரட்ட வேண்டும். மாணவரணி, இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, குறிப்பாக உளவு அணி, குசலம் பேசும் அணி என்று இதுவரை உலக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத சகல அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க வேண்டிய வேலை இருக்கிறது. அதற்கு முன்பாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். ஒருவனே எல்லா வேலைகளையும் செய்து ஜனாதிபதி ஆவது லேசுப்பட்ட காரியமில்லை. அதனால் ‘மிஸ்டு கால் கொடுத்தால் உறுப்பினராகலாம்’ என்று அறிவிப்பை வெளியிட வேண்டும். 

அமெரிக்காவில் குடிசைகள் ஏதேனுமிருப்பின் கணக்கெடுத்து அவர்களோடு சேர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும். குளத்து வேலை, சாலைப் பணி போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பவர்களுடன் நிழற்படங்களை எடுத்து ஏழைப் பங்காளனே வருக எங்கள் தேசத்துக்கு ஏற்றம் தருக என்று சொந்தக் காசைப் போட்டு போஸ்டர் அடிக்க வேண்டும். 

இப்படி ஆயிரமாயிரம் கனவுகளும் அதற்குச் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. இனி தூங்கப் போவதில்லை. காலில் சக்கரத்தையும் தோள்பட்டைகளில் இறக்கையையும் கட்டிக் கொண்டு சுழல வேண்டும்.

செப்டம்பர் 18 ஆம் தேதி கட்சியின் தலைமையகமான டென்வரில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தலாம். அக்டோபர் 24 வரை முழுநேர கட்சிப்பணிதான். அதுவும் அமெரிக்காவிலேயே. களப்பணியென்றால் என்னவென்று ஒபாமாவுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் கொடி, சின்னம், வேட்பாளர்கள் எல்லாம் அங்கு வைத்தே அறிவிக்கப்படும். அதன் பிறகு 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் வரைக்கும் நம்முடைய ராஜ்ஜியம்தான். தேர்தலில் வென்றபிறகு உலகமே நம்முடைய ராஜ்ஜியம்தான். 

முடியாது என்கிறவனுக்கு சிறுகுன்றும் பெரு மலைதான். முடியும் என நினைக்கிறவனுக்கு இமயமலையும் சிறு கரடுதான். நம்பிக் களமிறங்குவோம். நாளைய அமெரிக்கா நம் கையில். 

கட்சியின் உறுப்பினரிலிருந்து பொதுச்செயலாளர் வரைக்கும் அத்தனை பொறுப்புகளும் காலியாகத்தான் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அணுகலாம். 

ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும். 2016 லட்சியம்! 2020 நிச்சயம். 

குறிப்பு: நிஜமாகவே அமெரிக்கா வருகிறேன். ஐந்து வாரங்களுக்கு அங்கு தங்க வேண்டியிருக்கிறது. டென்வரில் யாராவது இருந்தால் தெரியப்படுத்தவும். ‘வீட்டிற்கு சாப்பிட வருகிறேன். அதனால் இட்லியும் சாம்பாரும் வேண்டுமென்றோ, மாலை நேரத்தில் பிராந்தி வாங்கித் தரவும்’ என்றெல்லாம் சொல்லி ஜெர்க்கினும் ஜீன்ஸ் பேண்ட்டும், செருப்புமாக வந்து நின்று கடுப்பேற்ற மாட்டேன். தோதாக இருந்தால் சந்திக்கலாம். இல்லையென்றால் சில ரகசியமான இடங்களைப் பற்றி அதிரகசியத் தகவல்களைச் சொன்னால் போதும். கமுக்கமாக பார்த்துவிட்டு வந்து அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும். அதற்குத்தான்.