Aug 5, 2015

என்ன செய்தார்கள்?

பல்லடத்திலிருந்து அவிநாசி செல்லும் வழியில் பாதையில் வஞ்சிபாளையம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரயில்வே பாலம் ஒன்று கட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தப் பாலம் வந்தவுடன் வெகு செளகரியம். முறுக்கிப் பிடித்தால் முக்கால் மணி நேரத்தில் அவிநாசியிலிருந்து பல்லடம் போய்விடலாம். இந்தக் கட்டுரையில் அந்தப் பாலம்தான் ஸ்பாட்.

சனிக்கிழமையன்று மலையேற்றத்துக்குச் சென்றிருந்தோம். பெங்களூரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் கனகப்புரா என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரிலிருந்து கொஞ்சம் உள்ளே சென்றால் துளசிதொட்டி என்ற இடம். அங்கு மூன்று மலைகள் இருக்கின்றன. பழைய மலை, தேவர் மலை அப்புறம் இன்னொன்று- என்னவோ பெயர். மறந்து போய்விட்டது. நாங்கள்ஏழு பேர் சென்றிருந்தோம். அலுவலக நண்பர்கள். வழிநடத்துவதற்கு ஒரு உள்ளூர்க்காரரைப் பிடித்துக் கொண்டோம். சிவலிங்கய்யா. ‘எப்படியும் பதினஞ்சு கிலோமீட்டர் ஆகும்..நடந்துடுவீங்களா?’ என்றார். தலையை ஆட்டிவிட்டோம். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரங்கள். ஏறி இறங்கிய போது வயிற்றுத் தசையெல்லாம் முறுக்கமேறியிருந்தன. இழுத்துப் பிடிக்கிறது. சனிக்கிழமையன்று வீடு திரும்பும் போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. நன்றாகத்தான் தூங்கினேன். அடுத்த நாளும் தூக்கம் கண்களுக்குள் மிச்சமிருந்தது. ஆனால் ஞாயிறன்று வேலைகள் பாக்கியிருந்தன. எல்லாவற்றையும் முடித்து வைக்கும் போது மாலை ஆறு மணி.

‘ஒரு மணி நேரம் தூங்கிக்கட்டும்மா?’ என்று அனுமதி வாங்கிவிட்டு வந்து தூங்கிய இருபத்தைந்தாவது நிமிடம் தொலைபேசி.

அம்மாவும் அப்பாவும் ஊருக்கு வந்திருந்தார்கள். அப்பாவின் எண்ணிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘தூங்கவே விட மாட்டாங்க போலிருக்கு’ என்று சலிப்போடுதான் எடுத்தேன். அம்மாதான் பேசினார். குரலில் அவ்வளவு தளர்ச்சி. 

‘வஞ்சிபாளையம் பாலத்து மேல அப்பாவும் நானும் வந்துட்டு இருந்த போது ஆட்டோக்காரன் அடிச்சுட்டு நிக்காம போய்ட்டான்’ என்றார். திக்கென்றிருந்தது. 

‘என்னாச்சு?’ என்றேன்.

‘ரத்தம் போய்ட்டிருக்கு’ என்றார். அவர் குரல் கம்மியிருந்தது. அவிநாசியில் தெரிந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அடிபட்டுக் கிடக்கும் அந்த இடத்தில் அந்த வினாடியில் யார் வந்து சேர்வார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த எண்களை எல்லாம் செல்போனில் விரல்கள் பிசையத் தொடங்கியிருந்தன.

பாலத்தின் மீதேறி நடுப்பாலத்தை அடைந்துவிட்டார்கள். பின்னாலேயே ஒரு ஆட்டோக்காரன் வந்திருக்கிறான். ‘இதென்ன இடிக்கிற மாதிரியே வர்றான்’ என்று அம்மா அப்பாவிடம் சொல்லி வாய் மூடுவதற்குள் இடித்துவிட்டான். ஆட்டோ என்றால் சரக்கு வாகனம். நான்கு சக்கர ஆட்டோ. பாலத்தில் வேறு யாரும் இல்லை. அடித்துத் தள்ளியவன் நிற்காமல் சென்று  கொண்டேயிருந்திருக்கிறான். அநேகமாக அவன் போதையில் இருந்திருக்கக் கூடும். எதிரில் எந்த வாகனமும் இல்லாத போது ஓரமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு கிழவனையும் கிழவியையும் இடிக்க வேண்டும் என்கிற மனநிலையை வேறு யார் பெற்றிருக்க முடியும்? ஒருவேளை தெரியாமல் இடித்திருந்தாலும் கூட விட்டுவிட்டுச் செல்ல மனம் வராது. இறங்கி அதே ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருக்கக் கூடும். 

முதலில் அம்மா விழுந்திருக்கிறார். அடுத்ததாக அப்பா. அவர்கள் இருவரையும் தாண்டி வாகனம் விழுந்திருக்கிறது. சுசுகி ஸ்விஷ் வண்டி. யாருமே இல்லாத அந்தப் பாதையில் இருவரும் சில நிமிடங்கள் ஓரமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆட்டோ தூரத்தில் புள்ளியாகி மறைந்திருக்கிறது. இருவருக்கும் நா வறண்டு போயிருக்கிறது. ‘இதோடு முடிந்துவிடுவேன்’ என்று அம்மா நினைத்ததாகச் சொன்னார். ஆட்கள் ஒவ்வொருவருவராகக் கூடியிருக்கிறார்கள். முதியவர்களை அடித்து வீசிவிட்டுச் சென்று வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும் மமதை மனமுடையவர்கள் மத்தியில்தானே சில இளகிய மனமுடையவர்களும் இருக்கிறார்கள்?

அவிநாசியிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு கார்க்காரர் இவர்களைத் தாண்டிச் சென்றிருக்கிறார். வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து இருவரையும் தனது வாகனத்தில் ஏறச் சொல்லியிருக்கிறார். வண்டியில் ரத்தம் ஆகும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ரத்தம் வடிய ஏறி இவர்கள் அமரவும் வண்டி முழுவதும் கசகசவென்றாகியிருக்கிறது. யாரையோ காப்பாற்றும் மனிதர்களையே கையெடுத்துக் கும்பிட வேண்டுமென நினைப்பேன். அம்மாவையும் அப்பாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆனால் யாரென்று தெரியவில்லை. இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திருப்பூர் ராயர்பாளையம் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் சொல்லாமல் சென்றிருக்கிறார். கடவுள் மனுஷ ரூபம்.

ஞாயிறு மாலை ஏழு மணிக்கு நானும் தம்பியும் கிளம்பினோம். காரை நான்தான் ஓட்டினேன். பயமாகத்தான் இருந்தது. இது போன்ற சம்பவங்களை விதியின் தூண்டில் என்றுதான் நினைத்துக் கொள்வேன். களைத்துக் கிடக்கும் இந்த உடலை வைத்துக் கொண்டுதான் முந்நூறு கிலோமீட்டரைத் தாண்டியாக வேண்டும். இரவு கவிய ஆரம்பித்தது. விதியின் கணிதம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கக் கூடும் என்று கவனம் கண்களுக்குள்ளேயே இருந்தது. நான்கரை மணி நேரத்தில் அவிநாசியை அடைந்திருந்தோம். அம்மாவையும் அப்பாவையும் தனித்தனி அறையில் வைத்து சிகிச்சையைத் தொடங்கியிருந்தார்கள். இருவருக்குமே கால்களில்தான் காயம். அம்மாவுக்கு பாதத்தில் பெரும்பிளவு. பதினைந்து தையல்கள் போட்டிருந்தார்கள். அப்பாவுக்கு நான்கைந்து தையல்கள். தொடை உரிந்திருந்தது. 

உறவினர்கள் வந்திருந்தார்கள். கடந்த நான்கு நாட்களாக இருவருமே மருத்துவமனையில் இருக்கிறார்கள். அம்மாவுக்கு சர்க்கரை நோய் என்பதால் இன்னமும் சில நாட்களுக்கு கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பார்க்க வருகிறவர்கள் ‘இதோடு முடிந்தது’ என்று சந்தோஷப்படச் சொல்கிறார்கள். எப்படி சந்தோஷப்பட முடியும்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? இன்னமும் மூன்று நான்கு மாதங்களுக்கு இப்படியே கிடக்கப் போகிறார்கள். அம்மாவுக்கு நான்கைந்து நாட்களாக அழுகையே நிற்பதில்லை. சித்தியிடம் அழுது அழுது முகம் வீங்கிப் போய் விடுகிறது. நான் உள்ளே நுழையும் போதெல்லாம் முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்.

சோமனூர், பல்லடம், கருமத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மில்கள் நான்கு சக்கர ஆட்டோக்களை வைத்திருக்கிறார்கள். ‘டிரைவரே கிடைப்பதில்லை’ என்று காரணம் சொல்லி யாரிடம் வேண்டுமானால் வண்டியைக் கொடுக்கிறார்கள். வழியெங்கும் டாஸ்மாக்கைத் திறந்து வைத்து அரசாங்கம் புண்ணியம் சேர்த்துக் கொள்கிறது. ஒரு கூட்டத்துக்கு தொழில் முக்கியம். அரசாங்கத்துக்கு வருமானம் முக்கியம். இப்படி வாசுதேவன்களும் சுப்புலட்சுமிகளும் அடிபட்டு ரத்தம் ஒழுக அநாதைகளாக சாலைகளில் கிடக்கிறார்கள். 

அப்பா எதுவுமே பேசுவதில்லை. அமைதியாகப் படுத்திருக்கிறார். அம்மாவையும் அப்பாவையும் பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. திங்கட்கிழமை அந்தப் பாலத்தைத் தாண்டும் போது வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தேன். ரத்தக் கறை இறுகிக் கிடந்தது. அம்மாவுடைய ரத்தமா அப்பாவுடைய ரத்தமா என்று தெரியவில்லை. ஆனால் என் உடலில் ஓடும் ரத்தம் அது.