ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் தேதி வாக்கில் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு விவரங்கள் பொதுவில் வைக்கப்பட்டுவிட வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் ஜூலை’2015 மாத வரவு செலவுக் கணக்கு இது.
கொடுக்கப்பட்ட தொகை:
வரிசை எண் 5 - சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அஞ்சுகம் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களை தமிழ்நாடு திருவள்ளுவர் கழகம் வழங்குகிறது. இந்த வருடம் பள்ளிக் குழந்தைகளுக்கான பாட ஏடுககள் நிசப்தம் அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்டன. தரமான ஏடுகளாக இருக்க வேண்டும் என்பதற்காக டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன் சிட்டால் காகித நிறுவனத்தில் தொடர்பு கொண்டு ஏடுகளை மொத்தமாக வாங்கினார். கிட்டதட்ட ஐநூறு ஏடுகள் வழங்கப்பட்டன. அதற்காக சிட்டாடல் காகித நிறுவனத்திற்கு வழங்கிய காசோலை ரூ. 13,240.
வரிசை எண் 12: நோட்டுப் புத்தங்கள் வாங்கிக் கொண்ட குழந்தைகளில் மிகவும் வறுமை நிலையிலிருந்த குழந்தைகள் ஐந்து பேர்களுக்கு இந்த வருடத்திற்கான பள்ளிச் சீருடைகளும் வழங்கப்பட்டன. எந்த துணிக்கடையும் காசோலையை வாங்கிக் கொள்ள தயாராக இல்லாததால் ரூ.2500க்கான காசோலை தமிழ்நாடு திருவள்ளுவர் கழகத்தின் பெயரில் வழங்கப்பட்டது. சீருடைகளும் மேற்சொன்ன நிகழ்விலேயே வழங்கப்பட்டன.
வரிசை எண் 23: நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். குழந்தை கிருஷ்ணாவின் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.2000 ரூபாய்.
வரிசை எண் 42: திருமதி. லட்சுமிக்கு கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது. நடுத்தரக் குடும்பம். கணவன் மற்றும் இரண்டு மகன்களுடன் வெளியூருக்குச் சென்று திரும்பும் போது விபத்து நிகழ்ந்தது. நான்கு பேருக்குமே நல்ல அடி. கணவர் கொஞ்ச நேரத்திலேயே இறந்துவிட இவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். உறவினர்கள் பணம் புரட்டி செலவு செய்தார்கள். கணவர் இறந்தது தெரியாமலேயே சிகிச்சையில் இருந்த லட்சுமிக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தவர் பூர்ணிமா என்னும் மாணவி. நண்பர் பிரசன்னா நிசப்தம் சார்பில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமியைச் சந்திக்கச் சென்றிருந்தார். முழுமையாக விசாரித்துவிட்டு இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அதற்கு தேவைப்படும் தொகை விவரங்களையும் அனுப்பி வைத்திருந்தார். உறவினர்கள் ஓரளவு பணத்தை புரட்டிக் கொள்ள இருபதாயிரம் ரூபாய் மட்டும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கபட்டது. காசோலை விஜயா மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. (Crossed cheque) இருந்தாலும் ஸ்டேட்மெண்ட்டில் ஏன் பெயர் வரவில்லை என்று தெரியவில்லை.
கொடுக்க வேண்டிய தொகை:
1. ஏழு அரசு பள்ளிகளுக்கு நூலகம் அமைப்பதற்கான தொகை (5000*7=35000) மாணவர்களின் போக்குவரத்துச் செலவு (1000*7=7000) ஆக மொத்தம் 42,000 இந்த வாரம் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை கோபி புத்தகக் கண்காட்சியில் கொடுத்து பள்ளி மாணவர்கள் தங்கள் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வார்கள். அந்தக் கூப்பன்களை கடைக்காரர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு அதற்குரிய தொகை வரும் சனிக்கிழமையன்று கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
2. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் ஹரிக்குமாருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.22,570க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் வங்கியிலிருந்து இன்னமும் எடுக்கப்படவில்லை.
3. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இன்னொரு தாழ்த்தப்பட்ட மாணவரான நவீந்திரனுக்கு அவருடைய ஓராண்டு விடுதிக்கட்டணத்தில் பாதித் தொகையான ரூ.35,000 இந்த வாரம் வழங்கப்படவிருக்கிறது.
வர வேண்டிய தொகை:
குழந்தை ராகவர்ஷினிக்கு கொடுக்கப்பட்ட தொகையான எழுபதாயிரத்தை அவர்கள் அனுப்பி வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். கூரியரில் அனுப்பியிருக்கிறார்கள். அநேகமாக அந்த வரைவோலை இன்று வந்துவிடக் கூடும்.
வரவு:
வரவு விவரத்தைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலானவற்றில் யார் பணம் அனுப்பியிருக்கிறார்கள் என்ற விவரம் ஸ்டேட்மெண்ட்டில் இருக்கிறது. கடைசி இரண்டு வரவுகளும் நடிகர் திரு.சாருஹாசனுடையது. குங்குமம் இதழில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் தொடருக்கான தொகையை நிசப்தம் அறக்கட்டளைக்கு அவர் அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டார் என்று இன்று காலையில் குங்குமம் அலுவலகத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள். இதுவரை திரு.சாருஹாசன் அவர்களுடன் பேசியது கூட இல்லை. இன்று அழைத்து நன்றி சொல்லிவிட வேண்டும்.
***
இன்றைய தேதியில் அறக்கட்டளையில் ரூபாய் ஆறு லட்சத்து நாற்பதோராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழு (ரூ.6,41,957.15) ரூபாய் இருக்கிறது. கோரிக்கைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிலவற்றைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. தவிர்க்கும் போது சிலர் புரிந்து கொள்கிறார்கள். சிலர் திட்டிவிட்டுச் செல்கிறார்கள். இந்த மாதம் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து கடுமையான வசையை வாங்கிக் கட்ட வேண்டியிருந்தது. அவர் பரிந்துரைத்த ஒரு கோரிக்கையை நிராகரித்ததுதான் காரணம்.
புரிந்து கொள்பவர்களுக்கு நன்றி. திட்டுபவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை.
அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் கணக்கு விவரங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
3 எதிர் சப்தங்கள்:
//இந்த மாதம் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து கடுமையான வசையை வாங்கிக் கட்ட வேண்டியிருந்தது. அவர் பரிந்துரைத்த ஒரு கோரிக்கையை நிராகரித்ததுதான் காரணம்//
மதுக்கடைகளை மூடணும் னு ஒங்க கிட்ட கோரிக்கை வச்சா எப்பிடி மணி நிறைவேற்ற முடியும்?.
உங்கள் சேவை சிலருக்காவது தூண்டுகோலாக அமையும். வாழ்த்துகள்
நற்பணி நலமாய் தொடரட்டும்...
Post a Comment