Jul 14, 2015

நீ என்ன சாதி?

ஒரு சாதியை விமர்சிக்கும் போது அந்தச் சாதி என்னவிதமான துன்பங்களை அனுபவிக்கிறது என்று புரிந்து கொண்டு எழுத வேண்டும். கொங்கு வட்டாரத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கவுண்டர்களாகத்தான் இருக்க முடியும். அது  தெரியுமா? எங்களுக்கென்று சாதிச் சங்கங்கள் இல்லையென்றால் தலித்துகள் என்று நீங்கள் தூக்கிப் பிடிக்கிறவர்கள் எங்கள் தலை மீதுதான் ஏறுவார்கள். ‘கவுண்டனை வெட்டுவோம்; கவுண்டச்சியை கட்டுவோம்’ என்கிறவர்களின் சத்தம் உங்கள் காதுகளில் விழாதது ஆச்சரியம். ஆனால் கவுண்டர்களின் சாதி வெறி உங்களுக்குத் தெரிகிறது. உங்களின் சாதியை வெளிப்படையாக அறிவித்துவிட்டு சாதியை விமர்சியுங்கள். உங்களின் நோக்கம் அப்பொழுது தெளிவாகும்.

குமரன் பழனிசாமி.

நண்பருக்கு வணக்கம்,

விமர்சனத்தை வைப்பதற்கு முன்பாக உனது சாதியைச் சொல்லிவிட்டு விமர்சனத்தைச் செய் என்று சொல்வது வியப்பாக இருக்கிறது.  

ஒரு சாதிய இயக்கத்தை விமர்சிப்பதால் இன்னொரு சாதிய இயக்கத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அத்தனை சாதிய இயக்கங்களின் மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது- பல நூறு ஆண்டுகளாக கொங்கு நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொங்கு வேளாளர் போன்ற ஆதிக்க சாதிக்கே தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சாதிய இயக்கங்கள் அவசியமாக இருக்கின்றன என கொடி உயர்த்தும் போது இத்தனை ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டிருந்த தலித்துகள் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு அவர்களுக்கும் சாதிய இயக்கங்களின் தேவை இருக்கிறது என்பதனை எப்படி மறுக்க முடியும்?

தலித்திய இயக்கங்களுக்கான தேவை அன்றும் இருந்தது. இன்னமும் இருக்கிறது. அந்தத் தேவை சமூக மற்றும் அரசியல் பூர்வமானது. கிராமப்புற தலித்துகள் தலை நிமிர்வதற்கான முதல் அடியை தலித்திய இயக்கத்தினர் எடுத்து வைத்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பற்றி பொதுவெளியில் பேசினார்கள். ஆனால் அரசியல் ஆதாயங்களும், கட்டப்பஞ்சாயத்து வழியாகக் கிடைத்த பெரும் பணமும், தாம் மட்டுமே தலித்துகளின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் அவர்களின் திசையை மாற்றத் தொடங்கின. அடிப்படையான பிரச்சினைகளைக் களைவதை விட்டுவிட்டு மிரட்டல் அரசியலைத் தொடங்கினார்கள். வாக்கு அரசியலின் பக்கமாக நகர்ந்தார்கள். ஆதிக்க சக்தியை எதிர்க்க வேண்டும் என்று களமிறங்கியவர்கள் தங்களை ஆதிக்க சக்தியாக மாற்றிக் கொள்ளும் போக்கை கையில் எடுத்தார்கள். அதுதான் துரதிர்ஷ்டம்.

தலித்திய இயக்கங்கள் ஒரு பக்கம் திசை மாறின என்றால் இன்னொரு பக்கம் ஆதிக்க சாதியினர் பதறத் தொடங்கினார்கள். ‘அவர்களிடமிருந்து எங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே சாதிய இயக்கங்களை ஆதரிக்கிறோம்’ என்பதில் முழுமையான உண்மையில்லை. இதுவரை தாம் செலுத்தி வந்த ஆதிக்கமும் அதிகாரமும் தங்கள் கண்களின் முன்னால் சிதைவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நேற்று வரை ‘சாமி சாமி’ என்று அழைத்தவன் இன்று பைக்கில் செல்கிறான். பேருந்து நிறுத்தத்தில் நம் முன்னால் சிகரெட் பிடிக்கிறான். டீக்கடையில் சரிக்கு சரியாக அமர்கிறான் என்கிற ஆண்டான் - அடிமை மனநிலை உருவாக்கும் பதற்றம்தான் முக்கியமான காரணம். அந்த பதற்றம் ஆழ்மனதில் துடிக்கிறது. கோகுல்ராஜ் தண்டவாளத்தில் கிடப்பதை நியாயப்படுத்துவதும்; ‘அவர்கள் மட்டும் சரியா?’ என்று கேட்பதும் அந்தப் பதற்றத்தின் நீட்சிதான்.

இதனால்தான் தங்களுக்கென்று சாதிய சங்கங்கள் தேவை என்று வலுவாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை வைத்துத்தான் சாதித் தலைவர்கள் கொழுத்த லாபம் சம்பாதிக்கிறார்கள். இந்தவொரு  கட்டமைப்பைத் தவறாக புரிந்து கொண்ட இளந்தாரிகள் தங்களின் மூதாதையர்கள் தாழ்த்தப்பட்டவர்களிடம் செலுத்திய ஆதிக்கத்தை தாங்களும் செலுத்த வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்காக தங்களை சாதிய உணர்வுடன் வலுவாக பிணைத்துக் கொள்கிறார்கள். பிணைப்பும் துவேஷமும்தான் பெருகுமே தவிர இனி வரும் காலத்தில் சாதிய ரீதியிலான அடக்குமுறைகள் சாத்தியமேயில்லை என்ற உண்மையை அவர்களின் மனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இயலாமையில் தங்களை ஆண்ட வம்சம் என்று பறை சாற்றிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது தங்களின் வன்மத்தைக் காட்டுகிறார்கள்.

பண்பாட்டை மீட்பது என்பதற்கும் தங்களின் அநீதி நிறைந்த பழைய அதிகாரத்தை மீட்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இங்கு நடந்து கொண்டிருப்பது பண்பாட்டு மீட்டுருவாக்கம் இல்லை. சாதிய அடக்குமுறை மீட்டுருவாக்கத்திற்கான முயற்சி. இது தவறான போக்கு மட்டுமில்லை மிக அபாயகரமான போக்கும் கூட. அவர்கள் கத்தியை எடுக்கிறார்கள் அதனால் நானும் கத்தியை எடுக்கிறேன் என்று இவர்களும், அவர்கள்தான் அரிவாளைத் தூக்கினார்கள் அதனால் நானும் தூக்குகிறேன் என்று இவர்களும் துள்ளுவது எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த குருட்டாம்போக்கிலான வேகம் ஆபத்து நிறைந்தது. யாருக்குமே பலனளிக்காத வன்ம விளையாட்டு இது. மனிதத்தை புதைத்துவிட்டு வெறும் சாதிய ஆதிக்கத்தைத் குறிக்கோளாகக் கொண்டும் நகர்ந்து கொண்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த போக்கை கடுமையாக விமர்சிக்க அந்தந்த சாதிகளுக்குள்ளிலிருந்தே குரல்கள் எழ வேண்டும். அதைத் துளியாவது என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சொல்லிவிட்டேன்.

என்னுடைய நோக்கம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

தொடர்புடைய பதிவு: கொங்கும் சாதியும்