Jul 8, 2015

வேலை வாய்ப்புகள்

கடந்த வாரத்தில் வெளியிட்டிருந்த வேலை வாய்ப்பு செய்திகளின் காரணமாக மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிந்தது. 

முக்கியமான விஷயம் ஒன்றை கவனிக்க முடிந்தது. படித்து முடிக்கும் முக்கால்வாசி பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை எப்படி அனுப்புவது என்பதே தெரிவதில்லை. எந்தக் குறிப்புமேயில்லாமல்- நிறையப் பேர் subject line கூட இல்லாமல்- தங்களின் சுயவிவரக் குறிப்பை அனுப்பி வைத்திருந்தார்கள். சுய விவரக் குறிப்புகள் என்றாலும் அவை சுய விவரக் குறிப்புகளைப் போலவே இல்லை. தகவல்கள் அரையும் குறையுமாக பல்லிளித்தன என்றால் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு எழுத்துருவில் கண்களை உறுத்தும்படி- நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மூன்று லட்சத்துக்கும் குறைவில்லாத பொறியாளர்கள் வெளி வருகிறார்கள். ஒரு வேலை வாய்ப்புச் செய்தி வந்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் போட்டியிடுகிறார்கள். இதிலிருந்துதான் மிகச் சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. நிறுவனத்தின் சார்பில் சுயவிவரக் குறிப்புகளை பெற்றுக் கொள்ளும் மனிதரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதன்தான். எந்தவிதமான குறிப்புமில்லாமல் வெறும் சுயவிவரக் குறிப்பை மட்டும் அனுப்பி வைத்தால் கடுப்பாக மாட்டாரா என்ன? நூற்றுக்கணக்கானவர்களிலிருந்து பலரைக் கழித்துக் கட்ட வேண்டுமானால் தயவு தாட்சண்யமேயில்லாமல் இப்படி மொட்டை மின்னஞ்சல்களை அனுப்புபவர்களை கழித்துக் கட்டிவிடலாம்.

மாணவர்களைக் குறை சொல்வதைவிடவும் பொறியியல் கல்லூரிகளையும் அதன் ஆசிரியர்களையும் சொல்ல வேண்டும். மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை வாங்குகிறார்கள். நான்கு வருடங்கள் மாணவர்களோடு இருக்கிறார்கள். வேலை வாங்கித் தராவிட்டால் தொலைகிறது. ஒரு மின்னஞ்சல் எப்படி அனுப்புவது என்பதைக் கூடச் சொல்லித் தரவில்லை என்றால் அதெல்லாம் என்ன கல்லூரி? நான்கு வருடத்தில் அரை நாளை ஒதுக்கியிருந்தால் போதும். சொல்லிக் கொடுத்திருக்கலாம். வெளியாட்கள் யாரும் வர வேண்டியதில்லை. ஒரு ஆசிரியரே கூடச் சொல்லித் தந்துவிடலாம். ரெஸ்யூம் தயாரிப்பது எப்படி? வேலை கேட்டு மின்னஞ்சல்களை அனுப்புவது எப்படி என்றெல்லாம் தேடினால் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் விவரங்களைத் தருகின்றன.

மாணவர்களே கூட தங்களுக்குள் ஒரு குழு அமைத்து இதையெல்லாம் தயார் செய்ய முடியும். பிரச்சினை என்னவென்றால் ஒவ்வொரு மாணவனும் தன் வகுப்பில் இருக்கும் சக மாணவனைத்தான் போட்டியாளனாகக் கருதுகிறான். உண்மையில் தன் வகுப்புத் தோழன் போட்டியாகவே இருக்க முடியாது. போட்டி வெளியில் இருக்கிறது. ஒவ்வொருவருடனும் போட்டியிடுவதற்கு லட்சக்கணக்கானவர்கள் கல்லூரிக்கு வெளியில் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டால் தனக்குத் தெரிந்ததை சக நண்பனுக்குச் சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தெரிந்ததை தானும் கற்று ஒரு படி மேலே வந்துவிடலாம்.

இந்த வாரத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு தகவல்கள் இவை-

1) புள்ளியியல் புலிகள்.

திரு.ஷோபன் தன்னுடைய அணிக்காக ஆட்களைத் தேர்வு செய்கிறார்.

MBA(Operations)/ புள்ளியியல் அல்லது பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு இருந்தாலோ அல்லது BE/ME படித்திருந்தாலோ தொடர்பு கொள்ளலாம். படிப்பு எதுவாக இருந்தாலும் புள்ளியியல் அறிவு அவசியம்.

குறைந்தபட்சம் 1-2 ஆண்டு அனுபவங்கள் அவசியம். ஐந்தாண்டு வரையிலும் அனுபவம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். SAS மற்றும் Database தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 

விருப்பமிருப்பவர்கள் shobanonline@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

2) Freshers- பெங்களூர்

பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் -

1.      Server support Engineer
2.      Network Engineer 
3. Storage support Engineer ஆகிய பணியிடங்களுக்கு 0-12 மாதங்கள் அனுபவமுள்ள ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

அநேகமாக ஷிஃப்ட்களில் வேலை செய்ய வேண்டியிருக்கும் போலிருக்கிறது. 

2015 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் swaminathan.thiruvadi@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். BE (EEE, ECE, IT மட்டும்) 10,12 மற்றும் பொறியியல் படிப்பில் 60%க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

3) Testing

காப்பீடு(Insurance) சம்பந்தமான Java Testing இல் நல்ல அனுபவமுள்ளவர்கள் வேலை மாறுவதாக இருப்பின் santhoshmvm@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.


6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//ஒவ்வொரு மாணவனும் தன் வகுப்பில் இருக்கும் சக மாணவனைத்தான் போட்டியாளனாகக் கருதுகிறான். உண்மையில் தன் வகுப்புத் தோழன் போட்டியாகவே இருக்க முடியாது. போட்டி வெளியில் இருக்கிறது. ஒவ்வொருவருடனும் போட்டியிடுவதற்கு லட்சக்கணக்கானவர்கள் கல்லூரிக்கு வெளியில் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டால் தனக்குத் தெரிந்ததை சக நண்பனுக்குச் சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தெரிந்ததை தானும் கற்று ஒரு படி மேலே வந்துவிடலாம்.//
மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் மணி.
ஆனால் உடன் பிறந்தோர் முதல் வாழ்க்கை துணை வரை அத்தனை பேரையும் போட்டியாக கருதும் மனநிலையை அல்லவா சமுதாயம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

shankar said...

The job opportunities you have listed have gmail.com as the contact email addresses. Does this mean these people are placement agencies, and not the actual employers? Personally, i would expect a person running their own company to have their own email address, not a free one like gmail. Even placement agencies should have their own, it makes them look more professional and increases the trust.

பொன்.முத்துக்குமார் said...

எல்லாவற்றுக்கும் கல்லூரிகளை குறைசொல்லவேண்டாம் மணி. ஒரு பொறியியல் பட்டப்படிப்பு படித்த 21 வயது ஆடவனுக்கு ஒரு வேலைக்கு மின்னஞ்சல் செய்யத்தெரியவில்லையென்றால் அவன் கட்டடவேலைக்கு கல் தூக்கப்போகலாம்.

ஆனந்த நடராஜன் said...

//அவன் கட்டடவேலைக்கு கல் தூக்கப்போகலாம்//
:-) சித்தாளின் ஒரு நாள் சம்பளம் 450 - 600 வரை

Vaa.Manikandan said...

சங்கர்,

முன்பு குறிப்பிட்டது போல இது ப்ரொபஷனலான விளம்பரங்கள் இல்லை. நண்பர்கள் தங்கள் நிறுவனங்களில் இருக்கும் வேலை வாய்ப்புகளை அனுப்பி வைக்கும் போது அவை பிரசுரம் செய்யப்படுகின்றன. தங்களுக்கு வரும் Resume களை தங்கள் நிறுவனத்தில் refer செய்கிறார்கள்.

நன்றி.

Anonymous said...

//அவன் கட்டடவேலைக்கு கல் தூக்கப்போகலாம்//
He will be turned down for that, definetely. So many options around to learn via online. These guys learn facebook and whatsapp and not any skills useful for the carreer.