Jul 27, 2015

திருட்டு

சனிக்கிழமையன்று ஊருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வந்திருந்தார். புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே வளாகத்தில் திருக்குறள் பேரவை சார்பில் அவரது உரை நிகழ்வதாக இருந்தது. அடிகளார் வருவதற்கு முன்பாகவே ஒரு பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். முன்பொரு காலத்தில் நன்றாக இருந்த பள்ளி அது. இப்பொழுது தலைமையாசிரியர்கள் மாறி மாறி யாரும் உருப்படியாக்கிய மாதிரி தெரியவில்லை. பழைய பெருங்காய டப்பா என்று கூடச் சொல்ல முடியாது. அதில் குறைந்தபட்சம் வாசமாவது வந்து கொண்டிருக்கும். இந்தப் பள்ளியைப் பொறுத்தவரை இப்பொழுது அதுவுமில்லை.

‘நல்லா படிக்கிற பசங்க எல்லாம் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க’ என்று சாக்கு சொல்கிறார்கள். ‘உங்க பள்ளிக்கூடம் நல்லா இருந்தா அவங்க ஏன் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போறாங்க’ என்று கேட்கலாம்தான். 

தொலையட்டும்.

வரிசையில் நன்றிருந்த பையன்கள் புத்தகக் கண்காட்சியின் வளாகத்திற்குள்ளும் வரிசைக்கிரமமாகவே சென்றார்கள். இருபத்தைந்து கடைகள்தான். உள்ளே சென்றவர்கள் அரை மணி நேரத்தில் வரிசையாகவே வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு புத்தகக் கடைக்காரரும் பின்னாலேயே ஓடி வந்தார். அவ்வளவு பதற்றம் அவர் முகத்தில். என்னவோ ஆகிவிட்டது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போதே நிற்காமல் மூச்சிரைக்க ஓடியவர் பள்ளியின் பொறுப்பாளரை நெருங்கி கிட்டத்தட்ட அழத் தொடங்கியிருந்தார்.

‘சார் ஒரு பொட்டி நிறைய புஸ்தகங்களை வெச்சிருந்தேன். இப்போ ஒரு புஸ்தகத்தையும் காணோம்’

அந்தப் பொறுப்பாளருக்கு வாயெல்லாம் பற்கள். ‘அப்படியா?’

‘ஆமா சார்...எங்க ஆளுங்க பில்லே போடலை...நான் கேஷூவலா பொட்டியைப் பார்த்தேன்..உள்ள ஒண்ணுமே இல்ல’

‘பசங்க தூக்கிட்டாங்கன்னு சொல்லுறீங்களா?’

‘வேற யாருமே உள்ள வரல..அப்படியே வந்திருந்தாலும் ஒண்ணு ரெண்டு காணாம போகும்...ஆனா இப்படி பொட்டியே காணாம போகாது’

‘நம்ம பசங்க அப்படியெல்லாம் திருட மாட்டாங்களே’ என்று பள்ளி பொறுப்பாளர் வாயிலேயே சான்றிதழ் எழுதினார்.

‘சார்...நாங்களே அரைக்காசும் ஒரு காசுமாக வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம்....கொஞ்சம் கோ-ஆபரேட் செய்யுங்க’

பள்ளியின் பொறுப்பாளர் மறுக்கவில்லை. மாணவர்களை வரிசையில் நிறுத்தினார்கள். திருடர்களை வரிசையாக நிறுத்தினால் ‘சிக்கிக் கொள்வோமோ என்னவோ’ என்கிற பயம் துளியாவது இருக்கும். ஆனால் இந்த மாணவர்கள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. பில் இல்லாத புத்தகங்களை எல்லாம் திரும்ப வாங்கினார்கள். பையன்கள் சிரித்துக் கொண்டே திரும்பத் தந்தார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கூட திருடிச் சிக்கினால் ஆசிரியர்கள் தோலை உரித்துவிடுவார்கள். ஆனால் எந்தச் சலனமும் இல்லாமல் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நான்கைந்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை அந்தப் பையன்கள் அடித்திருந்தார்கள். 

மிகச் சிறிய புத்தகக் கண்காட்சி அது. ஒரே நாளில் நான்காயிரம் ரூபாய் திருட்டு என்பது அந்தக் கடைக்காரருக்கு மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கக் கூடும். அவருடை நேரம் நன்றாக இருந்திருக்கிறது. பிடித்துவிட்டார்கள். ஒரு பையன் தெனாவெட்டாக ‘சார் இது காசு கொடுத்துத்தான் வாங்கினேன்’ என்றான். அவனிடம் வேறு புத்தகம் எதுவுமில்லை. கடைக்காரர் புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்டு ‘பில் எங்கப்பா?’ என்றார்.

‘அங்கேயே வீசிட்டேன்’

சற்று குழம்பிய கடைக்காரர் ‘சரி..இந்தப் புத்தகத்துக்கு எவ்வளவு கொடுத்த?’ என்றார்.

‘நூறு ரூபாய்’

கடைக்காரர் பள்ளியின் பொறுப்பாளரிடம் திரும்பி ‘புத்தக விலை நூற்றியருபது ரூபாய்...இவன் நூறு ரூபாய் கொடுத்தேன் என்கிறான்...கப்ஸா அடிக்கிறான் சார்’ என்றார்.

பொறுப்பாளருக்கும் தர்ம சங்கடம்தான். புத்தகத்தை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார். இப்படியாக திருட்டை மீட்கும் வைபவம் நடந்து முடிந்தது. திருடப்பட்டிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சினிமா சம்பந்தப்பட்டவை. சினிமா என்பதற்காகத் திருடினார்களா அல்லது அவைதான் திருடுவதற்கு தோதாக இருந்தது என்பதால் திருடினார்களா என்று தெரியவில்லை. ஆனால் திருட்டு நடந்திருந்தது. மாணவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டதையும் அவர்களிடமிருந்து புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதையும் அந்த வளாகத்தில் இருந்தவர்கள் நிறையப் பேர்கள் பார்த்தார்கள். ஆனால் எந்தக் கூச்சமுமில்லாமல் அந்த மாணவர்கள் எப்பொழுதும் போல சிரித்தும் கும்மாளமிட்டபடியும் இருந்தார்கள்.

ஆசிரியர்கள் கண்டிக்கவில்லை. இப்பொழுதுதான் எந்த ஆசிரியரும் கண்டிப்பதில்லையே!

படிப்பு ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் இளம் வயதில் ஒழுக்கம் என்பது அவசியமில்லையா? இளம்பிராயத்தில் எவ்வளவு ஒழுக்கத்தை புகட்ட முடியுமோ அவ்வளவு ஒழுக்கத்தை புகட்டிவிட வேண்டும். வயது கூடக் கூட லெளகீக வாழ்வின் நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவைகளின் காரணமாக ஒழுக்கம் நெகிந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது இயல்பானதும் கூட. ஆனால் ஒவ்வொரு ஒழுக்க மீறலின் போதும் துளியாவது குற்றவுணர்ச்சி அரிக்கக் கூடும் என்பதால் நம்முடைய எல்லை மீறல்ல்கள் ஓரளவு சுயகட்டுப்பாட்டோடு இருக்கும். அதற்காகத்தான் பள்ளிப்பருவத்தின் ஒழுக்க விதிகள் மிக முக்கியமானவை. அதனால்தான் மாணவர்கள் கட்டுப்பாட்டோடு வளர வேண்டும் என்பார்கள். 

இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? 

எந்தவிதமான ஒழுக்க உணர்வுமில்லாமல் இளம் சமுதாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். திருட்டும், வன்முறையும், முரட்டுத்தனமும், பித்தலாட்டமும் நிரம்பிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்- மாணவர்களை மிரட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்றெல்லாம் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்றால் தனியார் பள்ளிகளில் வேறு விதமான ஒழுக்க மீறல்கள் நிகழ்கின்றன. அரசுப் பள்ளிகள் சனிக்கிழமையன்று அல்லது அரசு விடுமுறை தினங்களின் போது வகுப்புகளை நடத்தினால் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மெமோ அனுப்பப்படும். ஆனால் தனியார் பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வகுப்பு நடத்துவார்கள். ஞாயிறன்று மாணவர்கள் சீருடையோடு சாலைகளில் நடமாடினால் யாராவது கேள்வி கேட்கிறார்கள் என்று வண்ண உடையில் வரச் சொல்கிறார்கள். எதற்காக இந்தத் திருட்டுத் தனத்தைச் செய்கிறோம் என்று மாணவர்களுக்கும் தெரியும். அப்புறம் எப்படி அவர்களிடம் ஒழுக்கம் வளரும்? மதிப்பெண்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை உருவாக்கப்படுகிறது. வளரும் போது இந்த விதிமீறல் வேறொரு வடிவம் பெற்று ‘நம் செளகரியத்துக்காக எந்த வரைமுறைகளையும் மீறலாம்’ என்கிறார்கள்.

ஒழுக்கம் என்றால் இராணுவ ஒழுங்கோடு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாணவர்களிடையே குறைந்தபட்ச நேர்மை, குறைந்தபட்ச அறவுணர்ச்சி, சக மனிதன் மீதான குறைந்த பட்ச மரியாதை, குறைந்தபட்ச உண்மை என்பனவாவது ஊட்டப்பட வேண்டும். ஆனால் இந்த உலகம் போட்டிகளால் நிரம்பியது என்ற சாக்குப் போக்கைச் சொல்லிச் சொல்லியே எல்லாவிதமான ஒழுக்க மற்றும் விதிமீறல்களைச் செய்வதற்கு நாமும் எத்தனிக்கிறோம் நம் குழந்தைகளையும் அனுமதிக்கிறோம். இவற்றை நாம் வேண்டுமென்றே செய்வதில்லை. நம்மையுமறியாமல்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்விளைவுகளை நாம் ஏற்கனவே உணரத் தொடங்கிவிட்டதைத்தான் இத்தகைய பிஞ்சுத் திருட்டுக்களும் அதைப் பற்றிய எந்த பதைபதைப்புமில்லாத சூழலும் காட்டுகின்றன.