Jul 2, 2015

தூக்கம்

ஒரு வாரம் ஆகிவிட்டது. அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டது. கரு உருவான போதிலிருந்தே பிரச்சினைதான். ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாமல் அதிகமாகிக் கொண்டிருந்தது. மாத்திரைகளாலும் மருந்துகளாலும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதிலிருந்தே விடுப்பில்தான் இருந்தாள். ஏழெட்டு வாரங்கள் பாக்கி இருக்கும் போதே குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல். வெறும் அறுநூற்றைம்பது கிராம்தான் இருந்தது. எடையும் குறைவு; மூச்சும் சீராக இல்லை என்பதால் அறுவை சிகிச்சை சரியான வழிமுறையில்லை என்று முடிவு செய்து வலி மருந்து கொடுத்திருந்தார்கள். ஒரு நாள் கழித்து குழந்தை பிறக்கும் போதே இறந்துதான் பிறந்திருக்கிறது. இன்னமும் அவள் மனம் உடைந்து கிடப்பதாகத்தான் சொன்னார்கள்.

குழந்தைகள் அப்படித்தான். கருவான கணத்திலிருந்தே நம் வாழ்க்கையின் பரிமாணங்களை மாற்றிவிடுகிறார்கள். அதுவரைக்கும் காற்றில் அலைவுறும் சிறகைப் போன்ற நமது மனம் அதன் பிறகு அவர்களை நோக்கி குவியத் தொடங்குகிறது. கனவுகள், கற்பனைகள் என எல்லாவற்றிலும் நிறைந்துவிடுகிறார்கள். சில நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது ‘மரணத்தை எப்படி எதிர்கொள்ள விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். விதவிதமான பதில்கள் வரும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. ஒருவன் முதல் ஆளாக ‘அய்யோ...என் குழந்தையை செட்டில் செய்யும் வரைக்கும் மரணம் வரக் கூடாது’ என்று சொல்ல அதைத்தான் கிட்டத்தட்ட அத்தனை பேரும் வழிமொழிந்தார்கள். ஒற்றை பதிலோடு அந்தக் கேள்வி முடிந்து போனது. குடும்பம், குழந்தை என்றிருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இதுதான் மனநிலை. குழந்தைகள் பிறப்பதிலிருந்து மனிதனின் சுயநலம் பன்மடங்காகிவிடுகிறது. தனது உலகைச் சுருக்கிக் கொள்கிறான். தன் மனைவி, தன் குடும்பம், தன் குழந்தை என்றிருந்தால் போதும் என்கிற இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. டென்மார்க் படம். A Second Chance(En Chance Til). இத்தகைய வெளிநாட்டுப் படங்கள் எப்படிக் கிடைக்கின்றன என்று சிலர் கேட்டிருந்தார்கள். பெங்களூரில் டிவிடிக்கள் கிடைக்கின்றன. தேடி வாங்க முடியாதவர்களுக்கு www.solarmovies.ws என்கிற தளம் திரைச்சுரபி. முக்கியமான அத்தனை திரைப்படங்களும் கிடைக்கின்றன. திருட்டு டிவியில் படம் பார்ப்பது மாதிரிதான். ஆனால் அர்ஜெண்டினா படங்களையும் டென்மார்க் படங்களையும் பார்ப்பதற்கு வேறு சுலபமான வழிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. அதனால் அறம், முறம் எதுவும் பார்க்காமல் இந்தத் தளத்தில் சரணடைந்துவிடுகிறேன். 

இந்தப் படத்திலும் குழந்தையின் இறப்புதான் அடிநாதம். 

இரண்டு தம்பதிகள். ஒருவன் போலீஸ்காரன். அன்பான மனைவி. ஒரு குழந்தை. இன்னொருவன் குடிகாரன். குழந்தை அழுது கொண்டிருக்கும் போது கூட மனைவிக்கு போதை ஊசியை போட்டு உறவு கொள்கிறான். ஒரு நாள் போலீஸ்காரனின் குழந்தை இறந்துவிடுகிறது. குடிகாரனுக்கும் அவன் மனைவிக்கும் தெரியாமல் தனது குழந்தையின் பிணத்தை வைத்துவிட்டு குடிகாரனின் குழந்தையைத் தூக்கி வந்துவிடுகிறான் போலீஸ்காரன். குடிகாரன் தனது குழந்தை இறந்துவிட்டதாகவும் போலீஸுக்குத் தெரிந்தால் முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள் என்றும் பயந்து குழந்தையை புதைத்துவிட்டு தனது குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக நாடகமாடுகிறான். குடிகாரனின் மனைவி இறந்தது தனது குழந்தை இல்லை என்று நம்புகிறாள். மனநிலை பாதிக்கப்பட்டு அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

இந்த சமயத்தில் போலீஸ்காரனின் மனைவி தனது கணவன் எடுத்து வந்த குழந்தையை ஒரு வழிப்போக்கனிடம் கொடுத்துவிட்டு ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். குடிகாரனின் குழந்தை காணாமல் போனது குறித்த விசாரணை போலீஸ்காரனிடமே வருகிறது. குடிகாரனை மிரட்டிக் கேட்டதில் உண்மையை ஒத்துக் கொள்கிறான். குழந்தையின் பிணத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யும் போது குழந்தையின் இறப்பு இயற்கையானது இல்லை என்று தெரிய வருகிறது. 

அப்படியானால் யார் கொன்றார்கள்? 

போலீஸ்காரனின் மனைவிதான். கொல்ல வேண்டும் என்று கொல்வதில்லை. Baby Shaken Syndrome. இரவு முழுவதும் குழந்தை அழுது கொண்டிருக்கும் போது ‘சனியன் தூங்காம அழுதுட்டே இருக்குது’ என்று சற்று வேகமாக தொட்டிலை வீசுவது கூட இந்த சிண்ட்ரோம்தான். குழந்தை இரவுகளில் அழுது கொண்டேயிருக்கிறது. பெற்றவளின் தூக்கம் கெடுகிறது. தூங்க வைப்பதற்காக அதிகமாக குலுக்குகிறாள். இந்தக் குலுக்கலின் காரணமாக மண்டைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை இறந்து போகிறது. 

படம், நடிப்பு, இசை எல்லாம் இருக்கட்டும். எப்படியெல்லாம் கதையைப் பிடிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிண்ட்ரோம். அதைச் சுற்றி இவ்வளவு பாத்திரங்களைச் சேர்த்து, காட்சிகளைப் பின்னி ஒரு படமாக்கியிருக்கிறார்கள். 

சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று.

பெங்களூரில் எனக்குத் தெரிந்த ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்கிறார். வயதானவர். ஏற்கனவே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவரிடம் படத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த போது ‘தூக்கம் கெட்டா பிரச்சினை வரும் தெரியும்ல’ என்றார். தெரியும். மூளைக்கு போதிய ஓய்வு கொடுக்கவில்லையென்றால் நம்மையுமறியாமல் மன அழுத்தம் ஏற்படும். அந்த மன அழுத்தத்தின் காரணமாக சில காரியங்களைச் செய்வோம். அந்த காரியங்களின் விளைவுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அடுக்கிக் கொண்டே போனார். அவர் எதை மனதில் வைத்துச் சொல்கிறார் என்று தெரியும். கடைசியில் எதிர்பார்த்த கேள்வியைக் கேட்டார்.

‘நீ எப்போ தினமும் தூங்குற?’

‘ரண்டு மணிக்கு சார்’

‘அதுவரைக்கு என்ன பண்ணிட்டு இருப்ப?’

‘ஏதாச்சும் டாக்டர்’

‘சாட்டிங், ஸ்கீரின் ஷாட்டுன்னு மாட்டிக்காத’ என்று முடிக்கும் போது அவ்வளவு நக்கல். இப்படியெல்லாம் இணையத்தில் விவகாரங்கள் நடக்கின்றன என்று அவருக்கு சொல்லித் தந்ததே நான் தான். எனக்கே கொக்கி போடுகிறார்.

‘அதெல்லாம் கார்குழலியம்மன் பார்த்துக்குவா’ என்றேன். அது யார் என்றெல்லாம் கேட்காமல் சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டார்.

இன்றைய இன்னொரு பதிவு: இது எப்படி இருக்கு?