ஷான்பி என்றொரு பெண்மணி இருக்கிறார். மெஹபூப்நகர் பக்கத்திலிருந்து குடி வந்தவர்கள். குடி என்றால் வீடு மாற்றுவதெல்லாம் இல்லை- நீலநிற தார்பாலின். அதுதான் வீடு. எந்தப் பகுதிக்கு வருகிறார்களோ அந்தப் பகுதியில் டெண்ட் அடித்து குடியிருக்கிறார்கள். எங்கள் லே-அவுட்டில்தான் சில வருடங்களாக இருக்கிறார்கள். காலியிடம் ஒன்றில் டெண்ட் அமைத்திருக்கிறார்கள். ஷான்பியின் அண்ணன் சாதிக் எங்கள் அப்பாவுக்கு தோஸ்து. அவ்வப்போது வீட்டுக்கு வந்து பணத்தைக் கொடுத்து வைத்திருப்பார். குடிசையில் ஆயிரக்கணக்கில் பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பில்லை அல்லவா? அதனால் ஐந்தாயிரமோ அல்லது பத்தாயிரமோ- கொண்டு வந்து கொடுத்து சில நாட்கள் கழித்து வந்து திரும்ப வாங்கிக் கொள்வார்.
இவர்களிடம் பெரிய சேமிப்பு எதுவும் இருப்பதில்லை. ஆறு மாதங்கள் வெறித்தனமாக பாடுபடுகிறார்கள். ஐந்தோ பத்தோ சேர்ந்த பிறகு ஊருக்குச் செல்கிறார்கள். ஒன்றிரண்டு மாதங்கள் கொண்டாடி பணம் காலியான பிறகு திரும்ப வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையை மோசம் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்பொழுது பார்த்தாலும் ‘நாளைய தினத்தின் தேவைக்காக சேர்த்து வைக்கலாம்..சொத்து சேர்க்கலாம்’ என்று சொல்லியபடி இன்றைய தினத்தைக் கொண்டாடாமல் விட்டுவிடும் அவசர வாழ்க்கை இல்லை அது. வறுமைதான் என்றாலும் அதற்காக வருந்திக் கொண்டிருப்பதில்லை. வருடத்தில் இரண்டு மாதங்களோ மூன்று மாதங்களோ- முழுமையாகக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். சொந்தக்காரர்களோடு சேர்ந்து குடி, கறிவிருந்து என்று கும்மாளமடித்துவிட்டு வந்து உழைக்கத் தொடங்குகிறார்கள்.
சாதிக்குக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. அவருடைய மனைவி சொந்த ஊரில் இருக்கிறாள். தங்கையின் கையால்தான் சாதிக்குக்கு சாப்பாடு. ஷான்பிக்கு குழந்தையில்லை. இல்லையென்றால் இப்பொழுது இல்லை. சில வருடங்களுக்கு முன்பாக குழந்தை பிறந்திருக்கிறது. ஏமாந்துவிட்டார்கள். அதன் பிறகு சந்தான பாக்கியம் வாய்க்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷான்பி சாக்லெட் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தாள். சாதிக்குக்கு குழந்தை பிறந்ததற்காகக் கொடுக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். சாதிக்கின் குழந்தை எப்படி இருக்கிறது? எப்பொழுது குழந்தையை இங்கே எடுத்துக் கொண்டு வரப் போகிறார்கள் என்று சில கேள்விகளைக் கேட்ட பிறகு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கக் கூடும்.
‘இது எங்க குழந்தையின் பிறந்தநாளுக்கான சாக்லெட்’ என்றாள். அவளுடைய குழந்தை உயிரோடில்லை என்பது நன்றாகவே தெரியும். ‘வேறு குழந்தை இருக்கிறதா?’ என்று எப்படிக் கேட்பது என்றும் தெரியவில்லை. இறந்த குழந்தைக்கு எதற்காக பிறந்தநாள் கொண்டாடுகிறாள் என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.
குழந்தையின் பிறந்தநாள் எப்பொழுதுமே ஸ்பெஷல்தான்.
சுந்தர ராமசாமியின் கதை ஒன்று இருக்கிறது. பிரசாதம். தனது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஐந்து ரூபாய் தேடியலையும் போலீஸ்காரரின் கதை அது. அன்றைய தினம் பார்த்து அவருக்கு ஒருவரும் சிக்கமாட்டார்கள். லைட் இல்லாத சைக்கிளோ, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவரோ என்று யாராவது சிக்கினால் வசதியாக இருக்கும் என்று துழாவிப் பார்ப்பார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம்- ஒரு பயல் சிக்க மாட்டான். மனைவி தனது குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சில கனவுகளை வைத்திருப்பாள். ஐந்து ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லையென்றால் போலீஸ்காரனாக இருந்து என்ன பிரயோஜனம்? கடைசியாக ஒரு கோவில் அர்ச்சகர் சிக்குவார். அவரை மிரட்டுவதும் உருட்டுவதுமாக கதை நகரும். மிகச் சிறந்த கதை இது. கதை முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், மனைவி எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள் என்பதன் காரணமாக போலீஸ்காரருக்கு உண்டாகியிருக்கும் படபடப்பும் பிரசாதத்தை மிகச் சுவாரசியமான கதையாக மாற்றியிருக்கும். தமிழ் உரைநடையின் நுட்பமான சாத்தியங்களையெல்லாம் அநாயசமாகத் தொட்டுப் பார்த்தவர் சு.ரா என்கிற பிரமிப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அந்த பிரமிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு வாசித்தாலும் கூட இந்தக் கதை பிடித்தமானதாகத்தான் இருக்கிறது.
பெங்களூர் வாசகர் வட்ட கூட்டத்திற்காக சமீபத்தில்தான் இந்தக் கதையை வாசித்து வைத்திருந்தேன். ஆச்சரியமூட்டும் வகையில் அடுத்த ஓரிரண்டு நாட்களில் ஷான்பி சாக்லெட் கொடுத்தாள்.
ஞாயிறன்று சாதிக் ஒன்றிரண்டு குடங்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டில் போர்வெல் அமைத்த பிறகு சாதிக் மற்றும் அவரது அருகாமைக் குடிசைக்காரர்கள் எங்கள் வீட்டிற்கு தண்ணீர் பிடிக்க வருகிறார்கள். ஆளுக்கு இரண்டு குடம் பிடித்துச் செல்வார்கள். ஓரிரு குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் லம்பாடிகள். லம்பாடிகளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. இன்னொரு நாள் சொல்கிறேன்.
சாதிக்கைச் சந்தித்த போது ஷான்பி சாக்லெட் கொடுத்ததை ஞாபகப்படுத்தினேன். அவருக்கு ஞாயிறு விடுமுறை. தண்ணீரைக் குடத்தில் நிரப்பிவிட்டு நிலத்தில் குந்த வைத்து அமர்ந்து கொண்டார்.
ஷான்பியின் குழந்தை சாணக் குழியில் விழுந்து இறந்து போனதாம். ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். பக்கத்தில் ஒரு பணக்காரர் வீட்டில் சாண எரிவாயு அடுப்பு அமைத்திருக்கிறார்கள். அதில் பயன்படுத்தப்பட்ட சாணத்தை குவித்து வைத்திருக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சாணக் குவியலுக்குள் விழுந்திருக்கிறது. சாணக்குழிக்குள் கற்களை வீசிப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்- சில வினாடிகளில் சாணம் மூடிக் கொள்ளும். குழந்தையையும் மூடிக் கொண்டது. வெகு நேரம் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்குள் குழந்தையின் வயிறு உப்பி முகமெல்லாம் மாறிப் போயிருக்கிறது. அதை நேரடியாக பார்த்த ஷான்பி அதிர்ச்சியில் மயங்கியிருக்கிறாள். அதன் பிறகு வெகு நாட்களுக்கு திக்பிரமை பிடித்தாற்போலத் திரிந்தவளை தர்க்காவொன்றில் தங்க வைத்திருக்கிறார்கள். ஓரளவு சமாதானம் ஆன பிறகு பெங்களூர் அழைத்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது இயல்புக்கு வந்திருந்தாலும் குழந்தையின் பிறந்த நாளில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு சாக்லெட் வழங்குவதும் இறந்தநாளில் அழுது கொண்டிருப்பதுமாக இருக்கிறாள் என்றார்.
‘வேற ஒண்ணும் பிரச்சினை இல்லையா?’ என்றேன்.
‘அதெல்லாம் இல்ல சார்’ என்றார்.
‘இருந்தா சொல்லுங்க....ஒரு சைக்யாட்ரிஸ்ட் இருக்காரு...பார்த்துடலாம்’
‘ஒண்ணுமில்ல சார்...இன்னொரு குழந்தை பிறக்கற மாதிரியே தெரியல...இதுதான் அவளுக்கு சந்தோஷம்ண்ணா கொடுத்துட்டு போகட்டும்...அதையும் ஏன் தடுக்கணும்?’ என்றார். பதில் சொல்வதற்கு எதுவுமில்லை. அவர் சொல்வதும் சரிதான். அவளுக்கு வேறு என்ன கொண்டாட்டங்கள் இருக்கின்றன? இன்னமும் மின்வசதி கூட இல்லாத குடிசை. மழை பெய்தால் சொதசொதவென்று நனைந்துவிடும் தரையில்தான் படுக்கை. டிவி, ஃபேன், கிரைண்டர் என்ற எதையுமே அறியாத மக்கள். ஐஸ்க்ரீமும் சாக்லெட்டும் அதிசய வஸ்தாக இருக்கும் வாழ்க்கை முறை. அவர்களிடம் வேறு என்ன சந்தோஷங்கள் இருக்கின்றன? காலையில் வேலைக்குச் சென்றால் மாலை வரை இடுப்பொடிய வேலை செய்கிறார்கள்.
பெங்களூர் போன்ற மாநகரத்தில் ஒரு பக்கம் வாழ்க்கையின் உச்சபட்சக் கொண்டாட்டங்களை ஒரு கூட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஒற்றைச் சாக்லெட்டில் தனது இறந்து போன குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஷான்பிக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்த்துவிட்டு ‘அவங்களுக்கென்ன சார் வருஷத்துல ரண்டு மாசம் கொண்டாடித் தீர்த்துடுறாங்க’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற மிடில்க்ளாஸ் மாதவன்களும் இதே ஊரில்தான் வாழ்கிறார்கள் என்பதுதான் நகைமுரண்.
6 எதிர் சப்தங்கள்:
√
அலுவலகத்திற்கு அருகாமையில் கட்டிட வேலை நடக்கும் நான்காவது மாடியில் நின்ற பெயரறியாத குழந்தை இன்று மீண்டும் நினைவில் வந்து போனாள்.
அதற்கு முந்தய நாள்தான் ஒரு கூட்டுக்குடும்பம் அந்த கட்டிடத்தினுள் நுழைவதைக்கண்டேன்.
மனிதனின் தேவைகள் அவரவர் அளவில் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.
எப்படியும் இன்னும் சில மாதங்களில், அந்த அடுக்குமாடிகள் கோடிகள் கொண்ட இன்னொரு குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இதே நேரத்தில்தான் நவீன நகரம் பற்றி தீவிரமாக அரசு செயல்படுகிறது.
என்னமாதிரியான வடிவமைப்பு இது.
//எப்பொழுது பார்த்தாலும் ‘நாளைய தினத்தின் தேவைக்காக சேர்த்து வைக்கலாம்..சொத்து சேர்க்கலாம்’ என்று சொல்லியபடி இன்றைய தினத்தைக் கொண்டாடாமல் விட்டுவிடும் அவசர வாழ்க்கை இல்லை அது.// great lines.
தனி மனிதனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம். சமூகத்தினால் பாதுகாப்போ, போதுமான அரவணைப்போ கிடைக்காதவர்கள் எந்த சமூக நீதியையும் சட்டத்தையும் பணிய வேண்டாத சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். குறை சமூகத்தின் மீதுதான். பில்கேட்ஸ் முதல் அனைவரும் இன்னும் இன்னும் என்றே இருப்பதால்தான் சாதிக் போன்றவர்கள் சிரமப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்கு ஒரு வழி இன்ஹரிடன்ஸை தூக்குவதுதான்.
நல்லா இருக்கு.
Nice. God bless them.
Post a Comment