தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது என்று சமீபமாக யாராவது அவ்வப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெருமாள் முருகன் விவகாரத்திலிருந்து சமீபத்தில் கோகுல்ராஜைக் கொன்று- அது கொலை இல்லை; தற்கொலைதான் என்று யாராவது சொல்லக் கூடும்- தண்டவாளத்தில் வீசப்பட்டது வரை தொடர்ந்து கவுண்டர் சமூகத்திலிருந்து பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரச்சினையின் அடிநாதம் எங்கேயிருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பாக இப்படியான கட்டுரைகளை நிராகரிக்க வேண்டியதில்லை என்றுதான் தோன்றுகிறது.
கவுண்டர் சமூகத்தின் விடலைகள்- பதினாறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரையிலானவர்கள்- பெரும்பாலானவர்களிடம் சாதி வெறி புரையேறியிருக்கிறது. மிகைப்படுத்துதலுக்காகச் சொல்லவில்லை- கொங்குப் பகுதியில் இதை உணர முடிகிறது. தங்களின் சாதிப்பாசத்தை வெளிப்படையாக பேசுகிறார்கள். தங்களின் சாதிப்பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று சர்வசாதாரணமாக விவாதிக்கிறார்கள். உள்ளூரிலேயே படித்து கொங்குப் பகுதியிலேயே வேலைக்குச் செல்லும் அல்லது விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கும் ஒரு இளைஞர் கூட்டம் மிகத் தீவிரமான சாதிய உணர்வுடன் இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
பெஸ்ட் ராமசாமி, ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்றவர்கள் தங்களை சமூகத் தலைவர்களாக அறிவித்துக் கொண்டு மிகப்பெரிய அரசியல் பலன்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கொங்குக் கட்சியுடன் அதிமுகவும் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. திமுகவும் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. திமுகவினர் பேசும் போது ‘அதிமுகவிடம் எவ்வளவு தொகுதிகளை வாங்குகிறீர்களோ அதைவிட ஒரு தொகுதி கூடுதலாக நாங்கள் கொடுக்கிறோம்’ என்றார்களாம். அதிமுகவிடம் ஆறு தொகுதிகள் என்று முடிவு செய்துவிட்டு திமுகவிடம் ஏழு தொகுதிகளை வாங்கிக் கொண்டு அதிமுக தருவதாகச் சொன்ன பணத்தை விடவும் கூடுதலான பணத்தையும் திமுகவினரிடமிருந்து பெற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் இப்படி ஒரு பேச்சு உண்டு. ஏழு தொகுதிகளிலும் தோற்றுப் போனார்கள். இவர்கள் இப்படியென்றால் உ.தனியரசு எப்பொழுதுமே தனி ஆவர்த்தனம்தான். அதிமுகவுடன் சேர்ந்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார். தமிழகத்தில் அதிகமான கிரிமினல் வழக்குகளை தன் மீது சுமந்து கொண்டிருக்கும் எம்.எல்.ஏ அவர்தான். இப்பொழுது யுவராஜ். தீரன் சின்னமலை பேரவை என்ற பெயரில் தலையெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்தக் கொலை வழக்கு வெளியே தெரியாமல் இருந்திருந்தால் அடுத்த தேர்தலில் திமுகவோ அதிமுகவோ அரவணைத்திருக்கும்.
திமுகவில் சு.முத்துச்சாமி, என்.கே.கே.பி.ராஜா, பொங்கலூர் பழனிச்சாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முத்தூர் சாமிநாதன் என்று அத்தனை கொங்கு மண்டல பெருந்தலைகளும் கவுண்டர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்தான். அதிமுகவில் செங்கோட்டையன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், கே.வி.ராமலிங்கம், செ.ம.வேலுச்சாமி வரைக்கும் அங்கும் கவுண்டர் ராஜ்ஜியம்தான். தத்தம் கட்சியிலேயே கவுண்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் என்ற நிலையில் இப்படி சாதியைச் சொல்லி கட்சி நடத்துபவர்களுடன் கூட்டணி அமைக்க எத்தனித்து பணத்தைக் கொடுத்து அவர்களை ஏற்றிவிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
காரணம் இருக்கிறது.
‘எங்கள் கட்சிக்கு கொங்கு வேளாளர்கள்தான் முக்கியம்’ என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாது. பிற சாதி வாக்குகள் பல்லிளித்துவிடும். அதனால் இத்தகையை so called கொங்கு சிங்கங்களை தங்களுடன் சேர்த்துக் கொண்டு சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்கள்தான் வாக்குகளை mobilize செய்பவர்கள் என்று நம்புகிறார்கள். அதற்கு இத்தகைய சாதிக் கட்சித் தலைவர்கள் அவசியப்படுகிறார்கள். உண்மையில் மேற்சொன்ன எந்த சாதித் தலைவரும் தங்களுடைய சமூகத்திற்காக எதையும் செய்வதில்லை. செய்ததுமில்லை. தேர்தல் சமயத்தில் மாநாடு நடத்தி கூட்டத்தைக் காட்டி பேரம் பேசுவதோடு சரி. தீரன் சின்னமலை நினைவு தினத்தன்று அவரது நினைவிடமான ஓடாநிலையில் கூடுவோம் என்று ஒரு கூட்டம் நடத்துவார்கள். அதற்கு மேல் ஒன்றுமில்லை. இத்தகையை தலைவர்களுக்கு அள்ளிக் கொடுக்க திராவிடக் கட்சிகளும் கிள்ளிக் கொடுக்க சொந்தச் சமூக பெருந்தலைகளும் இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் சாக்கடைக்கும் சாதிய உணர்வு தட்டியெழும்புவதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இருக்கிறது.
சாதியம் சார்ந்து பேசினால் மட்டுமே இந்த சாதியத் தலைவர்கள் பிழைப்பை ஓட்ட முடியும் என்பதால் அவர்களுக்கு அது மட்டும்தான் ஒரே ஆயுதம். தேர்தல் சமயங்களில் இந்த சாதியக் கட்சிக்காரர்கள் மாமன் மச்சான் என்று உள்ளூரில் ஆட்களைச் சேர்க்கிறார்கள். ‘நம்ம சாதிக்கு எதையாவது செய்வோம்’ என்றுதான் பேச்சையே தொடங்குகிறார்கள். ‘அட நம்ம பங்காளி கூப்பிடுறான்’ என்று சாதிய உணர்வோடு ஒன்று சேர்கிறார்கள். ‘வேறு எந்தச் சாதிக்காரனுக்கு சாதிப்பாசம் இல்லாமல் இருக்கு? நாம் மட்டும் ஏன் அடக்கி வைக்க வேண்டும்?’ என்று தங்களின் உணர்வுகளை நியாயப்படுத்துகிறார்கள். கொங்குக் கட்சி தேர்தலில் நின்ற தொகுதிகளில் இதை வெளிப்படையாக உணர முடிந்தது. சிலிண்டர்களைத் தூக்கித் தோள் மீது வைத்துக் கொண்டு- அந்தக் கட்சியின் சின்னம் சிலிண்டர்- கிராமங்களில் வீதி வீதியாக வாக்குக் கேட்ட கவுண்டர்களைப் பார்க்க முடிந்தது. தாங்களே தேர்தலில் நிற்பது போன்ற உணர்வோடு களமிறங்கியிருந்தார்கள். வெள்ளையும் சுள்ளையுமாகத் திரிந்த பணக்காரர்கள் கூட எந்தச் சங்கடமுமில்லாமல் சிலிண்டரை மாற்றி மாற்றிச் சுமந்து தோள் சிவந்தார்கள்.
அரசியல் கட்சி வேட்பாளர் இத்தகையை உணர்வோடு களப்பணியாற்றுவதற்கும் சாதியக் கட்சிக்காரர்கள் களப்பணியாற்றுவதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பெரிய வித்தியாசம். அரசியல் கட்சியின் தொண்டர்களை தலைவர் மீதான பாசம், பணம், சாராயம் என்ற பல காரணங்கள் ஒன்று படுத்துகின்றன என்றால் சாதியக் கட்சிக்காரர்களை ‘சாதி’ என்கிற ஒரேயொரு விஷயம்தான் ஒன்றுபடுத்துகிறது. அதுதான் ஆபத்து. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இளந்தாரிகள் ‘அடுத்த தலைமுறையான நாமும் செய்வோம்’ என்று ஜூனியர் கவுண்டர்களாக மார் தட்டுகிறார்கள். பக்குவமேயில்லாத பருவத்தில் வெறியேறிக் கிடக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் சாதிய வெறியோடு எழுதிச் சிக்கிய கொங்கு ஸ்ரீராம், சென்னிமலைக் கொங்கு வேளாளக் கவுண்டன் என எல்லோருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள். இன்னமும் நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் விஷத்தைக் கக்குகிறோம் என்று தெரிந்து கக்குகிறார்களா அல்லது தெரியாமல் கக்குகிறார்களா என்று தெரியவில்லை. பொதுவெளியில் எதைப் பேச வேண்டும் பேசக் கூடாது என்கிற அடிப்படையான புரிதல் கூட இல்லாதவர்கள் சாதிய வெறியோடு எழுதுகிறார்கள்.
விடலைகள் மட்டும்தான் சாதிய வெறியுடன் இருப்பதாகச் சொல்வதாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. வலுவான இந்தச் சாதியின் மூத்தவர்களிடமும் சாதி வெறியேறிக் கொண்டிருக்கிறதுதான். ஆனால் பெரியவர்களோடு ஒப்பிடும் போது பொடியன்களின் சாதிய உணர்வு மிகத் தீவிரமானதாக இருக்கிறது. கொங்குப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருந்த சாதிய உணர்வை மெல்ல மெல்ல ஊதிக் கொடுக்கிறார்கள். மற்ற சாதியினரைப் போலவே நாமும் சாதிய உணர்வுடன் ஒன்று சேர வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். பிற சாதியினரின் அரசியல் மற்றும் பொருளாதார பலத்தைவிடவும் கொங்கு வேளாளர் இனத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பன்மடங்கு வலுவானது. பிற பெரும்பாலான சாதிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்க கொங்கு வேளாளர் இனம் மேற்கு மண்டலத்தில் செறிவானதாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிலிருந்து அரசியல் தலைவர்கள் வரை இந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது பெரும்பலம். இவையெல்லாம் சேர்ந்து இந்தச் சாதிக்குள் எழுப்பப்படும் சாதிய உணர்வுக்கு பக்கபலமாக இருக்கின்றன. அது இப்பொழுது தீப்பந்தமாகத் தெரிகிறது.
15 எதிர் சப்தங்கள்:
நானும் இந்த சாதி என சொல்லி'கொல்லும்' தந்தையை உடையவன்தான்.ஆனால் சாதி மீது எனக்கு மோகம் இல்லை.நான் பள்ளி செல்லும்போது எனக்கு கலைஞர் எழுதிய அண்ணன்மார் கதை குங்குமம் வார இதழில் வந்தது.என் தந்தை அதை வாங்கி படிபார்.நானும் படிப்பேன்.ஆனால் எனக்கு அவர்கள்(அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கர்) மீது எனக்கு கடவுள் எனும் எண்ணம் தோன்றவில்லை.என்னை பொருத்தவரை அவர்கள் எந்த இடத்திலும் தன்னை கடவுள் அல்லது கடவுளின் பிள்ளை என்று சொல்லவில்லை.அதேபோல் அவர்களின் முக்கிய வழிகாட்டி சாம்புவன் என்பவர் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்.அவர்கள்(அண்ணன்மார் எனும் பொன்னர் சங்கர்) ஏற்றுக்கொண்ட பிறரை(பிற சாதியை) இவர்கள்(இன்றைய வெள்ளாளர்கள்) ஏற்கவில்லை,சாமி என பின்பற்றும் அவர்களது ஒற்றுமையை ஏற்கவில்லை.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் பார்த்துள்ளேன்.இதை எப்படி சரிசெய்வது?
பெரியார் குறைத்த சாதிய அடையாளம் மீண்டும் உயர்த்தெளுகிறது.இதை தடுக்கவேண்டிய பெரியார் வழிதோன்றல்கள் இதன் அபாயம் தெரிந்தும் இதை தடுக்காமல் வளரவிடுகிறார்கள். யார் தடுப்பது?
நான் ஒரு அடிமை என்ற கவலையை விட எனக்கு ஒரு அடிமை இருக்கிறான் என மனம் சந்தோசங் கொள்கிறது. அந்த சந்தோசம் தடை படாமல் இருக்க எது வேண்டுமானாலும் செய்யப் படுகிறது எவ்வித உறுத்தலுமின்றி.
100% true
சாதிய உணர்வு கொங்கு இளைஞர் களிடம் மட்டும் இருந்தால் நீங்கள் கூறுவது சரியானது. ஆனால், எனக்கு வேறு மாதிரி தெரிகிறது. மற்ற சில சாதிகள் கட்சி தொடங்கி தமிழ் நாட்டு அரசியலில் மிகப் பெரும் பயன்கள் அடைந்ததைப் பார்த்து தான் இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆகி இருக்க வேண்டும். ஆகவே பாவம் கொங்கு இளைஞர்கள்! அவர்களை தனிமைப் படுத்த வேண்டாம்.
Kongu Youths should read this get a life. Don't they feel ashamed to say out their caste name in this modern world? You may want to go back to 1800's but the world will move forward, no matter what.
I 100% agree with
சேக்காளி
நான் ஒரு அடிமை என்ற கவலையை விட எனக்கு ஒரு அடிமை இருக்கிறான் என மனம் சந்தோசங் கொள்கிறது. அந்த சந்தோசம் தடை படாமல் இருக்க எது வேண்டுமானாலும் செய்யப் படுகிறது எவ்வித உறுத்தலுமின்றி.
So called Kongu Lions. Don't bring bad light to your self by going backward.
கொங்கு இளைஞர்கள் மத்தியில்,குறிப்பாக கிராமங்களில் சாது உணர்வுகள் மிகவும் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
It's well know that there are alot of parties which run only based on caste votes..those parties are there over last 2decades...They do the same thing as done by so called kongu.. Why did no one questioned that.. Because if you speak bad on kongu there is no law to put you behind bars..But you have it for others...You want the privileges given by caste but not the caste...crazy
சாதி என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு சமூகத்தின் அடையாளம். அது அழியாமல் இருக்க அந்த சமூகம் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும். அது தவறென்றால் நம் இனம் அண்டை நாட்டில் கொடுமைப்பட்டபோது நாம் ஏன் கண்ணீர் வடித்தோம்; கண்ணீர் வடிக்கின்றோம்?? நம் நாடே சாதி வாரியாகத்தான் பிரிந்து கிடக்கிறது. அனைவருக்கும் சாதி உணர்வென்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த உணர்வு வெறியாய் மாறாமல் இருப்பது வரை, நாம் எப்பொழுதும் வேற்றுமையில் ஒற்றுமை காணலாம்.!
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் அவரவர் வேலையை பார்ப்பவர்கள். ஜாதிய ரீதியாக ஒன்றுகூடும் அவசியத்தை ஏற்படுத்தியது முற்போக்கு கும்பல்களின் எதிர்மறை தூண்டுதல், குறிவைத்து நடத்தப்படும் காதல் வியாபாரம், பிசிஆர் தொழில் போன்றவையே.. இதுதான் எதார்த்தம்.. இதற்கு எவ்வளவு வேஷம் போட்டும், இட்டுக்கட்டியும் பேசலாம்.. \
கொங்கு வெள்ளாளர்கள் இளைஞ்சர்களிடம் சாதி வெறி புறையோடி கொண்டு உள்ளது என்பதை மஞ்சள் காமாலை கண் கொண்டு எழுதியுள்ளது தெள்ள் தெளிவு. அமைதியாக இருந்த கொங்க வெள்ளாளர்களை உசுப்பி விட்டது யார் என்று இந்த நடு நிலை ,சமூக அக்கறை கொண்ட நாயகத்துக்கு தெரியாதா?? கவுண்டனை வெட்டு,கவுண்டச்சியை கட்டு என்ற கோசத்தை ,,தான் ஒரு தலித், பி.சி.ஆர் துணை இருக்கு,,,வேற வழியில்லை அர்சும் சரி,,,,காவல் துரையில் இருக்கும் தலீத் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் மேடை ஏறி கோக்கரித்த போது இந்த பதிவர் தூங்கி கொண்டு இருந்தார் போலும்!!!! முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யுங்கள் உத்தமரே!!!!!
Blog author , why you guys are always talking about Kongu .Are you able to post about other castes(what dalith doing or Christ or Muslims are doing)..
We are trying to protecting with in our Community not other than that. we are not asking and not allowing to migrate from other to our community.
What you know about kongu and kongu pepoles.
You guys are asking they government to protect Srilanga Tamilan(because Srilanka Government asking them to migrate to puthisham)
Same thing we are doing( Kongu pepoles doing(saving Kongu culture and peoples)
Why you are playing dual roles for Srilanka tamilans and Kongu pepoles
மணிகண்டன் ... நீங்கள் மறைமுகமாக கவுண்டர் சமுதாயத்தின் சாதி பெருமை பேசுவது போலத்தான் தெரிகிறது. உங்கள் கட்டுரையின் ஒரு இடத்தில் கூட தாழ்த்தபட்டோரின் அருமை கூறவில்லை. சாதீய சமத்துவம் தங்கள் கட்டுரையில் இல்லையே...
ஒரு சமுதயதாரின் அனுமதி இன்றி அவர்கள் சமுதாய பெயரை போட்டு சாதி வெறி என போட்டு இருப்பதே தவறு...
ஒரு சமுதாயம் பற்றி பொது இடத்தில் போட்டது தவறானது....
,ஒருவன் தன் சாதி பெயரை ஒரு பயத்துக்கு ஆக பயன்படுத்தி கொள்வதே *சாதி வெறி*
இப்போது சொல்லுங்கள்... யார் சாதி வெறி பிடித்தவர்கள்....
எந்த ஒரு சாதி ஒரு இடத்தில் மரியதைக்காகவும் பக்திக்காகவும் உறவு நிமித்தமாக பெருமையாக தான் இந்த சாதிகாரன் என உயர்வாக சொல்ல படுகிற சாதி உயர்ந்தது.... அப்படிபட்ட சாதி தான் *கவுண்டர் சாதி*
இது சாதி வெறி அல்ல எங்கள் சமுதாயத்தின் மரியாதையான அடையாளம்.
ஆம் , நாங்கள் சாதி வெறி பிடித்தவர்கள் தான், எங்கள் சாதி மக்கள் வளமாக கௌரகமாக வாழ வேண்டும்... எங்களை இழிவாக பேசுவோர் பாதிக்க படுவார்கள். எங்கள் சாதி சமுதாய மக்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் பதிவு படி நாங்கள் சாதி வெறி பிடித்தவர்கள் தான்.
ஆனால், ஒரு பொதுக்கூட்டத்தில் இன்னொரு சமுதாயத்தின் நெறிகளை தவறாக பேசுவது,அவர்களை இழிவாக பேசுவது , காதல் என்ற பெயரில் அந்த சமுதாய ஆண், பெண்களை நயவஞ்சமாக ஏமாற்றி கூட்டிட்டு வர ஆதரித்து உதவுவது போன்ற சில சமுதாயம் செய்வது உங்களுக்கு சாதிவெறியாய் தெரியவில்லை . அதை பதிவிட வேண்டியதுதானே!!!
ஆனால் கவுண்டர் சமுதாயம் என்றும் இவாறு செய்தது இல்லை..
சிலர் செய்யும் தவறால் ஒத்துமத்த சமுதாயத்தை தவறாக கொண்டு அந்த சமுதாயத்தை பற்றி பேசுகிற நீங்கள் ...இந்த நாட்டில் எத்தனை கொலை , கொள்ளை, கற்பழிப்பு ,விபச்சாரம், ஊழல், துரோகம்...அதற்காக இந்த நாட்டில் இருக்கும் அனைவரையும் கொலைவெறி பிடித்தவர்கள் கொள்ளைக்கார்கள் , சில பெண்கள் விபச்சாரம் செய்வதால் அனைத்து பெண்களையும் தவறாக பதிவிடுவீர...
அது எப்படி ஒரு சமுதாயத்தை மட்டும் கூறுகிர்கள்....
நம் நாட்டில் இருந்து பிரிந்த பாக்கிஸ்தான் பற்றி தவறாக பேசும் சிலர் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்த இங்கிலாந்து காரனை பெருமையாய் பேசுவார்கள்..
ஒரு சமுதாயத்தை பற்றி நீங்கள் பதிவிடும் நீங்களும் ஒரு வெறிபிடித்தவர்கள் தான்....
உங்கள் பதிவுக்கு கொங்கு இளைஞனாக சரியான பதில் அளித்த நம்பிக்கையில்
இவண்
சக்திவேல் கவுண்டர்
13-ஜூலை-2015
//அது இப்பொழுது தீப்பந்தமாகத் தெரிகிறது.//
பந்தம் இன்னும் அணையாம தான் இருக்கு.
எனக்கு தெரிந்து கொங்கு இளைஞர்களிடம் சாதி பற்று அதிகரிக்க மற்ற சாதிக்காரர்கள் தான் காரணம்.... மற்றவர்கள் தங்கள் மீது வன்மத்தை பதிக்கும் போதும்...ஒன்றாக பழகி கொண்டு இருக்கும் போது ஏதாவது பிரச்சினையில் அவர்கள் மட்டும் ஒன்று கூடி நிற்கும் போது ஏற்படும் அச்சமே கொங்கு இளைஞர்களை ஒன்று படுத்துகிறது....தங்களை பரிதாபமாக காட்டிக் கொண்டு மற்றவர்களை வம்புக்கு இழுப்பது போல் பேசுவது பேச தூண்டுவது எந்த கட்சி என்று தெரியுமா
Post a Comment