யாகூப் மேமனை இன்னும் ஏழு நாட்களில் தூக்கில் போடப் போகிறார்கள். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பாக மும்பையில் இருநூறுக்கும் அதிகமான அப்பாவிகள் குண்டு வைத்துக் கொல்லப்பட்டதில் இவனுக்கு பங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில்தான் ஒரு கொலைக் குற்றவாளிக்கு இவ்வளவு நாட்கள் ஆயுள் இருக்கும். தாஜா தாஜா என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள். சிறைச்சாலையில் உணவு, காவலர்கள் சம்பளம் என்று ஒரு குற்றவாளிக்கென்று வருடத்திற்கு எவ்வளவு செய்கிறார்கள்? அந்தச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பாகுபாடில்லாமல் ரத்தச் சிதறல்கள் ஆனார்கள். இவனைப் போன்ற அயோக்கியர்களை இவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. இந்நேரம் கதையை முடித்திருக்க வேண்டும்- இப்படியெல்லாம் ரத்தம் கொதிப்பது இயல்பானதுதான்.
ஒரு பக்கம் இப்படி ரத்தம் கொதித்தால் இன்னொரு பக்கம் தங்கள் பங்குக்கு சிக்ஸர் அடிக்க மட்டையத் தூக்கிக் கொண்டு சிலர் இறங்குகிறார்கள். யாகூப் மேமன் இசுலாமியர் என்பதற்காகத்தான் இந்திய அரசு தூக்கில் போட இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்று ஓவாஸி மாதிரியான மதவாதிகள் கிளப்பிவிடுவார்கள். ஹைதராபாத் போன்ற ஊர்களில் பச்சைக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஆமாம் என்று ஒரு கூட்டம் கத்தும். சாக்ஷி மகராஜ் போன்ற இன்னொரு பிரிவு மதவாதிகள் ‘யோவ் ஓவாஸி...நீ பாகிஸ்தானுக்கு போய்யா’ என்பார்கள். இரண்டு பிரிவினருமே ஆபத்தானவர்கள்தான். தங்களுக்கான ஊடக கவனத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் சொந்த சமுதாயத்தில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவும் அடிப்படைவாதம் பேசுகிறவர்கள்.
மரண தண்டனை அவசியமானதா? அதை ஏன் நீக்கிவிடக் கூடாது என்கிற விவாதம் உலக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு நாடுகள் முழுமையாக மரண தண்டனையை ஒழித்துவிட்டன. ஆனால் உலகுக்கு அகிம்சையை போதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தத் தேசம் இன்னமும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. உலக சமுதாயத்திற்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் இன்னொரு மனிதனை சட்டத்தின் பெயரால் கொலை செய்கிறோம்.
‘இப்படியே பேசிட்டு இருந்தா ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பாங்க’ என்பார்கள். ஆமாம். தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால் ஏறி மிதிக்கத்தான் செய்வார்கள். தடவிக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் சட்டங்களை இன்னமும் வலுவானதாக ஆக்க முடியும். மரண தண்டனை இல்லாமலே கூட கடும் தண்டனைகளைக் கொடுக்க முடியும். தாவூத் இப்ராஹிமும், டைகர் மேமனும் எந்தக் காலத்திலும் தண்டிக்கப்படவே மாட்டார்கள். ஆனால் யாகூப் மேமன் மட்டும் தூக்கில் தொங்குவான். இந்த வழக்கை மட்டும் சொல்லவில்லை. இங்கு எல்லா வழக்குகளுமே அப்படித்தான். ஒரு குற்றச் செயலைச் செய்த பெருங் கும்பலிலிருந்து ஒருவனை மட்டும் பிடித்து அவனது கதையை முடித்தால் வழக்கு முடிந்தது மாதிரிதான். இருநூறு பேர்கள் கொலை செய்யப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குறைந்தபட்சம் இருநூறு பேர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கக் கூடும். அரசியல்வாதிகளிலிருந்து மதவாதிகள் தொழிலதிபர்கள் வரை எத்தனையோ பேர்கள் செயல்பட்டிருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் ஒளிந்தபடி இவன் தூக்கில் தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு வழக்கை நடத்தி முடிக்க இருபத்தைந்து ஆண்டுகள் என்பதே மோசமான நடைமுறையாக இல்லையா? அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட சட்டங்களில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமல் அந்தச் சட்டங்களின் அடிப்படையில் இப்பொழுதும் வழக்குகளை நடத்தி வருடக்கணக்கில் இழுத்து வாய்தாக்களாக வாங்கித் தள்ளி கடைசியில் ஒற்றை மனிதனுக்கு தண்டனை அளிப்பதோடு நம்முடைய குற்ற வழக்கு விசாரணைகளுக்கு முடிவுரைகள் எழுதப்படுகின்றன. இந்த பழுதுபட்ட நடைமுறைகள், மந்தமான நீதித்துறைச் செயல்பாடுகள், வழக்கு விசாரணைச் சுணக்கங்கள் போன்றவற்றில் எல்லாம் மாறுதல்களைக் கொண்டு வருவதைவிட்டுவிட்டு ‘இதோ குற்றவாளியைக் கொல்லப் போகிறோம்’ என்று உணர்ச்சியைத் தூண்டுகிறார்கள். காவி அல்லது பச்சைக் கண்ணாடியை அணிந்தபடி நாமும் கோஷம் எழுப்புகிறோம்.
இத்தகைய சமயங்களில் யாகூப் மேமனைத் தூக்கில் போடக் கூடாது என்றால் ஒரு கூட்டம் சண்டைக்கு வரும். தூக்கில் போட வேண்டும் என்றால் இன்னொரு கூட்டம் சண்டைக்கு வரும். ஆனால் நடுநிலைமை என்பதெல்லாம் இத்தகைய விஷயங்களில் சாத்தியமே இல்லை. ஒன்று இந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது அந்தப் பக்கம். ‘நீ எந்தப் பக்கம்?’ என்றால் மரண தண்டனையை முழுமையாக ஒழிப்போம் என்கிற பக்கத்தில் நிற்பேன். யாகூப் மேமன் என்றில்லை வேறு யாராக இருந்தாலும் கூட இதே நிலைப்பாடுதான். மனிதனை இன்னொரு மனிதன் கொல்வது காட்டுமிராண்டித்தனம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வதற்கு யார் அதிகாரத்தைக் கொடுத்தது என்று கேட்டால் ‘அவன் மட்டும் கொல்லவில்லையா? இருநூறு பேரைக் கொன்றானே?’ என்பார்கள். அப்படியானால் அவனும் நாமும் ஒன்றுதானே? அவன் தீவிரவாதி. அவன் எதைச் செய்தானோ அதையே அவனுக்குத் திருப்பிச் செய்துவிட்டு நம்மை எப்படி civilized சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியும்?
தண்டனைகள் கடுமையாக்கப்பட்ட சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்பதில் நம்பிக்கையில்லை. ‘தவறு செய்தால் சிக்கிக் கொள்வோம்’ என்ற பயம் நிலவுகிற சமூகத்தில்தான் குற்றச் செயல்கள் குறைவாக இருக்கும். அதிகாரம் இருப்பவனும் பணம் படைத்தவனும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போது ஒருவனைத் தூக்கில் போடுவதால் மற்றவர்கள் பயந்து விடப் போவதில்லை. சினிமாக்காரன் என்றால் சிறுநீர் கழிப்பதற்குக் கூட பரோலில் வரலாம் என்ற லட்சணத்தில் மரணதண்டனை இந்த தேசத்தில் பயத்தை உருவாக்கிவிடப் போவதில்லை. எவனாக இருந்தாலும்- அவன் அரசியல்வாதி, சினிமாக்காரன், பணக்காரன் - அவனுடைய குற்றத்துக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்கிற சூழலை உறுதி செய்யாமல் வேறு எதைச் செய்தும் பலன் இல்லை.
அப்சல் குருவைத் தூக்கிலிட்ட பிறகு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எந்தத் தீவிரவாதியும் எல்லையைக் கடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படித்தான் இந்தத் தூக்கும் இருக்கும். இந்த தேசத்திற்கு எதிரான அத்தனை சதிச்செயல்களும் குற்றச் செயல்பாடுகளும் பெரும்புள்ளிகளின் அருளாசிகளுடன் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும். தங்களின் அதிகாரப் பசிக்காகவும் ஆட்சி அதிகாரத்தின் மீதான தாகத்திற்கும் குண்டு வெடிப்பாளர்களையும் துப்பாக்கி ஏந்தியவர்களையும் தயார் செய்தபடியேதான் இருப்பார்கள். முதலில் அங்கே செக் வைக்கப்பட வேண்டும். ஒரு குற்றச் செயலின் மொத்த வலையமையவும் சுக்கு நூறாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆராய்வதும் செயல்படுத்துவதும்தான் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.
யாகூப் மேமனும், அப்சல் குருவும் ஏவப்பட்ட தூசிகள். இவர்களைத் தூக்கிலிட்டுவிட்டு இந்த நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஒழித்துவிடலாம் என்றால் அதைவிட நகைச்சுவை வேறு இருக்க முடியாது. இவனைத் தூக்கில் போட்டுக் கொள்ளட்டும். எதிர்க்கவெல்லாம் இல்லை. ஆனால் இந்தத் தூக்கு தண்டனை இந்த தேசத்தில் இறுதியான தூக்கு தண்டனையாக இருக்கட்டும். அவ்வளவுதான்.
7 எதிர் சப்தங்கள்:
//‘நீ எந்தப் பக்கம்?’ என்றால் மரண தண்டனையை முழுமையாக ஒழிப்போம் என்கிற பக்கத்தில் நிற்பேன்//
தெளிவாய் ஒத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள்.
சரிங்க. அப்ப தூக்குக்கு மாற்று என்ன? கடுமையான தண்டனை என்றல் என்ன?
//தண்டனைகள் கடுமையாக்கப்பட்ட சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்பதில் நம்பிக்கையில்லை//
தண்டனை கடுமையாக்கப் படுதல் என்றால் என்ன என்று புரியவில்லை.
சற்று கூடுதலாக விளக்கவும்.
1. சிறையில் கடுமையாக வேலை வாங்குவதா?
2. சிறையில் உணவு குறைவாகக் கொடுப்பதா?
3. சிறிய குற்றங்களுக்கு அதிக நாட்கள் தண்டனை தருவதா?
4. சிறையில் கைதிகளைத் துன்புறுத்துவதா?
5. கடுமையான தண்டனை என்றால் எனக்கு நினைவில் வருவது இதுதான்.
தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கடைசி நேரம் குளிக்ச் சொல்லி டாக்டர் செக் பணணி கடைசி விருப்பம் கேட்டு... ஐயோ! இது நரக வேதனை. அந்த கடைசி நொடியை பார்க்க விடாம கண்ணை தலையோடு மூடி செய்யும் கொடுமைக்கு விஷ ஊசி போட்டு ஸ்லோ பாய்சனா கைதிக்கு எப்ப சாவோம்னு தெரியாம கொல்லலாமே.இயற்கை சாவே அப்படித்தான் வருது.
அருமை அண்ணா...
மரண தண்டனை என்பது திரும்ப கொடிய குற்றங்கள் செய்வதில் இருந்து மக்களை தவிர்ப்பது. ஆகவே யாகூப் போன்று கொடிய குற்றம் (257 பேர் உயிர் இழந்தனர். 716 பேர் கடும் காயம் அடைந்தனர்) யாரும் இனி மேல் புரியக் கூடாது என்றால் மரண தண்டனை இருக்கத் தான் வேண்டும். மதத்திற்கும் தண்டனைக்கும் சம்பந்தம் இல்லை. இதுவே சவுதியில் நடந்து இருந்தால் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே யாகூப் உயிர் இழந்து இருப்பான். ஆகவே தான் சவூதியில் குற்றங்கள் மிக குறைவு.
Other than terrorism and religion angle , look yakub menons case in this way ? When someone agrees to provide more information about that case and other related cases or in other words turns as approver which helps the cops to investigate the case deeper and come to a conclusion , what guarantee are we giving to that person . He Surrendered to RAW based on assurances/deal with that officers , in western countries courts accept these agreements . In this case are we betraying Yakub Menon who has given lot of information which helped our Intelligence Agencies to crack many cases and plots . How much confidence will it give to approvers or people accused in other cases who would like to provide more information in return for favour ? I am not saying Yakub is not guilty . These kind of judgements will really affect approvers and also the Intel Officers who depend on these kind of people where they wont be able to crack the cases .
Post a Comment