Jul 30, 2015

கலைவாணிக்குத்தான் வெளிச்சம்

இருபது வருடங்களுக்கு முன்பாக வரைக்கும் கூட ஒவ்வொரு ஊரிலும் மிகச் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் அரசு உதவி பெறும் பள்ளிகள்(Aided school) இருந்தன. ஊருக்கு ஒரு பள்ளி என்பது இது மிகையானதாகத் தெரிந்தால் ஒரு மாவட்டத்துக்கு இரண்டு பள்ளிகளாவது இருந்தன என்று சொல்லலாமா? இது குறைந்தபட்ச எண்ணிக்கை. பரவாயில்லை. இருக்கட்டும். அப்படியான உதவி பெறும் பள்ளிகள்தான் மெல்ல மெல்லச் சீரழிந்தன அல்லது சீரழிக்கப்பட்டன. 

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் படிப்படியாகக் குறைந்தது. மாவட்ட அளவிலான தகுதிப் பட்டியலிலிருந்து இந்தப் பள்ளிகள் காணாமல் போயின. பள்ளிகளின் நல்ல பெயர் சிதையத் தொடங்கியது. பல்லாண்டு காலமாக கோலோச்சி வந்த உதவி பெறும் பள்ளிகளின் இடத்தை தனியார் பள்ளிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. ‘ஒரேயொரு வருடம் ஸ்டேட் ரேங்க் வாங்கிட்டா போதும். பத்து வருஷத்துக்கு வியாபாரம் பழுக்கும்’ என்று தனியார் பள்ளிகள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களைத் தேடிச் சென்று ‘எல்லாம் இலவசம்’ என்று கொக்கி போடுகின்றன. படிக்கும் திறன் வாய்ந்த மாணவர்களை அழைத்து வந்து தட்டி உருவேற்றி நல்ல மதிப்பெண்களை வாங்க வைத்து வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர் கட்டுகிறார்கள். ‘பார்த்தீங்களா எங்கள் பராக்கிரமத்தை’ என்று அறை கூவுகிறார்கள். அடுத்த வருடத்திலிருந்து அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்கைக்கு கூட்டம் அலை மோதத் தொடங்குகிறது. தொழில் யுக்தி அது. Business Strategy. 

மாணவர்களைத் தனியார் பள்ளிகள் வளைத்துக் கொள்ள உதவி பெறும் பள்ளிகள் காற்று வாங்கத் தொடங்கின. படிப்பே மண்டையில் ஏறாத மிச்சம் மீதி இருக்கும் மாணவர்களை வைத்துக் கொண்டு போராடுகிறார்கள். இதுதான் கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக நடந்து வருகிறது. அரசாங்கத்தாலும் கல்வித் துறையாலும் இந்தச் சீரழிவு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. அவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் இன்னொரு கண்ணில் வெண்ணையையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அரசுப் பள்ளிகளுக்குத்தான் ஏகப்பட்ட விதிகளை விதிக்கிறார்கள். சமீபத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை சந்திக்க நேர்ந்தது. தனியார் பள்ளி மாணவி. பள்ளி தொடங்கி இரண்டு மாதம் ஆகிறது. பதினோராம் வகுப்பு புத்தகமே வழங்கப்படவில்லை என்றாள். எடுத்தவுடனேயே பனிரெண்டாம் வகுப்புப் பாடம்தான். கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில்தான் அடிப்படையான விஷயங்கள் இருக்கும். இவர்கள் அதையெல்லாம் சொல்லித் தருவதேயில்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை மட்டும் நெட்டுரு போட வைக்கிறார்கள். புரியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை. உள்ளே ஏற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஏற்றிக் கொண்டதை தேர்வுகளில் அப்படியே வாந்தியெடுக்கிறார்கள். வெளியுலகில் ‘எங்கள் பள்ளிதான் பெஸ்ட்’ என்று அறிவிக்கிறார்கள். 

இவர்களுடன் எப்படி அரசுப் பள்ளிகள் மதிப்பெண்களில் போட்டியிட முடியும்? கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதுவெல்லாம் தெரியாதா? தெரியும். கண்டுகொள்வதில்லை. தனியார் கல்வி முதலாளிகளால் மிகச் சரியாக கப்பம் கட்டப்படுகின்றன என்பதுதான் காரணம்.

தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் மாணவர்களை ஈர்ப்பதற்கு சரியான வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் சமன்படுத்தப்பட்ட கல்விமுறையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை- சமன்படுத்தப்பட்ட கல்விமுறை என்பது விளையாட்டு, நூலகம், சமூகப்பணி உள்ளிட்டவற்றை பாடத் திட்டங்களோடு இணைப்பது மட்டுமில்லை குறிப்பாக எந்த வருடப் பாடத்தையும் தவிர்க்காமல் முறையாக படித்து பாடங்களின் அடிப்படை தெரிந்த மாணவர்களை உருவாக்கும் திட்டம். இவை தனியார், அரசுப்பள்ளி என்கிற பாகுபாடில்லாமல் அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட வேண்டும். நாற்பது வயதில் ஒருவ எப்படிச் செயல்படுவான் என்பது அவனுடை பதினைந்தாவது வயதில் முடிவு செய்யப்படுகிறது. அதுதான் ஆளுமை உருவாக்கம். அந்த ஆளுமை உருவாக்கம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். எங்கே செயல்படுத்துகிறார்கள்? வெறும் மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் பள்ளிகளின் கடமையாகிவிட்டது.

இப்படி அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவான கற்பித்தல் முறையை அமுல்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அவசியம் ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரம். 

ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் பணம் கொழித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்ற சூழல் நிலவும் அதே சமயம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகுந்து கிடக்கிறது. உதவி பெறும் பள்ளிகளில் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தார்கள். இப்பொழுது அந்த எண்ணிக்கை சுருங்கிவிட்டது. இருந்த போதிலும் முன்பு எவ்வளவு ஆசிரியர்கள் இருந்தார்களோ அதே எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் வெட்டியாக பெஞ்ச்சைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெரும்பாலும் இடமாறுதல் செய்யப்படுவதில்லை. ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாக இருக்குமிடத்திலிருந்து பற்றாக்குறை நிலவும் பள்ளிகளுக்கு மாற்றுவதுதானே சரியாக இருக்கும்? அதைச் செய்வதற்கு சுணக்கத்தைக் காட்டுகிறார்கள். அரசாங்கம் மற்ற துறைகளில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் மிகச் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எங்கேயிருக்கிறார்கள்?

சமீபத்தில் கல்லை வீசிப் பார்க்கலாம் என்ற கட்டுரையில் எழுதியது போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல் இது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்துல்கலாமை உருவாக்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 256 ஆசிரியர்கள் உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கிறார்கள். இது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மட்டும். மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைக் கணக்கு எடுத்தால் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கும். இந்த உபரி ஆசிரியர்களான 256 பேருக்கு வழங்கப்படும் ஒரு மாதச் சம்பளம் நாற்பத்தேழு லட்சம் ரூபாய். ஒரேயொரு மாவட்டத்தில் வேலையில்லாத வெட்டி ஆசிரியர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படும் தொகை மட்டும் மாதம் ஐம்பது லட்சம். தலை சுற்றத்தானே செய்யும்? எனில் தமிழகத்தின் முப்பத்தியிரண்டு மாவட்டங்களிலும் உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். சராசரியாக மாவட்டத்துக்கு ஐம்பது லட்சம் என்றாலும் கூட கிட்டத்தட்ட பதினைந்து கோடி ரூபாய். மாதம் பதினைந்து கோடி என்றால் வருடத்திற்கு? ஒரு பக்கம் ஆசிரியர்களே இல்லை என்று ஏகப்பட்ட பள்ளிகள் பஞ்சப்பாட்டு பாடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான கோடிகளை வெட்டி ஆசிரியர்களுக்கு கொட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம். இதைப்பற்றியெல்லாம் அரசாங்க மட்டத்தில் ஏதேனும் விவாதமாவது நடக்கிறதா என்று தெரியவில்லை. 

சும்மா தோண்டிப்பார்க்கலாம் என்று நினைத்தாலே பூதங்கள் எழுகின்றன. தோண்டத் தொடங்கினால் இன்னமும் என்னென்ன வருமோ!

கலைவாணிக்குத்தான் தெரியும்.