Jul 3, 2015

கஷ்டம்

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது அம்மாவுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்தது. கிராம நிர்வாக அலுவலர். சத்தியமங்கலத்துக்கு அருகில் செண்பகபுதூரில் நியமனம் செய்திருந்தார்கள். அந்த ஊரிலேயே வாடகைக்கு வீடு பார்த்து குடி பெயர்ந்திருந்தோம்.  அட்டகாசமான ஊர் அது. வீட்டை விட்டு கீழே இறங்கினால் வாய்க்கால் ஓடும். வயல்களுக்குள் புகுந்து கொறத்தி குட்டி பிடிப்பதும், மரப் பொந்துகளில் குருவிக் குஞ்சுகள் பிடிப்பதுமாக ஊர் எனக்கு மிகப் பிடித்துப் போய்விட்டது. ஆனால் எதுவும் சில காலம் என்பார்கள் அல்லவா? அப்படித்தான். கீழ் வரிசையில் இன்னுமொரு பல் கூடுதலாக முளைத்தது. நாக்குக்கு அடியில். ஆயாவோ அமத்தாவோ- சரியாக ஞாபகமில்லை- பார்த்துவிட்டு ‘இது யோகமான பல்’ என்றார்கள். விட்டிருந்தால் இந்நேரம் அதானியின் மருமகன் ஆகியிருப்பேனோ என்னவோ. ஆனால் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிட்டார்கள். பல் மருத்துவர் விடுவாரா? ‘இது நாக்கை தொந்தரவு செய்யும்’ என்று குறடைக் கையில் எடுத்துவிட்டார்.

பேச்சுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று ‘எந்த ஸ்கூல்’ என்றார். அந்த மருத்துவரின் பெயர் சாமியப்பன். வாயைத் திறந்து வைத்தபடியே ‘இனிமேல்தான் சேரப் போறேன்’ என்றேன்.

இடையில் புகுந்த அப்பா ‘குடி மாறி வந்திருக்கிறோம்..புது ஸ்கூலில் சேர்க்கணும்’ என்றார். அந்த மருத்துவர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அவருடைய மனைவி பெயர் ருக்மணி. சாமியப்பனிலிருந்து முதல் இரண்டு எழுத்து, ருக்மணியிலிருந்து முதல் இரண்டு எழுத்தை எடுத்து ‘சாரு மெட்ரிகுலேஷன்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். பள்ளியின் பெயரே விவகாரமாக இருக்கிறது என்று அந்தக் காலத்தில் என் சிறு மண்டைக்கு உறைக்கவில்லை. மருத்துவர் என்ன செய்கிறார் என்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பல்லுக்கு பின்னால் ஊசியைக் குத்தி எடுத்துவிட்டு ‘வாய்க்குள்ள புழு ஊறுகிற மாதிரி இருக்கும்’ என்ற மருத்துவர் அப்பாவிடம் திரும்பி ‘அதுக்கு என்ன..நம்ம ஸ்கூலிலேயே சேர்த்துக்கலாம்’ என்றார். அப்பாவுக்கும் அது சரியாகத்தான் பட்டது. சாமியப்பன் டாக்டர் ஒரு வகையில் தூரத்து உறவினரும் கூட. என்னிடம் ‘சேர்ந்துக்கிறயா?’ என்றார்கள். தலையை ஆட்டினேன். புதுப் பள்ளியில் சேர்கிற உற்சாகத்தில் இருந்த போது குறடை வாய்க்குள் விட்டு ஒரு திருகு திருகினார் போலிருந்தது. ரத்தம் கொப்புளிக்க அந்த அப்பாவி சிறு பல் அவரது கைக்கு வந்துவிட்டது. மாமனார் என்ற இடத்தில் இருந்த அதானியின் பெயர் அந்த ரத்தக் கறையினால் அழிக்கப்பட்டது.

அதுவரை படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அதிகமான பாடச் சுமை எதுவுமில்லை. விளையாட்டுத்தனமாக இருந்தவனுக்கு மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் பெருஞ்சுமையாகத் தெரிந்தது. எதுவுமே சரியாகப் படவில்லை. பள்ளி வாகனத்தில் அம்மாவோ அப்பாவோ ஏற்றிவிட்ட பிறகு அவர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளமாட்டார்களா என்று எட்டி எட்டிப் பார்ப்பதும், ‘ஒடக்கா மாதிரி தலையைத் தூக்கிட்டே இருப்பியா?’ என்று வாகனத்தில் வந்த ஆயா ஓங்கிக் கொட்டுவதும் இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆயா கொட்டுவதும், அம்மாவை விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வதும் கண்ணீர் வர வைத்துவிடும். கோகுல் சாண்டல் பவுடரை முகம் நிறைய பூசித்தான் பேருந்தில் ஏற்றி விட்டிருப்பார்கள். கண்ணீர் அதையெல்லாம் கரைத்துக் கொண்டு கன்னத்தில் பாய்ந்து கொண்டிருக்கும்.

பள்ளி வாகனத்தில்தான் அப்படியென்றால் வகுப்பறையில் கேட்கவே வேண்டியதில்லை- சித்ரா டீச்சர். கர்ண கொடூரி. அவர் வகுப்பறையில் முட்டி போடச் சொல்லும் நான்கு மாணவர்களில் நிச்சயமாக எனக்கு இடம் இருந்தது. தினசரி ஏதாவதொரு தண்டனையை வாங்கிக் கொண்டேயிருந்தேன். வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று சட்டையைக் கழற்றிவிட்டு ட்ரவுசரையும் கழற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்தது ஞாபகம் இருக்கிறது. ஓரளவுக்கு அறிவுடைய குழந்தையாகத்தான் இருந்தேன். ஆனால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போதெல்லாம் கவனம் எங்கே போனது என்றே தெரியவில்லை. 

பள்ளி மோசம் என்றோ அல்லது ஆசிரியை சரியில்லை என்றோ சொல்லவில்லை. ஆனால் சூழல் மாறும் போது குழந்தைகள் உடனடியாக புதுச் சூழலுக்கு ஒத்துப் போய்விடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதைப் புரிந்து கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. சூழல் மாறுதல் உண்டாக்கும் மன அழுத்தத்தை மெல்ல மெல்ல தட்டி உடைக்க வேண்டியதுதான் பெரியவர்களின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர ‘படி, எழுது’ என்று அழுத்தத்தை மேலும் கூட்டுவதாக இருக்கக் கூடாது. எனக்கு அப்படித்தான் நேர்ந்தது. வகுப்பில் சொல்வதை கவனிப்பதில்லை, எழுதுவதில்லை என்று புகார் மேல் புகாராக வீட்டுக்கு அனுப்பினார்கள். மாலை வீடு திரும்பியவுடன் அம்மாவும் அப்பாவும் இடத்தை விட்டு நகர விடாமல் அழுத்தினார்கள். 

குழந்தைகளை நன்றாக கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் புலப்படும்- மன அழுத்தத்தில் இருக்கும் போது தங்களது கவனத்தை வேறு விஷயங்களில் திருப்புவார்கள். குழந்தை டிவி பார்க்க விரும்பினால் அது வெறும் பொழுது போக்குக்காக மட்டும் கேட்பதில்லை. படிப்பதிலிருந்தும் எழுதுவதிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாகக் கூட அதைக் கருதுகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் ‘டிவி பார்க்காதே’ என்று அழுத்துவதைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். குழந்தை கதைச் சொல்லச் சொல்லிக் கேட்பது, விளையாடச் செல்லலாம் என்று பிரியப்படுவது என நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அந்தச் சமயத்தில் ‘ஹோம் வொர்க் இருக்குல்ல?’ என்றோ ‘நாளைக்கு அஸஸ்மெண்ட் இருக்கே’ என்று குழந்தையின் கவனத்தை மீண்டும் படிப்பினை நோக்கித் திருப்புவது படிப்பு மீதான வெறுப்பை அதிகரிக்கத்தான் செய்யும். குழந்தை அதிலிருந்து தப்பிக்கத்தான் இதையெல்லாம் செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தப்பிக்க விடாமல் அழுத்தினால் என்ன அர்த்தம்?

விட்டுவிட வேண்டும். அவர்கள் விரும்புவதைச் செய்யட்டும். படிப்பு முக்கியம்தான். ஆனால் படிப்பு மீது வெறுப்பில்லாமல் படிக்க வேண்டும். விளையாடிக் கொண்டிருக்கும் போது பேச்சுவாக்கில் ‘படிக்க போலாமா?’ என்று கேட்டு திசை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் கடினமான காரியம்தான். ஆனால் இயலவே இயலாத காரியம் இல்லை. 

சமீபத்தில் ஒரு நண்பர் தனது குழந்தையை CBSE பாடத்திட்டத்திலிருந்து ICSE க்கு மாற்றினார். அந்தக் குழந்தை நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாது. இந்தக் கதையைச் சொல்லி யோசித்து முடிவெடுக்க பரிந்துரைத்தேன். ஆனால் அவர் ஏற்கனவே முடிவெடுத்திருந்தார். கேட்கவில்லை. மாற்றிவிட்டார். ஐசிஎஸ்சி படிப்பதற்கு சற்று கடினம். ஆரம்பத்திலிருந்தே ஐசிஎஸ்சி பாடத்திட்டம் என்றால் பரவாயில்லை. மூன்றாம் வகுப்பு வரைக்கும் வேறொரு பாடத்திட்டத்திலிருந்த குழந்தையை திடீரென மாற்றுவது உசிதமானதில்லை. அதுவும் பெங்களூர் மாதிரியான ஊர்களில் பள்ளிகளுக்கிடையே கடும் போட்டிகள் நிகழ்கின்றன. பாடங்களைக் கொடுத்து அழுத்துகிறார்கள். பெங்களூர் மட்டுமில்லை- இப்பொழுது எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை. இத்தகையதொரு சூழலில் குழந்தையின் மீது கூடுதல் சுமையைத் திடீரென்று தூக்கி வைப்பது அநியாயம். சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் என்னைப் போல சிரமப்படுவார்கள். வெறும் பாடச்சுமையை அதிகரிப்பதால் மட்டும் குழந்தைகள் வல்லவர்களாகிவிடுவார்கள் என்பதைப் போன்ற முட்டாள்த்தனமான யோசனை வேறு இருக்க முடியாது. 

அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் டிவி இல்லை. மாலை நேரம் வெளியில் திரியவும் அனுமதிக்கமாட்டார்கள். என் பள்ளி வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் என்றால் அந்த ஒரு வருடம்தான். அந்த ஒரு வருடம் என்பது மறக்கவே முடியாத வருடமாகிவிட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள்- நோட்டுப் புத்தகங்களில் உதயசூரியன் வரைந்து வைத்திருந்தேன். அதற்கும் சேர்த்து தர்ம அடி வாங்கினேன் என்பது வேறு கதை- இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அப்படி உதயசூரியன் வரைவதுதான் என்னுடைய வடிகாலாக இருந்திருக்கிறது. நல்லவேளையாக அந்த வருட இறுதியில் அம்மாவும் அப்பாவும் புரிந்து கொண்டார்கள். ‘இந்தப் பள்ளி இவனுக்கு ஒத்து வராது’ என்று முடிவு செய்தார்கள். அம்மாவுக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு மீண்டும் எங்கள் ஊருக்கே வந்துவிட்டோம். பிறகு தமிழ் வழிப்பள்ளியில் சேர்த்தார்கள். எந்த அழுத்தமும் இல்லை. வீட்டுப்பாடம் என்றெல்லாம் நசுக்கமாட்டார்கள். மாலை பள்ளி முடிந்த பிறகு எனக்கே எனக்கான நேரம் நிறையக் கிடைத்தது. வேட்டை, வாய்க்கால், விளையாட்டு என்று இழந்திருந்த பால்யத்தை திரும்ப அடைந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக எனக்கு சிறகுகள் முளைத்துக் கொண்டேயிருந்தன என்று சொல்வதில் எள்ளளவும் மிகையில்லை.

நேற்று அந்த மனிதரைச் சந்தித்தேன். ‘ரொம்பச் சிரமப்படுறான்’ என்றார். அதோடு நிறுத்தவில்லை. ‘கஷ்டப்படட்டும்....இந்த வயசுல கஷ்டப்பட்டா பின்னாடி நல்லா இருக்கலாம்’ என்றார். வாழ்க்கையில் ஜெயித்தவர்களும் ஜெயிப்பவர்களும் எல்லா நேரங்களிலும் கஷ்டப்படுவதில்லை. எதை, எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் வெறித்தனமாக செய்துவிட்டு மற்ற நேரங்களில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை என்பதன் அர்த்தம் கஷ்டப்படுதல் இல்லை. வாழ்தல். அந்தந்த பருவத்தில் அந்தந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும். அவரிடம் வேறு எதுவும் பேசவில்லை. என்ன சொன்னாலும் பதில் வைத்திருப்பார். சிரித்துக் கொண்டு வந்துவிட்டேன்.