ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நாள் முழுக்கவும் ஒரே ஆசிரியர்தான் இருப்பார். அத்தனை பாடங்களையும் அவரேதான் நடத்துவார். வாய் வலிக்கும் போதெல்லாம் ‘படிங்கடா’ என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து கொள்வார். புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு அரட்டை அடிக்கலாம். சத்தம் அளவு மீறும் போது மேசையை ஒரு தட்டு தட்டுவார். எருமை மேல் மழை விழுந்தது போல ஒரு வினாடி அமைதியாகிவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கலாம். இப்படி ஒற்றை ஆசிரியர் என்பதில் பெரிய சகாயம் இருந்தது. ஒவ்வொரு நாளுக்குமான வீட்டுப்பாடங்களையும் அவரேதான் கொடுப்பார் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுப்பாடம்தான் இருக்கும். பெரிய பிரச்சினையில்லை. காலையில் எழுந்து கூட கிறுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிடலாம்.
‘டேய் ஆறாங்கிளாஸ் போனா நாமெல்லாம் பெஞ்ச் மேல உட்காரலாம் தெரியுமா.....கீழ உக்காந்து ட்ரவுசரைத் தேய்க்க வேண்டியதில்லை’ என்று சொல்லி உசுப்பேற்றியிருந்தார்கள். உற்சாகமாக இருந்தது. ஆறாம் வகுப்பில் சேர்ந்து பெஞ்ச்களில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்பாக படித்திருந்த அண்ணன்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களையெல்லாம் காம்பஸ் வைத்து பொறித்துவிட்டு போயிருந்தார்கள். பொன்னெழுத்துக்கள். முதல் ஒரு வாரம் வாத்தியார்களும் நன்றாகத்தான் இருந்தார்கள். ‘உங்கப்பன் பேரு என்ன? எந்த ஊரு?’ போன்ற சம்பிரதாயமான கேள்வி பதில்களோடு நிறுத்திக் கொண்டார்கள். பள்ளியில் பெரிய மைதானம் இருந்ததால் இடைவெளி கிடைத்த போதெல்லாம் விளையாடச் சென்று சட்டையை அழுக்காக்கிக் கொண்டிருந்தோம்.
எல்லோருக்கும் எல்லா சந்தோஷமும் நிரந்தரம் இல்லை அல்லவா? இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பித்தார்கள் பாருங்கள். கொடுமை.
சமூக அறிவியலுக்கு சிலம்புச் செல்வி டீச்சர், கணக்குக்கு ராமசாமி வாத்தியார், தமிழுக்கு கண்ணம்மா டீச்சர், அறிவியலுக்கு வெங்கடாசலம் வாத்தியார் என்று ஆளாளுக்கு பிழிந்தெடுக்கத் தொடங்கினார்கள். வகுப்பறையோடு நிறுத்தினார்களா? வீட்டுப்பாடம் வேறு கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரே நாளில் ஐந்து பாடங்களுக்கு வீட்டுப்பாடம். எழுதாமல் வந்துவிட்டால் அவ்வளவுதான். ஆளாளுக்கு ஒரு டெக்னிக். சிலம்புச்செல்வி டீச்சர் அடிவயிற்றைப் பிடித்துக் கிள்ளினால் பாதம் தன்னால் மேலே எழும்பும். கதறினாலும் விடமாட்டார். கண்ணம்மா டீச்சர் இன்னொரு வகையறா. அவருக்கு அப்படியொரு மூங்கில்தடி எப்படி கிடைத்ததோ தெரியாது- நெகுநெகுவென்று சீவி வைத்திருப்பார். தினமும் சாப்பாட்டு போசியை எடுத்து வருகிறாரோ இல்லையோ- தடியை எடுத்து வந்துவிடுவார். கையை நீட்டச் சொல்லி விளாசுதான். அவர் அப்படியென்றால் வெங்கடாசலம் வாத்தியார் வகுப்புக்கு வரும் போதே பச்சை விளார் ஒன்றை முறித்துக் கொண்டு வருவார். திரும்ப நிற்கச் சொல்லி ட்ரவுசர் மீதே விழும். நாள் முழுக்கவும் நிம்மதியாக அமரக் கூட முடியாது. ஒரு பக்கமாகத் தூக்கியபடியே அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றரைக்கிடையாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு சிரிக்கும் யோக்கியசிகாமணி மாணவர்களின் கிண்டலுக்கு வேறு ஆளாக வேண்டும்.
மற்றவர்களோடு ஒப்பிட்டால் ராமசாமி வாத்தியாரிடம் மட்டும் ஏய்க்கலாம். விட்டுவிடுவார். விட்டுவிடுவார் என்றால் ஒரு நாள் சரி பார்ப்பார் இன்னொரு நாள் கண்டுகொள்ள மாட்டார். நம்முடைய நேரம் கெட்டுக் கிடந்தால் சோலி சுத்தம். தனது கைக்கடிகாரத்தை கழற்றி ஒரு மாணவனிடம் கொடுத்துவிட்டு வேட்டியை மடித்துக் கட்டி கபடி ஆடுவார். அப்படியொரு கபடி ஆட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக பையன் ஒருவன் சுவர் மீது ஏறி எட்டிக் குதித்துக் காலை முறித்துக் கொண்டதிலிருந்து அவருடைய வேகத்துக்கு கொஞ்சம் தடை விழுந்தது என்றாலும் அவ்வப்போது ஆடி விட்டுத்தான் ஓய்வார்.
‘இந்தக் கருமாந்திரம் புடிச்ச ஆறாம் வகுப்பு டி பிரிவில் படிக்கவே கூடாது’ என்று வெகு சீக்கிரத்திலேயே முடிவு செய்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒருவரிடமாவது அடி வாங்கித் தொலைய வேண்டியிருக்கிறது. ‘இவர்களிடமெல்லாம் அடி வாங்க வேண்டும் என்பதற்காகவா வெட்டியில் புள்ள பெத்து மணிகண்டன்னு பேரு வெச்சீங்க’ என்று அம்மாவிடம் கேட்டால் அவர் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். என்னதான் செய்வது? எப்படியாவது தப்பித்தாக வேண்டும். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் விடுவார்களா? ‘கை வலிக்குது கால் வலிக்குது’ என்று எதைச் சொன்னாலும் ‘ஸ்கூலுக்கு போய்ட்டு சாயந்திரம் வா..சரியா போய்டும்’ என்று துரத்தியடிக்கிறார்கள். திணறிக் கொண்டிருந்த சமயத்தில்தான் ‘அக்குளுக்குள் வெங்காயத்தை வைத்துக் கொண்டு படுத்தால் காய்ச்சல் வந்துவிடும்’ என்று ஒரு உளறுவாயன் சொன்னதை நம்பி வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். ராத்திரியில் தூங்கும் போது ட்ரவுசரே கழண்டு கிடக்கும். வெங்காயம் வைத்த இடத்திலேயே இருக்குமா? காலையில் படுக்கை முழுவதும் வெங்காயம் இறைந்து கிடப்பதைப் பார்த்த அப்பாவிடம் மொக்கு அடியாக வாங்கியதுதான் மிச்சம். அடி வாங்கினாலும் பரவாயில்லை. துளி காய்ச்சலாவது வந்திருக்க வேண்டுமல்லவா? ம்ஹூம். காய்ச்சலும் வரவில்லை. காக்காவும் வரவில்லை. (கா நெடில்தான்)
ஆறாம் வகுப்பில் வெள்ளியங்கிரி என்றொரு நண்பன் கிடைத்தான். என்னைவிட அவன் செமத்தியாக அடி வாங்குவான் என்பதால் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவனிடம்தான் புலம்புவேன். நிறைய சூட்சுமங்களைச் சொல்லித் தருவான். ‘சிலம்புச் செல்வி கிள்ளுறப்போ வயித்தை இறுக்கி புடிச்சுக்குவேன்..அவளுக்கு தோலே சிக்காது..கிகிகி’ என்று இளிப்பான். அவன் பேச்சை நம்பி நானும் வயிற்றை எக்கினால் ‘ஓஹோ...வயித்தை உள்ள இழுத்துக்குவீங்களோ’ என்று இரண்டு விரலுக்கு பதிலாக ஐந்து விரலையும் வைத்துக் கிள்ளுவார் அந்த டீச்சர். ‘நாளைக்கு தலையில நல்லா எண்ணைய அப்பிட்டு வந்துடு...கண்ணம்மா அடிக்கிறதுக்கு முன்னாடி உள்ளங்கையில பூசிக்க..துளி கூட வலிக்காது’ என்று அவன் சொன்னதை நம்பி காது வரைக்கும் எண்ணெய் வழிய வந்து வகுப்பறையில் அமர்ந்திருப்பேன். தார் பூசினால் கூட அர்த்தமிருக்கிறது. எண்ணெய் பூசினால் வலிக்காமல் இருக்குமா?
இப்படியாக தர்ம அடி வாங்கி வாங்கி இனிமேல் இவன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த போதுதான் ஒரு நல்ல திட்டத்தைச் சொன்னான். ‘இனிமே நாம ஸ்கூலுக்கே போக வேண்டாம்..சோத்துப் போசியைத் தூக்கிட்டு வாய்க்கா மேட்டுக்கு போய்டலாம்’ என்றான். அப்பொழுதெல்லாம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு கடிதங்கள் எதுவும் அனுப்பமாட்டார்கள். அதனால் அவன் சொன்னது நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. அடியிலிருந்து தப்பித்துவிடலாம். எங்கள் பள்ளிக்குள் நுழைந்து பிறகு வெளியேறுவது என்பது சாத்தியமில்லை. மணி அடித்தவுடன் கேட்டை மூடிவிடுவார்கள். அதனால் பள்ளிக்கு வருவது போல சீருடையில் கிளம்பி வீட்டில் இருப்பவர்களை ஏய்த்துவிட்டு வாய்க்காலுக்கு சென்றுவிடலாம் என்பதாக முடிவு செய்து கொண்டோம்.
முதல் நாள் வெகு சந்தோஷமாக இருந்தது. துணியைக் கழற்றி வைத்துவிட்டு மதியம் வரைக்கும் தண்ணீருக்குள் ஆடினோம். துணியோடு ஆடினால் ஈரம் காய்ந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பது முதற்காரணம். துண்டு அல்லது மாற்றுத் துணியெல்லாம் எடுத்து வந்தால் வீட்டில் சந்தேகம் வந்துவிடும். அதனால்தான் இந்த ஏற்பாடு. சுகவாசிகளாகத் திரிந்தோம். பசி வந்தவுடன் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை விழுங்கிவிட்டு மீண்டும் வாய்க்காலுக்குள் இறங்கினோம். இரண்டாவது மூன்றாவது நாட்களில் மதிய உணவுக்குப் பிறகு மரத்தடித் தூக்கம் என்று வழக்கத்தை மாற்றிக் கொண்டோம். இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் வெள்ளியங்கிரி சொதப்பிவிட்டான். அந்தப் பக்கம் சில பெண்கள் வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் ஆறாவது படிக்கும் பொடியன்கள் என்பதால் துணி இல்லாமல் தண்ணீருக்குள் குதித்துக் கொண்டிருப்பதை பெரிதாக அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெள்ளியங்கிரி இதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு அந்தப் பக்கம் காற்றாடத் திரியத் தொடங்கியதும் ஆடு மேய்க்க வந்த ஒரு பெண்மணி ‘போய் ட்ரவுசரைப் போட்டுட்டு வா’ என்று சொல்லவும் ‘உங்கப்பன் ஊட்டு வாய்க்காலா? வேணும்ன்னா கண்ணை மூடிக்க’ என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி. இதைச் சொல்லிவிட்டு வந்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை என்பதால் சாதாரணமாக இருந்துவிட்டோம். ஆனால் கடுப்பான அவள் யாரிடமோ போட்டுக் கொடுத்துவிட்டாள் போலிருக்கிறது. மதிய வாக்கில் ஒருத்தன் - ஆஜானுபாகுவாக- இன்னமும் அவன் உருவம் ஞாபகத்தில் இருக்கிறது. ‘எவன் டா அம்மணமா சுத்துறது?’ என்று முரட்டு வாக்கில் வருகிறான். அவன் கத்திக் கொண்டு வருவது தெரிந்தவுடன் ஒரே ஓட்டம்தான். புத்தகப்பை, சாப்பாட்டுப் பை என எதையும் கவனிக்கவில்லை. ஆடையில்லாமல் இருக்கிறோம் என்பது கூட மறந்து போனது. மற்றதெல்லாமா ஞாபகம் வரும்? கருவேல மரங்களுக்குள் புகுந்து புகுந்து ஓடுகிறான். அவனைப் பின் தொடர்ந்து நானும் ஓடுகிறேன்.
‘டேய் கண்டபக்கம் முள்ளு குத்துதுடா’ என்று சொல்லிக் கொண்டே நான் ஓட ‘அவன்கிட்ட சிக்கினா அறுத்து மீனுக்கு வீசிடுவான்...கையை வெச்சு மறைச்சுட்டு ஓடியாடா’ என்று அவன் பதிலுக்குக் கத்திக் கொண்டே ஓடுகிறான். மீனுக்கு உணவிடுவதைவிட முள் கீறல்களைத் தாங்கிக் கொள்ளலாம் என்பதால் வெறித்தனமாக ஓடி முரடனின் கண் பார்வையிலிருந்து தப்பினோம். அதுவும் ஒரு முட்புதர்தான். உள்ளுக்குள் அமர்ந்திருந்த போது பயமாகவும் இருந்தது சிரிப்பாகவும் இருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகுதான் புத்தகப்பை எல்லாம் ஞாபகம் வந்தது. அவன் தூக்கிச் சென்றிருப்பான் என்று பயந்தபடிதான் திரும்ப ஓடினோம். வீட்டிலும் பள்ளியிலும் பதில் சொல்லி மாளாது என்பதுதான் பதற்றத்துக்கு காரணம். நல்லவேளையாக அவன் கண்களில் படாதபடிக்கு மரத்தடியின் கீழாக அவையெல்லாம் இருந்தன. எனது துணிமணிகளை புத்தகப்பையோடு சேர்த்து வைத்திருந்தேன். தப்பித்துவிட்டது. வெள்ளியங்கிரிதான் பாவம். கழற்றி மடித்து வாய்க்கால் ஓரமாகவே வைத்திருந்தான். அந்த ஆஜானுபாகுவான பார்ட்டி தூக்கிச் சென்றிருந்தான். எனக்கு அளவு கடந்த சந்தோஷம். முகத்தை கஷ்டப்பட்டு சோகமாக மாற்றிக் கொண்டு ‘இப்போ என்னடா பண்ணுறது?’ என்றேன். தலையில் வெடிகுண்டு விழுந்தவனைப் போல எதை எதையோ யோசிக்கத் தொடங்கியிருந்தான்.
13 எதிர் சப்தங்கள்:
கடைசியாக அம்மணமா வீட்டுக்கு போனது யாரு ?
Thuni kannum OK...Manium Kanuma??? Hahahha
ஆக மொத்தம் ஆரம்பத்திலிருந்து எங்கள மாதிரி உங்களுக்கு சகவாசம் சரியா இல்லை .
//(கா நெடில்தான்)//
ரொம்ப நாளைக்கப்புறம் வேர்ப்பேரனின் காமெடி நெடி.
((மௌனகுரல்:சந்தோசம் காமெடியா வெடிச்சிருக்கறத பாத்தா சம்பளம் வந்திருக்கும் போல)
//Thuni kannum OK...Manium Kanuma??? Hahahha//
அப்ப இந்த பதிவ எழுதுனது யாரு மணி?
@krishna moorthy ://ஆரம்பத்திலிருந்து எங்கள மாதிரி உங்களுக்கு சகவாசம் சரியா இல்லை//
ஆரம்பத்துல தான் அப்படின்னா இப்பவும் மாறல பாருங்க ☺.
எனக்கு இவர்களிருவரோடும் சகவாசம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் நீங்களாகவே ஒரு முடிவு செய்து வையுங்கள். இன்னொரு கட்டுரையில் பதில் சொல்கிறேன் :)
Quite nostalgic!it takes us to our school days!
Regards-vishwanathan
‘டேய் கண்டபக்கம் முள்ளு குத்துதுடா’ என்று சொல்லிக் கொண்டே நான் ஓட ‘அவன்கிட்ட சிக்கினா அறுத்து மீனுக்கு வீசிடுவான்...கையை வெச்சு மறைச்சுட்டு ஓடியாடா’ என்று அவன் பதிலுக்குக் கத்திக் கொண்டே ஓடுகிறான்........
Non stop laughing after a long time....
//எல்லாவற்றுக்கும் நீங்களாகவே ஒரு முடிவு செய்து வையுங்கள். இன்னொரு கட்டுரையில் பதில் சொல்கிறேன்//
சாரு சிக்குனதுனால நான் தப்பிச்சிருக்கேன் ன்னு நினைக்கிறேன்.
//எல்லாவற்றுக்கும் நீங்களாகவே ஒரு முடிவு செய்து வையுங்கள். இன்னொரு கட்டுரையில் பதில் சொல்கிறேன்//
சம்பளம் இன்னும் வரலையோ?
Capital punishment in schools! Oh no!
நான் படிச்ச ஸ்கூல்-ல வாத்தியார் குதிரை ஜாக்கி வைத்திருக்கும் பிரம்பு போல வார் எல்லாம் வைத்து கலராக கொண்டு வந்து வெளுத்து விடுவார். இன்னொருவரிடம் சுண்டல் வாங்குகிற மாதிரி இரண்டு கைகளையும் நீட்டவேண்டும். ம்ற்றொருவர் பென்சிலை விரல்களுக்கிடையே வைத்து கைகுலுக்குவார்.... இப்போ இதெல்லாம் முடியுமா ????
Post a Comment