Jul 16, 2015

மனசாட்சி

‘நம்மளைச் சுத்தி இருக்கிறவன் பூரா திருட்டுப்பசங்க சார்....ரெண்டு ரூபா கூட உங்க பாக்கெட்ல இருக்கிற வரைக்கும்தான் உங்க காசு...தெரியாம இன்னொருத்தனுக்கு கொடுத்தீங்கன்னு வைங்க...அதோட மறந்துடலாம்...இங்க எவனையும் நம்ப முடியாது’ போன்ற வார்த்தைகள் சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கின்றன. உண்மை இல்லாமல் இல்லை. 

பணம் காசு இரண்டாம்பட்சம். செல்போன்? தவற விடும் வரைக்கும்தான் நம்முடையது. தவறவிட்டால் சோலி சுத்தம். ‘நீங்கள் அழைத்த எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது’தான். 

ஆயிரம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துவிட்டு திரும்ப வாங்குவதற்குள் கண்ணாமுழி திருகிப் போய் ‘அவனே வெச்சு நாசமா போகட்டும்’ என்று விட்டுவிடுபவர்கள் கொள்ளைப் பேர்.  ‘பணம் வாங்கற வரைக்கும் ஒரு நாளைக்கு மூணு விசுக்கா கூப்பிட்டுட்டு இருந்தான் கண்ணு...வக்காரோலி இப்போ ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்’ என்று சலித்துக் கொள்வதும் ‘பார்க்கிற வரைக்கும் பார்த்தாச்சு...நாளைக்கு போய் பைக்கை புடுங்கிட்டு வந்துடுறேன்...கவாத்து அடிச்சுட்டு ஓடி வருவாம் பாரு’ என்று வீரவசனம் பேசுவதும் நம்முடைய அலுவலின் தவிர்க்கவே முடியாத அங்கமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி புலம்பியும், சலித்தும், கொடுத்த பணத்தை திரும்ப வசூலிப்பதற்கான உபாயங்களைத் தேடியும் ஒரு நாளின் கணிசமான நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். 

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அலைபேசி அழைப்பு வந்தது. தெரியாத எண். நாகராஜ் பேசினார். அவருடன் ஏற்கனவே பேசியிருக்கிறேன். ஆனால் எண்ணைக் குறித்து வைத்திருக்கவில்லை. 

‘கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ராகவர்ஷினி சம்பந்தமாக பேசினேனே...ஞாபகம் இருக்கா?’ என்றார். 

ஞாபகம் இருந்தது. எட்டுமாதக் குழந்தை. ஈரலில் பிரச்சினை. சில வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஈரல் மாற்று அறுவை சிகிச்சை. பல லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். நாகராஜூக்கும் அந்தக் குழந்தைக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அந்தக் குழந்தையின் தந்தையும் நாகராஜூம் ஒரே அலுவலகத்தில் பணி புரிகிறார்கள். ராகவர்ஷினியின் தந்தை கடைநிலை ஊழியர். அவருக்காக அலுவலக நண்பர்கள் சேர்ந்து பணம் வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. யாவரும் நண்பர்கள் நடத்திய அந்தக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த போது நாகராஜூம் அந்தக் குழந்தையின் அப்பாவும் வந்திருந்தார்கள். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்தவர்கள் நிலைமையை விளக்கினார்கள். அவசர காரியம் என்பதால் வழக்கமாகச் செய்யும் எந்தவிதமான விசாரணைகளையும் செய்ய முடியவில்லை. மருத்துவ ஆவணங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு எழுபதாயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவர்களுக்கு நிசப்தம் அறக்கட்டளை பற்றி யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். தீவிரமாக விசாரிக்க முடியவில்லை என்கிற துளி உறுத்தல் மனதின் ஓரத்தில் இடம் பிடித்திருந்தது. ஆனால் ஆவணங்கள் மிகச் சரியாக இருந்தன. அன்றைய நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெங்களூர் வந்திருந்தேன். அடுத்த சில நாட்களில் காசோலையிலிருந்து பணத்தை எடுத்திருந்தார்கள். எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் பெயரில் காசோலையைக் கொடுத்திருந்ததால் பணம் மருத்துவமனையின் கணக்கில் சேர்ந்திருந்தது.

ஓரிரு நாட்களில் எழுபதாயிரம் ரூபாய்க்கான ரசீதையும் நாகராஜ் அனுப்பி வைத்திருந்தார். அதன் பிறகு அந்தக் குழந்தை பற்றிய ஞாபகம் வந்து ஒரு முறை நாகராஜை அழைத்துப் பேசினேன். தேவையான பணத்தை புரட்டிவிட்டதாகவும் அனுமதி வாங்குவதற்காகத்தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பதால் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்று சொல்லியிருந்தார். இதெல்லாம் நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். 

அதன் பிறகு இப்பொழுதுதான் அழைக்கிறார். 

‘ஞாபகமிருக்கு சொல்லுங்க’ என்றேன்.

‘உங்க அட்ரஸ் கேட்பதற்காக கூப்பிட்டேன்’ என்றார்.

உதவி பெற்றவர்கள் வழக்கமாக திரும்ப அழைப்பதில்லை. இதைக் குற்றச்சாட்டாகச் சொல்லவில்லை. அதுதான் வழமை. இவர் அழைத்திருக்கிறார் என்றவுடன் ஆச்சரியமாக இருந்தது.

‘ஆபரேஷன் முடிஞ்சுதுங்களா? குழந்தை எப்படி இருக்கு?’ 

‘இல்ல சார்..ஆபரேஷன் நடக்கல’ 

பணம் போதாமல் அறுவை சிகிச்சையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது. இவர் மீண்டும் பணம் கேட்கக் கூடும் என்றும் மனதுக்குள் அலையடித்தது. ஆனால் மறு கேள்வி கேட்பதற்குள் அவரே பதில் சொன்னார்.

‘உங்ககிட்ட பணம் கேட்ட சமயத்திலேயே அவசரம் சார்..ரொம்ப லேட் செஞ்சா குழந்தை தாங்காதுன்னு சொன்னாங்க...இவ்வளவு நாள் தாங்கினதே பெரிய காரியம்...அப்ரூவல், பெர்மிஷன்.....அங்க இங்கன்னு இழுத்தடிச்சுட்டாங்க’

‘குழந்தைக்கு என்னாச்சு?’

என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே பதிலைத்தான் சொன்னார். 

பாவம். 

‘குழந்தையோட அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க?’

‘பரவால்ல சார்...நல்லா இருக்காங்க’ சம்பிரதாயமான பதில் இது.

அவரே தொடர்ந்து ‘அட்ரஸை எஸ்.எம்.எஸ் அனுப்பறீங்களா?’ என்றார்.

‘எதுக்குங்க?’ 

‘ஆஸ்பத்திரியில் இருந்து பணத்தை திரும்ப வாங்கிட்டோம்...யார்கிட்ட இருந்து வாங்கினோமோ அவங்கவங்களுக்கு டிடி அனுப்பிட்டு இருக்கோம் சார்’

எனக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. இப்படியும் கூட மனிதர்கள் இருக்கிறார்களா? ஏற்கனவே சில லட்சங்களைக் குழந்தைகளுக்காக செலவு செய்திருக்கிறார்கள். வசதியான குடும்பமும் இல்லை. இந்தத் தொகை அவர்களுக்கு நிச்சயம் பயன்படும். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் திருப்பிக் கொடுக்கிறார்கள். திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. யாருக்கும் எதுவும் தெரியப்போவதுமில்லை. 

‘பணத்தை திருப்பித் தர்றோம்ன்னு சொல்லுறது ஆச்சரியமா இருக்குங்க’ என்றேன்.

‘எங்களுக்கு மனசாட்சி இருக்கு சார்....'

பனிரெண்டு லட்ச ரூபாய் வசூலாகியிருந்ததாம். 

‘எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்...குழந்தையோட அம்மாவும் அப்பாவும் திருப்பி கொடுத்துடச் சொல்லிட்டாங்க சார்...வேற யாருக்காவது பயன்படுமில்ல?’

அவர்கள் நினைப்பது வாஸ்தவம்தான். ஆனால்  என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்துவிட்டு பழைய மின்னஞ்சல்களைத் தேடியெடுத்து குழந்தையின் நிழற்படத்தைப் பார்த்தேன். பரிதாபமாக இருந்தது. நல்ல மனிதர்களுக்கு பிறந்த குழந்தை. வாழக் கொடுத்து வைக்கவில்லை. இரவில் மீண்டுமொருமுறை நிழற்படத்தைப் பார்த்த போது உடைந்து போனேன். விசும்பலின் ஓசை மின்விசிறியின் சப்தத்தில் மற்றவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ராகவர்ஷினியின் ஆன்மா சாந்தியடையட்டும். அவளைப் பெற்ற அந்த நல்லவர்கள் வாழ்க்கையில் இனி எல்லா வளங்களும் பெற்று நீண்டு வாழட்டும்!