Jul 21, 2015

ஓடு

‘Run all night பார்த்தீங்களா?’ என்று அலுவலக நண்பர் கேட்ட போது படத்தை பார்த்திருக்கவில்லை. 'சமீபத்தில் வந்த படம். தவிர்க்கவிடக் கூடாத படம்' என்றார்.  2015 ஆம் ஆண்டு வந்த படம்தான்.


படத்தின் கதையை ஒற்றைவரியில் மிகச் சுலபமாகச் சொல்லிவிடலாம். அப்பனும் மகனும் ஓர் இரவு முழுவதும் காவல்துறையிடமிருந்தும் ஒரு தாதாவிடமிருந்தும் தப்பிப்பதற்காக எப்படி ஓடுகிறார்கள் என்பதுதான் கதை. இந்த ஒற்றை வரியில் சிண்டுகளைச் சேர்த்து திரைக்கதையைச் செதுக்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வார்த்தெடுத்து பார்வையாளனை கட்டிப் போட்டுவிடுகிறார்கள். கட்டிப் போட்டுவிடுகிறார்கள் என்று போகிற போக்கில் சொல்லவில்லை. 

ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆள் குண்டு அடிபட்டுக் கிடக்கிறார். அவர் தனது கதையை ஈனஸ்வரத்தில் முனகுகிறார். அந்தக் கணத்திலிருந்து பதினாறு மணி நேரங்களுக்கு முன்பாக படம் ஆரம்பிக்கிறது. அந்த மனிதருக்கு ஊரிலேயே மிகப்பெரிய தாதாவுடன் நல்ல நட்பு இருக்கிறது. அந்த தாதா ஒரு காலத்தில் போதைப் பொருளைக் கடத்தும் வேலையைச் செய்தவர். தாதாவுக்கு மகன் உண்டு. அவன் இன்னொரு போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பில் இருக்கிறான். ‘எங்கப்பாகிட்ட சொல்லுறேன்...உங்க சரக்கை அவர் மாத்தித் தருவார்’ என்று சொல்லி பெரிய தொகையாக வாங்கிக் கொள்கிறான். நம்பிக்கையோடு அந்தக் கும்பலை தன் அப்பாவிடம் அழைத்தும் செல்கிறான். தாதா கைவிரித்துவிடுகிறார். ‘அந்த வேலையை எப்பவோ விட்டுவிட்டேன்’ என்று சொல்லிவிடுகிறார். கடுப்பாகும் கும்பல் மகனிடம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கிறது. அவனுக்கு மாலை வரை நேரம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். 

மாலையில் கும்பல் திரும்ப வருகிறது. ஒரு வாடகைக்காரில் வருகிறார்கள். வாடகைக்காரின் டிரைவராக வருபவனின் அப்பாதான் முதல் காட்சியில் குண்டடிபட்டுக் கிடப்பவர்- இந்தக் கதை ப்ளாஷ்பேக்கில் நடக்கிறது- தாதாவின் மகனைப் பார்க்கச் செல்லும் கும்பலை மகன் சுட்டுக் கொன்றுவிடுகிறான். அதை டிரைவர் பார்த்துவிடுவதால் அவனையும் போட்டுத் தள்ள துரத்துகிறான். டிரைவரைத் துரத்திக் கொண்டே வருகிறான். சுடப்போகும் தருணத்தில் டிரைவரின் அப்பா தாதாவின் மகனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார். அதோடு நில்லாமல் தாதாவை அழைத்துச் சொல்லியும் விடுகிறார். தாதாவுக்கு அழுகை பொங்குகிறது. ‘எம்பையனுக்கு என்ன நடந்ததோ அது உம்பையனுக்கும் நடக்கும்’ என்று கறுவ ‘அதுக்கு நான் விட்டுவிடுவேனா?’ என்று இவர் முறைக்க படம் ஓட்டம் பிடிக்கிறது. விறுவிறுப்பான படம்.

போதைக் கும்பல் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை மாற்றி கொலைப்பழி டிரைவர் மீது விழும்படி தாதா ஏற்பாடு செய்கிறான். இரண்டு போலீஸாரை வளைத்து டிரைவர் மீது குற்றம் இறுகும்படி பார்த்துக் கொள்கிறான். அந்தப் போலீஸ்காரர்கள் டிரைவரை முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் போது டிரைவரின் அப்பா ஒரு காரை எடுத்துக் கொண்டு துரத்துகிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. இப்படி காட்சிகளும் சாட்சிகளும் இவர்களுக்கு எதிராக அமைகின்றன. போலீஸ்காரர்கள் விடுவார்களா? அதுவும் அமெரிக்க போலீஸ். இரண்டு பேரையும் குறி வைத்துத் துரத்துகிறார்கள். போலீஸார் ஒரு பக்கம் துரத்த தாதாவோ தன் பங்குக்கு ஒரு கொலைகாரனை அழைத்து அப்பனையும் மகனையும் வீசச் சொல்கிறான். ‘முதலில் மகனைக் கொல்ல வேண்டும்’ என்பதுதான் நிபந்தனை. மகனை இழந்து தான் பெற்ற வேதனை பெறுக தன் நண்பனும் என்று நினைக்கிறான். கொலைகாரன் வெறித்தனமாக துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துரத்துகிறான்.

ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்- டிரைவருக்கும் அவனுடைய அப்பாவுக்குமான உறவு சாதாரண அப்பா-மகன் உறவைப் போன்றில்லை. அப்பன் சட்டத்திற்கு புறம்பானவன் என்று மகனுக்குத் தெரியும். அதனால் சிறு வயதிலிருந்தே அப்பனை பிடிப்பதில்லை. இப்பொழுதும் பிடிப்பதில்லைதான். ஆனால் ‘இந்த ஒரு ராத்திரி மட்டும் நான் சொல்லுறதைக் கேளு’ என்று அப்பா சொல்வதற்கு செவி மடுக்கிறான். ஓடுகிறார்கள். ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். இரவு முழுக்கவும் ஓடுகிறார்கள். அதுதான் படத்தின் டைட்டில்- Run all night. இந்தச் சிக்கலில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று இருவருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு வாய்ப்பிருக்கிறது.  தாதாவின் மகன் போதைக் கும்பலைச் சுடும் போது டிரைவரின் காருக்குள் அவனுடைய நண்பனான ஒரு சிறுவன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான். துப்பாக்கிச் சூட்டை அவன் படமும் எடுத்து வைத்திருக்கிறான். அவனைப் பிடித்தால் ஏதாவது காரியம் ஆகக் கூடும் என்று அந்த இரவில் அவனைத் தேடி அப்பனும் டிரைவரும் செல்கிறார்கள். பெரிய அபார்ட்மெண்ட் அது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் அந்தச் சிறுவன் இருக்கிறான் என்று தெரியும். ஆனால் எந்த வீடு என்று சரியாகத் தெரியாது. நிறைய வீடுகளைத் தட்டுகிறார்கள். இவர்களின் முகங்களைத்தான் தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டிருக்கிறார்களே! இவர்கள் உள்ளே நுழைந்ததும் ஒரு கிழவி காவல்துறைக்குத் தகவல் தந்துவிடுகிறாள்.  ‘அமுக்கிவிடலாம்’ என்று காவல்துறை கட்டிடத்தை சூழ்ந்து கொள்கிறது. இதுவொரு பிரமாண்டமான காட்சிதான் என்றாலும் சற்று அதீத மிகைப்படுத்தலாக இருப்பது மட்டும்தான் படத்தின் ஒரே பலவீனம். ஆனால் வழக்கமான ஹாலிவுட் படங்களில் இருக்குமளவுக்கு பில்ட் அப் இல்லை என்பதையும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். 

தப்பித்து ஓடுகிறார்கள்.

ஓடும் போது தாதா அனுப்பி வைத்த கொலைகாரனையும் சுட்டுத் தள்ளுகிறார்கள். அவனும் இவர்களைத் தேடித்தான் வந்திருக்கிறான். இனி தாதாவைக் கொன்றுவிட்டால் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அப்பன்காரன் நினைக்கிறான். தனது மகனை அழைத்து அவனது மனைவியும் குழந்தைகளும் இருக்கும் இடத்திற்குச் செல்லச் சொல்கிறான். ஏற்கனவே அவர்களை வேறொரு இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். டிரைவர் அவர்களிடம் போய்ச் சேர்ந்து காவல்துறையை அழைத்து அத்தனை விவரங்களையும் சொல்லிவிடுகிறான். அவர்கள் அந்த இடத்துக்கு வருவதாகச் சொல்கிறார்கள். இந்தச் சமயத்தில் அப்பன்காரன் தாதாவைக் கொன்றுவிடுகிறான். எல்லாம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையில் தனது மகனும அவனது குடும்பமும் இருக்குமிடத்திற்கு வந்து சேர்கிறான். தானும் சரணடைய விரும்புவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது இவர்கள் சுட்டுத் தள்ளினார்கள் அல்லவா? தாதாவின் கொலை ஆள். அவன் அப்பனைச் சுட்டுவிடுகிறான். அவன் செத்திருக்கவில்லை. அப்பன் சுருண்டு விழுந்த பிறகு டிரைவரையும் அவனது குடும்பத்தையும் துரத்துகிறான். குண்டடிபட்டுக் கிடக்கும் இந்த அப்பன் தான் முதற்காட்சியில் குண்டு அடிபட்டுக் கிடக்கும் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஆள். படம் எங்கு ஆரம்பிக்கிறதோ அந்தக் காட்சியில் வந்து நிற்கிறது.

அவர்தான் ஈனஸ்வரத்தில் தனது கதையை முனகிக் கொண்டிருக்கிறார். இனி என்ன ஆகும்? அதுதான் க்ளைமேக்ஸ்.

படபடவென்று வெகு வேகாக நகரும் திரைக்கதை மிகப்பெரிய பலம் என்றால் இசையும் காட்சியமைப்புகளும் தூள் கிளப்பியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அப்பன் மகன் உறவு, டிரைவரும் அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி போன்ற துணைக்கதைகள் ஒரு பக்கம் கதையின் வலுவைக் கூட்டும் போது பெரும்பாலான நடிகர்களின் மிகையில்லாத நடிப்பும் இரவுக் காட்சிகளும் இன்னொரு பக்கம் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. 

வழக்கமாக படங்களை இரவு நேரத்தில் பார்த்துவிட்டு அதோடு விட்டுவிடுவேன். இந்தப் படத்தை விடிந்தவுடன் இரண்டாவது முறையும் பார்த்து அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்று மேலாளரிடம் வழிய வேண்டியிருந்தது.

ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு இந்தப் படம் மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் தைரியமாகச் சொல்லாம்.