Jul 20, 2015

குருவி தலையில் கிரீடம்

நுழையும் போதே பறையடித்து இருபக்கமும் பள்ளிக் குழந்தைகள் நடனமாடியபடி அழைத்துச் செல்வார்கள் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. நான் டிவிஎஸ் 50 யை ஓட்டியபடி புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள் நுழைந்திருந்தேன். ஊரில் என்னிடம் தலைக்கவசம்(ஹெல்மெட்) இல்லை. அப்பாவின் பெரிய பைக்கை எடுத்துச் சென்று பிடித்துவிட்டால் வண்டியை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது என்றார்கள். இந்த டிவிஎஸ் இருபது வருடங்களுக்கு முன்பாக வாங்கியது. விற்றால் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக கேட்கக் மாட்டார்கள். ‘நீங்க வேணும்ன்னா கோர்ட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க சார்..எப்பவாச்சும் போரடிக்கும் போது வந்து மீட்டுக் கொள்கிறேன்’ என்று சொல்லிவிடலாம் என்று யோசித்து வைத்திருந்தேன்.

கோபி புத்தகத் திருவிழாவில்தான் இந்த தடபுடல் வரவேற்பு. நமக்கென்ன தகுதியிருக்கிறது என்று நமக்குத் தெரியுமல்லவா? உள்ளுக்குள் வெட்கம் தின்று கொண்டிருந்தது. அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்துவிட்டார்கள். புத்தகத் திருவிழாவில் கிட்டத்தட்ட இருபத்தைந்து கடைகள் இருந்தன. அந்த ஊருக்கு அதுவே பெரிய எண்ணிக்கை. வியாபாரம் நன்றாக இருப்பதாகக் கடைக்காரர்கள் சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. மேடையில் முன்னாள் எம்.எல்.ஏ கோ.ப.வெங்கிடு அமர்ந்தார். பழைய எம்.எல்.ஏ என்றுதான் பெயர். இன்னமும் டீக்கடைதான் நடத்திக் கொண்டிருக்கிறார். எளிமையான மனிதர். அவரும் வேறு சிலரும் பேசி அமர்ந்துவிட்டு என்னிடம் ஒலி வாங்கியைக் கொடுத்தார்கள். 

(ஏற்பாட்டாளர் திரு.குமணன், திரு.ஜெயகாந்தன் மற்றும் திரு.தேவராஜூடன்)

மேடையில் மாவட்டக் கல்வி அலுவலர் இருந்தார். யார் இருந்தால் என்ன? நினைப்பதைப் பேசி விட வேண்டியதுதானே? 

நம்முடைய கல்விமுறையைப் பற்றித்தான் நிறையப் பேச வேண்டியிருந்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நீக்கிவிட்டு அதற்கொரு மொன்னைக்காரணம் சொன்னார்கள். சமச்சீர் கல்வி என்று இன்னொரு நொள்ளைக் காரணம் சொன்னார்கள். இப்பொழுது activity based learning என்ற பெயரில் நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு பிரச்சினையில்லை. எப்படியாவது படிக்க வைத்துவிடுகிறார்கள். அகப்படுபவர்கள் எல்லாம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான். படிக்கும் முறையையே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனனம் செய்யக் கூடத் தெரிவதில்லை. மனனம் செய்யாவிட்டால் பரவாயில்லை- புரிந்து படிக்கிறார்களா? அதுவுமில்லை. ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் அடிப்படையே தெரியாமல் கல்லூரிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். Integration, Differentiation தெரியாத லட்சக்கணக்கான பொறியாளர்களைத் தமிழகத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மாணவர்களின் நலனுக்காகச் செய்கிறார்கள் என்று கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டியதில்லை. மிக மோசமான அரசியல் பின்னணிகள் இருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனங்கள் இலாபம் சம்பாதிப்பதற்காக நிறைய எடுபிடி வேலைகளை அரசாங்கம் செய்து கொடுக்கிறது. இவையெல்லாம் அந்த எடுபிடி வேலைகளில்தான் அடக்கமாகும்.

நிகழ்வில் பள்ளிக் கல்வி இயக்குநரும் கலந்து கொள்வார் என்று சொல்லியிருந்தார்கள். அதை மனதில் வைத்துதான் இதையெல்லாம் பேசுவதற்காகக் குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். ஆனால் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கல்வித்துறையில் மட்டுமில்லை-தமிழகத்தில் கிட்டத்தட்ட அத்தனை அரசுத் துறைகளும் இப்படித்தான் இருக்கின்றன.  பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் பெரும்பாலான பேருந்துகள் நாறிக் கிடக்கின்றன. தனியார் பேருந்து முதலாளிகளுக்கு இதுதான் கொழுத்த வேட்டை. ‘கவர்ண்மெண்ட் பஸ்ல எவன் போவான்? பணம் போனால் தொலையுது...பஸ் புக் பண்ணிக்கலாம்’ என்று பதிவு செய்து போகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டேயிருக்கிறது. பெங்களூரில் மென்பொருள் பணியாளர்கள் அதிகம்; அவர்களின் வருமானமும் அதிகம் என்று அரசுக்குத் தெரியாதா? தெரியும். பிறகு ஏன் பேருந்துகளைத் தரம் உயர்த்துவதில்லை? யாரை கவனிக்க வேண்டுமோ அவர்களை தனியார் முதலாளிகள் கவனித்துவிடுகிறார்கள். அதுதான் காரணம்.

இப்படித்தான் டாஸ்மாக் வியாபாரத்திலிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு வரை எதைப் பற்றியும் கவலைப்படாத அல்லது ‘நமக்கெதுக்கு வம்பு?’ என நினைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்கிற மொன்னையான மனிதர்களாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய யோசிப்பதற்கான நேரம் இல்லை என்பதெல்லாம் பொய்யான காரணம். யோசிக்க விரும்பாத சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளிலிருந்தே அப்படித்தான். மழுங்கடிக்கிறோம். 

இன்னமும் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எல்லாமே அளவோடு இருக்கும் வரைக்கும்தான் நல்லது. 

பேச்சை முடித்துக் கொண்டு ஏழு பள்ளிகளுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு கூப்பன்களை வழங்கியாகிவிட்டது. இந்த வாரத்தில் அவர்கள் புத்தகக் கண்காட்சிக்கும் மாணவர்களை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்வார்கள். அடுத்த சனிக்கிழமையன்று கடைக்காரர்களிடமிருந்து அந்தக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்டு உரிய பணத்தை வழங்கிவிடலாம். இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நிகழ்வின் போது ஒட்டன்சத்திரம் பக்கத்திலிருந்து ஹரி என்கிற மாணவனும் அவனுடைய தந்தையும் வந்திருந்தார்கள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சார்ந்த விவசாயக் கூலி. அந்தப் பையன் பனிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்று பனிரெண்டு மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். திரு. சந்திரசேகர் என்பவர் அழைத்து பையனைப் பற்றிச் சொல்லியிருந்தார். நேரில் பார்த்துவிட்டு தேவையான உதவியைச் செய்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன். அவர்கள் வராமலிருந்திருந்தால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவர்களின் ஊருக்குச் செல்லலாம் என்று யோசித்து வைத்திருந்தேன். அவர்களே வந்துவிட்டார்கள். கலந்தாய்வில் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பி.ஈ மெக்கானிக்கல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறான். இன்னமும் ஃபீஸ் கட்டவில்லை. அது குறித்துப் பேசுவதற்காகத்தான் வந்திருந்தார்கள். ஹரிக்கு நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ரூ.22570 வழங்கப்பட்டிருக்கிறது. அது அவனுடைய முதல் வருட கல்லூரிக் கட்டணம்.

புத்தகக் கண்காட்சி நிகழ்வில் நிசப்தம் அறக்கட்டளை பற்றியும் கொஞ்ச நேரம் பேசினேன். ‘இந்த உதவிகளை எல்லாம் இவன் கைக்காசு போட்டுச் செய்கிறான்’ என்று பார்வையாளர்கள் நினைத்துவிடக் கூடாது அல்லவா? வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பார்கள். இங்கு நிசப்தம் அறக்கட்டளை ஒரு பக்கத்திலிருந்து வலது கையினால் வாங்கி இன்னொரு பக்கத்துக்கு இடது கையினால் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது இடது கைக்குத் தெரியுமா வலது கைக்குத் தெரியுமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு உதவிகள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. அந்த உதவிகளை இடம் மாற்றிவிடும் பெரும் பாக்கியத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கமும் மனபலமும் கள்ளம் சேராத மனமும் இருந்து கொண்டேயிருக்க வேண்டும் கண்காட்சிக்கு எதிர்புறத்தில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக் கொண்டேன். என் இஷ்ட தெய்வம் அந்த மாரியம்மன்.

நிகழ்வு குறித்து இளங்கோவின் பதிவு.