Jul 2, 2015

இது எப்படி இருக்கு?

கோபிச்செட்டிபாளையத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை நடத்தினார்கள். புத்தக விற்பனை படு மந்தம். அதன் பிறகு விட்டுவிட்டார்கள். இந்த வருடத்திலிருந்து மீண்டும் தொடங்குகிறார்கள். ஜுலை 17 ஆம் தேதியன்று தொடங்கி பத்து நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு பேச்சாளரை அழைத்து வரும் பொறுப்பை அந்தப் பகுதிகளில் இருக்கும் கல்லூரி பள்ளிகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவனங்கள்தான். அவர்களுக்குத்தான் அது சாத்தியமும் கூட. பொறுப்பை ஏற்றுக் கொண்ட அந்த நிறுவனங்களைப் பாராட்டத்தான் வேண்டும். தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட தினத்தன்று எப்படியும் தங்கள் மாணவர்களை அழைத்து வந்துவிடுவார்கள்- சொந்தப் பேருந்து இல்லாத தனியார் கல்வி நிறுவனம் எங்கேயிருக்கிறது?

அரசுப்பள்ளிகளின் கதைதான் வேறு. புத்தகக் கண்காட்சிக்கு தங்களது மாணவர்களை அழைத்து வருவதற்கே சிரமப்படுவார்கள். எப்படியும் ஆயிரம் ரூபாயாவது செலவு பிடிக்கும். ஆசிரியர்களிடம்தான் வசூல் செய்ய வேண்டும். பணம் ஒரு பக்கம் என்றால் மாணவர்களை ஒருங்கிணைப்பது, அரசுப் பேருந்துகளில் ஏற்றி கண்காட்சி திடலுக்கு அழைத்து வருவது என்பதெல்லாம் சிரமமான காரியம் என்று விட்டுவிடுகிறார்கள். உண்மையில் கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான் புத்தகக் கண்காட்சிகளில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இந்த மாணவர்களுக்கு பள்ளிக் கூடம், விளையாட்டு, வீடு என்பதைத் தாண்டி வேறு எந்த பரிச்சயமும் இருப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதைத் தாண்டினால்- தொலைக்காட்சியும் செல்ஃபோனும். அவ்வளவுதான். பாடப்புத்தகத்தை தாண்டியும் வேறு வகையிலான புத்தகங்கள் இருக்கின்றன என்கிற அறிமுகம் அவர்களுக்கு அங்குதான் கிடைக்கும்.

ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்? 

பெரிய அளவில் செய்ய முடியாது என்றாலும் மிகச் சிறிய அளவில் எதையாவது செய்ய முடியும் என்று தோன்றுகிறது. மிகச் சரியான தருணத்தில் அமெரிக்க நண்பர் ஒருவர் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாய் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒரு சீட்டு நடத்துகிறார்கள். ஆளுக்கு ஒரு சிறு தொகையை தங்கள் பங்களிப்பாகத் தருகிறார்கள். இப்படிச் சேர்க்கப்பட்ட தொகை ஒருவருக்கு வழங்கப்படுகிறது. அவர் அந்தத் தொகையை கல்வி சம்பந்தமான உதவிகளுக்கு வழங்கிவிடலாம். இந்த முறை அந்தத் தொகை நண்பருக்கு வந்திருக்கிறது. அந்தப் பணத்தைத்தான் நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்தத் தொகையை வைத்து என்ன காரியம் செய்கிறோமோ அதற்கான ரசீதுகளை அவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை.

நல்லதாகப் போய்விட்டது. பின்வருமாறு யோசித்திருக்கிறேன் -

ஏழு பள்ளிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த ஏழு பள்ளிகளும் கிராமப்புறத்தில் இருக்கும் அரசுப்பள்ளிகளாக இருக்கும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவிடும். ஐந்தாயிரம் ரூபாய்க்கு அவர்கள் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். மிச்சமிருக்கும் ஆயிரம் ரூபாயை தங்களது மாணவர்களை அழைத்து வருவதற்கான உதவித் தொகையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை எப்படிச் செயல்படுத்துவது?

1) கூப்பன்கள் அச்சடித்துக் கொடுத்துவிடலாம். நூறு ரூபாய் கூப்பன்கள் இருபது, ஐம்பது ரூபாய் கூப்பன்கள் நாற்பது, இருபத்தைந்து ரூபாய் கூப்பன்கள் நாற்பது என மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய்களுக்கு அச்சடித்து ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு கூப்பன் புத்தகத்தை வழங்கிவிடலாம்.

2) பள்ளிகள் தங்களுடைய மாணவர்களை அழைத்து வந்து (மாணவர்களை கட்டாயம் அழைத்து வர வேண்டும்) எந்தக் கடையில் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் வழிகாட்டலாம். ஆனால் தேர்ந்தெடுப்பது மாணவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர்களே புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த வழிமுறை.

3) தேர்ந்தெடுத்த புத்தகங்களுக்குரிய பணத்துக்கு பதிலாக இந்தக் கூப்பன்களை கொடுத்தால் போதும்.

4) கண்காட்சி நடைபெறும் நாட்களில் தங்களுக்கு செளகரியமான ஏதாவதொரு நாளில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

5) விற்பனையாளர்கள் கூப்பன்களைக் கொடுத்து அதன் மதிப்புக்கு ஏற்றபடி பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் எப்படியிருக்கிறது? வேறு ஏதேனும் மாறுதல்களைச் செய்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனைகள் இருப்பின் தெரியப்படுத்தவும். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.

அநேகமாக ஜூலை 18 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர் அல்லது ஓர் ஆசிரியரை அழைத்து புத்தகக் கண்காட்சி மேடையிலேயே இந்தக் கூப்பன்களைக் கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். 

குறிப்பு: கோபிச்செட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சார்ந்தவர்கள்- பெங்களூரில் இருந்தாலும் சரி, சென்னையில் இருந்தாலும் சரி- இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். கலந்து கொள்ள முடியுமெனில் மின்னஞ்சலில் தகவல் தெரிக்கவும். வேறு சில காரியங்களுக்கான திட்டமிடல்களுக்கான சந்திப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

vaamanikandan@gmail.com

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

1000 ரூபாய்கு ரசீதுக்கு என்ன செய்வது??

போத்தி said...

// இது எப்படி இருக்கு? //

நல்ல முயற்சி.

சேக்காளி said...